முதலில் ‘பேய்ச்சி’யை பேச்சி என்று தான் நினைத்தேன். ஆனால் பேய்ச்சி என திட்டமிட்டு பெயரிடப்படிருக்கிறது என படிக்கப் படிக்கதான் தெரிந்தது. பேய்ச்சி நாவலின் நிலப்பரப்பு எனக்கு கொஞ்சம் பரிச்சியமானதுதான். நானும் கெடாகாரி. லூனாஸும் டப்ளினும் ரொம்பவும் தூரமில்லையே. அதனாலேயே நாவலில் இன்னுமும் ஆழ்ந்து விட்டேன்.
முதல் மூன்று அத்தியாயத்தில் ரொம்பவும் குழம்பி விட்டேன். முதலில் அப்போயும் ஓலம்மாவும் பின்பு அவர்களோடே ராமசாமியும் வந்து போக, பின்பு கொப்பேரனும் காத்தாயியும் வந்து சேர்ந்து கொள்கிறார்கள். இவர்களிடையே இருக்கும் உறவுமுறையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இரு வேறு காலக்கட்டம் வந்து வந்து போயின. கொஞ்ச நேரம் லூனாஸிலும் கொஞ்ச நேரம் தமிழக மலைகிராமமும் இரு வேறு காலக்கட்டங்களின் ஒருமிப்பு என்னை ஒரு முறைக்கு இரு முறை குறிப்பிட்ட பத்திகளை வாசிக்க வைத்தது. அதன் பிறகுதான் காட்சியமைப்பின் காலம் குறிப்பிடப்பட்டுள்ளதை கவனித்தேன்.
கதை ஆரம்பத்தில் பேய்ச்சியின் முன்னிலையில் நாட்டு மருத்துவம் என ஆரம்பித்து பின்னர் புலம்பெயர் காலத்துக்கு சென்று பின்னர் சாராயம் காய்ச்சுவதில் சில கணங்கள் நின்று, அடுத்து காடு, மலை, அருவி என காட்சியமைப்புக்கு உயிரூட்டி பின்னர் சேவல் பலியில் திரும்பவும் பேய்ச்சியின் முன்னிலையிலேயே முடிவடைகிறது.
ஆம் எங்கு தொடங்கியதோ அங்கு முடிகிறது.
முன்பு அரகுடாவில் உள்ள சயாம் கோவிலுக்குள் குடும்பம் சகிதமாக நாங்கள் நீராவி குளியலுக்கு பிரயேகமாக சென்று வந்துள்ளோம். அங்குள்ள புத்த பிக்குகள் இதற்கெனவே சில பல மூலிகைகளை பிரத்தியேகமாக தயார் செய்வதாக என் அண்ணி மூலமாக தெரிந்து கொண்டேன். அண்ணியும் சயாம்காரர் என்பதால் அவர்கள் குடும்பத்தாரோடு தங்கி சயாம் புத்த கலாச்சாரத்தில் பங்கு பெற்று திரும்புவோம். அப்படித்தான் நான் லூனாசுக்கு சென்று வந்தேன். வெல்லஸ்லி தமிழ்ப்பள்ளி கோவில் வளாகத்திலேயே அமைந்திருக்கும். சின்ன பள்ளிதான்.
பேய்ச்சி நாவலின் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த கோவிலையும் பள்ளியையும் முன்பே நேரடியாக பார்த்திருந்ததால் கதை களம் அப்படியே தத்துரூபமாக என்னக்குள் ஒட்டி கொண்டது. அரகுடா சென்று திரும்பும் வழி நெடுக்க தென்னை மரங்கள் இருக்கும் அப்போது.
கதையின் உச்சக்கட்டமே 1981இல் விஷமேறிய சாராய கலப்படத்தால் பலர் இறந்தது என்ற உண்மை சம்பவம் என்பதால் கதை சித்தரிப்பும் பாத்திர வடிமைப்பும் உயிரோட்டமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரே ஊர் என்பதால் அனுபவ ஆவலும் எனக்குள் சேர்ந்து கொண்டது. நாவலை படித்து முடித்து கிட்டத்தட்ட ஒரு வாரம் கதையை எனக்குள்ளே நிதானித்து கொண்டே இருந்தேன். நாவலின் கதை களம் திரும்ப திரும்ப வந்து போயின.
மூலிகை சூழ்ந்த ராமசாமியின் வீடு, அதன் பின் இருக்கும் கிணறு, பாத்தியில் நடப்பட்டிருக்கும் வகை வகையான மூலிகைகள், ஓலம்மாவின் வீடு, வீட்டை சுற்றி அமைக்கப்பட்ட கோழி கூண்டுகள், ரம்புத்தான் மரங்கள், கொய்யா மரங்கள் மேல் அமர்ந்திருக்கும் கோழிகள், பெரிய கிளைகள், மரத்தின் அடியில் உள்ள பெரிய சிரிய வேர்கள், காட்டு மரங்கள் சூழ்ந்திருக்கும் ஒத்தையடி குறுக்குப்பாதை என மனம் முழுதும் நிரம்பிய காட்சி.
இரவின் கும்மிருட்டில் பாதையில் உள்ள கற்களின் மேல் நிலா வெளிச்சம் பட்டு பிரதிபலிக்கும்போது பரவும் சன்னமான ஒலியில் ஓலம்மா நடந்து போவதைபோல இரு பிரமை, (இது போல பல முறை செம்பனை காட்டில் நான் இருட்டில் நடந்து போயிருக்கிறேன்), காட்டுக்குள் அடுத்தடுத்து பூனியான் மக்கள் வாழ்வதாக கூறப்படும் பகுதிக்கும் போகும் பாதை, புதர் இருக்கும் வழுக்கலான பாதையே இல்லாத பாதை, மேலிருந்து கொட்டும் அருவி, அருவி நீர் பட்டு தொடர்ச்சியாக தெரிக்கும் பெரிய பெரிய வழுக்கு பாறைகள், அங்கே இருக்கும் வித்தியாசமான மலர்கள் மேல் அமரவரும் பாப்பாத்திகளும் தட்டான்களும், பின்னர், திருப்பி கோவில் திடல், துணி கட்டி காட்டும் பழைய திரைப்படங்கள், அதன் முன் அந்தக் கூட்டத்தில் பாய் விரித்து அமர்ந்திருக்கும் மக்கள், காலையில் நாலரை மணிக்கே அடிக்கும் பெரட்டு மணி, மேல் லயம் கீழ் லயம், ஆயாகொட்டாய், முச்சந்திக்கு முச்சந்திக்கு முனியாண்டி கோயில், என படிக்க படிக்க அந்த நிலப்பரப்பில் நான் வாழ்ந்து பழகி பரிச்சியமான மக்களின் முக ஜாடையில்தான் நாவல் முழுக்க வலம் வந்தேன்.
இது நான் வாழ்ந்து பழகிய ஊர் என்பதால் கொஞ்சம் ஏற்று கொள்ளலாம். ஆனால் கொப்பேரனின் கதையில் வெளிப்படும் அந்த மலை கிராமம், மலையுச்சி காட்டுக்கும் இருக்கும் பயங்கரமான பேய்ச்சி சிலை, காட்டின் போக கூடாத இடத்தில் மாட்டிக்கொள்ளும்போது ஏற்படும் மன பிறழ்ச்சி, தண்ணீர் பருகாமல் காய்ந்து வெடித்து இருக்கும் உதடுகள், மலையிலிருந்து இறங்க முடியாமல் வெடவெடத்துபோன கால்கள், அப்படியே சந்துபோங் மலையேறும்போது நான் பட்ட அவதியை மீண்டும் நினைக்க வைத்தன. கொப்பேரனின் ஊர், அதில் அவர் பேய்ச்சியை சிலை வைக்காமல் கும்பிடும் முறை என கொஞ்சம் புதிதாகவும் இருந்தது.
சாதாரணமாக தோட்டங்களில் இங்கே நான் கோயில்களில் மாரியம்மன்களையே பார்த்திருந்ததால் பேச்சியம்மன் எனக்கு புதிதாகவே இருந்தது. பேச்சியின் உருவத்தை கொப்பேரனின் பார்வையில் நின்று அந்த அடர்ந்த காட்டுக்குள் ஆங்காரமாக நின்றதை வாசித்த போது கொப்பேரனின் நிழலாக நானும் அவர் அருகில் நிற்பதாகவே உணர்ந்தேன். இயல்பாகவே எந்த ஒரு கதை படித்தாலும் அதில் லயத்து விடுவதால் நிஜத்தில் என்னை சுற்றி அந்தக் கதையின் பிம்பமே இருப்பதாக ஒரு மாயை ஏற்படும். இந்த நாவலின் நிலப்பரப்பும் சுற்றுசூழலும் அனுபவபூர்வமாக என்னுள் இருந்ததால் இன்னும் இயல்பாகவே நாவலின் ஓர் அங்கமாக உள்வாங்கி கொண்டேன். ஆசோ கடையும் குட்டி சிலுவார் சின்னியும் இன்னமும் முக அமைப்போடு கண் முன்னே தோன்றினர்.
இந்த நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவரவரின் வர்ணனையோடு முக அமைப்பு கொடுப்பதில் எழுத்தாளர் வெற்றி அடைந்துள்ளார். இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்களாக ராமசாமி, ஓலம்மா, அப்போய் நிற்கிறார்கள், தொடர்ந்து அடுத்த கட்டமாக வலு சேர்க்கும் வகையில் கொப்பேரன், காத்தாயி, மணியம், குமரன், வாத்தியார், முனியம்மா, சின்னி, மாலதி, சம்பு நிற்கின்றனர், மூன்றாம் கட்டமாக, மக்கள், போமோ, சீன முதலாளிகள், ஆச்சி, செட்டியார், ஓலம்மாவின் பெற்றோர் அவ்வப்போது கடந்த காலத்தின் நிழல் வடிவாய் வருகின்றனர். இப்படியாக கதை சதுரங்கம் போல ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்துக்கு நூலிழையாய் தொடர்பு கொண்டு நகர்ந்து கொண்டே போகிறது.
ஒவ்வொரு காட்சியும் இன்னொரு காட்சியுடன் நுட்பமாகப் பிணைகிறது. முதல் முறையாக வாசிக்கும் போது யார் இந்த கொப்பேரன்? காத்தாயி என்ன அவ்வளவு அழகா? ஒரு பெண் இழப்புகளை சந்தித்தும் அவ்வளவு விரைவில் தன்னை ஆசுவாசப்படுத்திகொள்வாளா? அதன் மூலம் தனது துக்கத்தை ஆறவைத்து கொள்வாளா? என்றெல்லாம் மனதில் கேள்வி எழாமலில்லை. அனாதரவாய் நின்ற காத்தாயியை திருமணம் செய்து கொள்ளும்போது கொப்பேரன் மீது இருந்த மரியாதை அவர் அவளை அப்படியே தன்னந்தனியாய் சொல்லி கொள்ளாமல் வந்தபோது கோபமாய் மாறியது. அதுவும் தனக்கு பிறக்கும் குழந்தைகள் ஒவ்வொன்றாய் இறந்த போது அதற்கு எதிரே வரும் முதியவர் சொல்லும் கதை நம்ப முடியாத கட்டு கதை போலவே தோன்றியது. ஆனாலும் இருந்திருக்கலாம். மனிதனின் அசுரத்தனம் நிற்கதியான பெண்ணை பார்க்கும்போது எப்படி எப்படியோ விழித்தெழுந்து கொள்கிறது. அதற்கு தண்டைனையாகதான் கொப்பேரனின் சந்ததிக்கு இப்படி தொடர் இழப்புகள். அதன்பின் காத்தாயி என்ன ஆனாள்? அவளையும் அந்த இடத்தில் உள்ளவர்கள் உடற்பசிக்கு பயன்படுத்தி இருப்பார்களோ என கூட எண்ண தோன்றியது. ஐந்து பெண் குழந்தைகளுக்குப் பின் பிறக்கும் ஆறாவது குழந்தையை தூக்கி கொண்டு புலம் பெயரும் கொப்பேரன் தானே கட்டிக்கொள்ளும் மாயையை பரப்பி அதில் தானும் நம்ப தொடங்குகிறார். ராமசாமியாக அந்த குழந்தை வளர்கிறான். வளரும்போதே பெண் தன்மையோடே வளர்கிறான், பிறரின் கேலி கிண்டல்களை கடந்து செல்ல அப்பாவின் மருத்துவத்தை கையில் எடுக்கிறான்.
ஆரம்பத்தில் படிக்கும் போது ராமசாமியின் வெற்று மேலுடலை கண்டு துணுக்குறும் ஓலம்மாவுக்கும் ராமசாமிக்கு கள்ள தொடர்பு இருக்குமோ என எண்ண தோன்றியது. ஆனால் இந்த மர்மத்தின் முடிச்சு பதினோராம் அதிகாரத்துக்கு பின்னர்தான் மெல்ல அவிழ்க்க படுகிறது. ஒருவகையில் இந்த கதை முழுக்க முழுவதுமாக படர்ந்திருப்பது ராமசாமி மட்டும்தான். அவரின் அந்த பெண் தன்மை அவரோடு ஒட்டி இருக்கும் வேளையில் அழகான பெண்ணாக ஓலம்மாவின் தோழியாக ஓலம்மாவின் மூளை வளர்ச்சி குன்றிய மகன் குமரனை பார்த்து கொள்ளும் போது தாயாக என பெண் தன்மை வெளிப்படுகிறது. அவர் தன்னை பெண்ணாகவே பாவிக்கிறார். பெண்ணாக அவர் இருந்த காலத்தில் அவரே பேய்ச்சியாகவும் இருக்கிறார் என்பதுதான் நாவலில் நான் கண்ட உண்மை.
பேய்ச்சி என்பவள் தாய்மையுடனும் அதே நேரத்தில் உக்கிரத்தோடும் இருப்பவளாம். அவரின் பெண்மை போமோவிடம் பழகி அதன் பின் இழக்கிறார். ஆண் என்ற நிலையை அடையும்போது தான்செய்த, அல்லது செய்ய காரணமாக இருந்த ஒவ்வொரு கொலையிலும் மரித்த முகங்கள் தன்னை துரத்துவதாக நினைக்கிறார். அவரின் மரணத்தை சொல்லும் தருணம் மிகவும் இலைமறைகாயாக உள்ளது. தாதை படித்து கொண்டே இருக்கும்போதுதான் காத்தாயி பேய்ச்சி எனவும் அவளுக்கு பிறக்க வேண்டிய பெண் குழந்தை ஆண்குழந்தையாகியும் பெண்தன்மை இழக்காமல் மீண்டும் பேச்சியாகவே கதை முழுக்க பயணிப்பதை உணர்ந்தபின்தான் நாவலின் தலைக்கு வாலுக்கும் என்ன தொடர்ப்பு என்பதை அறிந்து கொண்டேன்.
ஆம்!என் பார்வையில் இந்த நாவலின் கதாநாயகி ராமசாமிதான். பேய்ச்சியும் அவரேதான். கடைசிவரை தெரியாத சாராய கூட்டு மரணத்திற்கு காரணியும் அவராகத்தான் இருக்க முடியும்.
ஓலம்மா முதன்மை கதாபாத்திரமாக காட்டப்பட்டு மெல்ல பின்னுக்கு தள்ளப்படுகிறாள். முழுமையாக காத்திரம் நிறைந்த கஷ்டவாளியான ஒரு தோட்டப்பெண். தோட்ட பெண்கள் பெரும்பாலும் கருப்பாகத்தான் இருப்பார்கள். ஆனால் இயற்கையாகவே அவர்களுள் ஒரு வனப்பு குடி கொண்டிருக்கும். உடல்வாகும் உரமேறி மஞ்சள் பூசிய முகத்தோடு ஒரு வித கவர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு. அந்த வனப்பும் கவர்ச்சியும் இளவயது ஓலம்மாவிடம் இருந்ததாக கூறப்பட்டிருக்கிறது. கருப்பு தோளுக்கு மஞ்சள்தான் சரியான முகப்பூச்சு அலங்காரம். அவள் உணர்ச்சி கலவையாகவே திகழ்கிறாள். எப்படியோ கர்ப்பிணியாகி வந்த அவளை அரவணைத்த தோட்டமக்களுக்கு விசுவாசமாகவும், குமரனிடம் தாய்மை பொங்க இருக்கும் தருணத்திலும் மணியம் வெறிக்கொண்டு இணையும்போது வேகத்துக்கு ஈடு கொடுப்பவளாகவும், முனியம்மாளிடம் வாயாடி ஜெயிக்கமுடியாதவளாகவும் மணியத்துக்கு விஷம் கொடுத்து அவர் உயிர் பிரிவதை இருளில் இருந்த படியே உணர்பவளாகவும் சின்னியின் தலையில் கல்லை தூக்கி போட்டு மண்டையை உடைக்கும் போது அச்சு அசல் உக்கிர பேய்ச்சியாகவும் தான் வளர்க்கும் உயிர்களை தானே அடித்து கொன்று வெறி தீர்ப்பவளாகவும் பின் தன் மரணத்தை தானே எடுத்து பேய்ச்சியின் முன் பழி தீர்ப்பவளாகவும் வந்து போகிறாள். அவளுக்குள் அவ்வளவு மனத்திடன். இராமசாமி தன் வாழ்வை பேய்ச்சிக்கே ஒப்பு கொடுத்து பேய்ச்சியாகவே வலம் வரும்போது, ஓலம்மாவினிடத்தில் ஆங்காங்கே பேய்ச்சி வெளிப்படுகிறாள்.
மணியம் பொதுவாகவே பெரும்பாலான ஆண்களைபோலவே சபலம் கொள்பவராக இருப்பினும் அவரின் பல கொள்கைகள் சிறப்பானவையாகவே உள்ளன. ஆனால் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற வினாவுக்கு விடை காணாமலே அந்த குழப்பத்திலேயே வாழ்கிறார். அவரது பார்வையில் சின்னியின் முதுகை வர்ணிக்கும் போது பெண்ணில் முதுகில் இத்துணை அழகும் கவர்ச்சியும் இருக்குமா? கலவியில் இதை கூட கவனிப்பார்களா என்று ஆச்சர்யமாக இருந்தது. சாராய சாவு நடப்பதற்கும் இவர்தான் ஒரு காரணமாகவும் இவரையறியாமலேயே சித்தரிக்கப்படுகிறார். குமரனின் சாவும் இவரால்தான் நடக்கிறது. இது ராமசாமி ஓலம்மாவிடமிருந்து பாதுகாக்கும் ஒரு ரகசியமாகவும் இருக்கிறது. அவரின் சபலம் அவருக்கு ஒரு உறுத்தலாக இருந்ததால்தான் தனது மரணத்தை தெரிந்து ஏற்று கொள்கிறார்.
அடுத்து ஓலம்மாவின் பேரனாக வரும் குமரன் என்ற அப்போய். அப்போய் என்னும் இப்பெயர் நிஜமாக சீன மொழியில் இருக்கும் ஒரு காரண பெயர். இங்கே சிறுவர்களை ஆ போய் (Ah Boy) சிறுமிகளை ஆ மோய் (Ah Moi) என்று சீனர்கள் அழைப்பார்கள். தோட்டத்தில் சீனர்களோடு இருந்து பழகியதால் அப்போயும் அம்மோயும் தோட்டத் தமிழாகவே பழகப்பட்டு விட்டது. நானும் கூட அம்மோய் என்று தான் என்னை விட சிறிய பெண்களை அழைப்பேன். இப்படியாக குமரன் அப்போயாகியிருக்கலாம். அவன் மூலமாகதான் கதையும் 2019ஐ அடைகிறது. அவன் கண்களின் வழி அந்த மலைக்காடு, பாப்பாதி, அருவி, கற்கள், செம்பனை காட்டின் ஒத்தையடி பாதைகள் என காட்டப்படுகிறது. அவனோடு வரும் கருப்பன் என்னும் நாய் மிகவும் இயல்பாக பெரிய மனுஷ தன்மையோடு நடந்து கொள்வதை வாசித்தபோது என்னோடு பழகிய சில தெரு நாய்கள் ஞாபகத்தில் வந்து போயின. இந்நாள் வரை நாய் என்று ஒன்றை நான் வளர்த்தது கிடையாது. ஆனால் தெருவில் போகும் நாயெல்லாம் என் நாய் தான் என்று நினைத்துக்கொள்வேன். கோழிகுஞ்சுகள், முட்டைகள் அடைகாத்தல் என முழுக்க முழுக்க அவனோடு சேர்ந்து நானும் என் கடந்த காலத்தை நினைவு கூர்ந்தேன்.
அவனின் வாழ்க்கையில் பேய்ச்சியாக மாலதியை வருகிறாள். ஓலம்மாவின் இறப்பு அவனுக்கு பெண்களின் மேல் கடும் அச்சத்தை உருவாக்கியது. அவன் மாலதியின் விளையாட்டுத்தனம் வழியே பெண்களை மீண்டும் அணுகுகிறான். எல்லா பெண்ணும் உக்கிரமானவள் என அவன் நம்பியதை மாலதி மெல்ல அகற்றுகிறாள். ஆனால் அவள் வழியும் பேய்ச்சி வெளிபடுவாள் என நாவல் முடிகிறது. சிறுவனாக இருந்தபோது ஓலம்மா அவனை வணங்க வேண்டாம் என மறுத்த அதே பேய்ச்சியின் முன் கைக்கூப்பி நிற்பதோடு நாவல் முடிகிறது.
சின்னி எனக்கு பரிதாபமாகத்தான் தெரிகிறாள். குறும்பாய் நடந்து கொண்டாலும் அவளிடத்தில் பல இடங்களின் உறுதி வெளிப்படுகிறது. சாராய சாவுக்கு அவள் காரணமில்லை என்ற போதிலும் மணியத்திடம் விரும்பமின்றி புணர்கையில் அழும்போது இன்னும் ஓலம்மாவின் தனி மனித ஆவேசத்தாலும் தன் உயிரை விடும்போது சூழ்நிலை கைதியாக தெரிகிறாள். புறத்தில் அவள் மேலும் தவறுண்டு என்றாலும் முழுக்க முழுக்க அவள் காரணமில்லை என்னும்போது இன்னும் அவள் மேல் கருணை அதிகரிக்கிறது. தன் பிள்ளைக்காக எதையும் தாங்கி இன்னுயிரையும் விடுகிறாள் என்றால் ராமசாமியும் ஓலம்மாவும் இறப்பது சிறப்புதான் என்று எண்ணம் தோன்றுகிறது. மற்றவர்கள் உயிரோடு இருக்கும் போது பேய்ச்சியாக உருமாறினார்கள் என்றால் சின்னி இறக்கும் தருவாயில்தான் பேய்ச்சியின் உக்கிரத்தை கண்களில் காட்டியபடி உயிர்விடுகிறாள். அவளின் குருதி கலந்த அருவி நீரில் இன்னமும் ஆத்துமா வாழ்ந்து ராமசாமியின் உயிரை குடிக்கிறது என்றிருந்தால் படிக்கும் எனக்கு கொஞ்சம் திருப்தியாக இருந்திருக்கும். ராமசாமி இன்னமும் சித்திரவதை அனுபவித்து இருக்கலாம். இதை சொல்லும் போது சின்னிக்காக பழிவாங்கும் பேய்ச்சியாக நான் என்னை உணர்கிறேன்.
இறுதியாக நாவலின் இறுதியில் வந்தாலும் மனதில் நிற்கிறாள் மாலதி. விளையாட்டு பிள்ளையாக காட்டப்பட்டிருந்தாலும் பிள்ளைக்காகப் பலி கொடுக்கிறாள். அவளுக்குள் அந்த மனதைரியம் எந்த மூலையில் அடங்கி இருக்கும்? பல முறை கேட்டிருப்பது போல தன் குஞ்சை பருந்து தூக்க வரும்போது சில அடிகளே எகிற முடிந்த தாய் கோழி உக்கிரத்தில் தன் குஞ்சுக்காக ஒரு தென்னை மரமளவு எகிறுமாம். அசாத்திய பலம் உச்சக்கட்டத்தில் தான் அதிக சக்தியோடு வெளிபடுமாம். இது எந்த உயிராக இருந்தாலும் பெண்மைக்கும் தாய்மைக்கும் உரித்தான ஒன்று. அதுதான் ராமசாமிக்கும் ஓலம்மாவுக்கும் மாலதிக்கும் நடந்திருக்கிறது. சின்னி தோற்று போன பேய்ச்சியாக உரு கொள்கிறாள். ஏதோ ஒரு வகையில் ஓலம்மாவின் மீது கொண்ட பாசத்துக்காக ராமசாமி கொலைகள் செய்வது, தன் கணவனின் மீது கொண்ட காதலால் சின்னியோடு மணியம் புணர்வதை பார்த்தப்பின் அவனை கொல்வதும் அது அவள் வாழ்வளித்த தோட்ட மக்களுக்கு செய்யும் சேவையாக எடுத்து கொள்வதும், பின்னர் தனக்கு பிள்ளை பிறக்க வேண்டி மாலதி உயிர் பலி கொடுப்பதும் அப்பட்டமாக பெண்மையின் இன்னொரு திண்மையாக வெளிப்படுகிறது.
ஆக சாராய கூட்டு சாவின் மையத்தை பிடித்துக்கொண்டு ஆணாக இருந்தாலும் சரி பெண்மைக்குள் பேய்ச்சி உளப்பொருளாக இருக்கிறாள் என்று உளவியலை படம்பிடித்து காட்டி இருக்கிறார் எழுத்தளர் ம.நவீன். மூலிகைகளின் பெயர்கள் ஆங்காங்கே வித்தியாசப்படுகிறது. பெருநங்கை சிறு நங்கை என நாங்கள் அழைக்கும் சில மூலிகைகள் சற்றே வித்தியாசமான தொனியோடு அழைக்கப்படுகிறது. மேலோட்டமாக படித்தால் கண்டிப்பாக புரியாத அளவுக்கு பல சிக்கல்கள் தெரிகின்றன. ஆனால் ஆழ்ந்து படித்தாலும் ஒரே பத்தியை பல முறை படிக்க வைத்துவிட்டது நாவல்.
சபாஷ் நவீன்.
நோவா