பேய்ச்சி: நூதன செயல்பாட்டின் அச்சுறுத்தும் அசலம்.

79692721_2667540759959162_1004000063443173376_nபேய்ச்சியின் அவதரிப்பு ஓர் உச்சக்கட்ட ஆச்சரியம்.

மனிதனுக்குள் புதைந்து கிடக்கின்ற மர்மங்களைப் பற்றி விஞ்ஞானம் புரிந்து கொண்டிருப்பது மேலெலுந்தவாரியாக இழையோடும் ஒரு விளிம்பு நிலைத்தான். அந்த விளிம்பைத் தாண்டி விஞ்ஞானத்துக்குப் புரிபடாத வியப்பூட்டுகிற மர்மங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அதை அள்ளித் தெளித்து கொண்டே எழுத்தாளர் ம. நவீன் மனித சிந்தையின் நிசப்தத்தை நடப்புக்குக் கொண்டு வந்திருப்பது ஒரு விந்தை.

பேய்ச்சி நாவல் முழுவதும் மர்மம். ஒவ்வொரு மர்மத்தையும் நெருக்கத்தில் காணும்போது நாம் வெறுமனே வாய் பிளந்து பிரமித்து நிற்க வேண்டும் என்பது அவசியமல்ல. பகுத்தறிவைக் கழற்றி வைக்காமலே நாம் பயணிக்கலாம்.

நாம் பயணிக்கவிருக்கும் அத்தியாயத் தெருக்களில் எந்த நிமிஷத்தில் என்ன அனுபவம் ஏற்படும் என்பதை முன் கூட்டியே என்னால் சொல்ல முடியவில்லை. இனம் புரியாத சக்திகள் இழுக்கும் இழுப்புக்கு நாம் போக வேண்டியிருக்கும்.

நரக வேதனையின் கொந்தளிப்பு மொழியின் சாரத்தில் கோர்க்கப்பட்டு இருப்பது பேய்ச்சி நாவலை மனித அணுக்களிலும், இரத்த நாணங்களிலும் படை திரட்டிக் காத்துக் கொண்டிருக்கும் மனித மூளையின் பித்துப்பிடித்த நிலை (mania), இருமுனை கோளாறு( bipolar) சிந்தனையை கர்மா என்ற விதிக் கோட்டில் சரிவு நிலை காணாமல், நேர் கோட்டில் நாவலை நகர்த்தி இருப்பது பேய்ச்சியையே மிரள வைக்கும் ஒரு தொனி.

வாசிப்பைத் தொடர முடியாமல் தவித்த சில கணங்கள், எதிர்ப்பிலேயே தான் வாழ்ந்தாக வேண்டுமா என்ற அச்சத்தை படர வைத்திருக்கிறார் நாவல் முழுவதும். என் மனதை வாசிக்க விடாமல் இடை விடாமல் சொட்டும் கண்ணீருக்கு எது காரணம் என்றெல்லாம் யோசிக்க விடாமல் பேய்ச்சி என் செல்லில் புகுந்து விளையாடியது பல தருணங்கள்.

மனதில் துளிர்த்த அடர்ந்த தனிமையை, ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதோ ஒரு சூழலுக்கு ஏற்ப ஏந்தி வந்த அந்தத் தருணம் உண்மையிலேயே இந்த நாவலை வாசித்து முடித்தாக வேண்டிய நிர்பந்தம் என்ன என்ற கேள்விகள் சரமாரியாக தாக்கியது.

19 அத்தியாயங்களிலும் அறுப்படாத சோக கொந்தளிப்பு, கறுப்பன் வந்தவுடன் மெல்ல மறைந்து காணாமல் போன உண்மையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

தன்னுடைய நான்கு கரங்களாலும் என்னை எந்த கஷ்டமுமின்றி சுமந்து சென்ற கறுப்பனை மீண்டும் இறுதி ஒரு முறையாவது பார்க்க முடியாதா என்ற பெரும் துயரில் ஆழ்த்திய நாவலாசிரியரை வசை மொழியால் திட்டி தீர்க்க தேடிய வார்த்தைகள் எதுவும் பயனளிக்காமல் போனது. அவரும் ஒரு மனிதன்தானே. பிறகு இடை விடாமல் ஒரு வாசகியை இரத்தம் சொட்ட சொட்ட மொழியால் அடித்து சாகடிப்பது மட்டும் எந்த விதத்தில் நியாயமாகும்.

முதல் நான்கு அத்தியாயத்தில் இடறிய என்னை மேல் இழுத்தது என்னவோ கதாநாயகி ஓலம்மாதான். உலகத்தில் இரண்டு விதமான அன்பு உண்டு. மழையைப் போல் எப்போதாவது பெய்து நின்று விடுகிற அன்பு. சூரியனைப் போல் நாள் தவறாமல் தோன்றுகிற அன்பு கிட்டதட்ட பேய்ச்சியில் இடம் பெறும் இருபதுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களின் பின் அசைவோ, மழையைப் போல் பெய்து பெய்து நின்று விடுகின்ற

அன்பைத்தான் நாவல் முழுவதிலும் அவிழ்க்க முடியாத முடிச்சாக பரவ விட்டிருக்கிறார்.

ஆனால் ஓலம்மாவின் அன்போ மனிதனுடைய இதயத்தை மிக மென்மையாகத் துளைப்படுத்தும் உறுத்தாத விலங்குகளின் ஒன்றாகத்தான் சித்தரித்துள்ளார்.

கதையின் மையப் புள்ளி எங்கே என்று தேடிய பயணம் பக்கம் 235 கிடைத்தது. நம்மை நாவல் முழுவதும் ஒரு பைத்தியக்காரனைப் போல் அலைய வைத்திருப்பார் நாவலாசிரியர். டென்ஷனாகவே இருந்தது எனக்கு. வில்லில் இருந்து புறப்படும் மிகக் கூரிய மொழியால் முதல் அத்தியாயத்திலே மொழியும், டுவிஸ்டும், சஸ்பென்சும் போட்டி போட்டு கொண்டு தன்னுடைய வேலையை செய்திருப்பது என்னவோ ஒவ்வொரு முன்னனி கதாப்பாத்திரமும் மிக மென்மையாக, ஆக்ரோஷமாக பேய்ச்சியின் அவதாரத்தை ஏந்துகின்றார்கள்.

அறம், சத்தியம், விரக்தி, நேர்மை, திண்மை, மாசற்ற அன்பு அனைத்தையும் போற்றி வாழும் ஓலம்மா அதை இழக்கும் போது மதங் கொண்ட யானையைப் போல், கர்ம வினைகளை தீர்க்க விஸ்வரூப அவதாரமாக பேய்சியாகவே மாறும் அவளை, மென்மையானப் பெண்மையில் ஆக்ரோஷமான ஆண்மை துளிர் விடும் போது தவறிழைத்தவர்களை வதம் செய்யும் பகுதி மிக நுட்பமாக கையாளப் பட்டிருப்பது நாவலுக்கு மேலும் ஒரு போனஸ்.

சரியான இடத்தில் ம.நவீன் அவர்கள் வைத்திருக்கும் check mate, என்னவென்றும் சிந்திக்கத் தோன்றியது. மனித வாழ்க்கையிலுள்ள பெரிய ஆச்சரியம் அன்பு நிறைந்தவர்களை எந்த இடத்தில் எப்போது, எதற்காக சந்திக்கப் போகிறோம் என்பதும், எங்கே எப்போது, எதற்காகப் பிரியப் போகிறாம் என்பதும் முன் கூட்டியே தெரியாமலிருப்பது தான்.

இடையிடையே மூன்று இடங்களில் வசை சொற்களை கையாண்டிருக்கும் விதம் என்னவோ ஆத்திரத்தை தூண்டினாலும், பொருள் பொதிந்து வரும் வாக்கிய, மொழி அமைப்புகள் இயற்கையாகவே நம் சம்பிரதாயத்தில் நாம் கேட்டு கடந்து போகும் வார்த்தைகளாகவே அமைகிறது.

நாவலை விரைந்து வாசிப்பவர்களுக்கு என்னவோ மணியத்தின் கதாப்பாத்திரம்தான் நாவலை நகர்த்துவதாக நாவலாசிரியர் முதன்மைபடுத்தி இருக்கும் யுக்தி, அபாரமாகத் தோன்றும். ஆனால் மேல் மட்டத்திலிருந்து அறிந்தும் அறியாததை போல் பார்த்துக் கொண்டிருக்கும் கருப்பனும் அப்போயும் தான் நாவலை அலப்பறை இல்லாமல் கவனமாகவும் மிதமாகவும் நகரசெய்திருக்கிறார்கள் என்பது அசைக்க முடியாத நாவல் சூத்திரம்.

மணியத்தின் அடங்கா காமத்தின் விளைவே கதையின் இறுதி கிளைமெக்ஸ். ஆனால் காரியத்திற்காக மட்டும் மணியத்தின் இச்சைக்கு அடி பணிந்துப் போகும் சின்னி போன்ற பெண்களும் மணியம் இழைத்த நம்மிக்கை துரோகத்தை விட நீதி தராசில் ஒரு படி தாழ்ந்தியிருப்பதும் இது உண்மையிலே நாவலின் கோட்பாட்டுக்கு கீழ் வருகிறது என்பதை உறுதி செய்கிறது.

இந்த ஆசைகளும், காமமும் கடல் அலைகளைப் போலத்தான் ஒவ்வொரு முறையும் அலைகள் ஆர்ப்பரிப்போடு வந்து கரையைத் தட்டுவதற்குள்ளாக, அடுத்த அலை வந்து முன்னதைக் கலைத்து விட்டு போவதைப் போல. ஒவ்வொரு ஆசையும் அடுத்தடுத்த ஆசைகளைக் கலைத்து கொண்டே தான் இருக்கும். இது ஒரு தொடர் நிகழ்வு இதற்கு முடிவேயில்லை.

நாவல் முழுவதும் இடைவிடாத தூய சோகம். குருதி படர்ந்து என்னால் வீச்சத்தை மட்டுமே சுவாசிக்க முடிந்தது. அடங்காத அ நீதி, கொடுமை, அவமதிப்பு என்னை நானே நாவலில் இருந்து அண்ணியப் படுத்திக் கொண்டேன். ஏன் இப்படி எழுத வேண்டும்?? இரவெல்லாம் ஒரே மனப் போராட்டம். என்னை கட்டி வைத்து, உணவு கொடுக்காமல் யாரோ அடித்து துன்புறுத்துவதுப் போன்ற ஒரு அரில். அதை அப்புறப்படுத்த முடியவில்லை. யாரும் நான் அழுவதைப் பார்த்து விடக் கூடாது என்ற ஆதங்கம் ஒரு புறம்.

அழுங்கல் இல்லாமல் அரணம் அமைத்திருப்பதில் என்ன தான் திருப்தியோ என்ற முனகளோடு தொடர்ந்தேன்.

ராமசாமியும், தோக் குருவும் வெருட்சியை காட்டி செல்லும் விதம் நாவலுடன் பயணித்தே ஆக வேண்டும் என்ற கட்டளையை பிறப்பிக்கிறது. ராமசாமியின் நரக வேதனையின் பயமே எல்லையற்றிருக்கும், விடுதலை என்பதும் இல்லாமற் போனது. உயிர் வாழ்வில் ஏற்படும் தீமைகள் நம் அறியாமையிலிருந்தும், பாவத்திலிருந்தும் ஏற்படுகின்றன என்ற நிலை மாறி நம் வாழ்வின் இயல்பே – இயற்கையே.

மந்திர தந்திரங்கள் பயனற்றுப் போகும் மனம் எனும் ஆயுதம் செம்மைப் பெறாத போது. சில கட்டங்களில் பிராத்த்தனைகள் வெறும் சொற்குவியல்கள் என தோன்ற வைத்திருக்கிறார். தொழுது வரம் கேட்டுக் கிடைப்பதும் ஒன்றுமில்லை என்ற அசாத்தியமான விரக்தி நிலையை நாவலில் இழையோட விட்டிருக்க ஒரு தனி தைரியம் வேண்டும் போல.

எனக்குத் தோன்றியது கொப்பேரன் ஏன் இவ்வளவு அப்பட்டமான சுய நலவாதியாக இருந்தார் என்று. அது அவர் மனைவியின் மனதில் எந்த ஓர் கட்டத்திலும் தோன்றாதது, பிறகு அவளுக்கு என்ன நடந்தது, திடீரென்று காத்தாயி என்ற கதாப்பாத்திரம் முடிவுற்றது நாவலில் சற்று சறுக்கல் நிலையை ஏற்படுத்தினாலும் இறுதி அத்தியாயத்தில் மட்டுமே வலம் வரும் மாலதி நாவலை சரியான அளவுகோளில் முற்றுப் பெற செய்கிறாள்.

இதை தொன்மையின் உயிர் என்றும் சொல்லலாம். இறுதியில் இந்தத் தொன்மை வெறும் தொன்மையாக இல்லாமல் சிறந்த கோட்பாடுகளையும், உயர்ந்த கலவைகளையும், பாராட்டுதற்கிரிய வீரியத்தையும், போற்றுதற்குரிய குறிக்கோள்களையும், விளையாட்டுப் பெண்ணாகவும், உயிரினம் முழுவதையுமே ஒன்றாகக் காணும் விசால மனப் போக்கையும் வாழையடி வாழையாகச் சுடர்விட்டு பேய்ச்சி ரூபத்தில் வளர்தெடுத்திருப்பது மதி நுட்பமான அமைப்பு.

நல்ல சிந்தனையாளர், தொன்மைப் பண்புகளில் தேர்ந்தவர்கள் மட்டுமே, சிறந்த எழுத்தாளர்களாகப் பரிணமிக்க முடியும். தமது சிந்தனைகளை வலிமைமிக்க எழுத்து மூலம், சமுதாயத்தின் முன் வைக்கிறார்கள். படைப்பாளர்களாகிய அவர்களின் எழுத்தும் தெய்வம். எழுதுகோலும் தெய்வம். மெய்யறிவு மௌனத்தைக் கற்றுத் தருகிறது. மௌனமோ உண்மையைக் காண்கிறது. உண்மையின் வடிவங்களே என்றும் வாழும் இலக்கியங்கள். பேய்ச்சி நிற்பதும் உண்மையின் மேல்தானே.

பேய்ச்சி நாவலை 100 சதவிகிதம் நம்ப வேண்டாம். ஏனென்றால்,
பேய்ச்சி நாவல் நமக்கு விடுதலை தராது,
ஆழமான நமது காயத்தை அது குணப்படுத்தாது,
நமது வாழ்க்கைக்கு அர்த்தத்தை அது தராது,

ஆனால், பேய்ச்சி என்னுடன் உரையாடும் போது தோராயமாக இதையெல்லாம் செய்யக்கூடிய புரிந்துக் கொள்ளலை அது எனக்கு வழங்கியது.

மலிவாக, இலவசமாக, இயற்கையாகக் கிடைக்கும் எந்த விஷயத்தையும் நாம் புரிந்துக் கொள்வதே இல்லை.

ஒவ்வொரு முக்கியக் கதாபாத்திரமும் (ஒவ்வொரு நோயும் நாம் செய்த தவற்றைப் பற்றிய எச்சரிக்கை என்பதை மட்டும் நாவல் முழுவதும் பரவி வியாபித்திருப்பது நுட்பமான உத்தி).

இனிமேல் வேறு விதமாக அணுக தமிழில் வேறென்ன இருக்கிறது என்ற சவால் விடுவது என் செவிகளில் ஒலித்தது. மனிதனும் அவ்வப்போது தெய்வமாகிறான். எங்கே, எப்போது, எப்படி என்பதை வாசித்தால் தான் புரியும். கண்டிப்பாக பேய்ச்சியை நெருங்குபவர்கள் ஒரு மயான அமைதிக்கு தங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இல்லையேல் கோமல் அன்பரசன் கொலை கொலையாம் காரணமாம் என்ற நிஜ ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தால் ஒரு மனிதனை கொலை செய்யும் போது ஏற்படும் பய உணர்ச்சியை விட, தன்னையே அழித்துக் கொள்ளும் சுய தற்கொலைக்கு இன்னும் வீரியம் அதிகம் என்பது புலப்படும். அச்சம் வேண்டாம்.. பேய்ச்சி துணையிருப்பாள். தொடர்ந்து வாசிப்போம்.

* 1981,1999,2019 நாவலில் தொலைபவர்களுக்கு வருட சட்டகம் வழி அமைக்கும்.

ஆ.லாவண்யா

(Visited 296 times, 1 visits today)