தமிழக எழுத்தாளர்கள் மலேசியப் படைப்புகளை விமர்சிக்கலாமா?

maxresdefaultநவீன இலக்கிய முகாமில் கவிஞர் சாம்ராஜ் விமர்சனத்திற்குப்பின் உண்மையாக எழுந்திருக்க வேண்டியது மலேசிய கவிதை குறித்த ஓர் உரையாடல். அதை மலேசியக் கவிஞர்கள் ஒன்றிணைந்து நிகழ்த்தியிருக்க வேண்டும். சாம்ராஜின் கருத்துகளை மறுக்கும் முகம் கொண்ட வலுவான கவிதைகளை முன்வைத்து கட்டுரைகள் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழக இலக்கியவாதி எப்படி மலேசியப் படைப்புகளைப் புறக்கணிக்கலாம் என்ற தொணியே இங்கு எழுந்தது.

இப்படிக் கேட்கப்படுவது புதிதல்ல;

“நம்முடைய வாழ்வியல் சூழல், கல்விச்சூழல் தெரியாமல் எப்படி அவர்கள் விமர்சிக்கலாம்” எனும் கூச்சல் இலக்கியத்தில் நான் இயங்கத் தொடங்கிய காலத்திலிருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறது. “அவர்கள் நாட்டில் தரமான தமிழ் இலக்கியத்தை கற்றுவிடுகின்றனர். நமக்கு என்ன உள்ளது?” என உரத்தக் குரல்கள் பல இலக்கியக் கூட்டங்களில் ஒலித்தபோதெல்லாம் ‘சின்னத்தம்பி’ படத்தின் கண்தெரியாத கவுண்டமணி வில்லனைப்பார்த்து கைத்தட்டுவதைப் போல தட்டியிருக்கிறேன். இவ்வாறு சொல்பவர்களின் கருத்துகளை பின்வருமாறு தொகுத்துக்கொள்ளலாம்.

  • மலேசியாவுக்கு வந்தவர்கள் கூலித்தொழிலாளர்கள். உடல் உழைப்பாளிகள். அவர்கள் தமிழக இலக்கியவாதிகளுக்கு ஈடாக படைப்பை எழுத முடியாது.
  • இங்கு ஆரம்ப / இடைநிலைப்பள்ளியைத் தாண்டி தமிழ் படிப்பதில்லை. எனவே எவ்வாறு இலக்கியத்தில் ஈடுபட முடியும்?
  • இங்கு தீவிர இலக்கியத்திற்கான போக்கு உருவாகவில்லை. எனவே எப்படி நல்ல இலக்கியம் வளரும்?
  • இங்கு தமிழர்கள் பல போராட்டங்களை சந்தித்துள்ளனர். அவர்களால் எப்படி நல்ல படைப்புகளை உருவாக்க முடியும்?

இதெல்லாம் உண்மையென நான் நம்பியபோது எனக்கு வயது இருபது இருக்கலாம். பதினேழு வருடங்கள் கடந்த பின்பும் இன்னமும் பலர் என்னுடைய இருபது வயதிலேயே நிற்பது வருத்தம்தான். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. தமிழகத்தில் கவிஞர் கலாப்ரியா முன்னெடுத்த குற்றால சந்திப்புகள், பிரம்மராஜன் தர்மபுரியில் நிகழ்த்திய கவிதை உரையாடல்கள், ஜெயமோகன் ஊட்டியில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் காவிய முகாம் போன்றவை ஓரளவு அங்குள்ள கவிஞர்களும் வாசகர்களுக்கும் கவிதைகள் குறித்த தெளிவை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் அங்கு நடப்பவை விவாதங்கள்; மறுப்புகள். அதன் வழியே சலித்தெடுத்து தரமான ஒரு சில படைப்புகள் மேலெடுத்து வரப்படுகின்றன. அப்படைப்புகள் வழியே இலக்கியத்தின் அழகியல் கண்டடையப்படுகிறது. தமிழகத்தில் இதுபோன்ற சந்திப்புகளை ஏற்பாடு செய்வது கவிதை குறித்து ஆழமான புரிந்தல் உள்ள ஆளுமைகள். எனவே அவை நேர்மறையான வளர்ச்சியை நோக்கிச் செல்கின்றன. ஆனால் மலேசியக் கவிஞர்கள், கவிதைகள் குறித்து துளியும் புரிதல் இல்லாத ராஜேந்திரன் பின்னால் ஊர் ஊராய் சுற்றிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது அதன் வீழ்ச்சிக்கு தடையொன்றும் இல்லை என்றே தோன்றுகிறது.

முதலாவது எந்தக் கலை வடிவத்தையும் ஒட்டுமொத்த சமூகமே முன்னெடுத்துச் செல்வதில்லை. அதை சிலர் தேர்வு செய்கிறார்கள். அவர்கள் வழிதான் அந்த நிலத்தில் அக்கலை தழைக்கிறது. மலேசியாவுக்கு வந்தவர்கள் கூலித்தொழிலாளர்கள் எனும் கருத்து மறுபடி மறுபடி சொல்லப்படுகிறது. இதைச் சொல்பவர்கள் பாவனையாக யாரோ ஒரு தோட்டப்பாட்டாளிக்கு இரைஞ்சி “அந்த மனுஷனெல்லாம் எழுத முடியாம போயிடுச்சே” என கண்ணீர் வடிக்கிறார்கள். அந்தப் போலிக்கண்ணீர் அவசியமல்ல.

ரப்பர் பாலை காண்டா கம்பில் கட்டிச் சுமந்து வரும் ஒரு பெண்ணிடம் “இந்த ஆண்டியால பரதம் பழக முடியாம போச்சே” என்றோ, கோயிலில் மருள் வந்து ஆடிக்கொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்து, “இந்த அங்கிளால திரைப்படம் இயக்க முடியாம போச்சே” என்றோ வருத்தப்பட்டுக்கொண்டிருப்போமா?  நமக்குத் தெரியும் அக்கலைகள் ஒருவரின் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்யப்படுகின்றன. அந்த விருப்பத்தின் அளவைப் பொருத்து அவர்களின் தீவிரம் கூடுகிறது. அதில் அவர்கள் ஆளுமை செலுத்துகிறார்கள்.

உங்களால் நடக்க முடிவதாலேயே நீங்கள் நன்றாக நடனம் ஆடுவீர்கள் என்றும், வீட்டில் மனைவி பிள்ளைகளை நன்றாகத் திட்டி கூச்சலிடுவதால் சங்கீதம் பாடுவீர்கள் என்றும், இன்று பொங்கலுக்கு வீட்டுக்கு சாயம் அடிப்பதால் சிறந்த ஓவியங்களை வரைவீர்கள் என்றும் எப்படி உறுதியாகச் சொல்ல முடியாதோ அதேபோல உங்களிடம் மொழிப்புழக்கம் இருப்பதால் மட்டுமே நீங்கள் இலக்கியத்தில் ஈடுபட்டுவிட முடியும் என்பது அபத்தம். காரணம் இலக்கியம் மொழியைக் கொண்டு உருவாகும் கலைவடிவம். மொழிக்கு அடியில் இயங்கும் இன்னொரு மொழி. இந்தக் கலைவடிவத்தை அறிந்துகொள்ள மிகச்சிலரே மெனக்கெடுவர். அவர்களை நோக்கியே விமர்சகன் கேள்வி எழுப்புகிறான். ஆனால் அந்த விமர்சகனின் கேள்வி ஏதோ ஒட்டுமொத்த சமூகத்தையே பார்த்து கேட்கப்பட்டதாகத் திரிக்கப்பட்டு அந்தச் சமூகத்தின் பின்னால் ஒழிந்துகொள்ளும் எழுத்தாளன், “எங்களையெல்லாம் திட்டிட்டாங்கோ… நாங்க எல்லாம் கூலி தொழிலாளி பிள்ளைங்கோ” என புலம்பத்தொடங்குவார்கள்.

கொஞ்ச நாளில் நிலை மாறியது. இடைநிலைப்பள்ளியிலும் தமிழ்க்கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் மலேசிய இலக்கியத்தின் போதாமை குறித்து விமர்சனங்கள் இருக்கவே செய்தன. ஆனால் நமக்கு வாய்த்த சில எழுத்தாளர்கள் மிகவும் திறமைசாலிகள் அல்லவா? உடனடியாக தமிழ்ப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளியில் போதிக்கப்படும் கல்வி முறையைப் பற்றி புகார் கூறி மீண்டும் இந்நிலைக்கு தாங்கள் காரணம் அல்ல என்பதாகக் கூறிக்கொண்டனர்.

கல்வியின் உயர்வுக்கும் கலைக்கும் என்ன சம்பந்தம் எனக்கேட்க இங்கு ஒருவரும் இல்லை. தமிழ் இலக்கியத்தில் மாபெரும் சாதனைப்படைத்தவர்களின் பட்டியலை எடுத்துக்கொள்வோம். கி.ராஜநாராயணன் என்ன கல்வி பயின்றார்? ஜெயகாந்தன் என்ன பட்டதாரியா? 17 வயதுவரை கோழிக்கோட்டில் மலையாளச் சூழலில் வாழ்ந்து, ஆங்கில அடிப்படை கல்வியைப் பெற்று அதற்குப்பின் தமிழ் இலக்கியத்தில் ஈடுபட்டவர் சுந்தர ராசசாமி. அவர் வழி பெரும் திரளான எழுத்தாளர் குழு உருவாகியுள்ளது வரலாறு. குஜராத்தியான திலீப்குமார் குறைவாக எழுதியிருந்தாலும் தமிழில் குறிப்பிடத்தக்க சிறுகதைகளைக் கொடுத்துள்ளார். பதின்மூன்றாவது வயதுக்குப் பின்தான் அடிப்படைத் தமிழைக் கற்றார். சமகால கவிஞர்களில் முக்கியமான ஆளுமையாகக் கருதப்படும் பிரான்ஸிஸ் கிருபாவின் கல்விநிலை கருணாகரனையோ பச்சைபாலனையோ காட்டிலும் குறைவுதான்.

சில உதாரணங்களுக்காக மேற்சொன்ன எழுத்தாளர்களைக் குறிப்பிட்டுள்ளேன். இவர்கள் ஆளுமை நவீன தமிழ் இலக்கியத்தில் அவ்வளவு எளிதில் அசைக்க முடியாதது. இன்னும் இதுபோல ஏராளமான எழுத்தாளர்களைச் சொல்ல முடியும். ஆனால் இப்படிச் சொல்ல ஒருவன் வரமாட்டான் என மலேசிய இலக்கிய உலகம் நம்பியிருந்ததுதான் துரதிஷ்டம். இன்னும் கொஞ்ச காலம் இதைச்சொல்லியே ஓட்டிக்கொண்டிருக்கலாம். இப்போது சாம்ராஜ் விமர்சனம் செய்த கவிஞர்களின் கல்வி பின்புலத்தை ஆராய்ந்தால் அதில் சிலர் பட்டதாரிகள். தமிழ் இலக்கியம் போதிப்பவர்கள். தமிழ் ஊடகப் பணியாளர்கள். ஆசிரியர்கள். அரசு அலுவலத்தில் வேலை செய்பவர்கள்.

இந்தத் தரவுகளின் அடிப்படையில் மிகத்தெளிவாக ஒன்று புரியும். கல்வி கலையை வளர்த்தெடுக்க தேவைப்படும் சாதனங்களில் ஒன்றே தவிர; அதுவே பிரதானமானதல்ல. ஆனால் இலக்கிய வாசிப்பிலும் தேடலிலும் இருக்கும் நமது சோம்பல் தனத்தையும் மெத்தனப்போக்கையும் காரணமாகச் சொல்ல நாம் தயங்குகிறோம். இதுபோல பாவனை காட்ட இளம் தலைமுறைக்கும் பழக்குகிறோம். இங்கு ஒரு நடந்த வரலாற்றிலிருந்து தரவுகளின் அடிப்படையில் ஒரு உதாரணம் சொல்லலாம்.

indexஐம்பதுகளில் (1952-1957) நமக்கு கு.அழகிரிசாமி எனும் பெரும் ஆளுமை கிடைக்கப்பெற்றார். அவர் தமிழ் நேசனுக்கு பணி நிமித்தமாக வந்தாலும் இங்குள்ள இலக்கியச் சூழல் வளரவேண்டுமென இலக்கிய வட்டத்தை ஏற்படுத்தி எது நல்ல இலக்கியம் என கலந்துரையாடல்கள் செய்தார். இங்கிருந்தபோது மலாயா எழுத்தாளர்களைப் பற்றி அவர் அவ்வளவு உயர்ந்த எண்ணம் கொண்டிருக்கவில்லை என்று ஆய்வாளர் ந.பாலபாஸ்கரன் எழுத்துகள் வழி அறிய முடிகிறது.

“நீங்களெல்லாம் ஏன் ஐயா சிறுகதை இலக்கணம் தெரியாமலேயே கதை எழுத வந்துவிட்டீர்கள்” என்று திட்டி மறுவாரமே அவரது சிறுகதையை மேம்படுத்தி தமிழ்நேசனில் பிரசுரிப்பார் என தன் நினைவில் இருந்து எழுத்தாளர் எஸ். வி. சுப்பிரமணியன் சொல்கிறார். பத்து இலக்கிய வட்ட சந்திப்புக்குப் பிறகு இருபது எழுத்தாளர்களிடம் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர்களில் ஏழுபேர் ( ஸ்ரீ செ. ஆலிவர் குணசேகர், பொ. சா. பரிதிதாசன், சி. வேலுசுவாமி, நாகுமணாளன், சி. வடிவேல், இராச இளவழகன், மு. தனபாக்கியம்) சிறந்த படைப்பாளிகள் என்றும் கு.அழகிரிசாமி பதிவு செய்துள்ளார். மலேசியாவில் தான் இருந்த அனுபவம் குறித்து எழுதியுள்ள கு.அழகிரிசாமி, அவர் இருந்தபோது உள்ள தமிழ்க்கல்வி சூழலையும் தமிழ்ப்பள்ளிகளின் மோசமான நிலையையும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.

நாம் அந்தக் காலக்கட்டத்தின் மலேசியச் சூழலைதான் இன்னமும் நமது தற்காப்புக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த வாழ்வியல் சூழலை அறிந்து வைத்திருந்த கு.அழகிரிசாமி எழுதும் இருபது பேரையும் எழுத்தாளர்கள் என அங்கீகரித்திருக்கலாம். ஆனால் ரசனை இலக்கிய விமர்சகர்கள் அப்படி எல்லாரையும் அள்ளி ஒரு கூடையில் போட மாட்டார்கள். மலேசிய கல்விச் சூழலை அறிந்த, அவர்கள் வாழ்வையும் அறிந்த ஒரு தமிழகப் படைப்பாளியின் காத்திரமான விமர்சனத்தில்தான் மலேசிய நவீன இலக்கியம் தொடங்குகிறது. இந்த உண்மையை மறந்துவிட்டு ‘அவர்களுக்கு நம்மைப்பற்றி என்ன தெரியும்? நம்முடைய கல்வி முறை என்ன தெரியும்?’ என இன்றும் பினாத்திக்கொண்டிருக்கிறோம்.

மலேசிய எழுத்தாளர்களில் சிலர் தங்களின் பலவீனமான படைப்புகளுக்குப் பிறரைக் கைக்காட்ட பழகியவர்கள். நல்ல இலக்கியம் உருவாகாததற்கு அமைப்புகளையும் நாளிதழ்களையும் குறைக்கூறிக்கொண்டிருப்பார்கள். அதாவது மேலிருந்து யாராவது தங்களை இயக்கி வழிநடத்தி நற்பாதையைக் காட்ட வேண்டும் என்பர். வாசிப்பும் எழுத்தும் குழுவில் நிகழ்வதல்ல. ஒரு இலக்கியக் குழுவின் கடமை நல்ல படைப்புகளை முன்னிறுத்துவது; விவாதங்களை உருவாக்குவது. அது இங்கு செய்யப்படுவதில்லை என்பது உண்மையே. ஆனால் அது நடக்காததால் நல்ல இலக்கியம் உருவாகவில்லை என்பதையெல்லாம் நகைச்சுவையாகக் கூட ஏற்க முடியவில்லை. “வருஷக் கடைசியில ஸ்கூலுல பரிசளிப்பு விழா நடக்காது. அதனால் நான் ஒழுங்கா படிக்க மாட்டேன்” என உங்கள் குழந்தை சொன்னால் எவ்வளவு கடுப்பு வரும். ஆம்! பரிசு கொடுப்பது அவனை ஊக்கப்படுத்ததான். ஆனால் ஊக்கத்துக்காகவா ஒரு படைப்பாளி இயங்குகிறான். சூழல் சரியாக இல்லையென்றால் அச்சூழலை மாற்றுவது எழுத்தாளனின் பணி. மலேசியாவில் 70களில் அது நடந்துள்ளது. 90களில் மீண்டும் சில முன்னெடுப்புகள் நடந்துள்ளன. ஆனால் வாசிப்புச் சோம்பலும் விமர்சன அச்சமும் உள்ள கூட்டத்தில் எப்படி பேரலை ஒன்று உருவாகும். அது தேங்கி சகதியாகவே போகும்.

muthaஇன்னுமொரு கூட்டம் தமிழர்கள் இந்நாட்டில் சந்திக்கும் சிக்கல்களைப் பற்றி கூறுவதுண்டு. அதைவிட பலமடங்கு சிக்கல் உள்ள இலங்கையில் இருந்துதான் நுஃமானும், சேரனும், கருணாகரனும் புறப்பட்டு வருகிறார்கள். இங்கு உள்ளதைவிட பலமடங்கு அடக்குமுறை உள்ள ஈரானில்தான் உலகத்தரமான திரைப்படங்கள் உருவாகி உலக விருதுகளை அள்ளிக்குவிக்கிறது. கொஞ்சம் இணையத்தில் தேடினால் அங்கு ஒரு திரைப்படம் இயக்க விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் என்னவென்று புரியும். ஆனால் தேட மாட்டோம். நமக்கது அவசியமல்ல. உண்மை தெரிந்துவிட்டால் “என்னால இந்த அடக்குமுறை உள்ள சூழலில எழுத முடியல” என நாடகமாட முடியாது அல்லவா.

எழுதுவதை காட்டிலும் எழுத்தாளராக அடையாளப்படுத்திக் கொள்ள இங்கு எளிய வழிகள் உள்ளன. மலேசியாவில் நாளிதழ்கள் அல்லது இயக்கங்கள் துணையுடன் அரங்கின் முன் வரிசையில் அமர்ந்து சத்தம் போட்டு கருத்துகளைச் சொல்லி, தமிழகக் குழுப்பயணம் சென்று முன்னூறு ரூபாயில் ஒரு கேடயமும் இருநூறு ரூபாயில் ஒரு பொன்னாடையும் போர்த்திக்கொண்டு போஸ் கொடுத்து,  தன்னைப்போலவே மொண்ணையான எழுத்தில் வந்திருக்கும் கவிதை தொகுப்புக்கு பாராட்டுரை எழுதி, அப்படி எழுதியதாலேயே ஏதாவது ஒரு சில போட்டிகளுக்கு நீதிபதிகளாகி, வண்டியை அப்படியே ஓட்டிவிட வேண்டியதுதான். மொக்கையாக இருந்தாலும் ‘கைப்புள்ள கடைசிவரை தன் கட்டை வண்டியில்தான் போனான்’ என்ற பெருமை ஒன்று போதுமல்லவா.

தமிழகத்தில் இன்று கவிதை அடைந்துள்ள வளர்ச்சிக்குக் காரணம் தொடர் விமர்சனங்கள் வழி உருவாகும் உரையாடல்கள்தான். சங்க இலக்கியமே தொகுப்பு மரபுதான். எழுதியவை எல்லாமே ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தமிழினி வெளியிட்டுள்ள ‘கொங்குதேர் வாழ்க்கை’ தொகுப்பை பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன். மிகச்சிறந்த கவிஞர்களின் மிகச்சிறந்த கவிதைகள் மட்டுமே தொகுக்கப்பட்ட நூல் அது. ஏன் இவை நடக்கிறது. எப்போதுமே ஒரு படைப்பு எழுதப்பட்டதால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதன் தரம் வாசகனால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. மாதம் ஒரு நூலை படித்துக் கொட்டாவி விடுபவனை வாசகனாகக் குறிப்பிடவில்லை. உலகம் முழுவதும் இன்று இலக்கியம் எப்படி இருக்கிறது என அறிந்த வாசகன். குறைந்த பட்சம் தமிழில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என புரிந்துவைத்திருக்கும் வாசகன். அதன் வழி ரசனையை உருவாக்கிக்கொண்ட வாசகன். அப்படி வாசித்தால்தான் சிறந்த வாசகனாக இருக்க முடியுமா என்று கேட்டால். ‘ஆம்’ என்பதுதான் பதில். பதவி உயர்வுக்காக, தொழிலுக்காக, பட்டதாரியாகி பெயருக்குப் பின்னால் அடையாளங்களைச் சேர்ப்பதற்காக விழுந்து விழுந்து படிக்கிறோம் இல்லையா? உலகியல் இன்பங்களைப் பூர்த்தி செய்ய அத்தகைய உழைப்பைப் போடும்போது கலையின் வழி தேடும் ஞானத்திற்கான விலை உண்டு. அதை கொடுக்காமல் எதுவும் கிடைக்காது.

எந்த தேசத்துப்படைப்பாளியும் பிற எந்த தேசத்துப் படைப்பையும் வாசித்து விமர்சிக்க முழு உரிமை உண்டு. அப்படித்தான் இன்று ரஷ்ய இலக்கியங்கள் தமிழகத்தில் தொடந்து கொண்டாடப்படுகின்றன. அதை சிறந்த நாவல் எனச் சொல்லும் விமர்சகர்கள் ரஷ்யா சென்றவர்களா என்ன? முற்றிலும் வேறு பண்பாடு கொண்ட இந்திய நிலத்தில் எழுதப்படும் பல நூறு இலக்கியங்களில் சில மட்டும் விமர்சனம் வழிதான் இன்று தொடர்ச்சியாக வாசிக்கப்பட்டு வருகின்றன. பிற மொழிகளை விடுவோம். இலங்கை சூழலில் பெரும் ஆளுமையான கைலாசபதி போன்றவர்களால் மறுக்கப்பட்ட தளையசிங்கம் தமிழக விமர்சகர்கள் மூலமே மீட்கப்பட்டு மறுவாசிப்புக்கு வருகிறார்.

ஒருவேளை தமிழக இலக்கியவாதிகளால் மலேசியப் படைப்பைப் புரிந்துகொள்ள முடியாது என ஆழமாகவே நம்பினால் எதன் அடிப்படையில் அங்குக் கிடைக்கும் விருதுகளைப் பெற்றுக்கொள்கிறோம் என சிந்தித்ததுண்டா? கிடைக்கப்பட்ட விருதும் புரியாத காரணத்தால் தவறாக வழங்கப்பட்டது எனப் புரிந்துகொள்ளலாமா? நமக்குத் தேவை பாராட்டு. உண்மையான விமர்சனங்களை எதிர்க்கொள்ளும் துணிவும் அதை மறுத்துப் பேசும் இலக்கிய அறிவும் இல்லை என்பதால் ஏற்படும் பதற்றம்.

இப்படி விமர்சனம் மூலம் ஒரு படைப்பை அணுகி கருத்துரைத்தல் தீர்ப்புகள் அல்ல. அது ஒரு உரையாடலின் தொடக்கம். வலுவுள்ள இலக்கிய வாசகன், இலக்கியம் குறித்த தனித்த பார்வை கொண்ட விமர்சகன் தனது கருத்துகளை முன்வைக்க இலக்கியச் சூழலில் எப்போதும் இடமுண்டு. அது அறிவாளிகளுக்கான பாதை. அடிமுட்டாள்களுக்கான பாதை ஒன்றுண்டு. அங்கு வசைகளும், கேலிகளும், அவதூறுகளுமாக இருக்கும்.

நாம் எதை தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்பது நமது ஆளுமையைப் பொறுத்தது.

 

(Visited 585 times, 1 visits today)