மலேசியாவில் ஏன் நவீன இலக்கியம் வளரவில்லை? (உரை)

0001சில ஆண்டுகளுக்கு முன் இதே ஜொகூர் மாநிலத்தில் நடந்த மலேசிய – சிங்கப்பூர் இலக்கிய மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அதில் வல்லினம் வழி நாங்கள் உருவாக்க விரும்பும் இலக்கியப்போக்கு என்ன என்பதாக என் தலைப்பு இருந்தது. ஏறக்குறைய மலேசியா முழுவதும் உள்ள கல்வியாளர்கள், ஒரு சில கல்லூரி மாணவர்கள் தமிழ் ஆர்வளர்கள், எழுத்தாளர்கள் கூடியிருந்த மாநாடு அது. என்னுடைய அமர்வு இரண்டாவது நாள். இரண்டாவது நாள் சிறப்பு வருகை புரியவிருந்த தொழிலதிபருக்கு ஏற்பாட்டுக்குழுவினர் காத்திருந்தனர். எனவே அன்று முதலில் பேசவிருந்த மொழியியலாளர் திருமாவளவன் அவர்களின் உரை தாமதப்பட்டது. தனவந்தர் வந்தபிறகு நிகழ்ச்சி தொடங்கியது. ஆனால் திருமாவளனுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் குறைக்கப்பட்டது. எனது முறை வந்தபிறகு நான் உரையை இவ்வாறு தொடங்கினேன்.

“ஒரு அறிவார்த்தமான அரங்கு எப்போதும் அரசியல்வாதிகளுக்கும் தனவந்தர்களுக்கும் காத்திருக்காது. அப்படிக் காத்திருந்தாலும் அது ஓர் அறிவாளியின் நேரத்தை அபகரிக்காது. இப்படி தனவந்தர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரங்கு ஒருகாலமும் இளைஞர்களுக்கு அறிவார்த்தமான பாதையைக் காட்டாது. வல்லினம் அந்தப் பாதையைதான் இளைஞர்களுக்கு ஏற்படுத்த முயல்கிறது.”

நான் பேசி இறங்கியபோது இளைஞர்கள் மத்தியில் மட்டுமே ஆரோக்கியமான வரவேற்பு இருந்தது. கல்வியாளர்கள் நான் அணிந்து சென்ற கிழிந்த ஜீன்ஸ், டி-சட்டை குறித்து விமர்சிக்கத் தொடங்கினர். சபை நாகரீகம் இல்லை என பேசிக்கொண்டிருந்தனர். அதுதான் நடக்கும். நீங்கள் எப்போது சமூகத்தை நோக்கி மாற்றுக்கருத்து சொல்கிறீர்களோ உங்கள் தனிப்பட்ட ஒழுக்கம் மீது கல்லடி விழும். நான் வேண்டுமென்றுதான் அவ்வாறான உடையணிந்து அரங்கில் ஏறினேன். நவீன இலக்கியம் குறித்து பேசும் முன் இதை இங்குச் சொல்ல காரணம் உண்டு.

நவீன இலக்கியம் என்ற சொற்றொடரைப்போல மலேசிய இலக்கியச் சூழலில் ஒரு கேலி செய்யப்பட்ட கலைச்சொல் இருக்காது என்றே கருதுகிறேன். 2005இல் நவீன இலக்கியம் குறித்த காத்திரமான உரையாடல்கள் மலேசியாவில் நடக்கத் தொடங்கின. அப்போது எழுந்துவந்த நான் மற்றும் என் தலைமுறை எழுத்தாளர்கள் நவீன இலக்கியம், பின் நவீனத்துவ இலக்கியம் எனும் சொற்றொடர்களைச் சொல்வதில் பெரும் கிளர்ச்சியடைந்தோம். அதற்கு முன்பே கு.அழகிரிசாமி மற்றும் கோ.சாரங்கபாணி மூலமாக 50களிலும் இரா.தண்டாயுதம், எம்.ஏ.இளஞ்செல்வன், அரு.சு.ஜீவானந்தன் போன்றவர்களால் 70களிலும் சை.பீர்முகம்மது, மா.சண்முகசிவா போன்றவர்களால் 90களிலும் மறுபடி மறுபடி நவீன இலக்கியத்தின் அலை மலேசியத் தமிழ் இலக்கிய வெளியில் பாய்ந்து பாய்ந்து ஓய்ந்துள்ளது. 2005க்குப் பிறகே அதன் வீச்சு பெரும் மாற்றங்களை மலேசியச் சூழலில் உருவாக்கியது. ஒருவகையில் 50இல் தொடங்கியவர்களின் தொடர்ச்சிதான் வெவ்வேறு காலக்கட்டங்களில் வளர்ந்து 2005இல் புதிய தலைமுறையை உருவாக்கியது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் 40களிலேயே உலக வரிசையில் வைக்கக்கூடிய சிறுகதைகளை எழுதிய புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா போன்ற பெரும் படைப்பாளிகளும் உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு தமிழ் இலக்கியத்தின் தரத்தை பேசக்கூடிய கா.ந.சு போன்ற ரசனை இலக்கிய விமர்சகர்களும் தமிழில் உருவாகிவிட்ட சூழலில், ஏன் மலேசியாவில் நவீன இலக்கியத்தில் காத்திரமும் தொடர்ச்சியும் இல்லாமல் போனது என்பது முக்கியமான கேள்வி.

இதற்கு இங்குள்ள கடும் வேலைச்சுமையும், அப்போதைய அரசியல் நெருக்கடிகளும், போதிய கல்வி இல்லாத சூழலும், நூல்கள் கிடைக்காத சிக்கலும் பலகாலமாகக் காரணங்களாகச் சொல்லப்பட்டுள்ளன. இவற்றில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் ஒரு சமூகத்தில் காத்திரமான இலக்கியப்போக்கை அந்தச் சமூகத்தின் மொத்த சனமும் முன்னெடுப்பதில்லை. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரே தன்னை அதற்காக பலியிட்டுக்கொள்கின்றனர். அப்படிப்பார்க்கையில் 50களில் கு.அழகிரிசாமியின் வருகை, மலேசிய நவீன இலக்கியத்தை முன்னெடுக்க அவர் இலக்கிய வட்டம் அமைத்து பங்காற்றியது, உலக இலக்கியம் குறித்து பேசியது, சிறுகதைகளை செரிவு செய்து தமிழ்நேசனின் பிரசுரித்தது எல்லாம் ஆரோக்கியமான தொடக்கம். அதில் பங்கெடுத்த பலரும் நாடு முழுவதும் இருந்து பயணம் செய்து கலந்துகொண்டதும், தொடர்ந்து எழுத்து முயற்சியில் ஈடுபட்டதும், சிற்றிதழ்கள் நடத்தியதும் முக்கியமான வரலாற்று நிகழ்வு. ஆனால் அவர் ஊர் திரும்பியபிறகு அடுத்தடுத்து பெரிய நகர்ச்சிகள் உருவாக்கவில்லை. இதற்கு இணையாக இரா.தண்டாயுதம் மேற்பார்வையில்தான் 70களில் ‘இலக்கிய வட்டம்’ எனும் இதழ் உருவானது. அடுத்தடுத்து இலக்கியக் களம், நவீன இலக்கியச் சிந்தனை என்ற அமைப்புகள் தோன்றின. மீண்டும் சரிவு. 90களில் மீண்டும் அகம், ஜெயகாந்தன் வருகை வழி முன்னெடுப்பு நிகழ்ந்து சட்டென அடங்கியது. ஏன் இந்த அலைகள் எழுந்து அடங்கின? ஏன் அது நீட்சியாகவில்லை? இதற்கு நாம் விடையைக் கண்டடையாமல் இன்றைய மலேசிய நவீன இலக்கியத்தை முன்னெடுக்க முடியாது எனக் கருதுகிறேன்.

இந்தக் கேள்வியை அணுக, அதற்கான விடையைத் தேட நவீன இலக்கியத்தின் சில அடிப்படைகள் குறித்து அறிவது அவசியம்.

முதலில் நவீனத்துவம் என்ற பதம், இலக்கியத்திற்கான பிரத்தியேக கோட்பாட்டுச் சொல் என்ற ஒரு புரிதல் நம் நாட்டில் உண்டு. கலை இலக்கியங்களில் நிகழும் எந்த மாற்றமும் சமூகத்தில் நிகழும் மாற்றங்களின் வெளிபாடுதான். சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு அம்சங்களில் என எல்லாவற்றிலும் ஏற்பட்ட ஒரு வளர்ச்சி நிலையையே இச்சொல் சுட்டுகின்றது.

உற்பத்தி – நுகர்வு ஆகிய இரண்டின் அதிகரிப்புக்கும் போதுமான வளர்ச்சி, ஆட்சி மாற்றங்களை வரையறுப்பதில் ஜனநாயக முறை, நிலவுடமை சமூகம் இல்லாமலாகி முதலாளித்துவ சமூக அமைப்பு உருவாதல், பொதுமைபொதுக்கல்வி முறை, விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக அச்சு ஊடகத்தின் வருகை என நவீனத்துவத்தின் பண்புகளைப் பட்டியலிடலாம். சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டில் நிகழ்ந்த இந்த மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு உருவாகும் இலக்கியத்தை நாம் நவீன இலக்கியம் என வரையறுத்துக்கொள்ளலாம்.

மேற்சொன்ன மாற்றங்கள் எவ்வாறு இலக்கியத்தை ஊடுறுவுகின்றன என மூன்று உதாரணங்கள் வழி சொல்கிறேன்.

முதலாவது, ஆட்சி மாற்றங்களை வரையறுப்பதில் ஜனநாயக முறை எனச்சொன்னேன். கடந்த தேர்தலில் மலேசியாவில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த ஆட்சி மாற்றம் ஒவ்வொரு தனி மனிதனும் தான்  கொண்டிருக்கும் அதிகாரம் என்ன என்பதை உணர வைத்திருக்கும். எனவே உங்களுக்கு ஜனநாயக முறை குறித்து நான் அதிகம் சொல்ல வேண்டியிருக்காது. நாம் மக்கள் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஒரு காலக்கட்டத்தில் வாழ்கிறோம். ஒரு நவீன படைப்பாளி அதிகாரம் என்பது மக்கள்தான் என உணர்ந்திருக்க வேண்டியது நவீன இலக்கியத்தின் அடிப்படையான பண்பு. பாரதியை நவீன இலக்கியத்தின் முன்னோடி எனச் சொல்வதற்கு காரணமும் அதுவே. அவன் மக்களுக்காகப் பாடினான். மக்களே நவீன இலக்கியத்துக்கான புரவலர்கள்; மன்னர்கள் அல்ல என உணர்ந்திருந்தான். ஒரு அரண்மனைக்குள் அமர்ந்துகொண்டு தன் புலமையைக் கொட்டித்தீர்த்திருந்தால் பாரதி பெரும் செல்வாக்குடன் இருந்திருக்கலாம். அவன் தன்னை அதிலிருந்து விடுவித்துக்கொண்டான். பழைய இலக்கியம் அரசர்சபைகளை நோக்கி, சான்றோரை நோக்கி இயற்றப்பட்டன. நவீன இலக்கியம் மக்களை நோக்கி புனையப்படுவது என அவன் உணர்ந்திருந்ததே எஞ்சிய காலம் வரை அவனை மக்களை நோக்கி எழுத வைத்தது. எனவே ஒரு நவீன படைப்புக்கும் இருக்க வேண்டிய முதல் அம்சம், அது மன்னர்களையும் தனவந்தர்களையும் நோக்கி பேசாது. அவர்களிடம் சலுகை பெற வளைந்துகொடுக்காது. கூழை கும்பிடு போடாது. அது மக்களை நோக்கி பேசும். நவீன இலக்கியவாதியும் அவ்வாறே.

இரண்டாவது, பொதுமைபடுத்தப்பட்ட கல்வி முறை இலக்கியத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் முக்கியமானது. சங்க இலக்கியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கைத் தருணங்கள் மட்டுமே புனையப்பட்டுள்ளன. புலமை கொண்டவர்கள் தாங்கள் அறிந்த வாழ்க்கையின் பகுதிகளை பாடல்களாக்கியுள்ளனர். அவற்றில் சில திணைகளில் சில சம்பவங்கள் மட்டுமே மறுபடி மறுபடி நிகழ்வதைக் காணலாம். மனித உணர்வுகள் அப்படி திணையோடு பொருந்திபோவதில்லை. எனவே அவை செயற்கையான வாழ்க்கைச் சித்திரம் என அறிகிறோம். நான் அதில் உள்ள தரவுகளை, தகவல்களை பொய் எனச் சொல்லவில்லை. அவற்றைக்கொண்டு உருவாக்கிக் காட்டப்படும் காட்சி வரையரையறுக்கப்பட்ட நிகழ்த்துக்கலைக்கானது. அவ்வகையில்தான் அப்புனைவுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. கல்வி பொதுவானப்பிறகு பல்வேறு அடுக்குகளில், சூழலில் வாழும் மக்களின் பேசப்படாத வாழ்க்கை பதிவாகத்தொடங்குகிறது. அப்படித்தான் ‘ஐந்தடியில் ஓர் உலகம்’ (ப.கு.சண்முகம்) சிறுகதையின் வழி கோலாலம்பூர் கடைவீதிகளில் வாழ்பவர்களும், ‘புள்ளிகள்’ (அரு.சு.ஜீவானந்தன்) சிறுகதையில் சாக்கடையில் தங்கத்துகள்களை சல்லடை போடும் சிறுவனும், மஹாத்மன் சிறுகதையில் சிறை வாழ்க்கையும் என வேறுபட்ட வாழ்க்கையும் அவர்களில் வேறுபட்ட நியாயங்களும் புனைவுகளாகப் பதிவாகின்றன. இந்த மாற்றம் நவீன இலக்கியம் எழுதப்பட்ட எல்லா நிலங்களிலும் நடக்கிறது.

ஜி.ஆர்.இந்துகோபன் எனும் உண்மையான திருடன் தன் அனுபவத்தை எழுதிய ‘திருடன் மணியன்பிள்ளை’ என்ற நூல் மலையாளத்திலிருந்து இப்போது வாசிக்கக் கிடைக்கிறது. ஏராளமான ஆறுகளும் ஏரிகளும், நீர்நிலைகளும் கொண்ட கிழக்கு வங்காள மக்களை என்னால் ‘நீலகண்ட பறவையைத் தேடி’ நாவலில் பார்க்க முடிகிறது. பிச்சைக்காரர்களின் இருண்ட உலகத்தை ‘ஏழாம் உலகம்’ நாவலில் நுட்பமாக புரிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறு பரவலாக்கப்பட்ட பொதுக்கல்வி முறையின் கொடை என பல்வேறு பின்புலம் கொண்டவர்களின் புனைவிலக்கியங்களைக் கூறலாம். எனவே நவீனத்துவத்தின் வருகையால் இலக்கியத்தில் காணும் மற்றுமொரு அம்சம் பல்வேறு வாழ்க்கை அதனதன் நியாயங்களுடன் புனைவாக்கப்பட்டது எனலாம்.

மூன்றாவதாக அச்சு ஊடகத்தையும் அதையொட்டி வளர்ந்த அறிவுத்துறைகளையும் சொல்ல வேண்டும்.  ஒரு சம்பவத்தை நினைவு கூறலாம் என நினைக்கிறேன். 2014இல் ஒரு சிறுகதை வல்லினத்தில் பிரசுரமானது. அந்தக் கதையால் வல்லினத்தை அழிக்கப்போவதாக ஒரு குழு புறப்பட்டது. (இப்படி ஐந்து வருடத்திற்கு ஒரு குழு கோஷமிட்டு புறப்படுவதை வழமையாகக் கொண்டுள்ளது. இன்னும் ஒருபடி மேலே சென்று வல்லினத்தை அழித்துவிட்டதாகவே பறைச்சாற்றுபவரும் உண்டு. ஆனால் அந்த வருடம் வல்லினம் மூலம் பத்து நூல்களைப் பதிப்பித்திருப்போம். அதுவரை மலேசிய நவீன இலக்கியத்தில் நிகழாத ஒரு சிறிய தாவல் நடந்திருக்கும்.)

அதெல்லாம் ஒருபுறம் இருக்க, இப்படி 2014இல் அக்குழு வல்லினத்தை அழிக்கப் புறப்பட காரணமாக இருந்த அக்கதையில் ஒரு இளைஞனுக்கு எழும் கட்டற்ற காம இச்சை அதை சார்ந்த எண்ணங்களையும் மையப்படுத்தி இருந்தது காரணம். அது குறித்து நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வந்தன. நான் மிக நிதானமாக ‘சிக்மண்ட் பிராய்ட்’டின் (Oedipal Complex) தொடங்கி ஜெயகாந்தனின் ‘ரிஷிமூலம்’ வரை ஒப்பீடு காட்டி விளக்கம் கொடுத்தேன். அனைவரும் மிகக் கோபம் அடைந்துவிட்டனர். அதற்கான முக்கியக் காரணம் அவர்களில் யாருக்கும் ‘சிக்மண்ட் பிராய்ட்’ தொடங்கி ‘ரிஷிமூலம்’ நாவல் வரை எதுவும் தெரியவில்லை; வாசித்திருக்கவில்லை. அவர்களுக்கு அறிவார்த்தமான உரையாடலுக்கு உழைக்க வேண்டும் எனும் அச்சம் வருகிறது. அது இயலாமையின் அச்சம். இயலாமையின் அச்சம் கோபமாகத்தான் மாறும்.

இன்று அச்சு ஊடகம் மட்டுமில்லை. பரவலான இணைய பயன்பாடு நம்மிடம் உள்ளது. ஒரு நவீன எழுத்தாளன்/ அல்லது வாசகன் பரந்த வாசிப்பு அனுபவத்தைப் பெற எவ்வித தடையும் இல்லை. உலகத் தரமான திரைப்படங்களை, உணவுகளை, உடைகளைத் தேடிப்பிடித்து அடைய முடிகிற நம்மால் அவ்வாறான தரத்தில் உள்ள படைப்பிலக்கியங்களையும் வாசிக்கும் முயற்சிகள் நிகழவேண்டும். அதேசமயம் பிற துறைகளின் உரையாடல் வளர்ச்சிகளை அறிந்தவர்களாகவும் நவீன எழுத்தாளன்/வாசகன் இருப்பது அவசியம். பாரதி தொடங்கி ஷோபாசக்தி வரை யாருமே இலக்கியம் மட்டுமே பேசிக்கொண்டிருக்கவில்லை. சமகாலத்தில் நடக்கும் ஒவ்வொன்றைக் குறித்தும் தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்கின்றனர். அரசியல் பேசுகின்றனர். அவை புனைவாகவும் வெளிபடுகின்றன. அண்மையில் சுனில் கிருஷ்ணன் ‘நீலகண்டம்’ எனும் நாவல் எழுதியுள்ளார். ‘ஆட்டிஸம்’ எனும் நோய் குறித்த நுட்பமான தகவல்கள் வெளிபடுகின்றன.  அதேபோல அண்மையில் வெளியீடு கண்ட சை.பீர்முகம்மதுவின் ‘அக்கினி வளையங்கள்’ நாவலில் மலேசிய கம்யூனிஸ இயக்கம் குறித்த ஏராளமான வரலாற்றுத்தகவல்களை நீங்கள் வாசிக்கலாம். தகவல்களைக் கொண்டிருப்பதால் அவை கலையாகவில்லை. ஒரு இலக்கியம் இயல்பாக பிற துறையின் உச்சமான சிகரங்களை தன்னுள்ளே மிக எளிதாக இழுத்து முயங்கி தன் கலைவெளிப்பாட்டிற்காகப் பயன்படுத்திக்கொள்கிறது. மருத்துவம், அரசியல், உளவியல், அறிவியல், மார்க்ஸியம், தலித்தியம், வரலாறு என ஏராளமான அறிவுத்துறைகள் உள்ளன. இவை குறித்த அடிப்படையான புரிதல் அற்ற ஒரு படைப்பாளியால் சிறந்த படைப்பைக் கொடுத்துவிட முடியாது. இவ்வறிவு அவன் படைப்புக்கு வண்ணம் கூட்டுகிறது. எனவே நவீன இலக்கியம் இன்றைய ஊடக வளர்ச்சிக்கு ஏற்ப தன்னையும் பிறதுறை அறிவால் புதுமை செய்திருக்க வேண்டும். அதேசமயம் இன்று அது உலக இலக்கியப் போக்குடன் ஒப்பிட்டே தன் தரத்தை தீர்மானித்துக்கொள்வதும் அவசியம்.

நவீனத்துவத்தின் கூறுகளை யாரும் மேலிருந்து கட்டளையிட்டு உருவாக்கவில்லை என்றும் அது சமூகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் கலைகளிலும் கவிந்ததை மேற்சொன்ன உதாரணங்கள் வழி அறிந்திருக்கலாம். எனவே நவீன இலக்கியம் என்பது யாரும் எங்கும் திட்டமிட்டு பரப்ப முடியாது. இன்றைய உலகியல் வாழ்வை எவ்வாறு நாம் எல்லாவிதங்களிலும் புதுமை செய்துக்கொள்கிறோமோ அதே தரத்தை கலை இலக்கியங்களில் ஒருவாசகன் எதிர்ப்பார்ப்பதென்பது நியாயமான கோரிக்கையே. மேற்சொன்ன நவீனத்துவ மாற்றங்களின் அடிப்படையில் தமிழ் நவீன இலக்கியத்தின் போக்குகள் எவ்வாறு உருவாகியுள்ளன என்று பார்க்கலாம்.

முதலாவது, மேலே நாம் ஆட்சி மாற்றங்களை வரையறுப்பதில் ஜனநாயக முறையும் அதில் தோன்றிய பாரதியின் ஆளுமையையும் பார்த்தோம். ஒரு நவீன எழுத்தாளன் அதிகாரத்தின் கைப்பாவையாக எப்போதும் இருக்க மாட்டான். மன்னனை பரிவாரங்களுடன் வந்து என்னைப்பார்க்கச் சொல் என்ற பாரதியின் குரலின் நீட்சி அவனைத் தொடர்ந்து வந்த நவீன படைப்பாளி ஒவ்வொருவரிடமும் ஒலித்தது. கண்கூடாக நான் அதை இன்றைய சண்முகசிவா, ஜெயமோகன், கோணங்கி எனத் தொடர்ந்து கண்டுள்ளேன். என்னை அந்த வரிசையில் வைத்துக்கொள்ளவே நான் விரும்புபவனாகவும் இருக்கிறேன். இந்த அதிகாரம் என்பது அரசியம் அதிகாரம் மட்டுமல்ல. இன்று இன்னும் அதனை நுணுகிப்பார்க்க வேண்டியுள்ளது. முன்பு மன்னனை கவர புலவர்கள் பாடல்களை இயற்றி பணமும் பரிசும் பெற்றுச் சென்றனர். காரணம் அதிகாரம் அவர்களிடம் இருந்தது. மலேசியாவில் முன்பு அதிகாரம் முழுதும் அரசியல்வாதிகளிடம் இருந்தது. கடந்த 20 ஆண்டுகளில் அரசியல்வாதிகளிடம் இருந்த இந்த அதிகாரம் மெல்ல வெவ்வேறு தரப்புகளிடம் வந்துள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு படைப்பாளி நூலை வெளியிட்டால் மேடையில் அரசியல் பிரமுகர்களையும் தனவந்தர்களையும் அமரவைத்து அவர்களைப் போற்றிப்பாராட்டி முதல் நூலை பெரிய தொகை கொடுத்து வாங்கிக்கொள்ள ஏற்பாடு செய்வர். இன்றும் இது நடப்பதுதான். ஆனால் குறைந்துள்ளது. அரசியல்வாதியாக இருப்பதால் அவர்களை அழைப்பது தவறு என நான் சொல்லவில்லை. அதற்கு தலைமை தாங்குபவருக்கு அந்தத் துறையில் என்ன ஆளுமை உண்டு என்பதும் அத்துறையில் அவரது பங்களிப்பு ஏதேனும் உள்ளதா என்பதும் முக்கியம். தன்னை ஒரு நவீன இலக்கியவாதியாக உணர்பவன் ஒருபோதும் இத்தவறைச் செய்யமாட்டான். சாதாரணமாக கடந்த 15 ஆண்டுகளில் வெளிவந்த புதுக்கவிதை தொகுப்புகளை எடுத்துப்பார்த்தாலே அதில் அரசியல்வாதிகளின் படங்களை இணைத்து போற்றிக் கவிதையெல்லாம் இயற்றப்பட்டுள்ளதைக் காணலாம். இன்னும் சிலர் மெனக்கெட்டு அரசியல்வாதிகளிடம் ஆசியுரை, வாழ்த்துரையெல்லாம் வாங்கி நூலை பதிப்பித்திருப்பர். இவையெல்லாமே மன்னர்களைப் போற்றிப்பாடி பரிசுக்கேட்டு நிற்கும் புலவர்களின் நவீன அணுகுமுறைதான். கால ஓட்டத்தில் அது வெவ்வேறு வடிவங்கள் எடுத்தன.

நாளிதழ்கள் அதிகார பீடங்களாக இருக்கும்போது அவர்களுக்கு ஏற்றவகையில் படைப்புகளை அனுப்புவது, கல்விக்கூடங்களில் போட்டி நடத்தப்படும்போது அதற்கு ஏற்றார்போல சிறுகதைகளைப் புனைவது, நாளிதழ் பரபரப்பாக விற்பனையாக மலினமாக எழுதி பிரபலம் அடைவது என நவீன இலக்கியத்துக்கு ஒவ்வாதவற்றை நவீன இலக்கியவாதிகள் என்ற அடைமொழியுடன் பலரும் செய்த வரலாறு நம்மிடம் உண்டு. இவை எல்லாவற்றுக்கும் உள்ள பொதுவான குணம், பிறர் ரசனைக்காக, பிறர் நுகர்வுக்காக ஒரு படைப்பாளி செயல்படுகிறான் எனப்புரிந்துகொள்ளலாம்.

எல்லா படைப்புமே வாசகனை நோக்கி எழுதப்படுவதுதான். ஆனால் முதலில் நான் சொன்ன அதிகாரம் என்பது பணமாக இருக்கும் பட்சத்தில் நுகர்வுக்காக மட்டுமே எழுதப்படும் ஒரு படைப்பை ஜனரஞ்சக இலக்கியம் என வகைப்படுத்தலாம். இவ்வாறு எழுதுபவர்களின் நோக்கம் வாசகர்களின் பையில் இருக்கும் பணம் மட்டுமே. விஜய், ரஜினி போன்ற நடிகர்கள் என்ன செய்தால் அவர்களின் ரசிகர்கள் பணம் கொடுத்து படம் பார்ப்பார்கள் என கணித்து ஜனரஞ்சக இயக்குனர்கள் காட்சிகளை அமைக்கிறார்களோ அதேபோல எவ்வாறான மர்மங்களையும், கிளுகிளுப்பையும், திருப்பத்தையும் வைப்பதென ஜனரஞ்சக எழுத்தாளன் அறிந்தே வைத்துள்ளான். ராஜேஷ்குமார், தமிழ்வாணன் போன்ற எழுத்தாளர்கள் அவ்வாறு விற்கப்பட்டார்கள். பல நூறு நாவல்களை அவர்கள் எழுதியிருப்பார்கள். பல்லாயிரம் பிரதிகள் அவை விற்றிருக்கும். ஆனால் இலக்கிய விமர்சனத்தில் ஒரு இடத்தில் கூட அவர்கள் பெயர் வருவதை நீங்கள் பார்க்கவே முடியாது. சுஜாதாவின் சில சிறுகதைகளுக்காகவும் கட்டுரைகளுக்காகவும் மட்டும் பேசப்பட்டார். ஐம்பது ஆண்டுகாலத்தில் இலக்கிய விமர்சனங்கள் எழுதிய கா.ந.சுவோ, சுந்தர ராமசாமியோ, வெங்கட் சாமிநாதனோ, ஜெயமோகனோ தவறியும் இவர்கள் பெயரை உச்சரிக்க மாட்டார்கள். அப்படி உச்சரிப்பதுகூட இவர்களுக்குக் கொடுக்கும் அதிகபட்ச கௌரம் என முழுமுற்றாகவே புறக்கணிப்பர். ஜனரஞ்சக இலக்கியத்தை அவ்வாறு பேசாமல் விடுவதுதான் இலக்கியவளர்ச்சிக்கு நல்ல விமர்சகன் ஒருவன் செய்யும் கொடை. அவர்கள் வணிக எழுத்தாளர்கள். வணிக எழுத்தாளர்களின் நோக்கம் வணிகம் செய்வது. நாம் அதைப்பற்றி அலட்டிக்கொள்ள ஒன்றுமே இல்லை.

இன்று இலக்கியவாதிகளின் ஏராளமான நேர்காணல்கள் வருகின்றன. கும்பல் கும்பலாக பல புதிய படைப்பாளிகளின் நூல்கள் இம்முறை சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வந்துள்ளன. அவர்களின் நேர்காணல்களும் பல தளங்களில் இடம்பெற்றுள்ளன. நான் அவற்றைத் தொடர்ந்து வாசிக்கிறேன். அவர்கள் எங்கிருந்து புறப்பட்டு வந்துள்ளனர் என அறிய விளைகிறேன். யாரேனும் ஒருவர் கூட வைரமுத்து, மேத்தா, ராஜேஷ்குமார், தமிழ்வாணன், சிவசங்கரி, மு.வ, ந.பா போன்றவர்களின் இலக்கிய அபிப்பிராயங்களால் ஈர்க்கப்பட்டு இலக்கியத்தில் ஈடுபட்டிருக்கிறேன் எனக்கூறவில்லை. இவர்கள் ஒருகாலத்தில் அதிகம் விற்கப்பட்டவர்கள்.  இன்று எழுத வந்திருக்கும் புதியவர்களும் அந்த நூல்களை வாசித்திருப்பர். ஆனால் அவர்களால் இன்று அந்த எழுத்தாளர்களை தங்கள் முன்னோடிகளாகச் சொல்ல மாட்டார்கள். விற்பனையின் எண்ணிக்கை இலக்கியத்தின் தரத்தைத் தீர்மானிக்காது. இன்னமும் புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமனின் பெயர்களே மறுபடி மறுபடி சொல்லப்படுகின்றன. அவர்கள் பழையவர்கள் ஆவதில்லை. அவர்கள் புத்தக விற்பனைகாக வாசகனின் நுகர்வுத்தேவைக்காக எழுதவில்லை. ஆனால் அவர்கள்தான் பலருக்கும் இலக்கிய முன்னோடிகள்.

இளநீரை விட மதுபானங்கள் விலை உயர்ந்தவை, அழகான புட்டியில் உள்ளவை என்பதால் இதைவிட அது உடலுக்கு நன்மை செய்துவிடுமா? தூக்கில் போட்டாலும் போதை மாத்திரைகளை விரட்டி வாங்குவதால் அது என்ன உயர்ந்த வஸ்துவா? எழுத்தாளன் பணத்தால், அதிகாரத்தால், அரசியல் நெருக்கங்களால் ஏற்படுத்திக்கொள்ளும் பிரமாண்டங்களும் அதன் பொருட்டு அவனுக்குச் சேரும் கூட்டங்களுக்கும் இலக்கிய வரலாற்றில் இடமில்லை. அவர்களால் ஒருபோதும் இலக்கியவரலாற்றில் இடம்பிடிக்கவே முடியாது.

இரண்டாவது  பொதுமை படுத்தப்பட்ட கல்விமுறையால் இலக்கியம் பல்வேறு அறியப்படாத வாழ்வை பல்வேறு தரப்பட்ட எழுத்தாளர்கள் வழி அறிமுகப்படுத்துவதை குறிப்பிட்டிருந்தேன். இன்று இலக்கியம் வாசிப்பதற்கான வாசல் திறந்துள்ளது. என்னால் பல நாடுகளில் பல கலாச்சாரங்களை இலக்கியம் வழியே அறிய முடிகிறது. நான் இதுவரை சந்திக்காத ஒரு நாட்டின் குறிப்பிட்ட ஒரு சமூகம் எவ்வாறு சிந்திக்கிறது என்பது உட்பட எனக்கு இலக்கியமே அறிமுகம் செய்கிறது. அத்தனை ஆயிரம் வாழ்க்கை முறை. அத்தனை புதிய அனுபவங்கள். ஒரு நல்ல வாசகன் தன் வாசிப்பில் முதலில் தேடுவது இந்த புதுமையைத்தான். ஒவ்வொருவர் வாழ்க்கையும் தனித்தனியானது என்றால் ஒவ்வொருவரின் அனுபவமும் தனித்தனியானது. ஆனால் மலேசியாவில் 2005வரை நாளிதழ்களில் வந்த சிறுகதைகளை வாசித்தால் ஆச்சரியமாக இருக்கும்.

நான் முன்பு ஒரு புத்தகக் கடையில் வேலை செய்தேன்.0002 வீ.செல்வராஜ் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நாளிதழில் வந்த சிறுகதைகளை நூலாகத் தொகுத்திருந்தார். அவற்றைப் பேரார்வத்துடன் படித்துள்ளேன். குறிப்பிட்ட ஒருசில வகை அனுபவங்களே அக்கதைகளை வாசிக்கும்போது ஏற்படும். அதீதமான இரக்கம், அதீதமான தியாகம், அதீதமான காதல், அளப்பரிய தாய்மை உணர்வு, மனம் திருந்தி மாறும் மனிதன் என அவற்றைத் தொகுத்துவிடலாம். அ.ரெங்கசாமி போன்ற வரலாற்று பிரக்ஞை உள்ளவர்கள் ஜப்பானிய காலகட்ட வாழ்வின் அவலம், கம்யூனிஸ காலத்தின் இறுக்கம் என சம்பவங்களை அடிப்படையாக வைத்து நாவல் எழுதினர். சமகால தமிழக இலக்கியப்போக்குடன் ஒன்றித்தவர்கள் மார்க்ஸியம், தலித்தியம், முற்போக்கு என ஒரு அறிவொளியின் துணைக்கொண்ட புனைவுகளை உருவாக்கினர். எம்.குமாரன், சண்முகசிவா, சை.பீர்முகம்மது போன்ற எழுத்தாளர்கள் அவர்களது சில கதைகளில் வாழ்வின் அசல் சித்திரத்தை வாசகன் முன் வைத்து அவ்வனுபவத்தின் வழியே விமர்சனத்தை வாசகனே உருவாக்க வழி செய்திருக்கின்றனர். அவர்களுக்கு அடுத்த நிலையில் கொஞ்சம் மேம்பட்டு அரு.சு.ஜீவானந்தன், சீ.முத்துசாமி போன்றவர்கள் தனிமனிதனின் அலைக்களிப்புகளை, உள் முரண்களை எழுதியுள்ளனர். குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்ல காரணம் இவர்கள் வழிதான் மலேசியாவில் நவீன இலக்கியத்தின் அசலான கலைவடிவம் உருகொண்டது. அவை எண்ணிக்கையில் குறைவு. ஒரு வாசகனாக அவர்களது சில சிறுகதைகளை முழுமுற்றாக நான் நிராகரிப்பவன். ஆனால் தமிழில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளில் அவர்களுக்கான இடம் உண்டு. இன்று நவீன இலக்கிய வடிவம் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட வடிவத்தில் எழுதப்படுகிறது. ஜெயமோகன் அதை (sublime) என்கிறார். நான் அவ்வகை எழுத்தாளன். என் முதல் நாவலான பேய்ச்சியும் அவ்வகையானதே. நாவலை வாசித்துவிட்டு நவீன இலக்கிய வாசகர் ஒருவர் ‘ஓலம்மா சன்னதம் கொள்வது தர்க்கப்பூர்வமாக இல்லையே’ என்று கேட்டார். அவர் நல்ல வாசகர்தான். ஆனால் நவீன இலக்கியத்தில் தொடர் மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன என்பதை அவர் உணரவில்லை. போதுமான இலக்கிய வாசிப்பு பயிற்சி தொடர்ச்சியாக இல்லாத தர்க்க அறிவு, கலையின் திரிபு அழகியலை கவனிக்கவிடாது. ஆனால் இன்றைய வாசகன் ஒருவன் அவ்விடத்தை வெகு எளிதில் அடைகிறான். காரணம் அவன் தொடங்கும்போதே வாசிக்கக் கிடைப்பது அவ்வகையான படைப்புகளே.

இந்த இரண்டாவது அம்சத்தில் நாம் கவனிக்க வேண்டியது இந்த புதுமைத் தன்மையைத்தான். ஒரு புனைவின் களத்தைப் புதுமையாகக் காட்டுவது முக்கியமல்ல. அந்தச் சூழலில் உருவாகும் மனிதனின் மனம் என்னவாக உள்ளது என்றும் அவர்களுக்கே உரிய நியாயங்களும் பதிவாக வேண்டும். அ.ரெங்கசாமியின் ‘நினைவுச்சின்னம்’ நாவலில் நான் இந்த விமர்சனத்தை வைத்திருப்பேன். அத்தனை மாதங்கள் ரயில் தண்டவாளம் போட பாடுபடும் பாட்டாளிகளிடமிருந்து ஒரு ஒழுக்க மீறலோ, மனச்சிதைவோ, துரோகமோ நிகழ்ந்திருக்காதா என்ன? தமிழர்கள் எப்போதும் எந்தச் சூழலிலும் அறத்தைக் கைவிட மாட்டார்கள் என்பதுபோலவே அந்நாவல் புனையப்பட்டிருக்கும். கோ.முனியாண்டி அவர்கள் எழுதிய ‘ராமனின் நிறங்கள்’ நாவலை கடுமையாக விமர்சிக்கவும் அதுவே காரணம். செம்பனை தோட்ட வளர்ச்சியை அது சித்தரித்தாலும் அதில் உலாவும் மனிதர்கள் எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் வரும் மேக்கம் அடித்த போலியான கதாபாத்திரங்களை நினைவுறுத்துவார்கள். எந்தப் படைப்பாளியால் தன்னைத்தானே வேறொன்றாக உருமாற்றி அல்லது கூடுவிட்டு கூடு பாய முடிகிறதோ அவனால் மட்டுமே அந்தப் பாத்திரத்தின் மன ஆழத்தையும் அறிவதற்கான தருணத்தைப் பெற முடியும். அவனால் மட்டுமே புதிய தருணத்தை புனைவில் நிகழ்த்திக்காட்டவும் முடியும். மற்றவர்கள் செய்தி ஊடகங்களின் தகவல்களை கொஞ்சம் நுட்பமாக பரிமாற முயல்கின்றனர்.

இன்றைய நவீன இலக்கியவாதியின் முன் உள்ளது மிகப்பெரும் சவால். அது சம்பவங்களைக் கேட்கவில்லை. அதற்கு ஏராளமான ஒளி ஊடகங்கள் இன்று இணையத்தில் கிடைக்கின்றன. ஏற்கனவே புனிதப்படுத்தப்பட்ட விழுமியங்களை மீண்டும் புனைவாக்கிக் காட்டச் சொல்லவில்லை. அப்பணியை டிவி சீரியல்கள் செய்துக்கொண்டுள்ளன. அறிவுத்துரை சார்ந்த பெரும்பாலான மலேசிய சிறுகதைகள் கலைவடிவம் கூடாமல் பிரச்சாரமாகவே நின்றுவிட்டன. அதற்கு அவ்வறிவுத்துறையை நேரடியாக நூல்களிலேயே வாசித்துவிடலாம். வேறெந்த ஊடகமும் செய்ய முடியாத ஒன்றை இன்று நவீன எழுத்தாளன் செய்ய வேண்டியுள்ளது. அவ்வாறு அவன் எழுதுவது புதுமைதான் என்றறிய அதுவரை இலக்கியத்தில் உள்ள முக்கியமான ஆக்கங்களை வாசித்து அறிய வேண்டியுள்ளது.

மூன்றாவதாக உலக இலக்கிய அறிவும் பிற அறிவுத்துறை குறித்த அறிதலும் இணைவதன் மூலமே இன்றைய இளம் படைப்பாளி ஒருவனால் தரமான படைப்புகளை எழுத முடியும். அதற்கு தொடர் வாசிப்பும் தேடலும் பயணமும் கூட அவசியமானது.

‘கண்ணீரைப் பின்தொடர்தல்’ என நான் சந்தித்த ஒரு கைதியைப் பற்றிய கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன். தமிழகத்துக்காரர். அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அங்கிருந்தே அவர் புனைவாக ஒரு கதை எழுதி  என்னிடம் கொடுத்தார். கடந்த 10 ஆண்டுகளில் வெளியில் நடந்துள்ள எந்த மாற்றங்கள் குறித்தும் அவருக்கு ஒன்றுமே தெரியாது. எனவே அவரது கதையில் அவர் காட்டும் சாதனங்கள், தொழில்நுட்பம் எல்லாமே பழமையாக இருந்தன. என்னால் அவர் நாவலை பிரசுரிக்க முடியவில்லை. என் வாசிப்பில் மலேசியாவில் வெளியில் சுற்றும் பல படைப்பாளிகளுக்கும் இந்த கைதிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது என பலமுறை நினைத்துள்ளேன்.

தமிழகத்தில் நவீன இலக்கியம் தொடங்கியது முதலே உலக இலக்கியங்களை தமிழுக்குக் கொண்டுவரும் பணிகள் நிகழ்ந்துள்ளன. மறுபடி மறுபடி அங்கு ரஷ்ய இலக்கியம் குறித்தும் லத்தின் அமெரிக்க இலக்கியங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளன. நாம் கூலித்தொழிலாளர்களாக வந்தவர்கள்தான். ஆனால் அப்படியாக மட்டுமே வாழவில்லை. இன்று வாழ்வின் தரம் உயர்ந்துள்ளது. எல்லாவிதத்திலும் வளர்ச்சியடைந்தவர்களாகக் காட்ட நினைக்கிறோம். ஆனால் இலக்கியம் குறித்த பேச்சு வரும்போதுமட்டும் இங்குள்ள தமிழ்க்கல்வியைக் காரணம் காட்டுவோம். சரி அப்படியானால் ஆங்கிலத்தில் நேரடியாக வாசித்திருக்கலாமே என்றால் கோபம் வரும். பள்ளிக்கல்விக்கும் இலக்கிய வாசிப்புக்கும் சம்பந்தமே இல்லை. இருந்திருந்தால் இன்று பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் படித்தவர்கள் பெரும் இலக்கியப்படைப்பாளிகளாக வளர்ந்திருப்பார்கள். அடிப்படை கல்வி இல்லாமல் தமிழ் இலக்கியத்தில் சாதனை படைத்த பல தமிழக எழுத்தாளர்களை என்னால் உதாரணம் காட்ட முடியும். நாம் நமது சோம்பல் தனத்தால் தப்பிக்க நினைக்கிறோம் என்பது மட்டுமே உண்மை. மலேசியா எனும் சிறிய நாட்டில் நாம், எழுதியதுதான் மகா இலக்கியம் எனப்பாராட்டும் சிறிய கூட்டத்தின் கைத்தட்டல்களுக்கு மத்தியில் உண்மையில் நமது படைப்பின்  தரம் என்ன என்று ஒட்டுமொத்த தமிழ் இலக்கியச் சூழலோடு ஒப்பிட்டுப்பார்க்கும் தைரியம் நமக்கு எழுவதே இல்லை.

இப்போது தொடக்கத்தில் கேட்ட அதே கேள்வியை மீண்டும் எழுப்பிக்கொள்வோம். 50களில் மலேசியாவில் தொடங்கிய நவீன இலக்கிய முயற்சிகள் ஏன் பெரும் வீரியத்தும் இயங்கி நிலைபெற்ற தொடர்ச்சி இருக்கவில்லை? இந்தக் கேள்விக்கான பதிலை இவ்வளவு நேரம் நான் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் ஊகித்துக்கொள்ளலாம்.

முதலாவது காரணம்,

மலேசியாவில் அமைப்புகளிடமிருந்து பல விருதுகள் எழுத்தாளர்களை நோக்கி குவிந்தபடி இருப்பதை நீங்கள் பார்க்கலாம். விருது கொடுக்கும் தலைமை பீடங்களுக்கு விசுவாசமாக இருப்பது, தலைமை பீடத்தை விமர்சித்தால் நன்றியுடன் குரைப்பது, தன் படைப்பு குறித்து தானே பேசி பேசி போலியான பிம்பத்தை உருவாக்குவது, யாராவது விமர்சிக்கும்போது ‘எங்க படைப்பைப் பற்றி எங்களுக்கு தெரியுமாக்கும்’ என சுயசமாதானம் செய்துக்கொள்வது, இருபத்து மூன்றாம் புலிகேசியில் வருவதுபோல பாணபத்திர ஓணான்டிகளை வைத்துக்கொண்டு புகழச்சொல்வது என எழுத்தாளர்கள் இதற்காக போடும் உழைப்பு அதிகம். முதலில் ஒரு நவீன படைப்பாளி தன்னிடமிருந்து உதிர்க்க வேண்டியது அதிகார மையங்களின் மேல் உள்ள விசுவாசத்தை, நன்றி உணர்ச்சியை. நவீன இலக்கியவாதிகள் எனச் சொல்லும்போதே பாரதி, ஜெயகாந்தன், ஜெயமோகன், சு.வேணுகோபால் என வரிசையாக பேச்சில் அகங்காரம் கொண்ட தோற்றங்கள் நம் நினைவுக்கு வருகின்றன. அது அவர்களின் பாவனையல்ல. தான் யாருக்கும் எதற்கும் பணிந்துபோக வேண்டியதில்லை என்ற எண்ணமே அவர்களை கம்பீரமாக மாற்றுகிறது. தன் படைப்பு யாருக்கும் வளைந்துகொடுக்க அவசியமற்றது என்ற நிதர்சனமே அவர்கள் பேச்சில் கம்பீரத்தைக் கூட்டுகிறது. இந்த அடங்க மறுக்கும் குரல்தான் நவீன இலக்கியவாதிக்கான முதல் தகுதியென நான் நினைக்கிறேன். துரதிஷ்ட வசமாக நவீன இலக்கியம் பேசும் பெரும்பாலான படைப்பாளிகள் அரசியல்வாதிகளின் தயவையே நாடினர். சங்கங்களின் வழி ஏதாவது விருதோ பரிசோ கிடைக்குமென நவீன இலக்கியத்துக்கு முழு முற்றான எதிர்நிலைச் செயல்களில் உடன் இருந்தனர், இலக்கிய நூலுக்கு அரசியல்வாதிகளின் வாழ்த்துச்செய்திக்கு அலைந்தனர், முதல் நூலை எவ்வளவு தொகை கொடுத்து வாங்குவார்கள் என ஏங்கும் பார்வையில் தவித்தனர். இந்தச் சமரச குணம் இருக்கும்வரை ஒரு படைப்பாளிக்கு அந்த கம்பீரம் ஒட்டப்போவதில்லை. அவர்கள் படைப்பு எவ்வளவுதான் செறிவாக வெளிபட்டாலும் அது பெரும் அலையாக எழுந்து ஒரு காலத்தை நகர்த்த திறனில்லாமல் போனது.

இரண்டாவது காரணம், எவ்வளவு கல்வி அறிவு இருந்தாலும் வாசிக்கும் பழக்கம் இல்லாதது மலேசிய இலக்கியத்தின் போக்கினால் புதுமை என எதுவும் உருவாகவில்லை. சமுதாய சிக்கல்களை புனைவாக்குவது, ஒரு செய்தியை சம்பவங்களால் கோர்த்து கதையாக்குவது என நிறைந்து கிடந்ததே தவிர இந்நிலத்தின் புதிய களங்கள் அறிமுகமாகவில்லை. வேறு இன மக்களின் வாழ்வும் முகமும் தமிழ்க்கதைகளில் மிக அபூர்வமாகவே வந்தன. தங்களுக்குத் தெரிந்த தோட்டக்காட்டைவிட்டு வெளியே நகர எழுத்தாளர்கள் தயாராகவே இல்லை. அதோடு பிற நாட்டு அல்லது தமிழின் தீவிர எழுத்தாளர்களை வாசிக்காததால் விமர்சன போக்கும் உருவாகவில்லை. வைரமுத்து, சிவசங்கரி போன்றவர்கள் மலேசியாவுக்குத் தொடர்ந்து அழைத்துவரப்பட்டு ஜனரஞ்சக இலக்கியம் பரப்பப்பட்டது. மற்றுமொரு புறம் மலாயா பல்கலைக்கழகத்தில் மு.வ, ந.பா, அகிலன் போன்றவர்கள் பிரதானமாக முன்னிருத்தப்பட்டார்கள். இந்தப்போக்கினால் புதுமைப்பித்தனோ, மௌனியோ, கு.ப.ராவோ, க.நா.சு வோ, தி.ஜானகிராமனோ பரவலாக அறிமுகமாகவில்லை. மிகச்சிறிய குழுவினர் இவர்களைத் தேடி வாசித்திருந்தாலும் ரசனை விமர்சனப்போக்கு மலேசியாவில் நிகழவில்லை. விளைவாக, மு.வ, சிவசங்கரி ரக நாவல்களும் வைரமுத்து ரக கவிதைகளும் தீவிரமான மலேசியாவின் எழுத்துப்போக்கை வெகு எளிதில் மூழ்கடித்தன. முருகு.சுப்பிரமணியம் போன்றவர்கள் முதன்மையான நாளிதழ்கள் வழி தரமான படைப்புகளை அடையாளம் கண்டாலும் கறார் விமர்சனங்கள் வழி அவற்றை மலேசிய இலக்கியத்தின் அடையாளமாக மாற்றும் ஆளுமைகள் இல்லாத வெற்றிடம் மலேசியாவில் இருந்தது. விமர்சனம் அற்ற போக்கினால் தங்கள் எழுத்தின் தரம் தெரியாமல் புதுமையற்ற தேய்வழக்கு படைப்புகளே தொடர்ந்து வெளிவந்தன.

மூன்றாவது நாம் பிறதுறை சார்ந்த அறிதலில் மிகவும் பின் தங்கி இருக்கிறோம். இங்குள்ள இலக்கிய வாசகர்கள் பாராட்டாகச் சொல்லும் வாசகம் ஒன்று உண்டு. ‘சிக்கலே இல்லாமல் உங்கள் எழுத்து கடகடவென புரிந்தது’ என்பார்கள். அதற்குக்காரணம் எழுத்தாளன் அவர்கள் அறிந்த ஒன்றையே வாசிக்கக் கொடுக்கிறான். உதாரணமாக ஜனரஞ்சக திரைப்படங்கள் முதல் சீரியல்கள் வரை நீங்கள் ஏதாவது ஒரு பகுதியைப் பார்க்காமல் விட்டுவிட்டு மீண்டும் தொடர்ந்து பார்த்தால் உங்களால் படத்துடன் ஒன்ற முடியும். காரணம் அது உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகி உங்கள் ஆழ்மனத்தில் இருக்கும் ஒன்றை வேறுவடிவில் சொல்கிறது. ஆனால் கலை நுட்பம் மிகுந்த படங்களைப் பார்க்கையில் ஒரு காட்சியைத் தவறவிட்டாலும் உங்களுக்குப் படம் விளங்காமல் போகும். தீவிர இலக்கியம் உங்களுக்கு அறிமுகமில்லாத ஒன்றையே பெரும்பாலும் சொல்லும். ஜனரஞ்சக இலக்கியத்தில் நீங்கள் அதிகம் யோசிக்க வேண்டியிருக்காது. அதற்காக அதை வாசிக்கவோ பார்க்கவோ வேண்டாம் எனச் சொல்லவில்லை. அதில் கிடைக்கும் சொகுசை, மூளை வேலையே செய்யாத வாசிப்பை தீவிர இலக்கியத்தில் இங்கே எதிப்பார்க்கக் கூடாது.

இப்போது உங்களுக்கு அந்த மாநாட்டில் ஏன் நான் அவ்வாறு பேசினேன் எனப் புரிந்திருக்கும். ஒரு நவீன இலக்கியவாதி அப்படித்தான் இருப்பான். இருக்க வேண்டும். அறிவுக்களத்தில் அதற்கு எதிரான விடயங்கள் நிகழும்போது முதல் குரல் படைப்பாளியிடம் இருந்து வராவிட்டால் நவீன இலக்கியவாதியென சொல்லி பலன் ஒன்றுமில்லை.

(17.1.2020இல் ஜொகூரில் நண்பர் குமரன் ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஆற்றிய உரை. எழுத்து வடிவத்திற்கேற்ப சில மாற்றங்களுடன் )
(Visited 679 times, 1 visits today)