பேய்ச்சி ஒரு பார்வை : மதியழகன் முனியாண்டி

இது ஒரு மிக நீண்ட பதிவு. பொறுமையும் நேரமும் இருப்பவர்கள் தாராளமாக வாசிக்கலாம். நேரமில்லாதவர்கள், அவசரத்தில் இருப்பவர்கள் Just Ignore.

விளக்கம்

1. எனக்கும் நவீனுக்கும் மலேசியத் தமிழ் எழுத்து படைப்புகள் குறித்த சர்ச்சை இருப்பதை எல்லோரும் அறிவார்கள். கடந்த காலங்களில் நானும் நவீனும் எழுத்து படைப்புகள் குறித்து கடும் சண்டை போட்டுக் கொண்டதை முகநூல் வழியாக எல்லோரும் படித்திருப்பார்கள்.

2. அப்படி இருக்கும் போது; நவீன் எழுதிய பேய்ச்சி நாவலின் இந்த விமர்சனம், அவன் மீது இருக்கும் சர்ச்சையின் அடிப்படையிலேயோ, காழ்புணர்ச்சியின் அடிப்படையிலேயோ எழுதவில்லை. அவனை பழிவாங்கும் நோக்கம் எதுவும் எனக்கு இல்லை. பேய்ச்சி நாவலை படித்து முடித்தவுடன் அது குறித்து ஒரு விமர்சனம் எழுத வேண்டும் என்று தோன்றியதே தவிர, நவீன் என்கிற தனி மனித விமர்சனமாக இல்லாமல், பேய்ச்சி என்கிற ஒரு நாவலின் மிக நேர்மையான விமர்சனம் இது.

3. நான் சமீபகாலமாக வல்லினம் படைப்புகளை அதிகம் வாசிப்பதில்லை. எப்போவாவது ஒன்றிரண்டு படைப்புகளை வாசிப்பதோடு நிறுத்திக் கொள்வேன். வல்லினத்தின் படைப்புகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதே அதற்கு முக்கிய காரணம். வல்லினத்தில் நூறு பேர்கள் எழுதினாலும், அத்தனையும் ஒரே ஆள் எழுதியது போல, ஒரே மாதிரியாக, ஒரே மொழி பயன்பாட்டில் மிக தட்டையாக இருக்கும். அதனால் வல்லினம் பக்கம் போய் ரொம்ப நாள் ஆகிவிட்ட நிலையில், பேய்ச்சி நாவல் குறித்து நோவா என்பவர் எழுதிய விமர்சனத்தை வாட்சாப் குழு ஒன்றில் வலம் வந்தபோது படிக்க நேர்ந்தது.

4. அந்த விமர்சனத்தை படித்தபோது, நான் எழுதிய பேஎய் வழி கடிகை நாவலுக்கும் நவீன் எழுதிய பேய்ச்சி நாவலுக்கும் சில ஆச்சர்யமான ஒற்றுமைகள் இருப்பதாக எனக்கு பட்டது. இருவரின் நாவல் தலைப்பின் முதல் வார்த்தையே ஒத்து போனது பெரிய ஆச்சர்யமாக இருந்தது. பேஎய் வழி கடிகை – பேய்ச்சி

(i) என் கதையில் ராமசாமி என்கிற பெயரில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் வருகிறது. என் கதையின் நடுப்பகுதியின் நாயகனான ராமசாமியே கதையை நகர்த்திக் கொண்டு செல்பவர். நவீனின் பேய்ச்சி நாவலிலும் ராமசாமி என்கிற ஒரு முக்கிய பாத்திரம் வருகிறது.
(ii) என் கதையில் தாய்லாந்திலிருந்து மாக் யோங் நடனத்தை சேர்ந்த தோக் குரு ஒருவர் வருகிறார். அவரே என் கதையை முடிவுக்கு கொண்டு செல்பவர். நவீனின் பேய்ச்சி நாவலிலும் ஒரு தோக் குரு வருகிறார்.
(iii) என் கதை இரண்டு காலகட்டத்தில் நடக்கிறது. 1986-ஆம் ஆண்டு மையக் காலகட்டமாகவும், முன்கதை(Flashback) 1940-களிலும் நடக்கிறது. நவீனின் கதை 1981-ஆம் ஆண்டு மற்றும் 1999-ஆம் ஆண்டு என இரு காலக்கட்டத்தில் நடக்கிறது.

5. இந்த ஒற்றுமைகளை படித்தவுடன் நவீனின் பேய்ச்சி நாவலை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்கிற ஆவல் தொத்திக் கொண்டது. அங்கும் இங்கும் கேட்டு ஆக கடைசியாக, சென்ற வாரத்தில் நண்பர் ஒருவர் மூலமாக பேய்ச்சி நாவல் கைக்கு கிடைத்தது.

கதை சுருக்கம்

1. கிள்ளானில் யாழ்பாண மேனேஜர் ஒருவருடன் ஏற்பட்ட தகாத உறவினால் கர்ப்பமாகும் ஓலம்மா என்கிற கதையின் நாயகி கெடாவில் ஒரு எஸ்டேட்டுக்கு ஓடி வருகிறாள். ஏற்கனவே வெட்டியான் மகன் என்கிற அடையாளத்தை மறைக்க ஜொகூரிலிருந்து அங்கும் இங்கும் ஓடி கடைசியாக கதாநாயகி தஞ்சம் அடைந்த அதே எஸ்டேட்டுக்கு வந்து சேர்கிறார் மணியம் என்கிற கதையின் நாயகன்.

2. மணியமும் ஓலம்மாவும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். யாழ்பாண மானேஜர் மூலம் கர்ப்பமாகி பெற்ற பையனை மணியத்துக்கு பிடிக்கவில்லை. ராமசாமி என்கிற துணை கதா பாத்திரத்தின் உதவியோடு அவனை மணியம் கொன்று விடுகிறான். இதற்கிடையில், எஸ்டேட்டில் கள்ள சாரயாம் விற்கும் சீனத்தியோடு கள்ள உறவில் ஈடுபடும் மணியத்தை ஓலம்மா பார்த்து விடுகிறாள். அவனை விசம் வைத்துக் கொல்வதோடு, சீனத்தியை நைசாக அழைத்துக் கொண்டு போய் அருவியின் அருகில் வைத்து கல்லால் அடித்துக் கொள்கிறாள்.

3. சீனத்தியை அடித்துக் கொன்ற கல்லை தலையில் தூக்கிக் கொண்டு திரும்பி வரும் ஓலம்மா, அந்த கொலைக்கு உடந்தையாக இருக்கும் ராமசாமி என்கிற துணை பாத்திரத்திடம் கொடுக்கிறாள். ராமசாமி அந்த கல்லை பேச்சியாக வைத்து வழிப்பட்டு வருகிறார்.

4. மணியத்துக்கும் ஓலம்மாவுக்கு பிறக்கும் பெண் பிள்ளை முனியம்மா. அவளின் மகனுக்கு திருமணம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. கால ஓட்டத்தில், சீனத்தியை அடித்துக் கொன்ற கல்லை குலசாமியாக வைத்து கோவில் கட்டி வழிப்பட்டு வருகிறார்கள். மணியம்-ஓலம்மாவின் பேரன் அந்த குலசாமி கோவிலுக்கு வந்து குழந்தை வரம் வேண்டி சேவல் ஒன்றை காவு கொடுப்பதாக கதை முடிகிறது.

5. கெடாவில் கள்ளசாராயம் குடித்து சில பேர் செத்து போகிறார்கள். அந்த உண்மை சம்பவத்தை கையில் எடுத்துக் கொண்டு மேற்சொன்ன கதையை நகர்த்திக் கொண்டு போகிறார்கள்.

6. ராமசாமியின் அப்பா தமிழ் நாட்டிலிருந்து கிளம்பி மலாயாவுக்கு வேலை தேடி வருவதிலிருந்து கதை தொடங்குகிறது. அப்படியே ஜப்பான் காலணித்துவம், ஜாதி, சீனர்கள் மீதான இன துவேசம் என்பதனை இணைத்துக் கொண்டு, அன்றைய எஸ்டேட் வாழ்க்கை சொல்லப்பட்டிருக்கிறது.

விமர்சனம்

1. இது மிக மிக சாதரணமான ஒரு நாவல். நோவா மற்றும் அருண்மொழி நங்கை இருவரின் புகழ் உரையை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இவர்கள் இருவரும் இந்நாவலை எழுதிய நவீனின் மிக நெருங்கிய நண்பர்கள்; குரு ஸ்தானத்தில் இருக்கும் ஜெயமோகனின் மனைவி என்பதாலும் இவர்களின் விமர்சனம் வெறும் பாராட்டு மழையாகவே எனக்கு பட்டது. புகழ்ந்தே ஆக வேண்டும் என்கிற நட்பின் அடையாளமாக இவர்கள் இருவரின் விமர்சனம் இருந்தது. இவர்களின் விமர்சனத்தை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

2. இந்த நாவலை படித்து முடித்ததும் தூக்கி குப்பையில்தான் போட வேண்டும் என்கிற அளவுக்கு மிக மோசமான ஒரு நாவலாக இது இருந்தது. நவீனின் நண்பர்கள் புகழ்வது போல் இந்த நாவலில் எதுவுமே இல்லை. நாவல் முழுக்க கெட்ட வார்த்தைகளும் ஆபாச படத்துக்கு இணையான காட்சிகளும் விவரிப்புகளும்தான் இருந்தது.

(i) நாவலின் முதல் பக்கத்திலேயே கு…. என்கிற வார்த்தை வந்துவிடுகிறது.
(ii) என்ன ம…. லீவு போடக்கூடாதுங்கறான் சடப்பய(பக்:45)
(iii) தே…… நான் தூங்கன பெறவு கண்டவனோட படுக்குறியா?(பக்:77)
(iv) சுருட்டை பற்ற வைத்து சூ….. விடுவதற்கு சமம்(பக்:86)
(v) சிலர் தங்கள் வி…… சின்னியிடம் காட்டி நிற்பார்கள்(பக்:93)
(vi) அட்டைக்கு பிடித்த இடம் கொட்டை ….. குளிக்கும் போதெல்லாம் நன்கு பிதுக்கி ஆராய்ந்துக் கொள்வான்(பக்:116)
(vii) குடிகாரனுங்களுக்கு சாராயத் தண்ணி, சடையனுக்கு பு…. தண்ணி(பக்:122)
(viii) வி…. வெளியேறியபோது ‘கித்தா பாலாட்டம் பொங்குது’ என்றாள்(பக்:125)
(ix) தெய்வமுன்னா போட்டுட்டு போ ராசான்னு பூ…..காட்ட முடியும்?(பக்:175)
(x) ‘நீ சாமியா? க…..!’ (பக்:260)

3. இப்படியாக நாவல் நெடுகிலும் கெட்ட வார்த்தைகள் பரவிக் கிடக்கிறது. ஆ…. கட்சிகளை விவரிப்பது அதைவிட மிக மோசமாக இருந்தது. மாணவர்கள், இளம்பெண்கள் படிப்பதற்கு தகுதி அறவே இல்லாத மகா மட்டமான ஒரு நாவல் இது. குப்பைக்கு சமம். இது போன்ற நாவல்களால் இந்த சமூகத்துக்கு மிகப்பெரிய கேடு.

4. இந்த நாவலை எழுதிய நவீன் ஆசிரியனாக இருப்பதால்; ஒரு ஆசிரியரே இது போன்ற கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறார். அதனால் அது தப்பில்லை என்று நவீனிடம் பயிலும் மாணவர்களும், இந்த நாவலை படிக்கும் மாணவர்களும் தாங்கள் எழுதும் படைப்புகளிலும், பள்ளி தேர்வு கதை, கட்டுரைகளிலும் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருக்கிறது.

5. அச்சிடப்பட்ட நாவலில் இது போன்ற கெட்ட வார்த்தைகள் இருப்பதால், ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இருக்கும் மாணவர்கள் இந்த நாவலை படிப்பதால், இது கெட்ட வார்த்தை அல்ல என்று அவர்கள் எண்ணிக் கொண்டு, தாங்கள் ஆசிரியராக பதவியேற்ற பிறகு மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவும் வழி வகுக்கும்.

6. இப்படி தன் நாவலில் வெளிப்படையாக கெட்ட வார்த்தைகளை புகுத்தும் நவீன், இந்த கெட்ட வார்த்தைகளை தான் பணியாற்றும் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கும் சொல்லி கொடுக்க தயங்கமாட்டான். இது தவறு என்று உணராத ஒருத்தன் இதை செய்வதற்கு அஞ்சவே மாட்டான். இவனிடம் பயிலும் மாணவர்களும், இவன் படித்துக் கொடுக்கும் பள்ளியில் உள்ள மாணவர்களும் ஒழுக்கம் கெட்ட மாணவர்களாகத்தான் வளர்வார்கள்.

7. இன்று பல பள்ளிகளில் LGBT ஒரு பெரிய சிக்கலாக, தலைவலியாக உள்ளது. அதற்கு காரணம் LGBT தவறில்லை. அது சரியானது என்று பொதுவில் விவாதம் செய்வதே அதற்கான காரணம். இன்று பல இடைநிலைப்பள்ளிகளில் பெண் பிள்ளையும் பெண் பிள்ளையும் காதலிப்பதும், ஆண் மாணவனும் ஆண் மாணவனும் காதலிப்பது சகஜமாக நடக்கிறது.

8. இன்று பல பள்ளிகளில் இது மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. சில மாணவர்களை வழுக்கட்டாயமாக பள்ளி மாற்றிக் கொண்டு செல்கிறார்கள். ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இது ஒரு பெரிய தலைவலியாக உள்ளது. இளையோரிடையே ஒழுக்க சீர்கேடாக இது உருவாகி உள்ளது.

9. நவீன் இப்போது செய்திருப்பதும் இதுதான். இது போன்ற வார்த்தைகளை வெளிப்படையாக தன் நாவலில் வேண்டுமென்றே புகுத்தி, அதை இன்றைய இளையோர்களிடையே விதைக்கிறான். இதை படிக்கும் இளையோர்கள் இது போன்ற வார்த்தைகளை கூச்சமின்றி பேசவும்; தங்கள் படைப்புகளில் தாராளமாக பயன்படுத்தவும்; பள்ளி தேர்வுகளில் பயன்படுத்தவும் தயங்க மாட்டார்கள். இது நிச்சயமாக சமூதாய சீர்கேடுகளில் ஒன்றாக உருவாகும். நவீன் சமூக சீர்கேடுகளை தயங்காமல் செய்யக்கூடியவன்.

10. இந்த நாவல் மலேசிய தன்மையில் எழுதப்படவே இல்லை. இது முழுக்க முழுக்க தமிழ் நாட்டு தன்மையில் எழுதப்பட்டுள்ளது. நாவல் முழுக்க பயன்படுத்தப்படும் வார்த்தைகள், கதை, மொழி பயன்பாடு, கட்டமைப்பு அனைத்தும் தமிழ் நாட்டு வடிவிலேயே இருக்கிறது. கெடா, லூனாஸ், ஆயேர், பெனாங்கு, ஜொகூர் என்கிற இடத்தின் பெயர்களை நீக்கி விட்டால், இது முழுக்க முழுக்க தமிழ் நாட்டு மண் சார்ந்த நாவல். இது முழுக்க முழுக்க தமிழ் நாட்டு நாவல்கள் படிப்பவர்களை கவரும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

11. இந்த நாவல் யாருக்காக எழுதப்பட்டிருக்கிறது என்றால், தமிழ் நாட்டு வாசகர்களை திருப்தி படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இது மலேசிய வாசகர்களுக்கான நாவலே கிடையாது. மொழி ஓட்டமும், புனைவும் முழுக்கவே தமிழ் நாட்டு சாயலிலேயே இருகிறது.

12. சரளைக் கல்லாக, கூர்விளிம்பி, ஊட்ட சுத்தி, வெக்கையாக, கோழிய உட்டுட்டீரு, பண்ணப்போறாப்படி, மருவாதை, செக்கில் அரைப்பது, உம்ம வாத்தியாரும், தூங்கன பெறவு, இஞ்சன பாரு, விரை, கை உட்றாதீங்க, நா ஆரு கோவப்பட, பெறவு, ஞாவகமெல்லா, அது நீர் முழுங்கிடே, ஆரு ஊட்ட ஆரு விக்கிறது, உத்துட்டா, செத்துட்டா உட்டுடு!, எந்த ஞாவகமும் வாணாம் இப்படியாக பக்கத்துக்கு பக்கம் வரிக்கு வரி நாவல் முழுக்க தமிழ் நாட்டு நடை மொழியிலேயே எழுதப்பட்டிருக்கும்.

13. அதிலும் சில டிபிக்கல் வார்த்தைகள் இருக்கிறது. அது தமிழ் நாட்டிலேயே மட்டும்தான் பேசுவார்கள். அந்த மாதிரியாக வார்த்தைகள் நாவல் முழுக்க பரவிக் கிடக்கிறது. பொஞ்சாதி, பொலவி, செம்பக எல்லை, கெட்ட சொப்பணம், புட்டி சாராயம், மிசிறு, மிடறு, நைலான் சாக்குப்பை, இஞ்சி டீ இவை எல்லாம் பக்கா தமிழ் நாட்டு வார்த்தைகள். நாம் மொசுடு என்றுதான் சொல்வோம். மிசிறு என்று சொல்ல மாட்டோம். அதே போல் மொடக்கு என்போம்; மிடறு என்று சொல்ல மாட்டோம்.

14. இந்த நாவலை நான் முழுவதும் படித்து பின்பு, என்னால் உறுதியாக ஒன்று சொல்ல முடியும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் re-writing, அதாவது திருத்தி எழுதி இருக்க வேண்டும். இந்த நாவலை நவீன் ஒருவனாக எழுதியிருக்கவே முடியாது. காரணம் நாவல் நெடுக தமிழ் நாட்டு வாடைதான் அடிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மசாஜ், வண்டி, போயாக் போன்ற மிக சாதரண, தகுதி இல்லாத ஓரிரண்டு சிறுகதைகள் மட்டுமே எழுதிய நவீனால், ஒரே வீச்சில் சடாரென இந்த மாதிரியான நாவலை எழுத முடியாது.

15. இது தமிழ் நாட்டிலே பல ஆண்டுகளாக எழுத்து துறையில் உள்ளவர்களால் மட்டுமே இந்த மொழி பயன்பாட்டிலும் நடையிலும் எழுத முடியும். அந்த திறன்(Skill) நவீனிடம் இல்லை. இப்படியான திறன் இதற்கு முந்தைய எந்த படைப்பிலும் நவீனிடம் நாம் பார்க்க முடியாது. நவீனின் ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு நடை மொழியில் இருக்கும்.

16. நவீன் அடுத்த நாவலை வைத்து இதை நாம் உறுதியாக கண்டுபிடித்து விடலாம். அடுத்த நாவலை, நவீன் எவ்வளவு கால அவகாசத்தில் எழுகிறான், எப்படி எழுதுகிறான், எழுதும் வேகம், மொழி நடை, கட்டமைப்பு, பேய்ச்சியின் மொழி பயன்பாடு வைத்து மிக சுலபமாக கண்டு பிடித்து விடலாம். பேய்ச்சி நாவல் நிச்சயமாக ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் நவீனுக்காக re-writing பண்ணிக் கொடுத்திருக்க வேண்டும் என என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

17. இந்த நாவலை படிக்கும் வாசகர்கள் ஆரம்பம் முதலே குழம்பிய மனதோடுதான் படிப்பார்கள். நாவல் முழுவதும் ஒரு தெளிவில்லாத காலம் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும். எது எப்போது நடக்கிறது என்றே தெரியாது. ஒரு கதை, அந்த கதைக்குள் இன்னொரு கதை, அந்த இன்னொரு கதைக்குள் இன்னொரு கதை என விரிந்துக் கொண்டே போகும். இது வாசிப்பவர்களை குழப்பமடைய செய்வதோடு நாவலின் மீது வெறுப்பை உண்டாக்கி விடுகிறது.

18. கதை 1981 மற்றும் 1999 என இரண்டு காலகட்டத்தில் மாறி மாறி வரும். இந்த வகை கதைகளை non linear என்பார்கள். ஆனால் இந்த கதை non linear-க்குள் இன்னொரு non linear இருக்கும். இது வாசிப்பவர்களை ஏகத்துக்கு கடுப்பேத்துவதோடு, வாசிக்கும் போது ஒரு பெரிய சோர்வை ஏற்படுத்தி விடுகிறது.

19. 1981-ஆம் நடக்கும் கதை 1930-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடப்பது போல் இருக்கும். 1999-ஆம் ஆண்டு நடக்கும் சம்பவம் 1970-களில் நடப்பது போல இருக்கும். ஒரே மொழி நடை, கதை விவரிப்பு சமபங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். 1981-ஆம் ஆண்டுக்கும் 1999-ஆம் ஆண்டுக்கும் பேசும் வசனத்தில்கூட எந்த மாற்றமும் இருக்காது. 1981-ஆம் ஆண்டில் கதை நடக்கும் காலமாக இருக்கும். அதனுள் 1930-ஆம ஆண்டில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லிக் கொண்டு வரப்படும். எது நிகழ்காலம், எது ஃபிளாஷ்பேக் என நமக்கு எதுவுமே புரியாது.

20. அதே போல் கதையில் நவீன் சொல்லும் கால கட்டமும் பெரிய குழப்பமாக இருக்கும். ‘எம்ஜிஆர் நடிப்பதை விட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பின்பும்’(பக்:48) என நாவலில் சொல்லப்படும் ஆண்டு 1981. ஆனால் எம்ஜிஆர் நடிப்பை நிறுத்திய ஆண்டு 1978. கடைசி படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். அப்படி கணக்கில் பார்த்தால் மூன்று ஆண்டுகள். 1978-1979-1980-1981. அப்படி என்றால் கதை 1980-ஆம் ஆண்டு நடக்கிறாதா? அல்லது 1981-ஆம் ஆண்டு நடக்கிறதா என்று குழம்பி விடுவோம்.

21. ‘ஈராண்டுகளில் ஜப்பானியர் ஆட்சி முடிந்து’(பக்:137) என சொல்லப்படும். ஆனால் ஜப்பானியர்களின் ஆட்சி ஐந்து வருடங்கள் நீடித்தது. நாவலில் எந்த ஆண்டை இது குறிக்கிறது என்று தெரியாமல் போய் விடும். இப்படியாக கால வரிசையை அடுக்கிய விதத்தில் பெரும் குழப்பமாக இருக்கும். இந்த குழப்பத்தால் வாசிக்கும் பொறுமையை நாம் இழந்து விடுவோம்.

22. பெரியார் சீடர்களை, பெரியார் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களை எவ்வளவு மோசமாக சித்தரிக்க முடியுமோ அதைவிட மோசமாக இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது. பெரியார் சீடர்கள் எல்லாம் அயோக்கியர்கள், பித்தலாட்டக்காரர்கள், கொள்கை இல்லாதவர்களாக என இந்த நாவலின் வழி பதிவு செய்யப்பட்டுள்ளது.

23. இந்த கதையின் முக்கிய பாத்திரமான மணியம் தீவிர பெரியார் பற்றாளராக காட்டப்படுவார். பெரியார் படத்தை வீட்டில் வைத்து போற்றுபவராக இருப்பார். எஸ்டேட் தொழிலாளர்களுக்காக போராடுபவராக இருப்பார். சீன முதலாளியிடம் உரிமைக்காக போராடுபவராக இருப்பார். தர்மத்தை பேசுபவராகவும் ஒழுக்க சீடராகவும் இருப்பார். எஸ்டேட் இளைஞர்களின் வழிகாட்டியாக இருப்பார். தொண்டர் படையின் தலைவனாக இருப்பார்.

24. அப்படி பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுபவர், ஒரு கடைக்கார சீனன் இலவசமாக வீட்டுக்கு தேவையான பொருட்கள் கொடுப்பதாக சொன்னதும், இலவசத்துக்கு ஆசைப்பட்டு கள்ள சாராயம் காய்ச்சும் சீனத்திக்கு எதிராக நாச வேலையில் ஈடுபடுவார். கள் அருந்திவிட்டு, தன் மனைவிக்கும் இன்னொருவனுக்கும் பிறந்த பையனை கொலை செய்வார். கள்ள சாராயம் விற்கும் சீனத்தியை கட்டாயபடுத்தி அடைய முயற்சிப்பார்.

25. பள்ளி தலைமையாசிரியராக வருபவர் தீவிர பெரியார் பற்றாளராக இருப்பார். வீட்டில் பெரியார் சீர்த்திருத்த புத்தகங்களை வைத்திருப்பவர். மருந்துகாக சாரயம் குடிக்க போய், போதைக்கு அடிமையாகி இறுதியில் கள்ள சாராயத்தை குடித்து செத்து போவார்.

26. மணியம், பள்ளி தலைமையாசிரியர் இருவரும் பெரியார் பற்றாளர்களாக இருந்துக் கொண்டு உள்ளுக்குள் ஒழுக்க கேடான வாழ்க்கையை வாழ்பவர்களாக இருப்பார்கள். அந்த காலத்தில் பெரியார் கொள்கைகளை பின்பற்றும் ஒருவர் இப்படி இருக்க மாட்டார்கள். அவர்களிடம் ஒரு நேர்மையும் ஒழுக்கமும் இருக்கும்.

27. பொதுவாக கதைகளில் வரும் முக்கிய கதாபாத்திரங்களுக்கு இரண்டு விதமான தன்மைகள் இருக்கும். Internal conflict மற்றும் External conflict. ஆனால் இந்த நாவலில் வரும் மணியம் மற்றும் ஓலம்மா இரண்டு கதாபாத்திரங்களும் முன்னுக்கு பின் முரணாக செயல்படும். அவர்களிடையே ஏற்படும் மாற்றம்(Transition) சரியான முறையில் விளக்கப்பட வேண்டும்.

28. மணியம் வெட்டியானின் மகனாக இருப்பார். அது அவருக்கு அவமானத்தை கொடுக்கும். தன் அப்பா அடிமையாக இருப்பதாக உணர்வார். வெட்டியானின் அடையாளத்தை தொலைக்க வேண்டும் என்பதால், அவர் தன் அப்பாவை விட்டு தூர ஓடி விடுவார். ஓடிப் போய் சிலம்பத்தில் இணைந்துக் கொள்வார்.

29. சிலம்ப மாஸ்டரை தன் குருவாக ஏற்றுக் கொண்டு முறையாக சிலம்பம் கற்றுக் கொள்வார். திடிரென தோட்ட முதலாளி கூப்பிட்டத்தும் அவருக்கு அடியாள் வேலை பார்க்க போய் விடுவார். தன் மனைவியின் மகனை கொலை செய்வார். கள் அருந்துவார். சிகரெட் பிடிப்பார். இதை எல்லாம் செய்பவரிடம் ஒரு ஒழுங்கற்ற குணம் இருக்கும். ஆனால் அந்த ஒழுங்கற்ற குணத்தை பதிவு செய்யாமல் அந்த பாத்திரம் திடிர் திடிரென மனம் மாறும். எந்த அடிப்படையில் அந்த பாத்திரம் செயல்படுகிறது என்று வாசிக்கும் நமக்கு பெரிய குழப்பம் வந்துவிடும்.

30. அதே போல், ஓலம்மா. மன தைரியம் கொண்டவள். எஸ்டேட் பெண்களுக்காக குரல் கொடுப்பவள். எதையும் எதிர்த்து போராடக்கூடியவள். ராமசாமிக்கே தைரியம் கொடுப்பவள். எஸ்டேட் விற்கப்பட்ட பிறகு தனியாளாக சீன கம்பத்துக்கு வந்து பாலப்பம் விற்று வைராக்கியத்துடன் வாழ்ப்வள். புருசனையே கொல்லகூடிய மன வலிமைக் கொண்டவள். சீனத்தியை கல்லால் அடித்து கொலை செய்தவள். அப்படியான ஒரு வீர நிறைந்த பெண் பாத்திரம். கடைசியில் சீனன் கம்பத்தை காலி செய்ய சொல்லி விட்டதால், போகும் இடம் இல்லாமல், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கழுத்தை அறுத்துக் கொண்டு செத்து போவாள். ஒரு வீரம் நிறைந்த, மன தைரியமான பெண் கடைசியில் தன்னை தானே கழுத்தை அறுத்துக் கொண்டு செத்து போவது அந்த கதாபாத்திரம் உருவாக்கத்தில் இருக்கும் மிக பலவீனமான கற்பனை.

31. இந்த நாவலில் இன்னொரு பெரிய சிக்கல் ஆங்காங்கு குழப்பம் ஏற்படும் வகையில் இருக்கும் விவரனை. முதல் வரியில் மணியத்தை ‘அவர்,இவர்’ என மரியாதையோடு குறிப்பிட்டுவிட்டு, அடுத்த வரியில் ‘அவன், இவன்’ என குறிப்பிடப்பட்டிருக்கும்.

32. ‘வருடத்தில் ஒருமுறை மட்டுமே அவர் தோட்டத்தை இவ்வளவு வெறுமையாகப் பார்க்கிறார். இந்த இருளின் அமைதி அவனுக்குப் பிடிப்பதில்லை. இன்று அவருக்கு அது தேவைப்பட்டது’(பக்:122) இப்படியாக நாவலில் பல பக்கங்களில் மணியத்தின் பாத்திரம் ‘அவன்,அவர்’ என மாற்றி மாற்றி எழுதப்பட்டிருக்கும். இது வாசிப்பவர்களை பெரும் அளவில் குழப்பத்தை ஏற்படுத்தும்.

33. அதே போல் 1981-ஆம் ஆண்டுகளில் பீடி குடிப்பவர்கள் மிக மிக குறைவானவர்களே, இங்கும் அங்குமாக ஓரிரண்டு பேர்கள் இருப்பார்கள். பெரும்பாலும் சிகரெட் பிடிப்பவர்களே இருப்பார்கள். சிகரெட்டுக்கு மாறி விட்டவர்கள் பீடியை குடிக்க மாட்டார்கள் ஆனால் இந்த நாவலில் மணியம் பாத்திரம் முதலில் சிக்ரெட் பிடிக்கும். அப்புறமாக பீடி குடிக்கும். அப்புறம் சிகரெட் குடிக்கும். இப்படியாக முன்னுக்கு பின் முரணாக எழுதப்பட்டிருக்கும்.

34. இந்த நாவலில் ஜாதிகளை ஏகத்துக்கு மட்டம் தட்டி எழுதப்பட்டிருக்கிறது. ப…. போன்ற வார்த்தைகளை சகஜமாக காணப்படும். ‘கோழிங்கள வித்து காசாக்கவா பாக்குற? பற மவளே.’ ‘எங்கப்பன் ப…. ஒங்கப்பன் ஆரு?’ ‘ப…. வீட்டுக்கு ஏண்டி வந்த? எத நக்கிட்டு போவ வந்த. எதுக்கு இங்க துன்ன?’(பக்:191).

35. நம்மை நாமே ப…. என்று திட்டிக் கொள்வதும், அதை நாவல்களிலே அச்சிட்டு புத்தகமாக போட்டு, பல இனம் வாழும் நாட்டில் நாமே நம்மை ப….. என்று பிற இனங்களுக்கு காட்டிக் கொடுக்கிறோம். பறையா என்கிற வார்த்தையை நாம்தான் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். நவீன் போன்றவர்களுக்கு சமூதாய அக்கறை இல்லாமல் ஜாதியின் பெயரை சொல்லி திட்டுவதற்கும், நம்மை நாமே மட்டம் தட்டி பேசுவதற்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

36. ப….. என்றால் கேவலமானவர்கள் என்பது போல இந்த நாவலில் சொல்லப்படுகிறது. இது இளையோர்களின் மனதில் நஞ்சை விதைப்பதற்கு சமமானது. நவீன் ஆசிரியனாக இருப்பதால்; ப….. என்பது ஒருவரை திட்டுவதற்கு உபயோகப்படுத்தும் கேவலமான வார்த்தை என்று சொல்லி கொடுப்பதற்கு கொஞ்சமும் அஞ்ச மாட்டான். இப்படி பொதுவெளியில் நாவலில் ப….. என்கிற வார்த்தையை கையாண்டு இருக்கும் விதத்தை அவன் தன் மாணவர்களிடமும் பயன்படுத்த தயங்கமாட்டான்.

37. இந்த நாவலில் பல காட்சிகள் நாம் பல திரைப்படங்களில் பார்த்து புளித்து போன காட்சிகள் புகுத்தப்பட்டிருகிறது. நாயகன் படத்தில் வருவது போல், யாருக்கு இங்கு மலாய் மொழி தெரியும் என கேட்டு அதை, சீன முதலாளிக்கு மொழிபெயர்க்க சொல்லும் காட்சி ஒன்று இருக்கும். அதே போல் கள்ளசாராயம் காய்ச்சும் காட்சி. கிழே பெரிய பானை, மேலே சிறிய பானை, காய்ச்சுபவள் ஆபாசமாக உடுத்தி இருக்கும் சீனத்தி. இது எல்லாம் 1981-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடப்பது போல் எழுதப்பட்டிருக்கும்.

38. துண்டை கக்கத்தில் கட்டிக் கொண்டு விடுமுறைகாக கெஞ்சிக் கொண்டிருப்பது, முதலாளியின் சின்ன விட்டை மணியம் சைட் அடித்து விட்டார் என அடித்து துறத்துவது இப்படியாக பல காட்சிகள் தமிழ் சினிமாவிலிருந்து உருவி இந்த நாவலின் கதையாக அமைக்கப்படிருக்கும். இந்த நாவல் முழுக்கவே அடுத்து என்ன நடக்க போகிறது என்பதனை மிக சுலபமாக கண்டுபிடித்து விடலாம். அந்த அளவுக்கு கற்பனை வறட்சியாக நாவல் அமைந்துள்ளது.

39. இந்த நாவலில் பாராட்டும்படி எதுவுமே இல்லையா என்றால்; அப்படி இல்லை. இந்த நாவல் மிக உயர்ந்த மொழி நடையில் எழுதப்பட்டுள்ளது. வாக்கிய அமைப்பு மிக சிறப்பாக இருக்கிறது. ஆனால் நவீனின் மோசமான சிந்தனையினாலும், ஒழுக்கம் கெட்ட கற்பனையாலும் ஒரு நல்ல நாவலை குப்பை நாவலாக மாற்றி உள்ளான். பாராட்டுவதற்கு ஒரு சில அம்சங்கள் இருந்தும் நவீனின் கீழ்மையான புத்தியால் தமிழில் வந்து ஆக மட்டகரமான நாவலாக இது இருகிறது.

40. வாசிப்பதற்கு உகுந்த நாவலாக இது இல்லை. நவீன் போலவே கீழ்மையான புத்தி உள்ளவர்கள், ஒழுக்கம் கெட்டவர்கள், சமூதாய அக்கறை இல்லாதவர்கள் இந்த நாவலை வாசிக்கலாம். ஆகா ஓகோ என்று புகழலாம். சமூகத்தின் மீது அக்கறை இருப்பவர்களும், இளையோர்கள் மீது கவனம் இருப்பவர்களும் இந்த நாவலை குப்பையில் வீசிவிடுவார்கள்.

41. அப்படி இருந்து நவீன் ஏன் இந்த நாவலை எழுதினான்? மற்றவர்களிடம் கொடுத்து திருத்தியமைத்தான்? நவீன் எப்போதும் சர்ச்சைகளை ஏற்படுத்தி அதன் மூலம் பெயர் வாங்கக்கூடியவன். இந்த நாவலில் கெட்ட வார்த்தைகள், பறையா போன்ற ஜாதி பெயர்கள், சீனர்கள் மீதான இன துவேசம் போன்றவைகளை எழுதி சர்சையை ஏற்படுத்தி, அதன் மூலம் இந்த நாவலை பிரபலப்படுத்த வேண்டும். பெயர் பெற வேண்டும். முன்னம் வல்லினத்தில் வெளியான கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் போல.

42. நாவலை படித்த பிறகு என் மனதில் தோன்றியதை மிக நேர்மையாக, உண்மையாக எழுதியுள்ளேன். தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் இதை எழுதவில்லை. எனக்கும் நவீனுக்கும் நடுவில் இருக்கும் சர்ச்சையினால் இதை எழுதும் நோக்கம் எனக்கில்லை.

43. குறைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். விமர்சனத்தை திறந்த மனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல், இதை பிடித்து கொண்டு நவீனோ அல்லது வல்லினம் குழுவினரோ என்னிடம் சண்டை பிடிக்கலாம். ஆனால் நான் அவர்களோடு சண்டைக்கு போக மாட்டேன். என் நேரத்தை இனி அதில் செலவிட மாட்டேன். எல்லோர் கருத்தையும் சொல்ல எல்லோருக்கும் இங்கு உரிமை உண்டு. நான் என் கருத்தை விமர்சனமாக முன் வைத்துள்ளேன். தட்ஸ் ஆல்.

மதியழகன் முனியாண்டி

(Visited 419 times, 1 visits today)