நீலகண்டப் பறவையைத் தேடி…

‘உன்னுள் விதை முளைக்கிறது சோனா! இன்னுங் கொஞ்சம் காலத்தில் நீ வாலிபனாகிவிடுவாய். இப்போது உனக்குப் புரியாத ரகசியம் அப்போது புரிந்துவிடும். இன்னும் பெரியவனானதும் இருபக்கமும் கரையில்லாத ஆற்றுக்குள் மூழ்கி விடுவாய் நீ. அப்படி முழுக முடியாவிட்டால் கரையில் அந்த ரகசியத்தைத் தேடுவாய். தேடிக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் என் மாதிரியே பைத்தியமாகிவிடுவாய்’


‘நீலகண்டப் பறவையைத் தேடி’ நாவலை வாசித்து முடித்தபின் மறுபடி மறுபடி நான் வாசித்த வரிகள் இவை. நாவலை வாசித்தவர்களுக்குக் கண்ணீர் வரவழைக்கும் வரிகள். கட்டற்ற வாழ்வின் பேரலையில் மாட்டிக்கொண்டு, முற்றிலுமாக அதனோட்டத்தில் சரணடைந்துவிட்ட மனிதனிடம் எஞ்சி இருக்கும் சின்னஞ்சிறிய பிரக்ஞையின் கேவல் ஒலிகள் இவை.

கரையே இல்லாத ஆறு குறித்தும், இல்லாத கரையில் ரகசியத்தின் திறப்பை தேடுவது குறித்தும் எண்ணிக்கொண்டேன். எப்படிப்பட்ட கவித்துவம். அப்படி இன்மையில் கிடைக்காத ஒன்றுக்காகப் பைத்தியமாகத் திரிவதன் வலியை உணர முடியுமென்றால் இந்த நாவலையும் நெருங்கி அறிந்துகொள்ளலாம்.
நாவல் முழுவதும் ‘கேத்சோரத்சாலா’ எனும் ஒரு சொல்லை மட்டுமே எல்லா சூழலிலும் உதிர்க்கும் மணீந்திரநாத் எனும் பைத்தியக்காரர்தான் அத்தனை பாகங்களையும் கோர்க்கும் சங்கிலி. மனம் திரிந்து, இழப்பின் துக்க கணங்களை கண்களில் சுமந்து அலைந்துகொண்டே இருக்கிறார். சில சமயம் அவர் ஆங்கில கவிதைகள் சொல்கிறார். பெரும்பாலும் அவர் பிறரிடம் பேச நினைப்பதை மனதில் சொல்லிக்கொள்கிறார். அப்படி மனதில் உள்ளதை வெளிப்படுத்த முயலும்போது ‘கேத்சோரத்சாலா’ என மட்டும் சொல் உதிர்கிறது. மொத்த வாழ்க்கையையும் பாலினை தேடும் வேட்கையில் பணையம் வைத்து, எதிர்கொள்ளும் ஏமாற்றத்தின் பெருமூச்சுபோல அச்சொல் வெளிபடுகிறது.

பாலின் ஆங்கில பெண். அவர் காதலி. அவர் நினைவு வழியாக அந்தப் பெண் நாவல் முழுவதும் தலைக்காட்டுகிறாள். முதலாம் உலகப்போரில் பாலின் அண்ணன் மரிந்தபோது அவள் ஏசு கிருஸ்துவுக்குமுன் மெழுகுவர்த்தி விளக்கொளியில் அழுதுகொண்டிருந்த காட்சியும்; வெள்ளை நிறத்தில் பளபளக்கும் கவுன் அணிந்து அவள் வாசித்த பியானோ ஒலியும்; கப்பலில் ஏறி அவள் தன் நாட்டுக்குப் பயணமாகும் தருணமும் மணீந்திரநாத் மனதில் மங்கிய திரைப்படம்போல தோன்றித் தோன்றி மறைகிறது.

அவர் தன் காதலியைப் பிரிய கிழவர் மகேந்திரநாத் காரணம். ஆங்கிலப் பெண்ணைக் காதலித்த தன் மகனைத் தடுத்ததையும் அவர் மனைவி சொன்னதைக் கேட்காமல் பிடிவாதமாக இருந்ததையும் கடைசி காலத்திலும் சொல்லி கலங்குகிறார். அதைவிட அவரை வாட்டுவது, தன் பிள்ளையின் மூளைக்கோளாறை மறைத்து கல்யாணம் செய்துவைத்துவிட்டதாக மறுமகள் தன்னை தவறாக நினைக்கிறாளோ என்ற உறுத்தல்தான். மணீந்திரநாத் அவரின் மூத்த மகன். எனவே அவரது மனைவியை ‘பெரிய மாமி’ என நாவலில் குறிப்பிடப்படுகிறது. (இப்படி நாவல் முழுவதும் ஒரு கதாபாத்திரங்களை வெவ்வேறு உறவு முறையில் உள்ளவர்கள் பல்வேறு சமூக அடுக்கில் உள்ளவர்கள் குறிப்பிடும்போது மாறுபடுகிறது.)

பெரிய மாமி கல்கத்தாவில் வளர்ந்தவள். கான்வென்ட் பள்ளியில் படித்தவள். மணீந்திரநாத்துடன் திருமணம் ஆகி சோனாலி பாலி ஆற்றைப் படகில் கடந்து வரும்போதுகூட தன் கணவன் மனம் பிறழ்ந்தவன் என அறியாமல்தான் இருக்கிறாள். பின்னர் உண்மை தெரியவரும்போதும் அவள் தன் கணவனை பைத்தியமாகக் கருதவில்லை. புனித மோஸஸ் மாதிரி, கிரேக்கப் புராணத்து வீரனொருவன்போல யுத்தக்களத்தில் வழி தவறுவிட்ட வீரனாகவே அவனை எண்ணிக்கொள்கிறாள். அன்பாக பேசாத, மகிழ்ச்சி தரும் நிகழ்வுகளை ஏற்படுத்தாத அவன் எப்போதாவது உந்தப்பட்டு ஆவேசமான கொள்ளைக்காரனைப்போல அவளிடம் இயங்கும்போதெல்லாம் அவள் தன் தேகத்தை ஒப்படைத்துவிட்டு ஆதிமனிதராக தன் கணவனைப் பாவிக்கத் தொடங்குவாள். அவள் கற்றவள். அது ஆதி குணம் என அறிந்தவள். அதனாலேயே அவள் தன் கணவனை உயிருக்கும் மேலாக நேசிக்கிறாள். துக்கத்தை தன் வாழ்க்கையின் துணையாகப் பழகத்தொடங்குகிறாள்.

மணீந்திரநாத்திற்கு தம்பிகள் இருவர். முதல் தம்பி சந்திரநாத். அவருக்கு குழந்தை பிறக்கும் சம்பவத்திலிருந்து நாவல் துவங்குகிறது. குழந்தையின் பெயர் சோனா. இந்த குழந்தைதான் வளர்ந்த பின் சிறுவனாக மணீந்திரநாத்துடன் சுற்றித்திரிபவன். மணீந்திரநாத்தின் நேர்ரெதிர் கதாபாத்திரம் சோனா. என்றுமே அகப்படாத பெரிதினும் பெரிதான ஒன்றை நோக்கி ஓடுவதை மணீந்திரநாத் தன் வாழ்வின் உண்மையென நம்புவதுபோலவே சோனா தன் வயதுக்கு மட்டுமே உரிய அபோத குணத்துடன் (innocent) சிறிதினும் சிறிதான நுண்மைகளில் வாழ்க்கையை அறிய துடிக்கிறான்.

சோனா பிறந்தது முதலே அவர் மணீந்திரநாத்துடன் சம்பந்தப்படுத்தப்படுகிறான். அவன் தோற்றம் தன் கணவனின் ஜாடையில் உள்ளதாக பெரிய மாமி சொல்கிறாள். அவன் குழந்தையாக இருக்கும்போது மணீந்திரநாத் யாரிடமும் சொல்லாமல் அவனைப் படகில் ஏற்றிக்கொண்டு தர்காவிற்குச் செல்கிறார். உடன் வந்த நாயிடம் காவலுக்கு விட்டுவிட்டு அந்த ஊர் முழுவதும் சுற்றிவிட்டு அவனை அங்கேயே மறந்து வீடு திரும்புகிறார். வீட்டில் எல்லோரும் குழந்தையைத் தேடுவதைக்கண்டு தன் தவற்றைப் புரிந்துகொண்டவர் மீண்டும் நீந்தி அவ்விடத்தை அடைகிறார். சோனா, நாயின் பராமரிப்பில் பத்திரமாக இருக்கிறான். மணீந்திரநாத் மனதில் சொல்கிறார், “ஆகாயத்தைப் பார்! நட்சத்திரங்களைப் பார்! புல், பூ, பூச்சி பறவைகளைப் பார்! உன் பிறந்த மண்ணைப்பார்!”. சோனா இயற்கையின் மகனாக வளர வேண்டுமென அவர் விரும்புகிறார். அவன் அப்படித்தான் வளர்கிறான்.

ஒரு வட்டம் இட்டால், அதில் சரிபாதி மணீந்திரநாத் என்றால் மீதி பாதி சோனா. ஜமீந்தார் வீட்டு யானையில் ஏறி ஆகாயத்தை கடந்து அங்கே கோட்டையில் பாலின் இருப்பாள் என்ற எண்ணத்துடன் பாகனிடம் இருந்து யானையைப் பறித்துக்கொண்டு சென்று, பல நாட்கள் ஊர் திரும்பாதவராக, நதியிலும் ஏரியிலும் சகதியும் என பேதம் பார்க்காமல் படகிலும் நீந்தியும் நடந்தும் காதலியைத் தேடுபவராக நாவல் முழுவதும் அவர் பயணம் உள்ளது. தன் மனைவியின் கண்கள் நினைவுக்கு வந்தால் வீடு திரும்பிவிடுவார். ஆனால் அவருக்கு எப்போது அது நினைவுக்கு வரும் என்பதுதான் யாருக்கும் தெரியாது. இப்படி அதீத அறிவினால் உண்டாகும் மாயக்கற்பனையில் தத்தளித்து பேதலிக்கும் மனம் பாதி வட்டம் என்றால் அபோதத்தின் துள்ளலால் ஆச்சரியங்களில் திளைக்கும் சோனாவின் மனம் மீதி வட்டம்.

தன் பெரியப்பாவுடன் பல கிராமங்களையும் வயல்களையும் கடந்து நடக்கிறான் சோனா. நதியின் மறுகரையில் இறங்கியிருக்கும் ஆகாயத்தைத் தொட்டுவிடத் துடிக்கிறான். ஒருசமயம் அவன் சிலம்பம் பழக ஆர்வம் காட்டுகிறான். ஆனால் அவன் அம்மா அவனை எழுப்பாததால் கோபமுற்று, “அம்மா உன்னோட பேசமாட்டேன். நீ என்னை காலையில எழுப்பல” என கோபிக்கிறான். அதற்கு அம்மா,”நீதான் தூங்கிட்ட அதுதான் எழுப்பல” என்கிறாள். அவன் அந்த பதிலால் சமாதானம் ஆகிறான். மேற்கொண்டு கேள்விகள் இல்லை. துள்ளல்களால் உலகை அறியத்துடிக்கும் இளமனம் அவனது.

இப்படி டாகுர் குடும்பமும் அதைச் சார்ந்த சிக்கல்களும் தத்தளிப்புகளும் உற்சாகங்களும் நாவலின் முதல் அடுக்கு என்றால் அதற்கிணையாகப் பயணம் செய்யும் மூன்று பெண்களின் கதை மற்றுமொரு அடுக்கு.

(2)


வயலில் ஆமை முட்டைகளைச் சேகரிக்கும் காட்சியில் இருந்து அறிமுகமாகிறாள் ஜோட்டன். பதின்மூன்று குழந்தைகளுக்குத் தாயவள். மூன்றாவது தலாக்குக்குப் பின்னர் தனக்கு மீண்டும் திருமணம் நடக்காது என்ற எண்ணமே அவளைக் கஷ்டப்படுத்துகிறது. தன் கடவுளுக்கு அதனால் கோபம் வரும் என நினைப்பவள், ‘மனித உடல் மண்ணைப் போல; அதை தரிசாக விடுவது குற்றம்’ என தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறாள். ஜோட்டனுக்குப் பக்கிரிசாயுபு மீது மோகம். பக்கிரிசாயுபு வைத்துள்ள முஸ்கிலாசான் விளக்கின் நினைவு கூட ஜோட்டனுக்கு கதகதப்பை ஏற்படுத்துகிறது. பக்கிரிசாயுபு ஒருசமயம் அவள் வீட்டுக்கு வந்து உணவருந்திவிட்டு மீண்டும் வருவதாகச் சொல்லிவிட்டுப்போய் ஐந்தாண்டுகளாகியும் திரும்பவில்லை. அவர் மூலம் ஒரு குழந்தை கிடைக்கவேண்டும் என்ற ஏக்கம் அவளை வாட்டுகிறது. தன் உடலின் காமத்தைத் தீர்க்க எந்த ஆணாலும் முடியவில்லை என மூன்று தலாக்குக்குப் பின்னர்தான் அவள் அறிந்து வைத்திருக்கிறாள். “இந்த சனியன் பிடித்த உடம்புக்கு எப்போதும் பசி” என சொல்லிக்கொள்கிறாள். மூன்றாவது தலாக்குக்குப் பின்னும் திருமணம் செய்ய ஏங்கும் அவள் ஆசையை கேலி செய்யும் இந்து பெண்ணிடம் “இது தேகத்தோட சமாச்சாரம். உங்களுக்கு சொகம் கிடைக்கிறது. எசமான் வந்துட்டு போறார். நீங்க வாய்விட்டு சொல்றதில்ல. எனக்கு புருஷன் இல்லாததால் சுகமில்லை. நான் வாய தொரந்து சொல்லுறேன்.” என வெளிப்படையாகப் பேசுகிறாள். நன்கு உண்ட பிறகு காமம் தூண்டவும் நோயாளி மனைவியைக் கொண்ட மன்சூருடன் படகில் உறவு கொள்கிறாள். கொஞ்ச காலத்துக்குப் பிறகு பக்கிரி சாயுபு அந்த ஊருக்கு வரவே நான்காவது திருமணம் செய்துக்கொண்டு ஊரை விட்டுச் செல்கிறாள். கடவுளுக்கு உடல் மூலம் வரி செலுத்தப்போவது அவளுக்கு இன்பமாக உள்ளது. சமாதிகள் சூழ்ந்த இடுகாட்டு வளாகத்தில் உள்ள பக்கிரியின் வீட்டுக்கு வாழச்செல்லும் அவள், பக்கிரி சாயுபுவின் இருப்பிடத்தின் எதிரில்தான் அவள் முதல் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்த கிராமம் என்பதை அறிகிறாள். அன்று அங்கு ஒரு மரணம். இறந்தது தன் மகன்தான் என அறியாமல் அவள் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளும் வேட்கையில் பக்கிரியுடன் சல்லாபிக்கிறாள்.

இவள் பார்வையின் வழியே மாலதி அறிமுகமாகிறாள். தன்னைவிட கவர்ச்சியாக உள்ள பெண் விதவையாகி எப்படிக் காலம் தள்ளுவாள் என்பது அவளுக்கு வருத்தமாக இருக்கிறது. டாக்கா கலவரத்தில் கணவனை இழந்த மாலதி வாத்துகள் வளர்க்கிறாள். அதில் ஒரே ஒரு ஆண் வாத்து இருக்கிறது. அது இரவானதும் பிற வாத்துகளைத் துரத்தி வருவதெல்லாம் தன்னைக் கொஞ்சியபடி துரத்திவரும் கணவனை நினைவூட்டுகிறது. விதவையாக ஊர் திரும்பியவளுக்கு சிறுவயதில் நண்பனாக இருந்த ரஞ்சித்தின் நினைவு அடிக்கடி வருகிறது. அவன் பெரிய மாமியின் தம்பி. ஒருமுறை அவன் அவளிடம் “என்னுடன் வரியா?” எனக்கேட்டது தனிமையில் அசரீரியாக எதிரொலிக்கிறது. விதவையின் கௌரவம் அவள் விதவையின் தன்மையில் இருப்பதாக நம்புகிறாள். அது மதம் அவளுக்கு போதித்தது. ஆனாலும் இவளிடமிருந்துதான் முஸ்லிம் லீக் போஸ்டர் பலகையை மாட்டுவது குறித்த எதிர்ப்புணர்வு முதலில் எழுகிறது. அதை சில இடங்களில் கண்டிக்கவும் செய்கிறாள். அது கலவரத்தில் கணவனை இழந்ததால் வந்த எதிர்ப்புணர்வு.

ஜோட்டனின் தம்பியான ஆபேத் அலியின் மனைவி ஜலாலி நாவலில் வரும் மற்றுமொரு வலுவான பெண் கதாபாத்திரம். ஜலாலியின் தீ வயிற்றில் உள்ளது. அது பெருத்து பசியாகி அவளையே தின்னத்தொடங்கும்போது இந்து குடியானவர்கள் கண்களில் படாமல் அல்லிக்கிழங்கை திருடுகிறாள். வறுமை அவளை வாட்டிக்கொண்டே இருக்கிறது. ஒருசமயம் அல்லிக்கிழங்கை பிடுங்குவதாக சொல்லி மாலதியின் வாத்தை திருடுகிறாள். இரண்டு கைகளாலும் ஆண்வாத்தின் கழுத்தை நீருக்கடியில் நெரித்துக்கொண்டு சாமுவிடம் அல்லிக்கிழங்கு பிடுங்குவதாகச் சொல்கிறாள். மறுகரையில் ஆண்வாத்தைக் காணாமல் தேடிக்கொண்டிருக்கும் மாலதி ஏமாற்றத்தால் வாடுகிறாள். அது ஆண் வாத்து மட்டுமல்ல. அவள் கணவனின் நினைவுகளுக்குக் குறியீடான வாத்து. ஜலாலிக்கு யாருடைய வருத்தமும் பொருட்டில்லை. பல நாட்களாக அவள் வயிற்றில் உணவு விழவில்லை. பசி. சட்டியில் போட்ட வாத்தை தன் துண்டை எடுத்து மூடுகிறாள். எண்ணெய் இல்லாததால் வாத்தை வாட்டி சாப்பிட ஆரம்பிக்கிறாள். ஆனந்தமோ, பசிவெறியோ, பேராசையோ அவள் உடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக உண்கிறாள். திருடியது யார் எனக் கண்டுப்பிடிக்க புறப்பட்ட சாமு திருப்தியாக உண்டுவிட்டு முக்கால் நிர்வாணமாகத் தொழுகை செய்துக்கொண்டிருக்கும் ஜலாலியைக் கண்டதும் உண்மையை யாரிடமும் சொல்லாமல் மௌனமாகிறான்.

இந்த மூன்று பெண்களின் வாழ்க்கையும் நாவலில் சித்தரிக்கப்படும் இடமெல்லாம் உயிர்ப்பானது. உடல் பசியால் அவதியுறும் ஜோட்டன், வயிற்றுப்பசியால் வாடும் ஜலாலி, மனப்பசியால் வாடும் மாலதி இவர்கள் மூவருக்கும் நேரும் அனுபவங்கள் வாழ்க்கை குறித்த அத்தனை நல்லபிப்பிராயங்களையும் களைத்துப்போடுகின்றன. ஜோட்டன் விரும்பிய பக்கிரி சாயுபுவின் உடல் பசியால் சுருங்கி மலமும் வாந்தியும் வெளிபட்டு மரணிக்கிறது. பசியில் அள்ளி கிழங்கு பறிக்கச் சென்ற ஜலாலி கஜார் மீனால் தாக்கப்பட்டு; நீருக்கு அடியில் உள்ள கொடியில் சிக்கி இறக்கிறாள். கணவன் இறந்தபிறகு தான் விரும்பிய ரஞ்சித்திடம்கூட மதக்கட்டுப்பாடினால் அன்பைச் சொல்லாத மாலதி இஸ்லாமிய சமூகத்தின் வணிகரால் கடத்தப்படுகிறாள். மூன்று பேர் அவளை வன்புணர்ச்சி செய்து முட்செடிகளுக்கு நடுவில் வீசிவிட்டுச் செல்கின்றனர்.
எது ஆசையைத் தூண்டுகிறதோ அதுவே அழிக்கிறது. எது தீவிரமாகப் பாதுகாக்கப்படுகிறதோ அதுவே அழுகிப்போகிறது. எது ஒளிர்கிறதோ அதுவே இருள்கிறது.

மணீந்திரநாத் உருவகித்திருக்கும் பாலின் குறித்த சித்திரத்தை இந்த மூன்று பெண்களும் பூடகமாகக் கேலிசெய்துக்கொண்டே இருக்கிறார்கள். எப்போதும் அகப்படாத ஒன்றுக்கு இல்லாத கரையில் தேடிக்கொண்டிருக்கும் மணீந்திரநாந்துக்கு, பாலினும் ஜோட்டனின், ஜலாலியின், மாலதியின் ஒரு அம்சம் என என்றுமே உணரப்போவதில்லை. அவர் மூழ்கிப்போயிருப்பது இருபுறமும் கரையற்ற நதி. ஏமாற்றங்கள் கொடுக்கும் அதீத கற்பனையில் அவராக உருவாக்கிக் கொண்ட கரை.

(3)

அதீன் பந்த்யோபாத்யாய

அதீன் பந்த்யோபாத்யாய ஏறத்தாழ பதினாறு அத்தியாயங்களை தனிச் சிறுகதைகளாக எழுதி பிறகு நாவலில் சேர்த்திருக்கிறார் என வாசித்தேன். ஆனால் வாசிப்பில் எந்தச் சிக்கலும் இல்லை. நீர் சூழ்ந்த கிராமத்தில் நுழைந்தவுடன் அதன் குளிர் நாவல் முடியும்வரை ஒட்டிக்கொள்கிறது. காணும் இடங்களில் எல்லாம் நீர். நாவலின் மையமாக பேசப்படும் மதங்களிடையிலான பிரிவினையும் இந்தக் குளிருக்குள்தான் நடக்கிறது.

இந்த நாவலில் மூன்றாவது அடுக்காக இந்த இந்து – இஸ்லாம் மத மக்களிடம் உள்ள பிரிவினையைக் கூறலாம். மிக சன்னமான குரலில்தான் அது நாவலில் பேசப்படுகிறது. ஆனால் நாவல் முழுவதும் பின்னணி இசைபோல அதன் தீவிரம் படர்ந்திருக்கிறது.

முஸ்லீம்களும் இந்துக்களும் சேர்ந்து வாழும் நதி சூழ்ந்த கிராமத்தில் முஸ்லீம் லீக் உருவாகியுள்ளது குறித்த அறிவிப்பு அந்தக் கிராமத்தைப் பொறுத்தவரை மிகச்சிறிய செய்தி. அதை அறிவதால் அவர்களுக்கு ஒன்றும் இல்லை. மதப்போர் பற்றிய பிரச்சாரமும் ரகசியக்கூட்டங்களும் குறிப்பிட்ட ஒரு தலைமுறைக்கு மட்டுமே முக்கியமாக உள்ளது. அது இந்திய சுதந்திர போராட்டத்துக்காக வெள்ளைக்காரர்களை சாகடிக்கத் துணியும் ரஞ்சித், லீக் கட்சி சார்பில் தேர்தலில் நின்று ஜிஹாத், தர்மயுத்தம் மூலம் புரட்சி நடத்த வேண்டும் என ஆவேசம் கொள்பவனாக இருக்கும் சாமு ஆகியோர் தலைமுறையினருடையது.

அதற்கு முந்தைய தலைமுறையில் உள்ள ஈசாம் ஷேக்குக்கோ அல்லது அவர் தலைமுறையில் உள்ள யாருக்கோ அது பொருட்டல்ல. அவர்கள் வறுமையைப் பழகிவிட்டவர்கள். ஈசம் ஷேக்கினால் தன் மனைவியுடன் ஒருநாளும் அன்பாக இருக்க முடிந்ததில்லை. மனைவி நோயாளி. இவரோ தர்மூஜ் வயலே கதியென கிடப்பவர். கோடைக்காலம் வந்தால் தர்மூஜை விற்று பணத்தை டாகுருக்குக் கொடுப்பார். அதுவே அவருக்குப் பெருமை. அவர் முஸ்லிம் கிராமங்களில் எப்போது இருக்கும் வறுமையின் ஒரு குறியீடாகவே வருகிறார். டாகுர் வீட்டுக்காரர்கள் அந்த பிராந்தியத்தில் அதிகம் படித்தவர்கள். அதன் வழி செல்வாக்குப் பெற்றவர்கள். பைத்தியமாகிவிட்ட பெரிய டாகுரைத் தவிர (மணீந்திரநாத்) இரண்டாவது மூன்றாவது டாகுர்கள் ஜமீந்தாரின் காரியஸ்தர்கள். இதுபோன்ற பணக்கார இந்து குடும்பங்களை நம்பி வாழ்வை ஓட்டுவது விதியென இருக்கும் ஒரு தலைமுறை உள்ளதுபோல அவ்வறுமைக்குக் காரணம் இந்து நிலக்கிழார்கள் எனவும் அதைப்போக்க இஸ்லாமிய தேசம் அமைய வேண்டும் எனவும் நம்பும் இன்னொரு தலைமுறை உருவாகிறது. விளைவாகத் திருவிழாவில் கலவரம் வெடிக்கிறது.

இந்த வேற்றுமை சோனாவின் தலைமுறையை எவ்வாறு தீண்டுகிறது என்றும் நாவல் சித்தரிக்கிறது. அவன் தன் தோழி பாத்திமாவுடன் காடுகளில் சுற்றுகிறான். அப்போது இருளின் அச்சத்தில் உரையும் அவன் கரங்களை பாத்திமா பிடிக்க, அதை தீட்டென சொல்லி கவலைப்படுகிறான் சோனா. மறுபடி மறுபடி அவன் மணீந்திரநாத்தின் எதிர்முகம் எனக் காட்டிக்கொண்டே இருக்கிறான். ஒன்றாகவே பயணிக்கும் எதிர்முகம். மதத்தை மீறி நடந்துவிடுவோமோ என்ற பயம் அவனுக்கு எப்போதும் இருக்கிறது. அமலா, கமலா என்ற பெண்கள் உடல் ரீதியாக கொடுக்கும் அனுபவங்களைக் கண்டு பயந்து ஓடுகிறான். குற்ற உணர்ச்சி அவனைத்துரத்துகிறது. மணீந்திரநாத் ஆங்கில பெண் நினைவுகளில் சகதியில் நடனமாடுகிறார். அவருக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

(4)


முதன்மையான இந்திய நாவல்களில் ஒன்றாக ‘நீலகண்ட பறவையைத் தேடி’ பல விமர்சகர்களாக சொல்லப்படுகிறது. சு.கிருஷ்ணமூர்த்தி மொழிப்பெயர்ப்பில் நாவலை வாசித்து முடித்தபிறகு பல மனிதர்களைப் பார்த்த அனுபவத்தையும் அவர்களின் மனம் இயங்கும் சூட்சுமங்களையும் வாழ்வது குறித்த பெரும் சோர்வையும் அதன் வழியே வாழ்க்கையின் அர்த்தப்பாடுகளையும் பலவித கதாபாத்திரங்கள் வழி உணர்த்திவிட்டுச் செல்கிறது.
உடல் திடகாத்திரமாக இருந்தபோது சடுகுடு விளையாட்டு வீரனாக இருந்த பேலு, பத்துத்தலைகளை வெட்டி வீசக்கூடிய பலம் கொண்டவனாகச் சித்தரிக்கப்படுகிறான். மணீந்திரநாத் கட்டுப்பாடில்லாமல் ஏறிச்சென்ற யானையால் தூக்கி எறியப்பட்டதால் அவனது ஒரு கை செயலிழக்கிறது. அதற்குப்பின் அவன் வாழ்க்கையும் சுருங்கிவிடுகிறது. வெயிலில் காயும் மீன்களை கொத்த வரும் காகத்தை விரட்ட முடியாமல் தடுமாறுகிறான். அவன் மனைவி வேறு ஒருவனுடன் உறவு வைத்துள்ளாள் என அறிந்தும் தலாக் கொடுக்காமல் இருக்கிறான். அப்படிக் கொடுத்தால் நட்டம் அவனுக்குத்தான். அடுத்த வேளை உணவு கிடைக்காது.

அதுபோல நாவலில் ஒரு இடத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் பெரும் தீவிபத்து ஏற்படுகிறது. ஜாலாலி சமையல் செய்யும்போது வெளியில் தெரிந்த வயிற்றுப்பகுதியைப் பார்த்து காமம் உந்தப்பட்டு அவள் கணவன் ஆபேத் அலி அவளை இழுத்துக்கொண்டு சென்றதால் நடந்த விபத்து அது என பின்னால் தெரியவருகிறது. எளிய இச்சை பேரழிவை ஏற்படுத்தியது பற்றி அங்கு யாருக்கும் தெரியவில்லை.

கொலைக் குற்றச்சாட்டிலிருந்து தப்புவதற்காக ஓடி வந்து, பல நாட்கள் தலைமறைவாகக் கழித்து ஒரு தர்க்காவில் தங்க அங்கு பிணத்தைப் புதைக்க வந்தவர்கள் கொழுத்தி வைத்த மெழுகுவர்த்தியை ஏந்திக்கொண்டு தனிகாட்டு ராஜாவானவர் பக்கிரி சாயுபு. ஒரு முஸ்கிலாசான் விளக்கைச் சம்பாதித்துக்கொண்டு சில மந்திரங்களையும் மத விஷயங்களையும் அறிந்துகொண்டு கொலை குற்றச்சாட்டில் இருந்து விலகிச்செல்கிறார். தன்னை ஒரு பக்கிரியாக தானே நம்பி, மரணத்தருவாயில் எஞ்சியிருக்கும் சக்தியையெல்லாம் திரட்டிக்கொண்டு கம்பீர குரலில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மாலதியை அவர் அண்ணன் வீட்டில் விட்டுவிட்டு உடனே படகில் ஊர் திரும்ப படும் பாடும், அதன் மூலம் அதுவரை தான் மக்கள் மத்தியில் உருவாக்கி வைத்த பயத்தை தொல்குடிகதையாக மாற்ற முனையும் வேட்கையும் நாவலுக்கு மேலும் மேலும் தீவிரத்தைக் கூட்டும் பகுதிகள்.

இப்படி நாவல் முழுவதும் வகை வகையான மனிதர்கள். வித விதமான நியாயங்கள். எதுவும் சரியல்ல. எதுவுமே தவறுமல்ல. காரணம் வாழ்க்கையே அனைத்தையும் தீர்மானிக்கிறது; அதுவே அனைத்தையும் சிதறடித்து பின்னர் கழுவி சுத்தமும் செய்கிறது.

(5)


நாவலை வாசித்து முடித்தபிறகு மணீந்திரநாத் எங்காவது நின்று கொண்டு ‘கேத்சோரத்சாலா’ எனக் கத்தும் காட்சி மட்டும் மனதில் மிஞ்சியிருந்தது. அந்தச் சொல்லுக்கு அர்த்தமில்லை எனச் சொல்லப்படுகிறது. நேரடி பெங்காலி பொருளில் ‘முந்தானை நுனி’ எனப் பொருள் கொள்ளலாம். மனைவிக்கு அடங்கியவன் என்ற வசையாகவும் எடுத்துக்கொள்ளலாம் என நண்பர் கூறினார்.
மணீந்திரநாத் பைத்தியமா என்றால் முழுமையாக அப்படிக் கூறிவிட முடியாது. அவருக்கு அனைத்தும் தெரியும். நீரில் மூழ்கி இறந்த ஜலாலியை ஊரே தேடும்போது அவர் நேராக அவள் சிக்கிக்கிடக்கும் நீருக்கு அடியில் உள்ள கொடிகளுக்குள் சென்று பிணத்தை மீட்டு வருகிறார். அவர் இயற்கையை முழுக்க அறிந்தவர். வேறு யாரைவிடவும் சோனாலி பாலி ஆற்றையும் தர்மூஜ் வயல்களையும் நீர்த்தாவரங்களையும் அதில் வாழும் ஆமைகளையும் மீன்களையும் பூச்சிகளையும் அவர் அறிந்தவர். எது எங்கு நிகழும் என்ற ஞானம் உள்ளவர். அவருக்குக் குளிர்வதன் நடுக்கமோ பசியின் தவிப்போ காயங்களில் வலியோ என எதுவுமே இல்லை. அவர் அனைத்தையும் கடந்தவர். ஆனால் அவருக்குத் தெரியாதது ஒன்றே ஒன்றுதான். அது பாலின் இருக்கும் இடம்.

யானையில் ஏறி பல நாட்கள் அலைந்து திரிந்து அகப்படாத, எங்கும் காணாத அவளை எண்ணி சோர்ந்துபோய் ஊர் திரும்புபவர் வீட்டுக்குள் நுழைந்து சன்னலின் வழி தெரியும் நெல்லி மரத்தைப் பார்த்தவுடன் அந்த மரத்தின் அடியில்தான் பாலின் இருப்பதாக தனக்குள் சொல்கிறார். அவரை சரியாகப் புரிந்துகொள்ள உதவும் காட்சி அது. அவள் தொலைவிலும் தொலைவானவள் அதுபோலவே அண்மையிலும் அண்மையானவள். பல நாட்கள் பயணித்தும் அவளை அடையலாம் சில நிமிடங்கள் நடந்தும் அணுகலாம். அவருக்கு எல்லாம் ஒன்றே.

அதனால்தான் அவரால் இல்லாத நீலகண்டப் பறவையைத் தேடிக்கொண்டே இருக்க முடிகிறது. அது இல்லையென அவருக்குத் தெரியும். ஆனாலும் அவரால் தேடுவதை நிறுத்த முடியாது. அவர் கரையில்லாத ஆற்றில் மூழ்க விரும்பாதவர்; எனவே தேடுவதன் மூலம் மாயக்கரை ஒன்றை உருவாக்க முயன்றுகொண்டே இருக்கிறார்.

நாவலாசிரியர்: அதீன் பந்த்யோபாத்யாய

தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி

நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு

(Visited 672 times, 1 visits today)