போப்பிக்கு அஞ்சலி

போப்பி இன்று இறந்தான். உண்மையில் அதன் அடையாள அட்டையில் பாரதி என்றுதான் பெயரிருக்கும். கனிவும் கம்பீரமும் ஒருங்கே அமைந்த கண்களைக் கொண்டிருந்தான் என்பதால் அப்பெயர் வைத்தேன். ஆனால் போப்பி என்ற பெயர்தான் இயல்பாக ஒட்டிக்கொண்டது. எனவே அவன் தன் பெயர் பாரதியென கடைசி வரை அறிந்திருக்கவில்லை.

மாமாவின் நண்பர், தான் வேலை செய்யும் தொழிற்சாலையில் ஒரு நாய் குட்டிகளை ஈன்றிருப்பதாகவும் வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம் என்றார். குறிப்பாக பழுப்பு நிறத்தில் உள்ள குட்டி மிக அழகானது என்றார். எதற்கும் பார்ப்போமே என்று சென்றபோது மூன்று குட்டிகள் இருந்தன. அதில் பழுப்பு நிறத்தில் இருந்த குட்டிக்குக் கண்களைச் சுற்றி அழகான வெண் வளையம். அதன் அழகு அதிகம் கவரவே அதை தூக்குவதற்காக அருகில் சென்றேன். அது பயந்துகொண்டு வேகமாக ஒரு பலகையில் தடுப்புக்குள் சென்று மறைந்துகொண்டது. எவ்வளவு கையைவிட்டு துழாவியும் அகப்படவில்லை. அதன் அம்மா எனக்கென்ன வந்தது என தொலைவாக நின்று வேடிக்கைப் பார்த்தது.  அப்போதுதான் தன் சகோதரனைக் காப்பாற்ற அதே ஈடுள்ள கறுப்புக் குட்டி ஒன்று தன் மழலைக் குரலில் குரைத்தபடி என்னை நோக்கி பாய்ந்து வந்தது. கம்பீரமாகக் கால்களைப் பரப்பி என் முன் நின்றான். நான் இடுப்பில் கைவத்து அதை முறைத்தேன். என் முகத்தை அண்ணாந்து பார்த்து மீண்டும் இரு முறை மழைலை குரலில் குரைத்தான்.

நான் அருகில் சென்றபோதும் குரைப்பதை நிறுத்தவில்லை. சரியாக 12 சென்டிமீட்டர் உயரம் மட்டுமே இருந்தான். தூக்கினேன். கால்களில் உதறல். நடுங்கி விழாமல் இருக்க உஷாராகக் கால்களைப் பரப்பி வைத்திருந்தான். உடல் முழுவதும் உண்ணி. உருமினான். தோல்கள் முகம் முழுவதும் மடிந்து வினோதமாகத் தோற்றமளித்தான். கால்களைப் பார்த்தேன். பெரிய வகை நாய் எனத் தெரிந்தது. கறுப்பனின் அசாத்திய துணிவு என்னை ஈர்த்தது. எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தேன்.

எனது பத்து வயதிலிருந்து நாய்களுடன் வாழ்ந்திருந்தாலும் ஒரு நாயை பராமரிக்கும் முறையை போப்பியிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். வளர வளர அவனின் அப்பா Great Dane வகையாக இருக்கலாம் எனப் புரிந்துகொள்ள முடிந்தது. நல்ல உயரம். வாயோரம் தொங்கும் சதை. ஒட்டிய உரோமம். வெயிலில் மின்னும் கருமை. அமர்ந்தால் நெஞ்சுப்பகுதி எழுந்து இராணுவ வீரனாகக் காட்சி கொடுப்பான். யாரும் நெருங்க முடியாத உடல்வாகும் தீவிரமான பாய்ச்சலையும் எளிதில் எதையும் பழகும் மதிநுட்பமும் கொண்டிருந்தான்.

அவனுக்குத் தோல் அலர்ஜி இருந்தது. குட்டியிலேயே அதன் இரத்தத்தை ஆராய்ந்த மருத்துவர்கள் அது மரபணுவில் இருந்து வரும் கோளாறு என்றனர். குறிப்பிட்ட உணவு மட்டுமே வழங்க வேண்டும். வேறு ஏதும் கலந்தால் தோல்களில் புண் உண்டாகும். எனவே அவன் வாழ்ந்த காலத்தில் பெரும்பாலும் ஒரே வகையான உணவுகளை மட்டுமே உண்டான். எனவே பிற உணவுகளின் மீது அவனுக்குத் தனியாத வேட்கை இருந்தது. அசையும் வாய்களை ஆவலோடு பார்த்துக்கொண்டிருப்பான்.

விலங்குகளில் நுட்பமான உணர்வை அவற்றிடம் பழகும் போதே புரிந்துகொள்ள முடியும். அவை எப்போது தன் அன்புக்குரியவர்களின் தொடுதலுக்காக ஏங்கியே இருக்கின்றன. பல சமயங்களில் போப்பி குடியிருப்பின் வளைவில் என் காரின் ஒலி கேட்டப்பிறகுதான் சாப்பிடத்தொடங்கும். காரை வீட்டின் முன் பார்க்கிங் செய்யும்போது இறுதி வாய் உணவை மென்றுக்கொண்டிருக்கும். பசியின் வேகம் அது. நாய்கள் மனிதர்களைப் போல அன்பை நிரூபிக்க நினைக்கும் ஜீவனல்ல. நிபந்தனையற்ற அன்பை செலுத்த மட்டுமே தெரியும். அது என் மீது அன்பு செலுத்துவதற்கு ஈடான ஒன்றையும் நான் இதுவரை செய்ததில்லை என்றே இப்போது இதை எழுதும்போது தோன்றுகிறது.

நாய்களில் ஆயுள் குறைவுதான். நன்றாகப் பராமரித்தால் 12 ஆண்டுவரை உயிர் வாழும். கலப்பினம் என்றால் மேலும் மூன்று ஆண்டுகள் ஆயுள் கூடலாம். ஆனால் போப்பிக்கு தனது பதினோறாவது வயதில் நோய் கண்டது.   

வீட்டை புதிப்பிக்கும் வேலைகள் நடந்தபோது அதன் தூசு அவனுக்கு ஒவ்வாது என்று மூன்று வாரம் நாய்கள் பராமரிப்பு விடுதியில் சேர்த்தேன். அவ்வப்போது சென்று கவனிக்கும்போதெல்லாம் தன்னை அழைத்துச் செல்லும்படி அடம்பிடிப்பான். எனக்கு அவனது உடல் நலம் முக்கியமாக இருந்தது. எனவே சமாதானம் சொல்லி வைப்பேன். மூன்று வாரங்களுக்குப் பின் அழைத்துவந்தபோது கொஞ்சம் மூர்க்கமாக இருந்தான். முகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. புதுப்பித்த பணி செய்தவர்கள் சாப்பிட்டு வைத்த எதையோ திண்ணச் சென்றவனைத் தடுத்தபோது கடிக்க வந்து அவன் பற்கள் என் தொடையில் பதிந்தன. அச்செயல் என்னைவிட அவனை அதிகம் பாதித்தது.

மறுநாள் வேலை முடிந்து வந்தபோது படுத்திருந்தான். காலையில் இருந்து எதையும் சாப்பிடவில்லை என அம்மா சொன்னார். என் மெல்லிய குரலைக் கேட்டாலே உற்சாகமாக எகிறி பாய்பவன் சத்தம்போட்டு பாட்டுப்பாடியும் அசையாமல் படுத்திருந்தான். கண்கள் மூடியே கிடந்தன. மாலை வரை பொறுத்திருந்த அவன் நிலையில் மாற்றம் இல்லாததால் நானே அவனிடம் சென்று தடவிக்கொடுத்து நான் கோவித்துக்கொள்ளவில்லை எனக்கூறியபிறகுதான் பழையபடி விளையாடத்தொடங்கினான். அதெல்லாம் கொஞ்ச காலம்தான்.

அடுத்த இரண்டு வாரங்களில் அவன் உடல் நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. ‘ப்ச்’ என வினோத ஒலி எழுப்பிக்கொண்டிருந்தான். அதிகம் நீர் குடித்தான். திடீரென ஒருநாள் அவன் மூக்கில் ரத்தம் வடியத்தொடங்கவும் மருத்துவமனை அழைத்துச்சென்றேன். ரத்தம் அவன் உடலில் குறைவாக உள்ளது என்றனர். பலவித பரிசோதனைகள்; அனுமானங்கள்; மருந்துகள்.

அவன் நீர் அருந்துவது முற்றிலுமாக நின்று உணவு மட்டும் உண்ணத்தொடங்கினான். கடினமான பொருள்களை சாப்பிட சிரமப்பட்டதால் அவனுக்குப் பிடித்த உணவுகளைக் கொடுத்தேன். உணவில் எந்தக் கட்டுப்பாடும் வைக்கவில்லை. அவன் சாப்பிட்டால் போதுமென நினைத்தேன். உணவை மென்று சாப்பிட முடிந்த அந்த ஓரிரு நாட்கள் அவனது மகிழ்ச்சியான காலம். அவன் கனவில் வந்த அத்தனையையும் சாப்பிட்டுப்பார்த்தான். ஆனால் உடல் நிலையில் மாற்றம் இல்லை. சில நாட்களிலேயே விலா எழும்புகள் தெரியத்தொடங்கின.

கடைசியாக காசிங் விலங்கு மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது உடலில் இரண்டு கடும் சிக்கல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதலாவது அதன் இருதயம் வீங்கியிருந்தது. அடுத்தது தொண்டையில் ஒரு கட்டி வளர்ந்திருந்தது. செய்த சோதனைகள் அனைத்தும் அது புற்றுக்கட்டியாக இருக்கும் என்றே கூறின. அதன் தன்மையை ஆராய மயக்க மருந்து கொடுத்தால் பலவீனமாக உள்ள இருதயம் நின்றுவிடும். ஸ்கோப் செய்யும்போது கட்டியைத் தீண்டினால் ரத்தப்போக்கு அதிகரிக்கும். எனவே சிகிச்சை செய்கிறேன் என உயிரை எடுப்பதைவிட அதன் இறுதி காலத்தை வீட்டில் கழிக்கட்டும் என அழைத்து வந்துவிட்டேன்.

சில நல்ல மருத்துவர்களின் ஆலோசனையில் அவனுக்கு வலியும் வேதனையும் இல்லாமல் ஓரளவு பராமரிக்கக் கற்றுக்கொண்டேன். கட்டுப்பாடற்று துடிக்கும் அவன் இருந்தய ஓசையைக் கைகளை வைத்து அறிந்து கொள்ள முடிந்தது. வீட்டுக்கு வந்த நிம்மதியில் கொஞ்சம் சாப்பிடவும் நீர் அருந்தவும் தொடங்கினான். அதிக அசைவில்லாமல் எளிய செய்கைகளால் தனக்கு வேண்டியதை கேட்டு வாங்கிகொண்டான். மிக முக்கியமாக எதிர்வீட்டுக்குப் புதிதாக வந்துள்ள சீனரின் நாயை கொஞ்ச சென்றால் கோபமடைந்தான். மருத்துவமனையும் ஊசியும் அவனை சோர்வடைய வைத்திருந்தது. எனவே இனி எங்கும் அவனை விட்டு வருவதில்லை என முடிவெடுத்தேன். எப்படியும் இப்படியே  ஒருவருடமாவது உடன் இருப்பான் என நினைத்தேன்.

நேற்று இரவு எப்போதும் இல்லாமல் கொஞ்சம் உற்சாகமாக இருந்தான். கழுத்தை வந்து அருகில் காட்டினான். அப்படி என்றால் வெளியே அழைத்துச் செல்ல சொல்கிறான் எனப்பொருள். நடக்க முடியாவிட்டாலும் உற்சாகத்தை முடிந்தவரை திரட்டி என்னுடன் நடந்து வந்தான். அனைத்தும் முகர்ந்து பார்த்து அடையாளம் வைத்துக்கொண்டான். சிறுநீர் கழித்து தனது சாம்ராஜியத்தின் எல்லைகளை வகுத்துக்கொண்டான். எல்லாம் சரியாகிவிடும் எனச் சொல்லிக்கொண்டேன். கழுத்தின் வீக்கம் குறைந்து அவன் பழையபடி சாப்பிடத்தொடங்கி உடல் பருக்கும்போது அவனுக்குப் பிடித்த அத்தனையையும் உண்ணக்கொடுக்கலாம் என இருந்தேன்.

இன்று காலையில் நான் வேலையாக வெளியேறியபோது வாலை ஆட்டி அனுப்பி வைத்தான். மாலையில் வீட்டுக்கு வந்து சேர ஐந்து நிமிடம் இருக்கும்போது அம்மாவும் அப்பாவும் வெளியேறி இருந்தனர்.  அப்போதெல்லாம் உற்சாகமாகவே வாலாட்டிக்கொண்டிருந்தானாம். என் காரை நிறுத்தியப்பின் கண்ணாடியில் பார்த்தேன். கால்களை அகல விரித்து வாசல் கதவருகே தம் பிடித்து நடந்து வருவது தெரிந்தது. உற்று பார்த்தபோது வாயில் எச்சில் நுரை. அது வழக்கமானதுதான் என நினைத்தேன். அவன் வாயை துடைத்துவிட்டபோது வயிறு உப்பியிருப்பது தெரிந்தது. மலம் கழிக்க தம் பிடித்தான். அவனால் கால்களை ஊன்ற முடியவில்லை; வலு இல்லை. அதிகம் முக்கியதால் சிறுநீர் பிரிந்தது. எனக்குப் புரிந்துவிட்டது. கீழே விழாமல் முதல் சந்திப்பில் செய்ததுபோலவே நடுங்கும் உடலைத் தாங்கிக்கொள்ள கால்களை அகல வைத்துக்கொண்டு என்னைப் பார்த்தான். நாய்களை வளர்ப்பவர்களுக்குத் தெரியும், அந்தப் பார்வை ஒன்றில் நம் சமன் குழைந்துவிடும்.  அணைத்துக்கொண்டேன்.

மெல்ல என் மடியில் சாய்ந்து படுத்தான். உடல் உப்பிக்கொண்டது. தடவிக்கொடுத்தேன். உடல் முழுவதும் தடவினேன். கடந்த இரு மாதமாக உடலுக்குள் போராடிக்கொண்டிருந்த ஜீவன் மெல்ல மெல்ல வெளியேறியது. ஒழுங்கற்று துடித்துக்கொண்டிருந்த  இதயம் சாந்தமாக அடங்கியது. கால்கள் முறுக்கிக்கொண்டன. கண்களில் அசைவின்மை. சரியாக 6.09க்கு போப்பி முற்றிலுமாக அமைதிகொண்டான். என் மடியில் என் கைகளில் வெளியேறும் முதல் உயிர். எனக்காக உயிரைப் பிடித்து வைத்திருந்து இறுதிவிடை சொல்லிவிட்டு செல்லும் உயிர். இழுத்த நரம்புகள் தளர்ந்ததால் இறுதியாக வாயின் நடுக்கம் மட்டும் மெல்ல ஓய்ந்தது.

முன் கால்களை இறக்கி விளையாட அழைக்கவும், வெளியில் அழைத்துச் செல்லும் குதூகலத்தில் வட்டமடிக்கவும், ஏதாவது ஒரு பொருளை எடுத்துவைத்துக்கொண்டு அதனிடம் இருந்து பறிக்கச்சொல்லி என் இயலாமையை பரிகாசம் செய்யவும் எனது வருகையை முதல் நபராக வாலாட்டி வரவேற்கவும் இனி போப்பி வீட்டில் இருக்கப்போவதில்லை என உணரும் கொடும் இரவு இது. இனி வீட்டின் கதவுகளைப் பூட்டி வைத்துக்கொள்ள வேண்டும். வேறு வழியில்லை.

(Visited 893 times, 1 visits today)