போப்பிக்காக வாங்கிய உணவு மீதமிருந்தது. அவனுக்குத் தொண்டையில் கட்டி உருவான பின்னர் கெட்டியான உணவுகளைச் சாப்பிட மறுத்துவிட்டான். குட்டியிலிருந்தே அவனுக்கு தோல் அழற்சி இருந்ததால் குறிப்பிட்ட பிராண்டில் உள்ள ‘lamb rice’ பிஸ்கட்டுகளை மட்டுமே கொடுக்கும்படி டாக்டரின் பரிந்துரை. அப்படி கடைசியாக வாங்கிய உணவு அப்படியே மீந்திருந்தது.
எதிர்வீட்டில் புதிதாக வந்துள்ள நாய் சோறு சாப்பிட்டு பழகியதால் பிஸ்கட்டை மறுத்துவிட்டது. என்ன செய்யலாம் என யோசித்தபோதுதான் ‘மலேசிய தன்னார்வ விலங்குகள் மீட்புக்குழு’ (Malaysia Independent Animal Rescue) எனும் அமைப்பு பூச்சோங்கில் இயங்குவதும் அவர்கள் நாய்களுக்காக உணவு நன்கொடை கேட்டிருப்பதும் முகநூலின் வழி தெரிந்துகொண்டேன்.
இன்று காலையிலேயே அந்த அமைப்பு இருக்கும் இடம்தேடி புறப்பட்டேன். Waze பாதையெல்லாம் சுற்றி அடித்து கடைசியில் வழக்கம்போல தவறான இடத்தில் சேர்த்தது. அங்கிருந்த சிலரிடம் விசாரித்து அவ்விடத்தை சென்றடைந்தேன். ஒதுக்குப்புறமான நிலப்பகுதியில் அவ்விடம் அமைந்திருந்தது.
பெரிய தகர கதவைத்தட்டியதும் “யார்?” எனக் கேட்டப்படி ஒருவர் கதவைத்திறந்து எட்டிப்பார்க்க; கீழே ஒரு நாயும் ‘யாருடா நீ?’ என எட்டிப்பார்த்து குரைத்தது. விபரவத்தைக் கூறினேன். கொடுக்கச் சொன்னார். நான் உள்ளே நுழைய வேண்டும் என்றேன். கோவிட் என்பதால் தயங்கியபடி அனுமதித்தார்.
அலுவலகம் ஓரம் மாட்டப்பட்டிருந்த படத்தில் உள்ளவரை பார்த்தவுடன் அவர் புஷ்பராணி என அடையாளம் தெரிந்தது. நான் முன்பே அவரது நேர்காணல் ஒன்றைத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். அதில் அவர் பலரது வீடுகளில் அத்துமீறி நுழைந்து உணவளிக்கப்படாத, வெயிலில் கட்டிப்போடப்பட்ட, பல நாட்கள் அவிழ்த்துவிடப்படாத, கொடுமைக்குள்ளாக்கப்படும் நாய்களை அவ்வீட்டின் உரிமையாளருடைய அனுமதி இல்லாமல் கைப்பற்றி அடைக்களம் கொடுத்ததால் அவர் மீது பல போலிஸ் புகார்கள் உள்ளன எனத்தெரியவந்தது. அதற்கு அவர் கொடுத்த விளக்கம் எனக்கு இப்போதும் நினைவில் உண்டு.
“யாராவது அண்டை வீட்டுக்காரர்கள் தகவல் சொல்லிதான் நான் துன்பப்படும் நாய்களை தேடிச் செல்வேன். அங்குச் சென்றவுடன் அவற்றின் கண்களைப் பார்ப்பேன். அவ்வளவுதான். எனக்கு அதற்குமேல் எந்த சட்ட திட்டமும் நினைவில் தங்காது. அந்த நாய் என்னைக் காப்பாற்று எனப் பார்வையில் கெஞ்சுவது எனக்குப் புரியும். நான் உடனே வீட்டு வளாகத்தினுள் புகுந்து அவற்றைத் தூக்கிக்கொள்வேன்”
என்றாவது சந்திக்க வேண்டும் என நினைத்தவரின் ‘நாய்கள் பராமரிப்பு மையத்திலேயே’ நான் இருப்பதை நெகிழ்ச்சியாக உணர்ந்தேன். புஷ்பராணியைச் சந்திக்க வேண்டும் என்றேன். அவர் நோயுற்ற நாயொன்றை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பதாகப் பணியாளர் சொன்னார். நான் எல்லா நாய்களையும் பார்க்க வேண்டும் என்றேன். நான் நேற்றே முன் அனுமதி பெற்றிருந்ததை உறுதி செய்துக்கொண்டு அழைத்துச்சென்றார். உடனே அங்குப் பராமரிப்பில் இருந்த நூற்றுக்கணக்கான நாய்களின் குரைப்பொலி சூழ்ந்தது.
இந்த நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஏறக்குறைய 190 நாய்கள் உள்ளன. ஒவ்வொரு நாய்க்கும் கூண்டுகள் உள்ளன. நாய்களின் குணாதிசயங்கள் அறிந்து அவற்றை குழுவாகப் பிரித்துள்ளனர். அதன்படி அவற்றைத் திறந்து விடுகின்றனர். ஒரு குழு உள்ளே சென்று அடைந்தவுடன் அடுத்தக்குழு திறந்துவிடப்படுகிறது. எனவே அவற்றிற்குள் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதில்லை.
பணியாளருடன் ஒரு நாய் உடன் வந்தது. முன்பு வாசலில் என்னை நிற்க வைத்து எட்டிப்பார்த்தவன். எங்கள் இருவருக்கும் தானே வழிகாட்டி என்பதுபோல முன்னே நடந்தான். நான் ஒவ்வொரு கூண்டாகப் பார்வையிட்டபடி நடந்தேன். மனிதன் எவ்வளவு கோரமுகம் கொண்டவன் என ஒவ்வொரு கூண்டில் இருந்த நாய்களையும் பார்க்கும்போது தோன்றியது.
கடினமான பொருள்களால் தாக்கப்பட்டவை, உரிமையாளரால் உணவளிக்கப்படாமல் பட்டினி போடப்பட்டவை, நோய் கண்டதும் அனாதையாக தெருவில் விடப்பட்டவை என ஒவ்வொரு நாய்களின் பின்னணியையும் பணியாளர் விளக்கியபடி வந்தார். ஒரு நாயின் வாயில் இரப்பர் வளையத்தை கட்டிவிட்டதால் சதை அழுகி அகற்றப்பட, பற்களை ஒட்டிய கொஞ்சம் சதையுடன் என்னைப்பார்த்து குரைத்தது. காரில் அடிப்பட்டதால் கால்களை இழந்த நிலையில் சில நாய்கள் ஏக்கம் பொருந்திய கண்களுடன் என்னைப் பார்த்தன. கார்களுக்கு அடியில் படுத்திருந்ததால் சக்கரத்தில் அடிப்பட்ட நாய்கள் ஏராளம் இருந்தன. நான் புகைப்படம் எடுக்கலாமா எனக்கேட்டேன். ‘அனுமதியில்லை’ என மறுத்துவிட்டார் பணியாளர்.
அடுத்தப்பிரிவில் கொஞ்சம் பெரியவகை நாய்கள் இருந்தன. முன் பற்களைக் காட்டி மிரட்டிய ஒன்றிடம் நெருங்கி அதன் முதுகைக் காட்டினார். யாரோ ஆசிட்டால் அதனை தாக்கியிருந்தனர். அதனால் அது மனிதர்கள் மீது முற்றிலும் நம்பிக்கையற்று இருப்பதையும் சாதாரணமாக தண்ணீரை கையில் எடுத்தாலே கோபப்பட்டு கடிக்க வரும் என்றார். எனக்கு கால்கள் தளர்ந்தன. கொஞ்ச நேரம் எங்காவது அமர்ந்தால் தேவலாம் எனத்தோன்றியது. கொல்வதற்கும் வதை செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மனிதன் எப்போதுமே தற்காப்புக்காகவும் உணவுக்காகவும் விலங்குகளை வேட்டையாடி வந்துள்ளான். ஆனால் ஓர் உயிரை இம்சித்து அதில் இன்பமுறுவதென்பது மனத்திரிபின் குறியீடு. அதிலும் மனிதனை நண்பனாக மட்டுமே கருதும் நாய்களை இத்தனை கொடூரமாகத் தாக்குபவர்களின் மன இருளை எண்ணி கோபமே எழுந்தது.
மூன்றாவது பகுதிக்குச் சென்றபோது ஒரு கருப்பு நாய் ஓடி வந்தது. பணியாளர் ‘ஆய்’ என விரட்டுவதைப் பொருட்படுத்தாமல் அது என் மீது பாய்ந்து விளையாடத்தொடங்கியது. “இவன் மனுஷங்கள படிக்கிறதுல கெட்டிக்காரன். கெட்ட எண்ணத்தோட வந்த எத்தனையோ பேர தொரத்தி அடிச்சிருக்கான். நாங்களே ஆச்சரியப்படும்படி உள்ளயே விடமாட்டான். அவனுக்கு மனுஷங்களோட மனசு தெரியும்” என்றார். நான் கீழே அமர்ந்தவுடன் உதட்டில் முத்தமிட்டு அன்பைச்சொன்னான். கொஞ்சும் கண்கள். உடனே அவனது சகாக்கள் சூழ்ந்துகொண்டனர். ஒவ்வொருவரும் தனித்தனியாக முத்தமிட்டனர். பணியாளர் என்ன நினைத்தாரோ. ஒரு புகைப்படம் எடுத்தார். ‘பராவாயில்லை ஒன்னு எடுத்துக்கலாம்’ என்றார்.
“இப்ப எல்லாத்துக்கும் வெளிநாட்டு நாய்கள் மேலதான் மோகம். எல்லாருமே அப்படி தேடினா தெருநாய்கள யாரு வளக்குறது?” என்றார். அது உண்மைதான். நான் அவரிடம் போப்பியின் கதையைக் கூறினேன். அப்படி எங்காவது கறுப்பு குட்டி கிடைக்குமானால் தெரிவிக்கச்சொன்னேன்.
“வெல ஒசந்த நாயிங்க அறிவாளியா இருக்குமுன்னு நம்புறதெல்லாம் மூடத்தனம். எத்தனையோ வெளிநாட்டு நாயிங்க வீட்டு புள்ளைய கடிச்சிட்டதா இங்க வந்து சொல்லுவாங்க. வெல கொடுத்து வாங்குனதால மனுஷன் அத கொழந்த மாதிரி பாத்துக்கிறான். அத கொஞ்சுறதெல்லாம் அவனோட பணத்தை கொஞ்சுற கணக்குதான். கூடுதலா காட்டுற அன்பால அதுங்களும் மனுஷன புரிஞ்சிக்கிதுங்க. எந்த நாயிக்கு அந்த அன்ப கொடுத்தாலும் பதிலுக்கு அதவிட அதிகமா அன்ப காட்டதான் செய்யும்.” என்றார். அவர் பெயரைக் கேட்டேன். குமார் என்றார்.
ஒரு ஏக்கர் நிலபரப்பில் அமைந்துள்ள இந்த நாய் பராமரிப்பு மையம் அடுத்த வருடம் மே மாதத்துடன் இடம் மாறப்போவதை அறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. நிலத்தை வாடகைக்கு விட்டிருந்த சீனன் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதாகக் கூறிவிட்டதால் அவசரமாக புதிய இடம் தேடுவதாகச் சொன்னார்.
பேசிக்கொண்டே அடுத்தப்பகுதிக்குச் சென்றோம். அட்டவணைப்படி அங்குள்ள நாய்கள் அனைத்தும் திறந்துவிடப்பட்டிருந்தமையால் புதியவனான என்னைக்கண்டதும் முதலில் குரைத்தன. குமாருடன் உள்ளே நுழைந்ததால் சமாதானமாக மேலே பாய்ந்து தங்கள் அன்பைக் கூறின. என் வாழ்நாளில் அத்தனை நாய்களின் கொஞ்சலை ஒருங்கே பெற்றது அதுவே முதன்முறை. அவற்றுக்கான கதவுகளைத் திறந்துவிட்டதும் ஓடிச்சென்று தத்தம் கூண்டுகளில் நுழைந்துகொண்டன.
“ரெண்டு வாரம் டிரேனிங் போதும். ஞாபகம் வச்சி நடத்துக்குவானுங்க” என்றார். ஆனால் ஒரு வெள்ளை நாய் மட்டும் கூண்டில் நுழையாமல் எங்கள் பின்னாலேயே வந்தததை நான் கொஞ்சம் கலவரத்துடன்தான் கவனித்தேன். அதன் அசாதாரண உயரமும் என் விரலையே பார்த்துக்கொண்டிருந்த பாங்கும் கொஞ்சம் அச்சத்தை கொடுத்தாலும் நிதானமாக நடந்தேன். ஒன்றும் நடக்காது என நினைத்துக்கொண்டிருந்தபோதே சட்டென என் விரல்களை மெல்ல கடித்தது. நான் என் முன்னே நடந்து செல்லும் பணியாளரிடம் சொல்லலாமா என யோசித்துக்கொண்டிருக்கும் போதே மறுபக்கம் வந்து வலது கை விரலை கடித்தது. வலி ஏற்படுத்தாத செல்ல கடிதான். நான் அதை தயங்கியபடி குமாரிடம் கூறினேன்.
“ஓ… இவ பேரு ஏஞ்சல். ஏஞ்சலுக்கு யாரையாவது புடிச்சிட்டா மசாஜ் செஞ்சிவிட கூப்பிடுவா. அதுக்காகதான் கைய செல்லமா கடிப்பா” என்றவர் ஏஞ்சலின் கழுத்துப்பகுதியை நன்றாகத் தடவி விட்டார். ஏஞ்சலும் சந்தோசமாக மசாஜை பெற்றுக்கொண்டு கூண்டுக்குள் சென்றது.
இத்தனை நாய்களைப் பராமரிக்க நாள் ஒன்றுக்கு குறைந்தது 29 கோழிகளும் 50 கிலோ அரிசியும் இவர்களுக்குத் தேவையாக உள்ளது. மக்கள் கொடுக்கும் நன்கொடையால் மட்டும் இயங்கும் இந்த மையத்தில் உள்ள நாய்களுக்குத் தடுப்பூசிகள் முறையாகப் போடப்படுகின்றன. எனவே கால்நடை மருத்துவமனைகளில் நாய்களுக்கு இரத்தம் தேவையாக இருந்தால் இவர்கள் தங்கள் நாய்களை அனுப்பி வைக்கின்றன. கால்கள், வாய் உடைந்த நாய்களின் அறுவை சிகிச்சைக்கும் நோயுற்ற நாய்களுக்கான மருத்துவத்துக்கும் பணத்தைச் செலவு செய்ய புஷ்பராணி ஒருபோதும் தயங்கியதில்லை என உடனிருந்த பணியாளர்கள் பெருமையாகக் கூறினர்.
“அம்மா பத்து பதினஞ்சாயிரம் வெள்ளி சம்பளத்துல நல்ல வேல பார்த்தாங்க. நாயிங்க மேல உள்ள பிரியத்தால எதுவும் வேணாமுன்னு தூக்கிப்போட்டுட்டு இதையே முழு நேரமா செய்யுறாங்க. எந்த எடத்துல நாய்களுக்கு பிரச்சனன்னு தெரிஞ்சாலும் அங்க போயி முதல் ஆளா நிப்பாங்க. அதனால நெறய சிக்கல் வந்திருக்கு. நகராண்மை கழகம் பிடிச்சிட்டு போகும் நாய்களையெல்லாம் வழக்கு போட்டு மீட்பாங்க. அப்படி மீட்கப்பட்ட நாய்கள் எங்க கிட்ட நிறையவே இருக்கு.” என்றார். எனக்கு புஷ்பராணியைச் சந்திக்கும் எண்ணம் அதிகரித்தபடியே சென்றது. ஆனால் அவர் வர தாமதமாகும் எனத் தெரிந்தது. மழை வேறு இருட்டிக்கொண்டு வந்தது.
“பெரும்பாலும் நாய்களுக்கு சீக்காயிட்டா அதை அநாதையா விட்டுடுறாங்க. நாய்கள் ஏதோ வேலக்காரனாட்டம் சக்தி இருக்கிற வரைக்கும் வீட்டுல வளருது. சக்தி குறைஞ்சதும் துரத்தி விட்டுடுறாங்க. அது எங்க போறதுன்னு தெரியாம அனாதையா திரியுது. இங்க அப்படியில்லை. எவ்வளவு வயசா ஆனாலும் கடைசி வரைக்கும் பாதுகாப்போம். யாராவது தத்தெடுக்க நினைச்சா கொடுக்கிறதும் உண்டு. கடைசி வரைக்கும் குணப்படுத்த முயற்சி செய்வோம்” என்றார். அவர் பேசிக்கொண்டிருந்தபோதே உலாவச்சென்ற கண் பார்வையற்ற நாய் ஒன்றை தூக்கிக்கொண்டு ஒரு பணியாளர் கூண்டில் அடைத்தார்.
சூழ்ந்திருந்த நாய்களின் குரைப்பிற்கும் இன்னும் வாஞ்சையுடன் பாய்ந்துக்கொண்டிருந்த நாய்களுக்கும் நடுவில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். மேகம் இன்னும் இருட்டிக்கொண்டது. நான் புஷ்பராணியை நேரில் சந்திப்பதற்கு முன் என்னாளான சிறு பங்கையாவது அவ்வமைப்பிற்கு வழங்கவேண்டுமென அங்கிருந்து புறப்பட்டேன்.
உங்களுக்கு யாராவதுதெரிஞ்சவங்ககிட்ட நிலம் இருந்தா சொல்லுங்க சார். வாடகையில எந்த சிக்கலும் வராது” என்றார். சரியென்றேன்.
“நாயிங்க மேல பாஞ்சதுல சட்டையெல்லாம் அழுக்காயிடுச்சே” என்றார். நான் அப்போதுதான் கவனித்தேன். நாய்களின் கால் பாதங்கள் சட்டையில் புதிய வடிவங்களை உண்டாக்கியிருந்தன.
ஒருவேளை இக்கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்களும் இவர்கள் முயற்சிக்கு உதவ விரும்பினால்:
Persatuan Pencinta Hak Asasi
Maybank account : 5624 1451 4401
Paypal : miardog@gmail.com
Hp Num: 016 7129364/ 016 9975301
Face Book: Malaysia Independent Animal Rescue