அவதூறுகள் கலையை வீழ்த்தாது!

இந்த நேர்காணல் அகச்சுட்டு இணைய இதழில் இரு பாகங்களாகக் கடந்த வாரம் பிரசுரம் கண்டது. அகச்சுட்டு இதழுக்கு நன்றி.

அகச்சுட்டு: மூன்று நூல்களை இவ்வருடம் வெளியிடுகிறீர்கள். இவற்றை எழுதுவதற்காக நீங்கள் எடுத்துக் கொண்ட நேரம்?

ம.நவீன்: ‘மனசிலாயோ’ நான் 2018- இல் கேரளாவில் இருந்தபோதே எழுதிய பயணக் குறிப்புகளின் விரிவாக்கம். அதனை பயண இலக்கிய வகையில் சேர்க்கலாம். ‘உச்சை’ தொகுப்பில் இடம்பெறும் சிறுகதைகளும் ‘மலேசிய நாவல்கள்’ நூலில் இடம்பெறும் விமர்சனக் கட்டுரைகளும் இந்த மார்ச் மாதம் நடப்பில் இருந்த ஊரடங்கின் போது எழுதியவை.

அகச்சுட்டு: பொதுவாக ஊரடங்கின் போது இளைஞர்கள் பலரும் மன இறுக்கத்தில் இருந்ததாக பரவலாகக் கேள்விப்பட்டோம். அப்படி இருக்கையில் புனைவுகளும் கட்டுரைகளும் உருவாக அக்காலக்கட்ட மனநிலையில் உங்களுக்கு சாத்தியப்பட்டதா?

ம.நவீன்: ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே நான் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் உலகில் மனிதனால் கட்டுப்படுத்த முடியாத பேரழிவுகள் நடக்கும்போது ஓர் ஆன்மிகவாதியாக தான் முழுமையாகப் பிரார்த்தனையில் ஈடுபட்டு அதில் மூழ்குவதுதான் சாத்தியம் என்றார். எனக்கான கடவுள் இலக்கியம்தானே. எனவே நான் அதில் மூழ்கியிருப்பதுதானே நியாயம்.

அகச்சுட்டு : புதிய நூல்கள் குறித்து சொல்லும் முன்னர், கடந்தாண்டு வெளிவந்த உங்களின் பேய்ச்சி நாவல் குறித்து பேசுவோம். அதில் உங்கள் முதல் நாவலான ‘பேய்ச்சி’ பெரும் சர்ச்சையானது. மலேசியாவில் ஒரு நாவலுக்கு எழுந்த முதல் பெரும் சர்ச்சை. அதை எப்படி எதிர்கொண்டீர்கள்?

ம.நவீன் : என் தாய் வழி குலதெய்வம் பேச்சியம்மன். என் அம்மாவின் பெயரும் பேச்சாயிதான். அந்த வழிபாடு என் தாத்தாவுக்குப் பின் விடுபட்டிருந்தது. நான் கோவிலுக்குச் செல்பவன் இல்லை. ஆனால், அம்மையுடன் எனக்கு சிறுவயதில் ஒரு பிடிப்பு இருந்தது. நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் தோட்ட ஆலயத்தில் உள்ள பெரிய மணியை நான்தான் வெள்ளிக்கிழமைகளில் ஒலிப்பேன். அப்போதெல்லாம் அன்னையின் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பேன். நான் ஒலிக்கும் மணியோசை கேட்டு அவள் சன்னிதானத்தில் இருந்து எழுந்து வந்துவிடுவாளோ எனத்தோன்றும். அவ்வனுபவங்களை எனது பத்திகளில் எழுதியுள்ளேன். இந்த நாவலை எழுதத்தொடங்கியபோது அவ்வுணர்வுகள் திரண்டு மேலெழுந்து வந்தன. நான் இந்த நாவலின் வழி என் குலதெய்வ வழிபாட்டை மீட்பதாகவே உணர்ந்தேன். எங்கெல்லாம் நாவல் தடைப்பட்டதோ அதைமீறி தொடர்வதற்கான வாய்ப்புகளை புறச்சூழல் அனுபவம் எனக்கு உருவாக்கிக்கொடுத்தது. பின்னர் நாவல் என் கையை விட்டுப்போய் அதுவாகவே தன்னை எழுதிக்கொண்டது. நாவலை இரு வாரங்களுக்குள்ளாக முடித்துவிட்டு தொகுப்பு செறிவு செய்த நான்கு மாதங்களும் எனக்கு அசாதாரண அனுபவங்கள்தான். என்னைக் கருவியாகக்கொண்டு யாரோ நாவலை எழுதுகிறார்களோ எனத் தோன்றியது. அப்போதே இந்த நாவல் தன்னைத்தானே பரவலாக வெளிப்படுத்திக்கொள்ளும் என நம்பினேன்.

அகச்சுட்டு : அப்படியென்றால் நீங்கள் சர்ச்சையை விளம்பரமாகப் பார்க்கிறீர்கள் எனச் சொல்லலாமா?

ம.நவீன் : அந்த நாவல் தனது இருப்பை ஏதோ ஒரு வழியில் வெளிக்காட்டிக்கொள்ளும் என உறுதியாக நம்பினேன். மலேசியாவில் வெளிவந்துள்ள பல நாவல்களை நான் வாசித்துள்ளேன். பேய்ச்சியில் சர்ச்சையாக்கப்பட்ட சொற்கள் மற்றும் காட்சிகளைவிட அதி தீவிரமாகவே பல புனைவுகளில் உள்ளன. ஆனால், ‘பேய்ச்சி’ அந்த சர்ச்சையாலேயே விரிவான தளத்தைச் சென்று அடைந்தது. வழக்கமான வாசகப் பரப்பைத் தாண்டி பரவலாக வாசிக்கப்பட்டது. தினசரி நாளிதழ் வாசிப்பவர்களிடமெல்லாம் பேய்ச்சி எனும் பெயர் ஒரு ‘பிராண்டாகவே’ அறிமுகமானது. கடைகளில் வைக்கப்பட்ட நூல்களெல்லாம் விற்றுத் தீர்ந்தன. தீரத் தீர வாங்கப்பட்டது. எனக்கு அதில் மகிழ்ச்சிதான்.

அகச்சுட்டு : அப்படியானால் எதிர்மறையான விளம்பரத்தை நீங்கள் வரவேற்கிறீர்களா?

ம.நவீன் : அதை எப்படி நேர்மறையாக மாற்றுவது என யோசிக்கிறேன். தரையில் ஊர்ந்தபடியே அன்னாந்து பார்க்கும் பார்வை ஒன்று உண்டு என்றால் ஆகாயத்தில் நின்றுகொண்டு பார்க்கும் ஒரு பார்வையும் உண்டு. தரையில் இருந்து பார்க்கும்போது, உங்கள் அண்மைய காட்சிகள் மட்டுமே தெரியும். அது மிகக்குழப்பமானது. ஆகாயத்தில் இருந்து பார்க்கும்போதுதான் உங்கள் முன்னே இருக்கும் தடையே நீங்கள் உருவாக்கிச்செல்லும் புதிய பாதைக்கு வித்திடுவதையும் அந்தப் பாதையே வெற்றியை நோக்கி உங்களை அழைத்துச் செல்வதையும் புரிந்துகொள்ளலாம். உயரம்தான் உங்களுக்கு எதிர்காலத்தை உணர வைக்கும். அந்த உயரத்துக்குச் செல்ல பொறுமையும் உங்கள் நேர்மையின் மீதான நம்பிக்கையும் அவசியம். அப்போதைய சலசலப்புகளுக்கும் கூச்சல்களுக்கும் கோஷங்களுக்கும் முகம் கொடுக்கக்கூடாது. அப்போதுதான் நதி ஒரு துரும்பை அவ்வளவு லாவகமாக குறிப்பிட்ட இடத்தில் சேர்ப்பதுபோல காலம் உங்களை சரியான இடத்துக்கு நகர்த்திச் செல்லும். சிறிது காலத்திற்குப் பிறகு, இதற்குத்தானா இவ்வளவும் என உங்களுக்கு வேறொரு உண்மை புரியும்.

அகச்சுட்டு : இதுபோன்ற சர்ச்சை உங்கள் புனைவுலகை பாதிக்கவில்லையா?

ம.நவீன் : சர்ச்சை நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே நான் எழுதிய சிறுகதைகளை வாசித்த நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ‘பேய்ச்சி’ நாவலைவிட அக்கதைகளில் இடம்பெற்றுள்ள உரையாடல்கள் தீவிரமானவை. அவை தொகுக்கப்பட்டே ‘உச்சை’ எனும் தலைப்பில் இவ்வருடம் வருகிறது. என் செயல்பாடுகளிலும் எழுத்திலும் எந்த மாற்றமும் நிகழவில்லை. சொல்லப்போனால் மேலும் உற்சாகமாகவே செயல்படுகிறேன். வேறுபட்ட வாசிப்பு உள்ள ஒருவரை என்னைப் போன்ற ஓர் எழுத்தாளன் அடைவதென்பது எவ்வளவு பணம் கொடுத்து விளம்பரம் செய்தாலும் கிடைக்காதது. அது நடந்ததால் பல புதிய வாசகர்களைப் பெற்றேன். ‘பேய்ச்சி’ எனும் நாவலின் பெயர் பலரும் அறிந்த ஒன்றானது.

அகச்சுட்டு : எழுதுவது எழுத்தாளனின் உரிமைதான். ஆனால் கொச்சையான சொற்களை பயன்படுத்தும்போது அதற்கு எழும் கண்டனங்களில் முன்பகை இல்லாதவர்களும் இருக்கவே செய்கின்றனர் இல்லையா, அவர்கள் கோபம் நியாயமானதுதானே?

ம.நவீன் : Samsara எனும் திரைப்படத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். விருதுகளை வென்ற திரைப்படம். Pan Nalin உலகத் திரைப்பட இயக்குனர்களில் முக்கியமானவர். அப்படத்தில் பல இடங்களில் நிர்வாண, புணர்ச்சிக் காட்சிகள் இடம்பெறும். எந்த ஆபாசப்படத்தை விடவும் தீவிரமான காட்சிகள். ஆனால், ஏன் அப்படத்துக்கு உலக அளவிலான விருதுகள் குவிகின்றன? அந்தக் காட்சி அப்படத்தில் இடம்பெறுவதற்கான நியாயத்தைக் கொண்டிருப்பதால் அல்லவா? அந்தக் காட்சியை மட்டும் தெரிவு செய்து ஒருவருக்கு அனுப்பினால் அது அதிர்ச்சியைக் கொடுக்கத்தானே செய்யும். அதை ஆபாசம் எனத் தூற்றுவார்கள் அல்லவா? ஆனால், அறிந்து கொள்ளும் எண்ணம் உள்ளவர்கள், உண்மையைத் தேடிச் சென்று அப்படத்தைப் பார்த்த பின்னர் தங்கள் கருத்தைக் கூறுவர். மொத்தத் திரைப்படத்தில் அக்காட்சியின் நியாயத்தை அறிவர். சர்ச்சைக்குள் உழன்று அதன் வழி தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள முயல்பவர்கள் வெளியில் நின்று ‘ஆபாசம்’ என்று கூறுவர். என் நாவல் விசயத்திலும் நடந்தது இதுதான். சில வரிகளை, சில பகுதிகளை மட்டுமே வாசித்து அதற்குக் கருத்துச் சொன்னவர்கள் அதிகம். அவர்கள் பேய்ச்சியை மட்டுமல்ல எந்த நாவலையும் வாசிக்கப்போவதில்லை. இதற்கு நேர்மாறாக நாவலை வாசித்து அந்தச் சொல்லாடல்கள் நாவலுக்குத் தேவையானதென தங்கள் கருத்துகளை மாற்றிக்கொண்டவர்கள் அதிகம். அவர்கள் இப்போது என் வாசகர்களாகவும் நண்பர்களாகவும் உள்ளனர்.

அகச்சுட்டு : ஆனால், ஒரு புனைவை குழந்தைகளும் வாசிக்கக் கொடுக்க வேண்டுமென நினைப்பது தவறில்லை என்ற கருத்தும் உள்ளதே.

ம.நவீன் : குழந்தை இலக்கியம் எனத் தனியாக ஒரு பிரிவு உண்டு. அதுபோன்ற நூல்களில் குழந்தை இலக்கியம் என்றே அறிவிப்புடன் பிரசுரிப்பார்கள். இந்நாட்டில் வெளிவந்துள்ள எத்தனையோ நாவல்களில், புனைவுகளில் இதுபோன்று நடைமுறையில் உள்ள வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு காரணம் நாவல் என்பது குழந்தைகளின் வாசிப்புக்கானது அல்ல என்பதால்தான். அப்படிப் பார்த்தால் மாணவர்களின் கையில் நேரடியாகக் கிடைக்கும் இன்பத்துப் பால் உள்ள திருக்குறளையும் மறைத்து வைக்க வேண்டுமல்லவா? இந்த சர்ச்சை எழுந்தபோது ஒருவர், எஸ்பிஎம் பாட நூலாக இருந்த மலேசிய நாவல்போல புனைவுகள் இருக்க வேண்டுமென கூறியிருப்பார். அவர் குறிப்பிட்டுள்ளது ‘லட்சியப் பயணம்’ நாவலை. அவர் கூற்றை அபத்தம் எனக் குறிப்பிடக் காரணம் ‘லட்சியப்பயணம்’ நாவலில் இவர் குறிப்பிடும் கொச்சை வார்த்தையும் காட்சிகளும் உள்ளன. ஆனால், அவை தணிக்கை செய்யப்பட்ட பின்னரே பாட நூலாக்கப்பட்டுள்ளது.

அகச்சுட்டு : அப்படி என்றால் மாணவர்கள் இந்த நாவலை வாசிக்கக்கூடாது என்கிறீர்களா?

ம.நவீன் : ‘பேய்ச்சி’ அவர்களுக்காக எழுதப்பட்டதல்ல என்கிறேன். மாணவர் இலக்கியம் என தனி ரகம் உண்டு. அப்படி பிரிக்கப்படாதது அனைத்துமே பொதுவாசகர்களுக்குத்தான். ஓர் உணவகத்தில் சைவ உணவுக்கெல்லாம் குறியீடு போட்டுள்ளார்கள். அப்படி போடாத அனைத்தும் அசைவம் என்றுதானே பொருள். இங்கு அசைவ உணவில் ஏன் ‘இது சைவர்களுக்கானதல்ல’ என்ற குறிப்பு போடவில்லை எனக் கேட்கிறீர்கள். அது சர்ச்சையை நோக்கமாகக் கொண்டவர்களுக்கு உவப்பான கேள்வியாக இருக்கலாம். உண்மையை அறிய விரும்புபவர்களுக்கு அல்ல.

அகச்சுட்டு: கொச்சை வார்த்தைகள் குடும்பங்களில் பேசப்படுவதில்லை. அப்படி இருக்க நாவலில் கொச்சை வார்த்தைகள் வருவது சமூகத்தைக் கெடுக்கும் எனும் கருத்துகள் உள்ளன. நீங்கள் இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

ம.நவீன் : நம் குடும்பத்தில் கொச்சை வார்த்தை பயன்பாடு இல்லையென்றால் எந்த வீட்டிலும் இல்லையென்று பொருளா? முதலில் புனைவு என்பது அவரவர் குடும்பக் கதைகளைச் சொல்லும் இடமா என்ன? அப்படியென்றால் ராமாயணம் வால்மீகி வீட்டிலும் சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் வீட்டிலுமா நடந்தது? ‘எழுத்தாளர் வீட்டில் அப்படித்தான் கொச்சையாகப் பேசுவார்கள் போல’ என சிலர் பேசினர். அப்படி என்றால் திருக்குறள் வள்ளுவரின் அனுபவமா? சீத்தலை சாத்தனார் மணிமேகலை காப்பியத்தை அனுபவம் பெற்றுத்தான் எழுதினாரா? படைப்பாளன் தன்னை பல நூறாக உடைத்துக்கொள்பவன். அதன் மூலம்தான் உலகத்தில் உள்ள பலரது வாழ்வை அவன் வாழ்ந்து பார்க்கிறான். அந்த அனுபவத்தைப் புனைவாக்குகிறான்.

அகச்சுட்டு : இவ்வளவு விசயங்கள் நடந்துள்ளது. இந்த அழுத்தங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

ம.நவீன் : இதில் ரகசியமென ஒன்றுமே இல்லை. முதலாவது எனக்கு சண்முகசிவா, சுவாமி பிரம்மானந்தாபோல நல்ல வழிகாட்டிகள் உள்ளனர். உயர்ந்த மாண்புகொண்ட அவர்கள் வழி என் மனநிலை கீழ்மையை நோக்கிச்செல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். அடுத்தது வழக்கறிஞர் பசுபதி, எழுத்தாளர் ஜெயமோகன் என நான் முன்னுதாரணமாகக் கொள்ளும் ஆதர்சங்கள். நமது வழிகாட்டிகளிடம் நாம் எவ்வளவு கிறுக்குத்தனமாகவும் இருக்கலாம். காரணம் அவ்வுறவு ஒரு தந்தை மகனுக்கானதாக உருமாறக்கூடியது. எனவே அங்கே சின்னச் சின்ன முறுக்கல்கள் இருக்கும். ஆதர்சங்கள் அப்படியல்ல. நாம் அவர்களைக் கவனிப்பதுதான் ஒரே வழி. அவர்களின் செயல்கள் கவனிப்பதன் வழியாகவே நான் என்னை வடிவமைத்துக்கொள்கிறேன். குற்றங்களைக் களைந்துகொள்கிறேன். ஒவ்வொருநாளும் அவர்கள் குறித்து சிந்திப்பதன் வழி என்னை மீட்டுக்கொள்கிறேன். இவர்களைத் தாண்டி நான் நண்பர்கள் சூழ்ந்தவன். எனவே கொண்டாட்டத்திற்குக் குறைச்சல் இல்லை.

அகச்சுட்டு : ‘பேய்ச்சி’ விமர்சிக்கப்பட்டபோது உங்களுக்கு ஆதரவாக பல கட்டுரைகள் எழுதப்பட்டன. அவர்கள் உங்கள் இலக்கிய நண்பர்களா?

ம.நவீன்: அதில் சிலர் பேய்ச்சிக்கு அவர்கள் எழுதிய கட்டுரைக்குப் பின்பே நண்பர் ஆனவர்கள். அது ஓர் அபூர்வமான தருணம். இந்த பதிலை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நிமிடத்திலும் ஒரு வாசகர் பேய்ச்சி குறித்து முகநூலில் பதிவிட்டிருந்தார். நான் அவதூறுகள் நிரம்பிய ஒரு கட்டுரையை என் தளத்தில் பிரசுரித்தபோது பல நண்பர்கள் அது அவசியமில்லை என்றனர். ஆனால், எனக்கு ஒரு தேவை இருந்தது. உண்மையில் தரமான வாசகர்கள் யாரேனும் ஓரிருவராவது உள்ளனரா எனப் பார்க்க நினைத்தேன். ஆனால், ஆச்சரியமாக இருபதுக்கும் அதிகமான கடிதங்கள் வந்தன. நான் அதை எதிர்பார்க்கவில்லை. காரணம் அந்தச் சர்ச்சை புனைவு எனும் எல்லையில் இருந்து விலகி தனிமனிதச் சாடல்களாக உருவெடுத்தது. பொதுவாக இதுபோன்ற தனிமனித ஒழுக்கம் சார்ந்த சர்ச்சைகளில் பெண்கள் விலகியே நிற்பர். ஆனால், பேய்ச்சி குறித்த சர்ச்சையில் பெரும்பாலும் இளம் பெண் படைப்பாளிகள்தான் அலையலையாக அவதூறுகளுக்குப் பதில் கூறினர். என்னளவில் இது மலேசியாவில் நடந்த மிக முக்கியமான மாற்றம்.

அகச்சுட்டு : மூத்த படைப்பாளிகள் எவரும் எதிர்வினையாற்றவில்லை எனும் வருத்தம் இருந்ததா?

ம.நவீன் : இருந்தது. ஆனால் அது அவர்கள் தேர்வு. உண்மையில் இதுபோன்ற சமயத்தில் மூத்த எழுத்தாளர்கள் ஒரு புனைவுக்கு ஆதரவாகப் பேசவேண்டியதில்லை. ‘பேய்ச்சி’ நல்ல நாவல் என்றெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், புனைவின் கலை அம்சம் என்னவென்று பேசியிருக்க வேண்டும். இலக்கியத்தில் உள்ள படைப்பு சுதந்திரம் குறித்துப் பேசியிருக்கலாம். புனைவுக்குள் வரும் கதாபாத்திரமும் கதாசிரியரும் ஒன்றல்ல எனப் பேசியிருக்கலாம். காரணம் இதைத்தானே இத்தனை காலமாக பேசிக்கொண்டிருந்தார்கள். இளம் தலைமுறைக்குப் போதித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அதை உரத்துப் பேசும் தருணம் வந்தபோது அவர்கள் அவ்வாய்ப்பைத் தவறவிட்டார்கள். அதன் வழி வரலாற்றில் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டார்கள். இது குறித்து ஜெயமோகனிடம் பேசிக்கொண்டிருந்தேன். பொதுவாகவே தமிழ் இலக்கியச் சூழலில் நடக்கும் நிலையை விளக்கினார். ஆனால் இதை அனுபவமாகக்கொண்டு நான் என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் கூறினார். மௌனமாக இருப்பவர்களுக்கோ எதிராக இருப்பவர்களுக்கோ நாளையே இதுபோன்ற சூழல் வந்தால் பேசும் முதல் நபராக நான் இருக்க வேண்டுமென்றார். அதுதான் ஆசான்.

அகச்சுட்டு : ‘உச்சை’ தொகுப்பில் வரும் சிறுகதைகளைப் பற்றிச் சொல்லுங்கள். பேய்ச்சிக்குப் பின்னர் நீங்கள் எழுதிய புனைவு உங்கள் அளவில் எப்படி மாறுபட்டுள்ளது.

ம.நவீன் : உண்மையில் நாவல் எழுதியபோதுதான் புனைவில் நான் செய்கின்ற பிழைகளை அறிந்தேன். புனைவு எப்படி எழுத்தாளனை மீறி நடைபெறுகிறது என நான் அறிந்துகொண்ட காலங்கள் அவை. எனவே இந்த ஆண்டு எழுதிய சிறுகதைகள் அனைத்திலும் என்னை மீறிய நிகழ்ந்த தருணங்களை நான் அனுமதித்தேன். அவை சென்று அடையும் திசைகளை நானே ஆச்சரியமாக கவனித்தேன். இதற்கு முன் வெளியிட்ட இரண்டு சிறுகதை நூல்களிலிருந்தும் மாறுபட்ட கதைகளாக வந்துள்ளன.

அகச்சுட்டு : எம்மாதிரியான பிழைகளைக் கண்டுக் கொண்டீர்கள்?

ம.நவீன்: முக்கியமாக அறிவுத் தலையீடு. தர்க்க புத்திக்கு அடங்காதவைகளை நான் இதற்கு முன் புனைவாக்குவதில்லை. ஆனால், பேய்ச்சி அந்த மனநிலையை உடைத்தது. எனவே இத்தொகுப்பில் உள்ள புனைவுகளில் தர்க்கத்துக்கான மனநிலையை நான் அனுமதிக்கவில்லை. இரண்டாவது, விவரிப்பு. நாவல் எந்த இடத்தில் நுண்தகவல்கள் வேண்டும் என்றும் எங்கே நுண் சித்தரிப்புகள் தேவை என்றும் சொல்லிக்கொடுத்தது. அது என் புதிய சிறுகதைகளை கலை நுட்பத்துடன் உருவாக உதவியது. மூன்றாவது புனைவுகளாக்க வேண்டிய பல்வேறு தருணங்கள் எனக்குள் முடங்கி கிடப்பதை நாவல்தான் தட்டி எழுப்பியது.

அகச்சுட்டு : அடுத்தடுத்து புனைவுகள் எழுதவும் இலக்கிய செயல்பாடுகளை முன்னெடுக்கவும் எங்கிருந்து ஊக்கம் பெறுகிறீர்கள்?

ம.நவீன் : முன்பே நான் சொன்னதுபோல நாம் யாரை முன்னுதாரணமாகக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பொருத்தே நம் ஆளுமையும் வடிவம் பெறும். என் பத்தொன்பதாவது வயது முதல் பசுபதி அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு காலத்திலும் அவர் முன்னெடுக்கும் திட்டங்கள், அதை வெற்றிகரமாக நகர்த்த ஓயாத உழைப்பு, ஒரு செயலில் தன்னை முழுமையாக இணைக்கும் தீவிரம், காலத்துக்கேற்ற சிந்தனை மாற்றம் என நான் அவர் ஆளுமையின் வழி அறிந்துகொண்டது அதிகம். அவர் என் செயலூக்கத்துக்கான முன்மாதிரி. அதுபோல கொரோனா காலத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் ஒருநாளைக்கு ஒன்று என நூறு சிறுகதைகள் எழுதினார். அவற்றில் பல அவர் எழுதியவற்றில் சிறந்தவை. சில அதுவரை நான் வாசித்த தமிழ்ச் சிறுகதைகளில் சிறந்தவை. இம்மாதிரியான முன்னோடிகள் இருக்கும்போது ஊக்கத்துக்கு என்ன குறைச்சல். மேலும், உச்சை சிறுகதை பிரசுரமானபோது ஜெயமோகன் திடீரென அழைத்தார். அக்கதையை வெகுவாகப் பாராட்டியவர் அதில் உள்ள இரு போதாமைகளைச் சுட்டிக்காட்டினார். நாம் ஆசிரியராக நினைப்பவர் நாம் எழுதியதை வாசித்து, அது குறித்து அழைத்துச் சொல்லும்போது நமது கவனமும் கூடுகிறது அல்லவா? அடுத்தடுத்த கதைகளில் அவர் சொல்லிய போதாமைகளைத் திருத்திக்கொண்டேன். நாம் அவர் வழிகாட்டலின் மீது வைத்திருக்கும் மதிப்பை நமது அடுத்தடுத்த படைப்புகளில்தான் வெளிப்படுத்த வேண்டும். இப்படி சு.வேணுகோபால், ஈரோடு கிருஷ்ணன், ராஜகோபால் என பலரும் புனைவு நுட்பத்தில் உள்ள போதாமைகளைச் சொல்வதுண்டு. அப்படிச் சொல்ல அவர்கள் ஒரு எழுத்தாளன் மீது வைத்திருக்கும் அக்கறையே காரணம். அந்த அக்கறையும் ஊக்கம் உண்டாக்கக்கூடியதுதான்.

அகச்சுட்டு : மனசிலாயோ உங்கள் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டது என்று நம்புகிறோம். அதனைப் பற்றி கூறுங்கள்.

ம.நவீன் : ஆம்! ஒவ்வொரு பாகத்தையும் ஐநூறுக்கும் குறையாதவர்கள் வாசித்திருக்கிறார்கள். அது நான் கேரளாவில் இருந்தபோதே எழுதியது. அந்த இயற்கை சூழ்ந்த மண்ணில் எழுத்து இயல்பாகவே பொங்கிப் பிரவாகம் எடுத்தது. அநேகமாக ஒவ்வொருநாளும் எழுதினேன். அது கேரள பயணக் கட்டுரையல்ல. ஊர்கள் குறித்த குறிப்புகள் இருந்தாலும் அங்கு நான் காணும் மனிதர்களும் அவர்கள் எனக்குள் ஏற்படுத்திய மாற்றங்களுமே இந்த நூல். கேரளப் பயணம் என்பது எனக்குள் நான் செய்த ஆன்மிக பயணம் போன்றது.

அகச்சுட்டு : ஏற்கனவே வாசிக்கப்பட்ட உங்கள் கட்டுரைகளையும் படைப்புகளையும் நூலாக்குவது எதனால்? ஏற்கனவே அவற்றை வாசித்தவர்கள் வாங்குவார்களா? அதற்கான தேவை இல்லை என்ற கருத்து உள்ளதே?

ம.நவீன் : வணிக எழுத்தாளர் சிந்திக்கும் முறை இது. உதாரணமாக நான் தமிழக இரயில்களில் பயணம் செய்யும்போது விகடன், குமுதம் என இதழ்கள் ஆங்காங்கு கிடப்பதைக் கண்டுள்ளேன். ஒருமுறை வாசித்த பிறகு அதன் தேவை தீர்ந்தது. ‘யூஸ் அண்ட் த்ரோ’ போலத்தான். ஆனால், தரமான எழுத்துகள் ஒரு வாசிப்பில் இறப்பதில்லை. அது மறுபடி மறுபடி வாசிக்கப்படுகிறது. ஜெயகாந்தனையும் ஜானகிராமனையும் சு.ராவையும் மறுவாசிப்பு செய்வதாகச் சொல்பவர்கள் எத்தனையோ பேரைக் காண முடிகின்றது. மறுபடி மறுபடி ஏன் அவர்கள் குறித்து எழுதுகிறார்கள்? ஏன் பேரிலக்கியங்கள் மீண்டும் வாசிக்கப்பட்டு புதிய கோணத்தில் அணுகப்படுகிறது? அதன் தன்மை அதுதான். ஆனால், தன்னுடையது பொழுதுபோக்கு எழுத்து; அதை ஒருதரம் வாசித்தபின் அதன் சுவாரசியம் தீர்ந்தபின், அதன் திருப்பம் களைந்தபின் யாரும் ஏறெடுத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள் என உணர்ந்தவர்களுக்கு அந்தக் கவலை இருக்கலாம். எனக்கு இல்லை.

அகச்சுட்டு: விமர்சனக் கட்டுரைகள் எழுதுவதாலேயே அதிகம் விமர்சிக்கப்படுபவர் நீங்கள். ஆனால் அவற்றை ஒரு நூலாகக்கொண்டு வருகிறீர்கள். மீண்டும் சர்ச்சையில் சிக்கும் எண்ணமுண்டா?

ம.நவீன்: நான் முன்பே சொன்னதுதான். சர்ச்சைகளை எதிர்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நான் எழுதத் தொடங்கிய காலம் முதல் சர்ச்சையில் சிக்கியே வந்துள்ளேன். எழுதத் தொடங்கிய காலத்திலேயே மலேசிய நண்பனில் சீனி நைனா போன்ற ஆளுமைகளுடனெல்லாம் விவாதம் செய்த நினைவு வருகிறது. பல ஆண்டுகளாக அசையாமல் துருப்பிடித்திருக்கும் இரும்பை உலுக்கும்போது மொரமொரப்பு சத்தத்துடன் தூசுகள் பறக்கத்தான் செய்யும். அச்செயலுக்கு நிகழும் இயல்பான எதிர்வினை அது. அதுகூடாது என நான் சொல்ல முடியாது அல்லவா? இந்நாட்டில் மழுங்கிய படைப்புகள் குறித்த மறுவாசிப்பு இன்றி அவற்றைக் கொண்டாடப் பழகிக்கொண்டனர். நான் அவற்றின் தரத்தை என் வாசிப்பின் அடிப்படையில் சொல்ல முயல்கிறேன். அதுபோலவே இன்னொருவருக்கும் அந்த உரிமை உண்டு. ஏன்.., நாவலை வாசிக்கும் அனைவருக்கும் அந்த உரிமை உண்டு. எனவே நான் சொல்வது தீர்ப்பு அல்ல. ஒரு புனைவைப் பற்றி என் வாசிப்பில் கண்டடைந்த விமர்சனம். அதற்கு மாற்றான கருத்தை முன்வைக்க யாரும் முன்வரலாம்.

அகச்சுட்டு : இதன் வழி மலேசியப் படைப்புகளை நீங்கள் அவமதிப்பதாகக் கூறப்படுகிறதே?

ம.நவீன்: விமர்சிக்காமல் இருப்பதுதான் மலேசிய இலக்கியத்தை அவமதிப்பதாகும். இந்நாட்டிற்கு வரும் தமிழக எழுத்தாளர்கள் மலேசிய எழுத்துகளை பலவீனமானவை எனச் சொல்வதாக ஒரு புகார் உண்டு. நாம் தமிழக இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கும்போதே புதுமைப்பித்தன் அறிமுகமாகி விடுகிறார். பின்னர் தி.ஜா, கு.அழகிரிசாமி, சு.ரா என ஒரு வரிசையை படித்துவிடுகிறோம். இது எப்படி நடக்கிறது? அங்கு எப்போதும் உள்ள இலக்கிய விமர்சனப்போக்கினால்தான். ஆனால், இங்கு வரும் ஒருவருக்கு ரெ.கார்த்திகேசுவையும், எம்.ஏ.இளஞ்செல்வனையும் நாம் வாசிக்கக் கொடுக்கிறோம். லட்சியப்பயணமும், துயரப்பாதையும் நமது செவ்விலக்கியங்கள் என ரெ.கார்த்திகேசு எழுதுகிறார். அவர்கள் வழிகாட்டலில் வாசிக்கும் ஒருவருக்கும் இந்நாட்டின் உச்சபட்ச இலக்கியமே இவ்வளவுதானா எனத் தோன்றாதா? நாம் ஏன் அ.ரெங்கசாமியையும், சீ.முத்துசாமியையும் வாசிக்கக்கொடுக்கவில்லை? இதற்குப் பின்னால் அரசியல் உண்டு. நாளிதழ்களும் இயக்கங்களும் தங்களுக்கு உவப்பானவர்களை முன்னெடுத்ததால் வந்த வினை இது. நான் இதை விமர்சனபூர்வமாக நிரூபிக்கிறேன். அதற்காகப் பல தரவுகளை முன்வைக்கிறேன். மலேசியாவில் முன்னணி எழுத்தாளர்கள் யார் என ஒரு பட்டியலை உருவாக்குகிறேன். அதில் இதற்கு முன் கொண்டாடப்பட்டவர்களுக்கு மாற்றாக புதிய வரிசையைச் சொல்கிறேனே அன்றி மலேசியாவில் இலக்கியமில்லை என எங்கும் சொல்லவில்லை.

அகச்சுட்டு: மலேசியப் படைப்புகளைத் தமிழகப் படைப்புகளோடு ஒப்பிட்டு நீங்கள் மட்டம் தட்டுவதாகவும் குற்றச்சாட்டும் உண்டு. அது பற்றி…

ம.நவீன் : இதெல்லாம் தங்கள் போதாமைகளை மறைத்துக்கொள்ளச் சொல்லப்படும் பொய்கள் மட்டும்தான். அப்படி சொல்வதால் மட்டுமே தங்கள் படைப்புகளின் ஊனத்தை ஒளித்து வைக்கலாம். ஏதும் அறியாதவர்கள் ‘அது சரிதானே’ என தலையாட்டிக்கொள்வார்கள். நான் அப்படி இதுவரை எங்கும் ஒப்பிட்டதில்லை. ஆனால், கலை எனும் அம்சத்தின் பொதுவான தன்மைகளை ஒப்பிட்டு விமர்சிப்பதுண்டு. உதாரணமாக ஒரு தோட்டத்து வாழ்வையும் தமிழகத்துக் கிராமத்து வாழ்வையும் ஒப்பிடும் அளவுக்கு நான் கூறுகெட்டவன் அல்ல. ஆனால், கிராமத்தில் உள்ள ஒரு பெண் கதாபாத்திரம் உளவியல் ரீதியாகவும் தோற்றத்திலும் அவள் வசனங்களிலும் சமூகத்துடன் அவளுக்கு உள்ள முரண்பாட்டிலும் எப்படி உயிர்ப்பாக உருவாகிறாள் என்றும் அந்த உழைப்பு இல்லாமல் மலேசிய நாவல்களில் வரும் கதாபாத்திரம் எவ்வளவு மொண்ணையாக விவரிக்கப்பட்டுள்ளார் என்றும் ஒப்பீடு செய்யலாம். இது நாவல் உள்ளடக்கம் சார்ந்ததல்ல. அதன் கலைநுட்பம் சார்ந்தது. இந்தக் கலைநுட்பத்தை நான் தமிழகத்தில் மட்டும் இருந்து பெறவில்லை. உலக அளவில் தரமான படைப்புகளில் என்னென்ன கலை அம்சங்கள் உள்ளனவோ அது கைகூடாத படைப்புகளைச் சுட்டிக்காட்டுகிறேன். ‘மீ கோரி’ங்குடன் இட்டிலியை ஒப்பிடுவது என் நோக்கமல்ல. ஆனால், சமையல் எனும் கலையில் உள்ள அடிப்படையான அம்சம் ஈடேறி உள்ளதா, இல்லையா என்றே சொல்கிறேன். இரசனை விமர்சனம் ஒப்பீடுகளால் ஆனதுதான். ஆனால், அந்த ஒப்பீடு கலைநுட்பம், உத்தி, வெளிப்பாடு போன்றவற்றில் நடக்கிறது. இது இங்கு தெரியாதவர்களும் இல்லை. ‘தமிழகத்தோடு ஒப்பிடுகிறார்கள்’, ‘இந்த மண்ணுக்கு தனி குணம் உண்டு’, ‘இங்குள்ள வாழ்க்கை வேறு’ எனச் சில வாசகங்களைச் சொல்லி தப்பித்துக்கொள்வது மட்டுமே பலவீனர்களின் நோக்கம்.

அகச்சுட்டு: புதிதாக எழுத வருபவர்களையும் விமர்சிக்கிறீர்கள். இதனால் அவர்களின் புனைவு ஆர்வம் கெடாதா?

ம.நவீன் : புதிதாக எழுத வருபவர்களை விமர்சிக்க அவசியம் இல்லைதான். ஆனால், ஒரு பக்கம் தான் புதிய எழுத்தாளர் என பம்மாத்து செய்துகொண்டு மறுபக்கம் தான் ஒரு சிறந்த எழுத்தாளர் என தன் தொடர்புகளைக் கொண்டு பொதுவெளியில் நிரூபிக்க முயலும்போது மட்டுமே விமர்சனத்தை முன்வைக்கிறேன். ஒருவர் ஒரு நூலை பதிப்பிப்பதில் எந்தக் குற்றமும் இல்லை. நான் அதைத் தேடிச்சென்று விமர்சிக்கும் அளவுக்கு ஓய்வாகவும் இல்லை. ஆனால், அது ஒரு தரமான இலக்கியப் பிரதியென கல்வியாளர்களையும் ஊடகவியலாளர்களையும் கொண்டு நம்ப வைக்க மெனக்கெடும்போது அது இலக்கியமில்லை எனச் சொல்ல வேண்டியுள்ளது. காரணம் மலேசியா – சிங்கப்பூரில் இன்னமும் கல்வியாளர்களே இலக்கியத்தின் தரம் அறியும் திறன் பெற்றவர்கள் எனும் நம்பிக்கை இருப்பதுதான். அவர்களிடம் மொழி ஆளுமை இருக்கலாம். நவீன இலக்கியத்தில் என்ன ஆளுமை உண்டு? உண்டு என்றால் அதை ஒட்டிய அவர்கள் வாசிப்பும் வெளிப்பாடுகளும் எங்கே? தங்களுக்கு நிபுணத்துவம் இல்லாதவற்றில் இவர்கள் நுழைந்து கருத்துச்சொல்ல ஏன் கொஞ்சம்கூட கூச்சப்படுவதில்லை? இவர்களைப் போன்றவர்களால்தான் இளம் தலைமுறைக்குத் தவறான புரிதல் சென்று சேர்கிறது. தங்கள் பெயருக்கு முன் உள்ள முனைவர் என்ற பட்டமும் அதன் வழி பெற்ற தொடர்புகளும் நாடகீயமான பேச்சும் இவர்கள் போதாமைகளைச் சமன் செய்கின்றன. எனவே நான் வேறொரு தரப்பில் நின்று அது இலக்கியமல்ல என்கிறேன். அக்குரல் பொருட்படுத்தப்படாமல் போகட்டுமே. கேலி செய்யப்படட்டுமே. அதற்கெதிராக வசைகள்தான் எழும்பட்டுமே. கடந்த 15 ஆண்டுகளில் நான் எதிர்க்கொள்ளாத நிராகரிப்புகளும் அவமானங்களும் இல்லை. சந்தித்த புகார்களும் தனிமனித சாடல்களும் ஏராளம். அதற்காகவெல்லாம் நான் என்னை மாற்றிக்கொள்ள முடியாது. அதைப் பதிவு செய்ய வேண்டியது என் கடமை. எவ்வளவு வெறுக்கப்பட்டாலும் அவ்வுண்மையைச் சொல்வதுதான் என் பணி.

அகச்சுட்டு : புகார்கள் குறித்து சொன்னதால் கேட்கிறோம். நீங்கள் அரசாங்கத்தில் பணியாற்றுகிறீர்கள். சர்ச்சைகளில் சிக்குவதால் தொழில் ரீதியில் அழுத்தங்கள் வராதா?

ம.நவீன் : ஓர் அரசாங்க ஊழியன் எதிர்கொள்ளும் அதிகபட்ச விசாரணைகள் அனைத்தையும் எழுதுவதால் நான் கடந்து வந்துள்ளேன். அப்போதெல்லாம் நான் பற்றிக்கொள்வது என் நண்பர்களையும் அறத்தையும்தான். நான் என் தனிப்பட்ட வாழ்க்கையில் தவறுகள் செய்துள்ளேன். நிறைய குறைபாடுகள் உள்ள மனிதன்தான் நான். ஆனால், இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் நேர்மையாகவே நடந்து வந்திருக்கிறேன். கடந்த பதினைந்து ஆண்டுகளில் நான் பெற்ற அல்லது இழந்த எதன் பொருட்டும் என் இலக்கியச் செயல்பாடுகளோ எழுத்துப்பணியோ முடங்கவில்லை. இதுவரை விருதுக்காகவோ பரிசுக்காகவோ யாரிடமும் வணங்கி நின்றதில்லை; சமரசம் செய்துகொண்டதில்லை. பலன் கிடைக்கக்கூடிய அதிகார மையங்களை விமர்சித்து விலகியே வந்துள்ளேன். ஏதோ ஓர் எதிர்பார்ப்பில் ஒரு நொடி கூட என் நிமிர்வை நான் வளைத்துக்கொண்டதில்லை. அவசர அவசரமாக கவனத்தைப் பெற அபத்தமான முயற்சிகளை ஒருபோதும் செய்ததில்லை. இலக்கியத்தால் நான் எதையாவது இழந்தேன் என்றால் அது என் தேர்விலேயே நிகழ்கிறது. எனவே எனக்கு எது குறித்தும் புகார்களோ புலம்பல்களோ இல்லை. இதுவரை அப்படி எந்த புலம்பலையும் என் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் கூட முன்வைத்ததில்லை. நான் எழுதுவதால் அல்லாமல் வேறு காரணங்களுக்காகச் சிக்கல் வந்தால் மட்டுமே கலக்கமடையக்கூடும். மற்றபடி இலக்கியத்தை முன் வைத்து வரும் புற அழுத்தங்களின் போது, என் அறமே என்னைக் காக்கும் என ஆழ்மனதில் சொல்லிக்கொள்வேன்.

அகச்சுட்டு : ‘மலேசிய நாவல்கள்’ விமர்சன நூலில் என்ன சிறப்பு?

ம.நவீன்: மலேசியாவில் எழுதப்பட்ட நாவல்கள் மற்றும் குறுநாவல்கள் குறித்து விரிவாகப் பேசியுள்ளேன். எல்லா கட்டுரைகளிலும் அ.பாண்டியனின் பங்களிப்பும் வழிகாட்டுதலும் குறிப்பிடத்தக்கது. பத்து எழுத்தாளர்களின் நாவல்கள் குறித்து மட்டுமல்லாமல் பொதுவாக நாவல் எனும் கலை குறித்துப் பேசவும் அந்தக் கட்டுரைகளைப் பயன்படுத்தியுள்ளேன். கட்டுரைகள் சிலவற்றை வாசித்த முனைவர் ஒருவர் இவையெல்லாம் தமிழ் கூறு நல்லுலகம் ஏற்காது என்றார். அவர் கூறும் அந்த உலகம் கல்வியாளர்களுடையதாக இருக்கலாம். அதனால் எந்தப் பாதகமும் இல்லை. இன்று இலக்கியம் எனும் வாசிக்கப்படும் படைப்புகள் அனைத்தும் ரசனை விமர்சகர்கள் உருவாக்கிக்கொடுத்தவைதான். அவர் கூறும் நல்லுலகு வழங்கிய மு.வ, நா.ப போன்றவர்கள் எப்போதோ காலாவதியாகிவிட்டனர். ஆனால் புதுமைப்பித்தனும் கு.பா.ராவும் இன்னமும் வாசிக்கப்படுகின்றனர். என் கருத்துகள் ஆய்வுகளுக்கு தரவாக இருக்காது என அறிவேன். ஆனால் அதுதான் அடுத்த தலைமுறையின் வாசிப்புக்கும் மலேசிய இலக்கியத்தை அறிய முனையும் தமிழக வாசகர்களுக்கும் வழிகாட்டும்.

அகச்சுட்டு : உங்கள் படைப்புகளை விமர்சித்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

ம.நவீன்: எப்போதுமே விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆனால், விமர்சனம் செய்த எவரையும் நான் விலக்கிவைத்ததில்லை. எழுத்தாளர் ஜெயமோகன் உட்பட என்னைக் கடுமையாக நிராகரித்தவர்கள் பலரிடமும் நான் கற்றுக்கொண்டது அதிகம். சண்முகசிவாவுக்கு என் பல சிறுகதைகள் உவப்பானதில்லை. அதெல்லாம் அன்புக்கு ஒரு தடையா? அதே சமயம் தூற்றுவதற்காக விமர்சனத்தை ஒருவர் கருவியாகப் பயன்படுத்தினாலும் நான் எதிர்வினை ஆற்றியதில்லை. நீங்கள் ஆராய்ந்து கொள்ளலாம். வல்லினம் குறித்த அவதூறுகள் எழுந்து அது வரலாற்றில் பதிவாகும் ஆபத்து இருந்தால் மட்டுமே நான் பதில் கொடுப்பேனே தவிர என் புனைவு விமர்சிக்கப்பட்டதால் ஒருமுறை கூட எதிர்வினையாற்றியதில்லை.

கேள்வி : மூன்று நூல்களை முன் பதிவுத் திட்டத்தில் விற்பனை செய்கிறீர்கள். ஏன் இந்தப் புதிய வழிமுறை?

ம.நவீன் : இப்போதுள்ள கோவிட் நிலைதான் காரணம். இச்சூழல் சரியாக நாளாகும் எனத் தோன்றுகிறது. மேலும் எனக்கான தனித்த வெளியீட்டு விழாவை வைக்க விருப்பம் இருந்ததில்லை. ஒரே ஒருமுறை மை ஸ்கில்ஸ் அறவாரிய நிதிக்காக ‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ நூலை அப்படி வெளியீடு செய்தேன். சரியான வாசகர்களிடம் நூல்கள் சென்று சேர்ந்தாலே போதுமானது. ‘பேய்ச்சி’ அதற்கான வாசகர் வட்டத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது. மேலும் எனது சில பழைய நூல்களை கின்டிலில் மின் நூலில் கொண்டு வரும் திட்டத்திலும் உள்ளேன்.


(Visited 193 times, 1 visits today)