பட்சி: கடிதங்கள் 7

பட்சி ஒரு அற்புதமான கதை, பறவைகளை புகைப்படம் எடுக்கும் ஆர்வம் இருப்பதால் இன்னும் மனதுக்கு நெருக்கமாகிவிட்டது, பறவைகளை புகைப்படம் எடுப்பதில் இருக்கும் முக்கியமான விதி பறவையைப்போலவோ, வேறு எந்த சத்தத்தின் மூலமாகவோ ஈர்க்க முயற்சிக்கக்கூடாது என்பது, செயற்கையான ஒரு சிறிய அதிர்வுகூட பறவைகளின் சூழ்நிலையில் வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்தும், இந்த விதிமீறல்தான் கதையின் முக்கியமான அம்சம்.

இதை கதைசொல்லியின் தந்தையும் செய்கிறார் ஆனால் முக்கியாமான வித்தியாசம் அதை அவர் பணம் சம்பாதிக்கும் வழியாக ஒருபோதும் நினைக்கவில்லை, அவர் பச்சையம்மனாக வணங்குவது இயற்கையைத்தான், பறவைகளை ஒலி மூலம் அழைப்பதை பணம் சம்பாதிக்கும் வழியாக பார்க்கும் கதைசொல்லியும் மஞ்சன் பறவையை பிடிக்க செல்லும்போது கிட்டத்தட்ட தன் தந்தையின் மனநிலையின்தான் இருக்கிறார், வன அதிகாரிக்கு மொட்டை கடிதம் எழுதுவதும் அதனால்தான், தனக்கும் தன் மகனுக்கும் மாலிக் மூலம் எந்த பிரச்சனையும் வரக்கூடாது அதே நேரம் பறவையும் சிக்கிவிடக்கூடாது என்பதே அவரின் எண்ண ஓட்டமாக உள்ளது, குறைவான ஒலி எழுப்பியபோதும் வெளியில் வந்து வலையில் சிக்கிக்கொண்டு கூடையில் அடைக்கப்பட்ட பறவையின் அதிர்வு காட்டின் அதிர்வாக கதைசொல்லிக்கு தோன்றும் காட்சி அழுத்தமானது, கதைசொல்லி தன் தொண்டையில் ஏற்படும் வலியை செல்லும்போதெல்லாம் அது கானகத்தின் விதிமீறலுக்கான தண்டனை என்று ஏனோ தோன்றிக்கொண்டே இருந்தது.

பாலசுப்ரமணி மூர்த்தி

பொருட்களையும் உயிர்களையும் தனதாக்கி கொள்வதே தன்அகங்காரத்தின் இயல்பு. பெரும்பாலன நேரங்களில் அதனால் விளையும் மதிப்பொன்றுமில்லை. மாலிக்கின் ஆசையும் அத்தகையதே. பணமிருந்து அங்கீகாரத்திற்காக ஏங்கும் ஒருவன். திறமைக்கு கிடைதத அங்கீகாரத்தை பொருட்படுத்தாமல் பணத்தேவையுடைய ஒருவன். இரண்டு தலைமுறை தாண்டி பச்சையம்மனின் மூக்குத்தி ஒளியை முத்து கண்டுவிட்டான். அறம் மீறப்படும் போதுதான் தரிசனம் கிடைக்குமா? பச்சையம்மனுக்கு அணுக்கமானவன் புற்றிலிருந்து விடுபட மஞ்சான் சிக்கி கொள்ளும் வாய்ப்பாக விதி அமைக்கப்பட்டதா? ஏனோ மஞ்சான் மாட்டிக்கொண்டது கண்ணீரை வரவழைத்தது. தவிக்கும உயிரின் பதைபதைப்பு. பாலுவிடம் தனக்கான மதிப்பை இழந்துவிட்டான் முத்து. விருப்பமின்மையுடன் முத்து செயல்பட்டாலும் கருவியான அவன் மாலிக்கிற்காக செயலை முடித்தான். முத்துவிற்கான நியாயம் பாலுவை சாரந்ததா? மஞ்சான் பிடிபட்டது தற்செயலா? அல்லது விதியின் விளையாட்டா? “இப்போதுதான் புரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமெனத் தோன்றியது.” இதன் அர்த்தம் என்ன? எதற்காக சொல்லப்படுகிறது.விலகிசென்ற நளினியும் விவாகரத்து செய்யப்பட்ட மாலிக்கின் மனைவியும் மனதை உறுத்துகிறார்கள். நிகழ்காலத்திலிருந்து பி்ன்சென்று மீண்டும் நிகழ்காலத்திற்கு வரும் கதை.பிடித்திருந்தது.

மாரிமுத்து சரவணகுமார்

தலை முறையாக காட்டை வழிபட்ட முத்துவுக்கு பச்சையம்மன் தந்த பலி இறுதியில் அந்த மஞ்சான் என வாசித்தேன். சற்று மிகைதான் என்றாலும் அங்கு செல்லும் விசை இந்த சிறுகதையில் உள்ளது. மறு புறம் முத்துவுக்கு தொண்டை புற்று என்பதும் ஒரு பலி வாங்கல் தான். பறவைகளை கள்ளக் குரலில் அழைத்ததற்கு.
மாலிக்கின் கட்டுப்பாட்டில் பறவைகள் வதையுடன் இருக்கும் செல்போன் காட்சி கனமானது, அவன் உதவியாளன் ஒரு சிலந்தி போல் வலை நெய்யும் காட்சி சிறப்பு. இது போன்ற இடங்கள் தான் ஒரு நிகர் அனுபவத்தை நமக்கு வழங்குகிறது. பட்சி ஒரு வலுவான தீவிர அனுபவத்தை வழங்கியது.

ஈரோடு கிருஷ்ணன்

உணர்வுகளை மட்டுமல்ல காட்சிகளையும் நுட்பமாக விவரிக்கும் மொழி சிறப்பாக அமைந்துள்ளது. புறசூழலை அதுவும் காடு போன்ற பகுதியை வாசகன் உணரச்செய்ய தேர்ந்த மொழி வேண்டும் அது நவீனுக்கு சாத்தியப்பட்டுள்ளது.

வாழ்க்கையை பற்றிய அவதானிப்பை தன் மொழியில் விவரிப்பதுதான் ஒரு எழுத்தாளனின் ஆக பெரிய சவால் என்று நினைக்கிறன். சிந்தனையாளனின் சிந்தனை, எழுத்தாளனின் மொழி இரண்டுமிணைந்து ஒரு கருத்தாக உருமாற வேண்டும். கதை மறந்தாலும் அந்த ஒரு வாக்கியம் காலம் கடந்து நிற்கும் அதற்காகவே அனைத்து எழுத்தாளரும் முயலுகிறார்கள் ஆனால் ஜெ போன்ற மாஸ்டர்களுக்கு மட்டுமே அது கைகூடுகிறது. பெரும்பாலும் ஆட்டோவில் பின்பக்கம் எழுதும் வசனங்களாகவே அது அமைகிறது.
பட்சியில் நவீன் ஓர் தேர்ந்த புனைவு எழுத்தாளனாக வெளிப்படுகிறார். சூழல் விவரிப்பு, கதாபாத்திரங்களின் கச்சிதம், சில கூர்மையான அவதானிப்புகள் என்ற வகையில் நல்ல கதை.
செந்தில் குமார்

பச்சையம்மனின் மூக்குத்தி வெளிச்சம் தான் மஞ்சன் என உணரும் கணத்தில் கதைசொல்லி மயங்கி விழுகிறார். காட்டின் ஒரு பகுதியாகக் கருதிக்கொண்டிருந்த தன்னை காப்பாற்றிக்கொள்ள, ப்ரேசரின் உயிரியைப் பிடித்துக் கொடுத்ததன் அபத்தம் அத்தருணத்தில் அவருக்கு விளங்குகிறது.
(பட்சி ஆத்மா உடன் ஒப்பிடப்படுகிறது)


தலைமுறையாக கை மாறிவரும் பரவைகளுடனான உறவு முத்துவிற்கு பிறகு என்னவாக போகிறது, பாலுவின் வாழ்க்கை காட்டிலிருந்து வெளியேறப்படுமா, என்ற கேள்விகள் கதை முடிந்த பிறகும் நீடிக்கிறது.


பறவைகளைச் சிறை பிடிப்பதன் குரூரமும், மலைவாசிகள் அனுபவிக்கும் அறச் சிக்கல்களும், நடைமுறை யாதர்த்தமும் ஒன்றாகப் பின்னி ஒரு அழுத்தமான கதையாக வெளிவந்துள்ளது.

நிக்கித்தா

பட்சி சிறுகதையின் இறுதி வரியில் பச்சயம்மன் முத்துவிற்கு காட்சியளிக்கும் கணம் கவித்துவமானது. அந்த இறுதிவரி வழியாக ஒட்டுமொத்தமாக அந்த சிறுகதையைத் தொகுத்துக்கொள்வது முழுக்க முழுக்க வாசகனின் கற்பனையில் மட்டுமே நிகழும்படி எழுதப்பட்ட கலையமைதி நிறைந்த சிறந்த சிறுகதை. பச்சயம்மன் காட்சிதரும் கணத்தை முத்துவின் மரணம் என வாசிக்கலாம். அல்லது அறம் மீறப்படும்போது கிடைக்கும் தரிசனம் என வாசிக்கலாம். ஆனான் இவ்வாறான வாசிப்புகள் முழுச்சிறுகதையையும் பொருள்கொள்ள உதவுவதில்லை.

“முத்துவுக்கு பச்சையம்மன் தந்த பலி அந்த மஞ்சான் ” என்ற கிருஷ்ணனின் வாசிப்புதான் இந்த சிறுகதையை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்ள உதவும் நல்ல வாசிப்பு என்று தோன்றுகிறது. பிரிந்து சென்ற மனைவி, பொருளியல் நெருக்கடி என ஒட்டுமொத்தமாக முத்துவின் வாழ்வே பச்சயம்மனுக்கான பலிதான். புற்றுநோய் முற்றிய முத்துவை, அவனது இந்த கையறுநிலைக்கண்டு பச்சயம்மன் என்ற அன்னை தன்னை பலியளிப்பதன்றி வேறென்ன செய்ய இயலும்.

மணவாளன்

இயற்கை கொடுத்த திறமையை காசாக்க முயற்சிக்காத தந்தைக்குப் பிறந்த மகன் அதைக் காசாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான். அது அவனை படிப்படியாக எந்நிலைக்குக் கீழிறக்குகிறது என்பதை சொல்லக்கூடிய சிறுகதை. கதைக்களமும் நுண்தகவல்களும் கதையின் போக்கிற்கு உறுதுணையாக நிற்கின்றன.நல்ல சிறுகதை.

அந்தியூர் மணி

இந்த கதை சொல்லியை போலவே ஒலி எழுப்பி பறவைகளை தன்னிடம் வர வைக்க கூடிய ஒருவரை சந்தித்துள்ளதாக ஈரோடு கிருஷ்ணன் கூறியுள்ளார்.

கதை சொல்லி பறவையை அழைக்க முயற்சித்து தோற்று கொண்டிருக்கும்பொழுதே மஞ்சன் பறவை வந்துவிடுகிறது. இந்த காட்டை விட்டு, மலையை விட்டு, பறவைகளை விட்டு பிரிய முடியாத கதை சொல்லிக்காக மஞ்சன் பறவை தன்னையே கொடுத்து விடுகிறது.

ஆண் எதுவும் சொல்லாமலேயே பெண் அனைத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது, பெண்ணின் அழகால் சீண்டப்பட்டு அவளை அடிமையாக்க நினைக்கும் எண்ணம், பெண்ணைவிட பறவையால் அலைக்கழிக்கப்படும் மாலிக்கின் மனது என கவனிக்கப்பட பல இடங்கள் கதையில் உள்ளன. இந்த வேறு வேறு அடுக்குகள் கதையை மேலும் செறிவாக மாற்றுகின்றன.

ஒவ்வொரு பறவையும் எழுப்பும் ஒலியை பற்றி கதையாசிரியர் உள்வாங்கி அதை வாசகனுக்கு கடத்த முற்பட்ட விதம் மிக அற்புதம்.
பறவைகளின் பார்வையில் மனிதன் என்னவாக தெரிவான் என்ற கேள்வியே எழுகிறது இறுதியில். நல்ல சிறுகதை ‌

நினேஷ்குமார்

தான் வாழும் உடலில் பற்றி அதனை அளிப்பது புற்று, கதைசொல்லி யின் புற்று நோய் அவனது செயலின் குறியீடு என்று வாசித்தேன்.
கிருஷ்ணன் சொன்னது போல் இயற்கை அன்னை தந்த இறுதி பலி தான் மஞ்சான் குருவி என்பது தான் கதைக்கு அழுத்த தை அளிக்கிறது. ஒருவகையில் பலி கொடுத்து பலி வாங்குதல் தான் அந்த வெளிச்சம், அவன் தந்தை ஏங்கிய மூக்குத்தி வெளிச்சம்.
சிறப்பான சிறுகதை.

அருள்

முத்துவின் தந்தை அனைத்திற்கும் பச்சையம்மனின் அருளே காரணம் என்று சொல்வதை முத்து விலகலுடன் பார்க்கிறான். முத்து ஒரே சமயம் தன் மூதாதையரின் நீட்சி மற்றும் நவீன வாழ்வின் சிறுமைகளுக்கான பிரதிநிதி. அவனுக்கே இறுதியில் பச்சையம்மன் காட்சியளித்து தன்னில் ஒரு பகுதியை பலியாகவும் அளிக்கிறாள். மனிதன் எத்தனை கீழறிங்கினாலும் காடெனும் அன்னையால் வேறெப்படியும் நடந்துகொள்ள முடியாது என வாசித்தேன்.
மாலிக் உதவியாளனின் கையசைவுகளை கண்டு அவனே அந்த வலையை பின்னியிருப்பான் என யோசிக்கும் விவரணைகள் நிகர் அனுபவத்தை அளிக்கின்றன. சூழல் விவரிப்பும் கவித்துவுமும் ஒருங்கமைந்த நல்ல சிறுகதை.

பாரி

கதையை வாசித்து நண்பர்களின் கருத்துக்களையும் வாசித்துவிட்டேன். நல்லதொரு கதை. ஜெ ஒன்று குறிப்பிடுவார். இலக்கியம் வாசிப்பதால் ஒரே வாழ்க்கையில் பல வாழ்க்கைகள் வாழ்கிறோம் என்பார். இந்த வாரம் முற்றிலும் வித்தியாசமாகப் பறவையைப் பிடித்தோம். வாழ்க்கைக்காக அதே சமயத்தில் குற்றவுணர்வுடன் அச்செயலைச் செய்தோம். ஒரு நண்பர் குறிப்பிட்டது போல் அப்படியே திரையில் பார்ப்பதுபோல் இருந்தது. நள்ளிரவில் சுதந்திரம் மற்றும் எழுத்தாளர் முகில் எழுதிய அகம் புறம் அந்தப்புரம் வாசித்து இருந்ததால் பெண்களைக் கவர மாலிக் கூறும் இளவரசனின் செயல்பாடு மிகவும் புதுமையானதாகத் தெரியவில்லை. அதேபோல் பெண்களின் அழகு இளவரசனின் அகங்காரத்தை சீண்டிமது என்பதை ஏற்க முடியவில்லை. பெண்களின் அழகால் சீண்டப்படுவது ஆணின் அகங்காரம் அல்ல என்பது எனது துணிபு. மற்ற வகையில் நல்ல வாசிப்பு அனுபவம் தந்த அருமையான சிறுகதை.

குருநாதன்

பட்சி கதை ஒரே நேரத்தில் கருணையையும் குரூரத்தையும் காண வைக்கிறது என்றுதான் நினைத்தேன். கிருஷ்ணன் அவர்களின் வாசிப்புதான் என்னுடைய புரிதலும். நிகிதாவின் பதிவு மேலும் சில கோணங்களை திறக்கிறது. பறவைகளுக்கு அவன் எழுப்புவது மனிதக்குரல் என்பது தெரியும் என்கிறார் அவனது அப்பா. இறுதியில் அப்பறவையின் அலறல் அது விரும்பி வந்ததைக்குறிக்கவில்லை. வலிந்து பலிகொடுக்கப்பட்டதையே காட்டுகிறது எனநினைக்கிறேன். முத்துவுக்கு இயற்கை பலிகொடுக்கிறது என அகம் ஏற்க மறுக்கிறது. இன்னும் அசைபோட வேண்டியதுதான்.

விஜயபாரதி

கூண்டுக்குள் அடைபடப்போகும் மஞ்சன் துடிப்பதும் கதைசொல்லியின் அடுத்த தலைமுறையான பாலு பொருள்சார் சிந்தனையிலிருந்து சூழியல் சிந்தனை நோக்கி நகர்வதும் அதன் குறியீடாக பாலுவின் கீறல் இருப்பதாகவும் எனக்கு பொருள்படுகிறது.
பச்சையம்மன் பட்சியம்மனாகத் தெரிகிறது. வேலுர் வாழப்பந்தல் பிரசித்தி பெற்ற பச்சையம்மனை குறிப்பிடுவது கதையின் நுட்பத்தை உணர்த்துகிறது. நண்பர்களின் மாறுபட்ட பார்வைகள் எனது வாசிப்பை கூர்மையாக்குகிறது.

சுப்ரமணியம்

(Visited 97 times, 1 visits today)