கு. அழகிரிசாமியின் குழந்தைகள் (உரை)

அனைவருக்கும் வணக்கம்.

2005இல் நான் ஆசிரியராகப் பணியில் அமர்ந்தேன். தமிழ் மொழி ஆசிரியர் நான். பொதுவாகவே புதிதாகப் பணியில் அமரும் ஆசிரியர்களைப் படிநிலை ஒன்றில் பயிற்றுவிக்கப் பணிப்பது மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் வழக்கம். அப்படி எனக்கு இரண்டாம் ஆண்டில் தமிழ் மொழி பயிற்றுவிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நான் சற்றுக் கண்டிப்பான ஆசிரியர்தான். மாணவர்கள் மொழியைச் சரியாகக் கையாள வேண்டும் என்பதில் பிடிவாதமாகவே இருந்தேன்.

வேலைக்குச் சேர்ந்த அவ்வருடத்தின் தொடக்கத்திலேயே முதலாம் ஆண்டு மாணவி ஒருத்தியை எதிர்கொள்ள நேர்ந்தது. அந்த மாணவி அழுதுகொண்டிருந்தாள். நான் அந்த மாணவியை நெருங்கி காரணம் கேட்டபோது “எங் காயு காயம்” என்றாள். எனக்குப் பதறிவிட்டது. “என்ன கையில் காயமா? எங்கே?” என அவள் கையை ஆராய்ந்தேன். அவளுக்கு காயம் என ஒன்றும் இல்லை. ஆனால் அவள் பேசிய சொல்லில் எனக்கு ‘காயம்’ என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது. எத்தனை முறை கேட்டாலும் “எங் காயு காயம்” எனும் வார்த்தைகளையே சொல்லிக்கொண்டிருந்தாள். கையில் காயம் இல்லாததால் அவள் கால்களையும் ஆராய்ந்தேன். அவள் மேலும் வேகமாக அழத்தொடங்கினாள். நான் அவள் சொல்வதை புரிந்துகொள்ள முடியாமல் இரண்டாம் ஆண்டில் பயிலும் அவள் அண்ணனை வரவழைத்தேன்.

அவன் நிதானமாக வந்து தன் தங்கையிடம் “யேன் அழுவுற?” என்றான் கோபமாக. அவள் அவனிடமும் அதையே சொன்னாள். “செரி என்னோடைய கொடுக்கிறேன்,” என்றான் அவன்.
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவ்வளவு நேரம் எனக்குப் புரியாத ஒன்று அவனுக்கு என்ன புரிந்தது எனத் தெரியாமல் கொஞ்ச நேரம் குழம்பி நின்றேன். நான் அவனது தமிழ் மொழி ஆசிரியர். பிடிவாதமாக அவனுக்கு நல்ல உச்சரிப்புகளைத் திணிப்பவன். வேறு வழியின்றி கொஞ்சம் வெட்கத்தை விட்டு “அவள் என்ன சொல்கிறாள்?” என்றேன். “அதோட தாள காணுமாம் சார்,” என்றான். ‘அப்படியா சொல்கிறாள்!’ என எனக்குக் குழப்பமாக இருந்தது. “காயம் என்றாளே!” என்றேன். அவன் நான் ஏதோ தப்பாகப் பேசுவதுபோல முறைத்துப்பார்த்துவிட்டு வகுப்புக்கு ஓடியவன் மீண்டும் திரும்பிவந்தபோது ஓவியத் தாளை கையில் வைத்திருந்தான். அதை வாங்கிக்கொண்ட சிறுமி அழுகையை நிறுத்திவிட்டு வகுப்புக்கு ஓடினாள்.

நண்பர்களே, எனக்குப் புரியாத ஒன்று என் மாணவனுக்கு எப்படிப் புரிந்தது என்பது எனக்கு முதலில் விளங்கவில்லை. பின்னர், ஒரு குழந்தையின் மொழி இன்னொரு குழந்தைக்குப் புரிகிறது என்றே எளிமையாக வரையறை செய்துக்கொண்டேன். ஆனால் கலையும் இலக்கியமும் நாம் வாழ்வில் எளிதாகக் கடந்து வந்த தருணங்களை அசாதாரண அனுபவங்களாக மாற்றும் தன்மை கொண்டவை. கோயிலில் கடந்துபோகும் ஏராளமான சிலைகளுக்கு மத்தியில் ஏதோ ஒரு சிற்பம் தீப ஒளியில் கல்மிளிர கொடுக்கும் பொருள்போன்றது அது. நான் கடந்து சென்றது அப்படி ஓர் அசாதாரண தருணமென எனக்கு பின்னாளில் உணர்த்தியது கு. அழகிரிசாமி கதைகள்தான்.

கு. அழகிரிசாமி என்ற எழுத்தாளரின் பெயர் எனக்கு சு. யுவராஜன் மூலமாகத்தான் அறிமுகமானது. அவர் அப்போது ‘காதல்’ என்ற இதழில் ‘கதைவெளியில் கரைந்த காலம்’ எனும் தொடர் எழுதிக்கொண்டிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த கு. அழகிரிசாமியைத் தேடி வாசித்தபோது என்னை அதிகம் பாதித்தது ‘அன்பளிப்பு’ சிறுகதை.

நண்பர்களே நான் எப்படி ஒரு சிறுமியின் மொழியைப் புரிந்துகொள்ள முடியாமல் பள்ளியில் தவித்தேனோ அப்படியான ஒரு கதாபாத்திரத்தை கு. அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ எனும் சிறுகதையில் சந்தித்தேன். இதில் வரும் கதைச்சொல்லி நாளிதழில் பணியாற்றுபவர். நல்ல இலக்கிய வாசகர். இன்னும் சொல்லப்போனால் உலக இலக்கிய வாசகர். ஆனால் சாரங்கன் எனும் சிறுவனை புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறார்.

சாரங்கன் எனும் சிறுவன் மற்ற சிறுவர்களோடு சாதாரணமாகத்தான் கதைச்சொல்லி வீட்டுக்கு வருகிறான். யாரைவிடவும் கதைச்சொல்லியிடம் பயபக்தியுடன் நடந்துகொள்கிறான். யாராவது அவன் கதைச்சொல்லியிடம் ஒட்டி அமர்ந்திருக்கும் இடத்திற்கு போட்டிக்கு வந்தால் விட்டுக்கொடுகிறான். கதைச்சொல்லி, தனக்கு நெருக்கமான அல்லது விருப்பமான இரண்டு சிறுவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தாலும் அதைப் பார்த்து பொறாமை படாமல் இருக்கிறான். இவ்வளவு சமத்தான சாரங்கன்தான் அவ்வளவு பிடிவாதமாக கதைச்சொல்லியை வீட்டுக்கு அழைக்கிறான். அவர் மறுத்தாலும் பிடிவாதம் பிடிக்கிறான்.

நண்பர்களே எப்போது வாசித்தாலும் கண் கலங்க வைக்கும் சிறுகதை இது. கதைச்சொல்லியின் அன்பைப் பெற சாரங்கன் செய்யும் ஒவ்வொரு செயல்களும் கதையின் முடிவை வாசித்தப் பிறகுதான் மெல்ல மெல்ல வெளிபடத் தொடங்குகிறது. பெரியவர்கள் வாசிக்கும் வால்ட் விட்மனின் கவிதைத் தொகுப்பு சாரங்கனுக்குப் புரியாது என அதைப் பிடுங்கி வைக்கும் கதைச்சொல்லியால் அவன் செயலில் உள்ள பொருள் புரிந்துகொள்ள முடியாமல் போகிறது. சாரங்கன் விரும்புவது தான் வழங்கும் அன்பளிப்பை என கதைச்சொல்லி புரிந்து வைத்திருக்கும்போது சாரங்கன் விரும்புவது அன்பளிப்பாக வழங்கப்படும் நூலில் கதைச்சொல்லி எழுதிக்கொடுக்கும் ‘என் பிரியமுள்ள’ எனும் வாசகமும் அதில் மறைந்துகிடக்கும் அன்பையும் என வெளிபடும் இடம் கதையின் ஒவ்வொரு சொல்லும் புதிய பொருளுடன் தன்னை வெளிகாட்டத் தொடங்குகிறது.

நண்பர்களே கதைச்சொல்லியால் சாரங்கனைப் புரிந்துகொள்ள முடியாமல் செய்வது எது? எனும் கேள்விதான் இந்தக் கதையை வாசித்து முடித்தவுடன் தோன்றக்கூடியது. முதன்மையானது, பரிசு குறித்து பெரியவர்கள் மனதில் ஏற்றி வைக்கப்பட்ட அர்த்தங்கள் எனலாம். இரண்டாவது பரிசுகளில் எழுதிவைக்கும் வாழ்த்துச் சொற்களில் நாம் அனேகமாக நம்பிக்கை இழந்துவிட்டதைச் சொல்லலாம். நாம் பெரியவர்கள் கண் கொண்டே குழந்தைகளைப் பார்க்கிறோம். குழந்தைகளின் உள்ளம் அசலானது; மாசுபடாதது. ஒரு குழந்தை தனது பரிசில் எழுதிக்கொடுக்கப்படும் வாழ்த்துச் சொற்களாலும் பரிசில் பொதிந்துள்ள அரூபமான அன்பையே தேடிக்கண்டடைகிறது. சொல்லப்போனால் அக்குழந்தை வழியாகவே அச்சொற்கள் ஒளி கொள்கின்றன.

பெரும்பாலோரைப் போல கு. அழகிரிசாமியை நான் வாசிக்கத் தொடங்கியது ‘ராஜா வந்திருக்கிறார்’ எனும் சிறுகதையில் இருந்துதான். கதையை இப்படிச் சுருக்கமாகக் கூறலாம். ராமசாமி பணக்கார குடும்பத்தில் பிறந்தவன். ஆனால், செல்லையா, தம்பையா மற்றும் அவர்களது தங்கையான மங்கம்மாள் மூவரும் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர்கள். ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் எப்போதும் போட்டி நிலவிக் கொண்டிருக்கும். அந்தப் போட்டி சுவாரசியமானது. உதாரணமாக, ஒருவர் வீட்டில் உள்ள பொருளைக் கூறிய பிறகு இன்னொருவர் தன் வீட்டில் அது போல வேறு என்ன உள்ளது என்று கூற வேண்டும். இப்படி ராமசாமி எதாவது சொல்ல செல்லையா மற்றும் அவன் சகோதர சகோதரிகள் இணைந்து அவனை வாதிட்டுத் தோற்கடிக்கின்றனர். இப்படிப் போகும் கதையில் ராமசாமியின் அக்காவைத் திருமணம் செய்து கொண்ட நிஜமான ராஜாவின் (ஜமீந்தார்) வருகை ராமசாமியின் வீட்டில் நிகழ, அம்மாவை இழந்த பரிதாபமான ராஜா எனும் சிறுவனின் வருகை செல்லையாவின் வீட்டில் அவ்விரவில் நிகழ்கிறது. தன் வீட்டுக்கு ஜமீந்தார் வந்துள்ளதை ராஜா வந்திருக்கிறார் என ராமசாமி சொல்ல பதிலுக்கு மங்கம்மா அதை போட்டிக்கான அழைப்பெனக் கருதி எங்கள் வீட்டுக்கும்தான் ராஜா வந்திருக்கிறார் என்கிறாள்.

இது மிகப்பிரபலமான கதை. பிரபலமான கதைகள் பல்வேறு வகையான வாசிப்புக்குச் செல்வதுண்டு. அப்படி உருவான அபிப்பிராயங்களை மூன்றாக வகுக்கலாம். முதலாவது, இக்கதையில் வரும் மங்கம்மாளின் அம்மாவும் குழந்தைகளும், அனாதையாக வரும் சிறுவன் ராஜாவிடம் காட்டும் கருணை. இரண்டாவது, தங்கள் தாயார் தங்கள் தந்தைக்கு வாங்கிய துண்டையே ஒரு சிறுவனுக்குக் கொடுப்பதாலும் அச்சிறுவனுக்குத் தங்கள் அம்மாவிடமிருந்து கிடைக்கும் சலுகைகளாலும் அவனை ராஜாவுக்கு நிகராகப் பார்க்கும் குழந்தைகள். மூன்றாவது, கருணையினால் குழந்தைகள் அடையும் உளவிரிவு, ஓர் அனாதைச் சிறுவனை ராஜாவாகச் சென்று அடையும் தருணம்.

இவை மூன்றும் முக்கியமான பார்வைகள்தான். நான் இவ்வுரையில் இக்கதையை விளக்க முயலவில்லை. ஆனால், எனக்கு இக்கதை கூடுதலாகத் துலங்கி வந்தது இதில் வரும் ராமசாமியை மையப்படுத்தி வாசித்தபோதுதான். இக்கதையில் வரும் ராமசாமியை ஏன் ஒரு குழந்தையாகக் கவனிக்கத் தவறுகிறோம் எனும் கேள்வி எனக்குத் தாமதமாகவே எழுந்தது. அதற்கு முதல் காரணம் அவன் பணக்காரனாக இருப்பதுதான். கதையில் காட்டப்படும் சமூகப்பின்னணியும் அதை ஒட்டிய ஏற்றத்தாழ்வுகளையும் நமது மதிப்பீடுகளைக் கொண்டு அணுகும்போது ராமசாமியின் மீது சில எதிர்மறை தன்மைகளை நாமே புகுத்திவிடுகிறோம்.

உண்மையில் மற்ற சிறுவர்கள் போலவே அசலான குழந்தை மனத்தோடு இருக்கும் ராமசாமியின் வழி கதையை அணுகும்போது இக்கதையில் குழந்தைகளின் அபாரமான கள்ளமின்மை வெளிபடுவதை உணரலாம்.

இந்திய தேச சரித்திரப் புத்தகத்துக்கும் சிவிக்ஸ் புத்தகத்துக்கும் இடையில் படங்களைக் காட்டி போட்டி வைப்பவன்தான் ராமசாமி. அவன் அணிந்திருக்கும் விலை உயர்ந்த சில்க் சட்டையை விட தன் அண்ணன் அணிந்துள்ள கனமான சட்டையே கிழியாதது எனத் தன்னைவிட இளையவளான மங்கம்மாளின் வாதத்தை ஏற்று தோல்வியை ஒப்புக்கொள்ளும் சிறுவன்தான் அவன். தன் வீட்டில் இருக்கும் ஆறு பசுக்களைவிட மங்கம்மா வீட்டில் உள்ள ஒன்பது கோழிகள் பெரிதென கேலிக்குள்ளாகி அழுகிறான். அவன் அணிந்துள்ள அலங்காரங்களுக்கும் அவனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவன் மனதளவில் நிர்வாணமாகச் சுற்றும் சிறுவன் என அறிந்துகொண்டால் மட்டுமே இக்கதை வேறொன்றாக வாசகனுக்குத் துலங்கக் கூடும். அதன் வழியாகவே இறுதியில் மங்கம்மாள் தன் வீட்டுக்கும் ராஜா வந்திருக்கிறார் எனச் சொல்லும்போது அதை முழுமையாக நம்பி ஏற்றுக்கொள்ளும் கள்ளமின்மை மட்டுமே அவன் வழியாக இக்கதையில் வெளிபடும்.

இக்கதையில் உள்ள ராமசாமி மங்காளின் இன்னொரு நிலை என்பதுதான் என் வாசிப்பு. மங்கம்மாள் எப்படி ராஜா எனும் பெயர் கொண்ட சிறுவனை உண்மையான ராஜாவாகச் சென்றடைந்திருப்பாளோ அதற்கு சற்றும் குறையாமல்தான் ராமசாமியும் அவள் சொற்கள் வழி சென்று அடைந்திருப்பான். அதற்கான மனம்தான் அவனிடம் உள்ளது. அவனை அந்த நிலைக்குச் சென்று பார்க்கும் மனம் பெரியவர்களான நம்மிடம்தான் இல்லாமல் இருக்கிறது.

நண்பர்களே, நாம் அப்படித்தான் வாழப்பழக்கப்பட்டிருக்கிறோம். ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்தவர்கள்தான் நாம் எல்லோரும் என மறந்துவிடுகிறோம். பிறக்கும்போது பெரியவர்களாகப் பிறந்ததாக நாமாகக் கற்பனை செய்துக்கொள்கிறோம். அதனால்தான் பொதுவாகவே குழந்தைகளுக்கும் முதியவர்களும் நமது குடும்பங்களில் முக்கியத்துவமும் கவனமும் இருப்பதில்லை.
கு. அழகிரிசாமியின் காற்று, பேதைமை என்ற சிறுகதைகள் குழந்தைகளுக்கு வீடும் வீட்டில் உள்ளவர்களும் தங்களுக்கு எத்தனை அழுத்தமான சூழலை வழங்குகிறார்கள் என்றும் அதிலிருந்து அவர்கள் எப்படித் தப்ப விளைகிறார்கள் என்றும் வழி பேசுகிறார்.

இரண்டு சிறுகதைகளிலும் வரும் சிறுவர்கள் வாழும் வீடு சிறுவர்களுக்கானதே அல்ல என மறுபடி மறுபடி சொல்கிறார் கு. அழகிரிசாமி. உஷ்ணமாக, காற்றோட்டம் இல்லாத, இருண்ட சிறிய வீடுகள் அவை. இந்த வீடுகளில் வசிக்கும் சிறுவர்கள்தான் திண்ணை உள்ள வீட்டில் விளையாடியும் குருட்டு பிச்சைக்காரன் சோற்றில் மண்ணள்ளி போட்டும் அந்நியர்களிடம் சிக்கி அடிபடுகிறார்கள்.

நண்பர்களே நாம் உலக இலக்கியம் உலக சினிமாக்களை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். அந்நியன் நாவலில் வரும் மெர்சோ கொடும் வெய்யிலில் ஓர் அரேபியனைச் சுட்டது குறித்து விவாதிக்கிறோம். ஈரானிய சினிமாவில் வரும் குழந்தைகள் குறித்து பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒருவகையில் பார்த்தால் உலக கலை இலக்கிய மேதைகளுக்குச் சற்றும் குறையாதவர் கு. அழகிரிசாமி என அவரது இவ்விரு சிறுகதைகளை வாசித்தால் புரியும்.

உலகில் எங்காவது ஒரு நாட்டில் ஒரு குழந்தை சுவாசிக்க காற்றில்லாமல் தெருவுக்கு வந்து அந்நியர்களிடம் அடிபடுமா? இது தமிழகத்துக்கென்றே உள்ள சிக்கல். அவை அந்த மண்ணில் இருந்து எழுந்து வந்த சிறுகதை. அந்த வெக்கையும் உஷ்ண காற்றும்தான் அவர்களை வீடுகளை விட்டுத் துரத்துகிறது. வீதியில் அடிவாங்கச் செய்கிறது. அடிவாங்குவதையே ஒரு விளையாட்டாக மாற்றுகிறது. இது எப்படிப்பட்ட கொடுமை? இந்தக் கொடுமையான சூழலைதான் நாம் குழந்தைகளின் குறும்புத்தனம் எளிதாக வரையறை செய்கிறோம்.

கு. அழகிரிசாமி இந்தக் குழந்தைகளைதான் நம்மிடம் விட்டுச் செல்கிறார். குழந்தைகளின் கள்ளமின்மை வழி பெரியவர்களின் மேதமையை விமர்சனம் செய்கிறார். நம்மிடம் உள்ள வரையறைகளை அவர்களின் பிஞ்சுக்கரங்களைக் கொண்டு களைத்துப் போடுகிறார். அவர்கள் கண்வழி காணக்கூடிய உலகம் ஒன்று உண்டென நமக்கு உணர்த்திச் செல்கிறார்.

நான் 2005இல் பார்த்த அந்தச் சிறுமியின் மொழி இப்போதும் என் காதுக்குள் உள்ளது. அவள் “என் தாள காணோம்” என்றுதான் சொன்னாள். அதை புரிந்துகொள்ள மொழி அவசியமானது இல்லை. நான் கள்ளமற்ற கண்களுடன் அவளது கண்களை நோக்குவதுதான் அவசியமாக உள்ளது. அதற்கு நான் என்னைப் பெரியவன் என்பதை மறக்க வேண்டியுள்ளது. அது சிரமம்தான். ஆனால் முயலவேண்டும். கு. அழகிரிசாமியின் புனைவுகள் அதற்கு உதவலாம்.

(15.10.2023இல் கூலிம் நவீன இலக்கிய களத்தின் முன்னெடுப்பில் நடந்த கு. அழகிரிசாமி நூற்றாண்டு கருத்தரங்கி ஆற்றிய உரை)

(Visited 231 times, 1 visits today)