ஒரு புனைவை எழுதிக்கொண்டிருக்கும்போது சந்திக்கும் அனுபவங்கள் எல்லாம் அந்தப் புனைவு தன்னை முழுமையாக்கிக்கொள்ள உருவாக்கித்தரும் வாய்ப்புகளோ என பல சமயம் எனக்குத் தோன்றுவதுண்டு. சரியாகச் சொல்வதென்றால் ‘பேய்ச்சி’க்குப் பிறகு எனக்குள் இவ்வெண்ணம் வலுவாகவே வேரூன்றியுள்ளது. இதை நான் மற்றவர்களிடம் சொல்லும்போது அதை மூடநம்பிக்கையாகவும் தற்செயல்களாகவும் சொல்லிக்கடப்பர். என்னால் அப்படி எடுத்துக்கொள்ள முடிவதில்லை.
ஒரு கடவுள் தான் அமரப்போகும் மலரை மிகப்பொருமையாகவும் பக்குமாகவும் தன் கைக்கொண்டே மலர வைப்பதுபோலதான் புனைவு (குறிப்பாக நாவல்) நிகழ்வதாக எனக்குத் தோன்றுகிறது.
‘தாரா’ நாவலில் அப்படி நிகழ்ந்த ஓர் அனுபவத்தை உதாரணமாகச் சொல்லலாம்.
நாவல் அச்சாகி வரும் முன்னரே அதை வாசித்த சில நண்பர்கள் நேபாளுக்குச் சென்று வந்ததால்தான் நான் நாவலுக்குத் ‘தாரா’ எனத் தலைப்பிட்டதாகக் கூறினர்.
“சத்தியமாக இல்லை!” எனக்கூறியபோது சந்தேகமாக இழுத்தனர். நேபாளுக்குச் செல்லும் முன்னரே நாவலின் தலைப்பு ‘தாரா’ என்பது என்னுடன் பயணம் வந்த அரவின் குமார், கோகிலவாணி உட்பட ஒரு சில நண்பர்களுக்குத் தெரியும். ஆனால் என் மனதில் இருந்தது பௌத்த மதத்தின் தாரா அல்ல. இந்து மதத் தொன்மங்களில் உள்ள தாரா. இவள் பௌத்த சமயத்தில் இருந்து சாக்த சமயத்திற்கு வந்த தெய்வம்தான். இன்னும் சொல்லப்போனால் நேபாள் புறப்படும் முன்னரே இந்த இந்து தெய்வம் குறித்து நண்பர் ராஜகோபாலன், சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி ஆகியோரிடம் விரிவாகவே பேசி அறிந்து வைத்திருந்தேன்.
நேபாள் சென்று, லும்பினிக்குப் பயணமானபோதுதான் என்னால் பௌத்த தாராவை அறிய முடிந்தது. ஜெர்மன் மடாலயத்தில் 21 வகை தாரா ஓவியங்களை ஒன்றாகப் பார்த்தபோது உறைந்து அங்கேயே அமர்ந்துவிட்டேன். கோகிலவாணிதான் ஓடி வந்து எனக்கு அந்தத் தாராக்களைக் காட்டினாள். ஒரு சொல்லாகவே மட்டும் இருந்த தாரா என்னுள் வந்து உருவாகவும் பின் அருவாகவும் அமர்ந்து கொண்டாள். என்னால் அவள் யார் என்பதையும் என்ன சொல்ல வருகிறாள் என்பதையும் அங்கணம் அறிய முடிந்தது. அதன் பின்னர் எனக்கு தாரா குறித்த தகவல்கள் தேவையானதாக இல்லை. அவள் கொடுத்த அனுபவங்கள் போதுமானதாக இருந்தது.
குறிப்பு: ஜெர்மன் மடாலயத் தாரா
2
லும்பினியில் இருந்து புறப்பட்ட பின்னர் ஒரு தாரா ஓவியம் வாங்க வேண்டுமென எனக்குள் ஆசை துளிர்ந்தது. அதற்குப் பொருத்தமான இடம் பௌத்தநாத் என்பதால் காட்மண்டு திரும்பியப் பிறகு ஒரு மதியம் அங்குச் சென்றோம்.
என்னுடன் அரவின் மற்றும் கோகிலா இருந்தனர். முழுமையாக பௌத்தநாத்தை ஒரு வட்டம் அடித்தப்பின்னர் ஒரு கட்டடத்தின் மாடியில் பச்சை நிற தாரா ஓவியம் ஒன்று மாட்டப்பட்டிருப்பது கண்ணில் பட்டது. என்னால் அந்த ஓவியத்தில் இருந்து கண்களை விலக்க முடியவில்லை. எவ்வளவு தொகையாக இருந்தாலும் வாங்கிவிடுவது என மூன்றாவது மாடியில் இருந்த அந்த ஓவியத்தைப் பார்க்க ஓடியபோது மேலே போக முடியாதபடிக்கு கடை அடைத்துக்கிடந்தது. ஏமாற்றமாகிப் போனது. மீண்டும் திரும்பி வந்து தலையை உயர்த்தி ஏக்கமாகப் பார்த்தோம்.
அந்த ஓவியம் மூன்றாவது மாடியின் வெளிப்புறமாக மாட்டப்பட்டு இருந்தது. நாங்கள் மதிய வெயிலில் கண்களை இடுக்கி அந்தப் பச்சை தாராவை பார்த்துக்கொண்டே இருந்தோம். அவள் எங்களைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தபடியே வெயிலில் மின்னினாள். அதன் பின்னர் அங்கிருந்த வேறெந்த தாராவும் அவ்வளவு மனம் கவரவில்லை. அவளை ஒரு படம் எடுத்துக்கொண்டேன்.
கோகிலாதான் அந்தப் படத்தை கூகுளில் போட்டுத் தேடி அந்த ஓவியரை இன்ஸ்டாவில் பிடித்தார். அவர் பெயர் சுலவ் சாக்கியா (Sulav Shakya).
அந்த ஓவியத்தை வாங்க முயன்றபோதுதான் அது ஏற்கனவே லண்டனில் உள்ள ஒருவரால் வாங்கப்பட்டு விட்டது என்றதும் நாங்கள் பார்த்த ஓவியம் அதன் டிஜிட்டல் அச்சு என்றும் தெரிய வந்தது. தாராளமாக அந்த ஓவியத்தை டிஜிட்டல் அச்சு எடுத்து உபயோகித்துக்கொள்ளலாம் என்றார். அப்போதுதான் அந்தத் தாரா தன் கனவில் வந்தவள் என்றும் ஒருமுறைக்கு மேல் தன்னால் அவளை வரைய முடியாது என்றும் கூறினார். கனவுகளில் தாராவை பார்க்கும் அவர் வித்தியாசமான ஓவியராகத் தெரிந்தார். தான் சாக்கியக் குலம். அது புத்தர் பிறந்த குலம். எனவே தான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக இருக்கலாம் என்றார்.
அவர் அனுமதி பெற்று அந்தத் தாரா ஓவியத்தில் உள்ளது போலவே கண்களை வரைய சில ஓவியர்களிடம் கேட்டுப்பார்த்தேன். அந்தக் கண்கள் என் நாவலின் அட்டைப் படத்துக்குத் தேவையாக இருந்தது. அந்த ஓவியனின் கனவில் வந்தவள் யார் கைகளிலும் வந்தமர மறுத்தாள்.
3
பௌத்தநாத்தில் பார்க்கும் இடமெல்லாம் பச்சை தாராவே எதிர்க்கொண்டாள். முன் அனுமதி பெற்று நாங்கள் சென்று சந்தித்த ஓவியர் டிக்ஷன் மூன்று வாரமாகப் பச்சை தாராவை வரைந்துகொண்டிருப்பதைச் சொன்னார். தாராக்கள் சூழ்ந்த நிலமாக நேபாள் தோன்றத் தொடங்கியபோது நாவலில் நான் செய்ய வேண்டிய மாற்றங்களும் புலப்படத் தொடங்கின. ஆனால் அவை தெளிவானதாக இல்லை.
ஒருவித குழப்பமான மனநிலையுடந்தான் குமாரி தேவி தெய்வமாக இருந்த சனிராவைச் சென்று சந்தித்தோம்.
குமாரி தேவி என்பவர்கள் நேபாள மக்களால் வாழும் தெய்வமாகக் கருதப்படும் சிறுமிகள். தலேஜூ பவானி எனும் தெய்வத்தின் மனித வடிவாக இச்சிறுமிகள் கருதப்படுகின்றனர். துர்கையே நேபாளில் தலேஜூ பவானியாக வணங்கப்படுகிறார். சனிரா அப்படி தெய்வமாக இருந்து இப்போது சகஜமான வாழ்க்கைக்குத் திரும்பியவர்.
சனிராவிடம் பல கேள்விகள் கேட்டாலும் அவர் ஷர்யா நிர்த்யா (Charya Nirtya) எனும் நடனத்தை ஆடுவது குறித்து விளக்கியபோது மீண்டும் தாரா எங்கிருந்தோ வந்து இணைந்துகொண்டாள்.
ஏன் அவள் விடாமல் உடன் வருகிறாள் என்பதே குழப்பமாக இருந்தது. அவலோகிதேஷ்வரரால் தாராவுக்கு போதிக்கப்பட்டதுதான் ஷர்யா நிர்த்யா நடனம் என அவர் கூறியபோது கொஞ்சம் தலை சுற்ற தொடங்கியது.
சிகண்டியின் மையப் பாத்திரமாக வருபவர்தான் அவலோகிதேஷ்வரர். மலேசியாவில் அவரை ‘குவான் யின்’ எனும் பெயரில் வழிபடுவது நாவலில் விரிவாக எழுதப்பட்டிருக்கும். சிகண்டி முழுவதுமே குவான் யின் ஆட்சி செய்வார். அவரில் இருந்து வந்தவள் தாரா. ஏன் இவர்களைச் சுற்றியே என் புனைவுலகம் நகர்கிறது எனக் குழப்பமாக இருந்தது.
ஷர்யா நிர்த்தியா நடனம் தாராவுக்குறியது. தாராவை உடலில் அழைத்து ஆடுவது. ஆடுவதன் மூலம் ஞானம் அடைவது. பிறருக்கு ஞான மார்க்கத்தைப் போதிப்பது. தான் தாராவின் நடனத்தை ஆடுவதால் இன்னமும் கடவுளாகவே தன்னை உணர்வதாகச் சொன்னார் சனிரா.
நான் அந்த நடனத்தை யூடியூப்பில் பார்த்தேன். அந்த நடனத்திற்காக பின்னணியில் ஒலிக்கப்படும் மந்திரம் மெல்ல மெல்ல ஆக்கிரமித்து உடலை அதிர வைத்தது.
50% எழுதி முடித்துவிட்டு நேபாளுக்கு வந்திருந்தேன். அந்த நாவலை தாரா மீண்டும் தன் மெல்லிய கரங்களால் மாற்றி அடுக்குவது புரிந்தது.
4
சனிராவைச் சந்தித்தது பயணத்தின் கடைசி தருணங்களில்தான். அவர் வழியாக தாரா தேவி குறித்து இன்னும் ஆழமான சிந்தனைகள் மனதில் பதிந்தன. பின்னர் ஓய்வாக அமர்ந்து அதுவரை நாங்கள் சுற்றி அலைந்த இடங்களில் பிடித்தப் படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தபோதுதான் உடல் சிலிர்ந்தது.
உணவகங்களில், கடை வீதிகளில், பசுபதி நாதர் கோயிலின் கூரைகளில் என ஏதோ ஒரு மூலையில் தாரா தேவி நின்றுக்கொண்டிருந்தாள். உண்மையில் எனக்கு அவள் தாரா தேவி என்றே தெரியாது. குறிப்பாகச் சொல்வதென்றால் முதல்நாள் பயணத்தில் பசுபதிநாதர் கோயிலின் கூரைகளில் பார்த்த கன்னிகளை நான் ஏதோ பெயரில்லா தேவதைகள் என்றே நினைத்திருந்தேன். கடைவீதிகளில் கண்ட ‘தாரா’ என்ற பெயர்ப்பலகைகளை கவனம் இன்றியே கடந்திருந்தேன். உணவகங்களில் சிரித்துக்கொண்டிருந்த அவளை அசட்டையாகவே எதிர்க்கொண்டேன். தாரா என்னை விடாமல் துரத்தி வந்திருந்தாள். ஒவ்வோர் இடத்திலும் வெவ்வேறு ரூபங்கள் எடுத்திருந்தாள். என் அசட்டுத்தனத்தைத் தன் அன்பால் எதிர்க்கொண்டாள். ஓர விழிகளால் என்னைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
முன்பே சொன்னதுபோல நேபாளுக்குச் சென்றபோது எனக்கு தாராவைப் பற்றிய எந்தச் சித்திரமும் மனதில் உருவாகியிருக்கவில்லை. ‘தாரா’ எனும் தலைப்பில் நான் எழுதிக்கொண்டிருந்த நாவலே வேறு. ஆனால் விடாமல் பின் தொடர்ந்து அவளே என் நாவலின் நாயகியென எனக்கு எடுத்துரைத்தாள். எனது மொத்த நாவலையும் மாற்றியமைக்க என் உள்ளுணர்வைத் தூண்டிக்கொண்டே இருந்தாள்.
நான் முதலில் இருந்து நாவலை மாற்றியமைப்பதை எண்ணித் தயங்கினேன். கிட்டத்தட்ட 17000 சொற்களைக் கடந்துவிட்டிருந்தேன். எழுதியவரை நாவலில் நிறைய இடைவெளிகளும் குழப்பங்களும் இருந்தன. நேபாள் பயணத்திற்குப் பின்னர் கிடைக்கும் மன ஓய்வில் அவற்றை நிறைவு செய்ய முடியும் என நினைத்திருந்தபோது இப்படி ஒரு சிக்கல் எட்டிப் பார்த்து நாவலை மேலும் குழப்பியது.
நான் என் மனத்தைச் சமாதானம் செய்ய வேண்டியிருந்தது. அதற்கு தாராவை ஏதோ ஒரு வகையில் வீட்டுக்கு எடுத்துச்செல்ல நினைத்தேன். சாவி சங்கிலியாக, முப்பரிணாம சிலையாக, பச்சைக்கல்லில் செதுக்கப்பட்டவளாக அவளை வெவ்வேறு வடிவங்களில் வாங்கினேன்.
மனதில் எங்கோ ஒரு பள்ளம் இருந்தது. அந்தப் பள்ளத்தில் தாராவின் உருவங்கள் அடங்கியப் பொருட்களை இட்டு நிரப்பி சமன் செய்ய முடியும் என நானாக நம்பி ஏமாந்துகொண்டிருந்தேன். அந்தப் பள்ளம் இன்னும் இன்னும் பெரியதாகிக்கொண்டே இருந்தது.
தாரா நாவலின் அடிப்படை சிக்கல் மலேசியாவுக்கு வேலை செய்ய வரும் அந்நிய தேசத்து தொழிலாளர்கள் குறித்தது. அவ்வகையில் வங்காளதேசிகளின் வருகையை மையமாக வைத்தே நாவல் கட்டமைக்கப்பட்டது. அந்தப் பண்பாட்டில் தாரா எங்கனம் வருவாள் எனக் குழம்பினேன்.
கைப்பேசியைத் திறந்து மலேசிய அந்நியத் தொழிலாளர்கள் குறித்து வாசித்தபோதுதான் எனக்கு மேலும் சில அதிர்ச்சிகள் காத்திருந்தன.
5
நான் வாழ்ந்த கெடா பகுதியில் வங்காள தேசிகளையே அதிகம் பார்த்துள்ளேன். 90களில் மலேசியாவில் தொழிற்சாலைகள் அதிகரித்தன. வேலைக்கு ஆள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. எனவே குறைவான சம்பளத்தில் வேலை செய்ய நிறுவனங்கள் அந்நியத் தொழிலாளர்களை அதிக அளவில் தருவித்தது.
அப்படி வந்த வங்காளதேசிகள் அடிக்கடி யாராவது ஒருசில இந்தியர்களால் தாக்கப்படும் சம்பவங்கள் லூனாஸில் நடந்துகொண்டிருந்தன. அவர்களிடம் மிரட்டிப் பணம் பிடுங்குவது, காயம் விளைவிப்பதெல்லாம் அடிக்கடி காதில் விழும் செய்தியாகின. நான் அப்போது இடைநிலைப்பள்ளி மாணவன். என் சக நண்பர்கள் கூட தங்கள் இருப்பிடங்களில் வசித்த வங்காளதேசிகளைக் கும்பலாகச் சென்று மிரட்டி அவர்களின் பணத்தைத் திருட்டியதைக் கேட்க எரிச்சலாக இருக்கும். ஒரு மனிதன் இன்னொரு தேசத்திற்கு உழைக்க வந்தது அத்தனை பெரிய குற்றமா? அவன் வறுமையாக இருப்பதும் ஆதரவற்று இருப்பதும் அவனைச் சீண்டிப்பார்ப்பதற்கான வாய்ப்புகளை மனதில் ஏற்படுத்துவது எத்தனை அபத்தமானது. பின்நாட்களில் அது மலேசிய இந்தியர்களின் தாழ்வுணர்ச்சியின் வெளிபாடு என அறிந்துகொண்டேன்.
வங்காளதேசிகள் சில ஆண்டுகளில் மலேசியாவில் உறுதியான உழைப்புச் சக்திகளாக மாறியபோது இங்குள்ள பெண்களைக் காதலித்து திருமணம் செய்யவும் தொடங்கினர். தொழில்கள் தொடங்கினர். இதனால் மேலும் சிக்கல்கள் இறுக்கமாகின. ஜாதி பார்த்து தங்கள் வீட்டுப் பெண்களைத் திருமணம் செய்து வைக்காமல் பொத்தி பொத்தி வைத்திருந்த குடும்பங்களில் தீப்பிடித்து எரிந்தன. அதே ஜாதியைக் காரணம் காட்டி திருமணம் கைக்கூடாமல் தவிர்க்கப்பட்ட பெண்களுக்கும் காதலர்கள் கிடைத்தார்கள்.
இவையெல்லாம் புதிய புதிய சச்சரவுகளை உண்டாக்கின. ஒரு தொழிற்துறை வளர்ச்சியின் தாக்கம், தங்கள் வீட்டுப் பெண்கள் தங்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல் போகும் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது. தங்களிடம் இல்லாதது அப்படி என்ன வங்காளதேசிகளிடம் உள்ளது என இந்திய ஆண்கள் குழம்பித் திரிந்தனர். காதல்களைப் பிரிப்பதற்கான சண்டைகள் நடந்தது போலவே அந்நியத் தொழிலாளர்களால் கற்பமாக்கப்பட்டு ஏமாந்த பெண்களும் இருக்கவே செய்தனர்.
உண்மையில் 90களில் மலேசிய இந்தியர்கள் எதிர்க்கொண்ட சிக்கல்கள் மிக வினோதமானவை. ஆனால் நான் அறிந்து அவை புனைவுகளில் அதிகம் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. நாளிதழ்களில் வாசித்த சில கதைகளும் அந்நியத் தொழிலாளியை நம்பிப் போய் ஏமாறாதே எனும் தொணியில்தான் இருந்தது.
லூனாஸில் இருந்து வீடு மாறி கரங்கான் பகுதியில் வாழ்ந்த இரண்டு ஆண்டுகள் வங்காள தேசிகள் தாமான் வீடுகளில் அறைகளை பங்கிட்டு வாழும் முறைகளையும் மொத்தமாகச் சமைத்து பகிர்ந்துண்ணும் பாங்கையும் அறிந்திருந்தேன். அவர்களிடம் நெருங்கிப் பேசக்கூடிய வாய்ப்பும் கிடத்தது. அவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர வேண்டும் எனத் தோன்றியது.
மன்னன் மாத இதழுக்காக அந்நியத் தொழிலாளர்கள் சுகாதாரமற்ற இடங்களில் வாழும் வாழ்க்கையை நேரடியாகச் சென்று கண்டு அவற்றைக் கட்டுரைகளாகவும் எழுதத் தொடங்கினேன். முதலாளிகளால் கொத்தடிமைகள் போல நடத்தப்படும் அவர்களின் பாடுகள் மன்னனில் பிரசுரமாகின. உண்மையில் அந்தக் கட்டுரைகள் எல்லாம் என் பள்ளி வாழ்வில் நான் கண்ட அந்நியத் தொழிலாளர்களின் வேதனைகளைக் கண்டு சேமித்து வைத்திருந்த கண்ணீரும் அதை தடுக்க முடியாத குற்ற உணர்ச்சியின் வெளிபாடுகளும்தான்.
அந்தக் கட்டுரைகளெல்லாம் வங்காளதேசம் மற்றும் தமிழகத் தொழிலாளர்கள் சார்ந்தது. சிகண்டி நாவலுக்குக் காணொளி தயாரித்த இயக்குனர் பழனி பதிவு செய்து வைத்திருந்த இந்தோனேசியத் தொழிலாளர்களின் ரகசிய இருப்பிடங்களைப் பார்த்தபோது என் கற்பனைகள் மேலும் விரிந்தன. இந்தோனேசியத் தொழிலாளர்கள் அதிகம் செம்பனைத் தோட்டங்களில் வேலை செய்வதால் அவர்களின் குடியிருப்புகள் தோட்டங்களுக்குள் அமைந்திருந்தன. இவையன்றி நகரங்களில் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் இந்தோனேசியத் தொழிலாளர்களின் இருப்பிடங்கள் பரிதாபமானது. அதுபோல குடியிருப்புகளை, கட்டடங்களை கட்டும் தொழிலில் இருப்பவர்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று பார்த்தபோது கண்கலங்கி நிற்கவே முடிகின்றது.
நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களை உண்மையில் நாம் அறிந்து வைத்துள்ளோமா? அவர்களை முதலில் மனிதர்களாக நினைக்கிறோமா? அவர்கள் மேல் என்ன ஓர் இளக்காரம் செலுத்துகிறோம்?அவர்களின் ஒருநாள் வாழ்வு நம்மால் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாதது. அவர்களும் நம்மைப் போல தங்கள் நாட்டில் வாழ்ந்தவர்கள் என்பதை மறந்துவிடுகிறோம்.
நேபாள் தொழிலாளர்களை நான் சந்தித்தது மிகக் குறைவு. நான் அறிந்து ஈப்போவில் அவர்கள் எண்ணிக்கை அதிகம். நான் மலேசியாவில் சந்தித்த நேபாளிகளிடம் பெரும்பாலும் ஓர் ஒற்றுமை இருந்தது. அவர்களில் பெரும்பாலோர் மலைகிராமங்களில் வாழும் porters (எவரஸ்ட் உள்ளிட்ட மலைச் சிகரங்களில் ஏறுபவர்களின் சுமைகளை ஏந்திக்கொண்டு வழிகாட்டியாக உடன் வருபவர்கள்) அந்த வாய்ப்பு எப்போதாவது கிடைப்பதால் வறுமையில் கஷ்டப்பட்டனர். அப்படியான போர்ட்டர்ஸ்களின் வாழ்க்கையைத்தான் நேபாளில் நேரடியாகப் பார்க்க முடிந்தது. அதுவரை சொற்களாகக் கேட்ட அவர்களின் கஷ்டங்களை அனுபவமாக உணர முடிந்தது. குளிர்காலங்களில் வேலையின்றி வாடும் அவர்கள் சிரமங்களை உள்வாங்க முடிந்தது.
அந்நியத்தொழிலாளர்களின் வருகை குறித்த ஆய்வுக்கட்டுரையை வாசித்தபோது மலேசியாவில் தொழில் துறைகளில் வேலை செய்ய வந்த இரண்டாவது பெரிய இனம் நேபாளிகள் எனத் தெரியவந்தது. குறைந்தது 5-7 லட்சம் நேபாளிகள் மலேசியாவில் வாழ்வது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதுபோல நேபாளிகள் அதிகம் வேலைக்கு வரும் நாடும் மலேசியா எனத் தெரிந்தது. 90களில் இந்த புலப்பெயர்வு தொடங்கினாலும் ஜனவரி 2001 தொடங்கி மலேசிய அரசால் அதிகாரப்பூர்வமாக வேலைக்கு தருவிக்கப்படும் அந்நியத் தொழிலாளர்களாக நேபாளிகள் திகழ்ந்தனர்.
தாரா நாவல் அடிப்படையாகப் பேசும் சிக்கல் அந்நியத் தொழிலாளர்களின் வருகை குறித்ததுதான். ஆனால் அது புறவயமானது. நாவல் என்பது அதையொட்டி பல உள்விரிவுகளை உருவாக்கிக்கொள்வது.
நாவலில் 50% சதவிகிதம் வரை வந்த வங்காளதேசிகளுக்குப் பதிலாக நேபாளிகளின் வாழ்வை இணைக்கலாம் என முடிவெடுத்தபோது நாவல் அதற்காகவே காத்திருந்ததுபோல அத்தனை அற்புதமாய் இடம்விட்டுப் பொருந்தியது. அதுவரை இருந்த இடைவெளிகளும் சிக்கல்களும் முறையான பல்சக்கரத்தை உள்வாங்கிக்கொண்டதுபோல இலகுவாகச் சுழலத் தொடங்கின. நாவலில் எல்லா கேள்விகளுக்கும் அந்த மாற்றம் பொருத்தமான பதில்களைச் சொல்லிச் சென்றது.
தாரா உடன் வந்த நோக்கம் நாவலில் நான் செய்த அந்த மாற்றத்திற்குப் பிறகுதான் புலப்படத் தொடங்கியது. அதைச் செய்யும்வரை கனவுகளிலும் அவள் என்னை விடவில்லை.
தாரா கண்ணீரில் பிறந்தவர். அலோகிதர் உலக மக்களின் துன்பங்களைக் கண்டு வடித்தக் கண்ணீர் ஒரு குளமாகி, அதில் தாமரைகள் பூத்து, அதில் இருந்து பிறந்து வந்தவள்தான் தாரா. தாராவின் பணி ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்வது. உலகியலில் இருந்து ஞானத்திற்கு என பௌத்தர்கள் அதற்குப் பொருள் கொடுக்கின்றனர்.
எனக்கு வேறு தோன்றியது.
வறுமையில் சிரமப்படும் நேபாளிகளை மலேசியாவுக்கு அழைத்து வந்ததும் தாராவாக இருக்கலாம். அவள் கருணையின் வடிவானவள். அப்படி புலம்பெயரும் தன் தேசத்து பிள்ளைகளின் சிரமத்தைக் கண்டு அவள் சிந்தும் கண்ணீரில் ஒரு துளிதான் என்னை தாராவை எழுத வைத்ததோ என்னவோ. கண்ணீரில் பிறந்தவளின் கண்ணீரும் கருணையைத்தானே உருவாக்கும்.
6
கடைசிவரை எந்த ஓவியராலும் நான் வழங்கிய தாராவின் கண்களை வரைய முடியவில்லை. உண்மையில் அப்படி யாராலும் அவ்வளவு துல்லியமாக வரைய முடியாது என்பதைத் தாமதமாகவே அறிந்தேன். சுலவ் சாக்கியாவின் கனவில் வந்த கண்கள் அவை. ஒருவரின் கனவை இன்னொருவர் எப்படிக் காண்பது?
சுலவ் சாக்கியாவின் அனுமதி பெற்று அதன் அசல் ஓவியத்தின் கண்களையே அட்டைக்குப் பயன்படுத்தினேன். எனது முந்தைய இரண்டு நாவல்களின் அட்டைப்படங்களையும் என் கற்பனை படியே ஓவியரிடம் சொல்லி உருவாக்கினேன். அட்டை ஓவியம் நாவலின் ஒட்டுமொத்த சாரத்தைப் படிமமாகச் சொல்ல வேண்டும். வாசித்து முடித்து நாவலை மூடும்போது மீண்டும் கண்களில் தட்டுப்படுவது அட்டை ஓவியம்தான். வாசித்து முடித்தவர் புரிதலுக்கு அந்த அட்டை இணையாக ஒளி கொடுக்க வேண்டும். எனவே எனக்குத் திருப்தியாகும்வரை மாலதி கார்த்திகேசு அட்டையை உருவாக்கினார். ஓவியர் மணிவண்ணன் அட்டை எழுத்துகளை வடிவமைத்தார். என்னைத் திருப்தி படுத்துவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் வேறு வழியில்லை.
பேச்சியம்மன் என் பாலிய பருவம் முதலே என்னுடன் வந்தவள். என் குடும்ப வழிபாட்டில் உள்ளவள். எனவே முதல் நாவலில் அவள் தனக்கான இடத்தைத் தானே வந்து எடுத்துக்கொண்டாள். பகுச்சரா மாதா எனது இருபத்து ஐந்தாவது வயதில் எனக்கு அறிமுகமானாள். ஒரு சிறிய அறையில் அவளைத் தன்னந்தனியாகச் சென்று கண்டபோது பயந்துவிட்டேன். அவள் சாந்தமானவள்தான். இப்போது யோசிக்கும்போது அந்தச் சூழல் என்னை அச்சம் கொள்ள வைத்ததாகவே நினைத்துக்கொள்கிறேன். அந்த அச்சத்தில் இருந்துதான் சிகண்டி பிறந்தாள்.
தாரா நான் அறியாத தெய்வம். இன்னொரு நாட்டில் உள்ளவர்களின் அன்னை. அவள் தன் பிள்ளைகளுக்காக என்னைத் தேர்ந்தெடுத்தாள் என்றே நாவலை எழுதி முடித்தவுடன் நினைத்துக்கொண்டேன்.
அவளை எழுதியதால் அவளை எனக்கும் அன்னையாகவே எண்ணிக்கொள்கிறேன். எனவே இந்நாவலை எனது மகளுக்கே சமர்ப்பணம் செய்துள்ளேன். பெண் குழந்தைகள் எல்லா தந்தையர்களுக்கும் அன்னையைப் போன்றவள்தானே.