தாரா நாவலை வாசித்து முடித்ததும் எனக்குள் தோன்றிய முதல் கேள்வி நாவல் என்பது தருக்கத்தால் மட்டுமே ஆனதா என்பதுதான். அந்தக் கேள்வியை நாவலென்னும் கலை வடிவத்தில் தருக்கத்தின் பயன் என்னவாக இருக்கிறது என்பதாகவும் தொகுத்துக் கொள்ள முடியும்.
இந்தக் கேள்வி எழக் காரணமாக இருந்தது தாரா நாவலில் அமைந்திருந்த தருக்கத்தை மீறி நாவல் தொடும் கலை தரக்கூடிய உச்சவுணர்வைப் பற்றிய சித்திரிப்புகள்தான். இந்தக் கேள்வியையும் தாரா நாவலை வைத்தே அணுக முயல்கிறேன். தாரா நாவல் ஒரு சமூகத்தின் கூட்டு மனச்சான்றாக விளங்கும் நீதியுணர்வு பாழ்படுவதையும் பின்னர் கலையும் ஆன்மத்தூய்மையும் ஒன்று சேர்ந்து அதை மீட்டெடுக்கும் பயணத்தையே கதையோட்டமாகக் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் ம.நவீனின் முந்தைய இரு நாவல்களான பேய்ச்சியும் சிகண்டியும் தனிமனிதனின் அக இருளையும் அதனால் ஏற்படும் பிறழ்வுகளைத் தானே சரிசெய்து கொள்ளும் புடவியின் நெறியைப் பேசியது. அந்தப் பிறழ்வுகளும் நெறியுமே ஒன்றுக்கொன்று பிணைந்து மாறா நீதியொன்று நிலைகொள்வதன் சித்திரத்தை அவைத் தந்தன.
இந்த நாவலில் சமூகமே நீதியுணர்வு தொலைந்து தேங்கியிருக்கும் சூழலில் நாவல் தொடங்குகிறது. தமிழ்நாட்டிலிருந்து மலாயாவுக்குப் புலம்பெயர்ந்த ஒரே சாதியைச் சேர்ந்த மக்கள் பகாங்கில் இருக்கும் தோட்டமொன்றில் குடியமர்த்தப்படுகின்றனர். அந்தச் சூழலின் அழுத்தத்திலிருந்து விடுபட காட்டுப்பகுதிக்குத் தப்பிச் செல்கின்றனர். முதலில், பழங்குடிகளால் எதிர்க்கப்படுபவர்கள் பின்னர் அவர்களுடன் காணும் இணக்கத்தால் காட்டில் தனிச்சமூகமாக வாழத் தொடங்குகின்றனர். அந்தப் பழங்குடித் தலைவரின் பருவமெய்திய மகளைப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி நீதி கேட்கச் சென்றவர்களையும் அழிக்கின்றனர். அச்சமூகத்தின் அறப்பிறழ்வு அங்கிருந்தே தொடங்குகிறது. அந்தப் பிறழ்வை நிகர்செய்ய ஊழிக்காலமென பெருமழை பெய்து குடியினரைக் காவு வாங்குகிறது. அங்கிருந்து தங்கள் குலத்தெய்வமான கந்தார அம்மனின் மண் சிலையிலிருந்து பிடி மண்ணை எடுத்து பெருவெள்ளத்திலிருந்து சிலர் மட்டும் நல்லக்கண்ணு என்பவரின் வழிகாட்டலால் வடக்கு நோக்கிப் பெயர்கிறது. அந்த அறப்பிறழ்வு நிகர் செய்யப்படும் வரையில் தன்னை நிறுவி வணங்குவதை அம்மன் தடை செய்கிறாள்.
வடக்கு நோக்கிப் பெயர்ந்த குடியினரின் வழியினர் சுங்கை கம்பம் எனும் குடியிருப்பை நிறுவி காய்கறி விவசாயம் செய்து வாழ்கின்றனர். வியாபாரம், குடும்ப உறவு என ஆழமான சாதியப்பற்றால் இறுகிப் போயிருக்கின்றனர். முந்தைய தலைமுறையினருக்கு நேர்ந்த கொடும் காலத்தின் சான்றாக இருக்கும் முத்தையா பாட்டன் தொடரும் அநீதியின் முன்னால் ஊமையாய் இருக்கின்றார். 1990 களின் முற்பகுதியில் நடைபெறும் நாவலின் பின்னணியில் சுங்கை கம்பத்துக்கு எதிர்புறம் தெலுக் கம்பம் எனப்படும் நேபாளத் தொழிலாளர்களின் கம்பமும் உருவாகியிருக்கிறது.
அரசியல், சமூகக் காரணங்களுக்காக அம்மனின் வாக்கையும் மீறி கந்தார அம்மனுக்குக் கோவிலும் அமைகிறது. அந்தக் கோவிலுக்கு நிலம் தந்த சங்கரனின் மனைவி அஞ்சலை கோவிலைப் பராமரித்து வருகிறாள். வேற்றுச் சாதியைச் சேர்ந்தவள் என்பதாலே கம்பத்தாரால் ஒதுக்கப்படுகின்ற அஞ்சலையின் மகளும் வேற்றுச் சாதியைச் சேர்ந்தவனுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வதால் முற்றிலும் கோவிலுடன் ஒதுக்கி வைக்கப்படுகிறாள். மகள் வழிப்பேத்தியான பத்து வயது மீனாட்சி எனப்படும் கிச்சியை மட்டும் தன்னுடன் சேர்த்துக் கொள்ள அஞ்சலை இசைகிறாள். நாவலின் உள்ளடுக்கு என்பது குழந்தைமையும் களங்கமின்மையும் கொண்ட கிச்சியிலிருந்தே நகர்கிறது.
நேபாளத்தொழிலாளர்களின் மீதான வன்மத்தால் சுங்கை கம்பத்தைச் சேர்ந்த குகன் உட்பட இன்னும் பல இளைஞர்கள் அவர்களைச் சீண்டத்தொடங்குகிறார்கள். அந்தச் சீண்டல் மெல்ல வன்முறையான மோதலாக மாறுகிறது. அந்த மோதலின் பின்னணியில் நேபாளத்தொழிலாளர்களின் தலைவன் சனில் மீண்டும் மீண்டும் மன்னித்தலையும் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வது எனப் புத்த சமயத்தின் போதனைகளையே தன் குடியினருக்குப் போதிக்கின்றான். அவனின் போதனைகள் அத்தனையும் உதாசீனம் செய்யப்படும் அளவு வன்முறையுடன் சுங்கை கம்பத்து இளைஞர்கள் நடந்து கொள்கின்றனர். சனிலின் மகளான அந்தாரா நேபாளில் உயர்சாதியினர் மட்டுமே கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகின்ற கலையாகக் கருதப்படும் ஷர்யா நிர்த்யா நடனத்தைத் தானே கற்றுக்கொள்கிறாள். அந்நடனத்தை ஆடுபவர்கள் தங்களுக்குள் உணரும் புத்தச்சமயத்தின் பெண் அவலோகிதேஸ்வரரான தாரா தேவியின் இருப்பை அந்தாராவும் தனக்குள் உணர்கிறாள். அவளுக்கும் கிச்சிக்கும் நட்பு ஏற்படுகிறது. வன்முறையால் இரு கம்பமுமே பிளவுபட்டு நிற்கும் சூழலில் தாராவை வருவிக்க தேவைப்படும் நீலத்தாமரையை எடுக்க அந்தாரா செல்கிறாள். அந்தாராவைச் சந்திக்க ரகசியமாகச் செல்லும் கிச்சியின் பயணத்தின் ஊடே மீள நிகழ்கிற பிறழ்வொன்றின் முன், அறம் நிலைநாட்டப்படுவதுடன் நாவல் நிறைவுறுகிறது.
அறம் அல்லது தொலைந்துபோன நீதியுணர்வை ஒரு சமூகம் மீண்டும் கண்டு கொள்கிறதென்பதே நாவலின் அடிநாதமாக இருக்கிறது. அந்தப் புள்ளியைச் சென்றடைய நாவல் தருக்கத்தைத் தாண்டிய அனுபவங்களை முன்வைக்கிறது.
சனில் திரும்பத் திரும்ப தனக்கும் தன் குடியினருக்கும் இடர் தருகிறவர்களை மன்னிக்கிறார். அப்படியே அவருடைய மகளான அந்தராவும் கலை ரீதியாகத் தன் உடலில் ஆன்மீக இருப்பொன்றை உணர்கின்றாள். நேபாளத்தில் வஜ்ரசார்யா உயர்சாதியினருக்கு மட்டுமே கற்பிக்கப்படும் ஷர்யா நிர்தியா எனப்படும் நடனத்தை ஆடக் கற்கத் தொடங்குவதிலிருந்தே அந்தாராவின் மாற்றமும் நிகழ்கிறது. அதனைத் தன் உடலில் இருத்தி வைக்க மன்னிக்கக் கற்றுக் கொள்கிறாள். அப்பாவின் புத்தச்சமயப் போதனைகளும் கலை அவளுக்குள் உணரச் செய்கின்ற எடையற்றத்தன்மையும் சேர்ந்தே அவளுக்கான அறத்தைக் கற்பிக்கிறது. அந்தப் பேரறமே தனக்கு நேர்ந்த அத்தனை கொடுமைகளையும் தாண்டி பாதி உடல் சிதைந்த கோலத்திலும் நீலத்தாமரைத் தாங்கி கம்பத்து மக்களை அந்தாரா மன்னிக்கச் செய்கிறது. அந்தரா ஷர்யா நிர்த்யா நடனத்தின் அசைவுகளைக் கற்றுக் கொள்வதோடு அதன் வாயிலாகத் தன்னைத் தாராவாக அடையாளம் காண்கிறாள். கலை செலுத்தக்கூடிய உச்சமான ஆன்மீக அனுபவமொன்றைப் பெறுகிறாள். இந்த உணர்வே, மன்னித்தலுக்கும் அரவணைப்பதற்கும் கற்றுத்தருகிறது.
தாரா நாவலின் முதன்மை பலமாக நான் கருதுவது அந்த ஆன்மீக அனுபவத்தை அந்தரா அடைவதைச் சிறப்பாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதே ஆகும். அறமென்பது சமூகத்தின் உயர் விழுமியம். அறத்தை எல்லா காலத்தில் அடைவதற்கு முயலும் லட்சியமாகவே கருதவேண்டியிருக்கிறது. பிறழ்வுகளும் தடுமாற்றங்களும் கொண்ட மனித இயல்பில் அறமென்பதை அடைய முயலும் உயர் லட்சியமாகவே இலக்கியங்களும் முன்வைக்கின்றன. அத்தகைய உயர் லட்சியத்தைத் தருக்கத்தின் துணை கொண்டு மட்டும் சொல்லி விடமுடிவதில்லை. அதற்காகவே, தருக்கத்தைத் தாண்டிய ஆன்மீக அனுபவமொன்றை மொழியில் குறியீடாக்கி நாவல் அளிப்பதாகவே புரிந்து கொள்கிறேன். அந்தத் தளத்தை நாவல் சொல்லும் சமூகச்சித்திரம், மனித உளவியல் ஆகியவற்றைக் கொண்டு கற்பனையால் விரிவாக்கிப் பெறலாம்.
இந்த நாவலை நகர்த்தும் கிச்சி எனும் மீனாட்சியின் வாயிலாக சிறுவர்களின் புறவுலகமும் குழந்தைமைக்கே உரிய களங்கமின்மையும் நாவலில் வெளிப்படுகிறது. அறம் திகழ்ந்த பின் அந்தரா அளிக்கும் நீலத்தாமரையை கிச்சியே ஓடிச்சென்று கந்தார அம்மனின் கைகளில் பொருத்துகிறாள். கலை அளிக்கும் உச்ச ஆன்மீக அனுபவம் களங்கமின்மையுடன் சேர்ந்து நீதியுணர்வை மீட்டெடுக்கும் தருணமாக அதைக் காண முடிகிறது. அஞ்சலைக்குப் பயந்தவளாக கிச்சி இருந்தாலும் சிறுவர்களுக்கே உரிய துருதுருப்புடன் கம்பத்தைச் சுற்றி வருகிறாள். அவளின் சித்திரிப்புகளின் வாயிலாக 90களின் காலக்கட்டத்துக் குழந்தைகளின் அகவுலகத்தை நிறைத்திருந்த விளையாட்டுகள், படங்கள், உணவுகள் ஒவ்வொன்றும் காட்டப்படுகிறது.
விவசாய நிலமொன்றை தாரா நாவல் களமாகக் கொண்டிருக்கிறது. புடலங்காய் நேராக வளர்வதற்காகப் பிஞ்சிலே கல் கட்டப்படுகிறது. தோட்டங்களைச் சுற்றிலும் பறக்கும் உழவாளன் குருவி, நத்தைகள், பூச்சிகள் எனக் காய்கறித் தோட்டமொன்றின் நுண்விவரணைகள் நாவலில் விரவிக் கிடக்கின்றன. நவீன் நாவலில் காட்டும் சமூகம் என்பது தோட்டத்தைப் போலவே தனக்குள் இறுக்கமான கட்டமைப்பு ஒன்றைப் பேணுகிறது. சாதி சார்ந்தக் கட்டமைப்புக்குள் அந்நியர்களை அனுமதிக்க மறுக்கிறது. ஒருவகையில் அச்சத்தை வென்று பாதுகாப்புணர்வைக் கொள்வதற்காகக் கடைபிடிக்கும் வழிமுறையாகக் கூட அந்த இறுக்கத்தைக் குறிப்பிடலாம். வேற்றுச் சாதியைச் சேர்ந்த அஞ்சலையை எல்லாவகையிலும் ஒதுக்குகிறது. கம்பத்து இளைஞர்கள் நேபாளத்தொழிலாளர்களின் மீது காட்டும் வன்முறையும் எதிர்ப்பும் கூட அதன் வடிவமே. //பலவீனமானவர்கள் அச்சத்தை வன்மமாகத்தான் காட்டுவார்கள்// எனச் சனில் அதைக் குறிப்பிடுகிறார்.
1990களில் மலேசியாவில் நிகழத்தொடங்கிய அந்நியத்தொழிலாளர்களின் பெருக்கத்தால் நடந்த சமூகமாற்றங்களும் நாவலில் பேசப்பட்டிருக்கிறது. சம்பளம் குறைவான தொழில்களைப் புரிந்து வந்த இந்தியர்களின் இடத்தை அந்நியத்தொழிலாளர்கள் நிரப்பத் தொடங்கியிருக்கின்றனர். அந்நியத்தொழிலாளர்கள் மேல் பிழைப்புரிதல் ஏற்பட இக்காரணமே போதுமானதாக இருந்திருக்கும். அத்துடன் இந்தியர்கள் மலேசியாவில் உணரும் தாழ்வுணர்வும் சேர்ந்து அந்நியநாட்டுத் தொழிலாளர்கள் மீது வன்முறையாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டதையும் நாவல் காட்டுகிறது.
பெரியார் சீடராகச் சித்திரிக்கப்படும் சங்கரன் கோவில் கட்டும் போது தானே முன்வந்து நிலத்தைத் தருகிறார். பகுத்தறிவுச் சிந்தனைக்கும் சமய நம்பிக்கைக்குமான முரண் சிந்தனை கொண்டவராக சங்கரன் தெரிகிறார். ஆனால், வேற்றுச்சாதியைச் சேர்ந்த மனைவி மீது உள்ளூர தன் கம்பத்து மக்களுக்கு இருக்கும் விலக்கத்தைக் குறைக்கவே அதனைப் பாதுகாப்பு ஏற்பாடாகச் செய்கிறார். கம்பத்து மக்களுக்கு உதவிகளைச் செய்வதன் மூலம் தன்னை நல்லவனாகக் காட்டிக் கொள்ளும் மருது தன் அரசியல் கனவுகளுக்காக அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார். இப்படியாக மனித உளவியல் செயற்படும் முரண் புள்ளிகளை நாவல் காட்டுகிறது. சிறையிலிருந்து திரும்பியதும் தன் அடாவடியான நடத்தையை முற்றிலும் கைவிட்டுச் சுமுகமான வாழ்வைக் குகன் தொடர்கிறான். ஆனால், அவன் சிறை செல்வதற்கு முன்னர் அவனை அவமானப்படுத்திய ராக்காயி அவன் முன் பணிந்து தனக்காக ஓடிப்போன மகளைக் காப்பாற்றித் தருமாறு கேட்கும் போது அவனுக்குள் ஒடுங்கியிருந்த வன்மம் வெளிப்படுகிறது. மனித மனத்தில் கரந்திருக்கும் வன்மம் எனும் நஞ்சு வெளிப்படும் தருணம் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. தன் மகன் முத்து குகனுடன் சேர்ந்து கெட்டுவிடுவான் என்றெண்ணி ராக்காயி குகனைத் துரத்தியடிக்கிறாள். அவள் மகன் முத்து ஒவ்வொரு முறையும் தவறு செய்துவிட்டு வரும் போதும், எல்லா வகையிலும் அவனைக் காப்பதற்காக எதையும் நியாயப்படுத்தத் துணிகிறாள். கம்பத்து மக்களின் சாதியுணர்வும் அறம் பிழைத்தலையும் கூட தன் மகனைக் காப்பாற்றுவதற்கான கேடயமாக மாற்றவும் துணிகிறாள். எல்லாவகையிலும் பாழ்பட்டுப் போயிருக்கின்ற அந்த மனம்தான், அந்தராவுக்கு நேர்ந்திருக்கின்ற கொடுமையைக் கண்டவுடன் தன் மகனையே கொல்லத் துணியவும் செய்கிறது. இப்படியாக மனித உளவியல் பயணிக்கும் முரணியக்கம் நாவலில் வெளிப்படுகிறது.
அறவுணர்வு, கலை ஆகியவற்றையே வார்த்தெடுத்து தெய்வங்களாக உயர் விழுமியொன்றுடன் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்நாவலில் கலை தரும் ஆன்மீக எழுச்சியனுபவத்தைத் தாராவின் தோற்றக்கதையும் ஷர்யா நிர்த்யா நடனமும் சேர்ந்து தருகின்றன. ஆனால், காந்தார அம்மனை அவ்வாறு உருவகப்படுத்தும் கதைகளோ சித்திரமோ நாவலில் போதுமானதாக இல்லை. கந்தாராம்மனின் தோற்றம் விவரிக்கப்பட்டிருந்த போதிலும் அவளைக் குலத்தெய்வமாக அச்சமூகம் வரித்துக் கொண்டதற்குக் காரணங்கள் இல்லை. தாராவைப் போலவே நீலமலர் ஏந்தி கோர ரூபிணியாக இருப்பவள் என இரண்டுமே ஒன்றின் இருவேறு வடிவங்கள் என எண்ணுவதற்கும் நாவலில் இடமிருக்கிறது. இருந்தப்போதிலும், கந்தாரம்மனைப் பற்றிய சித்திரமே அச்சமூகத்தை இன்னும் நெருங்க துணையாக இருந்திருக்கும். அதனையே நேபாளத்தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றிய சித்திரிப்புக்கும் சேர்த்தே சொல்லலாம். மலேசியாவில் பணிபுரிய வந்த நேபாளத்தொழிலாளர்களின் அன்றாடத்தை இன்னுமே துலக்கப்படுத்தியிருக்கலாம். வேலை, உணவென்றில்லாமல் ஓய்ந்த பொழுதுகள் அவர்களுக்கு என்னவாக இருந்தது என்பதைக் காட்டியிருக்கலாம்.
தருக்கத்தை மட்டுமே அளவீடாகக் கொண்டு தாரா நாவலை வாசிக்கும் போது அதன் உச்சத்தருணங்கள் பிடிபடாமல் போய்விடக்கூடும். அந்நாவல் கலை சார்ந்தும் ஆன்மீகத்தளத்திலும் அளிக்கும் அனுபவத்தையும் கற்பனையால் கண்டறிவதே அதனை வாசிப்பதற்கான வழியாக இருக்கும்.