சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 13

காலையிலேயே மேற்கு ஏரிக்குப் புறப்பட்டோம். இதைச் சீனாவின் அழகிய இதயம் எனக் குறிப்பிடுவதால் இதயத்தைக் காண ஆவலாக இருந்தது. இயற்கை அழகு, கலாசார முக்கியத்துவம், வரலாற்று முக்கியத்துவம் ஆகியவற்றால் கவனம் பெற்ற ஏரி இது.

அஸ்ரின் அங்குள்ள வாடகை வண்டி பிடிக்கும் செயலியைத் தறவிரக்கம் செய்திருந்ததால் காலை 9 மணிக்கெல்லாம் அவ்விடத்தை அடைந்தோம். காலைக் காற்று புத்துணர்ச்சியைக் கொடுத்தது.

ஏரியைச் சுற்றி மலைகள். மலைகள் ஏரியில் பிரதிபலித்தன. மூங்கில் ரகத்தைச் சேர்ந்த ஒருவித மரம் ஏரியைச் சுற்றி நடப்பட்டிருந்தன. அவற்றின் இலைகள் சரசரவென மழைத்துளிகள்போல பெய்துகொண்டே இருந்தன. தரையில் விழாத பசுமழை. ஆங்காங்கே படகுகள். அவை ஒரு வீடுபோல வடிவமைக்கப்பட்டு மிதக்கும் வீடுகளாகக் காட்சியளித்தன.  ஏரியைச் சுற்றி நடந்தோம்.

பசுமழை

கிட்டத்தட்ட மேற்கு ஏரியை அரைவட்டம் சுற்றி வந்தபின்னர் யு ஃபே (Yue Fei) கோயில் கண்ணில்பட்டது. தெற்கு சாங் வம்சத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தளபதி யு ஃபேவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் அது. அவரது நினைவுகள் இராணுவச் சாதனைகளின் ஓவியங்களும் சிற்பங்களுமாகக் காட்சியளித்தன. கோயிலின் பழந்தன்மை ஏதோ முற்காலத்திற்குள் நுழைந்துவிட்டதைப் போன்ற உணர்வை உண்டாக்கியது.

இவ்விடங்களை என்னைவிட அஸ்ரின் மிகவும் ரசித்துப் பார்த்தார். கட்டடக்கலையில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. அதனை எப்படிப் புகைப்படத்துக்குள் அடக்க வேண்டுமென்ற திறனும் இருந்தது.

அவ்விடத்தில் இருந்து அஸ்ரின் கூறிய Hefang வீதிக்கு வாடகை வண்டியைப் போட்டபோது, அது எங்களை ஏதோ மூலைக்கு நடந்து வரச்சொல்ல 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த அவ்விடத்திற்கு நடந்தே சென்றோம்.

dumpling

Hefang வீதியை மலேசியாவின் பெட்டாலிங் சாலையோடு ஒப்பிடலாம். ஆனால் பெட்டாலிங் சாலையில் உள்ளதுபோல ரசனையற்ற ஒரே மாதிரியான போலிப் பொருட்களை அங்கே அடுக்கி வைத்து விற்கவில்லை. ஒவ்வொன்றிலும் கலைப் பொருட்கள். நன்றாக ஆராய்ந்ததில் அங்கு எப்படிப் பொருள் வாங்க வேண்டுமென்ற உபாயம் கிடைத்தது. அதாவது சில கடைகளில் விலை குறைப்பே இல்லை என அறிவிப்புப் போட்டிருப்பார்கள். அந்தக் கடையில் நாம் வாங்க விரும்பும் பொருளின் விலையைப் பார்த்து வைத்துக்கொள்ள வேண்டியதுதான். பின்னர், சாலை ஓரமாக உள்ள சிறிய அங்காடிகளில் அதே பொருள் மூன்று மடங்கு அதிகரித்து விற்கும். இப்போது நாம் செய்ய வேண்டியது முதலில் குறிப்பெடுத்துக்கொண்ட பொருளின் விலையைவிட மலிவாகக் கேட்டு பேரம் பேசுவதுதான். முதலில் முடியவே முடியாது என பிடிவாதம் பிடித்து, கடைசியில் நாம் கேட்ட விலைக்கு இறங்கி வருவார்கள். பேரம் பேசுவதில் திறன் இல்லாதவர்கள் விலை குறைப்பில்லாத கடையில் கேட்ட தொகையைக் கொடுத்து பொருளை வாங்க வேண்டியதுதான். கிட்டத்தட்ட நியாயமான விலையில் கிடைக்கும்.

அந்த வீதியிலேயே பலவிதமான உணவுகளை விற்றார்கள். அஸ்ரின் அன்போடு எனக்கு வெட்டுக்கிளி பொரியல் வாங்கிக்கொடுக்க நானும் தட்டாமல் சாப்பிட்டேன். வெட்டுக்கிளியைச் சாப்பிடுவது சீனாவில் பண்டைய காலம் முதல் இருந்துவரும் பழக்கம்தான். உணவுப் பற்றாக்குறை ஏற்படும்போது உயிர்வாழ உதவும் வழியாக அது இருந்தது. அதைத் தவிர டம்ப்ளிங் (dumpling), பன்றி சாத்தே எனச் சாப்பிட்டபின் மீண்டும் வீதி உலா வந்து சோர்வடைந்து போனோம். உண்ட களைப்புத் தீர மீண்டும் உண்டோம்.

மிதக்கும் வீடு

அஸ்ரின் மறுநாள் ஷங்காய் (Shanghai) செல்வதாக இருந்ததால் எவ்வளவு சுற்றினாலும் மிகக் குறைவான பொருட்களையே வாங்கினார். நான் தேவையான அளவுக்கு சில அழகிய கலைப்பொருட்களை வாங்கிக்கொண்டேன். விடுதிக்குத் திரும்பியபின் நாங்கள் எடுத்துவந்த நூல்களைப் பகிர்ந்துகொண்டோம்.

சாய் சியாஙுடன்

காலையிலேயே எனக்கும் முனைவர் சாய் சியாங் லிங்கிற்கும் ஒரே விமானம். அதிகாலையில் புறப்பட வேண்டும் என்பதால் இரவு முழுவதும் தூங்கவில்லை. பொருட்களை அடுக்கி வைப்பதில் பாதி நேரம் போனது. அலாரம் அடித்தபோது விடுக்கென எழுத்து குளித்துவிட்டுப் புறப்பட்டேன். அதிகாலையில் சாய் சியாங் பளிச்செனத் தெரிந்தார். மாறாத சிரிப்பு.

அஸ்ரினிடம் இருவரும் விடைபெற்றோம். விமானம் ஏறினோம். இடைவிடாமல் பேசிக்கொண்டே வந்தோம். சாய் சியாங்கின் பூர்விகம் சரவாக். எனவே நான் செல்லவிருந்த சரவாக் பயணம் குறித்து பேசிக்கொண்டு வந்தேன். மலேசியச் சீன இலக்கியச் சூழல், தமிழ் இலக்கியச் சூழல் குறித்தெல்லாம் பகிர்ந்துகொண்டோம். இனிய பெண் சாய் சியாங். வானின் மேகங்களுக்கிடையே இனிய சிரிப்பைக் கொண்ட பெண்ணுடன் உரையாடுவது எத்தனை மகிழ்ச்சியானது.

முற்றும்

(Visited 51 times, 1 visits today)