எழுத்தாளரின் மண்டை ஓடி சிறுகதையின் தொடர்ச்சி என்று எண்ணி வாசிப்பைத் தொடர்ந்தேன். ஆனால், ஒரு சிறுகதையை விரிவாக்கம் செய்து ஒரு நாவலாக உருவாக்கிய எழுத்தாளரின் அபாரமான செயல் வியக்கதக்கது. வாசிக்கும் போது நாவல் வேறுவொரு பரிணாமத்தை நோக்கி செல்வதை உணர்ந்தேன்.
இந்த நாவலில் சிறுவனாகத் திகழ்ந்து இளைஞனாக மாற்றம் காணும் தீபனின் உளவியலையும் அவனுள் ஏற்படும் உணர்வையும் பல அடுக்குகளாகப் பிரித்து விவரிக்கிறது.
சிறுவனாக இருந்த காலக் கட்டத்தில் தன் பெற்றோர் அரவணைப்பில் செயல்பட்டு வந்த தீபனின் போக்கு வயது மாற்றம் காணும் போது அவனுக்குள் ஏற்படும் மாற்றங்களால் வாழ்க்கை தடம் மாறிய காட்சியைக் காண இயல்கிறது. சிறுவனாக இருந்த போது தன் தாயின் அரவணைப்பில் திளைக்கிறான். அவனுடைய வாழ்க்கை பிராணியுடனும் செடிகளுடனும் பின்னப்பட்டு இடைநிலைப் பள்ளியைத் தொடருகிறான். அவனுடைய அனைத்துப் போக்கும் நாளடைவில் மாற்றம் காண்பதை நாவலை வாசிக்கும் போதே அறியப்படுகிறது. இடைநிலைப் பள்ளியில் படிக்கும் போது கனகாவின் பிரிவுக்குப் பின் அவனுடைய ஆழ்மனத்தில் இருக்கும் இருளடைந்த பகுதி வெளிபடுகிறது.
மாறனின் நட்பின் வழி அவனுள் உள்ள இச்சை பல தருணங்களில் வெளிகொணரப்படுகிறது. இந்த விடலை பருவத்தில் தீபனுள்ள ஏற்படும் மாற்றங்களை எழுத்தாளர் பல படிமங்களாக நாவலில் ஆங்காங்கே சித்தரித்துள்ளார். தீபன் நட்பில் முழ்கும் போது தாயின் அன்பிலிருந்து விடுபட்டு வாழ்க்கையில் பல தீய செயல்களைத் துணிச்சலுடன் செய்கிறான். பணத்தைச் சம்பாதிக்க திருடவும் முற்படுகிறான். மேலும், தான் தனக்கு என்ற எண்ணத்தில் அறத்திற்கு மீறிய செயல்களில் ஈடுபடும் போது அதில் கிடைக்கும் இன்பத்தில் ஆழ்ந்து போகிறான். அந்த இச்சையினால் துச்சமான செயல்களைச் செய்ய முனைகிறான். இதற்குச் சான்றாக, அன்பாக அரவணைத்த சாரதா அக்காவைக் குளியல் அறையில் எட்டி பார்க்க முற்பட்டு போது தாயிக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறான்.
மேலும், அவன் சிறுவயதிலிருந்து பல அவமானங்களை எதிர்நோக்குகிறான். அதனை தாயிடம் கூறி ஆறுதல் மட்டும் பெற்றுக்கொள்கிறான். இவை அனைத்தும் ஒரு காலக்கட்டத்தில் எரிமலையாய் வெடிக்கிறது. அவனுக்கு ஏற்படும் அவமானங்களைப் பழிவாங்குவதன் வழி அதனைக் களைய முற்படுகிறான்.
இந்நாவலின் கதாபாத்திரங்களான விச்சு, சாராத அக்கள், மாமா, கனகா அவர்களின் அன்பை உணரும் தருணமாக அவனின் வாழ்வில் இருள் அகன்று உள்ளத்தில் வெளிச்சம் உண்டாகிறது. தீபாவளி அன்று வீட்டில் ஒளியேற்றும் வகையில் தீபன் தன் தாயின் மடியில் அன்பெனும் ஒளியை மீண்டும் சிறுவனாக மாறி பெற்றுக்கொள்கிறான். பேரன்னையின் அன்பில் திளைக்கிறான்.

