நினைவின் மழை

மீண்டும் ஓர் மழைகாலம். இந்த முறை வேறொரு சாளரம். ஆண்டுக்கொருமுறை சாளரத்தின் வழியாகத் தெரியும் காட்சி மட்டும் மாறிக் கொண்டே இருக்கிறது. எங்கள் கல்லூரி அமைந்திருக்கும் கிண்டி சென்னையின் மத்தியப்பகுதியில் இருக்கும் சிறிய காடு என்றுதான் சொல்ல வேண்டும். கருமையான பெரிய தண்டுகளுடனான மரங்கள் செறிந்து நிறைந்த இடம். எப்போதும் இலைகள் விழுந்து செறிந்து மட்கிய ஒரு மண் அடுக்கிற்கு மேல் மஞ்சளும் பச்சையும் கருப்பும் கலந்த இலை அடுக்கு அமைந்திருக்கும். அந்த மட்கிய இலைகளின் வாசம் அறையை நிறைத்தது. பெருமழையின் சத்தம் அதிகமாக இருந்தும் அடர்த்தியான மரங்களுக்கு இடையில் பெய்வதால் அது மர விதானத்தின் இடைவெளிகளுக்கு இடையில் சொட்டும் சத்தம் மட்டும் பலமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. சொட்டுகளுக்கு இடையிலான அதிர்வெண் குறைந்து மழை அதிகரிக்கும் விதத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.

மழை எப்போதும் என்னில் தரக்கூடிய மென்சோகம் ஒன்று உண்டு. அதை உணர்ந்தவாறு மழையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அறையில் யாரும் இல்லை என்பதால் சற்றே வந்த கண்ணீரை வழியும்படி இயல்பாக விட்டுவிட்டேன். பொதுவாக எனக்கு அழுவதற்கு நிறைய காரணங்கள் இருந்ததன. அதில் ஒன்றை நினைத்து இப்போது அழுதேன்.

இது தென்மேற்கு பருவமழை என்பதால் அறையில் புழுக்கம் இருந்தது. முன்பு மழை நாட்களின்போது அதை தனித்த வேறொரு காலநிலையாக உணர்ந்ததுண்டு. இந்தியாவில் வெப்பம், குளிர் ஆகிய இரு காலநிலைகள் மட்டுமே உள்ளன என்று புத்தகத்தில் படித்தபோது நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் உணர ஆரம்பித்தபின் சரியென்று தோன்ற ஆரம்பித்தது. மழைகாலத்திலும் உணர்வது வெப்பம் அல்லது குளிர் மட்டுமே. உடல் புழுக்கம் அடைந்ததால் டிஷர்ட்டைக் கழற்றிவிட்டு சிம்மிஸோடு உட்கார்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். இரு புள்ளி மான்கள் ஜன்னலுக்கு அருகிலிருந்த  மரத்தை ஒட்டி வந்தன. ஒரு மானுக்கு அழகான நெளிந்த கொம்புகள் இருந்தன. இன்னொன்றுக்கு கொம்புகள் இல்லை. ஒன்று மற்றொன்றை மெல்ல முகர்ந்து கொண்டது. அதன் காதுகள் சிலிர்த்து அடித்துக் கொண்டன. திடீரென இரண்டு மான்களும் ஒரே நேரத்தில் என்னைப் பார்த்தபோது திகைப்பாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. உறைந்துபோய் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவை மீண்டும் ஒன்றையொன்று முகர்ந்து கொண்டே நகர ஆரம்பித்தபோது இறுக்கம் குறைந்து இலகுவாகி மேசையில் தலை வைத்துப் படுத்து கண்களை மூடினேன். ஒரு சம்பவம் நினைவை முட்டி நின்றது.

***

நான் ஆறாவது படித்துக் கொண்டிருந்தபோது நடந்த சம்பவம் அது. அன்றும் அழுது கொண்டிருந்தேன். ஆனால் மழைகாலம் இல்லை. காஃபி மரத்தடி நிழலில் தனியாக அமர்ந்திருந்தேன். லேசான குளிர். நான் அழுது கொண்டிருப்பதை யாராவது பார்த்திருந்தால் மிக நிச்சயமாக வீட்டு ஞாபகத்தால் அழுது கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்ளவே வாய்ப்பு அதிகம். ஏனெனில் அது மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை. எங்கள் காண்வெண்ட் விடுதியிலுள்ளவர்களைச் சந்திக்க அவரவர் பெற்றோர் வரும் நாள். அன்று மட்டும் விடுதியிலுள்ள பிள்ளைகளுக்கு அழகு கூடுவதைப் பார்த்திருக்கிறேன். பெற்றோர் வந்து பார்த்துச் சென்ற பிள்ளைகளைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் அவர்கள் தலையில் மிக நிச்சயமாக தழையத்தழைய மல்லிகைப் பூ இருக்கும். விடுதியே கறிக்குழம்பு வாசனையைச் சூடி வீட்டின் விழாக்காலத்தை நினைவுபடுத்தும்.

நாங்கள் பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் ‘பிக் கிளீனிங் டே’ என்று சொல்லக்கூடிய பெரிய தடபுடலான சுத்தீகரிப்புப் பணியில் அதிகாலையிலிருந்தே ஈடுபட்டிருப்போம். அதை முடித்துவிட்டு வரிசையாக சர்ச்சுக்கு சென்று வந்து காலை உணவு சாப்பிட்டுவிட்டு எங்கள் பள்ளியில் இருக்கும் மிகப் பெரிய மைதானத்தில் தூரதூரமாக அமர்ந்து படித்துக் கொண்டிருப்போம். பெரும்பாலும் இந்த இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் என்னால் படிக்க முடியாது. ஏனெனில் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவரவர் பெற்றோர்கள் வந்த உடன் அந்தப் பிள்ளைகளைப் பெயர் சொல்லி சத்தமாக அழைப்பார்கள். மலைப்பிரதேசம் என்பதால் எதிரொலிப்பு அதிகமாக இருக்கும். நான் அந்தச் சத்தம் கேட்காத தொலைவு என்று ஒவ்வொரு முறையும் ஊகித்துக் கருதி அமரும் இடங்கள் எனக்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கின்றன. அப்படிச் சத்தம் கேட்பதால் சோகம் என்றெல்லாம் இல்லை.

என் அம்மா அப்பா என் நன்மை கருதி இந்த விடுதியில் விட்டிருப்பதாகவோ, அப்பா ராணுவத்தில் கஷ்டப்படுகிறார் என்பதால் நான் அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்றோ, எங்கள் ஊரிலிருந்து ஊட்டிக்கு இரவு முழுவதும் மூன்று பேருந்துகள் மாறி மாறி பயணம் செய்து வந்தால்தான் என்னைப் பார்க்க வருவது சாத்தியம் என்பதாலும், வீட்டில் இருந்து என்னைப் பார்க்க வருவதால் பணக்கஷ்டம் வரும் என்றும் பலவாறு என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்ள காரணங்கள் அதிகம் இருந்தன. நான் நன்கு படித்து, நல்ல மதிப்பெண்கள் பெற்று, எல்லா வேலைகளையும் சிறப்பாகச் செய்தால் கடவுளும், மற்றவர்களும் என்னை விரும்புவார்கள் என்ற எண்ணத்தை யாரோ விதைத்திருந்தார்கள். என்னை யாரும் விரும்பாமல் இருப்பதன்மேல் எனக்குப் பயம் இருந்தது.

இந்த முறை அமர்ந்திருந்த காப்பி மரத்தடி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அறிவியல் பாடம் வாசித்துக் கொண்டிருந்தேன். அறிவியலில் ஒன்று இன்னொன்றாக மாறுவதைப் பற்றிய பாடமது. நான் முதலில் வியந்தது திடப்பொருள் ஆவியாகும் என்பதைத்தான். வகுப்பில் கற்பூரத்தை அதற்கு டீச்சர் உதாரணமாகச் சொல்லியிருந்தார்கள். வகுப்பிலேயே நான் கற்பூரத்தைப் பற்றி வியந்து வியந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். திடப்பொருள் உருகுவதை எளிதாக நினைவு கொள்வதற்கு ஏதுவாக சில உதாரணங்கள் புத்தகத்தில் இருந்தன. திடப்பொருள் என்றவுடன் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது கனமான இரும்பு தான். அதை உருக்குமளவு வெப்பத்தைக் கற்பனை செய்து பார்த்தபோது திகைப்பாக இருந்தது. இரண்டாவது பனிக்கட்டி உருகுவது. இரும்பை முதலில் கற்பனை செய்து பார்த்ததால் எனக்குப் பனிக்கட்டி உருகுவதைக் கற்பனை செய்வது மிகவும் சுலபமாக இருந்தது. இந்த இடத்தில் தான் எனக்கு எதுவோ ஒன்று சட்டென முட்டி சுமிதாவின் ஞாபகம் வந்தது. பெரிய தவறு செய்துவிட்டேன் என்று நொந்து கொண்டேன். ஏக்கத்துடன் அழ ஆரம்பித்தேன்.

***

அந்தச் சம்பவம் நான் இரண்டாவதோ மூன்றாவதோ படிக்கும்போது நிகழ்ந்திருக்கலாம். சம்பவம் மட்டும் நினைவில் உள்ளது. காலம் சரியாக நினைவில் இல்லை. ஆனால் மிக நிச்சயமாக நானும் சுமிதாவும் அப்போது சிறுபிள்ளைகளாக இருந்தோம். என் பாட்டி எனக்கு முதல்முறையாக சமையல் வைக்கும் செட்டு பாத்திரங்கள் வாங்கிக் கொடுத்திருந்தார். பொதுவாக சிரட்டையில் மண், கருவேலம்பூக்கள், இலைகள், வேப்பிலை முத்துக்களை வைத்து சமையல் செய்து விளையாடும் நாங்கள் அந்தச் செட்டுப் பாத்திரங்கள் வைத்து நிஜ அரிசியைச் சமைக்கலாம் என அன்று முடிவெடுத்திருந்தோம்.

நான் கொண்டு வந்திருந்த விளையாட்டுச் சாமான்களை எடுத்து எல்லாப் பிள்ளைகளிடமும் பெருமை பொங்க காண்பித்து பீற்றிக் கொண்டிருந்தேன். சுமிதா மட்டும் அதை வாங்கி முன்னும் பின்னும் ஆட்டி ஆட்டி பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அதை நான் வெடுக்கென பிடுங்கி ஃ வடிவத்தில் வைத்திருந்த கற்களுக்குமேல் வைத்தேன். வைக்கோல் மற்றும் காய்ந்த இலை போன்ற செத்தைகளை ஏற்கனவே அருண் கற்களுக்கு இடையில் வைத்திருந்தான். முதல் தீக்குச்சியிலேயே தீ எழுந்து செத்தைகள் பற்றிக் கொண்டன. குபுக் என்று தீயின் ஒரு பகுதி மேலெழுந்தது. அருகிலிருந்த அழுக்குத்துணியை எடுக்க ஒரு கணம் தான் திரும்பியதாக நினைவு. அதற்குள் அடுப்பில் வைத்திருந்த என் சட்டியைக் காணவில்லை. வடிவாக அழகாக ரோஸ் கலரில் இருந்த சட்டியது. சுமிதா தான் எடுத்திருக்க வேண்டும் என முதல் கணமே ஏன் தோன்றியது என்று தெரியவில்லை. அவளைத் திரும்பிப் பார்த்தேன். ஆச்சரியமான பாவனையில் முகத்தை வைத்திருந்தாள்.

“ஏத்தா எப்படித்தா சட்டி காணாம போச்சு?” என அவள் நீட்டி முழக்கி என்னிடம் கேட்டபோது உறுதியாக அவள் தான் எடுத்திருப்பாள் என்று முடிவு செய்து பாய்ந்து அவள் தலைமயிரைப் பற்றி சண்டை போட்டேன். அருகிலிருந்த அருண் ஓடிப் போய் சுமிதாவின் அம்மாவை அழைத்து வந்து விட்டான். அதன்பின் எங்கள் சண்டையைப் பிரித்துவிட்டார்கள். ஆனாலும் சுமிதா எனக்குச் செய்ததது துரோகம் என்றே தோன்றியது. அந்தச் சண்டைக்குப் பிறகு அருணுக்கு என்னைப் பார்த்தால் பயம். என் பாட்டி வந்து என் இரட்டைவாலைப் பற்றி இழுத்துச் சென்றது நினைவுக்கு வருகிறது.

“இவா பெரிய மங்கம்மா பேத்தி. எங்க போனாலும் சண்டைக்குப் போறாளே. கை முட்டி, கால் முட்டி, நெத்தியெல்லாம் அடியும் தழும்பும். எவென் கட்டிக்குவாண்டீ உன்ன? ஒங்க அப்பனுக்கு என்ன பதில் சொல்லுவேன். இந்த குட்டிச் சாத்தான என் தலைல கட்டிப்புட்டு அவன் பட்டாளத்துக்கு போய்ட்டான்,” என வழியெல்லாம் திட்டிக் கொண்டே வந்தாள். எனக்கு அவமானமாக இருந்தது.

மங்கம்மா பேத்தி என்ற திட்டு விழுந்தது எனக்கு முதல்முறை இல்லை. இதற்கு முன் எங்கள் வகுப்பில் என்னுடன் படித்த ஒரே பையனுடன் சண்டை போட்டு கிள்ளி வைத்ததற்காக டீச்சர் பிரம்பில் அடிக்கும்போது “இவ பெரிய மங்கம்மா. ஆம்பளப்பையனப் போட்டு அடிக்கா,” என்று திட்டினார். அதன்பின் அவ்வப்போது அந்தப் பெயரைச் சொல்லி என்னைக் கிண்டலாக அழைக்கும்போது எரிச்சல் வரும். கட்டாயம் கெட்டவார்த்தையாகத்தான் இருக்க வேண்டும் என அப்போது நினைத்துக் கொண்டேன். பாட்டி மீது கோபம் வந்தது.

“நான் ஒன்னும் மங்கம்மா பேத்தியில்ல. மீனாட்சி பேத்தியா” என்று ரோசமாகச் சொன்னதும் என்னைத் தூக்கி என் அழுக்கு பெட்டிக்கோட்டுடன் கட்டிக் கொண்டாள். ஆனால் எனக்கு நிகழ்ந்த முதல் துரோகம் என்ற அளவில் சுமிதாவை அதன்பின் நான் எந்த விளையாட்டுக்கும் சேர்த்துக் கொள்ளவில்லை. பிள்ளைகள் எல்லோரும் நான் புதிய விளையாட்டுச் சாமான்களை அவ்வப்போது விளையாடக் கொண்டு வருவதால் என்னுடன் இருந்தார்கள். அவளை மெல்ல எங்கள் வட்டத்திலிருந்து வெட்டி விட்டேன். ஆம் துரோகத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஆனால் இன்னொரு துரோகம் நிகழ்ந்தேறியபோது தான் மனிதர்களின் அடிப்படை குணம் துரோகம் என்ற செய்தி எனக்குத் தெரிய வந்தது. அதுவும் நாம் நம் வாழ்வில் முக்கியமாக நினைக்கும் ஒருவர் நமக்குத் துரோகம் இழைக்கும்போது ஏற்படும் வலி பெரியது என்பதை உணர்ந்த தருணம்.

அது கோடை விடுமுறை என்பதாக நினைவு. வழக்கம் போல எந்த வயது என்று நினைவில்லை. அந்த வெயிலிலும் நாங்கள் எப்போதும் தெருவில் தான் காய்வோம். பையன்கள் எங்களைக் கோலிக்குண்டு, பம்பரம், செல்லாங்குச்சி, சீத்துக்கல் விளையாட சேர்த்துக் கொள்வதில்லை. பெரிய அக்காக்கள் எங்களைத் தாயம், தட்டாங்கல், பல்லாங்குழி ஆடச் சேர்த்துக் கொள்மாட்டார்கள். அதனால் எங்கள் கூட்டுப் பிள்ளைகள் டப்பா ஐஸ் விளையாடுவோம். கிழவிகளின் ஓலைக் குடிசைகளில் ஓலைகளைப் பிய்த்து அவர்களிடம் திட்டு வாங்கி ஓட்டமாக காற்றாடி சுற்றுவோம். ஓய்ந்தால் சொப்பு சாமான்கள் வைத்து விளையாடுவோம். குழியானைக்கு எறும்புகளைப் பிடித்து உணவாகப் போடுவோம். கருவேலஞ் செடியிலிருந்து மாட்டுப் பூச்சிகளைப் பிடிப்போம். அதை என்ன செய்வோம் என்பது நினைவில் இல்லை. எறும்புகளுக்கும் குருவிகளுக்கும் அரிசி போடுவோம். ஏதாவது குருவிகளோ பூச்சிகளோ இறந்து கிடந்தால் ராசாத்தியம்மன் கோவிலுக்கு முன் வைத்து வேண்டுவோம். சாமி உயிர் தரவில்லையெனில் அதன் மேல் மஞ்சள் தூவி புதைத்து பூவோ கல்லோ நட்டு வைப்போம். பசித்தால் தும்பைப்பூவிலிருந்து தேனெடுத்து உறிஞ்சுவோம். இலந்தைப் பழம், கோவைப்பழம், சொடக்கு தக்காளி ஆகியவை சாப்பிடுவோம். இந்த மஞ்சனத்திப் பழங்கள் மட்டும் எனக்குப் பிடிப்பதில்லை. அதன்பின் நான் புதிதாகக் கண்டுபிடித்த டீச்சர் விளையாட்டு. அதில் நான் தான் டீச்சர் என்பதால் என் குழுவில் எனக்குப் பிடிக்காத பிள்ளைகளைத் திட்டுவதற்காக அந்த விளையாட்டைப் பயன்படுத்திக் கொள்வேன். குறிப்பாக வினோத்துக்குத் தினமும் ஒரு அடி கொடுப்பது என் வழக்கம். அவன் சிரித்துக் கொண்டே அடி வாங்குவதால் அவன் அம்மாவிடம் மாட்டாமல் தப்பித்துக் கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் ஐஸ்காரர் வந்தால் அவர் சைக்கிளுக்குப் பின்னால் கத்திக் கொண்டே ஓடுவோம். பெரும்பாலும் அவர் நடு மதியத்தில் தான் வருவார். கோயில் மரத்திற்கு அருகில் ஐஸ்களை விற்றபின் சில சமயம் ஐஸ் விற்றுத் தீர்ந்துவிட்டால் அவர் பெட்டிக்குள் வெள்ளையாக பளிங்கு போல இருக்கும் ஐஸ்களை வெளியே எடுத்துப் போடுவார். பையன்கள் எப்போதும் அந்த ஐஸை வாங்கி கண்ணங்களில் வைத்து விளையாடுவார்கள். சிலர் வீட்டுக்கு வாங்கிப் போவார்கள். அன்று நான் “எனக்கு எனக்கு” என்று பின்னாலிருந்து கத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து, “ஏ பாப்பா. ஐஸ் தருவேன். ஆனா சாப்பிடக்கூடாது” என்றார்.

“சட்டியில தருவியலா. எங்க பாட்டிக்கும்” என்று கேட்டேன். எனக்கு யார் எது கொடுத்தாலும் பாட்டிக்குக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. அவள் எதையும் என்னை விட்டு சாப்பிடுவதில்லை என்ற நம்பிக்கை இருந்ததால் அதைச் செய்தேன். ஆனால் உண்மை நிலவரம் தெரியவில்லை.

“தாரேன்” என்று அவர் சொன்னது காதில் விழுந்ததும், “போய்ராதிக சட்டிய எடுத்தாரேன்” என்று சொல்லி அங்கிருந்து இரண்டு வீடு தள்ளியிருந்த எங்கள் வீட்டுக்கு ஓடினேன். பாட்டி தூங்கிக் கொண்டிருந்தாள். எங்கள் வீட்டு சகி பூனையைப் போல மெதுவாக சமயல்கட்டுக்குள் நுழைந்து, பாதி கருப்பாகவும், பாதி வெளுப்பாகவும் இருந்த ரசம் வைக்கும் பெரிய சட்டியைத் தூக்கிக் கொண்டு பதறியடித்தபடி ஐஸ்காரரரிடம் ஓடினேன். அவர் தன் வெள்ளையான கம்பி மீசையைச் சுருட்டியபடி சிரித்துக் கொண்டே பெரிய ஐஸ் கட்டியை என் சட்டியில் போட முயற்சித்தார். அது நுழையவில்லை ஆகையால் அதை ஒரு குண்டான இரும்பு கரண்டியைக் கொண்டு உடைத்து அதில் போட்டார். அவரைப் பார்த்து நான் உடல் வளைத்து சிரித்தேன். என் பரட்டைத்தலையைக் கோதிவிட்டவாறு “பாப்பா இந்த ஐஸை சாப்பிடக்கூடாது. நல்ல பிள்ளைல” என்றார்.

நான் பலமாக “இல்லவே இல்ல. சாப்பிடமாட்டேன்” என்று என் பாட்டியிடம் சொல்வது போல சொன்னேன். அவர் என்னை “நல்ல பிள்ளை” என்று சொன்னது பிடித்திருந்தது. அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே மறுபடியும் ஓட்டமாக வீட்டுக்கு வந்தேன். வந்ததும் முதல் வேலையாக கண்ணாடி போல வழவழப்பாக இருந்த ஐஸை கையால்  தொட்டேன். கூர்மையான குளிர்ச்சி. அதை எடுத்து நாக்கால் நக்கினேன். ஏமாற்றமாக இருந்தது. எந்தச் சுவையும் இல்லை. இந்த விஷயத்தைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து யாருக்கும் தெரியாமல் உலைமூடியை எடுத்து அதை மூடி கிரைண்டருக்குப் பின்னால் இருக்கும் மறைவான இடத்தில் வைத்து விட்டு மீண்டும் ஓட்டமாக ஓடி கோயில் மரத்துக்கு விளையாடப் போய்விட்டேன்.

இரவு நேரமாகியும் வீடு திரும்பாததால் பாட்டி விளக்குமாற்றைத் தூக்கிக் கொண்டு என்னை அடிக்க வருவதைக் கேள்விப்பட்டு பின்வாசல் வழியாக ஓடி வந்து வீட்டுக்குள் படுத்துக் கொண்டேன். அங்குப் படுத்துக் கொண்டிருந்த தாத்தா எதையும் சட்டை செய்து கொள்ளவில்லை. தூங்குவது போல நடித்த என்னைப் பாட்டி திட்டிக் கொண்டே எழுப்பி கொல்லைப் புறத்திற்குக் கூட்டிச் சென்று என் அழுக்கு பெட்டிக்கோட்டையும் ஜட்டியையும் கழற்றி தண்ணீர் ஊற்றி தேய்த்து விட்டாள். தலைமுடியைப் பற்றி “குருவிக்கூடு மாதிரி வச்சிருக்கா பாரு” என்று மண்டையை ஆட்டினாள். லேசாக வலித்தது. குருவிக்கூடு கட்டாயமாக வசவுச்சொல் இல்லை எனத் தோன்றியது. ஏனெனில் குருவிக்கூடு அழகாக இருக்கும். நான் தான் பார்த்திருக்கிறேனே. நான் பார்த்த அழகழகான குருவிக்கூடுகள் நினைவுக்கு வந்தன.

“நாளைக்கு எண்ணெய் தேச்சு பேன் பாக்க வரலனா கால வெட்டிருவேன்” என்று கடுமையாக வைதாள். பயமாக ஆனது. கால் இல்லாமல் எப்படி டப்பா ஐஸ் விளையாடுவது. நொண்டி வேண்டுமானால் விளையாடலாம். வருத்தமாக இருந்தது.

குளித்து முடித்தபின் எனக்குப் பிடித்த மெல்லிய அடர் நீல நிற ஜட்டியைப் போட்டு மடியில் உட்காரவைத்து திட்டிக் கொண்டே நல்லெண்ணெய் விட்ட சூடான களியை கருவாட்டுக் குழம்பில் முக்கி ஊட்டிவிட்டாள். அதன் வெம்மையும் மணமும் ருசியும் மயக்கடித்தது. அவள் கைகள் என் முதுகில் அலைந்து கொண்டிருந்தது.

“பொம்பளப்பிள்ளை நேரமத்த நேரத்துல விளையாடக்கூடாது ஆத்தா” என்றாள். சாப்பிட்டதும் வாயைத் துடைத்துவிட்டு தண்ணீர் குடிக்கச் செய்தாள். அவள் கொல்லைப் புறத்திற்குப் பாத்திரம் கழுவச் சென்றவுடன் சமயல்கட்டுக்குள் சென்று அந்தச் சட்டியை மெல்ல எடுத்துப் பார்த்தேன். அது அந்தப் பனிக்கட்டி இருந்ததற்கான சிறு சுவடும் இல்லாமல் வரட்சியாக இருந்தது. பூனை எடுக்க வாய்ப்பில்லை. ஏனெனில் உலைமூடி இருந்ததே! தாத்தா சமையல்கட்டு பக்கம் கூட வர வாய்ப்பே இல்லை. வீட்டில் வேறு யாரும் இல்லை. பாட்டி தான் எடுத்திருக்க வேண்டும். அவளும் பார்க்க வேண்டும் என்று தான் வாங்கி வந்திருந்தேன். ஆனால் அவள் அதை எடுத்துத் தின்றிருக்கிறாள் என்ற எண்ணம் என் மனதில் புகுந்து கொண்டது. அவள் மேல் அன்று எரிச்சலாக வந்தாலும் பாவம் என்று பெருந்தன்மையாக சண்டை போடாமல் தூங்கிவிட்டேன்.

இந்த இரண்டு நினைவுகளும் என்னை வந்து முட்டியபோது தான் அன்று காஃபி மரத்தடியின் கீழ் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த எனக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. நான் அழுது கொண்டிருந்ததை எங்கள் விடுதி வார்டன் மார்செலின் சிஸ்டர் பார்த்து என்னை அழைத்து தலைக்கு எண்ணெய் வைத்து, தோட்டத்திலிருந்த ரத்தசிவப்பான ரோஜாப்பூவைத் தலையில் வைத்துவிட்டு கை நிறைய எக்லேர்ஸ் சாக்லேட்களைத் தந்தார். அநேகமாக என் வீட்டிலிருந்து என்னை யாரும் பார்க்க வருவதில்லை என்று பரிதாபப்பட்டு அப்படிச் செய்திருக்கலாம்.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னான வார இறுதி ஒன்றில் எங்களை வீட்டுக்கு போன் பேச அனுமதிக்கும் நாளில் பாட்டிக்கு போன் செய்து பனி உருகி நீராகி அதுவும் ஆவியாகுமளவு கோடைவெயில் இருந்ததைப் பற்றி சொல்ல முற்பட்டு சொல்ல முடியாமல் அழுததைக் கேட்டு அவளும் அழுது, வீட்டிலிருந்த தாத்தா என்னைச் சமாதானப்படுத்தும்போது அழுதால் வீட்டில் உள்ளவர்கள் வருத்தப்படுவார்கள் என்று சொன்னதால் அழுகை வந்தாலும் போனில் அழக்கூடாது என்று அதன்பின் முடிவு செய்தேன்.

பாட்டி இறுதியாகப் பேசும்போது “படிக்கனும் மோனாக்குட்டி. இங்கயிருந்தா படிக்க முடியாது. நல்லா படிக்கனும். அழாத” என்று சமாதானப்படுத்தினாள். கடைசி வரை அவளிடம் அவள் துரோகம் செய்ததாக நான் நினைத்ததை என்னால் விளக்க முடியவில்லை. அந்த ஆறாம் வகுப்பு முடிந்து முழுப்பரிட்சை விடுமுறையில் ஊருக்கு வந்தபோது சுமிதாவிடம் பிளாஸ்டிக் ரோஸ் சட்டி சூடு தாங்காமல் சட்டென உருகி வைக்கோலுக்குள் மறைந்து போயிருக்கலாம் என்பதைக் கூறி அவளிடம் மன்னிப்பு கேட்டு நல்ல தோழியாகிவிட்டேன். அவள் நான் உருகுவது, கொதிப்பது, ஆவியாகுவது பற்றி விளக்கும்போது வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருந்தாள். அவர்கள் பள்ளியில் எதுவும் சொல்லிக் கொடுப்பதில்லை என்பது விளங்கியது.

***

ஒரு மாதிரி மனம் லேசாகி புன்னகை செய்து கொண்டேன். மழை மேலும் உரத்துப் பெய்ய ஆரம்பித்தபோது தான் கதவு தட்டும் சத்தம் கேட்டது. எழுந்து சென்று திறந்தபோது என் அறைத்தோழி இந்து சற்றே நனைந்த நிலையில் நின்று கொண்டிருந்தாள்.

“என்ன மேடம் கில்மாவா உக்காந்திருக்கீங்க” என்றாள்.

“சீ போடி” என அசிரத்தையாகச் சொல்லிக் கொண்டே நாற்காலியில் வந்து உட்கார்ந்தேன்.

“என்ன கண்ணுல தண்ணி? இந்த டைம் யாரு அபிநயா, மோனிஷா, உங்க மாமா பையன். யார நினைச்சு அழுத?”

எல்லாவற்றையும் கண்டுபிடிக்கும் அளவு இவள் அவ்வளவு நெருக்கமாகியிருக்க வேண்டாம் என்று எரிச்சல் வந்தது. நான் உதட்டைக் கோணலாக வைத்து அறை முழுவதும் சிதறிக் கிடக்கும் அவள் ஓவியங்களையும் தூரிகைகளையும் நிறங்களையும் வெறித்தேன். “என்னைக்கு தான் க்ளீன் பண்ணுவ” எனத் திட்டும் தொனியில் கேட்டேன்.

“ரூம் எவ்ளோ அழகா இருக்கு பாரேன். கலர்ஃபுல்லா. உன்னோட மோடிவேஷன் கோட் எழுதிருக்கற ஸ்டிக்கர்ஸ் தான் திருஷ்டி பொம்ம மாதிரி இருக்கு” என்று சொன்னாள்.

எனக்கு எல்லாமும் சரியாக அடுக்கியிருக்க வேண்டும். அதிக சத்தங்கள், அதிக வெளிச்சங்கள் எதுவுமே பிடிப்பதில்லை. கலைந்த விஷயங்கள் என்னை ஏதோ செய்கின்றன. இதுவரை இருந்த அனைத்து விடுதி அறைகளிலும் அந்த நேர்த்தியை நான் பின்பற்றியிருக்கிறேன். ஆனால் இந்துவிடம் முடியவில்லை. இவள் கலைத்து அடுக்கும் இந்த அறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் தவழவிடும் இசை, இந்த அறைக்கு நிறத்தை அளிக்கும் அவள் அவ்வபோது மாற்றும் வண்ண வண்ண திரைச்சீலைகள் என அதற்குள் புழங்குவது எனக்குப் பிடித்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அவள் மேல் பொங்கி வழியும் அன்பு. ஆனால் என்னால் அவள் உலகிற்குள் போக முடியாது. எனக்குப் படிக்க வேண்டும். வேலைக்குப் போக வேண்டும்.

“மோனா நல்ல மழை டீ. வா போய் நனஞ்சுக்கிட்டே கேண்டீன்ல போய் டீ குடிப்போம்”

எனக்குத் திக்கென்று இருந்தது. இந்த மழையில் நனைவதா? மரங்கள் சரியான மின் கடத்தி என்ற போதம் வந்தது. “மழை அடிச்சு பேயிது டீ. இடி கிடி விழுந்தா செத்து போய்டுவோம்ல”

“ஏண்டி இவ்ளோ பெரிய காலேஜ்ல இடிதாங்கி இல்லாம இருக்குமா?”

“ஆ! லாஜிக்” என யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து,“சரி நீ வரலைனா பரவால்ல. நான் சிபி அண்ணாவோட போறேன்” என்றாள்.

“இல்ல. இடியே விழுந்தாலும் பரவாயில்ல. நான் வரேன்” என்று சொல்லி டீஷர்டை எடுத்துப் போட ஆரம்பித்தேன்.

“ஏன்டீ அந்த அண்ணா அடுத்த வருஷம் போய்டுவாங்க. அப்ப என்ன பண்ணுவ” என்று கேட்டாள்.

“அது பரவால்ல” என்று அவளைப்பார்த்துச் சிரித்தேன்.

“எந்த ஒலகத்துல இருந்து டீ வர்றீங்க நீங்கல்லாம்” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

“சீலுத்தூர்” என்று முஷ்டியை உயர்த்திச் சொன்னேன்.

டீக்கான சில்லரைகளை எடுத்துக் கொண்டு விடுதிக்கு வெளியில் வந்தபோது மழை மேலும் வலுத்துக் கொண்டிருந்தது. விடுதியின் காம்பவுண்டைத் தாண்டுவதற்குள் முழுவதும் நனைந்துவிட்டோம். கல்லூரியின் எந்தச் சாலையும் இரு மருங்கிலும் மரங்கள் நிறைந்து தழும்பின. அதை பார்த்துக் கொண்டே மழையில் நனைந்தபடி இந்துவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடந்தேன். மெல்ல உள்ளாடைகளையும் மீறித் தாண்டி உடலுக்குள் தண்ணீர் நுழைந்து வழிந்து செல்வதை உணர முடிந்தது. உடலிலிருந்த சூடு ஆவியாகி குளிர ஆரம்பித்தது. இந்துவின் கைகளில் அந்தக் குளிர்ச்சி தெரிந்தது. மேலும் இறுக்கமாக அவள் கைகளைப் பற்றிக் கொண்டேன். மழையோடு மழையாக நான் இல்லாதது போல உணர ஆரம்பித்தேன். இன்னும் அரை கிலோமீட்டர் நடந்தால் தான் கேண்டீன் வரும். சாலையில் யாருமே இல்லை. சற்று தொலைவில் உள்ள இடம் கூடத் தெரியாமல் மழை அடித்து தாக்கிக் கொண்டிருந்தது. அனைத்தையும் நிர்மலமாக்கும் வெள்ளைத்திரை ஒன்று எங்களுக்கு முன் சென்று கொண்டிருந்தது போல இருந்தது. கனவுக்குள் மழையில் நடப்பது போன்ற பிரமை. இது நிஜமாகவே நடக்கிறதா என்ற எண்ணம் ஒரு கணம் வந்து சென்றது.

நினைவுகளை மீட்டும்போது சரியான காலம் மறந்து விடுவதே பயத்தை அளிக்கிறது இப்போதெல்லாம். நினைவுகூறும் சம்பவங்கள் கோர்வையாக இருப்பதில்லை. ஒரு காலகட்டத்தின் சில சம்பவங்கள் மட்டுமே நினைவில் உள்ளன என்பதைக் கவனிக்கிறேன். நடப்பவை மறந்துவிட்டால் அது உண்மையில் நடக்கவில்லை என்றாகிவிடுமா? நடக்காதவைகளை நினைத்துக் கொள்ளும் எண்ணங்கள் உண்மையில் நடக்கவில்லை என்று சொல்லிவிட இயலுமா? உண்மையில் நடந்ததைத்தான் நினைவுகூர்கிறோமா? நாம் நினைவில் வைத்துக் கொள்பவைகளால் மட்டுமே நாம் உருவாகி வருகிறோமா? அல்லது… மழை வந்து மண்டையை அறையும்போது ஒவ்வொரு கேள்வியாக உதிர்ந்து நினைவுகள் சாலை நீரில் விழுந்து கடந்து மறைகின்றதா? மழை என்னை ஒன்றுமில்லாமல் செய்து கொண்டிருந்தது போல உணர்ந்தேன்.

என்னை எங்கு எப்போது பார்த்தாலும் கண்கள் ஒளிர  புன்னகைக்கும் சிபியின் முகமும், வண்ணங்கள் நிறைந்து கிடக்கும் எங்கள் அறையும், இந்துவுடன் கைகளைக் கோர்த்து மழையில் செல்லும் இந்த நடையும் என் நினைவில் நீடிக்க வேண்டும் என்று எதையோ வேண்டிக் கொண்டேன். பின்னாளில் அணுவணுவாக இவை நினைவிற்கு வர முடியாது எனினும் நான் மறந்துவிடக் கூடாது என்றும் அழுத்தமாக மனதில் சொல்லிக் கொண்டேன். ஒவ்வொரு மழைகாலத்திலும் கடந்ததை அசைபோடுவதும் அதை எழுதி வைத்துக் கொள்வதும் அதனால் தான்.

இந்துவிடம் இதைச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அவளுக்கு இந்தத் தவிப்பு புரிய வாய்ப்பில்லை. அவளுடைய உலகம் வேறு. அது வண்ணங்களாலும் இசையாலும் ஆனது. அவள் இப்போது எதை உணர்ந்து கொண்டிருக்கிறாள் என்று தெரியவில்லை. அதை உணர முடியாதது என்னில் பரிதவிப்பை ஏற்படுத்தியது.

மழையுடனேயே எப்போதும் என்னைத் தாக்கும் மென் சோகம் என்னைப் பற்றி இழுத்தபோது இந்துவுக்குத் தெரியாமல் அழுதுகொண்டே நடந்தேன். நான் இதுவரை பெரிய துக்கம் என்று நினைத்த யாவும் உதட்டைக் கோணலாக்கி சிறு புன்னகை வரவழைக்கக் கூடியது மட்டுமே என்று தெரிய வருவது ஆறுதலாக இருந்தது. மழைசத்தம் அதிகரித்தபடி இருந்தது.

“ஓடலாம் டீ” என இந்து காதருகில் வந்து கத்தினாள். இருவரும் ஓட்டமாக மழையின் அந்த வெண் திரையைக் கிழித்துக் கொண்டு ஓடினோம்.

3 comments for “நினைவின் மழை

  1. Kalaibrinda
    March 1, 2025 at 11:37 am

    என் சிறுவயது ஞாயபகம் மீட்டு எடுத்து தந்ததற்கு நன்றி…..என் வாழ்வில் நான் வாழ ஆசை பட்ட வாழ்கையே நீங்கள் வாழ்ந்து காட்டியுள்ளிர்….வாழ்த்துக்கள்…எழுத்து பயணம் தொடரட்டும்….மென்மேலும் வளரட்டும்

  2. March 1, 2025 at 3:19 pm

    மழை ஆவியாகி மறையலாம் பிற திடப்பொருள்கள்போல ஆனால் மனதுக்குள் பெய்த மழை மறைவதில்லை. என் சிறு பிராயத்து மழையின் நினைவுகள் இன்னும் ஈரம் கோர்த்தபடி சில்லிட்டுக் கிடக்கிறது உங்கள் கதையை படித்த பின்னர்.

  3. N.Vijayalakshmi
    March 5, 2025 at 4:46 pm

    Congrats

Leave a Reply to கோ.புண்ணியவான் Cancel reply