ம் என்ற மரணம்

குளிரில் உறைந்தா; நெருப்பில் கருகியா; நீரில் மூழ்கியா? எப்படி நடக்க வேண்டும்? கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதிக்கலாம், ஆனால் அவள் வீட்டின் முன் கிணறு கிடையாது. சுருக்கிட்டுக் கொண்டு மரத்தில் தொங்கலாம் ஆனால், அவள் வீட்டின் முன் மரம் கிடையாது. விஷம் குடிப்பவர்கள் உண்மையிலேயே வாழவே விரும்புகிறார்கள். சம்பவத்துக்கும் மரணத்துக்கும் அதிக கால இடைவெளி உள்ளது. யாரேனும் காப்பாற்றி விடுவார்கள். மணிக்கட்டை அறுத்துக் கொண்டு கிடப்பவர்களும் அப்படியே. அவர்கள் வெளியுலக வாய்ப்பை நம்பியே அந்தத் தாவலை நிகழ்த்துகிறார்கள்.

இறந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் இல்லை. அழுத்திக் கொண்டே இருக்கும் மனம் கூட பழகிப்போக வாய்ப்பிருக்கிறது. ஆனால் சலிப்பாகிப் போன இந்த வாழ்வை நிறுத்திக் கொள்ள வேறு மார்க்கம்தான் என்ன? மனித இனம் இன்னும் தற்கொலையைத் தவிர வேறு வழி கண்டுபிடிக்கவில்லை. உயிரையும் உடலையும் உறைய வைக்கும் விஞ்ஞானம் இருந்திருந்தால் ஒரு நூறு வருடத்திற்கேனும் உறைய விட்டிருப்பேன். புடம் போட்ட புது வாழ்வு பிறகொரு நாள் எனக்குக் காத்திருக்கும். கொடுப்பினையில்லாத காலத்தில் இருக்கிறேன். ஆகையால் கையில் இருக்கும் ஒரே வாய்ப்பை எடுத்துக் கொள்கிறேன்.

மன அழுத்தத்தில் தான் இத்தனை நாட்களாக இருந்திருக்கிறேன் என்பது எனக்கு விளங்கியதே மிகவும் பிந்தித்தான். மன அழுத்தத்தின் இறுதி புகலிடமான தற்கொலை எண்ணம் துளிர்விட்ட பிறகு தான் ஒரு ஆசுவாசம் கிடைத்தது.

ஒரே எண்ணம் பற்சக்கரம் போல நின்ற கிடையில் வளைந்து வளைந்து அதற்குள்ளாகவே சுற்றிக் கொண்டிருப்பது தான் மன அழுத்தம் என்று இப்போது புரிகிறது. தற்கொலை என்னும் தன் விடுதலை ஒரு மார்க்கமாக இவ்வுலகில் அங்கீகரிக்கப்பட வேண்டும். பிறப்புரிமையில் ஒன்றாக அது இருக்க வேண்டும். வாழும் உரிமைக்கு நிகராக சாகும் உரிமை. அரசியலமைப்புச் சட்டங்களில் எல்லாம் அதற்கு இடம் உண்டாக்க வேண்டும். நம் புனித நூல்களில் அதன் தடம் கண்டறியப்பட வேண்டும்.

பறவை, விலங்குகள் கூட தற்கொலை செய்து கொள்கின்றன. அவற்றுக்கும் அந்த எண்ணம் இருக்க வேண்டும். இருந்தே ஆக வேண்டும். எனக்குத் தெரியும் அது இருக்கிறது. நாம் மனிதன் என்ற வளையத்துக்குள் இருந்து கொண்டு மிருகங்களுக்குத் தன்னிருப்போ தற்பிரக்ஞையோ கால உணர்வோ விடுதலை உணர்வோ இருப்பதில்லை என்று அர்த்தம் கட்டிக் கொள்ளக் கூடாது. மிருகங்களுக்குச் சந்தோஷம், சோகம், சலிப்பு போன்ற உணர்வுகள் இருக்கையில் தற்பிரக்ஞையும் தற்கொலை உணர்வும் இருப்பதாகாதோ? கொலை உணர்ச்சி உள்ள போது தற்கொலை உணர்ச்சிக்கு மட்டும் என்ன குந்தகம்.

தற்கொலை எண்ணம் ஒரு சாத்தியக்கூறாக அனைத்து ஜீவனிலும் உறைகிறது. மனிதனுள்ளும் அது ஆதி கரு போல குடியிருக்கிறது என்பதை நான் பிரத்யட்சமாக சொல்ல முடியும். அந்த ஆதி சாத்தியக்கூறுக்கு உரம் போட்டு நீர் பாய்ச்ச வெளியில் இருந்து ஒரு ஊக்கி தேவைப்படுகிறது. அப்படியானவள் தான் அவள். ஆரம்பத்தில் அவளை நானோ என்னை அவளோ தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால் ஏதோ ஒரு உன்னத கணத்தில் நான் அவளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். பிரியத்துடன். அலை அலையாக மணல் மணலாக சேர்ந்து சேர்ந்து நடந்தது அந்தத் தேர்வு. ஆனால் அவள் ஒருபோதும் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. பணம் சேர்த்த போதும்; உற்றார் பெற்றோரை நான் உதறி வந்தபோதும்; வீடு கட்டியபோதும்; வேலை; இருப்பிடம்; நகரம்; மதம் மாறியபோதும்; மகன் பிறந்தபோதும்; மகன் இறந்தபோதும்; அவளுடைய தேர்வில் நான் ஒருபோதும் இருந்ததில்லை. இப்போது வேறு கல்யாணத்துக்குத் தயாராகிவிட்டாள்.

அன்பு மனைவியே இதோ வருகிறேன் உன் வீட்டுக்கு. இறுதி மடலும் எழுதி ஆகிவிட்டது.

ஒரு சொல்லில் அடங்கும் மடல்.

“ம-ர-ண-ம்…” என் மரணம்.

“ம்” என்ற எழுத்திலெல்லாம் ம்… என்று நின்றது மனம். அந்தச் சொல்லை மனம் கெட்டியாக பிடித்துக் கொண்டது. அதன் அனைத்து பூர்வீக அர்த்தங்களும் என் மீது ஓர் சங்கல்பமாக கவிழ்ந்தன.

இப்படியான ஓர் சங்கல்பம் நம் மனதில் உதித்தவுடனே அதற்கு எதிரான ஒரு சாத்தியமும் கூடவே இப்பிரபஞ்சத்தில் பிறந்து விடுகிறது. அதைத்தான் அவள் குரூரம் என்பாள். ஒன்றை செய்வதாக சொன்னபின் நான் செய்யாமல் விடுவேனாம். செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டு செய்து விடுவேனாம். இது எப்படி குரூரம் ஆகும்? வினையும் வினையின்மையும் ஒட்டிப் பிறந்தவர்கள் அல்லவா? அப்படியே குரூரம் என்றாலும் இந்த ஒரு அர்த்தத்தில் தானே? ஆனால் அவள் குரூரம் என்ற சொல்லின் அனைத்து அர்த்தத்திற்கும் என்னைப் பொறுப்பாளி ஆக்குகிறாள்.

இப்பிரபஞ்சமே என் முடிவுக்கு எதிராக செயல்படும்போது நான் என்ன செய்வேன். இம்முறை இது என் முடிவு அல்ல. இது என் சங்கல்பம். அவளைப் பழிதீர்க்கும் சங்கல்பம். இனி அவளைப் பார்ப்பவர்கள் எல்லாம் உண்மையில் என்னையே பார்ப்பார்கள். அவளிடம் யார் என்ன பேசினாலும் எப்படியோ அது என்னைப் பற்றித் தான் இருக்கும். இனி பிரிக்கவே முடியாதபடி அவள் வாழ்வோடு நான் ஒட்டிக் கட்டிக் கொள்வேன். அவள் அதை தேர்ந்தெடுக்காவிடிலும்.

இனி செய்வதற்கு ஒன்றுதான் உள்ளது.

என்னுடைய கடைசிப் பயணம். அவள் வீடு நோக்கி. நள்ளிரவுக்கு இன்னும் சில மணி நேரம் தான். சாலையில் இறங்கி வாகனம் எடுத்தேன். நகரம் முழுதும் ஒரே இரைச்சல், ஏதோ விழா நடப்பது போல. அனைத்தும் இளசுகள். இரவின் போதையில் கூச்சலிட்டுக் கொண்டும் வாகனங்களை உறுமிக் கொண்டும் பறந்து கொண்டிருந்தனர். இது என்ன நாள் என்று நான் ஊகித்திருக்கவில்லை. வருடத்தின் கடைசி நாள் இன்று. நாளை புது வருடம். எனக்கு எதுவும் பொருட்டாகத் தெரியவில்லை. என் இரு சக்கர வாகனத்தைக் கிளப்பினேன். ஒரு பரலாங்கு கூட சென்றிருக்க மாட்டேன். வாகன நெரிசல். அனைத்து வண்டிகளும் நின்றிருந்தன. சாலையே மக்கள் வெள்ளத்தில் கோலாகலமாக இருந்தது. நானும் நிற்க வேண்டியதாயிற்று. எனக்குப் பின்னால் பல வாகனங்கள் வந்து வரிசை கட்டிக் கொண்டன. அனைவரும் கொண்டாட்ட உணர்வோடு ஒன்றே போல் அச்சடித்தது போல மிக மகிழ்ச்சியாக இருந்தனர். ஏதோ ஒரு வண்டியில் புது வருட பிறப்பதற்கான பாடல் ஒலித்தது. ‘ஹாப்பி நியூ இயர்… ஹாப்பி நியூ இயர்… விஷ் யூ ஏ ஹாப்பி நியூ இயர்…’

என் மனம் செய்யவிருக்கும் காரியத்தில் குத்திட்டு அசையாமல் நின்றிருந்தது. ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய் கேனையும் தீப்பெட்டியையும் தொட்டுத் தொட்டு பார்த்துக் கொண்டேன்.

மாறி மாறி புத்தாண்டு வாழ்த்துக்கள் என்னைச் சுற்றி பறந்தன. வாகனங்கள் இன்னும் நகராமல் முட்டிக் கொண்டு நின்றன. ஒரு யுவதி காரின் மீது ஏறி இசைக்குத் தகுந்தவாறு நடனமிட்டாள். இன்னும் சிலர் இணைந்து கொண்டனர். குதித்து குதித்து குதூகலித்தனர். என்றாலும் என் மனம் “ம்…” என்றிருந்தது. யாரோ ஒருவன் எனக்கு வாழ்த்துத் தெரிவித்தான். இன்னொருவன் என் வண்டியின் பின்னிருக்கையில் ஏறிக் கொண்டும் ஹேப்பி நியூ இயர் என்று கத்திக் கொண்டும் என் தோள்களைப் பிடித்து ஆட்டி ஆட்டி களிப்பில் நடனமிட்டான். வாகனங்கள் நகர்ந்தன. எனக்குப் பின்னால் அமர்ந்தவன், “பாஸ்… வண்டி நகருது… நகருங்க…” என்றான். நான் வண்டியை முறுக்கினேன். “என்ன பாஸ், ஒரு நைண்டி போடுறீங்களா… இந்தாங்க…” என்று பாட்டிலை நீட்டினான். “வேண்டாம்” என்று தலையசைத்தேன். அவன் தொண்டைக்குள் அதையும் கவிழ்த்துக் கொண்டான். அவனுடைய பிற சகாக்கள் முன்னும் பின்னும் அணை கட்டிக் கொண்டு என்னுடனேயே வந்தனர். அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். இவர்களால் இவ்வுலகில் தொடர்ந்து இருந்து விட முடிகிறது. இவர்களுக்கு இவ்வளவு அக விசாலம் எங்கிருந்து கிடைக்கிறது.

“பாஸ்… பாஸ்… ரைட்ல திரும்புங்க. ரைட்ல … எல்லாரும் ரைட்ல தான் போறாங்க…”

“நான் அங்க போகல”

“பாஸ்… ஏன்…”

“நான் அங்க போகல”

“என்ன பாஸ் நீங்க…” என்று இறங்கிக் கொண்டான். “மறுபடியும் சந்திப்போம் பாஸ். அடுத்த நியூ இயருக்கு. என்னைய மறந்துடாதீங்க… என்னைய மறந்துடாதீங்க… பாப்போம் பாஸ்…” என்று கூறிவிட்டு இறங்கி எதிர்பாதையில் ஓடினான். பின்வரும் வண்டியில் கை காண்பித்து ஏறிக் கொண்டான். கூச்சலும் இரைச்சலுமாக நகரமே அந்தத் திசையில் ஒழுகிக் கொண்டிருந்தது. நான் மட்டும் வெகுசிலரே பயணத்திருந்த இந்தப் பாதையில் சென்றேன்.

இது ஒரு குறுக்கு வழி. மிகச் சிறிய பாதை. ஒரு ஆட்டோ வந்தாலும் கூட வழி அடைத்து விடும். மரங்களும் செடி புதர்களும் சிற்சில உயிர்களும் வாழும் பாதை. நகரத்தின் கூச்சல் பின்னால் கேட்டுக் கொண்டிருந்தது. என் மனதில் நான் செய்யவிருக்கும் காரியத்தை மீண்டும் உறுதி செய்து கொண்டேன். அது வீரியம் குறையாமல் தான் இருந்தது. ஆனால் சற்றுமுன் என்ன நடந்தது? எப்போதும் இருக்கும் சுழல் எண்ணம் சிறிது நேரம் விடுப்பு எடுத்துக் கொண்டதா? அந்தக் குடிகாரனின் இழித்த முகம் என் அகத்தில் வந்து சென்றது. என்ன இது? மனம் செய்யும் மாயம். ஆம்… இவ்வுலகில் வாழும் உந்துதல் எனக்கு அறவே இல்லை. இருக்கவும் கூடாது. இந்தப் பொல்லாத உலகில் அவளைத் தேர்ந்தெடுத்தேன். அவள் முன்னே முடியவும் செய்கிறேன்.

மீண்டும் வாகனத்தை முறுக்கினேன். எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல் முகத்தில் சட் சட் சட் என்று பூச்சிகள் பல அடித்துச் சென்றன. சில பூச்சிகள் தலையின் மயிர் காடுகளில் சிக்கிக் கொண்டன, சில கண்கள் மீது ஊர்ந்தன, சில மூக்கு துவாரத்தின் நுனியில், சில வாயின் இடுக்குகளில் படபடத்தது. ஒரு பரபரப்பு. புத்தியின் குறுக்கீடு இல்லாத பரபரப்பு. சட்டென்று வண்டியைக் கீழே போட்டு விட்டு முகத்தில் கை வைத்து அனைத்தையும் தட்டி விட்டேன். மூக்குக்குள் செல்லாத வண்ணம் புஸ் புஸ் என்று மூச்சு விட்டேன். வாய்க்குள் செல்லக் கூடாது என்று தூ தூ என்று துப்பினேன். தலைமுடிக்குள் விரல்கள் விட்டு கோதிக் கோதி எடுத்தேன். உடல் மேல் ஊர்ந்து கொண்டிருப்பவைகளையும் தட்டி விட்டேன். தூரத்திலிருந்து யாரேனும் பார்த்துக் கொண்டிருந்தால் ஏதோ தலையில் தீப்பற்றியவன் பரபரத்துக் கொண்டிருப்பது போல் தெரிந்திருக்கும்.

எல்லா பூச்சிகளையும் தட்டி விட்ட பின்பும் என் உடலில் ஏதோ ஊர்வது போல ஓர் உணர்வு. ஏன் இதை இப்படிப் படபடத்துச் செய்கிறேன்? மயிர் கூச்செரிந்தது. ஊரிவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடத் தோன்றவில்லை. வாழ்வு செய்யும் மாயம் இது. தொடர்ந்து ஜீவித்திருக்கும் உந்துதலா இது? இல்லை. இருக்கக் கூடாது. மசிய மாட்டேன். ஊரட்டும். என்னோடு சேர்ந்து அவைகளும் தீக்குளிக்கட்டும். ஜீவனை இழக்கப் போகும் ஒருவனுக்கு ஜீவகாருண்யம் எதற்கு?

ஒரு ஆழ்ந்த மூச்சு இழுத்தேன். இது ஏதோ பிரபஞ்ச சக்தியின் எதிர் செயல். இத்தனைக்கு பிறகும் என் சங்கல்பத்திற்கு எந்தவித பழுதும் வந்துவிடவில்லை என்பதை உறுதி செய்து கொண்டேன்.

கீழே விழுந்து கிடக்கும் வாகனத்தை எடுக்கும் போது வலது உள் காதுக்குள் படபட என்று இறகுகள் அடிக்கும் உணர்வு தட்டியது. உடல் முழுதும் அந்தப் படபடப்பு ஜிவ் என்று கணப்பொழுதில் படர்ந்தது. எடுத்த வண்டியைத் தொப்பென்று போட்டுவிட்டு காதுக்குள் விரல் விட்டு மடமடவென்று ஆட்டினேன். உள்ளுக்குள் பதற்றம் கொண்ட சிற்றுயிர் படபட என்று அடித்துக் கொண்டு அங்கும் இங்கும் ஊர்ந்தும் பறந்தும் அல்லாடியாது. என் மூளைக்குள் பூரான் ஊருவது போல் வின் வின் என்று குடைந்தது. உடல் ரோமங்கள் குத்திட்டு நின்றன. தலையைப் பக்கவாட்டில் கவிழ்த்து வலது காதைச் சடோர் சடோர் என்று அறிந்தேன். உள்ளுக்குள் இருக்கும் பூச்சி இன்னும் இன்னும் உள்ளுக்குள் சென்றது. வண்டி சாவியை எடுத்து காதுக்குள் ஆன மட்டும் விட்டு குடைந்தேன். அரைஞாண் கயிற்றில் பின்னூசி தொங்குகிறதா என்று இடுப்பில் கை வைத்துத் துழாவினேன்.

காதைப் பற்றிப் பிடித்துக் கொண்டு ரோட்டுக்கு ஓடினேன். வாகனங்கள் விரைந்து சென்று கொண்டிருந்தன. அனைவரும் சந்தோஷக் களிப்பில். தாழவே முடியாத அவஸ்தையில் நான் ஒவ்வொரு வாகனத்திற்கும் “சார்… சார்…” என்று கை காண்பித்தேன். வண்டியில் சென்ற சிலர் பதிலுக்கு எனக்கு “ஹேப்பி நியூ இயர்…” என்று கை காண்பித்து நிற்காமல் சென்றனர்.

தொண்டைக்கும் காதுக்கும் நடுவில் ஒரு இடத்தில் பொறியில் மாட்டிய எலி போல் அங்கும் இங்கும் வட்டம் அடித்து அலைமோதிக் கொண்டிருந்தது. அதன் உக்கிரம் கூடிகூடி வந்தது. ரோட்டுக்கு அந்தப் பக்கம் விளக்கு எல்லாம் அணைத்து அரை சட்டர் போட்ட ஒரு மருந்துக்கடை இருப்பது தெரிந்தது. தெய்வாதீனம் தான். காதைப் பிடித்துக் கொண்டு எதிர்வரும் வாகனங்களைக் கடந்து மருந்துக்கடை முன் வந்து நின்றேன்.

“அண்ணா…அண்ணா…” என் பதற்றத்தைப் பார்த்து ஒருவர் எழுந்து வந்தார். “உள்ள ஒரு பூச்சி போயிடுச்சு… உயிரோடிருக்கு…” “பூச்சியா? கடிக்குதா?” நான் ஆம் என்று தலையசைத்தேன். “சைடுல கிளினிக் இருக்கு பாரு. நீ அங்க தான் போகணும்.” அவர் சொல்லி முடிக்கும் முன் நான் பக்கவாட்டில் ஓடினேன். கிளினிக் பூட்டி இருந்தது. சாலையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொண்டாட்டங்களையும் நெரிசல்களையும் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் என்னைப் பார்த்துச் சொன்னார், “டாக்டர் இன்னைக்கு லீவு. நேரா இப்படியே ஒரு கிலோமீட்டர் போனீங்கன்னா ஒரு ஆஸ்பத்திரி இருக்கு.”

காதில் ரிங்…ரிங்…ரிங்… என்று இன்னும் உள்ளுக்குள் உள்ளுக்குள் இறங்கியது. சுளீர் என்று மின்சாரம் வெட்டியது. மறுகணம் நான் ரோட்டில் சுருண்டு புரண்டேன். எது இயக்கியது என்று தெரியாது. எழுந்து ஓடத் தொடங்கினேன்.

வந்து சேர்ந்த மருத்துவமனையில் என்னைக் காத்திருக்கும் படி சொன்னார்கள். தலையை வெட் வெட் என்று அடிக்கடி சுண்டி இழுத்தவாறு இருந்த என்னை ஒரு பைத்தியக்காரனைப் பார்ப்பது போல் அங்கு இருப்பவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இ.என்.டி மருத்துவர் இல்லை என்று அரை மணி நேரம் கழித்து எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என்ன இது வம்பாய் போயிற்று என்றுதான் முதலில் இருந்தது. கொளுத்திக் கொள்ளப் போகும் எனக்கு இதெல்லாம் தேவையா? தலை வெடுக்கென்று இழுத்தது. மனம் தேவை தான் என்றது. வெடுக்கு வெடுக்கு என்று சுண்டி இழுத்தது. “பைத்தியம் கொளுத்திக் கொண்டது” என்று கதை கட்ட அவளுக்கு வெகு நேரம் ஆகாது.

வேறொரு பெரிய மருத்துவமனைக்கு ஓடினேன். வாகனங்களையும் இரைச்சல்களையும் நெரிசல்களையும் தாண்டி நான் குலுங்கி குலுங்கி ஓட உள்ளுக்குள் அதுவும் குலுங்கியது. உள்ளுக்குள் இருந்து அது என்னை இயக்குவது போல் ஆயிற்று. ஊழ்வினை போல.

நான் அந்தப் பிரம்மாண்டமான மருத்துவமனையின் வாசலில் உள் நுழைந்ததும் எங்கு அவசர சிகிச்சை உள்ளது என்று தெரியவில்லை. எல்லாப் புறமும் பெரிய பெரிய கட்டிடங்களாக இருந்தன. நுழைவாயிலில் இருந்து வாகனம் நிறுத்துமிடம் அனைத்தும் கூட்டம் கூட்டமாக தான் இருந்தது. காதைப் பிடித்துக் கொண்டு எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் அல்லாடினேன். கண்ணுக்குச் சரியாகத் தெரிந்ததெல்லாம் ஒரு சின்னஞ்சிறிய கோயில் மட்டுமே. அதன் படியில் ஒரு மூதாட்டி அமர்ந்திருந்தாள். அவள் வலது புறம் கை காட்டினாள். காட்டிய திசை நோக்கி ஓடினேன். யாரோ ஒருவன் எனக்கு இணையாக மூச்சு இரைக்க இரைக்க கூடவே ஓடி வந்தான். முன்னுக்கு ஓடி முதல் ஆளாக உள்ளே நுழைந்து விட வேண்டும் என்ற உந்துதல். அவன் காதிலும் பூச்சியா? அவன் கையில் ஒரு சிறுவன் மயங்கிய நிலையில் இருந்தான். சிறுவன் அல்ல குழந்தை. அஹ்… குழந்தை… நான் சற்று தேங்கினேன். என்னைக் கடந்து ஓடியவனின் முகம் கண்டேன். பதட்டமும் வருத்தமும் நிச்சயமின்மையும் அழுகையுமான அந்த முகம் இதுவரை பார்த்ததில்லை என்றாலும் ஆள் உள்ளத்தில் பரிச்சயமானதாகவும் இருந்தது. என்னை முந்திக் கொண்டு ஓடுபவனை முந்த விட்டேன். இன்னும் என் காதினுள் அங்கும் இங்கும் ரீங்கரித்துக் கொண்டுதான் இருந்தது. உயிர் போகும் விஷயமில்லை என்று தாமதித்தேன்.

அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடும் ஆள் நிச்சயமாக தகப்பன் தான். தகப்பனைத் தவிர அந்த முக விகாரம் யாருக்கு அமையும்? எனக்கு ஒரு அப்பா இருந்திருக்கலாம். என்னைக் கையில் ஏந்தி ஓடும் அப்பா. இப்போது என் கால்கள் முற்றிலுமாக நின்று விட்டிருந்தன. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. என் குழந்தையைப் போலவே இருந்தது. ஒருவேளை என் குழந்தையாக இருக்குமோ? அது என் குழந்தை என்றால் அதைத் தூக்கி ஓடும் தகப்பன் நானா? பூச்சி காதைக் குடைந்து மூளைக்குள் சென்று விட்டதோ?

எங்கிருந்தோ அசரீரி போல் ஒரு தெய்வ நாமம் உள்ளுக்குள் வந்து விழுந்தது. அந்த நாமத்தை அந்த இரவில் சத்தமாக உச்சரித்தேன். அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். கட்டித் தாவிப் பிடித்துக் கொண்டேன். அந்தத் தகப்பனுடன் வேறு யாரும் இல்லையா? உலகின் மீது எனக்குக் கோபம் வந்தது. அந்த உலகம் வெளியே புது வருடப் பிறப்பைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

அந்தத் தகப்பன் இன்னும் அவசர சிகிச்சையை அடைந்தானில்லை. அவன் தடுக்கி கீழே விழுகிறான். கீழே தவறவிட்டதை நெஞ்சில் அறைந்தவாறே அள்ளிக் கொள்கிறான். அலை மோதுகிறான். அருகில் இருப்பவர்கள் திசை காண்பிக்கிறார்கள். அவன் ஓடுகிறான்.

நான் அமைதியானேன். என்னோடு சேர்ந்து அந்தப் பூச்சியும் அமைதியடைந்தது. நான் மெதுவாக தகப்பன் சென்ற வழி சென்றேன். அவசர சிகிச்சை வார்டு வந்தது. அங்கே மூன்று ஆம்புலன்ஸ் ஒன்றன் பின் ஒன்றாக நின்றிருந்தன. “ஐயோ! ஐயோ!” என்று ஒரு பெண் மார்பில் அடித்துக் கொண்டிருந்தாள், அவளை ஒரு சிலர் அணைத்து பிடித்தார்கள். நான் நெருங்கிச் சென்று வார்டின் நுழைவாயிலில் நின்றேன். கூட்டமாக இருந்தது. “எல்லாம் ஆக்சிடென்ட் கேஸ். புது வருஷம் பாருங்க…” அருகில் இருப்பவர்கள் பேசிக் கொண்டார்கள். பூச்சியின் வீரியம் குறைந்து இருந்தது. அதன் படபடப்பு கூட வலுவிழந்திருந்தது.

வயதான ஒருவரைக் கழுத்து வரைக்கும் போர்த்தி உள்ளே தள்ளிச் சென்றார்கள். நான் என்ன செய்வது என்று தெரியாமல் காதைப் பொத்தியவாறு நின்று கொண்டிருந்தேன். நிற்க நிற்க கூட்டம் கூடி வந்தது. தோள்பட்டை விலகிய இளைஞன், நெஞ்சு வலிக்கும் நடு வயது பெண்., வயிறைப் பிடித்தவாறு இன்னொரு இளைஞன், தலை உடைந்து ஒழுகும் ஆசாமி, வெட்டுக்காயத்துடன் நிற்கும் காவல்துறை, அனைவரையும் அதட்டிக் கொண்டிருக்கும் மூத்த செவிலியர் என்று கதம்பமாக அவ்விடம் நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் ஒரு இளம் தாய் இருக்க வேண்டுமே. அதோ ஐந்தாறு பேர் அவளை அரணாகச் சுற்றி கைத்தாங்களாகக் கூட்டி வருகிறார்கள்.

கையில் பரிட்சை அட்டை வைத்துக்  கொண்டு ட்ரையாஜ் என்ற பாட்ச்சும் மருத்துவ சீருடையும் அணிந்திருந்த குண்டுப் பெண்மணி முன் சிலர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். நானும் வரிசையில் நின்றேன். என் முறை வந்ததும், “என்ன பண்ணுது, யாருக்கு” என்று இயந்திரம் போல கேட்டார். “காதிலே பூச்சி போயிடுச்சு… இன்னும் உயிரோட உள்ளே சுத்திக்கிட்டு இருக்கு… அவசரம்…” என்றேன். “எல்லாருக்கும் அவசரம் தான் பா… இன்னைக்கு நிறைய கேஸ். இ என் டி டாக்டர் முதற்கொண்டு எல்லாரும் பிஸி. நீங்க வெயிட் பண்ணனும். எமர்ஜென்சி இ என் டி இந்த ஊர்ல இந்த ஹாஸ்பிடல்ல தான் இருக்கு. வேற எங்க போனாலும் இங்க தான் அனுப்பி வைப்பாங்க. வெயிட் பண்ணுங்க” “எவ்வளவு நேரம்?” காதைப் பிடித்துக் கொண்டே கேட்டேன். “நீங்களே பாக்குறீங்க இல்ல! எத்தனை பேர்ன்னு…” என்று விட்டு அடுத்த ஆளுக்கு நகர்ந்தார்.

பூச்சி அமைதியானது. சோர்ந்திருக்கும். என்னைப் போலவே. புறவுலகம் காதில் கேட்டது. காது கொடுத்தேன். குய்யோ முய்யோ என்ற கூக்குரல் அங்கெங்கும் நிறைந்து வழிந்தது. அங்கிருக்கும் அனைத்து உறவினர்களும் அழுதும் அடித்தும் கொண்டிருந்தார்கள். நான் அந்தத் தகப்பனைத் தேடினேன். பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் செவிலியர் ஒருவரைப் பிடித்து, “இங்க தலையில் அடிபட்ட ஒரு குழந்தையை தூக்கி வந்தாங்க… அவங்க…” என்று இழுத்தேன். “நீங்க?” “வேண்டியவன்…” “உள்ள இருப்பாங்க. பெரிய டாக்டர் பார்த்ததுக்கு அப்புறம் தான்… வழிய மறைச்சு நிக்காதீங்க… ஓரம் போங்க….” மீண்டும் கூட்டத்தைப் பார்த்து பொதுவாக கத்தினார். “வழி விட்டு நில்லுங்க. ஆம்புலன்ஸ் வருது பாருங்க. வழி விட்டு நில்லுங்க…”

அங்கு இருந்த அனைவரும் ஓரமாக நின்றோம். ஆம்புலன்ஸ் ஒன்று அதற்கே உண்டான பரபரப்புடன் வந்து நின்றது. வார்டு உதவியாளர்கள் வந்து நின்றனர். உள்ளுக்குள் இருந்து ஒருவர் படுக்கையுடன் இறக்கப்பட்டார். படுக்கை முழுதும் ரத்தம். வலது கால் உடைந்து இருந்தது. தலை சுற்றியும் கட்டியிருந்தது. அது முறிந்து நொறுங்கிய உடல் என்று பட்டது. இனி மருத்துவம் என்பது துன்பத்தை நீடிப்பது தான்.

படுக்கையில் இருந்தவனுக்கு நினைவு இருந்தது. வாகனத்திலிருந்து இறக்கப்பட்டதும் அவன் கண்கள் என்னைத் தான் பார்த்திருந்தன. அவனது கைகள் ஆகாயத்தில் ஏதோ தனிச்சையாக தேடிக் கொண்டிருந்தன. “பாஸ்…பாஸ்… வலிக்குது பாஸ். எனக்கு முன்னாடியே வந்துட்டீங்களா… வலிக்குது பாஸ்… அவன விடாதீங்க. காப்பாத்துங்க பாஸ். என்ன காப்பாத்துங்க. ஹாப்பி நியூ இயர் பாஸ். எரியுதே… இன்னும் சாப்பிடல பாஸ். ஹாப்பி நியூ இயர் பாஸ்…” அவன் தொடர்ந்து உளறிக் கொண்டிருக்கும் போதே அவனை விரைவாக உள்ளே கொண்டு சென்றனர். நான் வாயடைத்து நின்றேன். எண்ணம் நிலை குத்தி நின்றது. அங்கிருப்பவர்கள் முகம் என்னைப் போன்று விகாரமாக இருந்தது. அனைவரது ஓலமும் நின்றிருந்தது. ஒருவன் மட்டும் மிகக் கோரமாக புன்னகைத்துக் கொண்டிருந்தான். அந்தப் புன்னகை அத்தனை அசிங்கமாகவும் அத்தனை புராணமானதாகவும் இருந்தது. அது என்னைப் பார்த்து வீசப்பட்ட அனைத்து ஏளனப் புன்னகைகளுக்கும் நிகராக இருந்தது.

தெய்வ நாமத்தை உதடுகள் உச்சரித்தன.

அப்போது அந்தச் சிறுவன் இப்போது இந்தக் குடிகாரன். இந்தப் பிரபஞ்சம் என்ன சொல்ல வருகிறது? இந்த மனம் என்ன சொல்கிறது? அப்போது இருந்த மனம் தான் இப்போது இருக்கிறதா? மனம் வேறு வேடம் சூடுகிறதா? இந்த நள்ளிரவில் இந்த மருத்துவமனையில் இப்போது இங்கு அந்தக் குழந்தைக்கும் குடிகாரனுக்கும் என்ன வேறுபாடு? காதுக்குள் துடித்துக் கொண்டிருக்கும் பூச்சிக்கு என்ன வேறுபாடு? பூச்சி இன்னும் சில நேரத்தில் இறந்து விடும். கடும் சாவு. குழந்தை பிழைக்குமா குடிகாரன் பிழைப்பானா?

அல்லது இருவரும்…

யாருக்கு என் மனம் வாக்களிக்கிறது? யாருக்கு வக்காலத்து வாங்குகிறது? மனம் மன்றாடும் என்றால் அது யாருக்கு? புத்தம் புதியதற்கா? புழுத்து நாறியதற்கா?

இன்னதென்று தெரியாததும், மிக அற்புதமானதும் அதிசயமானதுமான அந்த ஒன்று அப்போது அங்கு எனக்கு நடந்தது. இதற்கு முன் அப்படி ஏதும் நடந்ததில்லை, நடந்த பதிவு என்ற ஒன்று அதுவரை இருந்ததில்லை.

நிலை குத்தி நின்ற மனம் தன்னைத்தானே பார்த்துக் கொண்டது.

இருட்டின் மீது இருட்டு கவிழ்வது போல்.

உள்ளுக்குள் இருந்த பூச்சி விழித்துக் கொண்டது. படபடத்தது. மீண்டும் பரிதவித்தது. அங்குமிங்கும் அடித்துக் கொண்டு உழன்றது. அல்லாடியது. இன்னும் உள்ளுக்குள் செல்வது போல் குடைந்தது. இம்முறை அது என்னைப் பாதிக்கவில்லை. அதிவிரைவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்தப் பூச்சியைக் கண்களை மூடி கவனித்தேன். அது ஒழுங்கற்றும் அர்த்தமற்றும் உள்ளுக்குள் வித்தைக் காண்பித்துக் கொண்டிருந்தது.

இது மனம் செய்யும் மாயை. சங்கல்பத்திலிருந்து வழுக்கி விட வேண்டாம்.

தெய்வ நாமத்தை உதடுகள் உச்சரித்தன.

இவ்வுலகமே சமாதானத்தின் மீது நடக்கும் சலனங்கள் என்று புலப்பட்டது. அதில் நான் உணரும் ஓர் சலனம் என் மனம்.

மனம் மட்டுமா?

மனமும் அதன் கட்டாயங்களும். கட்டாயங்களும் அதன் வினைகளும். கட்டாயமும் வினையும் மனதின் பகுதிதானே? இப்போது இந்தப் பூச்சி என் உடலின் பகுதி போல. பூச்சியை வெளியே எடுப்பது போல கட்டாயங்களையும் வினைகளையும் மனதிலிருந்து பிரித்தெடுக்க முடியுமா?

இதெல்லாம் மனம் செய்யும் மாயை. கட்டாயங்களின் அழுத்தம்.

இதெல்லாம் எனக்குள் இருக்கும் சலனங்கள். அப்படியானால் எனக்கு வெளியே இருக்கும் சலனம் யாதோ? அது… அதோ அந்த இளம் தாய், அந்தத் தகப்பன். அவர்கள் தான். வெளியே இருப்பவையை உள்ளுக்குள் வைத்து உணர முடியுமா? உணர்வதெல்லாம் உள்ளுக்குள் இருப்பதைத் தானே? அப்படியானால் நான் உள்ளுக்குள் தீர்மானிக்கிறேன். அந்தக் குழந்தை பிழைக்க வேண்டும்.

பிழைத்தே ஆகா வேண்டும்.

நான் உள்ளுக்குள் தீர்மானிக்கிறேன். வேண்டுமானால் அந்தக் குடிகாரன் உயிர் போகட்டும். போதவில்லையா? இருக்கிறதே என் உயிர். என் சங்கல்பம். என் தீர்மானம். என் சொந்தப் பழிக்கு என் உயிர் இனி போக வேண்டியதில்லை. இந்தக் குழந்தைக்காக. ஒரு சந்நிதி முன் கொளுத்திக் கொள்கிறேன். இல்லை அறுத்துக் கொள்கிறேன். இட்டெண்ணி தலை கொடுக்க என்னிடம் பல தலைகள் இல்லை. ஒரு தலை தான் இருக்கிறது. அதைக் கொடுக்கிறேன். இங்கேயே ஓர் சந்நிதி இருக்கிறது. அதற்கு பிரதிநிதியாக ஓர் மூதாட்டி அங்கே அமர்ந்திருக்கிறாள். அவளே எடுத்துக் கொள்ளட்டும். அந்தக் குழந்தை பிழைக்க வேண்டும். குடிகாரன் சாக வேண்டும். நானும். அர்த்தமற்றுப் போகும் உயிர் இனி இதற்காகப் போகட்டும். இனி எனக்குப் பழி உணர்ச்சி இல்லை. அந்தக் குழந்தையின் முகம்… அந்தத் தாய்… அந்தத் தகப்பனின் முகம்… ஆஹ்…

இதற்கு மேல் என்ன செய்வது என்று பிடிபடவில்லை. குழந்தை உயிர் பிழைத்தால் நானும் குடிகாரனும் உயிர் விடுவதற்கு ஓர் அர்த்தம் இருக்கிறது. அந்த உயிருக்கு இந்த உயிர் என்ற ஒரு பிரபஞ்ச சமன்பாடு. எனக்கும் அது விடுதலை. வீடுபேறுக்குச் சமானமான விடுதலை.

மனதை மனம் பார்த்து நின்றாலும் சுழலும் எண்ணங்கள் சுழன்று கொண்டுதான் இருந்தன. அவை அனைத்தும் என் பிரக்ஞையின் வட்டத்துக்குள் நடந்தன. உள்ளுக்குள் நடப்பது வெளியே கசிந்தனவோ என்னவோ, சுற்றி இருக்கும் அனைவரும் ஏதோ அசிங்கத்தைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்தார்கள். வழக்கம் போல் வட்டமடித்தது பூச்சி.

குழந்தை பிழைக்கத்தான் போகிறது. நான் உயிர்விடத்தான் போகிறேன். இங்கு இருப்பவர்களும் இதுவரை இருந்தவர்களும் எதை நம்பி மரணத்தைப் போய் சந்திக்கிறார்கள்? நாம் இல்லை என்றாலும் நம் அம்சமாக ஏதோ ஒன்று, ஒரு தொடர்ச்சி இவ்வுலகில் நம் பெயர் சொல்லி வாழும் என்று நம்பிக்கையில் அல்லவா? என் அம்சமாக அந்தக் குழந்தை வாழும். இங்கேயே இப்படியே காத்திருப்பேன்.

பல அவசர ஊர்திகள் வந்து வந்து சென்றன. அனைத்தும் ஏறக்குறைய வாழ்வா சாவா சந்தர்ப்பங்கள். அதற்கு மேல் மனம் ஓடவில்லை.

இரவெல்லாம் பூச்சி விர் விர் என்று சுழன்று என் பிரக்ஞையைத் தூண்டிக் கொண்டிருந்தது. இரவெல்லாம் ஒப்பாரிகளையும் புலம்பல்களையும் நேர் காட்சியாகக் கண்டு கொண்டிருந்தேன்.

அங்கிருந்து செவிலியர்கள் எனக்குப் பதில் சொல்லி ஓய்ந்தனர். ஒருவன் என்னைப் பைத்தியம் என்று திட்டினான். “மேடம், இது என் வாழ்க்கை சம்பந்தப்பட்டது…” என்றேன். அவள் சோர்வுற்றிருந்தாள். நீண்ட மூச்சுக்குப் பிறகு, “அந்தக் குடிச்சிட்டு வந்தவர் பிழைச்சுக்குவார்…” என்றாள்.

“அப்ப! அந்தக் குழந்தை?”

சற்றைக்கெல்லாம் ஒரு கேவல் ஒலி. நான் திரும்பிப் பார்த்தேன். இளம் தாயை ஒருவர் கட்டி அணைத்துப் பிடித்திருக்க மற்ற சிலர் கூடி நின்றிருக்க, அவள் கைகள் மேலும் கீழும் ஆட்டி அடிபட்ட மிருகம் போல் மானுட இனம் அறியாத ஒலியில் கேவிக் கேவி கூச்சலிட்டாள். துடித்தாள் திமிறினாள் குதித்தாள். அங்கிருந்த டாக்டரும் வேறு சிலரும் விலகி நின்றனர். அவளை அணைத்திருந்த கரங்கள் பலமில்லாது பிரிந்தது. அவள் முந்தானை மேனி விலகி தரையில் படர, கரங்களை ஆகாயத்திற்கு உயர்த்தி “ஆத்தா.. ஆத்தா…” என்று கேட்டுக் கொண்டு சந்நிதி முன் ஓடினாள். ஒருசிலர் பின்னால் ஓட நானும் ஓடினேன். மூதாட்டி அமர்ந்திருந்த சந்நிதி முன் சென்று நின்றாள். ஜ்வாலை போல அவளுடைய முந்தானை பின்னால் விரிந்து படர்ந்து இருந்தது. நடப்பதை உணர்ந்த மூதாட்டி சட்டென்று எழுந்து கரங்கள் கூப்பி ஓரமாக நின்றாள்.

“அடியே பராசத்தி… உனக்கு கண்ணில்லையா… இப்படி சொல்றாங்களே. நீ இருக்கியா இல்லையா… பிள்ளையை தூக்கிக்கிட்டு பொடி நடையா வந்தனே… மறந்து போச்சா. தரித்திரத்துக்கு பொறந்து தரித்திரத்துக்கு வாக்கப் பட்டாலும் உனக்கு வெள்ளில்ல கண் செஞ்சு சாத்தினேனே தெரியலையா… ஆயிரம் கண்ணுன்னு சொன்னாங்களே ஒரு கண் தொறக்கப்பிடாதா… சொல்லுடி… அடியே சொல்லுடி… உசுரு வேணுன்னா என் உசுர எடுத்துக்கடி முண்ட…” இரு கரங்களையும் வானுக்கு உயர்த்தி நெஞ்சில் அறைந்தாள். கரங்கள் வானுக்கும் நெஞ்சுக்குமாக அறைந்து கொண்டே இருந்தது. யாரும் அருகில் செல்ல முடியவில்லை. “என் பிள்ளைக்கு இல்லாத உலகம் அழிஞ்சு போகும். மண்ணோடு மண்ணா போகும். தெய்வம் செத்துப் போகும்..” முஷ்டித்து தூணில் குத்தினாள். விரிந்த கூந்தலைப் பிய்த்துக் கொண்டாள். மூதாட்டி இறங்கி பக்கவாட்டில் வந்து அவள் தலை பற்றி நெஞ்சோடு அணைத்தாள். இளம் தாய் சரிந்து மூதாட்டியின் கால்கள் பற்றிக் கொண்டாள். மூதாட்டி அமர்ந்து அவளை ஏந்திக் கொண்டு முகம் துடைத்து விட்டாள். அவிழ்ந்த கூந்தலைக் கோதிவிட்டாள். எரியும் தீயில் கூட சேர்ந்து எரிவது போல இருந்தார்கள். தாயின் கேவல் உச்சம் தொட்டு இறங்கியிருந்தது. முந்தானை இருவரையும் சேர்த்து மூடியது.

எனக்குப் புரிந்திருந்தது. இருந்தும் துக்கம் என்று ஏதும் மேலிடவில்லை. அழுத்தம், ஏமாற்றம்.

வெளி உலகில் புது வருடம் பிறந்திருந்தது. எங்களுக்குப் பழைய வருடமே நீட்டி நீட்டி சென்று கொண்டிருந்தது. அவசர ஊர்திகள் உள்ளே வந்து சென்ற வண்ணம் இருந்தது. நான் அந்த இளம் தாயைப் பார்த்தவாறு அங்கேயே அமர்ந்திருந்தேன். சொந்த வாகனங்களில் அடிபட்டவர்களையோ நோயாளிகளையோ கூட்டி வருவோர் உள்ளே வந்தும் சரியான வழி தெரியாமல் வேறு வேறு வாசல்களுக்குப் போய்த் திரும்புவதையும் கவனித்தேன். நள்ளிரவு தீவிரமாக இறங்கியிருந்தது. தாயைச் சுற்றி சிலர் பரபரப்பு கொண்டார்கள். அந்தத் தகப்பன் வந்து நின்றான். தாய் மீண்டும் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள். மூதாட்டி விலகினாள். தகப்பன் அவளைக் கைத்தாங்கலாக தூக்கி விட்டான். இருவரும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அவசர சிகிச்சை வாயில் சென்றனர். சிலர் கூட சென்றனர். நானும் சென்றேன். அவர்கள் உள்ளே சென்றனர். நானும் சென்றேன். வார்டின் உள்ளே ஒரு பக்கவாட்டு அறையில் வெண் மெத்தையில் அந்தக் குழந்தையை நீட்டி பொதி போல் கிடத்தியிருந்தார்கள். தாய் பொதி மீது தன்னை விரித்துக் கொண்டு சரிந்தாள். தகப்பன் பிடி விலகி மேல் நோக்கி “தெய்வமே… தெய்வமே… தெய்வமே…” என்று குலுங்கினான். உறவினர்கள் துவரத்தில் வாய் பொத்தி தேம்பினர். நான் எம்பிப் பார்த்தேன். குழந்தை முகம் கண்டேன். அது பிரகாசமாக இருந்தது. தியானத்தில் இருப்பது போல. சவாசனத்தில் இருப்பது போல.

நான் பின்வாங்கினேன்.

பூச்சி விழித்துக் கொண்டது. வட்டமடித்தது. பரபரத்தது.

வெளிய அந்தச் செவிலியர், “இ என் டி டாக்டர் காலை 11 மணிக்கு தான் வருவார். நீங்க போயிட்டு காலையில வரலாம்.” என்றார்.

“நான் இங்கேயே இருக்கேன்.” என்றதும் என்னை அரை வினாடி பார்த்துவிட்டு வேலையைத் தொடர்ந்தார்.

நான் ஒரு தூணோடு சாய்ந்து குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டேன். சாட்சிபூதம் போல. அந்த இரவில் பன்னிரண்டு மரணங்கள் நடந்தன. யாருக்கும் என் மனம் வக்காலத்து வாங்கவில்லை. சாகட்டும் செத்துப் போகட்டும்.

“ம்” என்று இருந்த மனம் “விம்” என்று எழுந்தது. உலகியற்றியான் ஊதாரியாக இருக்கும்போது மரணமே சகஜம். தெய்வமாம்! இழிமகனே! வீணனெ! நாயும் செய்யுமா இந்தச் செயலை. தவஞ்செய்தாருக்கு அவஞ்செய்தாயே. நீயெல்லாம் தெய்வமா. வேசி மகனே! இழிபிறப்பாளனே! உன் வினை முடைநாறுகிறது. உன் இருப்பு ஊசி அழுகும். உன் இறுதி கைகூடும். நீ இல்லாமல் போவாய். குடிகாரன் பிழைப்பானாம்; குழந்தை மரணிக்குமாம். இங்கிருக்கும் நீதி உணர்ச்சிக்கு என்ன பொருள். இனி எதை நம்பி வாழ்பவர்கள் உயிர் விடுவது? மனித நீதிக்குப் பிரபஞ்ச நீதி இடம் கொடுக்காதோ?

தெய்வமாம் தெய்வம்! இப்போது நீ சொல், உன் மரணம் எப்படி நிகழ வேண்டும் என்று. குளிரில் உறைந்தா; நெருப்பில் கருகியா; நீரில் மூழ்கியா; வெடித்துச் சிதறியா? புலனுக்கு அகப்படாதவன் புவியின் விதிக்கா கட்டுப்படுவாய்? உன்னைக் கொல்ல முடியாது. ஆனால்… ஆனால்… மறக்க முடியும். அதுவே உன் மரணம். நீ மறக்கப்படுவாய். பூரணமாக மறக்கப்படுவாய். உனக்கு இங்கு வேரில்லாமல் போகும். உனக்கு அவி கிடைக்காமல் ஆகட்டும். உன் நூல்கள் தீயில் பொசுங்கட்டும். உன் சாத்திரங்கள் காற்றில் கரையட்டும். உன் சலங்கை சப்தமில்லாமல் ஆகட்டும். உன் ஆயுதம் உருகி வழியட்டும். உன் மந்திரம் அர்த்தமில்லாக்கட்டும். உன் பீடம் பிளந்து துண்டுகளாகப் போகட்டும். உன் காண்டாமணி ஊமையாகட்டும். உன் பிரஜைகள் மதம் மாறட்டும். உன் கோபுரம் இடிந்து தரைமட்டம் ஆகட்டும். உன் விருட்சத்தின் மீது இடி விழுகட்டும். உன் ஸ்தலம் மண் மேடாகட்டும். ஒழியட்டும் ஒழியட்டும் ஒழியட்டும்… நான் வேண்டுவது பிரளயம்… ஆம் பிரளயம்.

என்னோடு சேர்ந்து பூச்சியும் பரிதவித்தது. இல்லை. பூச்சி மட்டும் தான் பரிதவித்தது.

இனி யாரும் இங்குப் பிழைக்கக் கூடாது. குழந்தைக்காக என் உயிர் என்பதல்லவா பேரம். நான் இனி இந்த உயிரை யாரின் பேரில் விடுவேன்? அந்தக் குடிகாரனுக்கா? இனி யாரும் இங்குப் பிழைக்கக்கூடாது.

என்னுடைய ஒவ்வொரு செயலுக்கும் முடிவுக்கும் இந்தப் பிரபஞ்சத்திடமிருந்து எதிர் செயலும் முடிவும் என்னை வந்து அறைந்து கொண்டேயிருக்கிறதே. ஆற்றாமையும் கையறு நிலையும் அன்றாடமாயிருக்கிறதே. பிரபஞ்சம் அளவே விரிந்தால் கூட பிரபஞ்சத்துக்குப் பதில் சொல்லி விட முடியாது போலும்.

உலகை அழிக்கும் பொத்தான் இங்கு எங்கோ இருக்க வேண்டும். அழுத்தியவுடன் உலகம் அழிந்து போக வேண்டும். ஒரு விரல், ஒரு சொடக்கு. என்னை அழித்துக் கொள்வதும் உலகை அழிப்பதும் ஒன்றுதான். உலகம் எனக்கு இல்லாமல் போகும். எளிய சிறந்த முறை. உயிர் விட எந்தக் காரணமும் எந்த நம்பிக்கையும் இனி எனக்குத் தேவையில்லை. உயிர் காரணம் என்றால் விடுவது காரியம். இனி இருக்கும் ஒரே காரியம் அதுவே.

இதற்கு மேல் மனம் ஓடவில்லை. அப்படியே தூணோடு சாய்ந்திருந்தேன்.

“சார், எமர்ஜென்சி வார்டுக்கு எப்படி போறது?” நான் கண் விழித்து பார்த்தேன். ஒரு சடலம் என் முன்னாள் வருத்தமாக நின்று கொண்டிருந்தது. “எமர்ஜென்சி வார்டு…” சடலம் மீண்டும் கேட்டது. இந்த மூதாட்டி எங்கே சென்றாள்? அந்தச் சடலத்துக்கு வழிகாட்டினேன். சடலம் நன்றி சொல்லாமல் நகர்ந்தது. அது எமர்ஜென்சி வார்டு அல்ல, அது ஒரு பிணவறை. சிறிது நேரத்தில் ஒரு வயதான பிணத்தைத் தாங்கியவாறு ஒரு இளம் பிணம் என்னைக் கடந்து அந்தப் பிணவறை நோக்கிச் சென்றது. ஓர் ஊர்தியில் ஒரு பிணம் படுத்திருக்க ஒரு பிணம் அமர்ந்திருக்க ஒரு பிணம் ஓட்டி வந்தது. நான் எழுந்து சென்று வழி காட்டினேன். உள்ளே வந்து அலைமோதி கொண்டிருக்கும் அனைத்து சடலங்களுக்கும் வழிகாட்டி பலகை போல நான் காரியமாற்றிக் கொண்டிருந்தேன். மரண வாசலுக்குப் காப்பாலன் போல. அனைவரையும் மரணத்திடம் ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தேன்.

“ம்” என்று இருந்தது மனம். அப்போது மருத்துவமனை வாசலில் தன் காதை அணைத்தவாறு ஒருவன் ஓடி வந்து நின்றான். வழி தெரியாமல் அங்குமிங்கும் அலை மோதினான். எல்லாப் பெரிய கட்டிடங்களையும் மாறி மாறிப் பார்த்தான். அவன் நேராக சந்நிதி முன் ஓடினான். எங்கே போனாள் அந்த மூதாட்டி என்றிருந்தது. அவன் என்னை நோக்கி ஓடி வந்தான். நான் எழுந்து நின்றேன். காதைப் பொத்தியவாறு ஓடி வந்தான். காலத்தைப் பின் நோக்கிப் பார்ப்பது போல் இருந்தது. இது நிச்சயமாக மனதின் மாயம் இல்லை. அதே பூச்சி தானா? என் பூச்சி மீண்டும் படபடத்தது. அது ஏதோ சொல்ல விளைகிறது. காதுக்குள் இருந்து. எனக்குத் தான் இதுவரை புரியவில்லை.

என்னை நோக்கி ஓடி வந்தவன் என்னைக் கடந்து ஓடினான். என்னைக் கடந்து ஓடியவனின் முகம் கண்டேன். பதட்டமும் வருத்தமும் நிச்சயமின்மையும் அழுகையுமான அந்த முகம் சற்றைக்கு முன் பரிச்சயமாயிருந்த முகம்.

நான் அவனுக்குப் பின்னால் “சார்… சார்…” என்று கூப்பிட்டுக் கொண்டே ஓடினேன். அவன் அவசர சிகிச்சை வார்டைக் கடந்து ஓடினான். “அந்தப் பக்கம் இல்லை சார், இந்தப் பக்கம். இஎன்டி டாக்டர் காலைல தான் வருவாரு. அது ஒன்னும் செய்யாது. அது உங்க கிட்ட ஏதோ சொல்ல வருது…” நான் கத்திக் கொண்டே பின்னால் ஓடினேன். அவன் தடுக்கி கீழே விழுகிறான். அவன் காதுக்கும் கைக்கும் சிக்கி இருந்த கைபேசி தெறித்து கீழே விழுகிறது. கைபேசியா? அவன் அதைப் பொருட்படுத்தாமல் வேறு வாசலுக்குள் நுழைந்து ஓடுகிறான். அந்தச் சிதறிய கைபேசியை எடுத்துக் கொண்டு பின்னால் ஓடினேன். “அந்தப் பக்கம் இல்ல, இந்தப் பக்கம்…”

அவன் இன்னுமொரு வார்டு முன் வந்து நின்றான். அங்கு இன்னொமொரு கூட்டம். இன்னொமொரு அவசர சிகிச்சை. தெய்வமே, மரணத்திற்குத் தான் எத்தனை வாசல்கள். அங்கு இருக்கும் அனைவரும் பதட்டமாக இருந்தனர். அவர்கள் கையில் மூடுண்ட பொதி. தெய்வமே…. மீண்டுமா…. அழிவு நெருங்கிவிட்டது. அது இங்கிருந்துதான் ஆரம்பமாகப் போகிறது.

நான் எதிர்பார்த்த ஒன்று அப்போது நடந்தது. ஆஹ்… பூச்சி வெளியே வருகிறது… வருகிறது… வந்ததேவிட்டது. காது மடலில் ஊறுகிறது. கை வைத்து அதை எடுத்தேன். அது ஓர் வினோத வண்டு. செந்நிறம். ஜ்வாலை போல் ஜொலித்தது. சற்று தேங்கி நின்று, பிறகு பறந்து வான் சென்றது. அப்படியானால்! அப்படியானால்! அழிவு தொடங்கிவிட்டது. அழிவு… பிரளயம்… பிரளயம்…

அவன் விம்முகிறான்; குலுங்குகிறான்; நடுங்குகிறான்; திசை தெரியாது மோதுகிறான். போதும்… நண்பரே போதும்… நான் அறிவேன். நானும் அங்கு இருந்திருக்கிறேன். இன்னும் சிறிது நேரம். அழிவு வந்துவிடும். அதுவரை பொறுத்துக் கொள். 

அவன் மண்டியிடுகிறான். “தெய்வமே… தெய்வமே…” என்று கத்துகிறான். வான் நோக்கி கரங்கள் எழுகிறது. ஆனால், அந்தக் கரங்கள் நெஞ்சில் அறைந்து கொள்ளவில்லை. அவற்றின் மீது அந்தப் பொதி வைக்கப்படுகிறது. என் கால்கள் நடுங்கின.

அமைதி அவ்விடத்தைக் கைப்பற்றியது.

பிறகு, அதிசயமானதும் அற்புதமானதும் அன்றாடம் உலகில் நடப்பதுமாகிய விடையறியா வினை ஒன்று நடந்தது. பொதி அசைந்தது. பொதி கீச்சிட்டது. பொதியிலிருந்து முளைத்த மீச்சிறு கரங்கள் வானை வரைந்தன. அதன் கால்கள் காலத்தில் நடனமாடின. அந்தத் தகப்பன் பொதிக்கு முத்தமிட்டான்.

பார்க்கும் மனம் பார்க்கப்பட்ட மனம் மீது படர்ந்து கரைந்தது. சட்டென்று ஆழத்தில் ஒன்று அடித்தது. என் கால்கள் பின்னோக்கி நடந்தன.

சு-க்கி-ல-மணி… என்று உரத்த உச்சாடனம் கேட்டது.

உச்சந்தலைக்கு மேலிருக்கும் வானமும் உள்ளங்களுக்குக் கீழிருக்கும் பூமியும் விலகி விலகிச் சென்றன. கீழே சாய்கிறது என் உடல். பின்னாலிருந்து இரு கரங்கள் தாங்கிப் பிடிக்கின்றன. கீழே சரிந்து திரும்பிப் பார்க்கிறேன். மூதாட்டியின் நீர்மை படர்ந்த ஆழமான கண்கள். அடியாழத்திலிருந்து பின் மண்டையில் படீரென்று ஒன்று வந்து அறைந்தது. கன்னங்கள் இறுகியது. தொண்டைக் குழி மூடிக் கொண்டது. கண்கள் மீதும் கன்னங்கள் மீதும் மூதாட்டியின் கரங்கள் வருடித் துடைக்கின்றன.

“அம்மா… தெய்வமே… தாயே… இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்…? ஏன் இதெல்லாம் நடக்குது?” என்று என் ஆழத்திலிருந்து ஒரு கேவல் ஒலியுடன் கேட்கப்பட்டது.

அவள் ஆழம் பதில் சொன்னது, “இது இப்படித்தான கண்ணு… நம்மளுக்கு தெரிஞ்சது தான… அழப்பிடாது… நாம பாப்போம்… இங்கனதான இருக்கப் போறோம்… பாப்போம்…”

என் உடல் நேராக அமர வைக்கப்படுகிறது. என் மூக்கில் வழியும் நீரை கிள்ளி எறிகிறாள். சுருக்குப் பையில் இருந்த திருநீற்றை அள்ளி எடுத்து என் ஆக்கினையில் அழுத்தி தீற்றல் இடுகிறாள். ஒரு பத்து ரூபாய் பழைய தாளை எடுத்து என் உள்ளங்கையில் திணிக்கிறாள். என் உச்சந்தலையில் கை வைத்து ஓதுகிறாள். பிறகு அந்தப் புதிய பிரஜையை நோக்கி நகர்ந்து செல்கிறாள்.

வெகு நேரம் ஓர் அம்சம் என்னைப் பீடித்திருந்தது. பிறகு என் கையில் இருக்கும் ரூபாய் தாளைப் பார்த்தேன். அதிலிருந்து புது மணம் வீசியது.

என்றென்றைக்குமான புதிய அம்சம் ஒன்று சூழ்ந்து கொண்டு வந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...