
“ஆன்மிகம் என்பது ஆதி தெய்வம் அல்லவோ, அது கோருவது மானுட பலி. ஒரு வண்டி நிறைய புல் கட்டுகளைத் தின்று, ஒரு செம்பு பால் மட்டும் கறக்கும் பசு போன்றது அது. இங்கே அறிவதை விட, அறிந்ததை விடுவதே அதிகம்.”
சுவாமி பிரம்மானந்தரின் வரிகள். ‘வந்தவழி’ எனும் நூலில், முன்னுரையாக எழுதியது. அதை வாசித்த காலங்களில் மீண்டும் மீண்டுமென அகத்தில் சென்று சேர்ந்துக் கொண்ட வரிகள் அவை. தத்துவங்களில் அகம் அலைக்கொள்ளும் பொழுதெல்லாம், இவ்வரிகள் வந்து மனதில் முனைக்கொள்ளும்; அலைக்கழிக்கும்; ஓங்கியடிக்கும்; ஓடவைக்கும். பிறகு கட்டற்ற ஒன்றை பிடித்து நிற்க வைக்கும்; சமநிலை படுத்தும்; அருகமர வைக்கும்; அத்தைகையது அவ்வரிகள்.
சுவாமியின் எழுபதாவது பிறந்தநாளை, சுங்கை கோப் பிரம்மவித்யாரண்யத்தில் கொண்டாடிய பொழுது, அவ்வரிகளை மீண்டும் நினைத்துக் கொண்டேன்.
பெருங்கூட்டமும், அதன் உணர்வுநிலைகளும் எப்பொழுதும் நம்மைச் சிறியதாக எண்ண வைத்து விடுகின்றன. அவ்வாறு பலமுறை எனக்கு ஏற்பட்டதுண்டு. ஆனால் அன்று அம்மாதிரி இல்லை. அகத்தில் இன்னதென்று தெரியாத மகிழ்ச்சி. அது மட்டுமே நிறைந்தது போன்ற உணர்வு. மகிழ்வைத் தாண்டி அது வேறெதுவோ ஒரு நிலை; ஒரு நிறைவு. ஓர் ஆழ்ந்த முழுத்தனிமை. அதற்கேற்ற ஓர் உணர்ச்சி பெருக்கு.
மும்பையில் சுவாமி சின்மயானந்தா அவர்களின் குருநிலையில் சுவாமியோடு படித்தவர்கள், மேடையேறிப் பேசினர். அவர்கள் அனைவரும் அத்தனை உரிமையாக சுவாமியை அவரது இயற்பெயர் சொல்லி அழைத்தனர். இளமையில் சுவாமி, எத்தனை வேகம் கொண்டவராக இருந்தார் என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தனர். மலேசியாவில் இருந்து, ஒரு துடிப்பான, அதே நேரத்தில் மிக அன்பான ஒரு நண்பன் அவர்களுக்குக் கிடைத்தான் என்றும், அவர்களிடம் சில நேரங்களில் பணம் இல்லாத பொழுது சுவாமி எவ்வாறு அவர்களுக்குப் பணம் கொடுத்து உதவினார் என்பதையும் உணர்ச்சிப் பொங்க விவரித்தனர். அவர்கள் அனைவரும் அங்கே ஒன்றாய் வேதாந்த கல்வி படித்தாலும், சுவாமி ஒருவரே துறவியானார் என்றும், ”எங்களால் முடியவில்லை, வந்தவுடனே திருமணம் செய்து கொண்டோம்,” என்றும் அவர்கள் சொல்லுகையில் அரங்கமே சிரிப்பால் நிறைந்தது.
அந்த நிகழ்ச்சியில் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியைக் குறித்து விரிவாகவே விளக்கப்பட்டது.

சுவாமி, ஜனவரி 20, கெடாவில் பிறந்து வளர்ந்தார். அவருடைய சொந்த ஊர், கெடாவில் உள்ள லூனாஸ் எனும் சிற்றூர். கல்வியில் சிறந்த மாணவர்கள் மட்டும் படிக்கும், பட்லிஷா இடைநிலைப்பள்ளியில் கற்று, தனது Higher School Certificate(HSC) கல்வியை பினாங்கு மெதடிஸ்ட் இடைநிலைப்பள்ளியில் முடித்தார். பிறகு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பட்டம் பெற்று, இடைநிலை பள்ளியில் ஆசிரியராகப் பணியில் அமர்ந்தார். நாடு சுதந்திரம் அடைந்திருந்தாலும், அன்றைய கல்வி முறை என்பது, பிரிட்டிஷ் ஆங்கில வழியில் அமைந்தது. எனவே அச்சமயத்தில், HSC தேர்வை எழுதி முடிப்பதும், ஆசிரியராகப் பட்டம் பெறுவதும், உயர்வான விஷயமாக கருதப்பட்டது. சுவாமி பத்தாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இதற்கிடையில், அவருக்குப் பிரம்ம ஸ்ரீ சிவானந்தர் அவர்களின் ஆன்மிக தரிசனத்தில் நாட்டம் ஏற்பட்டு, அவருடன் இணைந்து பயணிக்கத் துவங்கினார். பக்தி மார்க்கத்திலிருந்த அவருக்கு அத்வைதமும், வேதாந்தந்தின் மீது ஆர்வம் வரவே, தனது பத்தாண்டு கால ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு, மும்பை சுவாமி சின்மயானந்த அவர்களின் குருநிலையில் அத்வைதம் கற்கச் சென்றார். அங்கே சிலகாலம் பயின்றார். பிறகு, ரிஷிகேஷ் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களிடம் முறையாய் வேதாந்தம் பயின்று, அங்கேயே சந்நியாச தீட்சை பெற்று, மலேசியா திரும்பினார். இங்கே, தனது சொந்த நிலத்தில் அமைந்திருந்த வீட்டில், லக்ஷ்மி தியான மன்றம் என்ற ஒரு அமைப்பை நிறுவி, தன் ஆன்மிகப் பணிகளைத் துவக்கினார். சுவாமியைச் சந்திக்கவும், அவரது சொற்பொழிவுகளைக் கேட்கவும் கூட்டம் நிரம்பியதால், மேலும் புதிய ஒரு கட்டடத்தைக் கட்டி, தியான ஆசிரமம் என்று பெயரிட்டார். இன்னமும் லூனாஸில் உள்ள பாயா பெசாரில் மிக பிரபலமான ஓர் ஆன்மிக அமைப்பாக தியான ஆசிரமம் செயல்பட்டு வருகின்றது.

இவ்வாறு சுவாமியைப் பற்றிய விளக்கங்கள் அந்தப் பிறந்தநாள் விழாவில் பகிரப்பட்டன. இவற்றில் பெரும்பாலான தகவல்கள் நான் அறிந்தவைகள்தான். சுவாமியை அறிந்த பலருக்கும் தெரிந்த தகவல்கள்தான். இந்தத் தகவல்கள் வழியாகவே நானறிந்த சுவாமியை என் மனதில் தேடிக் கொண்டிருந்தேன்.
சுவாமியைப் பற்றி எண்ணுகையில், எனக்கு ஒரு கேள்வி தோன்றுவதுண்டு. சுவாமி சந்நியாசியாகும் பொழுது அவருக்கு இருபத்து எட்டு வயதிருக்கும். அந்த வயதில், உலகியல் இன்பங்கள் வேண்டாமென்று துறந்து விட்டு, சன்யாசம் மேற்கொள்ள கிளம்பிச் சென்றிருக்கிறார். அப்பொழுது மலேசியாவில், அத்வைதமோ, வேதாந்தமோ, தத்துவமோ பரவி பெருகியிருக்காத காலம். எது அவரைத் தூண்டியிருக்கும், எங்கிருந்து அவருக்கு அது தோன்றியிருக்கும்? அந்தத் துணிச்சல், அந்த வேகம், அந்தத் துறப்பு, அது அறிவார்ந்த உந்துதலா? அல்லது வாழ்வின் மீதிருந்த சலிப்பா? அது தன்னைப் பற்றிய மிகையுணர்வா? அல்லது தன்னுணர்வினால் ஏற்பட்ட விலக்கமா?
***
நான் சுவாமியை முதன் முறை, எப்பொழுது சந்தித்தேன் என்பதை நினைத்துக் கொண்டேன். அது மிக பசுமையாய் இன்றும் மனதில் தங்கிவிட்ட நிகழ்வு. மிக சாதாரணமாக நடந்து முடிந்த, அரிய சந்திப்பு அது. என்னுள் அறிவு நிகழ்ந்த தருணமென்று இப்பொழுது நினைத்துக் கொள்கிறேன்.
சுவாமியை நான் முதலில் சந்தித்தது பினாங்கு ராமகிருஷ்ண மடத்தில்தான். அப்பொழுது எனக்குப் பதினோரு வயதிருக்கும். அங்கே இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்களில் நானும் ஒருவன். அன்றைய காலங்களில், சுவாமி விவேகானந்தர் மேல் தீரா மோகம் கொண்ட நாட்கள் இருந்தன. அவரின் வாழ்க்கை வரலாறு நூல்களைத் தீவிரமாக படித்தேன். அவரின் கம்பீரமான புகைப்படங்கள் என்னை வெகுவாய் ஈர்த்திருந்தன.
அன்று சுவாமி விவேகானந்தரின் நூற்று ஐம்பதாவது பிறந்த நாள். விழாவிற்கு கூலிமிலிருந்து சுவாமியும் வந்திருந்தார். நான் சுவாமி விவேகானந்தர் போல மேடையில் மிக நேர்த்தியாக நடித்துவிட்டு, கீழிறங்கி சென்று சுவாமி பிரம்மானந்தரிடம் ஆசி வாங்க போனேன். அதை உடனடியாக தவிர்த்து, “இந்த வேடம் போட்டுக் கொண்டு யாரையும் பணிந்து வணங்க கூடாது. நாங்கள்தான் பணிய வேண்டும்,” என்று சொல்ல, பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் சிரிக்க, சுவாமி வணங்குவது போல் செய்ய, கூட்டமே கலகலத்தது.

அன்று இரவு நான் அதை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். அவர் என்னைத் தாழ் பணிய விட்டிருக்கலாம். ஆனால், நான் போட்டிருந்த வேடத்திற்காக, அதை அவர் மறுத்து விட்டார். அது வெறும் வேடம் தான் என்றாலும், அதற்கான மதிப்பைச் சுவாமி எவ்வகையிலும் மறக்கவில்லை. விவேகானந்தரின் மேல் உள்ள மதிப்பு மட்டுமல்ல அது. சுவாமி தன் மேல் கொண்டிருந்த நிமிர்வு. எவ்வித தாழ்வுமின்றி அறிவை வணங்குதல் அது.
நாட்கள் கடந்து, எனக்கு வயது பதினாறாக உயர்ந்து, அதற்கேற்ற படி எனது சேட்டைகளும் கன்னாபின்னமென்று ஏறி, பார்க்கும் அனைவரிடத்திலும், என் மேல் கசப்பை மட்டுமே உமிழும் தகுதியைப் பெற்றிருந்தேன். அது உச்சமடைந்து, என் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, இடைநிலை பள்ளியிலிருந்து நீக்கி விடுவதாய், நிர்வாகம் உத்தேசித்தது.
சில நாட்கள் கடந்து, சுவாமியின் பகவத் கீதை வகுப்பு எங்கள் ஆசிரமத்தில் நடந்தது. ஆசிரம பொறுப்பாளர்கள் சுவாமியிடம் என்னைப் பற்றி கூறினர். என்னை அவரோடு அனுப்பி வைத்தால் நல்வழி படுவேன் என்று நம்பினர். மறுநாள் காலையிலே நான் ராமகிருஷ்ணா மடத்திலிருந்து கூலிம் தியான ஆசிரமத்திற்கு மாற்றலாகி வந்தேன். நண்பர்களைப் பிரிந்த ஆழ்ந்த சோகமும், அகமெல்லாம் கசப்பும் வெறுப்பும் ஒவ்வாமையும் கூடி, அவருடன் சென்றேன். கூடவே பதினைந்து ஆண்டுகள் ஒரே இடத்தில் வாழ்ந்த வாழ்வு, ஒரு கணத்தில் மாறிய மிரட்சியும் கூடியிருந்தது.
வந்தவுடன் சுவாமியுடன் ஏற்பட்ட அனுபவங்கள் ஏராளம். முதல் நாளிலே எனது துடுக்குத் தனத்தை பார்த்து, என்னிடம் ஜெயமோகனுடைய ‘கன்னியாகுமரி’ எனும் நாவலைத் தந்து வாசிக்கச் சொன்னார். இன்று நினைக்கையில், அந்த நூலும், சுவாமியின் செயலும் எத்தனை தூரம் என்னைக் கொண்டு சென்றிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் அவர் என்னிடம் நூல்களை அளித்துக் கொண்டிருந்தார். வாழ்வைப் பார்க்கும் நோக்கு மாறியிருந்தது. காட்டாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லபடுபவனுக்கு, கிடைத்த ஒரு மரக்கிளை போன்றிருந்தது அது.
இங்கே சுவாமியின் தியான ஆசிரமத்தில் வளர்ந்த ஒவ்வொரு சிறுவர்களும் ஏதாவது ஒரு குடும்ப சிக்கலும், ஒழுக்க சிக்கலும் கூடியவர்கள்தான். அத்தனை பேரையும் பராமரித்து, வளர்ப்பது என்பது சுலபமல்ல. கடுமையும், கண்டிப்பும், அடியும், திட்டுக்களும் மிக அவசியமே. அதிலும் சுவாமி தாராளமானவர்தான். எனக்குப் பதினேழு, பதினெட்டு வயது இருக்கும் பொழுது, சுவாமியின் இந்தக் கண்டிப்பு மேல் கடுமையான அதிருப்தியும், விலக்கமும், இறுக்கமும் கொண்டிருந்தேன். ‘துறவி என்பவர், சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும், அன்பானவர்கள்தான் துறவிகள். கண்டிப்பும் கடுமையும் எவ்வாறு சாந்தமே உருவான துறவிகளுக்குச் சாத்தியம்’ எனக் குழம்பினேன்.
குழப்பங்கள் பழுத்து, சுவாமியிடமிருந்து கடுமையான விலக்கம் ஏற்பட்ட பொழுது எனக்கு வயது பத்தொன்பது. சுவாமியும் என்னை விடுவதாய் இல்லை. என்னைப் பல வழிகளில் உடைத்தார். சிறிதளவேனும் கருணையின்றி என்னைக் காயப்படுத்தினார். அந்த வயது பையனுக்கு அவை எல்லாமே வெறும் உணர்ச்சி கொந்தளிப்புகளாகவே இருந்தன. அவரின் செயல்பாடுகள் அனைத்தும் என்னை அவரிடமிருந்து விலக்கின. அவரைப் பற்றிய குற்றச்சாட்டுகளும் குறைகளும் என மனம் முழுக்க கசப்பு வியாபித்திருந்தது. அந்தக் கசப்பை முற்றாய் அழிப்பதற்கு நான் எதையோ தேடிக் கொண்டிருந்தேன்.

மனம் அன்பை, அரவணைப்பை, காதலைத் தேடிக் கொண்டிருந்தது. அதில் கரைந்தழிந்து, முழுவதும் கலந்து விட வேண்டுமென்று தோன்றிக் கொண்டேயிருந்தது. அத்தனையும் மாற்றிவிடக் கூடியது போல் ஒரு காதல். அவளை ஐந்து வருடமாக தெரியும். அவளுடன் காதல் கொண்டேன். அவளுக்குள் நான் தொலைத்தவற்றை எல்லாம் தேடினேன். தாயை, தந்தையை, சகோதரனை, காதலியை, எதிரியை. அத்தனையும் ஒருவளிடம் கிடைக்கப் பெற்றவன், எத்தனை மகிழ்வில் ஆழ்ந்திருப்பான்? இருபது வயதில், ஒரு விபத்தில் அவள் காலமானாள். முழுமையாய் வீழ்ந்தேன். நிலைகுலைந்தேன். இனி எஞ்சியது வேறொன்றும் இல்லை என்று ஓடினேன். இதை ஒருவரிடமும் சொல்லவில்லை. எனக்குள் அது சென்று சேரவே அதிக நாட்கள் ஆயின. அகம் அவளது மறைவை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருகணத்தில் முழு வாழ்வும் எரிந்தழிந்து, கண் முன் நின்றுக் கொண்டிருப்பது போலிருந்தது. என்னால் இனி ஒருகணம் கூட இங்கே வாழ முடியாதென்று தீர்மானித்தேன்.
இருபது வயதில், சுவாமியை விட்டும், ஆசிரமத்தை விட்டும் விலகிச் சென்றேன். சுவாமியிடம் சொல்லி, அவரிடம் பணம் வாங்கிக் கொண்டு, ஆசிரமத்தில் இருந்து புறப்பட்டேன். விலகி செல்வதை, அவரிடம் தெரிவிக்காமல், வேறொரு காரணத்தைச் சொல்லிச் சென்றேன். நான் சொல்வது பொய்யென்று அறிந்தும், சுவாமி என்னிடம் பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்.
அவரை விட்டு விலகி கோலாலம்பூர் வந்தடைந்து, கிடைத்த வேலைகளைச் செய்து, நண்பனின் வீட்டில் தங்கிக் கொண்டேன். ஆனால் அவரைப் பிரிந்து வந்தது வெட்டுபட்ட சதை துண்டு போல அகத்தில் எங்கோ ஒரு மூலையில் துடித்துக் கொண்டிருந்தது.
வெளி உலகம், வெகு நிச்சயமாக நமக்கு வாழ்வின் குரூரங்களைக் கற்றுக் கொடுத்துவிடும் ஒரு அற்புத ஆசான். உறவுகளின் போலித்தனங்களையும், பசியின் முதல் வலியும், மற்றவர் நம் மேல் சிந்தும் காழ்ப்பும், நம்மைக் கசப்பு மிகுந்த மனிதனாக்கும் என உணர்ந்துக் கொண்டேன். தாங்க முடியாத மனச்சிக்கல்களும், கேட்பாரற்று இருக்கும் ஒருவனை உலகம் எத்தனை கீழ்மைபடுத்தி, உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் அச்சுறுத்தும் என்பதை உணர்ந்தேன். இனி என்னால் திரும்பி சுவாமியிடம் செல்ல முடியாது. செல்வது என்பது, நானே என்னை வதைப்பதற்குச் சமம். பலமுறை மரணத்தைத் தேடிச் சென்றிருக்கிறேன். மற்றவரிடம் பணம் கேட்டு அலைந்திருக்கிறேன். பசியில், வீதியிலே தூங்கியிருக்கிறேன். பிச்சைக்காரனை போல திரிந்திருக்கிறேன்.
அவளின் நினைவுகள் என்னைத் துரத்திக் கொண்டேயிருந்தன. ஒவ்வொரு கணமும் உடலை அறுத்தெறியும் உணர்வை அடைந்தேன். கொடுங்கனவுகள் அச்சுறுத்தின. எனக்குள் நானே பேசிக் கொண்டேன். பித்தனை போல் அலைந்தேன். ஒரே அறையில் இரண்டு மூன்று நாட்கள் ஒடுங்கியிருந்திருக்கிறேன். சுவாமி பலமுறை அழைத்தும் அவரை நிராகரித்தேன். என் நிலையை விளக்கும் மனநிலையில் நான் இல்லை. ஒருமுறை, சுவாமியே என்னைத் தேடி கோலாலும்பூருக்கு வந்தார். ஆனால் ஒருவரையும் என்னால் முகம் நோக்கி பேச முடியவில்லை. ஓடினேன், ஒழிந்தேன். ஒரு நாள், நான் தங்கியிருந்த கட்டடத்தின் விளிம்பில் நின்று, மேலிருந்து கீழே பார்த்துக் கொண்டிருக்கையில், சரியாக சுவாமி செல்போனில் அழைத்தார். மிக சரியான தருணமது. அவரது பெயர் செல்பேசியின் திரையில் தோன்றியதும், ஒருகணம் தற்சாவு என்பது எத்தனை கீழ்மை என்று தோன்றியது. என்றைக்கும் இல்லாமல், அன்று அவரது அழைப்பை எடுத்து பேசினேன்.
“என்னப்பா பண்ற, சாப்டியா, எங்க இருக்க, கைல காசு இருக்கா?” என்றார். அத்தனை நாட்கள் கழித்து அவரது குரல் செவி நிறைந்து சென்றது. கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வந்தது. சுவாமியிடம் அனைத்தையும் சொன்னேன். அழுதேன். அரற்றினேன். அவரிடம் முன்னமே அனைத்தையும் சொல்லியிருக்க வேண்டும். இத்தனை தூரம் நான் வந்திருக்க மாட்டேன். மன்னிக்க மன்றாடினேன். சுவாமி, நிதானமாய் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தார்.
“நீ மொத கெளம்பி ஆசிரமம் வாப்பா, எல்லாத்தையும் பேசிக்கலாம். உள்ளுக்குள்ள வெச்சிட்டு கொளம்பிட்டு இருந்தா ஒன்னும் நடக்காது. நீ மொத அடுத்த பஸ்ஸ எடுத்து ஆசிரமம் வா, நா இருக்கேன்,” என்றார். என்னால் மேற்கொண்டு பேச முடியவில்லை. தொண்டை அடைத்துக் கொண்டது.
மூன்று வருடங்கள் கழித்துத் திரும்பி ஆசிரமம் வந்தேன். சென்று திரும்பியவன் முற்றிலும் வேறொருவன். என்னிலிருந்து எதையோ நான் முழுமையாக எரித்து விட்டிருந்தேன். ஆனால் புதியதாய் ஒன்று வந்து குடியிருந்தது. என்னதென்று தெரியாத ஒன்று. அனைவரிடத்திலும் ஒரு விலக்கம் கூடியது. அதிகம் குழப்பமான சிந்தனைகள் வந்து அலைக்கழித்து கொண்டிருந்தன.
“இங்கே மீண்டு வருவது என்பது, உன்னை நீயே அறுக்கும் செயல்தான். ஒவ்வொருவர் பார்வையிலும் நீ ஓர் அவமானத்தையும், ஏளனத்தையும் உணர்வாய். உன்னை நோக்கி வீசப்படும் கற்களைக் கொண்டு காயப்பட போகிறாயா அல்லது, அதை கொண்டு கற்சுவர் எழுப்ப போகிறாயா என்பதை நீயே முடிவு செய்து கொள்,” சுவாமியின் இவ்வார்த்தைகள், மேலும் மேலுமென என்னை எதையோ தேட வைத்தது. அலைக்கழிக்க வைத்தது. எதுவோ ஒன்று எனக்குள் போதவில்லை என்று தோன்றியது. முழுவதும் எரிந்து எழுபவனால், முற்றிலும் வேறொன்றைக் கற்க முடியும்; கற்றேன். சுவாமியின் வகுப்பு அப்பொழுது புரிய தொடங்கியது. அவரது கடுமை என்னவென்று தெரிந்தது. கடுமையும் எரிச்சலும், மற்றவர்களிடமிருந்து வெளிபடுகிறது என்பதை நாமே முடிவு செய்து கொள்கிறோம். அதை மெய்யாக நோக்கினால் நம்மிடமிருந்தே வெளிப்படுகிறது. நம்மிடமிருந்து வருவதனாலே, நம்மைச் சுற்றி இருப்பதையும் அதுவாகவே மாற்றி, நமக்கு அளித்து கொண்டிருக்கிறது. என் இறுக்கத்தையும், எரிச்சலையும், மிக மெலிதாக நீக்கினேன். நீக்கிய கணம் அனைத்திலும் நிம்மதிக் கொண்டேன்.
பெரும்பாலும், ஒரு மாணவனுக்கு ஆசிரியர் அமைவதென்பது கடினம்தான். என் ஆசிரியர், என்னை முழுதும் அறிந்திருக்க வேண்டும். என் மேன்மைகளையும், கீழ்மைகளையும் தெரிந்திருக்க வேண்டும். என் ஆணவம் அடங்கி பணிய வேண்டும். ஒவ்வொரு கணமும் கற்பதனால் ஏற்படும் தெளிவின் மறுமுனையில், ஆணவம் பேருரு கொண்டு எழுந்து கொண்டே இருக்கும். அது மண்டியிட்டு முழங்காலிட்டு வணங்குவதற்கு ஆசிரியர் வேண்டும். ஒரு கணமும் உற்சாகம் குறைவின்று அவர் இருக்க வேண்டும். விருட்சமென எழுந்து பரவியிருக்க வேண்டும். குன்றாத நிமிர்வு கொண்டிருக்க வேண்டும்.
அதற்குரியவர் சுவாமிதான் என்பதை அறிந்து கொண்டேன்.

சுவாமியை ஒவ்வொரு கணமும் உற்று கவனிக்க ஆரம்பித்தேன். அவரிடம் வெளிப்படும் அனைத்தையும் உள்வாங்க துணிந்தேன். காயப்படுதுவதும், கருணை கொள்வதும் ஒன்றென எடுத்துக்கொள்ள முற்பட்டேன். சுவாமி ஒருகணமும் தளர்வில்லாது செயல்பட கூடியவர். காலையில் எழுந்து, நடை சென்ற பிறகு, உணவருந்தி, பாடம் படிக்கத் தொடங்கி விடுவார். ஒரு நாளும் அவர் தளர்ந்தோ சோர்ந்தோ நான் கண்டதில்லை. சலிப்படையாத செயலூக்கமும், சோர்வில்லாத செயல் திறனும், அவரிடம் ஒவ்வொரு வேளையிலும் வெளிப்படுவதைக் கண்டிருக்கிறேன். வேறொரு தளத்திலிருந்து, அகத்தைச் சுற்றியிருந்த தடையை விலக்கி கவனிக்கையில், அவர் செயல்களின் நுண்மை புரிந்தது.
ஒவ்வொரு நாளும், அவருக்கு வேதாந்த வகுப்புகள் இருந்தன. மலேசியாவின் பல முக்கிய நகர்களில் அவர் அவ்வகுப்புகளை நடத்திக் கொண்டிருந்தார். வகுப்புகள் முடிந்து, விமான பயணம் செய்து, ஆசிரமம் வந்தடைந்த பிறகும், பின்னிரவு இரண்டு மணி வரை படித்துக் கொண்டிருப்பார். இதை கடந்த நாற்பதாண்டுகளாக அவர் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது, இன்னமும் கூட எனக்கு மலைப்பை ஏற்படுத்துகிறது. ஒருகணமும், சோர்வோ, சலிப்போ, இதையெல்லாம் விட்டுவிட வேண்டுமென்ற எண்ணம் என்றாவது அவருக்குத் தோன்றியிருக்குமா என்றுகூட எண்ணியிருக்கிறேன். மலேசியாவில், வேதாந்த மரபிலும், அத்வைத போதனைகளிலும் இத்தனை தீவிரமாகச் செயல்பட்டு கொண்டிருப்பவர், சுவாமியைத் தவிர்த்து, நான் அறிந்து யாருமில்லை.
இத்தனைக்கும் நடுவில் அவர் நான்கு நூல்கள் எழுதியிருக்கிறார். அதில் இரண்டை நான் வாசித்தும் இருக்கிறேன். ‘மனமே சுகமே’, ‘வாழ்வே தவம்’, ‘குறையொன்றுமில்லை’, ‘தனியன்’, என்று அவர் எழுதியவற்றில் ‘குறையொன்றுமில்லை’ மற்றும் ‘தனியன்’ எனும் நூல்களில், சுவாமி ஆசிரியர் தளத்திலிருந்து இறங்கி, நண்பனாக தோளில் கைசரித்து பேசுவது போலிருக்கும். நவீன இலக்கியத்திலும் அவரது தீவிரதன்மை கூடியிருக்கும். கூலிம் நவீன இலக்கிய களம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் தீவிர வாசகர். எனக்கும் அடிக்கடி அவரது நூல்களைக் கொடுத்து வாசிக்கச் சொல்வார். நவீன இலக்கிய அறிமுகமே, எனக்குச் சுவாமியினால் தான் ஏற்பட்டது.
சுவாமி, நம்மிடம் தனியாக அமர்ந்து, சொல்லி கொடுப்பது இல்லை. நாமே சென்று கற்றுகொள்வது தான் ஒரே வழி. அறிவு என்பது அப்படி தான் இருக்க வேண்டும். தானே சென்று அடையும் அறிவே நிலைக்கொள்ளும். இப்பொழுது நினைத்துப் பார்க்கையில், எனது முதல் வகுப்பே அனுபவ கல்விதான். பதினாறு வயதில் ஆசிரமம் வந்தவுடன், ஒரு சாயங்கால வேளையில், சுவாமி என்னிடம் ஒரு சம்மட்டியைக் கொடுத்து, அங்கிருக்கும் கொல்லையில் கொத்தச் சொன்னார். பிறகு, சமயலறையில் சமைக்கும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. சமைப்பதற்கு ஒரு அம்மா வந்தார், அவரிடம் சென்று அதை கற்றுக் கொண்டேன். ஆசிரமத்தில் ஏதாவது விழாவோ, பூஜையோ நடந்தால் சமயலறையில் உதவினேன். ஆயிரம் பேர் கொண்ட கூட்டத்திற்கு ஒற்றை ஆளாய் நின்று தேனீர் கலக்கிக் கொடுத்திருக்கிறேன். பல வருடங்கள் ஆசிரமத்தைத் தூய்மை செய்யும் பணிகளைச் செய்திருக்கிறேன். அங்கிருக்கும் கடவுள் விக்கிரங்களுக்கு அபிஷேகம் செய்திருக்கிறேன். மந்திர பாராயணங்களைக் கற்றுக் கொண்டேன்.
இப்படிப் பல வருடங்கள் வெறும் அனுபவங்களையே கல்வியாய் அவர் கற்றுக் கொடுத்திருக்கிறார். அது என்னையறியாமல், என்னைப் பக்குவபடுத்தியிருக்கிறது.
“முதலில் இதையெல்லாம் கற்றுக் கொண்டால்தான், மனம் ஒரு நிலைபடும். கவன சிதறல் ஏற்படாமல் இருக்கும். செய்து கிடப்பதே கர்ம யோகம்,” என்பார். சுவாமி அன்று சொன்னதை இப்பொழுது காரணத்தோடு புரிந்து கொள்கிறேன். ஆனால் அந்த வயதில், எரிச்சலும் கடுப்பும்தான் அதிகமாயிருந்தன. ஒவ்வொரு முறையும் சுவாமியை எதிர்நோக்கும் பொழுதும், எனக்கு அதிர்ச்சியும் கசப்பும் ஒவ்வாமையும்தான் உருவாகியிருக்கின்றன. சுவாமி, வேண்டுமென்றே என்னைப் புண்படுத்தியிருக்கிறார்; பொதுவில் கிண்டல் செய்திருக்கிறார். ஆனால் அது என்னைப் பக்குவபடுதுவதற்காகவே என்று புரிந்து கொள்கிறேன்.
இப்பொழுது நினைக்கையில், நாம் ஓர் ஆசிரியரைச் சந்திக்கும்போது முதலில் நமக்கு ஏற்படுவது ஒரு சுய உடைவுதான். ஆணவ உடைவு என்றும் அதை கூறலாம். அவர் நம்மை நிலைகுலையச் செய்கிறார். நம் நம்பிக்கைகளையும் நம் கொள்கைகளையும் கலைக்கிறார். நாம் நிற்கும் மண்ணைக் கரைக்கிறார். ஆகவே, நாம் பதற்றமும் எரிச்சலும் அடைகிறோம். சுவாமி என்னைப் புண்படுத்தும் போதெல்லாம், என் அகம் அவரிடமிருந்து விலகிச் செல்ல மறுத்து கொண்டேயிருந்தது. எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும், நான் என் பணிவை மட்டும் அவரிடமிருந்து குறைத்துக் கொள்ளவில்லை. சுவாமியின் செயல்களினால், நான் கொந்தளித்திருக்கலாம். அவரது நுண்ணுணர்வை, ஆளுமையை நிராகரித்திருக்கலாம். நக்கலும் கிண்டலும் செய்திருக்கலாம். பொதுவாக அறியாமையில் இருந்தே அத்தகைய குழப்பங்கள் உருவாகின்றன. ஆனால், நான் அப்படிச் செய்யவில்லை.
நான் ஆழமாகப் புண்பட்டேன், நிலைகுலைந்தேன். ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று கவனித்தேன். அதை பற்றி மீண்டும் மீண்டும் யோசித்தேன். அவர், நம்மை போன்ற ஒரு சராசரி மனிதர் அல்ல. ஒரு சராசரி மனிதரால் மிக நிச்சயமாக இவ்வளவு செயல்பட முடியாது. என் காலகட்டத்தின் மாமனிதர்களில் ஒருவர் அவர் என்று எண்ணியிருந்தேன். அந்த பணிவு என்னைக் காத்தது. இல்லையேல் அவரை நான் முழுக்கவே இழந்திருப்பேன்.
பல்கலைக்கழகம் சென்று, பிறகு கொரோனா ஊரடங்கில், இரண்டு வருடங்கள் சுவாமியுடன் கழித்த நாட்கள் மிக இனிமையானவை. அப்பொழுது முழுமையாக ஜெயமோகனின் வெண்முரசை வாசித்து, சுவாமியிடம் அதை பற்றி விவாதித்துப் பேசியதை இன்றும் நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன். வெண்முரசு வாசிப்பின்போது ஏற்பட்ட அக கொந்தளிப்புகள் அனைத்தையும், சுவாமியின் அத்வைத வேதாந்த வகுப்புகள் சரிசெய்து சமன்நிலை படுத்திக் கொண்டிருந்தன. காலையிலும் மாலையிலும், நடை செல்கையில் சுவாமியிடம் கொண்ட உரையாடல்கள் என்றைக்கும் என்னுள் தங்கி விட்ட பொற்கணங்கள். சிலவை வாழ்வின் மீதிருந்த எனது நோக்கையே மாற்றியது எனலாம்.
ஒருமுறை அவரிடம் என் வாழ்வில் நடந்த அநீதிகள், எனக்குக் கிடைக்க பெறாதவைகள், நிராகரிப்புகள், அவமானங்கள், நான் இழந்தவைகளைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன்.
‘ஏன் இங்கனைத்தையும் சரியாய் நிகழ்த்தி படைத்த ஒன்றிற்கு, என் வாழ்வைச் சரியாய் அமைக்கத் தெரியவில்லை’ என்பதே என் கேள்வியின் சாரம். அதற்கு சுவாமி சிரித்து விட்டார். பின் மண்டையில் ஓங்கி அடித்தது போன்று இருந்தது அது. அவர் “இதுதான் மானுடர்களின் பிரச்சனை. தன் மீது, தானே கொண்டிருக்கும் சுய பட்சாதாபம். உனது பிரச்சனை, உனக்கு இதெல்லாம் அமையவில்லை, கிடைக்கவில்லை என்ற ஏக்கம். பிறகு அதன் வழி வரும் தாழ்வுணர்ச்சி. நீ Why me என்று கேட்கிறாய். நீ கேட்க வேண்டியது Why not you என்ற கேள்வி தான்,” என்று சொன்னார். “இத்தனை கருணையற்றதா இயற்கையும், உங்கள் தத்துவமும்,” என்று கேட்டேன். அதற்கும் சிரித்தார்.
“கருணை என்று எதை சொல்வாய்? இங்கு நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்பவனே வாழ்வை அறிந்து கொள்கிறான். புயலில் சிக்கி நாம் வீசப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கு, நீ சருகு போல ஒப்புக்கொடுத்து பறக்க போகிறாயா? இல்லை அதை எதிர்த்து நிற்க போகிறாயா? எதிர்த்தால் அதன் வேகத்தில் தூக்கியடிக்கப்பட்டு முற்றிலும் அழிவாய். முரண்படாமல், வாழ்வை வழிபடுவதே சிறப்பு,” என்றார்.
“அப்படியென்றால், இங்கே எதையும் என்னால் மாற்ற முடியாதா?” என்றேன். அதற்கு சுவாமி, “ஒரு கல்லைப் போல இன்னொரு கல் கிடையாது. அப்படி ஒரே மாதிரியான கல்லை நீ எப்பொழுது கண்டுபிடிக்கிறாயோ, அப்பொழுது உன் வாழ்வை நீ மாற்றிக் கொள்ளலாம்,” என்று சொல்லி சிரித்தார்.
நிச்சயமாக, ஒரு கல்லைப் போன்று இன்னொரு கல் இவ்வுலகில் இல்லைதான்.
“ஒரு மனிதன் தன்னை முழுமையாய் உணர்வதே, தன் உடல் மூலமாக தான். உடல் மேல் அவன் அத்தனை உரிமை கொள்கிறான்; பற்றுக் கொள்கிறான். ஆனால், நம்மால், நம் உடலில் செயல்படும் உறுப்புகளின் சுழற்சியைக்கூட மாற்ற முடியாது. இதய துடிப்பின் கணக்கையும், மூளையின் ஒவ்வொரு செயல் நுண்மையையும், ஒரு போதும் நம்மால் நிர்ணயிக்க முடியாது. அப்படியிருக்க எவ்வாறு இவ்வுலகை மாற்றுவாய்? எப்படி ஒவ்வொரு உயிரணுக்களும், ஒவ்வொரு உறுப்புகளும், தன் வேலையைச் சரியாய் செய்கின்றனவோ, அதை போல் நீயும் உனது கடமையைச் செய்தாலே, இவ்வாழ்க்கையை உன்னால் எதிர்கொள்ள முடியும். இவ்வுலகும் அவ்வாறே. இங்கே நிகழ்வதெல்லாம் ஒரு அமைப்பு மட்டுமே. ஒட்டாமலும் உரசாமலும், சம்சார வாழ்வை எதிர்கொள்”, என்றார்.
“எதையும் மாற்ற முடியாது என்பதற்காக, சோர்ந்து செயலற்று போக வேண்டுமென்று சொல்லவில்லை. உன் செயலைத் தொடர்ந்து செய். அதன் மேல் பற்றுக் கொள். ஆனால், அந்தச் செயலின் பலன்கள் மேல் பற்றுக் கொள்ளாதே. கடினம்தான். முயன்று பார்,” என்றி கூறிச் சிரித்தார். அத்தனை பெரிய உயர்தத்துவ நோக்கை, எனக்குப் புரியும்படி மிக எளிமையாய் சொன்ன சுவாமியை, பிரம்மிப்புடன் எண்ணிக் கொள்கிறேன்.
இப்போது தோன்றுகிறது. என் அகங்காரம்தான் என்னை, சுவாமியிடம் இன்னமும் உரையாட தன்னம்பிக்கையை அளித்து, அவரை நெருங்கச் செய்திருக்கிறது. என் அகங்காரத்தைத் தொடர்ந்து, அவரின் ஆளுமை என்னை உடைத்தாலும், என்னால் எழ முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. என்னை அது உடைத்தால் உடைக்கட்டுமே என்ற திமிருடன்தான் என்னை மீண்டும் மீண்டும் வைத்துக் கொண்டிருக்கிறேன். சுவாமி, என்னை உடைத்த தருணங்களிலெல்லாம் என்னை உருவாக்கிக் கொண்டும் இருந்தார் என இப்போது உணர்கிறேன்.
பெருமழை பெய்து, இங்கே பல்லாயிரம் விதைகள் முளைக்க காரணமாய் இருக்கும். அதற்கு அது போதும். அது போல, அனுபவம் விரிந்து பேரனுபவமாக ஆவதற்குக் கற்பனை ஒன்று போதும். ஆனால் ஒரு விதையில் இருந்து, ஒரு பிரபஞ்சத்தை வளர்தெடுப்பதற்கு, கற்பனை மட்டுமே போதாது. எந்தச் சக்தி, இங்கெல்லாம் உருவாவதற்குக் காரணமாயிருக்கிறதோ, அந்த ஆற்றல் நம்முள் குவிய வேண்டும். அதையே சுவாமி உள்ளுணர்வு என்று சொல்கிறார்.
***
சென்ற வாரம், சுவாமியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவரிடம் எனக்கு முன்பு ஏற்பட்டிருந்த விலக்கத்தைப் பற்றி பேசினேன். ஏன் அவர் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டார் எனக் கேட்டதற்கு “கடுமை, கோபம் என்பது உணர்சிகள்தான். அது போலவே, கருணையும் தயையும். எல்லாவற்றையுமே வெளிபடுத்துவதற்கு நான் தயக்கம் காட்டுவதில்லை. என் உணர்ச்சிகளுக்கு நான் உண்மையானவனே. அது சிலரை வெறுக்க வைக்கும். சிலரை உடைக்கும். வெகு சிலருக்கே அது கற்றுக் கொடுக்கும்,” என்று சொல்லியப் பின் மெல்ல சிரித்துக் கொண்டார்.
பிறகு, அவருக்கு என் வயதில் ஏற்பட்ட அந்த ஆன்மிக உந்துதல் பற்றி கேட்டேன். எங்கிருந்து அந்தத் துணிச்சல் தைரியம் என்று கேட்டேன். அதற்கு அவர், “அப்படி கேட்டால் அதை சரியாக சொல்ல முடியவில்லை. ஒரு தைரியம் தான். துணிச்சலென்றும் சொல்லலாம். இது இப்படி தான் நடக்க வேண்டுமென்றே நியதி என்றும் வைத்து கொள்ளலாம்,” என்றார்.
சுவாமியின் ஆன்மிக வாழ்வை நான் இப்படிப் புரிந்துகொள்கிறேன். மலையாள சிந்தனையாளர், பி.கே. பாலகிருஷ்ணன், துறவிகளைப் பற்றி இப்படிச் சொல்வதாக, எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் குறிப்பிடுகிறார். சுவாமியைப் போன்றவர்கள், ஒன்றில் மட்டும் முழு உயிர்ச்சக்தியும் குவிந்தவர்கள். அதனாலேயே சராசரித்தன்மையை முற்றிலுமாக இழந்தவர்கள். தங்கள் மெய்ஞானத்தை நிறுவத் தங்கள் வாழ்க்கையைக் களபலியாகக் கொடுக்கிறார்கள். தியாகம் மூலம் தங்கள் கருத்துக்களுக்கு அடிக்கோடிடுகிறார்கள். அவற்றை அவர்களால் தவிர்க்க முடியாது.
சுவாமி குறைந்தது, நூறு பையன்களையாவது வளர்த்திருப்பார். எனது முழு கல்வி செலவையும் அவரே ஏற்றிருக்கிறார். பண்பாட்டு நிகழ்சிகள், சமய முகாம்கள், இலக்கிய விழாக்கள் என்று தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறார். மலேசியாவில் ஒரு பெரும் ஆன்மிக இயக்கத்தை உருவாக்கி, செயல்படுத்தி, அதற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்று அமர்ந்திருக்கிறார். அவர் சொன்னது ஒன்றுதான். ‘இயற்கை, இதை என் வழியே நிகழ்த்துகிறது. எனக்கு இதில் எவ்வித தொடர்பும் உரிமையும் இல்லை.’
வரும் ஜூலை 10, குரு பூர்ணிமா. தன்னைக் குரு என்று சொல்வதை, சுவாமி என்றுமே விரும்பியது இல்லை. ஆசிரியராக அவர் நின்று சொல்லியவற்றை, நினைவில் நிறுத்துவதே மாணவனாக எனது தகுதி என்று கூறுவேன்.
இப்பொழுது உணர்கையில், சுவாமியின் கண்டிப்பு என்பதே, ஒருவகை அன்புதான். அவர் அத்தனை இயல்பானவர். எளிமையானவரும் கூட. எங்களுடன் சேர்ந்து, அமர்ந்தே தொலைக்காட்சியும் பார்க்கக் கூடியவர். எங்களுக்கு அவரே உணவைப் பரிமாறுவார். அதில் அத்தனை வாஞ்சை இருக்கும். அவரைப் போன்று அத்தனை பிரமாதமாக பில்ட்டர் காப்பியும், தேநீரும் கலக்க முடியாது என்று நான் சட்டையைக் கிழித்துக் கொண்டு எங்கு வேண்டுமென்றாலும் சொல்வேன். எழுதும் பொழுதே அதன் மணம் வந்து விடுகிறது. பெரும் வேழம் போல் அவர் அனைவரையும் அரவணைத்துக் கொள்கிறார். ஒவ்வொரு கணமும் தன்னை மற்றவருக்கு அளித்துக் கொண்டேயிருக்கிறார். பின் சட்டென பிரிந்து, தன் இருப்புக்குள் சென்று ஊழ்கமென அமர்ந்துக் கொள்கிறார்.
பெருந்தந்தையர்களுக்கே உரித்தான பேரன்பு அவருடையது. யோகிகளுக்கென திறம்கூடிய செயல்கள் அவரது செயல்கள். அருகரென அமர்ந்து, ஆழ்ந்த அத்வைதத்தை அருளக்கூடியது அவரது ஞானம்.
அந்தத் தூய அறிவை என்றுமே வணங்குகிறேன்.