
இவ்வாண்டு வல்லினம் விருது பி. எம். மூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மலேசியக் கல்விச் சூழலில் நவீன இலக்கியத்தை வலுப்படுத்தியதோடு சிறுவர் இலக்கியம் மலேசிய நாட்டில் வளர பங்காற்றியவர் பி. எம். மூர்த்தி அவர்கள். எஸ்.பி.எம் இலக்கிய வளர்ச்சிக்கும் மலேசிய இளையோர் சிறுகதை எழுச்சிக்கும் பி.எம்.மூர்த்தியின் பங்களிப்பு முதன்மையானது. அவர் வாழ்நாள் சேவையைப் போற்றி இவ்விருது வழங்கப்படுகிறது. விருது தொகையாக RM 5000 ரிங்கிட் வழங்கப்படுவதுடன் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட விருது கேடயமும் வழங்கப்படும்.
இந்த வல்லினம் விருது விழா டிசம்பர் 21 ஆம் திகதி மதியம் 2 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரிக்பீல்ட்ஸில் உள்ள YMCA மண்டபத்தில் இந்த விருதுவிழா நடைபெறும். மேலும் இந்த விருது விழாவை ஒட்டி பி.எம்.மூர்த்தி அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை விரிவாகப் பகிரும் நூலும் வெளியீடு காண்கிறது.

எழுத்தாளர் பெருமாள் முருகன் வருகை
இவ்விருது விழாவை ஒட்டி எழுத்தாளர் பெருமாள் முருகன் மலேசியாவுக்கு வருகையளிக்கிறார். பெருமாள் முருகன் நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என 16 நூல்களும், 125-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
தமிழ் எழுத்தாளரான பெருமாள் முருகனின் ஆக்கங்கள் மொழிபெயர்ப்பு வழியாக உலகம் முழுவதும் வாசிக்கப்படுகின்றன. இவரது ஒன்பது நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘பூக்குழி’ 2016-ல் ‘Pyre’ என்ற பெயரில் அனிருத்தன் வாசுதேவனால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு 2017-க்கான தெற்காசிய இலக்கியத்திற்கான DSC பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் 2023-ம் ஆண்டுக்கான பன்னாட்டுப் புக்கர் பரிசுப் போட்டிக்கான பதின்மூன்று நாவல்கள் கொண்ட நெடும்பட்டியலில் இடம்பெற்றது. இப்பட்டியலில் இடம்பெற்ற முதல் தமிழ் நாவல் இதுவே. மேலும் ஆளண்டாப்பட்சி ‘Fire Bird’ என்ற பெயரில் ஜனனி கண்ணனால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. நிழல்முற்றம் நாவல் போலிஷ் மொழியிலும் மாதொருபாகன் நாவல் ஜெர்மன் மொழியிலும் செக் மொழியிலும் வெளியாகியுள்ளன. மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் மாதொருபாகன் நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவரது பெரும்பாலான நாவல்கள் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
வல்லினம் பட்டறை
பெருமாள் முருகனின் வருகையை ஒட்டி டிசம்பர் 20 – 21 ஆகிய நாட்களில் சிறுகதை, கட்டுரை எழுதும் பயிற்சிப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டறையில் கலந்துகொள்வோர் இம்மாத இறுதிக்குள் (செப்டம்பர் 30) கீழே உள்ள இணைப்பில் பதிவு செய்தல் அவசியம். இப்பட்டறை YMCA கட்டடத்தில் உள்ள பயிற்சி அறையில் நடைபெறும். தங்கும் வசதி, உணவு ஆகியவற்றுக்கு கட்டணமாக 150 ரிங்கிட் செலுத்த வேண்டும்.
முகாமில் கலந்துகொள்ள பதிவு செய்க
அனைத்துத் தொடர்புகளுக்கும்: ம. நவீன் 0163194522, அ. பாண்டியன் 0136696944