“மலேசிய நாட்டுப்புறப் பாடல் மரபின் தொடர்ச்சி விடுபட்டு விட்டது” – கோகுலராஜன்

மலேசியத் திரைத்துறையில் இயங்கி வருபவர் கோகுலராஜன். இளம் இயக்குநர், தொகுப்பாளர், நடிகர் எனும் பரிணாமங்களைக் கொண்டவர். இவர் இயக்கிய ‘Bird on the 27th floor’ எனும் குறும்படம் சீ ஷோர்ஸ் திரைப்பட விழாவில் (Seashores Film Festival)  திரையிடப்பட்டது. கோவிட் பெருந்தொற்றுக் காலக்கட்டத்தில் இயக்கிய ‘வைரஸ் மைரஸ்’ குறும்படம் குமான் குறும்படப் போட்டியிலும் வென்று பரவலான கவனத்தைப் பெற்றுத் தந்தது. ‘காளி’ எனும் முழுநீளப்படத்தையும் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் கோகுலராஜன் மலேசியத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கவனிக்கத் தக்க அம்முயற்சி குறித்தும் கோகுலராஜன் கலை பயணம் குறித்தும் அறிந்துகொள்ள அவருடன் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டோம்.

அங்கதக் காணொளிகள் எடுக்கும் ஆர்வம் எங்கிருந்து தொடங்கியது?

கோகுலராஜன்: இளவயதில் குடும்ப நிகழ்வுகளுக்குச் செல்லும்போது தனிமையில் மற்றவர்களை அவதானித்துக் கொண்டிருப்பேன். அந்தப் பழக்கமே எல்லாவற்றையும் சற்றே தூரத்தில் வைத்து அவதானிக்கும் மனநிலையை என்னில் ஏற்படுத்தியது. ஓர் அபத்த நிகழ்வைத் தூரத்திலிருந்து அவதானிக்கும்போது இயல்பாகவே நகைச்சுவை தன்மை பெறுவதை உணரலாம். அதே நிகழ்வுக்குள் பங்கேற்பாளராக நின்று பார்க்கும்போது அதன் நாடகீயத்தன்மைத்தான் தெரியும். அதனுடன் சிறுவயதிலிருந்தே காட்சி சார்ந்த கலை மீதும் எனக்கு ஆர்வமிருந்தது. நான்கு வயது தொடங்கியே ஓவிய வகுப்புகளுக்கு நான் செல்லத் தொடங்கினேன். ஓவியத்தின் மீதுதான் எனக்கு ஈடுபாடு இருந்தது. இவற்றுடன் மற்றவர்களைச் சீண்டிப்பார்க்கும் கலைகள் மீதும் ஆர்வமிருந்தது. எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் மந்தத்தன்மையைச் சற்றே சீண்டிப்பார்த்து உசுப்பிவிட வேண்டுமென்பதைப் போன்ற எண்ணமிருந்தது.  இடைநிலைப்பள்ளியில் பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து உரையாடும்போது சமூகத்தில் இருக்கும் சில சீர்கேடுகள் குறித்து விவாதிப்போம். அவ்வாறுத்தான், சமூகச் சீர்கேடுகளின் அபத்தத்தைச் சுட்டிக்காட்டும் விதமாக அங்கத (Satire) காணொளிகளைத் தயாரிக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. சமூகத்தில் நிகழும் ஒவ்வொன்றையும் பார்வையாளர் கோணத்தில் கண்டு அதன் அபத்தங்களைச் சுட்டிக்காட்டிக் காணொளிகளைத் தயாரிக்கத் தொடங்கினோம். அந்தக் காலத்தில் ஊடகங்களில் சமூகம் சார்ந்த கருத்துகள் மிக தணிக்கைக்குட்பட்டுத்தான் வெளிவரும். யூடியூப் தளத்தில் தைப்பூசம், உள்ளூர் கலைஞர்கள் எனப் பலவற்றையும் ஒட்டி அங்கதக் காணொளிகளை இயக்கி வெளியிட்டோம். மாற்று ஊடகங்களில் சமூக விமர்சனத்துடன் காணொளிகளைத் தயாரிக்கப்படுவதை ஒட்டி நல்ல எதிர்வினைகளே எழுந்தன. ஆனால், அந்தக் காணொளிகளால் சிலர் புண்படவும் செய்தனர். மலேசியக் கலைஞர்களைப் பற்றிய அங்கதக் காணொளிக்கு வழக்கறிஞர் அறிவிக்கையை அனுப்பியிருந்தனர். சொந்த சமூகத்தையே இழிவு செய்யலாமா போன்ற எதிர்வினைகள் வந்தன. ஆனால், சமூகத்தில் நோய் இருக்கிறதெனத் தெரிந்த பிறகு கண்டும் காணாது இருக்க முடியுமா. அதனைச் சுட்டிக்காட்டினால்தான் அதற்கான சிகிச்சைகள் செய்ய முடியும் என்றே எண்ணினேன். அதனாலே, அந்தக் காணொளிகளுக்கு வந்த எதிர்மறையான எதிர்வினைகளை நான் பொருட்படுத்தவில்லை.

உங்களுடைய சினிமா மற்றும் இலக்கிய ரசனை கலைத்துறை ஈடுபாட்டுக்குக் காரணமாக அமைந்ததா?

கோகுலராஜன்: என்னுடைய இளமையில் தமிழ்த்திரைப்படங்களையும் அமெரிக்கப் படங்களையும்தான் விரும்பிப் பார்த்தேன். ஆனால், அரிதாக அமெரிக்காவில் தயாராகியிருக்கும் வித்தியாசமான படங்கள் தமிழ்ச் சினிமா ஏற்படுத்தி வைத்திருந்த பிம்பத்தை ஒட்டிய கேள்விகளை எனக்குள் எழுப்பியது. அதன் பின், யூடியூப் பக்கத்தில் காணொளிகளைத் தயாரிக்கும் போதுதான் இயக்குநர் சஞ்சய் பெருமாளின் அறிமுகம் கிடைத்தது. அவ்வப்போது என்னைச் சந்திக்கும்போது யூடியூப் காணொளி முயற்சியைப் பாராட்டிப் பேசுவார். அதன் பிறகு, சீ ஷோர்ட்ஸ் திரைவிழாவில் (Seashorts Film Festival)  பங்கேற்றதிலிருந்து எங்களுக்கிடையில் சினிமா சார்ந்த உரையாடல் அதிகரித்தது. அவர் வாயிலாக நிறைய உலக சினிமாக்களை அறிந்து கொண்டு பார்க்கத் தொடங்கினேன். உலக சினிமாக்களைக் கண்டு ரசிக்கப் பழக்கப்பட்டப் பின் இயல்பாகவே என்னுடைய ரசனையும் மாறுபட்டது. என்னுடைய இலக்கிய வாசிப்பு மிகத் தொடக்க நிலையிலே இருப்பதாகவே சொல்வேன். தமிழில் அதிகமும் சிறுகதைகளையே வாசிக்கின்றேன்.

எப்பொழுது திரைப்படத்தில் பணியாற்றத் தொடங்கினீர்கள்?

கோகுலராஜன்: காணொளித் தயாரிப்பின் வாயிலாக திரைத்துறையில் பணியாற்றும் சில நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. என்னுடைய கட்டட வடிவமைப்பு கல்வி முடியவும் நண்பர்களும் சுயமாகப் படமெடுக்கத் தொடங்கியிருந்தனர். காணொளிகளை இயக்கியக் காலத்தில்தான் ‘மெட்ரோ மாலை’ படத்தை இயக்கிய ஹரன் – ஷோபன் அறிமுகமாகினர். அவர்கள்தான் ‘மெட்ரோ மாலை’ திரைப்பட தொகுப்புப் பணிக்கு என்னை அணுகினர். திரைப்படம் சார்ந்து பணியாற்ற தேவையான நுண்ணுணர்வு என்னிடம் இருந்தது. ஆனாலும், தொகுப்புப் பணியில் ஈடுபட எனக்கு ஓராண்டு காலம் அவகாசம் வழங்குமாறு கேட்டுக் கொண்டேன். அந்த ஓராண்டு காலக்கட்டத்தில் ஒரு நாளைக்கு ஒரு காட்சியைத் தொகுத்துத் தொகுப்பு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். ஆக, கட்டட வடிவமைப்பு துறை சார்ந்த பணிகளுக்குச் செல்லாமல் முழுமையாகத் திரைத்துறைக்கு வந்துவிட்டேன்.

குறும்பட முயற்சியைப் பற்றிக் குறிப்பிடுங்கள்.

கோகுலராஜன்: 2017 ஆம் ஆண்டு நடந்த சீ ஷோர்ட்ஸ் திரைவிழாவில் தன்னார்வளராகக் கலந்து கொண்டேன். அவ்வாண்டு இயக்குநர் சஞ்சய் பெருமாள் குறும்படப் போட்டித் தேர்வு குழுவில் இடம்பெற்றிருந்தார். அந்த மொத்த திரைவிழாவிலும் நானும் அவரும் மட்டுமே தமிழர்கள்.  அந்த ஏழு நாள் விழாவுமே கொண்டாட்டமாக இருந்தது. இப்படி ஒரே மாதிரியான திரைப்பட ரசனை கொண்டவர்கள் கூடும் இடங்களில் தமிழர்கள் ஏன் பங்குபெறுவதில்லை என்பது தொடங்கி பலவற்றை ஒட்டியும் நானும் சஞ்சயும் அதிகமும் பேசுவதற்கான வாய்ப்பும் அமைந்தது. 2021 ஆம் ஆண்டில் சீ ஷோர்ட்ஸ் திரைவிழாவில் பங்கேற்பாளராகக் கலந்து கொண்டேன். அவ்வாண்டு சீ ஷோர்ட்ஸ் திரைவிழாவின் ஒருபகுதியாக நிகழும் தென்கிழக்கு ஆசியாவின் சிறந்த இயக்குநர்களைக் கொண்டு நடத்தப்படும் (next new wave film makers workshop) இளம்படைப்பாளர்களுக்கான பட்டறைக்கும் தேர்வு பெற்றிருந்தேன். அந்தப் பட்டறையில் இளம் இயக்குநர்களுக்குப் படம் இயக்குவதற்கான திரைக்கதையும், நிதியும் தரப்படும். அதனுடன் தேர்ந்த படக்குழுவினரும் தயார் செய்யப்படுவார்கள். இவற்றையெல்லாம் கொண்டு ஒருவாரத்தில் குறும்படம் இயக்க வேண்டும்.  குறும்பட இயக்கத்தின்போது அரங்கிலிருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட படக்குழுவினருக்கும் கட்டளைகளைப் பிறப்பித்துப் படத்தை இயக்க வேண்டியிருந்தது. அடுத்தது என்ன என்ற கேள்வியுடன் அரங்கில் இருக்கும் படக்குழுவினர் ஆர்வத்துடன் கேள்விகள் கேட்க நான் சற்றே திகைத்துவிட்டேன். அதுவரையில் என்னை நன்கு அறிந்து வைத்திருந்த நண்பர்கள், குடும்பத்தினருடன்தான் குறும்படங்களையும் காணொளிகளையும் இயக்கி வந்திருந்தேன். ஆனால், திரைத்துறையுடன் தொடர்புடைய கலைஞர்களுக்குக் கட்டளைகள் தந்து படம் எடுக்கும்போதுதான் திரைப்படம் என்பதன் தீவிரத்தை உணர்ந்து கொண்டேன். என்னைச் சுற்றிக் கட்டமைத்திருக்கும் இறுக்கம் உடைபடாமல் நல்ல திரைப்படத்தை இயக்க முடியாதெனக் கண்டுகொண்டேன். அந்தத் திரைவிழாவில் பங்கேற்ற அனுபவமே என் பாதையை விரிவாக்கியது எனலாம். என்னைப் போலவே திரைத்துறையில் ஆர்வம் கொண்ட நண்பர்களின் அறிமுகத்தைப் பெற்றுத் தந்தது. அதைப் போல தமிழ்ச் சூழலுக்கு வெளியே இயங்கும் கலைஞர்களையும் அடையாளம் காட்டியது. நான் பயணிக்க வேண்டிய திசையையும் முடிவு செய்து தந்தது.

எம்மாதிரியான திரைப்படங்கள் இயக்குவது என்பதையொட்டி உங்களுக்குத் தெளிவுகள் இருக்கின்றனவா?

கோகுலராஜன்: என்னுடைய திரைப்பட இயக்கச் செயற்பாடென்பது தெரியாததை நோக்கிய தேடலாகவே இருக்கிறது. எனக்குத் தெரியாத ஒன்றை நோக்கிய தேடலில் பெறுபவற்றையே படமாக மற்றவர்களுக்கும் பகிர்கிறேன்.  ஆகவே, திரைப்படம் ஒட்டிய அறுதியான எண்ணங்கள் எதுவும் எனக்கில்லை. ஆனால், கலை என்பது சீண்டுவதாகவும் அபோதத்தைப் பற்றிப் பேசுவதாகவும் அங்கதம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் எனச் சில தெளிவுகள் இருக்கின்றன. அதே சமயம் என்னுடைய கலை மற்றவர்களுடன் உரையாடக் கூடியதாக இருக்க வேண்டும். கலையை மிக அறிவார்த்தமாக முன்வைப்பதில் எனக்கு விருப்பமில்லை. எனக்கு நிகழ்வுகளை ஒவ்வொன்றாக அடுக்கிக் கதை சொல்வதில் பெரிதாக ஆர்வமில்லை.  என்னுடைய சிந்தனையே ஒன்றுக்கொன்று தொடர்ச்சியற்று இருப்பதாகவே தெரிகிறது. ஆக, என்னுடைய சிந்தனை செயற்படும் விதத்தையொட்டித்தான் படங்களையும் இயக்குகிறேன். சிந்தனையில் இருப்பதையே படத்தில் காட்டுகிறேன் எனலாம்.

என்னுடைய திரைக்கதை கருக்களை முடிந்தவரையில் சுயதணிக்கை செய்யாமலே எழுதுவேன். சொல்லப்போனால், மற்றவர்களால் அதிகமும் பேசப்படாத விடயங்களை ஒட்டித்தான் என்னுடைய கதைக்கருக்களை அமைத்துக் கொள்கிறேன். அம்மாதிரியான திரைக்கதைகள் நிச்சயமாய் ஜனரஞ்சக ஊடகங்களில் ஒளிப்பரப்பப்படாது என்பதையும் அறிந்தே வைத்திருக்கிறேன். அத்துடன், பார்வையாளர்களைச் சீண்டும் தன்மையிலான கதைகளை இயக்க வேண்டுமெனத்தான் எண்ணுவேன். தொடக்கத்தில் எனக்கு எந்த வடிவத்தில் படம் இயக்குவது என்பதில் குழப்பமிருந்தது. கோவிட் காலக்கட்டத்தில் ‘பந்துன்’ (Pantun) எனும் திரைப்படப் பட்டறையில் கலந்து கொண்டேன். அந்தப் பட்டறையின்போதுதான் கவிதையையும் திரைமொழியையும் இணைத்துக் குறும்படங்களை இயக்கினேன். அரூபமான கருவொன்றைக் கொண்டு குறும்படம் எடுக்கும் சிந்தனை அப்படித்தான் ஆரம்பமானது.  அதுதான் என்னுடைய கலைக்கான வெளிப்பாட்டு வடிவம் எனக் கண்டுகொண்டேன்.

‘படை கலைச் சமூகம்’(Padai Art Community) எனும் இயக்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது?

கோகுலராஜன்: திரைப்படமென்பது அடிப்படையில் சமூகக் கலைச் செயற்பாடு எனலாம். திரைக்கலை என்பதற்குப் பின்னாலே பலரின் உழைப்பு அடங்கியிருக்கிறது. அந்தக் கூட்டு உழைப்பு என்பது படையொன்றிலிருந்து திரட்டுவதைப் போலத்தான்.  மலேசியத் தமிழ்த் திரைப்படச் சூழலைச் செழிபற்ற நிலப்பரப்பு எனலாம். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தனித்தனி மரங்கள்தான் தமிழ்த் திரைச்சூழலில் இருக்கின்றன. அந்த நிலப்பரப்பைக் காட்டைப் போல செழிப்பானதாக ஆக்க வேண்டுமென்ற முனைப்பில் தான் படை கலைச் சமூகம் (Padai Art Community) எனும் குழுவைத் தொடங்கினோம். மலேசியாவில் நல்ல திரைப்படங்கள் இயக்கும் முனைப்பில் பலர் இருக்கின்றனர். அந்த ஒத்தச் சிந்தனை கொண்டவர்களை ஒருங்கிணைக்கவும்தான் ‘படை’ தொடங்கப்பட்டது. அதைப் போல நல்ல சினிமா எடுத்து வெளியுலகத்தின் பார்வைக் கிடைக்கப்பட்ட சிலர் இருக்கின்றனர். அவர்களுக்குக் கிடைத்த வெளிச்சத்தை மற்றவர்களுக்கும் பகிரச் செய்வதன் மூலமே புதிய தலைமுறையை உருவாக்க முடியும். சஞ்சய் பெருமாள், ஹரன், ஷோபன், பழனி, குபேன் என திரைத்துறையில் ஈடுபாடு கொண்ட பத்துப் பேரைக் கொண்டே படை தொடங்கப்பட்டது. முதலில் வாராந்திர திரைப்படக் கலந்துரையாடலாகத்தான் தொடங்கினோம். பின்னர், திரைப்படத் திரையிடலுடன் கூடிய கலந்துரையாடலாக மாறியது. அதன் பின், அனுபவப் பகிர்தலாகவும் உரையாடலாகவும் விரிவாக்கம் கண்டது. கோவிட் தொற்றுக்குப் பின்னர் ‘படை கலைச் சமூகத்தின்’ செயற்பாடு தடைப்பட்டது. இப்பொழுது அதனை மறுபடியும் புதுப்பிக்கும் முயற்சியில் இருக்கிறோம்.

‘காளி’ எனும் திரைப்படத்துக்கான முயற்சி எவ்வாறு தொடங்கியது?

கோகுலராஜன்: முதலில் ‘காளி’ படத்தின் இறுதிக்காட்சி மட்டும் கருவாக எனக்குள் தோன்றியது. ‘காளி’ படத்துக்கான கதைக்கருவை இயக்குநர் சஞ்சயிடம் சொன்னேன். அந்தக் கருவை விரித்துத் திரைப்படமாக எடுக்கலாமென்ற யோசனையை சஞ்சய்தான் குறிப்பிட்டார். இறுதிக் காட்சியிலிருந்து எழும் எண்ணங்களைக் குறிப்பேட்டில் குறித்து வைக்கத் தொடங்கினேன். இரண்டாண்டுகளாக இறுதிக்காட்சியை மையமாகக் கொண்டு எழுந்த சிந்தனைகள், காட்சிகள், கரு எல்லாவற்றையும் குறிப்பேட்டில் காட்சிகளாகவும் சிந்தனைகளாகவும் குறித்து வைத்திருந்தேன். இரண்டாண்டுகள் கழித்து குறிப்பேட்டில் இருந்தவற்றை வரிசைக்கிரமமாக ஒழுங்குச் செய்தேன். அவற்றுக்குள் தன்னியல்பாகப் படத்துக்கான ஒழுங்கு இருப்பதைக் கண்டுகொண்டேன். அந்தச் சமயத்தில்தான் பினாஸ் மலேசியா MYLAB எனும் திட்டத்தை அறிவித்திருந்தது. அந்தத் திட்டத்துக்குத் தேர்வு பெறும் திரைக்கதைகளுக்கான இயக்கப் பணிக்கு ஆறு மாதப் பயிற்சி அளிக்கப்படும். அந்தத் திட்டத்தில் ‘காளி’ படம் தேர்வு பெற்றது.  நான் மதிக்கும் பல முக்கிய இயக்குநர்கள் கொண்ட தேர்வுக் குழு ‘காளி’ திரைக்கதையைத் தேர்வு செய்தது நம்பிக்கையளிப்பதாக இருந்தது. அந்தத் தேர்வுக்குழுவில் இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான அனுராக் கஷ்யாப்பும் இடம்பெற்றிருந்தார். அவர்தான் இயக்கப் பயிற்சிக்கான வழிகாட்டியாகவும் இருந்தார். அதுவரையில் இருந்த தடுமாற்றங்கள் நீங்கி என்னுடைய கதை மீது நம்பிக்கை ஏற்படத் தொடங்கியது. ஆறு மாதக் காலப் பயிற்சி மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் இரண்டு கட்டப் பயிற்சி இணையம் வாயிலாக நடைபெற்றது. மூன்றாம் கட்டப் பயிற்சி கொரியா பூசான் திரைவிழாவில் ஒருவாரம் நடைபெற்றது. அந்த ஒருவாரப் பயிற்சியின் இறுதியில் என்னுடைய திரைக்கதைக் கருவை பத்து நிமிடத்துக்கு அனுராக்குக்கு விளக்கமளிக்க வேண்டும். அவருக்கு என்னுடைய திரைக்கதை மிகவும் பிடித்திருந்தது. எனக்குத் தனிப்பட்ட முறையில் கதையை ஒட்டி இருந்த சில கேள்விகளை அவரிடம் முன்வைத்தேன். ‘காளி’ படத்தின் களமும் கருவும் தமிழ்ச்சூழலுக்கே நெருக்கமானதாக இருக்கிறது. படத்தைப் பார்க்கின்ற மற்ற மொழியினருக்குப் படம் புரியாமல் போக வாய்ப்பிருந்தது. ஆகவே, அதனைப் பொதுவானதாக மாற்றியமைப்பதையொட்டி அனுராக்கிடம் ஆலோசனை கேட்டேன். படத்தை ரசிகர்களுக்கு விளக்க வேண்டிய அவசியமே இல்லை. திரைக்கதையில் விளக்கப்பகுதியை நீக்கிவிடு என்ற ஆலோசனையை அனுராக் தந்தார். இயக்குநராக செய்திகளைச் சொல்வது உன் பணியல்ல. கதையைச் சொல்வதே உன்னுடைய பணி என்றார். படத்தின் கதை ஆர்வமூட்டக்கூடியதாக இருந்தால் ரசிகர்கள் தானே இணையத்தில் அதனையொட்டித் தேடி மேலதிகத் தகவலைத் பெற்றுக்கொள்வார்கள் என்றார். அப்படித்தான் ‘காளி’ படத்தின் திரைக்கதை வடிவம் முழுமை பெற்றது. அந்தப் படம் ஒட்டிய கள ஆராய்ச்சி செய்யும்போதுதான் மலேசியத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களைப் பற்றிய ஆவணப்படம் இயக்கும் எண்ணம் வந்தது. அந்தப் பணி நிறைவுறும் வரையில் ‘காளி’ படப் பணிகளை ஒத்தி வைத்திருக்கிறேன்.

மலேசிய இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்றுத் தேடல் எங்கிருந்து தொடங்கியது?

கோகுலராஜன்: எனக்குத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் வரலாறு குறித்த பொதுவான புரிதல் இருந்தது. என்னுடைய அப்பாவின் தோட்டத்துக்குச் சிறுவயதில் பலமுறை சென்றிருக்கிறேன். ஆனால், தோட்டத்தின் சூழலின் மீது விலக்கம்தான் இருந்தது. எப்பொழுது மீண்டும் நகரத்துக்குத் திரும்புவோம் என்ற ஏக்கத்துடன்தான் தோட்டப் பயண நாட்களில் உணர்ந்திருக்கிறேன். ஆனால், ‘காளி’ படத்தின் கதைக்கான தேடல்தான் என்னுடைய மனநிலையை மாற்றியமைத்தது. இன்னும் விரிந்த கண்ணோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வைக் காண வேண்டுமென்ற உணர்வை ஏற்படுத்தியது. முதலில், தோரோந்தோ பல்கலைக்கழகப் பேராசிரியரும் மானுடவியலாலருமான ஆர். கே ஜெயின் எழுதிய ‘South Indians on the plantation frontier in Malaya’ நூலைத்தான் வாசித்தேன். 1960களில் தோட்டமொன்றில் சில ஆண்டுகள் வசித்து தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வு குறித்து விரிவான சித்திரத்தைத் தன்னுடைய ஆய்வேட்டில் ஜெயின் தந்திருக்கிறார். அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தோட்டத்தில் வாழ்ந்த குடும்பத்தினர், அவர்களின் மனநிலை, அன்றாட வாழ்க்கைப் பதிவு, மற்றவர்களுடனான தொடர்பு என விரிவான குறிப்புகளை ஆய்வுமொழியில் தந்திருந்தார். அதற்கு அடுத்து, மலேசியா முழுவதும் இருந்த 70க்கும் மேற்பட்ட முன்னாள் தோட்டத் தொழிலாளர்களை நேர்காணல் செய்தேன். ஒவ்வொருவருடனும் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் வரையில் உரையாடி நேர்காணலைப் பதிவு செய்தேன். ஒவ்வொருவரும் தங்களுடைய தோட்ட அனுபவங்கள் ஒட்டிச் சொல்வதற்கு நிறைய கதைகளுடன் காத்திருந்தனர். அந்த நேர்காணலின்போதுதான் ஒன்றைக் கவனித்தேன். ஏறக்குறைய இந்தியர்கள் முழுமையாகவே தோட்டத்தை விட்டு நகரங்களுக்குப் பெயர்ந்திருந்தனர். அதனாலே, அவர்கள் சொல்லும் தோட்ட நினைவுகளுக்கும் அவர்களுக்கும் தூரம் இருப்பதை உணர முடிந்தது. அதை நேர்காணலில் பதிவு செய்யும்போது இன்னுமே தூரமான நினைவுகளாகவே என்னால் உள்வாங்க முடிந்தது. மேலும், அவர்களின் அனுபவங்களில் செய்திகளும் கலந்திருக்கின்றன. ஆகவே, என்னால் அவற்றுடன் உணர்வு ரீதியாக ஒன்ற முடியவில்லை.

அந்தச் சூழலில்தான் தோட்டத்தில் நாடக மேடைகளில் பாடப்படும் நாட்டுப்புறப்பாடல்களை எல்லாம் டாக்டர் இரா. தண்டாயுதம் தொகுத்தார் எனும் செய்தியை வாசித்தேன். மலாயா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் இரா.தண்டாயுதம் மலேசியா முழுக்க தோட்டங்களுக்குப் பயணித்துத் தமிழ் நாட்டுப்புறப்பாடல்களைத் தொகுத்து ‘மலேசிய நாட்டுப்புறப்பாடல்கள் தொகுப்பு’ எனும் நூலை வெளியீட்டிருந்தார். அந்த நூலைத் தேடி வாசிக்கத் தொடங்கினேன். அந்தப் புத்தகத்தில் இருந்த முதல் பாடலான ‘பாலு மரம் வெட்டலாம்ன்னு பழைய கப்பல் ஏறி வந்தேன்’ எனத் தொடங்கும் பாடலை வாசித்தேன். அந்தப் பாட்டுக்கும் எனக்குமான கால, இட இடைவெளிகள் எல்லாம் மறைந்து அருகில் இருப்பதைப் போன்ற நெருக்கத்தை உணர்ந்தேன். தொகுப்பில் மொத்தமாக 500க்கும் மேற்பட்ட பாடல்கள் இருந்தன. அந்த நூல் மலேசிய இந்தியர்களின் மொத்த வரலாற்றையும் அடக்குகின்ற அளவு விரிவான இலக்கிய வடிவம் என்பதை உணர்ந்தேன். அதனையொட்டியே என்னுடைய அடுத்தக்கட்ட பணிகளை அமைக்கும் முடிவில் இருந்தேன். டாக்டர் இரா.தண்டாயுதம் தோட்டந்தோறும் அலைந்து தோட்ட மக்களிடம் இருந்த பாடல்களை எழுத்தாகவும் பாடலாகவும் பதிவு செய்திருந்தார். ஆனால், அவர் பதிவு செய்த பாடல் பதிவுகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்தது. அவருடைய மாணவர்கள், குடும்பத்தினர் என யாரிடமும் பாடல் ஒலிப்பதிவுகள் இல்லை. ஆக, மலேசிய நாட்டுப்புறப் பாடல்களுக்கான இசைவடிவத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டேன். பொதுவாக, தமிழ் நாட்டுப்புறப் பாடல்களுக்கு என்று தனித்த இசை வடிவங்கள் இருக்கின்றன. நாட்டுப்புறப் பாடகர்களால், எழுத்து வடிவில் இருக்கும் பாடல்களுக்கான இசை வடிவங்களைக் கொண்டு வந்துவிட முடியும். மலேசியாவில் நாட்டுப்புறப் பாடல் மரபின் தொடர்ச்சி விடுபட்டுப் போனதால் பாடல்களுக்கான இசை வடிவம் கண்டறிய முடியவில்லை. மேலும், நாட்டுப்புறப் பாடல் கலை என்பது கற்றுத்தரப்படும் துறையாகவும் வளரவில்லை. பிறர் பாடக் கேட்டுக் கற்றுக்கொள்ளும் கலையாகவே இன்றளவும் இருந்து வருகிறது.

ஆகவே, தஞ்சைப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் பேராசிரியர் டாக்டர் காமராஜை சந்தித்து பாடலுக்கான இசை வடிவம் கண்டறியும் முயற்சியை விளக்கினேன். இன்றைக்குப் பாடப்படும் நாட்டுப்புறப்பாடலின் இசை வடிவம் என்பது நூறாண்டுகளுக்கு முந்தைய மரபைக் காட்டிலும் பலவகையிலும் மாறுபட்டது. ஆக, நாட்டுப்புற இசை மரபை அறிந்தவர்களைக் கொண்டே இசை வடிவம் கண்டறிய முடியுமென டாக்டர் காமராஜ் குறிப்பிட்டார். அவரே, கலைமாமணி சின்னபொண்ணு உட்பட சில நாட்டுப்புறப்பாடகர்களைக் கலந்துரையாட ஏற்பாடு செய்து தந்தார். அவர்களுடன் கலந்துரையாடி 14 நாட்டுப்புற பாடல்களுக்கான இசை வடிவத்தைக் கண்டறிந்தோம். அப்படி நாட்டுப்புறக் கலைஞர்களுடன் பாடல்களை வாசித்து இசை வடிவத்தைப் பாடிக் கண்டடையும் முயற்சியைத்தான் ‘coolie chorus’ எனும் ஆவணப்படமாக எடுத்திருந்தோம்.

உங்களின் ஆவணப்பட முயற்சிக்கு எம்மாதிரியான எதிர்வினைகள் வந்தன?

கோகுலராஜன்: நான் மேற்கொள்ளப் போகும் ஆவணப்படத்தின் முக்கியத்துவத்தைப் பலரும் அறிந்தே வைத்திருந்தனர். அவர்களுக்கே கூட இம்மாதிரியான எண்ணங்கள் இருந்தன. ஆனால், அவர்களுக்கும் இந்த முயற்சியை முன்னெடுக்கும் வழிகள் தெரிந்திருக்கவில்லை. என்னுடைய முயற்சி வெற்றியடைவது குறித்தும் கூட ஐயம் கொண்டிருந்தனர். அவர்கள், வரலாற்றைச் செய்திகளாகவே அதிகமும் அறிந்து வைத்திருக்கின்றனர். அதனை ஆவணப்பட வடிவில் முன்வைக்கலாமென்ற எண்ணம் பெரும்பாலும் இருப்பதில்லை. அடுத்ததாக, கண்காட்சி, ஆவணப்படம் வழி வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சி, கலை சார்ந்த முயற்சிகளில் இந்தியர்களுக்கு அதிகமும் ஆர்வமிருப்பதில்லை. அது சார்ந்த முயற்சிகளையும் இந்தியர்கள் அதிகமும் அறிந்து வைப்பதில்லை. ஆனால், சீனர்கள் மற்றும் மலாய்க்காரர்களுக்கு கண்காட்சிக் கூடம், ஆவணப்படத் திரையிடல் போன்ற முயற்சிகள் மீது அறிமுகம் இருக்கிறது. அதனால் நான் மேற்கொள்ளும் முயற்சிக்கு மாற்று இனத்தவர்கள் ஆதரவளிக்கின்றனர். அப்படி மாற்று இனத்தவர்கள் வழியேத்தான் என்னுடைய ஆவணப்படத்துக்கான தொடக்கமும் அமைந்தது.

2022 ஆம் ஆண்டில் ‘plantation plot’ என்ற தலைப்பில் உலக முழுவதும் இருந்த தோட்டங்களில் வாழும் மக்களின் வாழ்வைக் காட்சிப்படுத்தும் கண்காட்சி பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. அந்தக் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஷாவ்லின் தோட்ட மக்களின் வாழ்வை ஒட்டிச் சில ஆய்வேடுகளைப் பரிந்துரைத்திருந்தார். அவர் பரிந்துரைத்த எந்த நூலையும் வாசிக்காமலே கலந்துரையாடலுக்குச் சென்றேன். கலந்துரையாடலில் பங்கேற்பாளர்கள் தங்களுடைய வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். என்னுடைய முறை வந்தபோது, டாக்டர் இரா.தண்டாயுதம் தொகுத்த மலேசிய நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றிச் சொன்னேன். அந்தக் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த எல்லா ஆய்வேடுகளும் கல்வியாளர்கள் மற்றும் வெளியாட்களால் தோட்ட மக்களின் சூழலை ஒட்டி எழுதப்பட்டவை. ஆனால், நான் குறிப்பிட்ட பாடல்கள் எல்லாமே தோட்ட மக்களின் சுய அனுபவத்தின் வெளிப்பாடுகளாக அமைந்தவை. அதனாலே, அதனுடைய முக்கியத்துவத்தை ஷாவ்லின் உணர்ந்திருந்தார். அந்தப் பாடல்கள் குறித்து ஆவணப்படம் செய்ய என்னைத் தூண்டினார். இந்தியப் பண்பாட்டுடன் முற்றிலும் தொடர்பில்லாத ஒருவர்தான் இந்தியத் தொழிலாளர்களின் வரலாற்றை ஆவணப்படுத்த என்னைத் தூண்டினார்.

ஆவணப்பட இயக்கம் உங்களுக்கு எம்மாதிரியான தாக்கத்தை அளித்தது?

கோகுலராஜன்: எனது அடையாளத்தை நோக்கிய தேடலாகவே ஆவணப்பட இயக்கத்தைத் தொடங்கினேன். அந்தத் தேடலில் சில பதில்களைக் கண்டறிந்திருக்கிறேன். என்னுடைய அடையாளம் என்பது என்னைச் சார்ந்தது மட்டுமின்றி முன்னோர்கள் தொட்டு நீளும் கூட்டு நினைவிலிருந்தும் எழுகிறது என்பதை உணர்ந்தேன். ஆக, என்னுடைய அடையாளம் என்பது ஒரே சமயத்தில் இந்தத் தருணமாகவும் காலங்காலமாக மரபணுவில் சேகரமாகியிருக்கின்ற நினைவுகளாகவும் இருக்கிறது. இந்த இரண்டையும் புரிந்துகொள்ளும்போது எனக்குள் சில மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன. இதற்கு முன்னர் என் சுயத்தில் ஒருவித பற்றின்மை அல்லது அந்நியத்தன்மையை எப்பொழுதும் உணர்வேன். ஆவணப்பட முயற்சிக்குப் பின்னர் வரலாறு, கலை ஆகியவற்றுடன் பிணைப்பு உருவாகியிருக்கிறது. மேலும், என்னிடமிருக்கும் புரிந்துகொள்ள முடியாத சில செயல்கள், இருண்மைத்தன்மை ஆகியவற்றுக்கான பதில்களையும் கண்டறிய முடிந்தது. தொடர்ந்து, ஆவணப்படத்தை இயக்கி வருவதால் அதன் முழுமையான பொருளை அறுதியாகக் குறிப்பிட முடியவில்லை. இன்னும் கொஞ்சம் காலம் கடந்த பின்னரே ஆவணப்பட இயக்கம் என்னில் ஏற்படுத்திச் சென்ற தாக்கத்தை உணர முடியும்.

அடுத்ததாக, மலேசியத் தமிழர்களின் வரலாறு மற்ற சமூகங்களுக்குச் சரியாகக் கடத்தப்படவில்லை என்ற ஆதங்கம் தமிழர்களிடம் இருக்கிறது. தங்களுடைய வரலாறு ஆவணப்படுத்துகிறது என்று தெரிந்ததும் பலரும் நிறைவடைந்தனர். அந்த நிறைவுணர்வைத் தோட்டத்தில் வாழ்ந்த பாட்டிகளை நேர்காணல் செய்யும்போது அடைந்தேன். அந்நியரொருவருடன் பேசுவதாகத் தொடங்கும் நேர்காணலின் இறுதியில் கதைகளால் இருவருமே மிக நெருங்கியிருப்போம். நேர்காணல் நிறைவுறும் தருணத்தில் “நல்லா இருங்கய்யா… நல்லா செய்ங்க… நல்லா வருவீங்க’’ என அவர்கள் சொல்லும் வாழ்த்தின் நிறைவே என்னை வழிநடத்துவதாக உணர்கிறேன்.

மற்ற இன,  நாட்டு இயக்குநர்கள், கலைஞர்களுடனும் இணைந்து இயங்கி வருகிறீர்கள். அந்த முயற்சியைப் பற்றி குறிப்பிடுங்கள்.

கோகுலராஜன்: என்னைப் பொறுத்த வரையில் எல்லா மனித அனுபவங்களும் இணையானவைத்தான். இனம், மதம் என அதனை வேறுபடுத்திப் பார்ப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் செயற்படுகின்ற சூழல்தான் தமிழ்ச் சூழலாக இருக்கிறது. ஆனால், எல்லா மொழி, நிலப்பரப்பில் நிகழும் மனித அனுபவங்களும் உண்மையானவையே என்ற தெளிவு எனக்கிருக்கிறது. ஆக, மற்ற இன, நிலப்பரப்பைச் சேர்ந்தவர்களின் கலை வெளிப்பாட்டைக் காண்பதில் இயல்பாகவே ஆர்வமிருந்தது. அவர்களின் கலை வெளிப்பாட்டிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவர்களுடைய திரைப்பட வரலாறு, திரைச்சூழல் இயங்கும் விதம் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வமும் இருந்தது. என்னுடைய கற்றலை விரிவாக்கும் முயற்சியில் முனைப்புடன் இருக்கிறேன். 2024ஆம் ஆண்டு கோவா திரைப்பட விழாவில் திரைக்கதை சந்தைப்படுத்துதல் (Film Marketing) எனும் நிகழ்வில் பங்கெடுத்தேன். அந்நிகழ்வு திரைக்கதை கருவைப் பொதுவெளியில் குறிப்பிட்டு இணைந்து பணியாற்றும் ஆர்வம் கொண்டவர்களைக் கண்டறிவதற்கான முயற்சியாக நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் யதேச்சையாக  கான் திரைப்பட விழாவின் Director’s Fortnight குழுவினரைச் சந்தித்தேன்.  Director’s Fortnight குழுவினரால் தெரிவு செய்யப்படும் இளம் தலைமுறை இயக்குநர்களைக் கொண்டு குறும்படம் இயக்குவதற்கான வாய்ப்புகள் தரப்படும். அந்த நிகழ்ச்சியில் ‘காளி’ திரைப்படத்தின் கதைக்கருவையும் அதன் பின்னணியைப் பற்றியும் விளக்கினேன். அந்த நிகழ்ச்சி முடிந்த ஆறு மாதக் காலத்தில் குறும்பட இயக்கத் திட்டத்துக்கு நான் தேர்வு பெற்றிருப்பதாக மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றேன். அந்தத் திட்டத்தின்படி தேர்வு செய்யப்படும் நாட்டைச் சேர்ந்த நான்கு இளம் இயக்குநர்களுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நான்கு இயக்குநர்களுமாக இணைந்து குறும்படங்களை இயக்க வாய்ப்பு வழங்கப்படும். கடந்தாண்டு பிலிப்பைன்ஸ் நாட்டை மையமிட்டுக் குறும்பட வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அந்தக் குறும்பட இயக்கம் மிகப் பெரிய திறப்பை அளித்தது. அதுவரையில் நான் இயக்கிய குறும்படங்கள் எல்லாமே என்னுடைய தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் அமைந்தவை. பிலிப்பைன்ஸில் இயக்கிய ‘வாலாய் பாலாய்’ (walay balay) குறும்படம் முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. பிலிப்பைன்ஸின் மிண்டானோ பகுதியில் முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் நடைபெற்று வரும் அடக்குமுறை போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட கதையை இயக்கினோம். அந்தத் திரைப்படம் என்னைச் சுற்றியும் பின்னப்பட்டிருந்த இறுக்கத்தை இன்னுமே தகர்த்தெறிந்தது. அந்தக் குறும்பட இயக்கத்தின்போதுதான் முற்றிலும் அந்நியமான அனுபவமொன்று எனக்குள் நுழைந்து தனிப்பட்ட அனுபவமாக மாறுவதை உணர்ந்தேன். நமக்கு அந்நியமான அனுபவங்கள் எப்பொழுதுமே அந்நியமாகவே இருந்துவிடுவதில்லை. நாம் அனுமதிக்கும்போது அந்நியமான அனுபவங்களும் சுய அனுபவங்களாக மாறக்கூடும். அந்தக் குறும்பட இயக்கச் செயற்பாடு முழுவதும் எனக்குள் ஒருவிதமான நிலைகுலைவு உண்டாக்கிக் கொண்டு இருந்தது. ஆனால், மனித அனுபவங்களை நம்பி முழுமையாகப் படத்தை இயக்கத் தொடங்கினால் வேறொரு அனுபவத்தளத்துக்கு அது நம்மை இட்டுச் செல்லும் என்பதையும் உணர வைத்தது. ‘வாலாய் பாலாய்’ குறும்படம் 2024 ஆம் ஆண்டு ‘கான்ஸ்’ திரைப்பட விழாவின் தொடக்க விழாவின்போது திரையிடப்பட்டது.

தொடர்ந்து, மலேசியத் திரைச்சூழலில் இயங்கும் எண்ணம் இருக்கிறதா?

கோகுலராஜன்: மலேசியத் தமிழ்த் திரைச்சூழல் மேம்பட்டு வருவதாகவே எண்ணுகிறேன். குறிப்பாக ‘ஜகாட்’ போன்ற படங்களின் வருகைக்குப் பின்னர் தொடர்ந்து செயற்படுவதற்கான நம்பிக்கையைத் தருவதாகவே அமைந்திருக்கிறது. இவ்வாண்டு ‘கான்ஸ்’ திரைப்பட விழாவில் பங்கேற்ற ‘கத்து’ குறும்பட இயக்குநர் ஆனந்த், 2024 ஆம் ஆண்டு ‘பி.எம்.டபுள்யு’ குறும்படப் போட்டியில் வென்ற கிர்த்திஷா, லேனா என நம்பிக்கையூட்டும் இளம் தலைமுறை படைப்பாளிகள் தமிழ்ச்சூழலில் உருவாகியிருக்கின்றனர்.

தொடக்கம் முதலே மற்ற மொழிச்சூழல் படைப்பாளிகளிடமிருந்து நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தொடர்ந்து மலாய் திரைச்சூழலில் இயங்கும் தான் சியு முய், டென் சைய்ட், தயாரிப்பாளர் நந்திதா ஆகியோர் என்னுடைய முயற்சிகளுக்கு ஊக்கம் தந்து வருகின்றனர். நான் ஒரு இந்தியர், தமிழர் என்ற வேற்றுமையால் ஒதுக்கப்படும் சூழலையும் உணரவில்லை. நாம் முன்வைக்கின்ற கதை சார்ந்த அனுபவத்துடன் தங்களைத் தொடர்புறுத்திக்கொள்ள முடிவதையே மற்ற மொழிச்சூழலில் முதன்மையாகக் காண்கின்றனர்.

 உங்களுடைய முயற்சிக்குக் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு எவ்வாறு அமைந்திருக்கிறது?

கோகுலராஜன்: குடும்பத்தினரும் நண்பர்களும் என்னுடைய முயற்சிக்குத் துணை நின்றே வருகின்றனர். நான் ஈடுபட்டு வரும் கலை சார்ந்த முயற்சிகளின் முக்கியத்துவத்தை அறிந்து வைத்திருப்பதால் குடும்பத்தினர் எனக்குப் போதுமான ஒத்துழைப்பைத் தந்து வருகின்றனர். நான் மேற்கொள்ளும் பணிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பதால் முடிந்தவரையில் மிகக் கவனமுடனே செயற்பட்டு வருகிறேன். அதையும் தாண்டி திரைப்படம், ஆவணப்பட முயற்சிகளில் வரும் தடைகளை எதிர்கொள்ள என்னுடைய தயாரிப்பாளர் அண்ணன் குமணவண்ணன் உட்பட வலுவான நண்பர்கள் உடனிருக்கின்றனர். அவர்களின் துணையால் எதிர்வரும் சிக்கல்களையும் தடைகளையும் எளிதில் கடந்து பணியில் மட்டும் கவனம் செலுத்த முடிகிறது.

ஆவணப்பட முயற்சியில் உங்களுடன் உடன் நிற்கும் குழுவினரைப் பற்றிக் குறிப்பிடுங்கள்.

கோகுலராஜன்: தொடக்கம் முதலே என்னுடைய சகோதரரும் தயாரிப்பாளருமான குமணவண்ணன் ராஜேந்திரன் உடனிருந்து வருகிறார். அடுத்ததாக, ‘next new wave’ நிறுவனத் தயாரிப்பாளர் Jing Xuan மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த எலிசபெத் விஜாயா ஆகியோரும் இணைத்தயாரிப்பாளர்களாக என்னுடைய ஆவணப்பட முயற்சிக்குத் துணை நின்று வருகின்றனர். ஆவணப்படத்தை இயக்கும் போதுதான் வேறொரு பரிமாணம் அடைவதைக் காண முடிந்தது. நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எந்தத் தடையும் விதிக்காமல் தயாரிப்பாளர்கள் ஆதரவளிப்பதாலே சுதந்திரமாக இயங்க முடிகிறது. நாட்டுப்புறப்பாடல்களும் காட்சியுமாக விரிய இருக்கின்ற ‘ஆராரோ ஆரிராரோ’ ஆவணப்படத்துக்கு மலேசியா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்களிக்க இருக்கின்றனர். அத்துடன், தமிழர்கள் தொடர்புடைய ஆவணப்படமென்றாலும் படக்குழுவினர் பல்வேறு இன, நாட்டுப் பின்னணி கொண்டவர்களாக இருக்கின்றனர். பிலிப்பைன்ஸை சேர்ந்த இவ் என்பவரும் மற்றும் பிரான்ஸை சேர்ந்த எஞ்சலினும் மலேசியாவைச் சேர்ந்த யுகனும் விஷ்ணுவும் ஆவணப்படத்தின் ஒளிப்பரப்பாளரகளாக  பணியாற்ற இருக்கின்றனர். அத்துடன், இசையை அடிப்படையாகக் கொண்டு ஆவணப்படம் தயாரிக்கப்படுவதால் ஒலிப்பதிவும் மிகக் கவனமாகக் கையாளப்பட வேண்டியதாகிறது. தோட்டச் சூழலில் பாடல்களை நேரடியாகப் பதிவு செய்ய திட்டமிட்டிருக்கிறோம். ஆக, பாடல் பதிவு செய்ய தேர்ந்த ஒலிப்பதிவாளர்களான யீன் மற்றும் லுன் ஆகியோரை அணுகியிருக்கிறோம். நான் மேற்கொள்ளப்போகும் பணியின் தீவிரத்தை உணர்ந்த நண்பர்களுடன் இணைந்து ஆவணப்படம் இயக்கவிருப்பது உற்சாகமூட்டுவதாக இருக்கிறது.

உங்களுடைய அடுத்த ஆவணப்பட முயற்சியைப் பற்றிக் குறிப்பிடுங்கள்.

கோகுலராஜன்: ‘கூலி கோரஸ்’ ஆவணப்படத்தை இயக்கி இல்ஹாம் கண்காட்சிக் கூடத்தில் நடைபெற்று வரும் பிளாண்டேஷன் புளோட் கண்காட்சியில் பொது மக்கள் பார்வைக்கு வைத்திருக்கிறோம். செப்டம்பர் 2025 வரை கண்காட்சியின் ஒருபகுதியாக ‘கூலி கோரஸ்’ ஆவணப்படம் திரையிடப்படும். ஆனால், கண்காட்சிக் கூடங்களைத் தாண்டியும் ஆவணப்படம் பயணிக்க வேண்டுமென்பதுதான் எங்களுடைய இலக்கு. முதற்கட்டமாக, கண்காட்சிக் கூடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கடுத்து, 15 நாட்டுப்புறப்பாடல்களை உள்ளடக்கிய ‘ஆராரோ ஆரிராரோ’ எனும்  இசை ஆவணப்படத்தைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். நான் ஒரு இயக்குநராகவும் இருக்கின்ற காரணத்தால் பாடல்களைக் கொண்டு ஆவணப்படம் தயாரிக்கலாமென்ற எண்ணம் எழுந்தது. ஒருவேளை இசைக்கலைஞராக இருந்திருந்தால் அதனை இசை வடிவமாக மட்டுமே மாற்றியிருப்பேன். நாட்டுப்புறப்பாடல்களில் எல்லாமே இந்தியர்கள் தோட்டங்களில் அனுபவித்த வலியும் வேதனையும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. மகிழ்ச்சியான சூழலில் பாடப்பட்ட பாடல்களில் கூட பின்னணியாக சோகமொன்று உறைந்திருக்கிறது. அந்தப் பாடல்களைக் காட்சி வடிவமாக மாற்றிப் பார்ப்பதன் மூலம் வலியை ஆற்ற முடியுமென எண்ணினேன். வரலாற்றில் படிந்திருக்கும் முன்னோர்களின் வலியை மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல் அதனை ஆற்றுப்படுத்தும் ஊடகத்தையும் கண்டடைய வேண்டும். அந்த ஆற்றுப்படுத்தும் ஆற்றல் காட்சி ஊடகத்துக்கு இருக்கிறது. அந்த வேதனையை மடைமாற்றும் முயற்சியைத்தான் ஆவணப்படமாக்குவதன் மூலம் செய்து வருகிறோம்.

எவ்வாறு ‘ஆராரோ ஆரிராரோ’ இசை ஆவணப்படத்துக்கு எவ்வாறு பங்களிப்பது?

கோகுலராஜன்: நாட்டுப்புறப்பாடல்களில் எழுத்தாளரின் பெயரென்பதே இருக்காது. ஒருவகையில் சமூகத்தின் கூட்டு மனப்பதிவாகவே நாட்டுப்புறப்பாடல்கள் நீடித்து வருகின்றன. தொடக்கம் முதலே, சமூகத்தை ஈடுபடுத்தியே எங்களுடைய முயற்சிகளை அமைத்து வருகிறோம். தோட்டத் தொழிலாளர்களைப் பற்றிய நேர்காணலுக்கான அறிவிப்பைச் சமூக ஊடகத்தளங்களில் பதிவிட்டிருந்தோம். அதனைப் பார்த்து எங்களை அணுகி பலரும் தங்கள் தோட்ட வாழ்வனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். ஆக, இந்த முயற்சியின் முக்கியத்துவத்தைப் பலரும் அறிந்தே இருக்கின்றனர். ஆக, சமூகக் கலையான நாட்டுப்புறப்பாடல்களை ஒட்டி எடுக்கப்படும் ஆவணப்படமும் சமூகச் செயற்பாடாகவே இருக்க முடியும். தொடக்கத்தில், ஆவணப்படத் தயாரிப்புக்காக ‘Krishnan jit’ அறவாரியத்திடமிருந்து நிதியுதவியைப் பெற்றோம். அடுத்ததாக, தோரோந்தோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் லிஸ் மூலமாக சிறுபான்மைச் சமூகக் கலைஞர்களுக்குத் தரப்படும் நிதியுதவியையும் கிடைக்கப் பெற்றோம். அத்துடன் மலேசியாவில் மை ஸ்கில் போன்ற அறவாரியமும் ஆவணப்படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நிதியுதவி அளித்தனர். அந்த நிதியுதவியைக் கொண்டுத்தான் ‘கூலி கோரஸ்’ ஆவணப்படத்தைத் தயாரித்தோம்.

இந்த முயற்சியின் அடுத்தக் கட்டமான இசை ஆவணப்படத்தைத் தயாரிக்கத் தேவையான நிதியுதவியைத் திரள் நிதி வழியாக (Crowdfunding) திரட்டுவதென முடிவெடுத்திருக்கிறோம். நாங்கள் எடுக்க எண்ணியிருக்கின்ற ஆவணப்படத்துக்கான செலவில் அறுபது விழுக்காட்டு நிதியைத் திரட்டியிருந்தோம். எஞ்சிய நாற்பது விழுக்காட்டுப் பணத்தைத்தான் பொது மக்கள் அளிக்கும் நிதியிலிருந்து திரட்ட எண்ணியிருக்கிறோம். அடுத்தாண்டு இடைப்பகுதியில் ‘ஆராரோ ஆரிராரோ’ ஆவணப்படம் முழுமையாகத் தயாராகிவிடும் என நம்புகிறேன். ஆவணப்படம் தயாரானவுடன் இன்னும் ஐம்பது பாடல்களை இசை வடிவமாகத் தொகுத்தெடுத்து எல்லாராலும் அணுகமுடிந்த வகையில் இணையத்தில் பதிவிட்டு தரவுத்தளமொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அந்தத் தரவுத்தளத்தில் பாடல்கள், நேர்காணல்கள் ஆகியவற்றைத் தொகுத்து மலேசியத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்றுக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் எண்ணமுமிருக்கிறது.

‘ஆராரோ ஆரிராரோ’ ஆவணப்படத் தயாரிப்புச் செலவுகளுக்குப் பங்களிக்க விரும்புவோர் : Om Sakthi Films Sdn Bhd, Bank Name : Alliance Bank 140280013007963 என்ற வங்கி எண்ணுக்குப் பணம் செலுத்தலாம். ஆவணப்படம் குறித்த மேலதிகத் தகவல்களை https://www.omsakthifilms.com/araro-ariraro_1 எனும் பக்கத்தில் பெறலாம்.

கோகுலராஜனின் யூடியூப் பக்கத்துக்கான இணைப்பு

நேர்காணல்: அரவின் குமார்

1 comment for ““மலேசிய நாட்டுப்புறப் பாடல் மரபின் தொடர்ச்சி விடுபட்டு விட்டது” – கோகுலராஜன்

  1. நல வேந்தன் வே.ம.அருச்சுணன்
    September 1, 2025 at 8:02 am

    மலேசியத் திரைத்துறையின் மறுப்பக்கத்தை இந்நேர்காணல் வழி தெரிந்துக்கொள்ள முடிகிறது.இயக்குநர் கோகுலராஜனின் வைரஸ் மைரஸ் எனக்கு பிடித்த குறும்படம். கோவிட் கட்டுப்பாட்டு காலத்தில் கட்டுபாடில்லாமல் அல்லல் படும் ஒரு ‘குடி’மகனின் வாழ்வியலை அவரின் பாணியில் சொல்லி இருப்பார். சீண்ட செய்யும் சிந்தனைகளின் மூலம் சிகரம் தொட வருகிற இயக்குநருக்கு வாழ்த்துகள்..!

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...