கார்த்திக் திலகன் கவிதைகள் 

மீளமுடியாத சொர்க்கம் 

மண்ணில் இருக்கும் பாதைகள்

ரோஜா இருக்கும் இடத்திற்கு நம்மை கூட்டிச் செல்லும் 

காற்றில் இருக்கும் வண்டின் பாதைகளோ நம்மை ரோஜாவிடமே கூட்டிச்செல்லும் 

இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது 

பல நூற்றாண்டுகள் பழமையான அந்த பாதையில் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் ரோஜா மெல்ல அதிர்கிறது

அருகில் சென்று நாம் அதை தொடும்போது அது தன்னை அறியாமல் தேனை சிந்தி விடுகிறது 

நாம் திரும்பிச் செல்வதற்கான பாதைகளை தன் இதழ்களால் அழித்தும் விடுகிறது

நாமும் அதன் ஆன்மாவின் வாசத்தில் கரைவது தெரியாமல் கரைந்து போய் விடுவோம் 

மீள முடியாத அந்த சொர்க்கத்தில் நிலைத்திருக்கப் பண்ணும் ஆசிர்வாதம் நம் மீட்பவரிடமிருந்து அந்நேரத்தில் வந்து சேரும்

புருவங்களுக்கு மத்தியில் 

நான் நிலவில் இருந்து 

சொட்டிக் கொண்டிருக்கிறேன் 

எப்போது தீர்ந்து போவேன் என்று எனக்கு தெரியாது 

நானிருக்கும் வரை சொட்டிக் கொண்டிருப்பேனா 

இல்லை நிலவிருக்கும் வரை சொட்டிக் கொண்டிருப்பேனா என்பதும் திட்டவட்டமாக தெரியாது

நான் ஒளியாலான மழையின் மறுவடிவம்

யார் வாழ்க்கையின் மீதும் நான் வலிந்து சொட்டுவதுமில்லை

1 comment for “கார்த்திக் திலகன் கவிதைகள் 

  1. viji
    March 1, 2026 at 3:32 pm

    beautiful

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...