
20-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை மலாயாவில் இருந்த ரப்பர் தோட்ட பொருளாதாரம், பெருமளவில் இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பைச் சார்ந்திருந்தது. பிரித்தானிய காலனிய ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மலாயாவிற்கு இடம்பெயர்ந்ததற்கான சமூக-பொருளாதாரக் காரணங்கள், ரப்பர் தோட்டங்களில் அவர்கள் செய்த வேலை, உழைப்பின் தன்மை, கூலி, வாழ்வாதாரம், அச்சூழலின் நீண்டகாலச் சமூக விளைவுகள் தொழிலாளர்களை எவ்வாறு பொருளாதார மற்றும் சமூக ரீதியாக கட்டுப்படுத்தின என்பதைத் தனது சொந்த அனுபவங்களின் வழியாகச் சொல்லும் முக்கியமான பதிவாக முத்தம்மாள் பழனிச்சாமியின் ‘நாடு விட்டு நாடு’ நூல் அமைகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவர், இந்த நூல் சிங்கப்பூரில் கிடைக்குமா எனக் கேட்டார். இதனைத் திரைப்படமாக எடுக்கலாம் என்ற யோசனையும் அப்போது பேசப்பட்டது. ஆகவே, நூல் கிடைத்தால் வாங்கிக் கொடுக்குமாறு கேட்டிருந்தார். அப்போது இந்நூல் அச்சில் இல்லை. இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் தமிழினி பதிப்பக அரங்கில் இந்நூலைக் கண்டவுடன் உடனே வாங்கி வந்தேன்.
சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் கொங்கு நாட்டிலிருந்து தினக்கூலிகளாக மலாயா சென்று உழைத்து உயர்ந்த குடும்பத்தின் கதையை, முத்தம்மாள் பழனிச்சாமி தமது சொந்த அனுபவத்தின் ஊடாக மிக நுட்பமான அவதானிப்புகளுடன், துல்லியமான விவரங்களோடு சரளமான மொழி நடையில் பதிவு செய்துள்ளார். இந்த வரலாற்று நூல், Shore to Shore என்ற தலைப்பில் முன்னமே அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதனை ஒரு தனிநபரின் வாழ்க்கை வரலாறாக மட்டுமே கடந்து செல்ல முடியாது.
மலாயா ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் வரலாறு, தென்கிழக்காசிய பொருளாதார வளர்ச்சியுடன் நெருக்கமாகப் பின்னிய ஒன்று. பிரித்தானிய காலனிய ஆட்சியில் உலகின் முக்கிய ரப்பர் உற்பத்தி மையமாக மலாயா வளர்ந்தது. இந்த வளர்ச்சிக்குத் தேவையான தொழிலாளர் சக்தியாக திகழ்ந்தது தமிழ்நாட்டிலிருந்து பெருமளவில் அழைத்துவரப்பட்ட தமிழர்களே. சொந்த நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து பொருள் தேடி வெளிநாடு செல்லும் விருப்பத்தின் காரணமாகச் சென்றிருந்தாலும், அங்கு அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், பொருளாதாரக் கட்டமைப்புகளால் கட்டாயப்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருந்துள்ளன.
***
வெள்ளக்கோவிலுக்கருகே இலுப்பைக் கிணறு என்ற சிறுகிராமத்திலிருந்து புலம்பெயர்ந்து, மலாயாவில் கூலித் தொழிலாளர்களாகக் குடியேறிய கொங்கு வேளாளர் சமூகத்தைச் சார்ந்த குடும்பத்தின் கதை இந்நூல். அக்குடும்பத்தின் அடுத்தத் தலைமுறையைச் சேர்ந்த முத்தம்மாள் பழனிச்சாமி, தன் வாழ்க்கை வரலாறாக மலாயா வரலாற்றையும், கிராமப்புற வாழ்வியலையும் ஒன்றோடொன்று பிணைத்து உணர்ச்சித் ததும்ப விவரிக்கிறார். தனது எழுத்தாற்றலை அவர் தன்னுடைய தந்தை அப்பராய்யன் வெடிக்காரக் குப்பண்ண கவுண்டரிடமிருந்து பெற்றதாக ஒரு குறிப்பையும் விட்டுச்செல்கிறார்.
கொங்கு வேளாளர் சமூகத்தின் வேர்களை இழக்காமல், மலாயாவிலும் அதனைப் பின்பற்றி வாழ்ந்த விதத்தை அவர் பெருமையுடன் பதிவு செய்துள்ளார். அந்தச் சமூகத்தின் பழக்கவழக்கங்கள், குணநலன்கள், தொழில்கள், திருமண முறைகள், இறுதிச்சடங்குகள் என அனைத்தையும் தனித்தன்மையோடு விவரிக்கிறார். கடின உழைப்பை வாழ்க்கை மதிப்பாகக் கொண்ட சமூகமாகக் கொங்கு வேளாளர்கள் வாழ்ந்துள்ளனர். சொத்துச் சச்சரவுகளில் எதையும் விட்டுக் கொடுக்காத அண்ணன்-தம்பிகளின் பங்காளிச் சண்டைகள் குறித்த சுவையான சம்பவங்களை நகைச்சுவையுடன் கோர்த்துச் சொல்கிறார்.
மலாயா ரப்பர் தோட்டங்கள், தமிழர் இடம்பெயர்வு, பொருளாதாரம், தொழிலாளர்களின் வாழ்வியல் முறை, பல நாடுகளிலிருந்து வந்த பல்லினச் சமூக மக்கள் ஒன்று கூடி ஒரு குடும்பமாக வாழ்ந்த அனுபவம், குறும்புகள், விளையாட்டுகளென அனைத்தையும் நினைவுபடுத்தி மிகவும் பக்குவமாக எழுதுவது ஒரு சவாலான பணியே. அந்தச் சவாலை மிகச் செம்மையாகச் சமாளித்துள்ளார்.
இந்த நூலில் வரும் மனிதர்கள் பினாங்கு அருகிலுள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் தினக்கூலி தொழிலாளர்களாக வாழ்ந்தவர்கள். பழனியம்மாள் தன் தந்தையைப் பற்றி சொல்லத் தொடங்கும் இடங்களில், அவரது பெருமைகளையும் குழந்தைகளின் மீது அவர் பொழிந்த அன்பையும் அழகாக வர்ணிக்கிறார்.
முத்தாம்மாளின் தாயாருக்கு, வயதான ஒருவருடன் முதல் திருமணத்தைப் பெற்றோர் ஏற்பாடு செய்து வைக்கின்றனர். ஆனால், அந்தத் திருமண வாழ்க்கை ஒத்துப்போகாமல் சிக்கலாக மாறிவிடுகிறது. அந்த நிலையில், அவரது கணவர் “என்னுடன் வாழ விருப்பமில்லையெனில் தாலியைக் கழற்றி வைத்து வீட்டைவிட்டு வெளியேறலாம்” என்று கூறுகிறார்.
அந்தச் சூழ்நிலையைத் தன்னுடைய வலிமையாகக் கொண்டு, துணிச்சலுடன் தாலியைக் கழற்றி வீட்டில் வைத்துவிட்டு யாருக்கும் தெரியாமல் அந்த வாழ்க்கையை விட்டு விலகி, இரவோடு இரவாகத் தன் பிறந்த வீட்டிற்குத் திரும்புகிறார்.
பின்னர், முத்தம்மாளின் தந்தையுடன் அவருக்கு அறிமுகம் ஏற்படுகிறது. அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதை அறிந்திருந்தும், அவருடன் தாலி கட்டாத துணைவியாக வாழத் தொடங்குகிறார்.
அவரது முதல் மனைவிக்கும், முத்தம்மாளின் தாய்க்குமிடையே இருந்த பிணைப்பை விவரிக்கும் இடம் மனதை நெகிழச் செய்கிறது. பெரியம்மாவிற்கு யாருக்கும் தெரியாமல் ‘நூறு ரிங்கிட் பணத்தை எடுத்துச் சென்று கொடுக்கச் சொல்வாள்’ என அவர் கூறும் பதிவு, பெண்களுக்கிடையேயான உறவின் நுட்பமான தன்மையை வெளிப்படுத்துகிறது.
உலகளாவிய தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக ரப்பரின் தேவை அதிகரித்தது. இதனைப் பயன்படுத்தி, பிரித்தானியர்கள் மலாயாவில் பரந்த ரப்பர் தோட்டங்களை நிறுவி, தொழிலாளர்களிடம் மேலதிக உழைப்பை வாங்கினர். இந்தத் தோட்டங்கள் மலிவாகக் கிடைத்த தொழிலாளர்களைப் பொருளாதார வளர்ச்சிக்காக முழுமையாக நம்பியிருந்தது.
மலாயா போனால் வாழ்க்கை மாறுமென்ற கனவுகள், தமிழர் வாழ்க்கையில் பெரும் அலை பாய்ச்சலை உருவாக்கின. இந்தச் சூழலில் கங்காணிகள், நல்ல சம்பளம், சுலபமான வேலை என்ற மயக்கும் வாக்குறுதிகளால் பலரையும் கடலைக் கடக்கச் செய்தனர். கப்பல்களில் ஆடு மாடுகளைப் போல் நடத்தப்பட்ட அனுபவம், சோற்றுக்காகத் தட்டுடன் வரிசையில் நிற்க வேண்டிய அவலம் அனைத்தும் நுட்பமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் வேலை அதிகாலை நான்கு மணிக்கே தொடங்குகிறது. இருள் முழுவதும் விலகுவதற்குள், கூர்மையான கத்தியுடன் நீளமான ரப்பர் மரங்களுக்கிடையே வரிசையில் நடக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு மரத்தை வெட்டி அதிலிருந்து சொட்டும் பாலைச் சேகரிக்கும் வேலை என்பது நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வெயில், மழை, உடல் வலி, மலேரியா போன்ற நோய்கள், போதிய மருத்துவ வசதிகளின்மை, சுகாதாரமற்ற குடியிருப்புகள் இவை அனைத்தும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை கடுமையாகப் பாதித்திருக்கின்றன.
கூலி மிகக் குறைவாக இருந்துள்ளது. தோட்டக் கடை செலவுகள், கடன் சுமை, குடியிருப்புக் கட்டுமானம், உணவுச் செலவுகள் அனைத்தும் பொருளாதாரச் சார்புத் தன்மையை வெளிப்படுத்துகின்றன. இதனால் தோட்டத்தை விட்டு வெளியேற முடியாத நிலை உருவானது. இரவானதும் சோர்வுடன் படுத்தாலும் உறக்கம் வருகிறதா என்பதே தெரியாத வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றனர்.
இந்தச் சூழலிலும் தாயின் பேராதரவுடன் பழனியம்மாள் படிப்பை விடாமல் தொடர்ந்து பள்ளிக்குச் சென்று, பின்னாளில் ஆசிரியராக உயர்ந்து பணியில் அமர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி வாய்ப்புகள் குறைந்திருந்தாலும், கோயில்கள், திருவிழாக்கள், மொழி, மரபுகள் ஆகியவற்றின் மூலம் பண்பாட்டு அடையாளம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்தப் பண்பாட்டுத் தொடர்ச்சி சமூக ஒற்றுமையை உருவாக்கினாலும், சமூக முன்னேற்ற வாய்ப்புகளை ஒரளவு வரையறுத்திருக்கிறது. அக்காலத்தில் பெண்கள், தோட்ட நிர்வாகிகள் தொழிலாளர்களை அழைத்து வந்த ஏஜெண்டுகள், சில தோட்டக் கங்காணிகள் இவர்களிடம் பெருந்துன்பங்களை அனுபவித்திருக்கின்றனர். அதனை நீண்ட பாடலாகக் கொடுத்திருக்கிறார் முத்தம்மாள்.
காலைக் கருக்கலிலே
கங்காணி மணியடிக்க
அரக்கப் பறக்க அடுப்பு மூட்டி
அரைகுறையாய்ப் போட்டுக்கிட்டு
பால்காட்டு கைலி சட்டை
பட்டைச் சாக்கை மேலே கட்டி
காண்டா வாளி தோளில் மாட்டி
கஞ்சிப்பானை கையிலெடுத்து
நின்று நினைக்கையிலே
நெஞ்செல்லாம் கனக்குதடி
அலற அலற ஆசைப் பிள்ளையை
ஆயாக் கொட்டகையில் விட்டு விட்டு
பெரட்டிலே பேர் கொடுத்து
பெரிய துரைக்குச் சலாம் போட்டு
அஞ்சிப் பதுங்கி நின்னு
அய்யாமாருக்குச் சலாம் போட்டு
ஒடி ஒடி மரம் வெட்டி
உட்கார்ந்து பட்டை ஆய்ந்து
பறக்கப் பறக்கப் பால் எடுத்து
பக்கமெல்லாம் நோகுதடி.
—
காலையிலே வந்தாண்டி
கருப்புச் சட்டை கங்காணி
மணியடிக்க வந்துட்டாண்டி
மயிரு வாயி கங்காணி
—
இப்படியாக இந்த நூலில் இடையிடையே நிறையப் பாடல்கள் இருக்கின்றன. இந்த நாட்டுப்புறப் பாடல்கள் மலாயா வாழ்வியலைச் சொல்லும் வகையில் தனித்துவமானதாக இருக்கின்றன. முத்தம்மாளின் தங்கை கமலா அகால மரணம் அடைந்தபோது, எண்பது வயதான உறவுக்காரப் பெண் பாடிய புலம்பல் பாடல் இன்று மறந்து போன மக்கள் மரபின் சாட்சியாக நிற்கிறது.
கொத்தோடு மல்லிகையாய்
கூடிப் பிறந்தீங்க – இன்று
கொத்திலொரு மல்லிகை
குதித்தோடிப் போகுதம்மா
செண்டிலே மல்லிகையாய்
சேர்ந்து பிறந்தீங்க – இன்று
செண்டிலொரு மல்லிகை
சிதறியே போகுதம்மா…
இவ்வாறு தனது நினைவில் நின்ற பாடலைப் பதிவுசெய்கிறார். காமாட்சி என்பவர்தான் இழப்பு வீடுகளில் ஒப்பாரிப் பாடல் பாடுவார். பொதுவாக ஒப்பாரி பாடுகிறவர்களுக்கு வளமான குரல் அமைவதுபோல் இவருக்கும் இயல்பிலேயே அமைந்திருக்கிறது, இவள் இல்லாமல் இறப்பு வீடுகள் நிறைவதில்லை. இவரது பாட்டியின் இறப்புக்கு இரண்டு கைகளையும் உயர்த்தி,
எங்கேயோ செவ்வானம்
இடருதுன்னு நானிருந்தேன்.
என் தலையிலே செவ்வானம் – இன்று
இடிந்து விழுந்ததம்மா.
முன்னாலே வச்ச தீயும்
முடிஞ்சதுன்னு நானிருந்தேன்.
முடியாமல் அந்தத் தீயும் – என்
மூச்சில எரியுதம்மா.
அப்போதே வச்ச தீயும்
அணைஞ்சதுன்னு நானிருந்தேன்.
அணையாமல் அந்தத் தீயும் – என்
அடி வயிற்றில் எரியுதம்மா.
என்று பெருங்குரலெடுத்து ஒப்பாரிப் பாடலைப் பாடிக்கொண்டே ஓடிவந்தாள் என்று சொல்கிறார். இம்மாதிரியான நாட்டுப்புறப் பாடல்கள் பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை. அதன் தேவையை அறிந்து முத்தம்மாள் பழனிசாமியே நாட்டுப்புறப் பாடல்களில் என் பயணம் எனும் நூலை 2008 இல் தொகுத்து வெளியிட்டது அவரது முக்கியமான பணி.
மலாயா ரப்பர் தோட்டங்களின் வரலாறும், முத்தம்மாள் பழனிச்சாமியின் வாழ்க்கை வரலாறும் இணைந்து, ‘நாடு விட்டு நாடு’ ஒரு வெற்றிக் கதையாக மட்டுமல்ல; தொழிலாளர் உழைப்பின் மனித பரிமாணத்தைப் புரிந்துகொள்ளச் செய்யும் முக்கிய ஆவணமாக மாறுகிறது. தனது அனுபவங்களை நூலாக எழுதுமாறு தம்பி ராமசாமி கேட்டுக் கொண்டதன் விளைவாக, இந்த அரிய அனுபவப் பதிவு இன்று நமக்குக் கிடைத்துள்ளது. புலம்பெயர்வு, தொழிலாளர் உரிமைகள், சமூக நீதி குறித்து இன்றைய காலகட்டத்தில் மீண்டும் சிந்திக்க வேண்டிய அவசியத்தை இந்த நூல் வலியுறுத்துகிறது. உண்மைச் சம்பவங்களை மனந்திறந்து அப்படியே சொல்லியிருக்கிறார். அப்பாரய்யன் (அப்பாவின் தந்தை) ஒரு கொலையாளி, அம்மாவின் தந்தை சிறையிலிருந்தவர், தன் கணவனை அம்மாவிற்காக விட்டுக்கொண்டுத்த பெரியம்மா ஏமாளியாக இருந்தார், அம்மா தாலி கட்டாத மனைவியாக வாழ்ந்தாள் என்று உள்ளதை உள்ளபடியே சொல்லியிருக்கிறார். கதையோட்டத்தில் சில இடங்களில் தொடர்பின்றி, தாவித் தாவி இங்கும் அங்குமாக அலைந்து செல்கிறது. பல்லினச் சூழல் மிகுந்த பகுதியில் கொங்கு குலப் பகுதியின் தற்பெருமைகளை முன்னிருத்தியிருப்பதைப்போல் பிற இனத்தார் பற்றிய குறிப்புகள், அவர்களின் வாழ்வியலைப் பற்றி இந்நூலில் பேசப்படவில்லை.
‘நாடு விட்டு நாடு’ ஒரு தனி மனிதரின் கதையைத் தாண்டி, ஒரு தலைமுறையின் வரலாறாக, வாழ்வியல் சூழலாக மாறுகிற தருணங்கள் முக்கியமானது. மலாயாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த தமிழ்த் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சுவடுகளை இலக்கியமாக மாற்றிய முயற்சியே இந்தப் படைப்பு. இன்றைய தலைமுறை வெளிநாட்டுச் செல்லும்போது கல்வி, தொழில், வசதி என்ற புதிய சூழலில் பயணிக்கிறது. ஆனால் இதற்கு முன் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் தங்கள் உடலாலும் வியர்வையாலும் தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர். அவர்களுக்கான அடையாளம் வேலைதான், அவர்களுக்கான சொந்தம் நினைவுதான். முத்தம்மாள் பழனிச்சாமியின் எழுத்து மனிதநேயத்தால் நிறைந்திருக்கிறது. அவர் மலாயா வாழ்க்கையை வர்ணிக்கும் விதத்தில் இரக்கம், வரலாறு, உண்மை, உரிமை எல்லாம் கலந்த ஒன்றாகிவிடுகிறது. அதனால் ‘நாடு விட்டு நாடு’ ஒரு கதையாக மட்டுமல்ல; சமூக ஆவணமாகவும் பார்க்கப்பட வேண்டும். இன்று பினாங்கு, கோலாலம்பூர், சிங்கப்பூர் என்று நாம் சொல்வது நவீனமாக வளர்ந்துவிட்ட நகரங்களாக மட்டுமில்லை, அந்த நாகரீகமான புறத் தோற்றத்தினுள் இழையோடும் மென்மையான உணர்வுகள். அவை ஒருகாலத்தில் ரப்பர் மரங்களுக்கிடையே வியர்வைகளைச் சிந்திய தமிழர்களின் வாழ்வியல் நினைவுகள். அந்த நினைவுகளுக்கு இலக்கிய வடிவம் கொடுத்திருக்கிறது முத்தம்மாள் பழனிச்சாமியின் ‘நாடு விட்டு நாடு’.

இது ஒரு தன்வரலாறு நூல். ஓரிடத்தில் கதை என்று சொல்கிறீர்கள். நீங்கள் வாசித்ததை அழகாக மதிப்பிட்டிருக்கிறீர்கள்.