புதுமைப்பித்தன்: அசாதாராண கலகக்காரன்

30. 09. 1953 தமிழ் முரசு நாளிதழில், ‘இலக்கிய மேதை யார்?’ என்ற தலைப்பில் எழுத்தாளர் வீ.க. சபாபதி  ஒரு கட்டுரை எழுதினார். ‘விபரீத ஆசை’ என்ற புதுமைப்பித்தனின் சிறுகதையை வாசித்த அவருக்கு இத்தலைப்பில் ஒரு கட்டுரை எழுத உந்தியிருக்கிறது. புதுமைப்பித்தனின் எழுத்து மலாயாவிலும் சிங்கப்பூரிலும் அப்போதெல்லாம் அரிதாகவே வாசிக்கக் கிடைத்திருந்தாலும், கதையில் வீ.க. சபாபதி கண்டறிந்த பண்பாட்டு மீறல்  விடயத்தை ஒட்டி எழுதினார். அதனை  வாசித்தவர்களிடையே அவ்விடயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அக்காலக்கட்டத்தில் எழுதிக்கொண்டிருந்த பலர், குறிப்பாகச் சொல்வதானால் புதுமைப்பித்தனை வாசித்துவிட்டு எழுத வந்தவர்கள், இவ்விவாதத்தில் ஆர்வத்தோடு கலந்துகொண்டு தங்கள் கருத்துகளையும் எழுதினர். தமிழ் முரசு பத்திரிகை இந்த விவாதத்தை முன்னெடுத்ததோடு மட்டுமின்றி புதுமைப்பித்தனின் மறைவுக்குப் பின்னர்  நிதி சேகரித்து அவர் மனைவியான திருமதி கமலா விருத்தாசலத்திடம் பொறுப்போடு ஒப்படைக்கும் அளவுக்கு இந்தச் சர்ச்சை நீட்சி கண்டிருக்கிறது. பொதுவாகவே இலக்கியத்தில் ஈடுபடுபவர்கள் வசதி உள்ளவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்பது தமிழ்கூறு நல்லுலகம் அறிந்ததே. ஆனால் இலக்கியம் போதிக்கும் அறத்தால்  தங்களால் இயன்ற சிறு சிறு காணிக்கையைப் புதுமைப்பித்தன் குடும்பத்தார்க்கு உவந்து அளித்திருக்கிறார்கள். வாசகர்களின் அந்தத் தார்மீக உணர்வைப்  புதுமைப்பித்தனின் கதைகூறும் திறமைக்கான சான்றிதழ் என்று எடுத்துக்கொள்ளலாம்.

இந்தச் சர்ச்சைக்குக் காரணமாக இருந்த சிறுகதை ‘விபரீத ஆசை’ என்று சொன்னேன். முனைவர் எம் எஸ் ஸ்ரீலட்சுமி ‘புதுமைப்பித்தன் இலக்கியச் சர்ச்சை 1951-52’ என்ற ஓர் ஆய்வு நூலில் ‘விபரீத ஆசை’ எழுப்பிய விவாதங்களை விலாவாரியாக ஆராய்ந்து ஆவணமாக்கியிருக்கிறார்.

‘புதுமைப்பித்தன் இலக்கியத்தைத் தவறான வழியில் பயன்படுத்தும் கீழான நோக்கங் கொண்டவர்’ என்று விமர்சனமே விவாதத்தைத் தூண்டியிருக்கிறது.   விவாதத்தைக் கிளப்பும் அளவுக்கு, ‘விபரீத ஆசை’யில் அப்படி என்ன விபரீதம் நிகழ்ந்திருக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும்.

சராசரி வாசகன் அதனைக் கலாச்சாரக் கொலை என்றும், சமூக சீர்திருத்தம் பற்றி சிந்திப்பவன் அக்கதை சொல்லப்படவேண்டிய கட்டாயக் காலக்கட்டம் இதுவே என்று ஏற்றுக்கொள்வான். இரு மாறுபட்ட கருத்துகள் விவாதத்தின் அடிப்படையாக அமைந்தன.

கதை இப்படிப் போகிறது.

கணவன் பிணமாய்க்கிடத்தப்பட்ட வீட்டில் அவன் மனைவிக்கும் கதைசொல்லிக்கும் காமம் கிளர்ந்தெழுகிறது. கட்டிய கணவன் சவமாகக் கிடக்க இருவரும் உறவுகொள்கிறார்கள். அந்தப் பிணம் வீட்டில் கிடத்தப்பட்டிருக்க, அப்போதுதான் விதவையான அவரின் மனைவியும் கதைசொல்லியும் தவிர அந்த இழவு வீட்டில் வேறு யாருமில்லை. எனவே அச்சந்தர்ப்பம் இருவருக்கும் காமம் கிளர்ந்தெழுவதற்கான முகாந்திரமாக அமைந்துவிடுகிறது.  

கணவன் இறந்து கிடக்க மனைவியும் கணவனின் நண்பனும் இப்படித்தான் அத்துமீறி நடந்துகொள்வார்களா என்ற வினா கண்டிப்பாய் எழத்தான் செய்யும். ஆனால் புதுமைப்பித்தன் லேசுபட்ட கதைசொல்லியல்லவே. அதற்கான சூழலை விவரிக்காமல் விடுவாரா?  காமம் கட்டவிழ நேரகாலமெல்லாம் கிடையாது.

கணவன் நோய்வாய்ப்பட்டு, நோய் உக்கிரமாகத் தாக்க படுத்த படுக்கையாகி செயலற்றுப்போகிறான். ஒரே அலுவலகத்தில்தான் கதைசொல்லியும் நோய்வாய்ப்பட்டவரும் வேலை செய்திருக்கிறார்கள். திடீரென நோயில் வீழ்ந்த நண்பனைப் பார்க்க வருகிறார் கதைசொல்லி. நாள் செல்லச் செல்ல நண்பனின் உடல் நிலை மோசமடைகிறது. தன் உற்ற நண்பனுக்குத் தான் உடனிருந்து உதவிசெய்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதன் பொருட்டே அவர் தினமும் அவ்வீட்டுக்கு வருகிறார். இதனால் நண்பனின் மனைவிக்கும் அவருக்குமான உரையாடல் சாத்தியமாகிறது. தொடக்கத்தில் நண்பனின் மனைவி என்ற சற்று இடைவெளி விட்ட நாகரீகமானதாகவே நீடித்தாலும், தினசரி பழக்கம் காரணமாக அந்நியோன்னியமாகி விடுகிறது. எதேச்சையாக உடல் உரசல்கள் நிகழ்கிறன. இந்த உரசல்களே பின்னர் அவர்களிடையே உடலுறவுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. இதற்கு சூழ்நிலையே முக்கியக் காரணம். அதிலும் கணவன் நோயாளியாய் கிடந்த காலங்களில் மனைவிக்கு உடல் ஏக்கம் உண்டாக வாய்ப்பில்லை என்று சொன்னால் அது முழுமுற்றான உண்மையாகிவிடமுடியாது. விரகதாபம் எல்லா திடகாத்திரமான உடலுக்கும் உண்டாகக்கூடியதே. ஒரு நோயாளிக் கணவனின் மனைவி என்பதால் அவ்வாறான எண்ணம் உண்டாவது ஒழுக்கம் கெட்ட செயல் என்று சொல்வது, வெகுநாள் நீடித்து நிலைத்து சமூகத்தால் கறாராகப் கடைபிடிக்கப்பட்ட பண்பாட்டின் காரணமாக வேண்டுமானால் அக்குற்றச்சாட்டு சரியாக இருக்கலாம். ஆனால் அக்கூற்று இயற்கைக்கு எதிரானது. உடலுக்குள் இச்சை எழும்போது, ஒழுக்கம், பண்பாடு, கற்பு எல்லாம் தாமாகவே ஓரமாய்ப் ஒதுங்கி ஓடிப்போய்விடுவதை மனிதர்கள் தம் வாழ்வனுபவத்தில் உணர்ந்திருக்கலாம். இதனைப் புனைவு வழியாகச் சொல்லிய புதுமைப்பித்தன் அதற்கான நம்பகத் தன்மையைக் கதையில் நிறுவாமல் விடவில்லை என்பதை கதையை வாசித்தவர்கள் நன்கு அறிவர். ஆனால் ஒரு பெண்ணுக்கு கற்பே முக்கியம், அவள் தன்னிலை மீறியிருக்கக்கூடாது, அது பெண்ணினத்துக்கே மாபெரும் இழுக்கு. சமூக வகுத்த சட்டதிட்டங்களுக்கு முற்றிலும் முரணானது என்று நினைப்பவர்கள்தான் கதையைச் சர்ச்சைக்குள்ளாக்கியிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையில் இவ்வாறு நடப்பதற்கே வாய்ப்பு இல்லை என்று வாதிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

‘விபரீத ஆசை’ சிறுகதை மலாயா, சிங்கப்பூரின் வாசகர்களிடையே சர்ச்சையை உண்டுபண்ணியதென்றால், அவரின் ‘பொன்னகரம்’ சிறுகதை தமிழகத்தில் இலக்கியச் சமர்களுக்கு வித்திட்டிருக்கிறது.  

‘பொன்னகரம்’ சிறுகதையும் கலாச்சாரக் காவலர்களைப் பொறுத்தவரை விபரீதமான கதைப் பொருளைக்கொண்டதுதான்.

கதை ஒரு சேரியில் நடக்கிறது. சேரி என்றாலே தலித்துகள் வாழும் இடம். பசி சேரிக் காற்றிலும் உலவிக்கொண்டிருக்கும் என்பது மிகையான கருத்தன்று. அற்றைக் கூலிகளின் இருப்பிடம் அது.  ஒருநாள் அம்மாளுவின் புருஷன் முருகேசன் குடித்துவிட்டு விபத்துக்குள்ளாகி குடிசையில் நடமாட முடியாமல் கிடக்கிறான். அவனுக்குக் கிடைத்துவந்த சொற்ப வருமானமும் இல்லாமல் ஆகின்றது. வீட்டில் வறுமை! நோயில் வீழ்ந்து கிடப்பவன் பால்கஞ்சிக்கு ஆசைப்படுகிறான். அம்மாளுதான் முருகேசனுக்கு ஒரே ஆதாரம். பால்கஞ்சி வாங்குவதற்குக்கூட அவளிடம் காசு இல்லை. அவளுக்குக் கூலி கிடைக்க இன்னும் இரண்டு நாள்கள் இருக்கின்றன. கணவனின் ஆசையைத் தீர்க்க அந்தப் பத்தினிப்பெண் திண்டாடுகிறாள். கணவனுக்குக் கஞ்சி வாங்கித்தர காசில்லாமல் எங்கெங்கோ அலைந்து, கிடைக்காமல் கைபிசைந்தவண்ணம் அல்லாடிக்கொண்டிருந்திருக்கிறாள்.

அன்று அம்மாளு வீட்டுக்குத் தண்ணீர் பிடித்துக்கொண்டு திரும்பும்போது  நெடு நாட்களாக அவளின் மீதான ஏக்கத்தைத் தேக்கிவைத்திருந்த ஒருவன் அவளைத் தன் உடல் ஆசைக்கு அழைக்க, அவளும் இசைகிறாள். கட்டிய கணவனின் பசி தீர்க்கவேண்டுமே! வேறு வழி? அவள் ‘சேவை’க்காக அவளுக்கு முக்கால் ரூபாய் கூலி கிடைக்கிறது. கணவன் ஆசைப்பட்ட பால்கஞ்சியை வாங்கிவந்து கணவனின் பசியையும் போக்கிவிடுகிறாள் ‘கற்புக்கரசி.’

இந்தக் கதையும் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகிறது. தலித் மக்களின் ஏழ்மையைச் சுட்டிக்காட்ட புதுமைப்பித்தன் அவர்களைத் கீழ்த்தரமாகச் சித்தரித்துவிட்டார் என்றும் சாதியை இழிவு செய்துவிட்டார் என்றும் அவர் மீது கண்டனங்கள் எழுந்தன. வாழ்க்கை அதன் குரூரத்தன்மையோடு இயங்குவதைத்தான் புதுமைப்பித்தன் காட்டுகிறார். அது அருவருப்பானது என்று முகஞ்சுளிக்கும் சமூகம் அதன் நிதர்சனத்தை  ஏற்க மறுப்பதாலேயே சர்ச்சையைக் கையில் எடுக்கிறார்கள்.

ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உண்மை நிலையை வெளிச்சமிட்டுக் காட்டுவதே ‘பொன்னகரம்’ கதையின் நோக்கம் என்பதை இலக்கிய வாசகர்கள் உணர்வார்கள். மனைவி தன் கணவன் மீதான அன்பைக் காட்டும் கதை அது என்று ஒரு தரப்பின் கருத்தாகவும் இருந்தது. மனிதர்களின் அவல நிலையையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும்  சுட்டிக்காட்டுவதன்றி ஒரு பொறுப்புள்ள எழுத்தாளனின் கடமை வேறென்னவாக இருந்திருக்க முடியும் என்ற கருத்தும் நிலவியது.

கதையின் முடிவில் புதுமைப்பித்தன் எழுப்பும் நையாண்டித்தனமான வினாதான் கதையின் அடிநாதமாக ஒலிக்கிறது.

‘என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதான் ஐயா பொன்னகரம்!’ என்று  தனக்கே உரிய எள்ளலோடு கதையை முடிக்கிறார்.

நையாண்டி செய்வது பொதுவாக இரண்டு நோக்கங்களைக் கொண்டது. முதலாவது நையாண்டி செய்யப்படுபவரை ஒரேயடியாக அடித்து வீழ்த்துவது. புதுமைப்பித்தனுடைய நையாண்டி இலக்கியவாதியினுடையது. சமூகம் கட்டிக்காத்து வந்த ஒரு குறிப்பிட்ட பண்பாடும் பழக்க வழக்கமும் சமகாலத்துக்கு ஏற்புடையதல்ல என்றும் அவை மாற்றத்துக்குட்படுத்தபட வேண்டிய ஒன்று என்றும் வன்மையாக எடுத்துரைக்கும் வகைமையைச் சேர்ந்தது. இதனைப் புரிந்துகொள்ள முடியாதவர்களே சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்கள். பழமைச் சிந்தனைப் பிடியிலிருந்து அவ்வளவு எளிதில் யாரும் தங்களை விடுவித்துக்கொள்வது இயலாது என்பது நிதர்சனம். எனவேதான் புதுமைப்பித்தனின் எழுத்து அதிர்ச்சியளிப்பதாக இருந்திருக்கிறது. அதே வேளையில் மிக முக்கியமான விவாதப் புள்ளியைத் தொட்டு பண்பாட்டு மாற்றங்களுக்கான விதியையும் சமைத்திருக்கிறார் அந்த மகத்தான கதைசொல்லி.

இன்னொரு நுணுக்கத் தகவலை நாம் கவனிக்கத் தவறக்கூடாது.   

இக்கதைக்குப் ‘பொன்னகரம்’ என்ற தலைப்பிலேயே ஓர் எள்ளல் தொனிக்கிறது. பொன்னகரம் என்ற ஊர் தமிழ்நாட்டில் இல்லை. பொன்னகரம் என்ற பெயரை அவர் ஏன் உருவாக்க வேண்டும்? பொன்னகரம் என்ற சொல்லில் ‘பொன்’ என்ற பதத்தின் பொருளைச் சொக்கத்தங்கம் என்று எடுத்துக்கொள்ளலாம். கற்பில் தூய்மையான ஒரு பெண்ணைச் சொக்கத் தங்கம் என்று சமூகம் பெருமையாக மதிப்பிடுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த ஊரின் தன்மையும் அதற்கு ஒப்பானதுதான் என்பதைச் சுட்டிக்காட்டவே இந்தப் பெயரைத் தேர்ந்தெடுக்கிறார். ஆனால் உண்மையில் அந்த ஊர் அப்பெயருக்கு ஏற்றார்போல் தூய்மையானதல்ல. பெண்ணின் கற்பும் அப்படித்தான். ஆண்களின் ஆதிக்க உலகில் பெண்கள்  தூய்மையாக இருப்பது சிரமம். உடல் சார்ந்து விதிக்கப்படும் ஒழுங்கு இயற்கைக்கு முற்றிலும் முரணானது. நிலைதடுமாறச் செய்யக்கூடியது. ஏன் அதற்கு இத்தனை சமூக மதிப்பு, கட்டுப்பாடு, ஒழுக்க, அடிமைத்தனம் எல்லாம்? என்பதாகத்தான் புதுமைப்பித்தனின் கருத்தாக இருந்திருக்கிறது.

இந்தச் சர்ச்சையின் காரணமாக  2014இல் சென்னைப் பல்கலைக்கழகம் ‘பொன்னகரம்’ கதையையும், ‘துன்பக்கேணி’ கதையையும் பாடத்திட்டத்திலிருந்து தூக்கிவிட்டது. பல்கலைக்கழகங்களுக்குக் கதைக்குள் இருக்கும் கலையோ, புரட்சியோ, புதுமையோ ஒவ்வாதவை. எனவேதான் பல்கலைக்கழகங்கள் என்ற சொல்லின் உள்ளிருக்கும் ‘கலை’யைக் கழற்றி எறியவேண்டுமென்பதே நவீன இலக்கியவாதிகளின் கருத்தாக இருக்கிறது.

இதே பொருண்மையைக் கையாண்டு எழுதப்பட்ட இன்னொரு கதையான ‘துன்பக்கேணி’யையும் அலசிப் பார்க்கலாம்.

‘துன்பக்கேணி’ சிறுகதையும் திருமணமான பெண் கற்பு மீறும் கதையைத்தான் சொல்கிறது. அதன் கதைக்களம் முன்னதைவிட பரிதாபமானது. பதினெட்டாம்  நூற்றாண்டில் காலணித்துவ ஆட்சியின் போது லட்சக்கணக்கான பராரி ஏழைகள் இந்தியத் துணைகண்டத்திலிருந்து வெவ்வேறு நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக வரலாறு பதிவு செய்கிறது. அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் தேயிலைத் தோட்டங்களுக்கும் பிழைப்புக்காக ‘இறக்குமதி’ செய்யப்படுகிறார்கள். அங்கே கடுமையான உழைப்புக்கும் சுரண்டலுக்கும் ஆளான ஏழை எளியவர்களின் கதைகளில் ஒன்றுதான் ‘துன்பக்கேணி’

திருநெல்வேலியில் வானம் பார்த்த பூமியின், ஒரு வரண்ட கிராமத்தின் நிலவிய பசி பட்டினியைச் சமாளிக்க முடியாமல் மருதி என்ற குடும்பப்பெண் கங்காணிகளின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை தேயிலைத் தோட்ட வேலைக்குச் செல்கிறாள். அங்கே ஸ்டோர் மனேஜரின் ஆசைக்குப் பலியாகிச் சீரழிகிறாள். ஏற்கனவே தன் கணவனால் கற்பமுற்ற மருதி, வெள்ளச்சி என்ற பிள்ளையைப் பெற்றெடுக்கிறாள். சிறிது காலம் ஒரு குற்றச்செயலுக்காகச் சிறை தண்டனை பெற்று வீடு திரும்புகிறான் மருதியின் கணவன். கடும் வெய்யிலிலும் மழையிலும் பசி பட்டினியோடு சுரண்டலுக்கும் ஆளான மருதி, மேக நோய்கண்டு அவதிப்படுகிறாள். தனக்கேற்பட்ட அதே அவலம் வெள்ளச்சிக்கு நேரிடலாம் என்று பயந்து அவளைக் கணவனோடு மீண்டும் கிராமத்துக்கே அனுப்பிவைக்கிறாள் மருதி. அங்கே வெள்ளச்சி தன் சித்தி கொடுமைக்கு ஆளாகித் துன்பமுறுகிறாள். அவளைக் கைப்பற்றி மீண்டும் இலங்கைக்கே வருகிறாள் மருதி. அங்கே போக்கிடம் இன்றித் தவிக்கும் மருதியும் வெள்ளச்சியும் முன்பு ஒரே இடத்தில் வேலை செய்த சுப்பனிடம் அடைக்களமாகி அவனோடு சேர்ந்து வாழ்கிறார்கள். வெள்ளச்சி பருவமடைந்ததும் அவள் வாழ்க்கைக்கு உத்திரவாதம் தேடுகிறாள். ஆனால் அவளும், ஒரு கயவன் கையில் சிக்கித் தவிப்பதையே புனைவாகச் ‘துன்பக்கேணி’ சொல்கிறது.

கொத்தடிமைகளாக்கப்பட்டு வேற்று நிலத்துக்குக் கொண்டுசெல்லப்படும் மனிதர்கள் நிலை மிகுந்த வேதனைக்குரியது. கடுமையான உழைப்பையும், அந்த உழைப்புக்கேற்ற கூலி கொடுக்கப்படாமையும், அதனால்  வாழ்க்கையை நடத்த முடியாத குடும்பச் சுமைகளையும் எதிர்கொள்ளவேண்டிய கட்டாயம் உண்டாகிறது. அதுமட்டுமின்றி பச்சாதாப உணர்வே இன்னதென்றே அறியாதவர்கள்தான் முதலாளிகள். அவர்கள் இழுப்புக்குப் பலியாக வேண்டிய கட்டாய நிலை பெண்களுக்குச் சர்வசாதாரணமாக நடக்கிறது அவர்கள் பிழைக்க வந்த நிலத்தில்.

புதுமைப்பித்தன் புனைவுகளில் சுட்டுவது இதைத்தான். கற்பு மீறலை வெறுமனே காரணகாரியமின்றி முன்னிருத்தவில்லை. தவிர்க்கவே இயலாத சூழ்நிலையால் நிலைதடுமாறும் அபலைகளின் வாழ்க்கையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். கற்பு மீறல் ஏன் நடக்கிறது என்பதை ஆராயாமல், எந்தச் சூழ்நிலையிலும் பெண் கற்புநிலை வழுவாமல் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவதில் என்ன நியாயம் இருக்கமுடியும்? பெண் வர்க்கத்துக்கு எதிரான ஒரு வன்முறையல்லவா அது? அதற்கும் அப்பால் கற்பு என்ற கயிறால் ஏன் பெண்களைக் கட்டிப்போடவேண்டும் என்ற குரலும் புதுமைப்பித்தனின் கதைகளில் ஊடுபாவாக எழத்தான் செய்கிறது. இந்தக் கதை சர்ச்சைக்கு உள்ளானதற்குக் காரணம் இது சமூகக் கட்டுப்பட்டை மீறுகிறது என்பதால்தான். ஆனால் தர்க்கரீதியாக சிந்திக்கும் பொருட்டு  புதுமைப்பித்தன் தன் கதையின் ஊடாக சமூகத்தின் பகுத்தறிவுக் கண்களைத் திறக்க முயற்சி செய்கிறார். சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் பற்றி அவர் கவலைப்பட்டிருந்தால் தொடர்ந்து பிடிவாதமாக கற்பைத் தொட்டு இத்தனை கதைகளை அவர் எழுதியிருக்கமாட்டார்.

கற்பு மீறலைக் கதைகளில் புனையும்போது புதுமைப்பித்தன் மிகக் கவனமாகத்தான் இருந்திருக்கிறார். அதற்கான சூழலை வடிவமைக்கிறார். சூழ்நிலையால்தான் ஒரு பெண் கற்புநிலை தடுமாறுகிறாள் என்று வாசகன் புரிந்துகொள்ளும் அதே வேளையில் காமம் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுமையான உணர்வு, பெண்ணை மட்டும் ஏன் தண்டனைக்கு உட்படுத்தவேண்டும் என்று கதைகளில் ஒலிக்கச் செய்துவிடுகிறார். இந்தத் தர்க்க ரீதியான வினாவை எழுப்பும்போதுதான் அது விவாதத்தைக் கிளப்பிவிடுகிறது. விவாதத்தைக் கிளப்பாத எதுவும் தீர்வை நோக்கி நகர்ந்ததாகச் சரித்திரமில்லை! தர்க்கத்தை விரும்பும் எவரும் புதுமைப்பித்தனின் நோக்கத்தின் தெளிவைப்  பாராட்டாமல் இருக்கமாட்டார்கள.

‘கலியாணி’ என்ற மேலுமொரு கதை இதற்கோர் நல்ல எடுத்துக்காட்டு. சுப்புவையருக்கு வயது ஐம்பதுக்கும் மேல். மனைவி இறந்ததும் இளமையாக இருக்கும் கலியாணி அவருக்கு இரண்டாவது தாரமாக அமைகிறாள். சுப்புவையருக்கு அந்த வயதில் உடல் ஆசை வற்றிப்போயிருக்கிறது, கலியாணி நிலை அப்படியல்ல. அவள் மிக இளையவள்.  இந்தச் சமயத்தில்தான் தனி ஆளாக அவ்வூரில் வேலைக்கு வரும் சுந்தர் சர்மா சுப்புவையர் வீட்டுக்கு உணவுக்காகத் தினசரி வரவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிறது. தொடக்கத்தில் கலியாணிக்குச் சுந்தர சர்மா மீது எந்தவித ஆசையும் கிடையாது. ஆனால் சுப்புவையர் கலியாணியை ஒரு மனைவிக்கான ஸ்தானத்தைக் கொடுக்காமல் மறுதளிக்கிறார். அதுமட்டுமின்றி சுந்தர சர்மாவின் முன்னிலையிலேயே கலியாணியைச் கீழ்மையான சொற்களால் காயப்படுத்துமாக இருக்கிறார். இதனால் சுந்தர சர்மா மீது அவள் கவனம் திரும்புகிறது. உணவு பரிமாறும் தருணங்களில் சுந்தர சர்மாவுக்கு அவள் உடலின் மீது ஈர்ப்பு உண்டாகிவிடுகிறது. அவளுக்கும் சன்னஞ்சன்னமாக உண்டான சுந்தர சர்மா மீதான மரியாதை பின்னாளில் ஈர்ப்பாக மாறி, அவர்களின் ஆசை ஒரு புள்ளியில் சந்திக்கிறது. இருவருக்குமிடையே பட்டும் படாமல் நிகழும் உறவு  ஒரு நாள் விடிகாலைப் பொழுது அதற்கான சந்தர்ப்பத்தை நல்கிவிடுகிறது. கலியாணி ஆற்றங்கரையில் துணி துவைத்துக்கொண்டிருக்க, சுந்தர சர்மா அங்கே பிரசன்னமாக, நெடு நாள் இருவரும் தேக்கிவைத்திருந்த ஆசைக்கு அந்தப் புலர் காலைப்பொழுது வடிகால் அமைத்துக் கொடுத்துவிடுகிறது.

இக்கைதையிலும் பிறரின் மனைவி சோரம் போவதை எழுதும்போது பெண்ணின் கற்புநிலை சார்ந்து சமூகம் விதித்த கட்டொழுங்கைக் கேள்விக்குட்படுத்துகிறார் புதுமைப்பித்தன்.

அவரின் புனைவுகள் சமூகத்தில் நடக்கும் யதார்த்த சம்பவங்களோடு நின்றுவிடவில்லை. பெண் வர்க்கத்தைக் கட்டிப்போட்ட கற்பு என்ற அடிமைச் சங்கிலியை, தொன்மக் கதைகளை மறுபுனைவு செய்வதன் மூலமும் முயன்று பார்க்கிறார் சிறுகதைகளின் பிரம்ம ரிஷி.

‘சாப விமோசனம்’ புதுமைப்பித்தனின் மகத்தான கதைகளில் ஒன்று. புதுமைப்பித்தனிலிருந்துதான் தொன்மத்தை மறுபுனைவு செய்யும் தொடக்க முயற்சிகள் சிறுகதைகளில் நடந்திருக்கின்றன என்பது பரவலாகச் சொல்லப்படும் கருத்து.

இராமாயண காவியத்தின் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு தன் நியாயத்தை வைக்கிறார். ஒருநாள் விடிகாலைப் பொழுதில் தன் குடிலில், இந்திரன் அகலிகையை மடியில் ஏந்தியிருப்பதைத்   கௌதம முனிவர் கண்கொண்டு  பார்த்துத் தொலைத்துவிடுகிறார். அதற்காக அகலிகையைத் தண்டிக்கும் வண்ணம் அவளைக் கல்லாகச் சபித்துவிடுகிறார். அகலிகை எந்தப் பாவமும் அறியாதவள். தன் உடல் இச்சையைத் தீர்க்க, கௌதமர் தோற்றத்தில் வந்த இந்திரனால் அகலிகையை ஏமாந்துவிடுகிறாள். அது இந்திரனின் சூழ்ச்சி என்றே அகலிகை அறிந்திருக்கவில்லை. அகலிகையை என்ன ஏதென்று விசாரிக்காமலேயே ஆண்களுக்கே உரித்தான அதிகார குணத்தில் தன் பத்தினிப்பெண் மீது சினம் தெறிக்க, அவளைக் கல்லாக்கிவிடுகிறார் கௌதமர். பெண்ணுக்கே உரித்தான கற்பொழுங்கை அகலிகை உடைத்தெறிந்துவிட்டால் என்பதற்காகவே கௌதமர் அவளுக்கான அந்த ஆயுள் தண்டனையை வழங்கிவிடுகிறார். அதனால் அவள் நீண்ட நாள் கல்லாகவே கிடக்கிறாள்.

ஒருநாள் ராமரும் லட்சுமணரும் தங்களின் சிறுவயதில் ஓடியாடி விளையாடிக்கொண்டிருக்கும் போது ராமரின் புனிதப் பாதம் அக்கல்லில் பட, அகலிகை  உயிர்ப்பித்து எழுகிறாள். அகலிகை மீண்டும் உயிர்பெற்றாலும், அவளுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை மக்கள் அறிவார்களா என்ற சந்தேகம் அவளை நிந்தித்துக்கொண்டே இருக்கிறது. 

பதினான்காண்டுகள் வனவாசம் முடிந்து நாடு திரும்பியதும் ஒரு நாள் சீதையும் ராமரும் கௌதமர் குடிலுக்கு வருகிறார்கள். சீதையும் அகலிகையும் தனியே பேசிக்கொண்டிருந்தபோது சீதையை ராமர் அவள் கற்புடையவள் என்பதை மக்களுக்கு நிரூபிக்க அக்கினிப் பிரவேசம் செய்ய வைத்ததை அகலிகையிடம் சொல்கிறாள். அகலிகைக்குப் பொசுக்கென்று கோபம் வர, “அவர் கேட்டாரா. நீ ஏன் செய்தாய்?” என்று கேட்கிறாள். “அவர் கேட்டார் நான் செய்தேன்” என்கிறாள் சீதை அடக்கத்தோடு. இங்கேதான் அகலிகை கோபம் தீச்சூடு பறக்கிறது. மீண்டும் “அவன் கேட்டானா? ” என்று விளித்து கத்துகிறாள். புதுமைப்பித்தன் மொழியில் அவர் என்ற புனிதச் சொல் அவன் என்ற அநாகரீகச் சொல்லாக மாறியதைக் கவனியுங்கள். அவன் என்று ராமரை அகலிகை அவமாரியாதையாகச் சொல்லும்போது அது அவர் கற்புக்கரசியான சீதைக்குக் கொடுத்த கடும் தண்டனையைக் கண்டிக்கிறாள் என்று புரிந்துகொள்ளலாம்.

தான் கற்புள்ளவள் என்பதை கௌதமருக்கும் சமூகத்துக்கும் நிரூபித்து உதவிய அதே ராமர் சீதையின் தூய்மையின் மீது களங்கம் நினைத்திருக்கிறாரே என்ற கோபம்தான் அகலிகைக்கு. கடவுளேயானாலும் கற்பின் பொருட்டு ஒரு பெண்ணைக் களங்கப்படுத்துவது கண்டிக்கத் தக்கது என்பதே புதுமைப்பித்தனின் புரட்சிகரமான அபிப்பிராயமாக இருந்திருக்கிறது. அதனையும் அகலிகையின் கையில் கொடுத்தே சாட்டையைச் சொடுக்கியிருப்பது ஒரு புனைவுப் புரட்சியாளின் விவேகமன்றி வேறென்னவாக இருந்திருக்க முடியும்?  

பெண் சமூகத்தை ஒடுக்கி அதிகாரம் செய்யவே ஆண்வர்க்கம் கற்பு என்ற கற்பிதத்தைக் கட்டமைத்து, அது எப்போதும் வழக்கொழிந்துவிடாமல் கவனமாகப் பாதுகாத்து வந்த தந்திரத்தைப் புதுமைப்பித்தன் எத்துணை லாவகமாக சாடியிருக்கிறார் என்று கவனிக்க வேண்டும்.

கட்டித்தட்டிப்போன பழைய மரபின் கட்டமைப்பைத் தகர்ப்பதற்கு அறிவித்துறை மட்டுமே கைகொடுக்கும். இலக்கியம் அறிவுத்துறைகளுக்கெல்லாம் தலையாயது. அது மரபான கற்பிதத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். புமைப்பித்தனின் ஆளுமையானது அந்தக் கற்பிதங்களின் வாலை ஒட்ட நறுக்கும் ஆயுதமானதை அவரது ‘கோபாலபுரம்’, ‘பித்துக்குளி’, ‘நினைவுப் பாதை’, ‘மகாமசானம்’ உள்ளிட்ட கதைகளில் நிறையவே காணக் கிடக்கின்றன.

தான் சார்ந்த சமூக அரசியலைப் புதுமைப்பித்தன் மிகக் கூர்மையாக அவதானித்திருக்கிறார் என்பது அவர்கள் கதைக்குள் கொண்டுவந்த கதைப்பொருண்மைகள் திட்டவட்டமாகச் சொல்கின்றன. அவரின் சமகால எழுத்தாளர்களான கல்கி கிருஷ்ணமூர்த்தி, விஸ்வநாதன், பி.எஸ் ராமையா போன்றவர்கள் குடும்ப உறவுச் சிக்கல்களையே புனைந்துகொண்டிருக்கும்போது புதுமைப்பித்தனின் பார்வை முற்றிலும் வேறு தளத்தில் இயங்கியிருக்கிறது. இது உன்னிப்பாக அவதானித்தவர்களுக்கு வியப்பை உண்டாக்குகிறது. ஏனெனில் அவை நவீன அறிவியற்கால மதிப்பீடாக ஒலித்தவை. இவரின் இலக்கியப்பாதை முற்றிலும் வேறு தளத்தில் பயணித்ததால்தான் அவர் மீதான கவனம் இன்றுவரை நின்று நிலைக்கிறது.  ஏற்கனவே கற்பிதங்களாக வகுக்கப்பட்ட சமூக ஒழுங்கை அவர் காலத்து எழுத்தாளர்கள் விதந்தோதி எழுதிக்கொண்டிருக்கும் போது புதுமைப்பித்தன் தனித்த குரல்மட்டும் கலக்குரலாக ஒலித்திருக்கிறது. அவை மறுசீரமைக்கப்பட வேண்டியவை என்ற தீர்க்கமான  பாதையைக் காட்டுகிறது. இப்படிச் சொல்வதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். இந்தக் குணம் அப்போது புதுமைப்பித்தனுக்கு மட்டுமே இருந்தது.

ஆண் அதிகாரத்தின் நுண் அரசியலைப் புனைவினூடாகச்  சுட்டிக்காட்டி  பாரதிக்குப் பிறகு பெண்ணடிமை விடுதலைக்கான விதையை ஆழமாக ஊன்றியவன் புதுமைப்பித்தன். இன்றைக்கு அதன் பலனைக் கண்கூடாகக் காண்கிறோம்.

1 comment for “புதுமைப்பித்தன்: அசாதாராண கலகக்காரன்

  1. Viji
    March 1, 2026 at 1:04 pm

    சார் உங்களின் எழுத்தும் கருத்தும் எழுத்து பாணியும் வாசிப்பதற்கு படு சுவாரஸ்யம்.

    அதுவும் இதில் குறிப்பிட்டுசொல்லப்பட்ட கதைகளின் உலவும் உணர்வுகளுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் மரியாதை என்பது எழுத்தாளரின் சீரிய சமூகப் பார்வையேயானாலும் அதை மிக அழகிய தமிழில் விலாவரியாக உங்களின் பார்வையில் எது சரி எது தவறு என்று மிக நுணுக்கமாக பகுத்தாய்ந்து, புதுமைப்பித்தன், தமிழ் சிறுகதை இலக்கிய உலகின் பிரம்ம ரிஷி என்று குறிப்பிட்டு, அவரைத் தேடி அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்றும் அறிமுகம் செய்து வைக்கும் உங்களுக்கு எனது அன்பு மரியாதை..

    இலக்கியம் புரியாதவர்கள்/ புரிந்துகொள்ள முயலாதவர்கள் சீரிய இலக்கியப் பார்வை கொண்ட படைப்பாளிகளின் மீது வன்மத்தைக் கக்குவது அன்று தொட்டு இன்றுவரை தொடர்வதுதான் வேதனைக்குரிய ஒன்று.., 100/99 பேர் அப்படித்தான்.

    வெகுஜன எழுத்திற்குத்தான் இன்னமும் மவுசு தமிழ் இலக்கிய உலகில்.. குறிப்பாக எழுத்தாளர் சுஜாதா. இன்னமும் கொண்டாடப்படும் எழுத்தாளர் அவர்..!

    எனக்கு புதுமைப்பித்தன் படைப்புகளின் மீது எப்போதும் ஒரு கிறக்கம் உண்டு.
    அதுவும் காஞ்சனை சிறுகதையில் ஒரு உள்மன புலம்பல் வரும், “அவனின் உணர்வு எப்படி இருந்தது தெரியுமா! சோரம் போகவிருக்கும் மனைவியின் உணர்வைத் தெரிந்துகொண்டு எதுவுமே செய்யமுடியால் தவிக்கும் அப்பாவிக் கணவனின் நிலை.” அடி துவம்சம் அந்த ஒரு இடம்…, துரோகத்தின் வலி வெள்ளிடைமலை. சூப்பர்..

    ❤️❤️ Great sir.

    ஶ்ரீவிஜி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...