கலை பண்பாடு ஆவணமாக்கல்

1

சமீபத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த மிகப்பெரிய கலைபண்பாடு ஆவணமாக்கல் என கீழடி அருங்காட்சியகத்தையும் பொருநை அருங்காட்சியகத்தையும் சொல்லலாம்.

கடந்த பொங்கல் திருவிழாவின்போது பொருநை அருங்காட்சியகம் சென்றிருந்தேன். பெருந்திரளான மக்கள் கூட்டம் அங்கு அந்த நாளில் இருந்ததைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. சென்னை போன்ற பெருநகரங்களில் மால்களில் மட்டுமே இத்தகைய கூட்ட நெரிசலைப் பார்க்க முடியும். ஒரு வேளை சென்ற ஆண்டு(2025) திறக்கப்பட்டது என்பதால் கூட இத்தகைய ஆர்வம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

பொருநை ஆற்றங்கரை நாகரிகம்

அந்த அருங்காட்சியகத்தின் முகப்பிலேயே பொருநை ஆற்று நிலப்பரப்பு (Porunai river terrain) என்ற பதாகை தாங்கியபடி ஆற்றுப்படுகையின் அகன்ற சித்திரத்தை அளித்து அதில் அகழாய்வு செய்யப்பட்ட இடங்கள் குறிக்கப்பட்டிருந்தது. பொருநையாற்றுடன் எனக்கு உணர்வு ரீதியாக தொடர்புண்டு. சிறு வயதில் வாரம் ஒருமுறை மட்டுமே எங்களுக்குத் தாமிரபரணித் தண்ணீர் வரும். அதுதான் எங்களுக்கு அந்த வாரம் முழுவதற்குமான குடிநீர் என்பதால் அதைப் பிடிப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு ஓடிய நினைவு அந்த ஆற்றுப்படுகையைப் பார்த்த மாத்திரத்தில் வந்தது. அதிலிருந்து பிரிந்து வந்த ஒரு சுனையின் உயிர் நரம்பிலிருந்து தண்ணீர் பருகி உயிர் வளர்த்ததன் நன்றிப்பெருக்கு அதைப் பார்க்கையில் உண்டானது

3200 ஆண்டுகாலத்திற்கு முன் இதே நிலத்தில் இரும்பு காலத்தைச் சேர்ந்த நம் முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற உணர்வை நமக்கு அதே காலத்தில் அங்கு இருந்த ஆறுகள், மலைகளைத் தவிர வேறு எதுவும் சரியாகக் கடத்திவிட இயலாது. சிந்து சமவெளி நாகரிகம், எகிப்து நாகரிகம் தொடங்கி கிருஷ்ணா, காவேரி என ஆறுகளின் பட்டியல் அப்போது மனதில் தோன்றியபடி இருந்தது. திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியப்பட்டியில் பதின்மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய ஆய்விடங்களிலிருந்து வைக்கப்பட்ட ஆகழாய்வுப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. எனக்கு முன்னால் ஒரு அப்பா தன் சிறு பிள்ளைகளுக்கு அவற்றைக் காட்டியபடி நகர்ந்து கொண்டிருந்தார். பிள்ளைகளின் “இது என்ன?” என்ற தொடர் கேள்விக்கு முடிந்த அளவில் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு முதுமக்கள் தாழியை அவர் விளக்க மிகவும் சிரமப்படுவதைப் பார்க்க சுவாரசியமாக இருந்தது. அவரின் முகத்தில் அந்தக் காலத்தை உணர்ந்த திகிலும் குழந்தைகளுக்குக்  கடத்த முற்படுவதன் சிரமமும், ஒட்டுமொத்தமாக ஒரு மருட்சியும் இருந்தது. இதே மருட்சியை ஓர் ஆய்வரங்கத்திலிருந்து இன்னொரு ஆய்வரங்கத்திற்குச் செல்லும் வழியில் சந்தித்த பலரின் முகத்திலும் கண்டேன். பெரியவர்கள், வயதுவந்தோர், இளைஞர்கள், இணையர்கள் என பலரிலும் அந்த உணர்வைக் காண முடிந்தது. குழந்தைகளால் மட்டுமே அங்கு விளையாட்டுப் போக்குடன் இருக்கச் சாத்தியம் என்று தோன்றும்படியான ஒரு அமைதியும் இறுக்கமும் அங்கு நிலவியது. இது போன்ற தொன்மையைக் கடத்தும் இடங்கள் நம்மை இன்றிலிருந்து ரத்து செய்து சாதி, மத, இன, மொழி அடையாளங்களைத் தாண்டிய ஒரு இடத்தில் வைத்து மானுடத்தை, இந்த உலகத்தைப் பார்க்கும் ஒரு பார்வையை அளிக்கிறது. இத்தகைய பார்வையே சிந்தனைக்கான சரியான களத்தை அமைத்துக் கொடுக்கும்.

கலை என அறிவு என நம்மைச் சூழ்ந்திருக்கும் தத்துவ நூல்களும், புனைவுகளும், நடன வகைகளும், இசையும், அதன் கருவிகளும், ஆலயங்களும், சிற்பங்களும், ஓவியங்களும், மரபு என நம்மைப் பின் தொடரும் சடங்குகளும், நம்பிக்கைகளும், நாட்டார் பாடல்களும், சொலவடைகளும், சிறு தெய்வங்களும், அவற்றின் தொன்மக் கதைகளும் என யாவும் வேறு காலத்திலிருந்து கையை நீட்டிக் கொண்டு எதையோ சொல்ல முற்படுவது போல அல்லது தொடர்பு கொள்ள நினைப்பது போன்ற சித்திரத்தை எனக்கு எப்போதும் அளிக்கும். ஒரு காலகட்டத்தின் உச்சபட்ச சாத்தியமான சிந்தனைகளை அதற்குப் பிந்தைய காலகட்டம் தொகுத்துக் கொள்வதே சமூகமாக நாம் முன் செல்வதற்கு முக்கியமானது. தொகுத்துக் கொள்ளாத சமூகம் செய்தவற்றையே திரும்பச் செய்து அதில் உழலும், தேக்கமடையும். வரலாறு எழுதப்படுவதும், கலைக்களஞ்சியங்கள் தொகுக்கப்படுவதும் அதன் பொருட்டு தான். இன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலத் தகவல்களைச் செயல்முறைக்கு உட்படுத்தி பயனுள்ள தகவல்களாக அவற்றை மாற்றவும், இதுகாறும் கலை, அறிவு ஆகியவை செயல்பட்டு வந்த வடிவரீதியைக் (Pattern) கண்டறிந்து தொகுப்பதோடு புதிய பல வடிவ ரீதியான சாத்தியங்களை ஊகிப்பதுமான வேலையைச் செய்ய வாய்ப்புள்ளது. இது மனித மூளையை இன்னும் ஆழமான சிந்தனைப் போக்குகளில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பை அளிக்கும்.

இலங்கையில் இலக்கியத்திற்கான இத்தகைய முயற்சியை ‘நூலகம்’ என்ற வலைதளம் வழியாகச் செய்துள்ளனர். இதில் எல்லா வகைமையிலான எழுத்தாளர்கள், அவர்களில் பெரும்பான்மையானோரின் நூல்கள், கலை ஆளுமைகள், கலை இலக்கிய இதழ்கள், கல்வியாளர்கள், களப்பணியாளர்கள் என விரிவாக தொகுக்கப்பட்டுள்ளது. நம் தமிழ்நாட்டில் அப்படியான ஒரு மையமான தொகுத்தல் பணி இணையத்தில் நடைபெறவில்லை. ‘யாழ்ப்பாண நூலகம்’ போன்ற பெரும் நூலகத்தைப் போரில் காவு கொடுத்தவர்களுக்குத் தான் இந்த மாதியான இணைய ஆவணப்படுத்தலின் முக்கியத்துவம் அதிகமும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன்.

தேவநேயப் பாவாணர்

2022-இல் எழுத்தாளர் ஜெயமோகன் முன்னெடுத்த ‘தமிழ்விக்கி’ கலைக்களஞ்சியப்பணி ஒரு முக்கியமான இணைய ஆவணப்படுத்தல் முயற்சி. இதில் விரிவான மதிப்பீட்டுடன் கூடிய எழுத்தாளர்கள், கலைஞர்கள், செயல்பாட்டாளர்களின் பதிவுகளைத் தவிரவும், தத்துவம், கலை சார்ந்த கலைச்சொற்களின் விரிந்த பொருளிலான விளக்கங்கள், கலை பண்பாட்டு இடங்கள் பற்றிய விரிவான பதிவுகளும் அதற்கான தொடுப்புகளும் சேர்ந்து மிக முக்கியமான அறிவுச்சேகரமாக உருவாகி வருகிறது. அறிஞர்களும் ஆய்வாளர்களும் இதில் பங்களிப்பது முக்கியமானதாக உள்ளது. வல்லினம் அமைப்பு தொகுத்துக்கொண்டிக்கும் எழுத்தாளர்களின் புகைப்படங்களை ஒட்டிய ஆவணகாப்பகம் (https://vallinamgallery.com/) மற்றும் சிங்கப்பூரில் அருண் மகிழ்நன் தொடங்கிய சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் (https://www.nlb.gov.sg/main/site/est-tam) ஆகிய முயற்சிகளையும் இதையொட்டி குறிப்பிடலாம்.

தவிரவும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், கணியம் அறக்கட்டளை (freetamilbooks.com), project madurai, இண்டர்னட் ஆர்கைவ் தளம் ஆகியவை புத்தக சேகரிப்பிற்கான தனியார் முன்னெடுப்பில் செயல்படும் ஆவணத்தளமாக உள்ளது. ராணி திலக் என்ற கவிஞர் சிவகுருநாதன் செந்தமிழ் நூல்பதிப்புக் கழகம் வாயிலாக பல அறிய நூல்களை ஒளிவருடல் செய்து பதிவேற்றி வருகிறார். கோவிலூர் ஆண்டவர் நூல் நிலையத்தையும் அதே போன்ற செயல்பாட்டிற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

அரசின் முன்னெடுப்பான தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் முன்னெடுப்பான தமிழ் இணையக் கல்விக்கழக மின்நூலகமும் (tamildigitallibrary) புத்தகத் தொகுத்தல் பணிகளைச் செய்து வருகிறது.

ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னரே நமக்கு ஆவணப்படுத்தல் பற்றிய போதம் வந்தது என்று சொல்வது போன்ற அபத்தம் வேறில்லை. ஏனெனில் இரண்டாயிரம் வருடம் பாரம்பரியமான நம் இலக்கிய, இலக்கண நூல்கள் ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னரும் கூட சேகரிக்கப்பட்டிருந்ததால் தான் நம்மால் அவற்றை அந்தக் காலகட்டத்திற்கான ஆவணப்படுத்தலைச் செய்ய முடிந்தது. அந்த வகையில் பெரியசாமித்தூரனை ஆசிரியராகக் கொண்டு 1948-இல் தொடங்கி 1968-இல் நிறைவுற்ற ‘கலைக்களஞ்சியம்’ தமிழில் வெளியான முதல் நவீனக் கலைக்களஞ்சியம் எனலாம்.

எஸ். வையாபுரிப்பிள்ளை

எஸ். வையாபுரிப்பிள்ளை தமிழின் முதல் பேரகராதியை உருவாக்கினார். சி.வை. தாமோதரம் பிள்ளை பழந்தமிழ் நூல்களைச் சுவடிகளில் இருந்து பிழைநோக்கி அச்சில் பதிப்பித்தார். புலவர் கா. கோவிந்தன் சங்கப்புலவர்களையெல்லாம் தொகுத்தார். மா. அருணாச்சலம், சு.ஆ. ராமசாமிப்புலவர் ஆகியோர் தமிழறிஞர்கள் வரிசையைத் தொகுத்தளித்தனர். தமிழை மையமாக்கி இந்திய மொழியியல் ஆய்வை நிகழ்த்தும் அணுகுமுறையை உருவாக்கிய தேவநேயப் பாவணர் உள்ளிட்ட பல ஆய்வறிஞர்கள் இருந்தனர். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் போன்ற பதிப்பகங்கள் தமிழாய்வுகள், புனைவுகள், மொழியாக்கங்கள், அகராதிகளை வெளியிட்டது. இதன் ஒரு பகுதியாக வ.சுப்பையா பிள்ளை 1923-இல் சைவசித்தாந்த பதிப்பகத்திற்கென்றே ‘செந்தமிழ்ச் செல்வி’ இலக்கிய இதழைத் தொடங்கினார். நா. வானமாமலை தொடங்கி ஆ. சிவசுப்ரமணியன், அ.கா.பெருமாள், சேவியர் கல்லூரியின் லூர்து, வே. மாணிக்கம், ச.பாலுச்சாமி என ஒரு வரிசை நாட்டார் ஆய்வறிஞர்கள் பட்டியலில் உள்ளது.

‘அயோத்திதாசர் சிந்தனைகள்’ உருவாக அடிப்படையாக அமைந்தவர்களாக ஞான அலோய்ஸியஸ், டி. தருமராஜ் ஆகியோரைக் குறிப்பிடலாம். கிறிஸ்தவ இலக்கிய ஆய்வுக்குப் பங்களிப்பாற்றியவர் என ஞான சந்திர ஜாண்சனைச் சொல்லலாம். இன்று மு. இளங்கோவன் ஆய்வாளர்களைச் சந்தித்து தன் வலைதளத்தில் ஆவணப்படுத்தியும், அதை நூல்களாக வெளியிட்டும் வருகிறார். வெ.வேதாசலம் ‘பாண்டிய நாட்டு வரலாற்றுமுறை சமூக நிலவியல்’, ‘கழுகுமலை சமணப்பள்ளி’ ஆகிய நூல்களின் வழியாக இந்த மண்ணின் ஆய்வு சார்ந்த ஒரு களத்திற்கு அடித்தளம் அமைத்துள்ளார். வேறு பலவும் அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

பண்பாட்டுச் செயல்பாடுகளைப் பொறுத்து திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் ’குருவனம்’ என்ற திறந்தவெளி அருங்காட்சியகத்தை ஓவியர் சந்ரு ஏற்படுத்தியுள்ளார். புருஷோத்தமன், நடராஜ், சரண்ராஜ் என அவர்களின் மாணவர் வரிசை ஒன்று உள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் ‘முழுமையறிவு’ என்ற கல்வியமைப்பை ஈரோடு வெள்ளிமலையில் நித்யவனத்தில் நடத்தி வருகிறார். அது தமிழகத்தின் சாந்தி நிகேதன் என்று சொல்லச் சாத்தியமானதாக இன்று பல்வேறு கலை, இலக்கிய, பண்பாடு சார்ந்த வகுப்புகளை நடத்தி வருகிறது. வெளி ரங்கராஜன், மணல்மகுடி முருக பூபதி ஆகியோர் நவீன நாடகக் கலை சார்ந்த முக்கியமான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார். இதன் ஆதியை நாம் ஆண்டி சுப்ரமணியம், டி.கே.எஸ் சகோதரர்கள், என்.எஸ்.கே, பாலாமணி ஆகியோரிடமிருந்து பார்க்கலாம்.

ஓவியர் கதிரவவேல் சித்திரமும் கைப்பழக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். கீழநத்தத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாசகோபாலன் அழிசி பதிப்பகத்தை நடத்தி வருகிறார். அவர் பதிப்பிக்கும் பழம் நூல்கள் ஒவ்வொரு நூலகத்திலும் இருக்க வேண்டியவை. இவற்றையெல்லாம் சில உதாரணங்களாகச் சொல்லலாம்.

2

வரலாற்று ஆய்வில் நீலகண்ட சாஸ்திரி சோழர்களின் வரலாற்றாய்வுக்கான ஓர் ஆழமான அடித்தளத்தை அமைத்தார். அவருக்குப் பின் வந்த மாணவர்களான பர்டன் ஸ்டெயின், நொபுரு கரஷிமா, எ.சுப்பராயலு ஆகிய மாணவர்கள் அதில் நுட்பமான ஆய்வுகள் செய்து, ஆய்வு முடிவுகளை விரிவுபடுத்தினர். உதாரணமாக சோழர் ஆட்சிகால ராணுவ பிரிவான வலங்கை – இடங்கை பிரிவு, விவசாய நிலமுடையவர்களும் – வணிகர்களும் என தொண்ணூறுகள் வரை நம்பப்பட்டு வந்த பார்வையைக் கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் மறுத்து இரு பிரிவுகளும் குறிப்பிட்ட சாதிப்பிரிவுகளில்லை அவை தொகுக்க சாத்தியமான பல சாதி குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பதை முன்வைத்தார். ஆரம்பத்தில் ராணுவ பிரிவுக்காக உருவாக்கப்பட்ட இவர்கள், பின்னாளில் நிலவுடைமையாளர்களாக மாறி பழைய வேளாண், பிராமண நிலவுடைமையாளர்களுக்கு எதிராக கலகம் செய்தது வரை கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் முன்வைத்தார். 2025 தமிழ்விக்கி தூரன் விருதுவிழாவின் போது ஓர் அமர்வில் அவர் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பின்னரே நமக்குச் சாதியக் கட்டமைப்பில் இறுக்கம் வந்ததாகக் குறிப்பிட்டது ஒரு முக்கியமான ஆய்வுப்பார்வையாகத் தோன்றியது. அதன் உண்மைத்தன்மைக்கான சான்றுகளை நாம் கோர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தேவை இருந்தாலும் இந்த மாதிரியான நுணுக்கமான சிறு ஆய்வு முடிவுகள் நாம் ஏற்கனவே சமூக, அரசியல் ரீதியாக வைத்திருந்த நம்பிக்கையை மறுபரிசீலனைக்கு உள்ளாக்குகின்றன. தேங்கிக் கிடப்பதல்ல அறிவு. இந்த மாதிரியான புதிய ஆய்வுகள் புதிய சிந்தனை முறைகளுக்கு இட்டுச் செல்கின்றன. இதன் வழியாக ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த முழுமையான பார்வை நமக்குக் கிடைக்கிறது.

எ. சுப்பராயலு

வரலாற்று ஆய்வுகள் புனைவுகளிலும் தாக்கத்தைச் செலுத்துகின்றன. அரை நூற்றாண்டாக பொதுவாசிப்புக்குறிய நூலில் மிகுந்த தாக்கத்தைச் செலுத்திய பொன்னியின் செல்வன் நாவல் வரலாற்றுப் புனைவு நாவலுக்கான வணிகப்பாதையைக் கட்டியெழுப்பியது. அதனால் உந்தப்பட்டு நந்திபுரத்து நாயகி, ராஜராஜ சோழன், உடையார், மன்னன் மகள், காவிரி மைந்தன் ஆகிய பொதுவாசிப்புக்குரிய பல நாவல்கள் வந்து நிறைத்தன. அ. வெண்ணிலாவின் ‘கங்காபுரம்’ நாவல் சோழ வரலாற்றை ஒட்டியது. ஆய்வுகள் நிரப்பாத வெளியை இட்டு நிரப்ப ஆய்வுப்புனைவுகள் பயன்படுகின்றன. சிந்தனைப் போக்கு இவ்விரண்டின் வழியாகவும் நிகழச் சாத்தியமானது.

இத்தகைய ஆழமான முயற்சிகள் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு, ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு அதிகமாகவும் பிற பகுதிகளுக்கு இல்லாமல் இருப்பதும் நம் தமிழ்ச்சமூகத்தில் மிகப்பெரிய குறையாகவே இன்றளவில் இருந்து வந்துள்ளது. உதாரணமாக கலைபண்பாட்டு நோக்கில் நம் தமிழ் நாட்டை 9 மண்டலங்களாகப் பிரிக்கும் நோக்கு ஒன்று ஆய்வாளர்கள் மத்தியில் உள்ளது. இந்த ஒன்பது மண்டலங்களிலும் ஆய்வு, தொகுத்தல் பணிகளைப் பிரித்துப் பார்த்தால் அல்லது ஆய்வாளர்கள் எங்கிருந்து அதிகமும் உருவாகி வந்திருக்கிறார்கள், அதற்கான காரணம் ஆகியவற்றை தொகுத்துப் பார்க்கும் பார்வை அமைந்தால் இன்னும் ஆழமாக இது சார்ந்த கேள்விகளை எழுப்பிக் கொள்ளலாம்.

தமிழ் இலக்கியம், தமிழ் கலைக்களஞ்சியம், தமிழக வரலாறு என பரந்துபட்ட வரலாறு இருப்பது போலவே பிராந்திய வரலாறுகள், ஜமீன் வரலாறுகள், புலம்பெயர்ந்த குடிகளின் வரலாறுகள், பிராந்திய உணவு முறைகள் என வட்டார நுண்வரலாறுகள் சார்ந்த ஆவணப்படுத்தல் அவசியமாக உள்ளது. இதுவே இன்றைய புதிய உலகமயமாதல் காலகட்டத்தில் பிரதானமாக தேவையானது. இதன் வழியாக நம் கலை மேலும் நுணுக்கமாகும் வாய்ப்பு உள்ளது. சில தசாப்தங்களாகவே தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பொருளாதரத்தில் முதல் மூன்று இடத்தில் உள்ளது. பெரும் பஞ்சங்களைப் பார்த்த நாம் இன்று உணவிலும் பொருளாதாரத்திலும் தன்னிறைவில் இருக்கிறோம். அந்தத் தன்னிறைவு கடந்த இரு தலைமுறை இளைஞர்களுக்குப் பெரும் நேரத்தையும் வசதி வாய்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த மனித ஆற்றலை நாம் சரியான திசையில் செலுத்துவதற்குக் கலை பண்பாடு ஆவணமாக்கல் பற்றிய போதத்தை அவர்களுக்கு அளித்திட வேண்டும்.

சந்ரு

மேலும் கலை பண்பாட்டுச் செயல்பாடுகள் பலவும் சிதறலான முயற்சியாக உள்ளன. அவை பெரும்பாலும் தனி மனிதர்களால், தனியார் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளதையும் கவனிக்கலாம். அது நல்லதும் கூட. ஆனால் அரசு பொருளாதார ரீதியாக அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதும் முக்கிய்மானது. ஒரு துறையில் அல்லது ஒரு பொருளில் ஒருவர் ஆவணப்படுத்தல் செய்யும் போது அது சார்ந்த விழிப்புணர்வு பிறருக்கு இருத்தல் வேண்டும். அதை முடிந்தவரையில் பிறர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று இணையம் அதற்கான பெரிய வாயிலாக உள்ளது. ஆய்வாளர்கள், கல்விப்புலத்தைச் சேர்ந்தவர்கள், இலக்கியவாதிகள், களப்பணியாளர்கள் என அனைவரும் ஒருவரை ஒருவர் கண்டு கொண்டு தொடர்பு கொள்வதன் வழியாக சிந்தனைக்கான பெரும் களம் உருவாகி வரும்.

3

அறிஞர்கள், வாசகர்கள், புரவலர்கள், அரசு என மூன்று தரப்பினருமே இந்த ஆவணப்படுத்தலின் மேல் கவனத்தைச் செலுத்த வேண்டும். எந்தத் துறைசார்ந்த அறிஞர்களாக இருந்தாலும் ஆய்வுகளுக்கு நிகராக சமகாலத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் ஆவணப்படுத்தலையும் முக்கியமானதாகக் கருத வேண்டும். ஒரு துறை சார்ந்தவர் மற்றொரு துறை சார்ந்த கண்டறிதல்களிலிருந்து கற்றுக் கொள்ள இவை பயனுள்ளதாக இருக்கும். வாசகர்கள் கலை ரசனையாளர்கள் தான் இதன் சத்தான பகுதியை அடுத்த காலகட்டத்திற்குக் கடத்திச் செல்பவர்கள். அவர்கள் சரியான கலைப் பண்பாட்டு செயல்பாடுகளை அடையாளம் கண்டுகொண்டு ஆதரவு அளிக்க வேண்டும். இயன்ற அளவில் அவற்றிற்குப் பங்களிப்பு செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் ஊரிலுள்ள கலைப்பண்பாட்டு இடங்களை ஆவணமாக்குவதன் முக்கியத்துவத்தை ஆய்வாளர் அ.கா. பெருமாள் தொடர்ச்சியாக எடுத்துரைத்துக் கொண்டே உள்ளார். அந்த வகையிலும் தனி நபர்களின் பங்களிப்பு முக்கியமானது.

இங்கு இந்தக்காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பிரபலமான இரு வார்த்தைகள் ‘Personal Branding’, செல்வாக்குநர்கள் (Influencer). இவர்கள் நம்மிடம் இன்று பேசிக் கொண்டே இருக்கிறார்கள். முப்பது நொடிகளில், ஐந்து நிமிடங்களில் என அவர்கள் ஒன்றைப் பற்றி சொல்லி நம்மை அதன் நுகர்வர்களாக மாற்ற முயல்கின்றனர். அல்லது தங்களுக்கான ஏதோ போலி அடையாளத்தைத் தரித்துக் கொள்ள முயல்கின்றனர். ஆனால் எந்தத் துறை சார்ந்த வல்லுனர்களாகவும் இவர்கள் இல்லை. ஒரு குறிப்பிட்ட துறையில் சாதிப்பதை விட எளிமையானது எப்படி அதில் வெற்றி பெற வேண்டும் என அறிவுரை சொல்வது. இதை விடக் கொடுமையானது தொடர்ந்து காணொளிகள் போட்டு ‘வைரல்’ ஆன பிறகு அந்த நபர் சமூகத்தில் விற்பனை முகமாக ஆவது. இன்றைய ஊடகங்களும் அவர்களை வெற்றியாளர்களாக முன்வைப்பது ஊடக அறத்தை அதை ஆதரிக்கும் சமூக அறத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. இந்த மனநிலை ஒட்டுமொத்தமாகவே இந்தச் சமூகக் கட்டமைப்பின் நோய்க்கூறு என்றே சொல்ல முடிகிறது.

ஜெயமோகன்

ஆனால் முன்பு இப்படி இல்லை. நாம் அறிஞர் எனவும் சான்றோர் எனவும் வல்லுநர் எனவும் செயல்பாட்டாளர்கள் எனவும் நினைத்தவர்களையுமே அழைத்து அவர்களின் உரைகளையும் அறிவுரைகளையும் கேட்டுக் கொண்டிருந்தோம். அவ்வாறான நுண்மான் நுழைபுலம் கொண்ட அறிஞர்களை நாம் அடையாளம் கண்டு கொள்ளவும் மண்மான் புனைப்பாவைகளைக் கண்டறிந்து விலக்கவுமான அறிவைக் கை கொள்ள வேண்டியது இன்று அவசியமாக உள்ளது.

நெல்லைச் சீமையில் ஊத்துமலை ஜமீன், சிவகிரி ஜமீன், எட்டையபுரம் ஜமீன், சுரண்டை ஜமீன், சேத்தூர் ஜமீன் என பெரிய ஜமீன்களின் வரிசை உள்ளது. ஒவ்வொரு ஜமீனிலும் எத்தனையோ ஜமீன்தார்கள் ஆட்சி செய்து மறைந்திருக்கிறார்கள். ஆனால் நாம் இன்றும் நினைவுகூர்வது ஊத்துமலை இருதாலய மருதப்ப தேவரைத்தான். ஏனெனில் அவருடைய ஆட்சியில் தான் அண்ணாமலை ரெட்டியார், உ.வே.சா, தண்டபானி சுவாமிகள், செவற்குளம் கந்தசாமிப்புலவர், புளியங்குடி முத்துவீரப்ப கவிராயர், முகவூர் கந்தசாமிப்புலவர் என ஒரு புலவர் வரிசை அவரின் ஆதரவின் கீழ் செயல்பட்டது. எட்டையபுரம் மன்னரை நாம் பாரதியின் பொருட்டு தான் நினைவில் வைத்துக் கொள்கிறோம். சீதக்காதியை உமறுப்புலவரின் பொருட்டு தான் நினைவில் வைத்திருக்கிறோம். புரவலர்கள் சரியான ஆளுமைகளையும், அறிஞர்களையும் கண்டுகொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகளைப் பொறுத்து நாம் நீண்ட காலமாக ‘அறிஞர்’ எனவும் ‘கலைஞர்’ எனவும் முன்னொட்டு கொண்ட ஆளுமைகளை அரசாட்சியில் வைத்திருந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். முன்னொட்டுக்களை வைத்துக் கொண்டதோடு அல்லாமல் அவர்களைச் சுற்றி பெரிய அறிஞர்கள், கலைஞர்கள் கொண்ட படையை அவர்கள் வைத்திருந்தார்கள். “பாரதி மகாகவியா?” என்ற விவாதம் 1940கள் தொடங்கி நிகழ்ந்த முக்கியமான ஒரு விவாதம். அண்ணாத்துரை பாரதிதாசனின் உதவியுடன் பாரதி மகாகவி என்பதற்கான சான்றுகளுடன் உரையாடியபடி ஒரு ஆளுமையாக வெளிப்பட்டார். ராஜாஜி சுதந்திரா கட்சி தனியாகத் தொடங்கி மீண்டும் காங்கிரஸுடன் இணைய முற்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவரும் கல்கியும் சேர்ந்து பாரதி மணிமண்டபத்தைக் கட்டும் பணியை முன்னெடுத்து தங்களை ஆளுமைகளாக நிறுவிக் கொள்கிறார்கள். மக்கள் எதை உள்ளார்ந்து மதிக்கிறார்கள் என்பது நம் கடந்த காலத்தைச் சற்று மீள நோக்கினாலே புரியவரும். எனவே அரசியல்வாதிகள், ஆட்சியில் இருப்பவர்கள், அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் சரியான அறிஞர்களை ஆவணப்படுத்தல் முயற்சிகளைக் கண்டுகொள்வது அவசியமாகிறது.

***

எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் கதேயின் நாவல் ஒன்றை ‘காதலின் துயரம்’ என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். அதை வாசித்த போது இந்த ஆன்மாவை ஏற்கனவே கண்டுகொண்டிருக்கிறோமே என்ற பரவசம் வந்தது. ஒரு படைப்பு வழியாக அந்தப் படைப்பு மனத்தை ஆழமாகக் கண்டு கொள்கிறோம். கதே ஒரு ஆளுமையாகவும் ஈர்க்கக்கூடியவர். ஐரோப்பாவின் ஒரு நூற்றாண்டின் அனைத்து அறிவுத்துறைகளின் போக்கையும் தீர்மானித்த மேதை கதே. 1775-ல் வீமரின்(Weimer) ஆட்சியாளரான அகஸ்டஸின்(Karl August) அழைப்பின் பேரில் ஜெர்மனியின் வீமருக்கு இடம்பெயர்ந்தார். தன்னளவில் சிறந்த கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், சிந்தனையாளரான கதே வீமரில் கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த அமைப்புகளைத் தோற்றுவித்தார். வீமரின் கலை இலக்கிய உலகில் முக்கியமான ஆளுமையாக மாறினார். கலைஞர்களின் புகலிடமாக வீமரை மாற்றிய பெருமை கதேவுடையது.

இன்றைய ஜனநாயக காலகட்டத்தில் அரசர்களை விடவும் மக்களே ’கதே’க்களை கண்டுகொள்ள வேண்டிய இடத்தில் இருக்கின்றனர். அவர்களே அதன் முதல் தரப் பயனாளிகளும் கூட. பொருளாதாரத் தன்னிறைவின் அடுத்த கட்டமாக கலை பண்பாட்டுத் தளத்தில் முக்கிய மையமாக தமிழகம் ஆகும் வாய்ப்பு கனிந்திருக்கும் காலகட்டம் இது.

(பொருநை புத்தகத் திருவிழாவில் பேசிய உரையின் கட்டுரை வடிவம்: பிப்ரவரி 14, 2026)

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...