பெருமுலை

இரவு விமானத்தில் அமர்ந்தவாறு உறங்க முயன்றதனால் இடையும், தோள்களும் இறுகி வலியெடுத்தன. குதிகால்களில் நின்றவாறு இடது காலை மடித்து வலது காலையும், கைகளையும் நீட்டி சோம்பல் முறித்து கொட்டாவி விடுகையில் அவள் பெயர் ஒலிக்கக் கேட்டு திரும்பி அலாஸ்கா விமானத்தின் அலுவலகத்தை நோக்கிச் சென்றாள்.

“பை வந்துவிட்டதா?” என்றபடி அருகே சென்று நின்றாள். மங்கலான விளக்கு கொண்ட சிறிய அறையின் முன்புறம் காகிதங்கள் பரவிக் கிடந்த மேசையில் ஒரே ஒரு கணினி மட்டும் இருந்தது. அதன் பின்னாலிருந்த இருக்கையின் அருகே மேலிடை வரை உயர்ந்த டெனிம் அணிந்து நின்றிருந்த இளம்பெண் முன்தோளில் விரிந்து கிடந்த தனது செங்கூந்தலைக் காது மடல்களுக்குப் பின் தள்ளியவாறு வெண்ணிறக் காகிதக் கோப்பையை அவளிடம் நீட்டினாள். மேசையின் பக்கவாட்டுச் சுவரில் ஏதோ விலங்குத் தோலால் செய்த கவ் பாய் தொப்பி தொங்கியது.

“உங்களது காப்பி மேம், கிரீம் வேண்டுமானால் அந்த வெந்நீர் இயந்திரத்தின் அருகே உள்ளது,”

“என் பை எங்கு உள்ளது என கண்டு பிடிக்க முடிந்ததா?”

அந்த இளம்பெண் கணினியில் மூழ்கிய நேரத்தில் சுற்றுலா வருபவர்களுக்கான பிரசுரங்களைப் புரட்டினாள். டீட்டான் என்ற பெயர் வினோதமானது, இக்காடுகளில் விலங்கின் மென்மயிர் வேட்டைக்கு வந்த பிரஞ்சுக்காரன் எவனோ சிகரங்களைப் பெருமுலையாகக் கண்டுள்ளான்.

“இந்த விமானத்தில் வரவில்லை. மன்னிக்கவும், எங்கள் செயலியில் சிறிய கோளாறு, அடுத்த விமானத்தில் வந்துவிடும்.” என்றாள்.

“அடுத்த விமானம் எப்போது வந்தடையும்?”

“நாளை இதே நேரத்திற்கு,”

“நாளையா?”

“ஆமாம், இங்கு தினசரி இரண்டு விமானங்கள் தான். சியாட்டலில் இருந்து ஒன்று, சால்ட் லேக்கில் இருந்து மற்றொன்று,”

“டெண்டிலிருந்து கேம்பிங் கியர்ஸ் எல்லாம் அதில் உள்ளன… குளிருக்கு ஜாக்கெட் கூட கிடையாது,”

“இன்று மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள்… நாளை பையை உங்க விலாசத்திற்கு நாங்களே கொண்டு வந்து தருகிறோம்,”

“வெளியூரிலிருந்து வருகிறேன். இங்கு எனக்கு யாரையும் தெரியாது,”

“எங்குத் தங்கவிருக்கிறீர்கள்?”

“மேமுத் ஊற்றின் அருகே… கேம்பிங்…”

“அது வடக்கு எல்லோ ஸ்டோனில் உள்ளது. இங்கிருந்து முன்னூறு மைல்கள், இரு பெரும் மலைக்காடுகள் கடந்து செல்ல வேண்டும். அவ்வளவு தூரம் எங்களால் வர இயலாது,”

“அருகில் ஏதும் தங்கும் இடம் உள்ளதா?”

“இதற்கு முன் கிராண்ட் டீடான்ஸ் வந்துள்ளீர்களா?”

“இல்லை, இதுதான் முதல்முறை”

“இது பனிச்சறுக்கு சுற்றலா முடியவிருக்கும் காலம். அருகில் உள்ள விடுதியில் காலி இடம் இருக்க வாய்ப்பில்லை, இருப்பினும் விசாரித்துப் பாருங்கள்,” என்றவாரு அவர்களது விசிட்டிங் கார்டை எடுக்க அறையின் பின்புறம் சென்றாள்.

ஆள் நடமாற்றம் அன்றி விமான நிலையமே அமைதியாக கிடந்தது. ஒரு மடக்கு காப்பியை அருந்தினாள். வெந்நீரில் தூளிட்டு போட்ட காப்பி. பால் அதில் ஒட்டாமல் திரண்டு நிற்க வயிற்றைப் புரட்டியது.

“இது எந்த இடமுனு சொன்னீங்க?”

“கிராண்ட் டீடான்ஸ்.”

“இல்லை விடுதியின் பெயரைக் கேட்டேன்…”

“டீட்டான்ஸ் பனிச்சறுக்கு விடுதி,”

வெளியே சென்றதும் மலைக்காற்றின் ஆசுவாசம். பார்க்கிங்கில் நான்கைந்து கார்கள் ஆங்காங்கே நின்றன. அவள் பதிவு செய்திருந்த கார் தூரத்தில் தனித்து நின்றது. அதன் அடர்சிவப்பு நிறத்தில் வெயிலின் பளபளப்பு.

சாலையின் இடப்பக்கம் திரும்பியதும் மெல்லிய சாம்பல் நிற மேகத்திரைகளுக்குள் அல்லி மொட்டுகள் குவிந்தார் போல் ஏரியின் நீர்பரப்பிலிருந்து அடுக்கடுக்காக முளைத்து மேல்வானைத் தீண்ட நின்ற மலைகளின் முகடுகளைக் கண்டு கொண்டாள். இரு முகடுகளுக்கிடையில் பிறை நிலவு ஒளியின்றித் தெரிந்தது. இவற்றில் எது டீட்டான்? அனைத்து முகடுகளும் முலைகள்தான். வான் நோக்கி எழும் பூமியின் முலைகள். ஏதோவொரு விலங்கொன்றின் முலை அடுக்குகள். அவள் பதின்மத்தில் வளர்த்த ஜெர்மன் செப்பர்டின் முலைகளை நினைவில் கொண்டாள். இல்லை, ஆதி விலங்கொன்றாகத்தான் இருக்க வேண்டும். எந்த விலங்காக இருக்கும்? மனம் சட்டென்று ரோம் அருங்காட்சியத்தில் கண்ட முலையூட்டும் ஓநாயை வந்தடைய உடல் பதற்றமுற்றது.

மேலாடைகளுக்குள் சற்று புழுக்கம் அதிகரித்ததும் காரின் மடக்குக்கூரையைப் பின் இறக்கினாள். குளிர் காற்று முலைக் காம்புகளைச் சிலிர்க்க வைக்க வலக்கையை ஸ்டியரிங்கில் இருந்து எடுத்து மார்புடன் சேர்த்து குறுக்கிக் கொண்டு சாய்ந்து அமர்ந்தாள். கட்டவிழ்ந்த கூந்தல் சிதறிப்பறந்து முகத்தை மறைக்க, காற்றில் கண்கள் கலங்கி வழியத் தொடங்கின. உறைபனி உருகி முளைவிட்டிருந்த பசுமையின் மேல் பரப்பில் நூற்றுக்கணக்கான ஸ்டார்லிங்குகள் அதன் சிற்றிறகுகளை ஒற்றைத் தூரிகையாக விரித்து பறந்து காற்றில் தீண்டிய சித்திரங்கள் ஒவ்வொரு கணமும் எழுந்து மறைந்தன. இந்தச் சிற்றிறகுகளைப் பற்றிக் கொண்டால் போதும் அடிவானில் கலந்து மறைந்துவிடலாம் என நினைத்துக்கொண்டாள்.

அரவு போல் மலைத் தொடரைச் சுற்றிய நதியை ஒட்டி சாலை வளைந்து வளைந்து செல்ல இருபக்கங்களிலும் புதர்கள் செறியத் தொடங்கின. நீண்ட கூம்பிய முகம் கொண்ட கயோட்டி ஒன்று புதரில் இருந்து எழுந்து அதன் பூ வாலைக் கால் இடுக்கில் குறுக்கிக் கொண்டு சாலையின் குறுக்கே ஓடியது. நரியை விட சற்றே பெரிய நாய்.

இருபக்கமும் திறந்த புல்வெளிகள் வந்ததும் காரின் வேகத்தைக் குறைத்தாள். வெண்தலைக் கழுகொன்று வானில் வட்டமிட்டு கொண்டிருந்தது. புல்வெளியில் பைசன்கள் மேயக் கூடும். இந்த மலை பள்ளத்தாக்குகளின் மந்தைகள் மட்டும் தான் பழங்காலத்துடன் அறுபடாத கொடியுடையவை என யாரோ சொல்லிக் கேட்டது நினைவில் எழுகையில் கூர்ந்த அவளது கண்கள் தொலைவில் தெரிந்த கருஞ்சிவப்பு புள்ளிகளைச் சென்று தொட்டுவிட்டன. சில நூறு காட்டெருமைகளைக் கொண்ட மந்தை.

சுருள் மயிர் அடர்ந்து பருத்த முகங்களில் பிறை நிலவென முளைத்த கொம்புகள். குனிந்து அசைவற்று நின்ற புழுதிப் பேருடல்களின் பின்னிருந்து சிறு வால் மட்டும் அவ்வபோது எழுந்து மறைந்தது. மந்தையின் மத்தியில் நின்றவொரு எருமையின் முதுகில் காகங்கள் அமர்ந்து அலகு உரசிக்கொண்டிருந்தன. அதற்கு அப்பால் நின்ற பசுவின் மறைவில் இளஞ்செவலைக் கன்று மேய்வதைப் பார்த்தவாறு சாலையின் பக்கவாட்டில் காரை நிறுத்தியதும் கண் அயர்ந்தாள்.  

வட்டமிட்டுக் கொண்டிருந்த வெண்தலைக் கழுகு சட்டென்று அக்காகங்களுக்கு நேராக கீழ் இறங்கியதும் எருமைக் கன்று மிரண்டு சாலையை நோக்கி வந்தது. கன்றைத் தொடர்ந்து வந்த பசுவின் செம்மயிர்பரப்பு நைந்த கம்பளியென முதுகிலிருந்து உரிந்து தொங்க அதன் கரிய பெருவயிரெங்கும் வரி ஓடிக்கிடந்தது. பின்னாலிருந்து வந்த ரேஞ்சர் அவளது கார் கதவைத் தட்டியதும் விழித்துப் பார்த்தாள்.

“எங்கிருந்து வரீங்க?”

“கலிபோர்னியா… லாஸ் ஏன்ஜலஸ்,”

“இதற்கு முன் பைசன்களை பார்த்ததுண்டா?”

“ஆம், ஒருமுறை ஒக்லஹோமா ராஞ்சில்…”

“இங்க எங்க போறீங்க?”

“பனிச்சறுக்கு விடுதிக்கு,”

“இவைக் காட்டு மந்தை. எப்போது தாக்கும் எனத் தெரியாது. கூரையை மூடி, ஜன்னலை ஏற்றிக் கொள்ளுங்கள்… நிறுத்த வேண்டாம்,” என்றவாறு இடையிலிருந்த துப்பாக்கி உறையின் மீதிருந்த பிடியைத் தளர்த்தித் திரும்பி நடந்தான்.

காட்டெருமைகளின் சாரை மறுபுறம் இருந்த ஆற்றை அடைவதற்காகச் சாலையைக் கடக்கத் தொடங்கியிருந்தது. அவற்றின் இடைவெளியில் மெல்ல காரை செலுத்தினாள்.

பனிச்சறுக்கு மையத்தைச் சுற்றி வெண்கம்பளம் விரித்தார் போல் பரவிக்கிடந்த உறைபனி கண்களைக் கூசியது. மரக்கூரை வேய்ந்த அந்தப் பெரிய கற்சுவர் கட்டடம்தான் விடுதியாக இருக்க வேண்டும். அதன் முன்னிருந்த மலைச்சரிவின் மத்தியில் கறைபடிந்து அகன்றேரியது உறை பனிச்சாலை. அதன் இருபுறங்களிலும் ஊசியிலை மரங்கள் உயர்ந்த காடுகள். பனிச்சாலையில் நடப்பட்டிருந்த கான்கிரீட் கம்பங்களின் வழியாக உடை உப்பியவர்களை ஏற்றிச் சென்ற தானியங்கி இயந்திரங்கள் மரங்களின் ஊடே சென்று மறைந்துகொண்டிருந்தன. அதன் அடியில் அந்த மனிதச் சாரை சறுக்கி இறங்கிக் கொண்டிருந்தது.

கனத்த சப்பாத்துகளை அணிந்த சிலர் நீண்ட பனிச்சறுக்குப் பலகைகளைக் கையில் பிடித்தவாறு விடுதியின் முற்றத்திலிருந்து வெளிவந்தார்கள். விண்வெளிக்குச் செல்வது போன்ற விசித்திரமான உடை. வேற்று கிரகத்தவர்கள் போன்று பச்சை, ஊதா, மஞ்சள் என பல் வண்ணக்கண்கள். அவற்றில் மின்னும் பனிப்பரப்பின் வண்ணப் பிரதிபலிப்பில் தன் பிம்பத்தைக் கண்டதும் உடல் குறுக்கி நடந்தாள்.

வரவேற்பறையின் மாடத்தில் இளங்காட்டெருமையின் தலையொன்று அலங்காரத்திற்காக மாட்டப்பட்டிருந்தது. ஐயுற்று மின்னிய அதன் விழிகள் உயிர்ப்புடன் இருந்தன. இந்தச் சுவர்களுக்கு அப்பால் உடலை மறைத்துக் கொண்டு அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறதா என்ன? அக்கணம் அந்த விழிகள் அவளிடம் ஏதோ சொல்ல விழைவதாக உணர்ந்தாள். ஆம், அது அவளைத் தான் பார்த்தபடி நிற்கின்றது. புல்வெளியில் இருந்து தன்னைப் பின் தொடர்ந்து இங்கு வந்துள்ளது. இதோ இந்த மரச்சுவர்களுக்கு அப்பால் வாலை மெல்லத் தூக்கி முதுகில் வீசியவாறே அவளை நோக்கி நிற்கிறது. இது என்ன பிரமை என்ற எண்ணத்தை அடைந்து வரவேற்பாளரிடம் “இன்று இரவு தங்க அறை…” என்றாள்.

“ரிசர்வேசன் நம்பர்?” என்றவாறு வரவேற்பாளர் கணிணியை இயக்கினார்.

“ரிசர்வ் செய்யவில்லை. மேமுத் ஊற்றுக்கு செல்லவிருந்தேன். விமானத்தில் பை வரல…”

“கேபின்கள் கூட பதிவாகிவிட்டன. காலி இடங்கள் ஏதும் இல்லை” என்றபடி தலையசைத்தார்.

“கொஞ்சம் பாருங்க…”

“பொறுங்க… யாராவது ரத்து செய்துள்ளார்களா என பார்க்கிறேன்” என்று கணிணியை மீண்டும் பார்த்துவிட்டு “சாரி, இல்ல…” என்றார்.

 “வேறெங்க போறதுன தெரியல…”

“அதுக்கு நான் என்ன செய்வது?”

“கூட்டு அறை இருந்தா ஒரு மெத்தை போட முடியுமானு பாருங்க… பிளீஸ்”

“இல்ல, எங்க கஷ்டமர்களுக்கு அது அசவுகிரியத்தை தரும்…”

அவள் மெளனமாக நின்றாள்.

விடுதிக்காரர் சற்று நேரம் நெற்றியைத் தடவியவாறு யோசித்தார். பிறகு அவளைப் பார்த்து “சரி, இவ்வளவு தூரம் வந்துட்டீங்க. இனி எல்லோ ஸ்டோன்வரை போவதும் சிரமம்… நீங்க மட்டும் தானே?” என்றார்.

“நான் மட்டும்தான்”

“பழங்குடிகளின் ரிசர்வேஷனில் தங்குவீர்களா?”

அவள் தயங்குவதை ஊகித்து, “முதியவள் ஒருத்தியின் இடம். இங்கு அறைகள் சுத்தம் செய்பவள் தான். பயப்பட வேண்டாம்.”

“சரி…”

“ஏரியின் மறுகரை செல்ல வேண்டும். படகுக்கு ஏற்பாடு செய்கிறேன்… ஆனால் அவள் நிலத்தில் டீப்பி மட்டும் தான். அதாவது அவங்களோட குடிசை. உள்ளே படுக்கை உண்டு. சுவையாக சமைப்பாள்,”

“பரவாயில்ல,”

“காரை எதிரில் பார்க்கிங்கிள் விட்டுவிடுங்கள்… காலை உணவுக்கு இங்கு திரும்பிவிடலாம்… குடிக்க தண்ணிமட்டும் எடுத்துக்குங்க,” அவளை மீண்டும் உற்றுநோக்கி “உங்களுக்கு உடலுக்கு ஒண்ணும் இல்லையே?” என்றார்.

“இல்லை… ஏன்?”

“முகமெல்லாம் சிவந்திருப்பதை போல்…”

“சரியான தூக்கமில்லாததன் களைப்பு… வேறேதும் கிடையாது,” என்றாள்.

“அப்ப சரி. அங்க நல்லா தூக்கம் வரும்…” ரெஸ்டாரண்டில் நின்ற இளைஞனை அழைத்து “ஆர்தர், இவங்க ரிஷர்வேசன்ல தங்குறாங்க. கொண்டுபோய் விட்டுட்டு வந்திரு,” என்றார்.

படகுக்குப் பணம்கட்டி ரசீது பெற்றுக் கொண்டாள். அடர் நிறத்தில் சுருள் முடியும், சிவந்த குவி இதழ்களும் கொண்ட இளைஞன். நல்ல உயரம்.

ஆர்தர் “திடீர் பயணமா?” என்றான்.

“ஆமா… சொந்தப் படகா?”

“இல்ல… எனக்கு இந்தக் காட்டுக்கு வெளிய கார்டினர் தான் ஊர். குளிர்க்காலத்தில விடுதியில் பனிச்சறுக்கு பயிற்சியாளராக பணி. விடுமுறை நாட்களில் கைச்செலவுக்காக பிற வேலைகளை செய்வேன்,” என்றவாறு இன்ஜினை முடுக்கினான்.

கைப் பையுடன் படகில் ஏறி அமர்ந்து கொண்டாள். இடக்கையில் தண்ணி பாட்டில், “எவ்வளவு தூரம்?”

“அதோ! அந்த மலைக்கணவாயின் கரைக்கு” இன்ஜினின் இரைச்சலில் கலந்து ஒலித்தது அவனது அழுத்தமான உச்சரிப்பு.

இரு மலைகளுக்கிடையில் முலை இடுக்குகளாயிருந்த கணவாயின் வழியே எழுந்த காற்றைப் பிளந்து சென்றது படகு. காற்றில் சிதறிய கூந்தலைச் சேர்த்து முடிந்தவாறு “அங்க பைசன்கள் உண்டா?” என்றாள்.

“இப்பதான் பனி உருகத்தொடங்குது… கணவாய்குள்ள புல்வெளி முளைவிடத் தொடங்கியதும் வரும்,”

 “ரிஷர்வேசனுக்குள்ள வருமா?”

“அதுவா வராது… வேற விலங்குகள் ஏதும் தொடர்ந்து வேட்டையாடினா கன்றுகள கூட்டிக்கிட்டு வரும் ”

“கிரிசிலிக் கரடிகளா?”

“கிரிசிலிகள் பெரும்பாலும் பைசன்களை கொல்றதில்லை. அதன் கொம்புகளில் சிக்கி கரடிகள் காயத்துடன் திரும்பும். ஓநாய் கூட்டங்கள் தான் பைசன்களை வேட்டையாடும்.”

“ஓநாய்கள் உள்ளனவா?” அவள் கண்கள் கூர்ந்தன.

“ஆம், மீளுருவாக்கத்திற்கென கெனடியன் ராக்கீஸில் இருந்து சில ஓநாய்களை கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள். இப்ப கிரிசிலிகள் அந்த ஓநாய்கள் கொன்ற சடலங்களைத்தான் உண்கின்றன…”

“அபகரித்து உண்கின்றனவா?”

“காட்டில் ஏது அபகரிப்பு, திருட்டெல்லாம்… இங்கு அனைத்தும் இரைதான். வலிமை உள்ளவரை வாழலாம்… காட்டைக் கண்டதில்லையா நீங்க?”

அவள் ஏதும் சொல்லவில்லை.

“மரணம் மட்டும்தான் இக்காட்டின் ஒத்திசைவு” என்றான்.

ஏரியின் தெளிந்த நீலப்பரப்பு மலைகளின் பிரதிபலிப்பை ஏந்தி நின்றது. அதன் ஆழத்துள் கிடந்த மலை விளிம்புகளைக் குனிந்து நோக்கினாள். சலனமற்று கிடந்தது ஆழம். அதற்கும் அடியில் உள்ளவற்றை அறிய துழாவிய அவள் விழிகள் ஒளி தொடாத ஒற்றை இருள் பரப்பைக் கண்டு ஒரு கணம் அசையாமல் நின்றன.

கரையை ஒட்டியவாறு நெருங்கி உயர்ந்த பைன் மரங்களின் ஊடே செங்குத்தாக மேலேறிய ஒற்றையடிப் பாதை வெயிலன்றி கிடந்தது. அதன் மென்குளிர் மேனியைத் தீண்ட கைப்பையை மார்பில் இறுக்கியவாறு நடந்தாள். பைன் மரங்களின் உச்சிக் கிளைகளின் மேல் காற்று சிற்றலையென நடனமிட்டுக் கொண்டிருந்தது. மேல் மலைச் சரிவுகளில் குட்டை ஆல்பைன் மரங்களின் புதர் பரப்பு.

வளைவுகளில் சரிந்து கிடந்த கற்பாறைகளைக் கடக்கையில் முலைமடிப்புகளில் வியர்வையின் ஈரத்தை உணர்ந்தாள். மூச்சிறைக்கத் தொடங்கியது. “கொஞ்ச தூரம் தான்… வேணும்னா ஒக்காந்துட்டு போலாம்,” என்றான் ஆர்தர். கற்பாறை ஒன்றின்மீது அமர்ந்து ஒரு மிடறு நீர் அருந்தினாள். கால்களுக்கு அடியில் விரிந்து கிடந்தது ஏரி. அதற்கும் அப்பால் அவள் கடந்து வந்த புல்வெளிப் பரப்பு. அந்த மந்தை இப்போது ஏரியை வந்தடைந்திருக்கக் கூடும்.

டீப்பி அவள் நினைத்ததைவிட பெரியது. மலை முகடுகள் போன்று குவிந்துயர்ந்த கம்புகளைச் சுற்றி வெளிறிய எருமைத் தோள்களை விரித்துத் தைத்த சுவர். அதன் அகன்ற அடிப்பகுதியில் வரையப்பட்டிருந்த கரிய சிகர வரிசைகள் நிறமுதிர்ந்து போயிருந்தன. மையப்பகுதியில் எருமைச் சித்திரங்களின் ஒற்றை வரிசை. அச்சில் செய்தார் போன்ற சீரான வெண்வட்டங்கள் பதித்த கரிய உச்சியை ஒட்டி எருமைத் தோள் துவாரமாக சற்று திறந்திருந்தது.

டீப்பியை சுற்றியும் மரங்களன்றி புல்வெளி திறந்து கிடந்தது. மீண்டும் அந்தப் பார்வையை உணர்ந்தாள். மலைகளுக்கு அப்பால் நின்று யாரோ அவளைப் பார்த்துக் கொண்டிருப்பது போல.

கிழக்கை நோக்கி திறந்திருந்த நீள்வட்ட வாயிலை விளக்கியவாரு முதியவள் டீப்பியிலிருந்து வெளிவந்தாள். சில நரைமுடிகள் ஓடிய கரிய கூந்தல் நடுவகுட்டில் தொடங்கி அடர்ந்து விரிந்தது. காது மடல்களில் இரு வளையங்களை அணிந்திருந்தாள். கந்தலான உடையின் மேல் மணிகளைக் கோர்த்து செய்த சங்கிலிகள்.

“இவங்க தங்கணும்… இன்னைக்கு மட்டும் தான்,” என்றான் ஆர்தர்.

“இந்த டீப்பிக்குள்ள தான் படுக்கை…” என விளக்கத் தொடங்கினாள் முதியவள்.

“எல்லாம் அவங்களுக்குச் சொல்லியாச்சு… சாப்பாடு மட்டும் செஞ்சு குடுத்துடு,”

“தங்கும் இடத்துக்கு ரொம்ப நன்றி… உங்க பேரு?”

“அவங்க மக்கள தவிர பிறர் பெயர்சொல்லி அழைக்கிறத இவங்க விரும்புறதில்லை. நீங்க காலையில படகுத்துறைக்கு வந்துடுங்க,” என்று கூறியதும் ஆர்தர் மலைச் சரிவில் இறங்கிச் சென்றான்.

முதியவளைத் தொடர்ந்து டீப்பியின் உள்ளே நுழைந்தாள். உலர்ந்த தோலின் வாசனை. கறைகள் படிந்த தோல் சுவர் கூடத்தின் மத்தியிலிருந்த விறகடுப்பில் தீ மூட்டியிருந்தாள். புகை எழுந்து உச்சி துவாரத்தின் வாயிலாக வான் நோக்கி சென்று கொண்டிருந்தது. அடுப்பிற்குப் பின்னால் முதியவளின் படுக்கை. இடப்புறம் இருந்த படுக்கையை அவளுக்கு அளித்தால். தலையனையும், கம்பளியும் படுக்கை மீது வைக்கப்பட்டிருந்தது.

அவள் கைப்பையை மெத்தையில் வைத்துவிட்டு அதனருகில் நிற்கவைக்கப்பட்டிருந்த புல் தட்டியில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள். ஏரியிலிருந்து சீராக எழுந்த அலைகளின் தாளத்துள் முதியவளின் நகர்வுகள் மட்டும் எதிரொலித்தன. அவள் அடுப்பில் மண் பாத்திரத்தை வைத்து தண்ணீர் சுடவைக்கும் ஒலி கேட்டது.

சற்று நேரத்தில் அவள் அருகில் வந்து, “டீ குடிக்கிறியா” என்றாள். “மூலிகை டீ. பால் கிடையாது”

“சரி…” என்றாள்.

மலைகளில் கிடைக்கும் இலைகளைக் காயவைத்து போட்ட டீ. ஒரு மிடறு அருந்தியதுமே அதிலிருந்த மிண்டின் மணம் நாசியைப் புத்துணரச் செய்தது. மனதில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த எண்ணவோட்டம் அமைதியடைந்தது. “இங்க நீங்க மட்டும் தனியா இருக்கீங்களா?”

“வேட்டைக்கு அனுமதி இருந்தப்ப சிலர் அப்பப்ப இங்க வருவாங்க… இப்பல்லாம் யாரும் வாறதில்ல. கிரிசிலிகளை நெனச்சு பயப்படுறாங்க. நம்ம சீண்டலன்னா கரடிங்க அதுபாட்டுக்க இருக்கு… இல்ல?” பேசிக் கொண்டே டீப்பியிலிருந்து வெளியே சென்று விட்டாள். “நெருப்பு அனையப்போகுது. கொஞ்ச நேரத்துல குளிர் ஏறிடும்… வெறகு பொறுக்கிட்டு வந்துடுறேன்,”

முதியவள் போனதும் அவள் எழுந்து வெளியே சென்று மலைச்சரிவில் நின்று பைன் மரங்களுக்கு அப்பால் விரிந்து கிடந்த ஏரியை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள். மனதில் சோர்வு எழுந்து அவளைச் சூழ்ந்தது. ஏரிக்கரையில் படகு நிற்கிறதா என விழிகள் தேடின. அப்போதே விமான நிலையம் சென்று ஊர் திரும்பி விடலாம் எனத் தோன்றியது. ஆனால் கரையில் படகைக் காணவில்லை.

பெருமூச்சுடன் நகர்ந்து சென்று முன்னால் கிடந்த கற்பாறையில் கால்களை மடித்து அமர்ந்து மலையுச்சிகளின் விளிம்புகளையே பார்த்தாள். நீல வானம் ஒளிர் விட்டது. வெண்பஞ்சு மேகச்சுருள் வரிசை மலை முகடுகளின் கழுத்தில் மலர் மாலை சூடியது போல் சூழ்ந்திருந்தன.

மலையாட்டுக் குடும்பம் ஒன்று உச்சிப் பாறைகளின் விளிம்பில் அமர்ந்து அசைபோட்டவாறே பள்ளத்தாக்கின் அமைதியைப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த முகடுகளுக்குப் பின்னாலிருந்து ஓநாய் கூட்டம் தன் கூரிய நாசிகளுடனும், மேல் எழுந்த காதுகளுடனும் மறைந்து வந்தால் இவ்வாடுகளால் என்ன செய்ய இயலும்? அந்தக் குட்டிகள்?

முதியவள் காய்ந்த விறகுகளைச் சுமந்து கொண்டு வந்தாள், “நல்ல அமைதி இல்லையா… இந்த மலைக்காட்டின் ஆன்மா இதுதான்,” என்றாள்.

அவள் தலையை மட்டும் அசைத்தாள்.

விறகுகளை இறக்கி வைத்துவிட்டு முதியவள் அவள் அருகே வந்து நின்று, “என்ன சமைக்க?” என்றாள்.

அந்தச் சொற்களை உள்வாங்காமல் முதியவளின் உதடசைவுகளை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தன அவள் கண்கள். சற்று நேரத்தில் திடுக்கிட்டு, “என்ன சொன்னீங்க?” என்றாள்.

“சாப்பாட்டுக்கு என்ன செய்ய?”

“எதுனாலும் போதும்”

“காட்டரிசி இருக்கு. கிழங்கு கொஞ்சம் சேத்து சூப்பு வச்சுடுறேன்,”

“ம்.” என்றாள்.

“மாட்டிறைச்சி சேக்கட்டா?”

“இல்ல… வேண்டாம்” என தலையை அசைத்தவாறு பெருமூச்சு விட்டாள்.

“இங்க எங்களுக்கு மாட்டிறைச்சிதான் பிரதானம். எங்க அப்பா காலத்துல இந்த மலைகள்ள இருந்து வெளியேற்றப்பட்டோம். அதுக்கு முன்ன இந்தக் காட்டுப் புல்வெளிகள்ள ஆயிரம் மந்தையாவது மேயுமாம். மந்த ஒவ்வொன்னுலயும் பல்லாயிர எருமைங்க. கண்தொடும் எடமெல்லாம் கருமை கொட்டிக் கெடுக்குறத சின்ன வயசுல வேட்டைக்கு வரும் போது அப்பா பாத்ததா சொல்லுவாறு,”

“எப்படி வெளியேத்தப்பட்டீங்க?”

“அரசதிகாரிங்க மிரட்டிப் பார்த்தாங்க யாரையும் வெளியேத்த முடியல. எதுத்தவங்கள செறயில அடைச்சாங்க. அப்பவும் யாரும் இங்கிருந்து போகல. கடைசியா இராணுவத்த அனுப்பி மந்தைகள கொல்லத் தொடங்கிட்டாங்க. உணவுக்குன்னு இல்ல… செனமாடு கன்னுனு கணக்கில்லாம சுட்டு எலும்புகள் வெண்மலையாக குவியத் தொடங்குறத தடுக்க இயலாமதான் இங்கிருந்து கிளம்ப முடிவெடுத்தனர்” என்றாள் முதியவள். “மலையரசி பேரன்னையில அவமடியுண்ட ஜீவன்கள அழிக்கிறத பாத்துக்கிட்டு பொறுத்திருப்பாளா?”

அவள் முதியவளின் குடும்பத்திற்கு என்ன நடந்தது எனக் கேட்க நினைத்தாள். ஆனால் முதியவள் சமைப்பதற்காக டீப்பிக்குள் சென்றுவிட்டாள்.

சூரியன் மலை முகடுகளுக்குப் பின் மறையும் வரை ஏரிக்கரை நிழல்களின் அலைகளில் நட்சத்திர மின்மினிகளாக மிளிர்ந்து மறைந்து ஒளிரும் வெயிலின் விளையாட்டைப் பொருளில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

முதியவள் செய்த சூப்பு முழுதும் அரிசிப்பாலில் கொதித்தது போல கெட்டியாக இருந்தது. மண் மணத்துடன் கூடிய சுவை. ஊரில் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும் காய்கறிகளில் அந்தச் சுவையே இருந்ததில்லை.

“இவை என்ன கிழங்குகள்… எங்க வாங்கினது?”

“மலை கிழங்குகள்… வாங்கினது இல்ல. இங்க கீழே ஏரிக்கரையில் தோண்டியவை. தண்டு மாதிரி கொஞ்சம் நீண்டிருப்பது பனி அல்லிக் கிழங்கு. இன்னொன்னு மலை உருளை. டவுனுல கிடைக்கிற மாதிரி இந்த உருளைக் கிழங்குகள் பெருசா வராது.”

உணவுக்குப்பின் அவள் சற்று கண் உறங்கினாள். வெண்ணிற மயிர் அடர்ந்த பஞ்சுத் தலையணை ஹஸ்கியின் உடல் போல வெது வெதுப்பாக இருந்தது. அதில் முகம் புதைத்து படுத்ததும் குருதியின் வாசனை எழுந்தது. இம்மலையில் வளரும் ஏதேனும் விலங்கின் தோலில் செய்ததாக இருக்கக்கூடும். வீட்டிலும் அதே போன்ற பஞ்சுத் தலையணை அவளிடம் இருந்தது. சிந்தடிக் முடியில் செய்தது. அவனை அழைத்துக் கொண்டு பொம்மைக்கடைக்குச் செல்கையில் கண்ணில் பட்டதும் வாங்கிய தலையணை.

அவள் கண்களை மூடிக்கொண்டு தன் மகளுடன் விளையாடுவதாக கற்பனை செய்து கொண்டாள். தவழ்ந்து வந்த மென்பிஞ்சு விரல்கள் அவள் மடியிலேறி கண்ணங்களைத் தடவுகின்றன. இள நகங்களின் வருடல்.மகளுக்கு இன்னும் பேச்சு வரவில்லை. மழலையின் சிணுங்கள் மட்டும் தான்.அவள் அன்னை என அழைக்கும் கணங்களுக்காக ஏங்கினாள்.

ஹேக் ஈராக்கில் இருந்து ஊர் திரும்பிய நாட்கள் தொடங்கி எரின் எச்சரித்துக் கொண்டே இருந்தாள், அவன் அவளுக்குப் பொருத்தமானவன் இல்லை என்று. “அவன் குணமே மாறிவிட்டது.அவனைத் திருமணம் செய்து கொள்ளாதே. பிறகு சிரமப்படுவாய். முதன் முதலில் கை நீண்ட போதே நீ விட்டுச் சென்றிருக்க வேண்டும். இன்னமும் ஏன் சகித்துக் கொள்கிறாய்? குழந்தை பெற்றுக் கொண்டாள் மேலும் கஷ்டப்படுவாய்.” என்றாள் எரின். இன்று மாறி விடுவான், நாளை மாறி விடுவான் என காலங்கள் கழிய நம்பிக்கை இழந்து இருந்தவளுக்குத் தான் கருவுற்றிருந்த செய்தியைக் கேட்டதும் அவனுள் தோன்றிய மென்மை ஆறுதலாக அமைந்தது.

எரின் அவளை வந்து பார்த்தபோது கன்னங்கள் சிவந்து, கால்கள் சிராய்த்து குருதி கசிய அரை மயக்கத்தில் பாத்ரூமில் கிடந்தாள். ஆம்புலான்ஸில் செல்கையில் அந்த மென்மயிர் தலையணையை இறுக பற்றிக் கொண்டதன் நினைவு மட்டும் தான்.

விழித்துக் கொண்டதும் முதியவள், “டீ வைக்கட்டா?” எனக் கேட்டாள்.

“சரி.” என்று தலையசைத்தாள்.

முதியவள் டீ வைக்க திரும்பியதும், படுக்கையில் இருந்து எழுந்து டீப்பியின் வாயிலை விளக்கிக் கொண்டு வெளியே சென்றாள். ஏரியிலிருந்து அலையோசைகள் எழுந்து வர இருட்டத் தொடங்கியிருந்தது. விரிந்த கொம்புகளை உடைய இரண்டு எல்குகள் டீப்பியின் அருகே மேய்ந்து கொண்டிருந்தன. அப்பால் கொம்புகளற்ற பெண் எல்குகள் கூட்டமாக நின்றன. அதன் உடல்களில் வெளிப்பட்ட சோம்பல் அவளையும் தொற்றிக் கொண்டதைப் போல் அவற்றை நோக்கி நடந்தாள்.

“காலையில்தானே கன்றைப் பார்த்தேன். இப்ப காணவில்லையே…” என்றவாறு முதியவள் பின்னால் வந்து அவளை நிறுத்தினாள்.

அப்போதுதான் கணவாய்குள் கடுங்குளிர் இறங்கியிருப்பதை உணர்ந்தாள். முகம் வறண்டு கண்களிலும், நாசியிலும் நீர் வழிந்தது. தலை பாரமாக கனத்தது. சற்று நின்றாலும் கால்கள் நடுக்கத்தில் குழைந்து விடும் போலிருந்தது.

“இப்படியே எங்க கிளம்பிட்ட? மலைக்காற்று அடிக்கத் தொடங்கி விட்டது. இப்ப ஏரிக் கரைக்குச் சென்றாள் ஈரக் காத்து மார்புல இருக்க வெம்மயை சுத்தமா உரிஞ்சிடும்… உள்ள போகலாம் வா” என முதியவள் டீப்பிக்குள் அழைத்துச் சென்றாள்.

தட்டியில் அமர்ந்ததும் “குளிர் ஜாக்கெட் எங்க? அந்தப் பையில் இருக்கா?” எனக் கேட்டாள் முதியவள்.

“இல்ல… தொலைந்து விட்டது”

“அது சரி… முன்னவே சொல்றதில்லயா” என்றவாறு படுக்கையிலிருந்த கனத்த கம்பளியை எடுத்து நடுங்கிக் கொண்டிருக்கும் அவள் உடலில் போர்த்தினாள் முதியவள். “எருமைத் தோள் கம்பளி. நல்லா குளிர் தாங்கும்” என்றாள்.

டீயுடன் நெருப்பில் சுட்டக் கிழங்குகளையும் தட்டில் வைத்துக் கொடுத்தாள்.

டீ கோப்பையின் வெம்மை மறத்து விட்டிருந்த அவளது கைகளில் மெதுவாக உணர்வை மீட்டது. கிழங்கில் புகை நெடி. முதியவள் சென்று அடுப்பைக் கிளறி விட்டதும் குளிர் சட்டென்று குறைந்து கம்பளிக்குள் இதமான வெப்பம் பரவியது.

தயக்கத்துடன் “இந்தக் கம்பளி வித்தியாசமாக இருக்கு…” என விரித்துப் பார்த்தவாறு கேட்டாள்.

“இங்க இரவான கொடுங்காத்து இறங்கிடும். வேட்டைக்கு வருவதற்காக என் மூதன்னை செய்தது”

“உங்க குடும்பத்துக்கு என்ன ஆச்சு? இப்ப யாரும் இங்க இல்லையா?”

“இராணுவத்திடம் தப்பும் போது கடைசியா இந்த ஏரிக்கரைக்குத் தான் வந்தாங்க…அதுக்குப்பின் என்ன ஆனதுன தெரியல”

“சாரி, ஏரிக்குள்ள…”

“ஆழத்தில் எரிந்து கொண்டிருக்கும் நீர் பரப்பிது… இங்கு மறைந்தவர்களை என்றோவொரு இரவு வானில் சுடராக அவர்கள் தோன்றையில் தான் பார்க்க முடியும்” என்றாள் முதியவள்.

போர்வையை மடித்து கீழே வைத்துவிட்டு ஏதும் சொல்லாமல் மெளனமாக அமர்ந்திருந்தாள்… அடுப்புக்கனலில் இருந்து எழுந்த புகையில் கண்கள் கலங்கி நின்றன.

சற்று நேரத்தில் முதியவள் எழுந்து விறகுக் கட்டைகளை அடுப்பில் அடுக்கி தீயை மூட்டிவிட்டு வந்து தரையிலிருந்த கம்பளியை எடுத்து அவளிடம் அளித்தாள்.

“இல்ல இருக்கட்டும்… இப்ப குளிரல”

“பொழுது எறங்க எறங்க குளிர் அதிகரிக்கும்” என கம்பளியை விரித்து மீண்டும் அவள் உடலில் போர்த்தினாள் முதியவள்.

“சரி…” என தயக்கத்துடன் கம்பளியை இறுக சுற்றிக் கொண்டாள்.

“எனக்கு கண்ண அசத்த தொடங்கிவிட்டது,” என முதியவள் படுக்கைக்குச் சென்றாள். கொஞ்ச நேரத்திலேயே மூச்சொலி சீராக கேட்கத் தொடங்கியது.

அவள் நடனமிட்டுக் கொண்டிருக்கும் தீயின் செந்நாக்குகளைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள். அவ்வப்போது தீயின் சிறு துமிகள் இருளில் சிதறி மறைந்தன. எரி கொண்டெழும் நீர் துளிகள். டீப்பியின் தோற் சுவர் காற்றில் படபடத்தது. வெளியே அலைகள் எழுந்து ஏரிக்கரையை உரக்க அரைந்து கொண்டிருந்தது. அவளது எண்ணங்கள் சுழலத் தொடங்கின. ஒருவேளை களைக்காமல் இருந்திருக்கலாமோ? அவனும் மகளைப் பார்த்திருந்தாள் மாறியிருப்பானோ? அவளுக்கு எதுவுமே விளங்கவில்லை. கண்கள் கனத்தன.தலையணையில் சாய்ந்து கொள்ளலாம் எனத் தோன்றியது.

இயல்புக்கு மாறாக படுத்ததுமே தூக்கம் வந்துவிட்டது. கிழங்குகள் சரியாக ஜீரணமாகாமல் வயிறு மட்டும் சற்று வலியெடுக்க புரண்டு படுத்தவள் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள். எப்போதும் போல் அச்சுறுத்தும் உதிரிக் கனவுகள் அவளைக் கணவாய்குள் எங்கெங்கோ இட்டுச் சென்றன. ஒரு கட்டத்தில் நடக்க முடியாமல் மூச்சிரைக்கத் தொடங்கியது. வயிறு ஏன் இப்படி கனக்கிறது? எதிரிலிருந்த பாறையின் மீது மெல்ல உடலைக் குறுக்கி படுத்துக் கொண்டாள். மந்தையின் நூற்றுக் கணக்கான எருமைகள் வந்து அந்தப் பாறையைச் சூழ்ந்து கொண்டன. பல முறை எழ முயன்றாள். இயலவில்லை. இத்தனை கூர்மையான விழிகளா? மந்தைக்குப் பின்னாலிருந்து மெல்ல அசைந்து வந்த பசு அவள் அருகில் நின்று உடலை முகர்ந்தது. மயிர்கள் கூச விழித்துக் கொண்டாள்.

அடிவயிற்றில் மட்டும் வலி இருந்தது. கன்னங்களில் வழிந்த உமிழ்நீரைத் துடைத்துவிட்டு கூந்தலை முடிந்தவாறு எழுந்து அமர்ந்தாள். கம்பளிக்குள் உடல் நனைந்து கதகதவென்றிருந்தது. பிரசவத்தின் வியர்வைப் போல.

அப்போது தான் கவனித்தாள். உச்சிதுவாரம் வழியாக வானின் ஒளி உள்ளே வந்து முதியவள் மீது விழுந்து கிடந்தது. டீப்பியின் தோற்சுவர்கள் பளிங்குபோல் ஒளிவிட்டன. நிலவொளியா?

அவள் குனிந்து வாயிலின் வழியே வெளியே வந்தாள். விண்மீன்களின் பரப்பாக மிளிர்ந்து கொண்டிருந்தது வானம். மலைமுகடுகளின் பனிப்பரப்பு வெண்பளிங்கு போல் ஒளியைப் பிரதிபலித்தது. ஏரியை நோக்கி நடந்தாள்.

நட்சத்திரங்களை ஏந்தி அசைவற்றுக் கிடந்தது நீர்பரப்பு. சுடரும் பிம்பங்களின் பெருவெளி. அதில் கலந்து மறைந்தது அவளது நிழல். மெல்லிய காற்று நட்சத்திரங்களின் அலையென படர்ந்து சென்று பைன் மரக் கிளைகளில் ஏரி வானில் மறைந்தது. மீண்டும் சலனமற்று ஒளிர்ந்தது நட்சத்திர நீர் பரல். அவள் பார்த்துக்கொண்டே நின்றாள்.

வெண்பளிங்கு முகடுகள் சென்றுதொடும் இருளொளிர் பரப்பில் சிறு அசைவு. மலையடுக்களுக்குள் இருந்து எழுந்தன கூறிய வெண் பற்கள். ஒளிரும் பளிங்காளானவை. வான் நோக்கி எழும் காதுகள். வெண்ணொளிர் ரோமங்கள் மின்னும் உடல். பொன் பளிங்குக் கண்களின் கூர்மை. முகடுச்சியில் சென்றமர்ந்தது வெண்பஞ்சு சுருள்வாலின் மென்மை. வான் நோக்கி எழுந்த ஓலம் கணவாயை நிறைத்தடங்க வெளியெங்கும் மலைமுகடுகளின் அமைதி. முகடுச்சியில் மெல்ல எழுந்து மென்முலைக் காம்புகளைத் தீண்டின சிறு நாவுகள். கால்களுக்கு அடியில் இருளாழங்களைப் பிளந்து அவளை நோக்கி விரைந்து எழுந்தது வெந்நீர் ஊற்றுப் பெருக்கு.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...