
விழித்ததிலிருந்து வரிசைக் கிரமம் குலையாமல் அனைத்தும் நடந்திருந்தபோதிலும் அவற்றின் கூட்டுத்தொகையென எஞ்சிய உணர்வில் புதுமை சாயம் அப்பிக்கிடப்பதை உணர்ந்தான் முருகேசன். எதிர்புறம் இருந்த கண்ணாடியில் முகம் பார்த்துவிட்டு மீண்டும் சாலையைப் பார்த்தபோது என்றைக்கும் இல்லாத அளவிற்கு எழில் நாடி மேய்ந்தன விழிகள். கதகதப்பூட்டும் வண்ணங்களையும், பரபரத்தோடும் மக்களிடம் வெளிப்பட்ட உயிர்ப்பையும் கவனித்தபோது புறங்கழுத்தில் துவங்கி அடிமுதுகுவரை மெல்லியதோர் சிலிர்ப்பு பரவியது. ஆனால் உலர்ந்து, கறுத்திருந்த இதழ்கள் முறுவலென மலர்ந்தபோது பட்டென முகத்தின் தசைகள் இறுக்கம் பெற்றன.
ஒருகணம் குனிந்து வலக்கையால் தனது மார்பைத் தட்டி வருடிக்கொடுத்தான். அணிந்திருந்த புதுசட்டையின் மிருதுத்தன்மை சொற்களுக்குள் அடங்காத ஆழமான வெறுமையையும், அதற்கு முற்றிலும் முரணான இதத்தையும் வழங்கியது. ஒருவேளை இச்சட்டையை அணிந்துகொண்டதே அனைத்திற்கும் காரணமோ?
பச்சை நிறத்தில், கருப்புநிறக் கட்டங்கள்கொண்ட அச்சட்டையை மீண்டும் தீண்டியபோது விலாக்கூட்டில் குளிரை உணர்ந்தான் முருகேசன்.
ஊர் பேருந்து நிலையத்தை ஒட்டியிருக்கும் பிரசித்திபெற்ற அசைவ உணவகத்தின் மொட்டைமாடியில் வைத்து அதனைத் தனக்கு வழங்கியிருந்தாள் செல்லம்மா. அதற்கு ஒருவாரம் கழித்து அதே உணவகத்தின் மூன்றாம் தளத்திலிருந்த அழுக்கடைந்த அறை ஒன்றில் கழுத்தில் வெட்டுப்பட்டு அவள் பிணமாகக் கிடந்தாள். குற்றாலத் துண்டைக்கொண்டு முகத்தை மூடியிருந்த ஒருவன் வீச்சரிவாளால் ஒரு பெண்ணைச் சரமாரியாக வெட்டுவதும், அலறிப் புரளும் அப்பெண் உடலின் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் தணிந்து, இறுதியாக கருவறையில் உறங்கும் சிசுவைப்போல் குருதிவெள்ளத்தில் உடல் ஒடுங்கி, சுருண்டு அடங்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் சரளமாக பரவியது. முருகேசனின் அலைபேசிக்கு அதன் சுட்டி வந்தடைந்தபோது அவன் தனது பூனைக்குட்டிக்கு வைத்தியம் பார்க்கும் பொருட்டு மருத்துவமனை சென்றிருந்தான். அக்காணொளியில் இருப்பது செல்லம்மாதான் என்பதை அவன் கண்டுகொண்ட கணம் மடியில் கிடந்த பூனைக்குட்டியும் பெருங்கூச்சல் எழுப்பிவிட்டு உயிரை விட்டது. அப்போது இருளடைந்த அந்த இடைநாழியில் காத்திருந்த விலங்குகளும், அவற்றின் உரிமையாளர்களும் ஏக பொழுதில் அவன் பக்கம் திரும்பினார்கள். அந்த விழிகளில் இழையோடிய ஏதோ ஒன்று அவனை மிகுந்த அச்சத்திற்கு உள்ளாக்க, வெடுக்கென எழுந்துகொண்டு, எதனாலோ விரட்டப்படுவதைப்போல் ஓட்டம்பிடித்திருந்தான்.
வானில் கருமேகங்கள் அவசரகதியில் திரண்டு, சுற்றம் இருள்வதை வண்டியினுள் அமர்ந்தபடி கண்ணுற்ற முருகேசன் அதன் பிரதிபலிப்பை ஒத்த ஒன்றை தனது அகத்திலும் நிகழ்வதை உணர்ந்தான். பிறகு அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முனைபவனாய் வானொலியை ஒலிக்கச் செய்தான். சற்றுமுன் கண்டு, இன்புற்ற வண்ணமையான காட்சி துணுக்குகள் தற்போது சற்று பொலிவிழந்து போயிருந்தாலும், வண்டியின் ஒலிபெருக்கிகள் சிந்திய மெல்லிய இசை போதுமான ஆறுதலை ஈட்டித்தந்தது. கொஞ்சம் முன்னோக்கிச் சரிந்து தனது நடுமுதுகை வருடியும், அழுத்தியும் பார்த்தான். செல்லம்மா துடிதுடித்துச் சாவதைக் கண்டு குதித்தோடிய கணம், அப்பகுதியில் வேர்விட்டு, நிலைபெற்றிருந்த வலி, தற்போது மாயமாய் மறைந்திருந்தது. அனைத்து புதுமைக்கும் காரணம், இவ்வலி ஓய்ந்ததால் தன்னுள் துளிர்விட்டிருக்கும் இந்த உயிர்விசையே என்று அப்போது புலப்பட்டது அவனுக்கு. பல வாரங்களாக அலமாரியின் ஒரு மூலையில் அனாமத்தாய் சுருண்டுக் கிடந்த இச்சட்டை இன்று அவன் உடல் சேர்ந்திருப்பது அவனது அனுமானத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தது. ராசி கணபதி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் அந்த மர அலமாரியைத் திறக்கும்போதெல்லாம் அவன் கருவிழிகள் ஒருகணம் அத்துணிச் சுருளைத் தொட்டு அகலும். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு வடிவத்தில் சுருண்டுகிடக்கும் அச்சட்டை ஏதோ கோணத்தில் செல்லம்மாவின் வெட்டுண்ட உடம்பை நினைவூட்டும் நெளிவொன்றைப் பெற்றிருக்கும். அதனைத் தீண்டவோ, ஒழுங்குபடுத்தவோ, கிழித்து வீசவோ அல்லது எரித்துப் பொசுக்கவோ அவன் துணிந்ததேயில்லை. பற்கள் கிட்டித்துக்கொள்ள, தாடை இறுக, முகத்தில் நிழல்சூடி நகர்ந்துவிடுவான். ஆனால் இன்று காலையில் எவ்விதச் சலனமும் இன்றி அதனைத் தொட்டெடுத்து உதறி உடுத்திக்கொண்டிருந்தான் அவன்.
வானொலியில் கேட்ட திரையிசைப் பாடலின் தாளத்தைத் தனது சுட்டுவிரல் முணுமுணுப்பதை ஒருநொடி வியப்புடன் நோக்கிவிட்டு, குறுஞ்சிரிப்புடன் பார்வையை நிமிர்த்தினான் முருகேசன். வெண்பஞ்சுத் துகள்கள் என சிந்தைவெளியில் வருங்காலம் குறித்த சின்னச் சின்னத் திட்டங்களும், கனாக்களும் மிதந்தெழத் துவங்கின. இனியும் துடிப்பற்றவனாய் வாழ்வதில் பொருளேதுமில்லை என பட்டது. பல நாட்களாக இறங்குமுகமாய் சென்றுகொண்டிருக்கும் தொழிலில் கூடியவிரைவில் கவனம் செலுத்தாவிட்டால் அது அதலம் நோக்கிப் பாய்வதை இறைவனாலும் தடுக்க முடியாது என்கிற அச்சம் மூண்டது. பதிவு வாடிக்கையாளர்களை இழப்பென்பது எத்தொழிலுக்கும் கேடு என்பதைத் தனக்குத்தானே நினைவூட்டிக்கொண்டான்.
பாளையம்கோட்டை மார்க்கெட் பகுதியில் சிறிய மெக்கானிக் கடை ஒன்றைத் துவங்கி சில வருடங்களே ஆகியிருந்தது. தொழில் கொஞ்சம் நிலைபெற்றபின் அதனைக் கவனித்துக்கொள்ள ஆள் ஒன்றை நியமித்துவிட்டு, தக்க சமயத்தில் தூத்துக்குடியில் விலைக்கு வந்த பழைய மாடல் டவேரா ஒன்றை வாங்கி, டிரைவிங் ஸ்கூல் ஆரம்பித்தான். இரண்டாம் ஆண்டு வரை கலைக் கல்லூரியில் காலம் தள்ளியிருந்ததால் உருவாகியிருந்த வாத்தியார்களுடனான பழக்கம், அவர்களிடம் பயில வரும் மாணவர்களைத் தன் பக்கம் ஈர்த்துவிட வழிவகுத்தது. ஆள் சேர்த்துவிடும் மாணவர்களுக்கு இருநூறு, முன்னூறு என அவன் கொடுத்த கமிஷனும் விஷயங்களை மேலும் இலகுவாக்கியது.
அதே கல்லூரியில் முதுகலை படித்துக்கொண்டிருந்த செல்லம்மாவுடன் இரண்டொரு மாதங்களுக்கு முன்பே அவன் அறிமுகமாகியிருந்தான். எப்போதும் வெளிர் நிறங்களில் மட்டுமே ஆடை அணிந்து, மாசற்ற புன்னகையுடனும், கவர்ச்சிகரமான துறுதுறுப்புடனும் தோற்றமளிக்கும் அவளை ஒருவர் விரும்பாமல் இருப்பது அசாத்தியம் என்றே ஆரம்பத்தில் கருதியிருந்தான் அவன். ஆனால் மனித மனம் தன்னியல்பாக கட்டமைத்துக் கொண்டிருக்கும் விழுமியங்களை, வரம்புகளை, சில உன்னதங்களை உதாசீனப்படுத்தும் வினோத அம்சம் ஒன்று அவளுள் பொதிந்திருப்பதை அவன் பின்னர் கண்டுணரத் தொடங்கினான். கொள்ளைகொள்ளும் அழகும், உருகச்செய்யும் மென்மையும் பெற்றிருந்தாலும் ஒருபோதும் புரிதலின் கரங்களுக்குள் அகப்படாமல் நழுவும் தங்கமீனாய் திகழ்ந்தாள் அவள். அன்பு மற்றும் ஆற்றலைக்கொண்டு ஆட்படுத்த முடியாத ஒன்றை அழிக்க முற்படுவதே மானுட சுபாவம் என்பதால் அவளிடம் சிரித்துப் பேசி உறவாடும் பலருக்கும் அவளை ஒழித்துக்கட்ட தோன்றும் அளவிற்குக் காழ்ப்பும் இருந்தது. மறைமுக சூழ்ச்சிகள், முற்றான புறக்கணிப்புகள், கசப்பான புரணிகளின் மூலம் அது தன்னை வெளிப்படுத்திக்கொண்டும் இருந்தது. குழந்தையின் மிருதுவான கன்னத்தை வருடிக்கொண்டிருக்கும்போதே அதை நுள்ளச்சொல்லும் உள்மன உந்துதலின் ராட்சச பரிணாமத்தை ஒருமுறை தானும் உணர்ந்திருப்பதை முருகேசன் மறந்துவிடவே விரும்பினான்.
***
சிவப்பு நிறத்தில் பெரும் தேரைப்போல் இருந்த வண்டியின் ஓட்டுநர் இருக்கையில் அவளது சிறிய உடல் அமரும்போதெல்லாம் நுணுக்கமானதோர் உளக்கிளர்ச்சியை அடைவான் அவன். நெரிசல் மிக்க நகரப் பகுதிகளைக் கடந்து புறவழிச்சாலையை அடைந்ததும் பேசத் துவங்குவாள் செல்லம்மா. அக்காலங்களில் அவளது எண்ணமும், பேச்சும் எல்லாம் காதலைச் சுற்றியே இருந்தது.
அடர்மழையைப் பொருட்படுத்தாமல் மிதமான வேகத்தில் சாலையில் தனித்தனியாய் சென்றுகொண்டிருந்த ஒரு மாலை பொழுதில் தனது காதலனின் பெயரைச் சொல்லியிருந்தாள் அவள். பிற மதத்தைச் சார்ந்த அவனை மணம் முடிக்க அவளது அம்மா ஒத்துக்கொள்வார்களா என்று ஆர்வமாய் கேட்ட முருகேசனின் குரலில் பொறாமையின் நெடி துளியும் இருக்கவில்லை. கனவின் மிதப்பில் மிளிர்ந்த அவள் விழிகளை, அக்கனவின் நாயகன் வேறொருவன் என்று அறிந்திருந்தபோதிலும், ரசனையுடனே நோக்கிக்கொண்டிருந்தான். அவன் கேட்டதைச் செவிமடுத்தச் செல்லம்மா ஓரிரு நொடிகளுக்கு நிசப்தமாக இருந்தாள். பிறகு அவ்வினாவையும், அதன் பின்னிருக்கும் அவனது எண்ணத்தையும், அக்கறையையும் அற்பமாக்குவதைப்போல் கேலியான ஒரு சிரிப்பை உகுத்தாள். முருகேசன் அவளைப் புதிராகப் பார்த்தான். இனம்விளங்காத ஆத்திரத்தில் அவனது நாசிகள் விடைத்தன.
அதற்கு முந்திய வாரம் இதே பாதையில் அவளுடன் சென்றுகொண்டிருந்தபோது, சிலந்தி வலையில் சிக்கித் தவிக்கும் பூச்சியைப்போல் தனிமையில் வாடிக்கொண்டிருக்கும் தனது அம்மாவைப் பற்றி வேதனைத் ததும்ப பேசியிருந்தாள் அவள். அவளுக்கு எட்டு வயது இருக்கும்போது அவளது தந்தை வேறொரு பெண்ணுடன் ஊர் நீங்கியதை அவன் முன்பே அறிவான். அன்று அவர்களைக் கடந்து சென்ற வாகனங்கள் தெளித்துச் சென்ற ஒளியில் தென்பட்ட செல்லம்மாவின் முகத்தை, அதில் வடிந்த நுணுக்கமான துயரைக் கண்டுகொண்ட முருகேசனுக்குள் இன்னதென்று புரியாத கொதிப்பும், தீவிரமும் பொங்கியிருந்தது. அந்த உணர்வின் சாரத்தை அவனால் அப்போது விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் அதன் ஆழமும் தாக்கமும் அசாத்தியமானதாக இருந்தது.
ஒருசில வாரங்கள் கழித்து, அதிகனம் பெற்றிருந்த பூனைக்குட்டியின் உயிரற்ற உடலைச் சுமந்தபடி அவன் சாலையில் ஓடிக்கொண்டிருந்தபோது அந்த உணர்ச்சியின் நினைவுகளே மனதை ஆட்கொண்டிருந்தன. குலசேகர ஆழ்வார் தெருவில் இருந்த தனது அறைக்கு வந்து, அவ்வுடலைக் கீழே போட்டுவிட்டு, மனம் பிறழ்ந்தவனைப்போல் அதையே வெறித்தபடி நெடுநேரம் அமர்ந்திருந்தான். மங்கிய வெளிச்சத்தில் அன்று கண்டிருந்த அவளது துயர்படிந்த முகத்தின் நினைவு அவன் அகத்தை மென்று, விழுங்கி அசைபோட்டுக்கொண்டிருந்தது. பூனையின் வாய்வழிக் கசிந்த நீரின் கெடுமணம் நாசியை முட்டியபோதுதான் எத்தனை அபத்தமானச் சூழலில் அமர்ந்திருக்கிறோம் என்பதையே அவன் உணர்ந்தான். நாகர்கோவில் பைபாஸில் அதைப் புதைத்துவிட்டு வீடு திரும்பியதும் ஏனோ தங்கை நந்தினியின் நினைப்பெழுந்தது.
சிறு வயது முதலே அம்மா, அக்கா, தங்கை என பெண்கள் சூழ வளர்ந்திருந்தவன் அவன். அவனுக்குப் பத்து வயது இருக்கும்போது அக்கா கீதா, ஹார்டுவேர் கடை ஒன்றில் வேலைசெய்துகொண்டிருந்த, அவளைவிட ஐந்து வயது இளையவனான ஒருவனுடன் ஓடிப்போனாள். விஷயம் உறுதியானதும் குடும்பம் வாயடைத்துப்போனது. விஷயம் பரவியதும் ஊர் வாய் திறந்துகொண்டது. பெண்களுக்கான அழகு நிலையம் ஒன்றை நிறுவுவதைத் தனது வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருந்த அம்மாவின் அலங்கார ஆசைகளை வைத்து அவளது நடத்தையைக் குதர்க்கமாக எடைபோட்ட இழிபேச்சுக்கள், மரத்தடி, குழாயடி, டீக்கடை வாசல் மற்றும் ரேஷன் கடை வரிசையுடன் நின்றுவிடும்வரை பொறுமைகாத்தாள் அம்மா. ஆனால் அவை வீட்டுச் சுவர்களையும் தாண்டி செவி வருடிய தினம் ஒன்றில் ஊரைத் துறந்துவிட தீர்மானித்தாள். இதைப்போன்ற தடாலடியான நடவடிக்கைகள் தற்போது அவசியம்தானா என்று அவள் கணவன் எழுப்பிய பலவீனமான எதிர்ப்புக்குரலை அவள் சற்றும் மதிக்கவில்லை. அடுக்களையில் இருந்து எடுத்து வந்த இரு பெரிய அண்டாக்களைப் பேரோசை எழுப்ப தரையில் அவள் வைத்ததும் ஓர் அடிமையைப்போல் ஒத்தாசை செய்யத் துவங்கியவர், விறுவிறுவென்று ஐந்தாறு மூட்டைகளைக் கட்டிவிட்டு, கையில் அகப்பட்ட வறுத்தக்கடலை பொட்டலத்துடன் ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்துகொண்டார். நெற்றியோரம் படிந்திருந்த நூலாம்படையைப் புறங்கையால் அகற்றியபடி அறையைவிட்டு வெளிவந்த அம்மா அவரை ஒரு பார்வைப் பார்த்தாள். பிறகு சத்தமாக உச்சுக்கொட்டியபடி தெருவில் இறங்கி தன்னந்தனியாகச் சென்று வண்டி பிடித்து வந்தாள். அன்று அவள் முகமெங்கும் படர்ந்திருந்த காழ்ப்பைக் கண்டு லேசாய் நடுங்கியிருந்தான் முருகேசன்.
குடும்பத்தின் தேக்கநிலைக்கு வீட்டின் ஆண் வலுவற்றவனாய் இருப்பதே காரணம் என்று அவரது காதுபட அவள் புலம்பித் தள்ளிய காலமெல்லாம் என்றோ ஓய்ந்திருந்தது. ஐம்பதில் புதிதாய் விளைவதற்கு ஒன்றுமில்லை என்கிற அறிதல், பொங்கிச் சிதறும் தன்மையுடைய அவளது கசப்பை ஓர் பாறையென இறுகச் செய்திருந்தது. அவரது சுபாவம் அறிந்து, அவரை விரும்பியே திருமணம் செய்துகொண்டிருந்தாள் அவள். ஆரம்பத்தில் அவரது பலவீனம் அவளுக்கு ஒரு விஷயமாகவே பட்டிருக்கவில்லை. அதுவே அவருடைய தனித்துவமிக்க சிறப்பம்சம் என்று வெள்ளந்தியாக எண்ணிக்கொண்ட காலங்கள் உண்டு என்று அக்காவிடம் அவள் சொல்லிக்கொண்டிருந்ததை அவனே கேட்டிருக்கிறான். ஆனால் முழுக்க முழுக்க ஆண்களால் ஆளப்படும் ஒரு சமூகத்தில், பெண்ணென அவள் இரண்டு கட்டம் முன்னேறும்போதெல்லாம், அவள் பெண் என்பதனாலேயே மூன்றாம் கட்டத்தில் புறக்கணிக்கப்பட்டாள். இளமையும், உடல் ஆற்றலும் எஞ்சியிருந்த காலத்தில் அந்தப் போராட்டம் அவளுக்குக் கிளர்ச்சியளித்திருந்தது. ஆனால் பிள்ளைகள் பிறந்து, எலும்புகள் ஒன்றின்பின் ஒன்றாக கைவிடத் துவங்கியபோது பெரும் விரக்தி அலையால் அறையப்பட்டிருந்தாள். மேலும், செல்லும் இடமெல்லாம் தனது நடத்தைக் குறித்த பரிகாசக் கிசுகிசுப்புகள் தோன்றுவதற்கு அவரது பலவீனம் ஒரு முக்கிய காரணம் என்று அவள் திடமாக நம்பினாள். குழந்தை மற்றும் இளம் பிராயங்களில் வீட்டினுள் ஓர் முரடனாக திகழ்ந்த தன்னை அம்மா பெரிதாய் கண்டிக்காததற்கு அப்பாவின் சுபாவம் ஒரு காரணமோ என்று முருகேசன் பலதடவை எண்ணியிருக்கிறான். அக்கா கீதாவின் முன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு, நாக்கை மடித்துக் காட்டியபோதும், தங்கை நந்தினியின் கூந்தலைப் பற்றி அடிக்கச் சென்றபோதும், அம்மா அவனுக்காக அவர்களிடம், “அவன் ஆம்பள புள்ள, அப்படிதான் இருப்பான்…” என்று பரிந்து பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர்கள் முழித்ததும் அவனுக்கு நன்றாக நினைவிலிருந்தது.
ஒருநாள் ராமர் கோவில் தெப்பக்குளம் அருகே நந்தினியுடன் அமர்ந்திருந்தான் அவன். பக்கவாட்டில் தெரிந்த பால் பண்ணையில் அங்கும் இங்கும் துள்ளிக்கொண்டிருந்த ஒரு கன்றுக்குட்டியைப் பார்த்து, வாய்மேல் விரல்களை வைத்து அவள் குலுங்கிச் சிரித்துக்கொண்டிருந்தாள். கூந்தலில் சூடியிருந்த மல்லிச்சரத்திலிருந்து உதிர்ந்த பூக்கள் சில அவள் மடியிலும், காலடியிலும் சிதறியிருந்தன. அருகினில் நின்ற அரசமரத்தை ஊடறுத்து வந்த அந்தியின் ஒளி அவள் தேகமெங்கிலும் தங்கச்சில்லுகளைப் பரப்பியிருந்தது. மைபூசிய விழிகள், பாதி மூடி, ஏதோ மயக்கத்தில் இருப்பதைப்போன்ற தோற்றம் பெற்றிருக்க, உருண்டு திரண்டு இருக்கும் அவளது கன்னங்களில் இளஞ்சிவப்பு கூடியிருந்தது. அதையே பார்த்துக்கொண்டிருந்த முருகேசன் ஒருகணம் தன்னுள் ஏதோ நெகிழ்வதை உணர்ந்தான். அதன் பிறகு தன்னியல்பாக அவனது முரட்டுத்தனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. பதின்பருவத்துப் படகில் பயணம் செய்யத் தொடங்கியிருந்த அவளைப் பத்திரமாக கவனித்துக் கொள்வதைத் தனது முதன்மை பொறுப்பென வகுத்துக்கொண்டு, அதில் ஒருவித நிறைவையும் உணரத் துவங்கியிருந்தான்.
அதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து கல்லூரி மைதானத்தில் நண்பர்களோடு அமர்ந்திருக்கும்போது அங்கு வந்த அம்மா அவனை ஓரமாக அழைத்து, அவன் கையில் நந்தினியின் கைபேசியைத் திணித்து, “எவன்னே தெரியல தம்பி, நந்தினி பாப்பாட்ட பிரச்சனை பண்ணுதான்… போன பண்ணி கொஞ்சம் என்னன்னு அதட்டி கேளுய்யா” என்றாள்.
அத்தனைக் கட்டுப்பாடுகளையும் மீறி அவன் கைவிரல்கள் அப்போது லேசாய் விதிர்த்தன. அம்மா சொன்ன எண்ணுக்கு அழைத்தான். அச்சம் மற்றும் ஆங்காரத்துடன் அவனையே வெறித்துக்கொண்டிருந்த அவளது விழிகளில் ஆர்வமும், கொஞ்சம் ஏக்கமும் சேர்ந்திருந்தது.
அலைபேசியின் மறுமுனையில் ஒரு முரட்டுக்குரல், “ஹலோ? எவம்ல?” என்றதும் முருகேசன் விறுவிறுவென விலகிச் சென்று ஒரு மரத்திற்குப் பின்னால் ஒளிந்து நின்றான். “நான் நந்தினி அண்ணன் பேசறேன்!” என்று அறிவித்த அவனது குரலில் அவன் உத்தேசித்திருந்த கம்பீரம் இருக்கவில்லை. அதன் பிறகு மிரட்டுவதற்கும், அதட்டுவதற்கும் அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் மோசமாய் தோற்றன. “போலீஸ்” என்கிற சொல்லைத் துணைக்கழைத்து ஏவிப் பார்த்தான். ஆனால் பதிலுக்கு அவன், “எஸ்.ஐ என் சின்னய்யாதான், பேசுதியால?” என்று கேட்டபோது அனைத்து அஸ்திரங்களும் பொய்த்துப்போனது. குரலைத் தாழ்த்திக்கொண்டு மன்றாடத் துவங்கினான் முருகேசன். பதற்றத்தில் அதிர்ந்துகொண்டிருந்த கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. மறுமுனையில் இருந்தவன் அழைப்பைத் துண்டித்ததும் மெல்ல நடந்து அம்மாவிடம் வந்து, “பேசியிருக்கேன்மா… இனி தொல்லை இருக்காதுன்னு நினைக்கிறன்!” என்று பொய் சொன்னான். உடம்பெல்லாம் கூசியது.
ஆனால் தொல்லைகள் ஓயவில்லை. வலுப்பெற்றன. நான்கைந்து கூட்டாளிகளையும் சேர்த்துக்கொண்டு இரவு நேரங்களில் தொந்தரவு செய்யத் துவங்கினான் அவன். பிளாக் செய்தபோதும், எண்ணையே மாற்றியபோதும் எப்படியோ புதிய எண்ணைக் கண்டுபிடித்து மீண்டுவந்தான். அவளது அலைபேசியை ஒரேடியாக அணைத்துவைத்தபோது தெருவினுள் இரவு நேரங்களில் பல பைக்குகளின் சத்தம் கேட்கத் துவங்கின.
ஒருநாள் முருகேசன் வீட்டில் இருக்கும்போதே அந்த அழைப்பை ஸ்பீக்கரில் போட்டாள் அம்மா. நாராசமான அந்தப் பேச்சுக்களைக் கேட்க சகிக்காமல் வெடுக்கென பாய்ந்துசென்று அழைப்பைத் துண்டித்தான் அவன்.
அம்மா அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள்.
அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
ஆறுதல் சொல்லும் வகையில், “ஒரு கட்டத்துல அவனுங்களே ஓஞ்சுருவாங்கம்மா… ஃப்ரீயா விடுங்க… எத்தன நாளைக்கு செஞ்சற முடியும்… அவனுங்களுக்கே சலிச்சுரும்… இன்னும்…” என்று சொல்லிக்கொண்டிருந்தபோதே அவள் எழுந்துசென்றாள்.
மறுநாள் காலை வழக்கத்தை விடவும் சீக்கிரமாக எழுந்துகொண்ட முருகேசன், கூடத்தில் இருந்த அப்பாவின் புகைப்படத்தின் முன்னால் அமர்ந்து அம்மா கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.
அதன் பிறகு சில நாட்களுக்கு அதுபோன்ற அழைப்புகள் வராததைப்போல் இருந்தது.
ஒருநாள் இரவில் விழிப்புத் தட்டியபோது அறையில் அவனது அம்மா இருக்கவில்லை. விளக்கைப்போட்டு தங்கையை எழுப்பிவிடாமல், கைபேசி டார்ச்சைப் பயன்படுத்தி வாசல்பக்கம் போனபோது அங்கே முற்றத்தில் அம்மாவின் நிழல் விழுந்துகிடந்தது. கதவிடுக்கில் மறைத்தபடி வெளியே நோக்கியபோது, பக்கவாட்டில் இருந்த படிக்கட்டில், உடல் இறுகி, முகம் வெளிறி, ஒரு பிணம்போல் அமர்ந்திருந்த அவன் அம்மா, கைபேசியைக் காதோரம் வைத்துக்கொண்டு, “ம்” மட்டும் கொட்டிக்கொண்டிருந்தாள். உணர்வெழுச்சியில் ஓடிச்சென்று அவள் கையிலிருந்த போனை பிடுங்கி காதில் வைத்தபோது, மறுமுனையிலிருந்து அருவருக்கத்தக்க வார்த்தைகளும், முனகல்களும் கேட்டது. அழைப்பைத் துண்டித்து, போனை வீசியெறிந்தான் முருகேசன். உணர்ச்சியற்றவளாய் எழுந்துசெல்லப்போன அம்மாவின் கையைப் பற்றி, பற்களைக் கடித்துக்கொண்டே முறைத்துப் பார்த்தான்.
அவன் பிடியை ஆக்கிரோஷமாய் உதறித்தள்ளியவள், “என்ன பண்ண சொல்லுத? உதவின்னு எவன்ட்ட போய் நின்னாலும், கடைசில அவனும் இப்படித்தான் வந்து நிப்பான்… இல்ல நானே தான் முந்தானைய விலக்கி கூப்பிட்டேன்னு சொல்லி பெயர நாறடிப்பான்… உன்ன என் மகனா நினச்சு கேக்கேன், என் மவள விட்டுருன்னு கெஞ்சினேன்… ஏதேதோ கேட்டானுங்க… எனக்கு வேற வழி தெரியல” என்று அவன் முகத்தைப் பார்க்காமல் சொல்லிவிட்டு விலகி நடந்தாள்.
முருகேசனுக்கு ஆத்திரம் பொங்கியது. தடதடவென வீட்டிற்குள் சென்று உறங்கிக்கொண்டிருந்த நந்தினியை எழுப்பி அவளை ஓங்கி அறைந்தான். ஒன்றும் புரியாமல் “ஓ!” என அழத் துவங்கியவளிடம், “எல்லாம் உன்னால!” என்று கத்திவிட்டு, தலையில் அடித்துக்கொண்டு, அறையினுள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டான். அதற்கு மறுநாள் ராமர் கோவில் தெப்பக்குளத்தில் குதித்து தன்னை மாய்த்துக்கொள்ள முயன்ற நந்தினியை ஊர்க்காரர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். விஷயம் அறிந்து மருத்துவமனை சென்ற அவனை எதிர்கொண்ட அம்மாவின் முகத்தில் அவனுக்கு மிகவும் பரிட்சியமான காழ்ப்பின் நிழல் திரும்பியிருந்தது.
பின்வந்த நாட்களில் குடும்பத்துடனான அவனது தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவர ஆரம்பித்தது. சென்னையில் இருக்கும் கல்லூரி ஒன்றில் நந்தினிக்கு இடம் கிடைத்ததும் அம்மா அவளை அழைத்துக்கொண்டு அங்கு இடம்பெயர்ந்தாள். வேலையில்லாமல் சில காலம் சுற்றித்திரிந்த முருகேசன் அதன் பிறகு மெக்கானிக் கடை ஒன்றை ஆரம்பித்திருந்தான்.
முன்பொரு முறை தெப்பக்குளத்தில் நந்தினியுடன் அமர்ந்திருந்தபோது அவன் உணர்ந்திருந்த அந்த நெகிழ்வை ஒத்த ஓர் உணர்வைத்தான் செல்லம்மா தன் அம்மாவைப் பற்றி பகிர்ந்து வருந்தியபோது அனுபவித்திருந்தான் அவன். நெடுங்காலமாய் இழந்திருந்த ஏதோ ஒன்று மீண்டும் கைகூடியதைப்போல் இருந்தது. ஆனால் அதற்கு மறுவாரமே, அந்த உணர்வையும், அதற்கு ஆணிவேராய் அமைந்திருந்த தாயைப் பற்றிய அவளது வருத்தத்தையும் துச்சமாய் மாற்றுவதைப்போல் அவள் சிரித்தச் சிரிப்பைக் கண்ணுற்றபோது உதிரமெல்லாம் கொதித்தது. மிகவும் அற்பமான ஒரு சங்கதிக்கு ஏன் இத்தனை ஆத்திரம் என்கிற தன்னுணர்வையும் மீறி தகித்துக்கொண்டிருந்தது அது.
ஆனால் அதன் ஆயுள் ஒருகணம் தான்.
பேச்சின் திசை மாறியதும் அந்த உணர்வும் சுவடின்றி மறைந்துபோயிருந்தது.
***
குலசேகர ஆழ்வார் தெருவில் அவன் வீடிருக்கும் சந்தினுள் வண்டி நுழைந்தபோது அதை வழக்கமாய் துரத்திவரும் நாய்க்கூட்டம் அன்று காணாமல் போயிருந்தது. மதியத்திலிருந்தே மழை மிதமாக தூறிக்கொண்டே இருப்பதால் அவை ஏதேனும் மறைவில் பதுங்கியிருக்கவேண்டும் என்று எண்ணியபடி வண்டியின் இன்ஜினை அணைத்தான் முருகேசன். போர்வையைப்போல் அவனைப் போர்த்திய நிசப்தம் ஒருகணம் அவனை நிலைகுலையச்செய்தது. பெருமூச்செடுத்து கண்களை மூடிக்கொண்டான். காரின் முகப்புக் கண்ணாடியின் மீது சின்ன சின்ன மழைத்துளிகள் விழும் சத்தம் லேசாய் கேட்க ஆரம்பித்ததும் சாவியைத் திருகி துடைப்பானை இயங்கச்செய்தான். தூசித்திட்டுக்கள் படிந்திருந்த அந்தக் கண்ணாடிப் பரப்பினில் நீர்த்துளிகள் செறிந்து அதிர்வதையும், விசைகொண்டு பணியாற்றிய துடைப்பான் அவற்றை அழிப்பதையும் வெறித்தபடி சிறிது நேரம் அமர்ந்திருந்தான்.
வண்டியிலிருந்து அவன் இறங்கியபோது தெருக்கோடியில் மினுக்மினுக்கென்று துடித்துக்கொண்டிருந்த விளக்கு, பட்டென உயிர்விட்டது. இரண்டொரு நொடிகள் கழித்து அது மீண்டும் உயிர்த்தெழுந்தது. பக்கத்து வீட்டின் வாசலில் படுத்திருந்த மாட்டை விரட்டியபடி வெளிவந்த மனிதர் அவனைப் பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு மீண்டும் வீட்டிற்குள் சென்றார். அவர் மறைந்தபிறகும் முருகேசனின் முகத்தில் புன்னகை மறையாமல் இருந்தது. பிறகு தன்னுணர்வுகொண்டு அதைத் தளர்த்திக்கொண்டான். வீட்டிற்குள் வந்ததும்தான் இரண்டு வாரங்களுக்கு முன்பு, சந்தையில் புதிதாய் இறங்கியிருக்கும் பைக் மாடல்களைப் பற்றி அந்த மனிதர் விசாரித்திருந்தது நினைவுக்கு வந்தது. அதைக் குறித்து ஓரிரு சொற்கள் பேசியிருக்கவேண்டும் என்று அப்போது பட்டது அவனுக்கு.
உச்சுக்கொட்டியபடி உடையைக் கழற்றினான்.
புதிய சட்டையில் ஆங்காங்கே படிந்திருந்த கரித்திட்டுக்களை அவன் கவனித்தாலும் புத்தியில் பதியவைத்துக்கொள்ள விரும்பவில்லை.
அறையின் ஒரு மூலையில் இருந்த கயிற்றுக்கொடியில் உலர்த்தபோட்டிருந்த லுங்கியை அணிந்தபடி பாய்விரித்துப் படுத்துக்கொண்டதும் ஏனோ அம்மாவிடம் பேசத் தோன்றியது. போனை இயங்கச்செய்து நீண்டநேரத்திற்கு அதன் முகப்புப் பக்கத்தையே வெறித்துக்கொண்டிருந்தான். பிறகு ஏதோ நினைவு வந்தவனாய் கிடுகிடுவென அதை நோண்டி, செல்லம்மாவின் எண்ணை அழித்தான். அழித்த கையோடு அம்மாவின் எண்ணை அழைத்தான்.
“சொல்லுய்யா… வீட்டுக்கு வந்தாச்சா?” என்றாள் அம்மா.
“ம், இப்பதான் வந்தேன்…”
நீளமாக சுவாசித்துவிட்டு, கால்மேல் கால்போட்டுக்கொண்டான் முருகேசன். அவனது வலதுபாதம் தன்போக்கில் ஆட ஆரம்பித்தது.
“ம்”
“…”
“பேசி ரெண்டு வாரம் ஆச்சே, என்ன ஏதுன்னு தெரியலையேன்னு கொஞ்சம் முன்னதான் நந்தினி பாப்பாட்ட சொல்லிட்டு இருந்தேன்”
“அவ எப்படி இருக்கா?”
“இருக்கா… செமஸ்டர் நடக்கு”
“ம்”
“உனக்கென்ன ஆச்சு? மழையும் பனியுமா இருக்கு, உடம்புக்கு ஒன்னும் இல்லையே?”
“இல்லம்மா…”
“பின்ன?”
முருகேசன் எதிர்புறம் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். அதன் நொடிமுள் சற்று சிரமப்பட்டு அசைவதைப்போல் இருந்தது. பேட்டரி மாற்றவேண்டும் என்று மனதினுள் குறித்துக்கொண்டான். ஆனாலும் விழிகள் அதனைவிட்டு அகல மறுத்தன.
“ஏதோ தெரிஞ்சவங்க இறந்துட்டாங்கன்னு சொல்லிருந்தியே… என்ன ஆச்சு?”
பட்டென அழைப்பைத் துண்டித்த முருகேசன், பார்வையைப் பலவந்தமாக கடிகாரத்திலிருந்து நகற்றினான். பரபரத்தலைந்த கருவிழிகள் ஏதோ ஒன்றில் ஊன்றிவிடத் துடித்தன. ஆனால் சுவரோரம் சுருண்டுகிடந்த நூலாம்படை, கேனின் கீழ் தேங்கியிருந்த தண்ணீர், அழுக்கடைந்த சுவர்கள், மின்காத்தாடி எழுப்பிய உலோகச் சத்தம் என அனைத்தும் வேண்டாததை மீட்டெடுத்துவிடும் அபாயத்தைச் சூடியிருந்தது. இமைகளை மூடிக்கொண்டபோது குரூரமான அந்தக் காணொளி மிகையான துல்லியத்துடன் அகப்பரப்பில் உருப்பெற்றது. ஒருநொடி தான் இருப்பது தனது வீடே இல்லை என்றும், பேருந்து நிலையத்தை ஒட்டியிருக்கும் பிரசித்திபெற்ற அசைவ உணவகத்தின் மூன்றாம் தளத்தில் இருக்கும் அழுக்கடைந்த அந்த விடுதி அறைதான் என்றும், இப்போது இமைகளைத் திறந்தால் எதிரே பிளவுண்ட கழுத்துடனும், பாதி மூடிய விழிகளுடனும் செல்லம்மா கிடப்பாள் என்றும் அவன் சித்தம் மயங்கியது.
அண்டைவீட்டு மனிதர் சற்றுமுன் தனக்கு வணக்கம் வைத்த நினைவை அகழ்ந்தெடுத்து அதனுள் தன்னை வலுக்கட்டாயமாக புகுத்திக்கொண்டான். திடீரென முளைத்து தன்னை திக்குமுக்காடச் செய்த நினைவின் தாக்கம் முற்றாக ஓய்வதற்கு சில கணங்கள் ஆனது. மறுநிமிடம், துடைப்பானால் அழிக்கப்பட்ட கண்ணாடியென அவன் உள்ளம் தெளிவடைந்திருந்தது.
அனைத்தும் அபத்தம் என்று எண்ணிக்கொண்டான். காலையில் புத்தொளியுடன் ஒர்க் ஷாப்பினுள் அடியெடுத்து வைத்தபோது, அங்குப் பணிபுரியும் சதீஸ் அக்கறையுடன் அணுகி, “அண்ணே!” என்றதுமே அவனுக்கு அது தோன்றியிருந்தது. கடந்த சில வாரங்களாக எதுவாக நின்றானோ அதுவாக அப்போது தன்னை உருமாற்றிக்கொள்ள பிரயாசைப்பட வேண்டியிருந்தது. அச்சலனத்தை உடனடியாக புறந்தள்ளிவிட்டு பணியில் மும்முரமாகியிருந்தான். விட்டுப்போயிருந்த காரியங்களை எல்லாம் நிறைவுசெய்து, வாடிக்கையாளர்களின் குறைகளை ஒவ்வொன்றாய் நிவர்த்திசெய்து முடித்தபோது ஏழுமணி நேரம் இமைப்பொழுதாய் கரைந்துவிட்டிருந்தது. அதை உணர்ந்தபோது பேரெடை ஒன்று தன்னைவிட்டு நீங்கியதைப்போல் உணர்ந்திருந்தான்.
அலைபேசியை எடுத்து மீண்டும் அம்மாவை அழைத்தான் முருகேசன்.
“சாரிம்மா, கட் ஆயிருச்சு…”
“ஓ”
“ம்”
“…”
“அந்த பொண்ணு விஷயம்… அந்த ஆள புடிச்சுட்டாங்க… ரெண்டு நாள் முன்ன”
“ம்… என்ன நடந்துச்சாம்?”
“சரியா தெரியல… ஏதோ ஒன்சைட் லவ் விவகாரமுன்னு பேப்பர்ல போட்டிருந்துச்சு…”
இரண்டு நாட்களுக்கு முன்பு தினத்தந்தியில் அச்செய்தியைப் படித்தபோது அவனுள் பல கேள்விகள் முளைத்திருந்தன. யாராக இருக்கும்? அவள் சொன்ன அந்தப் பையன்தானா? ஒருதலைக் காதல் என்றால் வேறு யாரோவா? முகத்தை ஏன் துண்டைக்கொண்டு மறைத்திருந்தான்? இணையத்தில் வெளியானது அந்தக் காட்சியின் ஒரு துணுக்கு மட்டும்தானா? ஒருதலைக் காதலுனுடன் அந்த அறையில் என்ன செய்துகொண்டிருந்தாள் அவள்? ஒரு கட்டத்திற்குமேல் அதைக் குறித்துச் சிந்திப்பதை அவன் மனமே விரும்பியிருக்கவில்லை.
ஒருசில நொடிகள் மௌனத்திற்கு பின், “ம்… காலம் கெட்டு போச்சு” என்ற அம்மா, அதன் பிறகு பேச்சைப் பொது விஷயங்களை நோக்கி இட்டுச்சென்றாள். அவள் மிக இயல்பாக அந்த நிகழ்வைக் கடந்துசென்றது முருகேசனுக்கு ஆசுவாசத்தை வழங்கியது. ஆனால் அழைப்பு நிறைவுறும் கணத்தில் தற்செயலாக, “ரெண்டு வாரம் ஒரு சத்தம் இல்லாம இருந்ததுதான் சரியா படாம இருந்துச்சு… வேலைக்காச்சு போனியா?” என்று அவள் கேட்ட கேள்வி அவனது ஆழத்தில் அதிர்வலைகளைக் கிளப்பின. காழ்ப்புநிறைந்த அவளது முகம் ஒருநொடி அவன் கண்முன் வந்துபோனது. தொழிலில் எவ்வித இடையூறும் உருவாகவில்லை என்று சொல்லிவிட்டு போனை வைத்தபிறகும் அந்த மனசஞ்சலம் பெருகியபடியே இருந்தது.
கோரமான அந்தக் காணொளியை முதல்முறை கண்டபோதும், பின்னர் அதன் சில பகுதிகளைப் பலமுறை நினைவுகூர்ந்தபோதும் அவன் உணர்ந்ததெல்லாம் ஒருவித விலகலைத்தான். ஒன்றரை நிமிடம் நீளும் அக்காணொளித் துணுக்கின் இறுதியில் குருதிவெள்ளத்தில் கிடக்கும் உடலுடன் அவனால் எவ்விதப் பிணைப்பையும் ஏற்படுத்திக்கொள்ள இயலவில்லை. சித்தத்தின் ஒரு பகுதி, செல்லம்மா என்ற பெண்ணையும், அவளுடன் தனக்கிருந்த குறுகியகால உறவையும் அற்பமென்றாக்க பெரும் முயற்சிகள் எடுத்துக்கொண்டிருந்தது. அவளுடனான நினைவுகள் அனைத்திலிருந்தும் அதிமுக்கியமான ஏதோ ஒரு அம்சத்தை நீக்கி, அவற்றை அர்த்தமற்ற அன்றாட உறவாடலெனத் திரித்து வழங்கியது. ஒருசில நிமிடங்களுக்கு இந்தப் பெண்ணுடன், இதைப்போன்ற முடிவைத் தழுவிய ஒரு ஜீவனுடன் தனக்கு மிகவும் மேம்போக்கான தொடர்பே இருந்தது என்று அவன் ஆழமாகவே நம்பினான். ஆனால் அக்கணம் பார்த்து விழித்துக்கொண்ட மனதின் மற்றொரு பகுதி அதனுடன் சரிக்குச்சமமாய் நின்று சமரிடத் தொடங்கியது. மூன்று மாதங்களில் அவளுடன் அவன் மனரீதியான நெருக்கத்தை உணர்ந்திருந்த தருணங்களை மீட்டெடுத்து, மிகைப்படுத்தி அருகில் நிறுத்தியது. குறிப்பாக அவள் தனது அன்னையின் தனிமையைக் குறித்துச் சொல்லி துயருற்றபோது அவனுள் முளைவிட்டிருந்த நெகிழ்வை, பூரிப்பை ஒரு திரைபோல் விரித்து அவனை அதனால் சுருட்டிவிட முற்பட்டது. அந்த இரவெல்லாம் உறங்கமுடியாமல் நடுங்கியபடியே இருந்தான் அவன். எதற்கெல்லாமோ அஞ்சினான். காவல்துறை தன்னை இதனுடன் தொடர்புபடுத்த முனையுமோ என்றும், செல்லம்மாவின் அம்மா தன் பெயரை இதனுள் இழுத்துவிடுவாளோ என்றும் பதைப்புற்றான். ஏதோ மெக்கானிக்குடன் தனது மகள் குறுஞ்செய்தி தொடர்பில் இருப்பது அவளைச் சற்று நிம்மதியிழக்கச் செய்வதாக செல்லம்மா சிலமுறை அவனிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறாள். தர்க்கத்தைக்கொண்டு வெகுநேரம் போராடி அச்சாத்தியப்பாட்டை அவன் ஒழித்துக்கட்டியிருந்தாலும், காரணமற்ற ஒரு அபாய உணர்வு அவனுள் ஆழமாக வேரூன்றியிருந்தது. அது அவனை அவ்விடத்தைவிட்டு கண்காணா இடம்நோக்கி ஓடச் சொல்லியது. உலகத்தை முற்றாக புறக்கணித்துவிட்டு வீட்டினுள் முடங்கிக்கிடக்க அறிவுறுத்தியது. ஆனால் அவை அனைத்தும் ஏதோ வகையில் அவனுக்கு எதிராக அமைந்துவிடுமோ என்று பதட்டமாகவும் இருந்தது. இயல்பாக இருப்பதே உகந்தது என்று புரிந்தபோதிலும் அவனால் அப்படி இருந்துவிட முடியவில்லை. விசித்திரங்கள் கூடிவிட்டிருந்த அவனது நடத்தையைக் குறித்து மறுநாள் சதீஸ் கேள்வியெழுப்பியபோது சற்றும் யோசித்திராமல், “மனசே விட்டுப்போச்சு சதீஸு… துறுதுறுன்னு திரிஞ்ச பிள்ளைய இந்த கதில பாக்கறப்ப உள்ளுக்கு ஏதோ பிசையுது” என்று சொல்லியிருந்தான் முருகேசன். அக்கூற்றையே ஓர் உணர்வுநிலையென்றாக்கி கெட்டியாக பிடித்துக்கொள்ள தீர்மானித்தது அவனது ஆழ்மனம்.
கைவிரல் நகங்களுக்கு அடியே கூர்மையான கூச்சத்தை உணர்ந்தான் முருகேசன். கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்த அவ்வுணர்வு புறங்கையின் நரம்புகளினூடாகப் பரவி புறங்கழுத்தை அடைந்தது. அவனால் ஒரு இடத்தில் அமர்ந்திருக்க முடியவில்லை. வெடுக்கென எழுந்துகொண்டு வாசல்பக்கம் திரும்பியபோது, அங்கே இருந்த ஆணியில் மாட்டப்பட்டிருந்த பச்சை சட்டை கண்ணில் பட்டது.
“முருகேசன்? என்ன? நாங்க சட்டை வாங்கி குடுத்தா போட்டுக்க மாட்டீங்களா? உங்களுக்கு எடுப்பா இருக்குமுன்னுதான சொல்றேன்? ரொம்பல்ல பிகு பண்றீங்க!” என்ற அவளது கீச்சுக்குரல் அறையெங்கிலும் எதிரொலிப்பதைப்போல் இருந்தது.
அடிவயிற்றிலிருந்து சீறியெழுந்த மலைநாகம் ஒன்று உள்ளுறுப்புகள் அனைத்தையும் இறுக்கிப் பிழிவதைப்போன்ற ஒரு வேதனையை அவன் அடைந்தான். சுவாசம் தடைபட்டது. கண்கள் சிவந்து குளமாகின. அழுதுவிட நினைத்தான். ஆனால் நெஞ்சுக்கூட்டை விதிர்க்கச்செய்தபடி கிளம்பிய பேரோலம் தொண்டைக் குழியை எட்டும் முன்பே துவண்டு சரிந்தது. துயரமெனும் உன்னதநிலைக்கு அருகதையற்றவனாய் தன்னை உணர்ந்தான்.
மர அலமாரியின் கீழ் அடுக்கில் ஹாஃப் பிராந்தி இருந்தது. அவன் பதிவாய் குடிப்பவன் அல்ல. பணிச்சுமையினால் தாளமுடியாத தேகவலி ஏற்படும் இரவுகளில் மட்டும் கொஞ்சமாக எடுத்துக்கொள்வான். அன்று கைகால் கிடுகிடுக்க செய்வதறியாமல் நின்றுகொண்டிருந்த முருகேசன் அப்போது அந்த பாட்டில் முழுவதையும் தனது வாயினுள் கழிழ்த்திக்கொண்டான். எப்பாடுபட்டாவது உறங்கிவிடவேண்டும் என இருந்தது. ஆனால் துயரமும், அவமான உணர்ச்சியும் இரு கொக்கிகளென அவன் தசையினுள் புகுந்து எதிரெதிர் திசைகளில் ஜீவனை இழுத்துக்கொண்டிருந்தது. இமைகளைச் சரிக்க இயலவில்லை. நடுச்சாமம் கடந்தபின் தன்னை மறந்து கண்ணயர்ந்தபோது அழுக்கடைந்த அந்த விடுதி அறையையே சொப்பனத்தில் கண்டான். கண்கூசச்செய்யும் கூர்மையுடைய வீச்சரிவாள் ஒன்று அவன் முகத்தின் அருகே தெரிந்தது. மறுநொடி அது ஒரு பெண் உடலை மூர்க்கமாக கூறுபோட்டுக் கொண்டிருந்தது. இம்மியளவு தயக்கமின்றி வாள்வீசிய அந்தக் கரத்தை அவன் நன்கு அறிவான். அது அவன் தந்தையினுடையது. உதிரக்கடலில் புரண்டுகொண்டிருந்த அவன் அம்மா, “தம்பி, முருகேசு!” என்று கூச்சலிட்ட கணம் அவள் சிரம் துண்டானது.
வியர்வையில் குளித்திருந்த உடல் வெடவெடக்க அவன் விழித்துக்கொண்டபோது படுத்திருந்த அறை வல்லம்போல் அசைந்தாடிக்கொண்டிருந்தது. எத்தனை கசக்கியபின்பும் பார்வைத் தெளிவடைய மறுத்தது. இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி எழுந்து நின்றான். பிசிறற்ற இருளினுள் அமிழ்ந்துகிடந்தது புறம். இவ்விருளே சாசுவதம் என அவனுள் ஒரு குரல் சொல்வதைப்போல இருந்தது. அவன் வேகமாக தலையசைத்தான். வாசலோரம் ஏதோ அசைவு தெரிந்தது. வெடுக்கென திரும்பியபோது, அங்கிருந்த ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த பச்சை சட்டை காற்றில் லேசாய் அசைந்துகாட்டியது. தள்ளாட்டத்துடன் அதை அணுகினான் முருகேசன். உப்பரித்து, கரிப்படிந்திருந்த அச்சட்டையில் அவளது மணம் கமழ்வதைப்போல் உள்ளம் மயங்கியது.
உருவமற்ற எதனிடமோ ஆதரவு கோருவதைப்போல் பார்வையால் ஓரிரு நொடிகளுக்கு இருட்டைத் துழாவி நோக்கினான் முருகேசன். பிறகு கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்க அச்சட்டையைக் கையிலேந்தி, குளியலறை வரை சுமந்து சென்று, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தான். பின்னர், வாளி நிறைய நீர் பிடித்து அதன் சாம்பலைக் கழுவித் தள்ளிவிட்டு, மேலும் ஒரு வாளி நீர் பிடித்து தன்மேல் ஊற்றிக்கொண்டான்.
ஈர ஆடைகளை அங்கேயே கழற்றிப்போட்டுவிட்டு வெற்றுடம்பாய் அறையினுள் வந்து, ஜன்னலோரம் இருந்த கண்ணாடியின் முன் நின்றுகொண்டான். உடலின் உஷ்ணத்தினால் ஈரம் வேகமாக உலர்ந்துகொண்டிருந்தது. ஐந்தாறு நிமிடங்களில் ஈரம் அனைத்தும் முழுதாய் வற்றிவிட்டிருந்தது. அனைத்தையும் ஓரங்கட்டிவிடும் காலம் ஒன்று வரும் என்று அசட்டு வீம்புடன் தன்னிடமே கூறிக்கொண்டான். பின்னர் அதனைத் தனது சுயத்திடமே ஊர்ஜிதப்படுத்தும் முனைப்புடன் அனைத்து பற்களையும் காட்டி இளிக்க முயன்றான். ஆனால் கட்டற்று அதிர்ந்துகொண்டிருந்த அவனது கன்னத்தசைகள் அச்சிறிய அசைவைக்கூட முழுமைபெற விடாமல் பார்த்துக்கொண்டன.
