
குளிர் காதுகளை அடைத்தது. இன்னும் சூரியன் வெளிச்சம் காட்டவில்லை. பேருந்து மெதுவாக பச்சை மலை குன்றுகள் சிதறிக்கிடக்கும் பாதையில் நகர்ந்து கொண்டிருந்தது. மரவட்டை நகர்வது மாதிரி நிலம் மெதுமெதுவாக மேடேறும் பாதை. ஒக்கரை குன்றடி சிற்பக்கூடங்களில் உளிகளின் சத்தங்கள் கலைந்து கேட்கிறது.
“ஒக்கரை வந்துருச்சு…” என்று நடத்துனர் உறங்குபவர்களை எழுப்பினார். அருகில் உறங்கிக்கொண்டிருந்த பிரதிக்ஷாவை சேலை முந்தானையால் போர்த்தி அணைத்துக்கொண்டேன். ஆட்கள் தலையையும் காதுகளையும் துண்டால் போர்த்திக்கொண்டு இறங்கினார்கள். உளி சத்தங்கள் நினைவுகளைக் கொத்துவது போல காதுகளில் மொய்த்தன. கருங்கற்களை இரும்பின் கூர் தீண்டும் ஒலி. தாங்க முடியாமல் இடது புறம் நின்ற குன்றைப் பார்க்கத்தொடங்கினேன்.
கருங்கற்களையெல்லாம் பெயர்த்தெடுத்தப்பின் எஞ்சிய மண்ணாலும் கற்களாலும் ஆன குன்று. குட்டை மரங்களும் செடிகளும் பனியில் கருகியிருந்தன. யார்பார்த்தாலும் சீர்குலைந்த குன்று என்று சொல்லிவிடுவதற்கு ஏற்றமாதிரி குன்றில் பாதிபங்கு உயரமுள்ள பெரிய பாறை பாதியுடைந்து மீதி குன்றுடன் நிற்கிறது. மஞ்சு படர்ந்திருந்த உச்சியிலிருந்து பார்வையை இறக்கினேன். என்றைக்கோ உடைத்த அந்தப் பாறையில் காலகாலமாக நீர்வழிந்த தடங்களில் படிந்த பாசி வரைந்திருக்கும் கருப்புத்தடங்களைத் தெருவிளக்கும் தேநீர் கடை விளக்கும் மங்கலாகக் காட்டின.
வீட்டிற்குத்தெரியாமல் சந்திரனைத் திருமணம் செய்து கொண்டு பேருந்தில் திரும்பிய அன்று வழியில் கண்களுக்குத் தெரிந்த அனைத்து கோயில்களையும் கும்பிட்டபடி வந்தேன். இங்குச் சிற்பகூடங்களுக்கு வெளியே பாதையோரத்தில் கைவிடப்பட்டு கிடக்கும் சிலைகளைப் பார்த்து “எங்களை எப்படியாச்சும் காப்பாத்திரு,”என்று வேண்டினேன். சந்திரன், “உனக்கென்ன பயித்தியமா..சொந்தத்துக்குள்ள என்ன செஞ்சுருவாங்க,”என்று சலித்துக்கொண்டான்.
கல்லில் உளிபடும் கூரிய ஓசைகள் மாறி கருங்கல்லை இயந்திரம் அறுக்கும் ஓசை. கண்ணன் கையில் உள்ள ஆழி. கற்களைச் சுழன்று அறுக்கும் அந்தச் சிறுசக்கரங்களில் ஒன்றைக் கழுத்தில் வைத்தால்… என்ற எண்ணம் வந்ததும் உடல் சிலிர்த்து சிறிய உலுக்கல் வந்து போனது. தீனா இப்படி ஒரு சக்கரத்தை மனதில் சுற்றவிட்டு போய்விட்டான். நடத்துனரின் விசில் சத்தத்துடன் பேருந்து கிளம்பியது. மனம் மீண்டும் நினைவுகளைக் கலைத்துப்போட்டு அடுக்கத் தொடங்கியது.
“ம்மா… எழுந்திரு… ஊர் வந்தாச்சு…”என்று பிரதிக்ஷா உசுப்பினாள்.
பேருந்திலிருந்து குன்றடி நிறுத்தத்தில் இறங்கினோம். சூரியகதிர்கள் வயல்காடுகளை மரகதமாக்கிக் கொண்டிருந்தன. பேருந்திலிருந்து இறங்கிய இரண்டு பையன்கள் ஊருக்குள் செல்லும் வழியில் நடக்கத்தொடங்கினார்கள். நாங்கள் நெடுஞ்சாலையின் ஓரமாக நடந்தோம். இடதுபுறம் நெல்வயல்களுக்குள் உள்ள களங்களில் அங்கங்கே சூரியன்பொங்கல் வழிபாட்டிற்காக சங்கும் மணியும் சேமக்கலங்களும் முழங்கும் சத்தங்கள் கேட்டன.
வலதுபுறம் குன்றின் அடிவாரத்தில் உள்ள எங்கள் வீட்டை நோக்கி திரும்பியதும் சந்திரன் வந்து பைகளை வாங்கிக்கொண்டான். நான் களத்திலேயே நின்று குன்றைப் பார்த்தபடியிருந்தேன். ஒரு வாரத்திற்கு முன்பே வந்து சந்திரன் வீட்டிற்கு வெள்ளையடித்து, களத்தையும் தூய்மை செய்திருந்தான். பின் வீட்டய்யா அங்கிருந்தே, “மூணுவருஷமாச்சுல்ல கண்ணு நீ இங்கன வந்து…”என்றார். பின்வேலி வழியாக பக்கத்தில் வந்து சற்று நேரம் பேசிவிட்டு சென்றார்.
சுற்றியிருந்த அமைதி மனதைத் திணறச் செய்தது. தீனாவின் குரல் இல்லாத அமைதி. நத்தை போல பொழுது ஊர்ந்தது. மதியம் கடந்து அந்தி வந்து மறைந்து இருள் சூழ்ந்து பூச்சிகளின் சத்தங்கள் காதுகளை மொய்க்கத் தொடங்கியன.
களத்தில் கயிற்று கட்டிலில் படுத்திருந்த என்னைத் தோளைத் தொட்டு உசுப்பிய சந்திரன் , “ மதியமே சரியா சாப்பிடல…சாப்பிட்டு படு,”என்று கைகளைப் பற்றினான். அவன் தொடுகை சில்லென்று உள்ளங்கையில் படர்ந்ததும் கலங்கிய கண்களைக் கட்டுப்படுத்திக்கொண்டேன். பேசுவதற்கு எத்தனையோ இருந்தும் எதையாவது பேசி ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்துவிடக்கூடாது என்று பிரதிக்ஷா கூட அமைதியாக இருக்கிறாள். சந்திரன் தட்டில் இருந்த சோற்றை உருட்டி என் கையில் வைத்தான். சிறியதும் பெரியதுமாக இவன் மனதிலும் தான் எத்தனை சக்கரங்கள்.
படித்த பையனிற்கு என்னைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டார். சந்திரன் எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு லாரி ஓட்ட பழகிக்கொண்டான். வயதான காலத்தில் வாரிசு வேண்டும் என்று சந்திரனின் அப்பா அவனுடைய அம்மாவை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார். இவன் பிறந்த ஐந்து ஆண்டுகளில் வயோதிகத்தால் அப்பாவும், ஊர்பேசும் புரளி தாளாது அம்மாவும் தற்கொலை செய்து கொண்டு செத்துப்போனார்கள்.
அதனாலோ என்னவோ இவன் கோழி அடைகாப்பது போல குடும்பத்தை வைத்திருக்கிறான். வீட்டில் இன்னொருத்தர் இருப்பதே அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது என்று திருமணமான புதிதில் சொல்லிக்கொண்டே இருப்பான். திருமணமாகும் வரை ஊருக்குள் இருக்கும் வீட்டில் தனியாகவே இருப்பான். இரவில் வீட்டிற்குள் யாரையும் விடக்கூடாது என்று சந்திரனின் அம்மா இறக்கும் போது சத்தியம் வாங்கிக்கொண்டாள். அம்மாவின் ஆவி அவனிற்குக் காப்பாக வீட்டிற்குள் அலைகிறது என்று கோயில் பூசாரி சொன்னதிலிருந்து ஊர்நடுவிலிருந்த அந்த வீட்டைப் பகலிலும் யாரும் அண்டமாட்டார்கள். வயலைக் குத்தகைக்குப் பார்க்கும் சொந்தக்காரர் வீட்டில் சாப்பிட்டுக்கொள்வது வழக்கம். அந்த வீட்டால் தான் அவனிற்கும் திருமணம் அமையவில்லை.
எனக்கு வரலாறு பாடப்பிரிவு பதினோறாம் வகுப்பில் கிடைத்தது. விடுமுறையில் வயல் வேலைக்குச் செல்வேன். சந்திரனுடைய வயலிற்கும் களையெடுக்கும் வேலைக்குச் செல்வதுண்டு. பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இடம் கிடைத்தது. படித்து முடித்தப்பின் ஊருக்குள் ட்யூஷன் வைத்திருந்தேன். இரவு ட்யூஷன் முடித்து மலையடிவாரத்து வீட்டிற்கு வருவதற்குச் சந்திரன் அவ்வப்போது துணைக்கு வருவான். சொந்தக்காரன் என்பதால் யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள். எனக்கே கூட சந்திரனைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை.
பட்டி ஆடுகளை ஒவ்வொன்றாக விற்றுதான் வீட்டில் என் படிப்பிற்குச் செலவு செய்தார்கள். திருமணத்திற்கு என்று கைகளில் இருப்பு எதுவும் இல்லை. ஆசிரியர்பயிற்சி முடித்திருந்ததால் இரண்டொரு ஆண்டுகளில் வேலைவந்துவிடும் என்ற நினைப்பில் பெண் கேட்டு வந்தார்கள். மலையடிவாரத்தின் இந்த ஓலைவேய்ந்த வீடும், அடிவாரக் காடும் அவர்களுக்கு நாகரீகமாகத் தெரியவில்லை.ஊருக்குள் வீடு பார்த்து குடியிருந்தால் கௌரவமாக இருக்கும் என்று இடையாட்களிடம் சொல்லிவிட்டார்கள்.
அப்பாவும் அம்மாவும் கல்யாணமான புதிதில் செதுக்கிய பெரியகளம் கொண்ட இந்த வீடு அம்மாவிற்கு உயிர். நான் படுத்திருக்கும் இடத்தில் முன்பு ஆட்டுப்பட்டி இருந்தது. அதன் முகப்பில் தொங்கும் லாந்தர் விளக்கின் கீழ் அமர்ந்து படிப்பேன். சட்டென்று நிமிர்ந்து பார்த்தால் மலை என்னைப் பார்த்துக்கொண்டிருப்பது போல இருக்கும். துறையூர் பெருமாள் மலையில் நிற்கும் சாமி போல. சில நாட்கள் மலையைப் பார்த்து ஏனென்று தெரியாமல் அழுதிருக்கிறேன். குப்பென்று பச்சை பூக்கும் ஜூன் மாதத்தில் ‘நம்ம மலைக்கு கிறுக்கு புடிச்சிருக்கு’ என்று கேலி செய்திருக்கிறேன். டிசம்பர் மாதங்களில் மலை சோகமாக இருக்கிறது என்று அம்மாவிடம் சொன்னால் “ஒனக்கு தாண்டி கிறுக்கு..அது சிவனேன்னு கெடக்கு” என்று சிரிக்கும்.
இரவில் இப்படி மலையைப் பார்த்து அமர்ந்து லாந்தர் விளக்கொளியில் நான் படிக்கும் வரை அம்மா நன்றாக தூங்கும். இல்லாவிட்டால் சிறு சத்ததிற்கே விழித்துக்கொள்ளும். பரந்த களத்தின் முடிவில் காடு தொடங்கும் இடத்தைப் பார்க்கும் போதெல்லாம் மனதை என்னவோ செய்யும். “அந்தப் பக்கம் பாத்துக்கிட்டே இருக்காத பிள்ள… மம்மலையான் வந்து பிடிச்சுக்குவான்,” என்று சொல்லும் அம்மா வெள்ளிக்கிழமைகளில் அங்குக் கற்களுக்கு இடையில் வைத்திருக்கும் அகலை ஏற்றச்சொல்வாள். கற்களில் அணைப்பில் சுடர் காற்றுக்குத் தப்பித்து மின்மினி போல மினுங்கிக்கொண்டிருக்கும். இன்னும் கனவுகளில் இந்த இடம் தான் வருகிறது.
மலையடிவாரத்தில் புதிதாக யாரும் வீடுகட்டக்கூடாது என்ற ஆணையுடன் எங்களுக்கு மின் இணைப்பு வந்த நாட்களில் தான் கலிங்கலாம்பட்டியிலிருந்து பாலிடெக்னிக் முடித்த மாப்பிள்ளை வந்தார். சொந்தபந்தங்களும் அப்பாவும் இந்த மாப்பிள்ளையை முடித்துவிடலாம் என்று உறுதியுடன் சொன்னார்கள்.
சாவித்ரி அத்தை யாருக்கோ சொல்வது போல “நம்ம தகுதி என்னன்னு பாக்கனும்..படிப்பு மட்டும் போதுமா? தாய்தகப்பனுக்கு இன்னும் எத்தனை வருஷத்துக்கு பாரமா இருக்கறதா உத்தேசம்?”என்று சட்டென்று கேட்டாள்.
மாப்பிள்ளையைப் பார்த்ததும் ஓடிவந்து காட்டெல்லை வாகைமரத்தடியின் நின்று கொண்டேன். மலையில் விறகு பொறுக்கும் ஆட்கள் சுமையுடன் இறங்கிக்கொண்டிருந்தார்கள். காட்டிலாக்கா வேலையிலிருந்த பெருமாள் அண்ணன் மரங்களை வெட்டுகிறார்களா என்று ரோந்து பார்த்துக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் சிரித்தபடி,“என்ன டீச்சர்…மாப்பிள்ளை பிடிச்சிருக்கா,” என்று கேட்டு நின்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை.
அவருக்குப் பின்னால் மூச்சு வாங்க விறகு சுமையுடன் குதிநடையுடன் வந்த பங்காரு அக்கா, “மனசுக்கு பிடிக்கனும்… ஆமா,” என்று சொல்லிக்கொண்டே ஓட்டம் போன்ற நடையுடன் மலையிறங்கி விடுவிடுவென்று நடந்தாள். பெருமாள் அண்ணன் என்ன சொல்வது என்று தெரியாமல் சற்று நேரம் சுற்றி பார்ப்பதைப் போல நின்றுவிட்டு நடக்கத்தொடங்கினார்.
அப்போது சந்திரன் ஒரு வலுவான பெரிய நுணாமரக்கிளையை இடதுதோளில் தூக்கிக்கொண்டு குன்றிலிருந்து இறங்கி வந்தான்.
எதிரே வந்து நின்றவன் சட்டென்று,“என்னைய கல்யாணம் செய்துக்கிறியா…”என்று கண்களைப் பார்த்துக் கேட்டான். சிறிய தயக்கம் இல்லாத குரலில், “படிக்கலேன்னு நினைக்காத… அம்மா சத்தியமா வேண்டாத பழக்கவழக்கம் எதுவும் எனக்கு கிடையாது…உன்னைய நல்லா பாத்துக்குவேன்..”என்றான்.
வாகை மரத்தில் சாய்ந்து கொண்டு அவனைப் பார்த்தேன். மடித்துக்கட்டிய ஊதா கைலி. ஊதா நிற கட்டம்போட்ட சட்டை.
“இப்பவே எதுவும் சொல்ல வேணாம்… நினைச்சு பாத்து சொல்லு… பஸ்லருந்து இறக்குனப்பவே மாப்பிள்ளைய பாத்தேன். ஒனக்கு தோதுபடாது…”என்று சொல்லிவிட்டு தோள் சுமையைச் சரிசெய்துகொண்டு நடந்தான்.
மாப்பிள்ளை வீட்டார் சென்றதும் அத்தையும் சித்தியும் அம்மாவும் அப்பாவும் சாயுங்காலம் வரை பேசிக்கொண்டிருந்தார்கள்.
”கனத்த சரீரமா இருக்காரேன்னு யோசிக்காதீங்க… திருச்சி பி.ஹெச்.எல்ல வேலை. ‘கொமரிக்கு ஒரு பிள்ளை’ன்னு காலகாலமா சொல்லியிருக்கு…ஒரு பிள்ள பிறந்தா இவளும் அவருக்கேத்த மாதிரி ஆயிடுவா…”என்றபடி அத்தை வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தாள். வேலியில் படர்ந்திருந்த பிரண்டை தண்டுகளில் பிஞ்சாகப்பார்த்து ஒடித்துக்கொண்டே,“மூணு பவுனுக்கே நமக்கு திண்டாட்டமா இருக்கு,” என்று சொல்லிவிட்டு பாதையைப் பார்த்து நடந்தாள். சவித்ரிஅத்தை செல்லும் வரை அமைதியாக இருந்த சித்தி,“படிக்க வைக்காமா இருந்துருக்கனும்… இப்ப அதுக்கேத்த ஜோடி பாக்குதுல்ல..பிள்ளைய தப்பு சொல்லமுடியுமா…” என்று அம்மாவிடம் கத்தினாள்.
பின் அமைதியாகி அப்பாவிடம்,“இவ்வளவு பேசுதே சாவித்ரியண்ணி அது மகளுக்கு பாக்கற மாப்பிள்ளைக்கு எத்தனை ரூல்ஸ் போடுது தெரியுமா… அதைப்பத்தி கேட்டோம்ன்னா தாட்சண்யமே இல்லாம நமக்கு விதிச்ச தகுதின்னு ஒன்னு இருக்குல்லேன்னு சொல்லும்,” என்று சொல்லிவிட்டு பெருமூச்சுவிட்ட சித்தி கயிற்றுக்கட்டிலைக் களத்திற்கு நடுவில் இழுத்துப் போட்டு கிழக்கே குன்றைப் பார்த்தபடிப் படுத்துக்கொண்டாள்.
அந்த மாப்பிள்ளை வந்து சென்று ஒரு வாரம் கழித்து சந்திரன் தன்னுடைய ஒன்றுவிட்ட அக்காவுடன் வீட்டிற்கு முறைப்படி வந்து பெண் கேட்டான். அம்மா யோசிப்பதற்குள் அப்பா, “அரசாங்க உத்தியோக மாப்பிள்ளையே காத்திருக்காங்க… வேற எடம் பாருங்க,” என்று அழுத்தமாக தன் மறுப்பைச் சொன்னார். மீண்டும் ஒருமுறை அவனுடைய மாமாவுடன் வந்து பேசினான். அப்பா பிடிவாதமாக மறுத்தார்.
சந்திரனின் அக்கா ஒருநாள் ட்யூஷன் நடத்தும் இடத்திற்கு வந்து என்னிடம் சந்திரனைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று கேட்டாள். சரியென்று சொல்லிவிட்டேன். இரண்டு நாள் கழித்து துறையூர் பெருமாள் கோவிலிற்குச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சந்திரனுடன் அவன் அக்காவின் ஊரான நாகமநாயக்கன்பட்டிக்குச் சென்றேன். அன்றே அங்குள்ள முருகன் கோயிலில் அவன் அக்காவும், மாமாவும், கொழுந்தனும் இருக்க திருமணம் செய்து கொண்டோம். கொழுந்தன் துணைக்கு வர ஊருக்குத் திரும்பி வந்து கைகலப்பாகி இரண்டு வருஷங்கள் பேசாமலிருந்த போது எனக்கு பெரம்பலூருக்கு அருகில் எசனையில் அரசு வேலை கிடைத்து தீனா பிறந்தான்.
காற்று திசை மாறி வீசியது. முகத்தில் விழுந்த முடிக்கற்றையை ஒதுக்கிக்கொண்டு சந்திரனைப் பார்த்தேன். எழுந்து சென்று பக்கத்திலிருந்த கல்குந்தானி நீரில் கைகளைக் கழுவினேன்.
“சாப்பிடறப்ப ஒனக்கு சாப்பாட்டுல கவனமே இல்ல… இங்கியே படுத்துக்கிறியா,” என்று கேட்டுவிட்டு சந்திரன் தட்டைக் கழுவி எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான். பிரதிக்ஷா கம்பளி போர்வையைக் கொண்டு வந்து தந்தாள். வானத்து விண்மீன்களைப் பார்த்தவாறு படுத்துக்கொண்டேன்.
தீனா பிறக்கும் போதே எடை மிக்க குழந்தை. தீனாவை வளர்க்கும் ஆசையில் அம்மா பெரம்பலூருக்கே வந்துவிட்டாள். எங்களைப் பார்க்க வரும்போதெல்லாம் அப்பா அவனை எப்போதும் தூக்கி வைத்துக்கொள்ள விரும்புவார். வளர வளர எதிலும் வேகமும் துரிதமுமாக இருந்தான். அவன் ஒரு செயலைச் செய்யலாம் என்று நினைப்பதற்குள் அவனுடைய உடல் செய்துவிடும். யோசித்து செய்கிறானா என்றே சந்தேகமாக இருக்கும்.
கிரிக்கெட் பந்தால் தலையில் அடிபட்ட அன்று மருத்துவரிடம் தயங்கித்தயங்கி ,“இவனுக்கு அட்ரீனலின் சுரப்பு அதிகமா டாக்டர்,” என்று கேட்டேன்
“கண்டத யோசிக்காதீங்க… வேகமான பிள்ளை … அவ்வளவு தான்…”
“அடிக்கடி அடிபட்டுகறான்,”
“கமெண்ட் பண்ணிக்கிட்டே இருக்கனும்… எதையும் குறிப்பிட்டு இல்ல… கவனமான செய்… மெதுவா… பாத்து போகனும்ன்னு சொல்லிக்கிட்டே இருந்தா போதும்,”
“தம்பி நார்மல் இல்லை… டாக்டர பாருங்கன்னு எங்கூட வேலை பாக்கறவங்க சொல்றாங்க,”
மருத்துவர் என்னைக் கோபமாக பார்த்துவிட்டு சந்திரனிடம் மெதுவாக,“உண்மைய சொல்லனுன்னா முன்னெல்லாம் இந்த குவாலிட்டிக்கு தான் மதிப்பே… ஓடுன்னு சொல்றதுக்கு முன்னாடி பாயற குதிரைக்கு தான் மதிப்பே,”என்றார்.
சந்திரன் எதுவும் பேசாமல் மேஜையிலிருந்த கண்ணாடி குண்டைப் பார்த்தான்.
“நான் சொல்றத நீங்க செய்ங்க… விளையாட்டு பயிற்சிக்கு அனுப்புங்க. நல்லா இருக்கற குழந்தைய நோயாளி மாதிரி ஆக்கிடாதீங்க,” என்றார்.
அன்றிலிருந்து அவனுக்கு முன்னால் என் குரல் பாய்ந்தது. எப்போதும் அனிச்சையாகவே, “தீனா… கவனமா… மெதுவா…” என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். கேட்பவர்களுக்குச் சலிப்பு ஏற்படும் படியாக… ஆனால் கேட்பவனுக்கு அது சலிக்கவே இல்லை. அவனுக்கு அந்த வார்த்தைகள் தேவைப்படுக்கின்றன என்பது அவனே உணர்ந்து கொண்டான். பதின் வயதின் தொடக்கத்தில் முரடன் என்று சொல்லும் அளவிற்கு உடலும் மனமும் வேகமாக இருந்தன. ஒரு விளையாட்டில் ஆர்வமாகச் சேர்வான். மட்டையைத் தூக்கிக்கொண்டு சில நாட்கள். பூபந்தைத் தூக்கிக்கொண்டு சில நாட்கள். கால் பந்தை உதைத்துக்கொண்டு சில நாட்கள் அலைவான். விளையாட்டு பொருட்கள் வாங்கியே திருச்சி மலைகோட்டை முன்பு இருக்கும் கடைப்பையன் சந்திரனுக்கு நெருக்கமாகவே ஆகிவிட்டான்.
ஓடுவது சலிக்கவில்லை என்று அவனே உணர்ந்து பெரம்பலூரின் புறநகர் சாலையில் நீண்ட தொலைவு ஓடத்தொடங்கினான். கால் தசைகள் தொடை சதைகள் இறுகின. ஒருமுறை விடுமுறைக்கு இங்கு வந்த போது வயல்காட்டில் அவிழ்ந்து ஓடிய காளையைத் துரத்திச்சென்று பிடித்தான். எத்தனை பெரியகாளை என்றாலும் அவனால் ஓரிரு நாளில் பழக முடிந்தது. ஒருநாள் பின்வீட்டில் வளர்க்கும் ஜல்லிக்காளையைக் குன்றடியில் அவிழ்த்துவிட்டு ஓடி பிடித்து காளையுடன் அவனும் மூச்சு வாங்க திரும்பி வந்தான். பொங்கல் என்றால் இங்கிருந்து ஒரு மணி நேர தொலைவில் உள்ள தம்மம்பட்டியில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்குச் செல்வான். விடுமுறை காலங்களில் இங்குள்ள மாடுபிடிக்கும் பையன்களுடன் சுற்றுவான். தீனா காளைகளுடன் சுற்றுவதும் சந்திரனுக்குப் பிடிக்கவில்லை.
சந்திரனுக்குத் தீனாவின் வேகமும் சுறுசுறுப்பும் எரிச்சலை தந்தன. சந்திரன் கோபப்பட்டு அடித்தாலும் தீனா சட்டென்று உடலை உதறிக்கொண்டு நகர்ந்து கொள்வான். ஏதோ தவறி இடித்து கொண்டவன் போல தோள்களை உலுக்கிக்கொண்டு எதுவும் பேசமால் சென்று விடுவான்.
பெரம்பலூரில் தந்தைரோவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது தீனா ஒருநாள் மைதானத்தில் மயங்கி விழுந்தான். மூன்று பையன்கள் சேர்ந்து தூக்கினார்களாம். மருத்துவமனையில் ஒய்வெடுக்குமாறு சொல்லி அனுப்பினார்கள். அப்போதெல்லாம் கல்லூரி மைதானமே கதி என்று கிடப்பான். சந்திரன் தீனாவின் ஜாதகத்தை தூக்கிக்கொண்டு அலைந்தான். ஜோதிடர்கள், “ இருவது வயசு பையன் வேகமா இல்லாம எப்படி இருப்பான்,” என்றார்கள்.
அப்பா இறப்பதற்கு முன்னால் பெரம்பலூரில் எங்களுடன் கொஞ்ச காலம் இருந்தார். வீட்டில் தீனாவால் தினமும் வாக்குவாதம் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த அப்பா ஒரு நாள் சிரித்தபடி என்னிடம் தனியாக , “வாய்க்கா தண்ணிக்கு மடைவாய் கட்டலாம்… ஆத்துதண்ணியக்கூட வாய்க்கா பிரிச்சு வுடலாம்…காட்டாற என்ன பண்ண முடியும்…அதுவா போக்கு கண்டுக்கிற வரைக்கும் கூட இரு,” என்றார்.
மீண்டும் ஒருநாள் மைதானத்தில் மயங்கி விழுந்தான். சந்திரன் பெரிய மருத்துவமனை ஒன்றின் மருத்துவரைப் பார்க்க தீனா பெயரைப் பதிவு செய்துவிட்டு வந்தான். தீனா சிரித்துக்கொண்டு, “ மயக்கம் வந்ததுக்கே இவரு இப்படி ஆயிட்டாரே…அவருக்கு எதுக்கெடுத்தாலும் பயம்மா ,” என்று கேலி செய்தான்.
மருத்துவமனையில் அனைத்து சோதனைகளும் செய்தார்கள். மருத்துவர் தீனாவை வெளியே இருக்க சொல்லிவிட்டு எங்களிருவரிடமும் இரத்தத்தில் வெள்ளையணுக்கள் அதிகமாக இருக்கிறது என்று தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என்றார். குடும்பத்தில் யாருக்காவது இருந்ததா என்று கேட்டார்.
வீட்டிற்கு வந்து அம்மாவிடம் தனியாக பேசிக்கொண்டிருக்கும் போது அம்மா என்னிடம் , “ நம்ம வம்சத்துல பிள்ளைக பிஞ்சுல உதுந்து போனதுண்டு… நம்ம குடும்பத்துல விழுந்த சாபம்…கத்திய தூக்கிட்டே ஆயுசு முழுக்க அலஞ்சானுங்கன்னு எங்க மூத்தாத்தா சொல்லும்,” என்று சொல்லிவிட்டு குலதெய்வத்திற்குப் படையல் போட வேண்டும் என்றாள்.
அம்மா பேசப்பேச குருதியில் எதுவோ இருந்திருக்கிறது என்று புரிந்த கணத்தில் அடிவயிற்றில் ஒரு குளிர்ச்சி நெளிந்து ஏறியது. சந்திரன் ஒருநாளில் ஆள் சோர்ந்து போனான். ஒரு மாதத்தில் வேலைக்குச் செல்வது குறைந்தது. சந்திரன் மருத்துவமனைக்குத் தீனாவை அழைத்து சென்று கொண்டிருந்தான். அவர்கள் வாரத்திற்கு ஒருமுறை இரத்த பரிசோதனை செய்து கொண்டே இருந்தார்கள்.
“ம்மா… எல்லாம் சரியா போயிடும்,” என்பான். உடல் வலுகுறைவதைச் சொல்லி யாரையும் பதட்டப்படுத்தவில்லை. எதற்கு முன்பாகவோ திமிறி நிற்பவனை போலவே இறுதி வரை இருந்தான். அந்தக் கடைசி நாளில் , “ம்மா மயக்கம் வர மாதிரி இருக்கு… ஹாஸ்பிடல் போலாம்,” என்று சொல்லிவிட்டு, “ பயப்படாத என்ன… பணத்தை எடுத்துக்கோ… கார்க்கு சொல்லட்டா,” என்றான்.
அந்த ஸ்டெச்சர் முழுவதும் கொள்ளாமல் படர்ந்து திமிறும் உடல் மனதிற்குள்ளேயே கிடந்து ஒரு வண்டு போல குடைந்துகொண்டிருக்கிறது. அவன் இறந்த புதிதில் பள்ளிக்கூடம் சென்றால் மனம் மாறும் என்று அனைவரும் கூறினார்கள்.
தேன் கூட்டைத் தவறி கல்லால் அடித்ததைப் போன்ற உணர்வை தான் இன்று வரை பள்ளிக்கூடம் தருகிறது. அவன் வெவ்வேறு வயதுகளில் அமர்ந்திருக்கிறான். ஓடுகிறான். சிரிக்கிறான்.எதிர்த்துபேசுகிறான். அந்தக் கண்களும் சிரிப்பும் சட்டென்று வராண்டவில் எதிரில் வந்து பதைக்க வைத்தது. பள்ளியில் எப்போதும் பதற்றத்துடன் இருக்கும் என்னைக் கவனித்த அமலோற்பவம் மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள்.
மருத்துவர் ஒரு மணி நேரம் போல பேசினார். தினசரி வாழ்க்கையைச் சமாளிக்க முடியவில்லை என்றால் வர வேண்டும் என்றார். அதற்கு பின்பு யாருக்கும் முன்பாக அழுவதைக் குறைத்துக்கொண்டேன். பதறாமல் கரியங்களைச் செய்தேன். ஆனால் மனதை அவன் குடைந்து கொண்டே இருந்தான்.
பள்ளி மைதானத்தில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் தனியாக அமர்ந்திருக்கும் புதுப்பழக்கம் வந்தது. அமலோற்பவம் என்னை எப்படியோ உணர்ந்து கொள்வாள். காற்று உடலில் மோதுவதையும் சூரியன் உடலைத் தொடுவதையும் தண்ணீர் கால்களைக் கூசச்செய்வதையும் இப்படி இது வரை உணர்ந்ததில்லை. வயல்காட்டில் மலையடிவாரத்தில் கிடந்தவள் தான். அவன் வந்து போன பிறகு வாழ்க்கை வேறாகிவிட்டது.
அவனை எப்படியோ இந்த மலையடிவாரத்துடன் தான் என் மனம் இணைத்து வைத்திருக்கிறது. இந்தப் பொங்கலிற்கு இங்கு வர வேண்டும் என்று சந்திரனும் பிரதிக்ஷாவும் மார்கழி நிறைநாழி வைத்த போதிலிருந்தே சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
அவள் வயதெய்திய ஆண்டு பொங்கல் படையலன்று மாரியம்மன் கோயிலிற்குப் பித்தளை மணி வாங்கி வைத்தோம். அந்தப் பொங்கலிற்கு இரண்டுநாள் முன்பு பாதைக்கு அந்தப் பக்கமுள்ள வயல்காரர் மகளிற்குப் பொங்கல் சீர் கொண்டு செல்ல மாட்டுவண்டி பூட்டினார். நெல்லும் அரிசியும் வெல்லமும் பானைகளும் கரும்பும் விறகுகட்டுமாக வண்டி நிறைந்திருந்தது. வயல் பள்ளத்திலிருந்து பாதைமேட்டிற்கு ஏறும் போது ஜோடிமாடு ஒன்று ஏறமுடியாமல் மண்பாதையில் மண்டிப்போட்டு படுக்க இன்னொன்றும் படுத்துவிட்டது. ஏற்றிய சீரை இறக்கக்கூடாது என்று அந்த அம்மாள் ஒரே அடம். என்ன போக்கு காட்டியும் மாடு எழுந்திருக்கவில்லை. இந்த மாதிரி சமயங்களில் மண்டியிட்டு படுத்த மாடு எழுந்தால் தான் இன்னொரு மாடும் எழுந்திருக்கும். அதை எப்படியும் அசைக்க முடியாது என்பதால் மண்டியிட்ட காளையை மிரட்டி பார்த்தார்கள். பின்பு அங்கிருந்த புங்கைமரத்தின் குச்சியை எடுத்து அடித்ததும் காளை அடிக்குரலில் முனகியது.
தீனா ஓடிப்போய், “காளை எந்திரிக்கனும்னா அந்த விறகுகட்டை கீழ எறக்குங்க,”என்றான்.
அவர் பதில் சொல்வதற்குள் அந்த அம்மாள் பலங்கொண்டு விறகுகட்டை உருட்டி விட்டது. படுத்த மாட்டின் பக்கம் இருந்த நுகத்தை மெதுவாக தூக்கினான். அதன் ஜோடிமாடு தலையை ஆட்டிக்கொண்டு எழுந்தது. தூக்கிய நுகத்தைத் தோளில் வைத்ததும் வண்டி நிலைக்கு வந்தது. பாதைவரைக்கும் வண்டியை இழுத்து வந்து விட்டான். அவன் முதன் முதலாக மாட்டுவண்டி ஓட்டியது அன்று தான்.
பின்வீட்டுக்கொட்டிலில் இரும்பு பால்வாளியைக் கல்தரையில் இழுக்கும் சத்தம் கேட்கிறது. பால்காரன் பால் கறக்க வந்துவிட்டான். மணி மூன்று இருக்கும்.
சந்திரன் கட்டிலிற்கு அருகில் வந்து நின்றான்.
“பனி அதிகமா இருக்கே… உள்ள வந்து படு,”
“இங்கியே படுத்துக்கறேன்,”
பெருமூச்சு விட்டபடி சற்று நேரம் நின்றுவிட்டு உள்ளே சென்றான்.
மலையடிவார பூச்சிகளின் சத்தம். சற்று தள்ளி இருக்கும் பின் வீட்டில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. பால்வண்டியின் சத்தம் தொலைவில் தேய்ந்து மறைந்தது. எங்கோ இருப்பதை போல இருக்கிறது. இப்போது எங்கிருந்தாலும் அப்படித்தான் இருக்கிறேன். பிறந்து வளர்ந்த இந்த வீடும் கூட அன்னியமாக இருக்கிறது. வெள்ளையடிக்கப்பட்ட சுவரை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
தம்மப்பட்டி ஜல்லிக்கட்டிற்குச் செல்லும் காளைகளின் காலடி சத்தங்களும் மணிசத்தமும் கேட்டுக்கொண்டேயிருந்தன. எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை.
காலையில் எழுந்திருக்கும் போது சந்திரன் பாதைக்கு அந்தப்புறமிருந்த வயல்மோட்டாரிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கல்குந்தானியிலும் பேரலிலும் ஊற்றிக்கொண்டிருந்தான். பறவைகளின் சத்தம். குன்றின் பக்கவாட்டிலிருந்து சட்டென்று சூரியன் தலைக்கு மேல் வந்து கண்களைச் கூசச்செய்தது. எத்தனை நாளாயிற்று… சட்டென்று வெளிச்சம் வர காடே வேறு மாதிரி ஆகியது. சூரியன் தொட்டு தொட்டு காட்டை, மலையை மலர்த்திக்கொண்டிருந்தது.
விரிந்து கிடந்த களத்தில் தண்ணீர்தெளித்து கோலமிட்டு சாயங்காலமாக ஐந்து கற்களைக் கூட்டி இரண்டு அடுப்புகள் வைத்து பொங்கல் வைத்துக்கொண்டிருந்தேன். மேற்கே கொல்லிமலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான் சூரியன். மேற்கு வானத்தில் அந்தியின் மஞ்சள் வெளிச்சம் நிறைந்து வழிந்தது.
கையிலிருந்து கரண்டி தவறி அடுப்புக்கல்லில் இடித்து சத்தமெழுப்பியது.“பதறாம செய்…”என்ற சந்திரன் வேலை செய்துகொண்டே என்னைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
பின்வீட்டிலிருந்து ‘பொங்கலோ பொங்கல்’ என்று குழந்தைகள் பெரியவர்களின் குதூகல குரல்கள் கேட்டன. இங்கும் பானை வழிந்து கொண்டிருந்ததை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தோம். அரிசியை இரண்டு பானைகளிலும் போட்டு கிண்டினேன். வேப்பமரத்தடி கல்லில் பிரதிக்ஷா மலையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.
சந்திரன் கரும்புகளை வீட்டு சுவர் ஓரமாகக் கட்டி தீனாவின் படத்தைப் பலகைக்கட்டையில் வைத்து சுவரில் சாய்த்தான். சாணிமெழுகிய இடத்தில் வைத்திருந்த தேங்காய் கும்பத்திற்கு நனைத்து காய்ந்த புதுவேட்டி சேலைகளை முறுக்கி சுற்றிவைத்தான். பிரதிக்ஷா தீனாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே சிறிய பூக்கோலம் வரைந்தாள்.
அவள் கோலமிட்ட இடத்தில் இலைகளை விரித்தேன். சந்திரன் மஞ்சள் கிழங்குகளைக் கட்டிய பானைகளைத் தூக்கி வந்து பொங்கலை இலைகளில் விளம்பினான். விளம்பிய பொங்கலின் நடுவில் உடைத்த அச்சு வெல்லத்துண்டுகளை வைத்தான். நான் குத்து விளக்கை ஏற்றி வைக்கும் நேரம் அந்தி சூரியன் மேற்கு மலையில் மறைந்து ஔி மட்டும் வானத்தில் எஞ்சி விரிந்தது. பறவைகள் கூடு திரும்பும் கலைந்த சத்தம். இலையில் பொங்கலின் நடுவில் வைக்கப்பட்ட வெல்லம் பொங்கலின் சூட்டில் உருக்கிக்கொண்டிருந்தது.
சந்திரன் கும்பமாக நின்ற முன்னோர்களுக்குக் சூடம்காட்டிவிட்டு வெல்லமிட்ட பொங்கல் இலையைக் கையிலெடுத்து வெண்பொங்கலின் ஒரு கைப்பிடியையும் சேர்த்தான். காட்டின் விளிம்பிற்குச் சென்று நின்றான். அவன் நடந்த அதிர்வில் சாம்பல் நிற முயல் ஒன்று பதறி ஓடியது. வாகைமரத்தில் அணில் ஒன்று ஏறி இறங்கி மறைந்தது. ஒரு கவளத்தை உருட்டி எடுத்து , “பட்டிப் பெருக… பச்சையெல்லாம் செழிச்சு வளர…பொங்கலோ பொங்கல்,” என்று சொல்லி காட்டிற்குள் மூன்று திசைகளிலும் வீசிவிட்டு களத்தில் நடந்து மேற்கு திசை ஓடையை நெருங்கினான்.
ஜல்லிக்கட்டிற்குச் சென்ற காளைகள் திரும்பி கொண்டிருந்தன. கலைந்த கொம்பு அலங்காரங்களை ஆட்டிக்கொண்டு நடந்தன. சலங்கைகள் சத்தமிட பாதை கலகலத்துக்கொண்டிருந்தது. ஒரு கறுப்புக்காளை செறுக்கடித்து நின்று திரும்பி பார்த்து கொம்புகளை ஆட்டியது. பக்கத்தில் மாட்டுக்காரனைக் காணோம்.
அந்தியின் மணிவெளிச்சத்தில் ஓடை பாலத்தைக் கடந்து மணிக்கண்களை உருட்டி பார்த்துக்கொண்டு, நெற்றி சலங்கை ஒலியெழுப்ப ,கழுத்து மடிப்பு தசைகளும் திமிலும் அசைய எங்களை நோக்கி நடந்து வந்தது. நடையில் வேகம் இல்லை. சந்திரன் கையிலிருந்த படையல்இலையைக் காளையை நோக்கி நீட்டினான். காளை நீட்டிய இலையை வாயில் கவ்வி சுருட்டி இழுத்து மென்றது.
எனக்கு அடிவயிற்றிலிருந்து ஒரு கூச்சம் மேலேற என்னையறியாமல், “பொங்கலோ பொங்கல்,”என்றபடி கால்கள் தளர்ந்து பக்கத்திலிருந்த பாறைக்கல்லில் அமர்ந்து கொண்டேன். சந்திரன் ஓடிப்போய் வாளியில் தண்ணிரை எடுத்து வந்து வைத்து, “வாய் பூசு டேய்,” என்றபடி காளையைப் பார்த்து நிறைந்த கண்களுடன் சிரித்தான். பிரதிக்ஷா இன்னொரு படையல் இலையைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தாள்.
