
“விண்மீன்களே உங்கள் ஒளியை ஒளித்து வையுங்கள். அவை எனது ஆழத்து இருண்ட இச்சைகளின் மீது ஒளிபாய்ச்சாமல் இருக்கட்டும்” இருள் மண்டியிருந்த மேடையில் முகத்தில் வட்ட மின் விளக்கின் ஒளி விழ, நீல நிழல் தரையில் படர, மெக்பெத் தனித்து தனது மன குரளுக்குச் செவி சாய்த்தபடி நின்றிருந்தான்.
நாடகம் தொடங்கி ஏழெட்டு நிமிடங்கள் ஆகியிருக்கலாம். என்னையும் இனியனையும் அரங்கத்தின் வாயிற்காப்பாளர் அழைத்து சென்று முன்வரிசையில் எங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர வைத்தார். நாடகத்தில் பதிந்திருந்த பார்வையாளர்களின் விழிகள் எங்கள் மீது ஒரு கணம் திரும்பியது சற்று சங்கடமாக இருந்தது. சட்டென அமர்ந்துவிட்டோம். அருகில் அமர்ந்திருந்த யாரிடமோ இனியன் கைகொடுத்தார். நான் நாடகத்தில் ஆழ்ந்து விட்டேன்.
தமிழில் ஷேக்ஸ்பியர் நாடகம் பார்ப்பது இதுவே முதல் முறை. சற்றே பள்ளி ஆண்டுவிழா நாடகத்தின் சாயல் இருந்தாலும் கூட அந்த அரங்கமும் அமைப்பும் அதை வேறொரு அனுபவமாக ஆக்கியது. நடிகர்கள் பாத்திரங்களில் தங்களை உணரவில்லை என்பது புலப்பட்டது. ஆனால் தமிழ் வசனங்கள் கூர்மையாக இருந்தது.
லேடி மெக்பெத் “அதிகாரத்தை அடையும் குறுக்கு வழியை தேராத அளவிற்கு கருணையே பாலாக சுரந்து மெக்பெத்தை நிறைந்திருக்கிறது,” என்றாள். அப்போது அவள் முகத்தில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்தது.
இங்கே வருவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன் “உங்களுக்கு எழுத்தாளர் ராமமூர்த்தியை தெரியுமா?” என இனியன் என்னிடம் கைபேசியில் கேட்டபோது அந்தப் பெயரை நினைவடுக்கில் துழாவினேன். “வேல ராமமூர்த்தியா?” என்று கேட்டவுடன் “இங்கே வந்து இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. நீங்கள் அரிபுரத்தின் இலக்கியவாதிகளைத் தெரிந்துகொள்ளாமல் அதன் மரபை எப்படிப் புரிந்து கொள்வீர்கள்?” என்ற போது அவரது குரலில் வெளிப்படையாகவே எரிச்சல் வெளிப்பட்டது. “அவ்வளவு முக்கியமானவர் என்றால் அரிபுரத்தவர்கள் தான் அவரை எங்களிடம் கொண்டு சேர்த்திருக்க வேண்டும்” என்றேன் சீற்றத்துடன். மறுமுனையில் அசௌகரியமான மௌனம் நீண்டது. இப்படி துடுக்காகப் பேசியிருக்கக் கூடாது. இலக்கியப் பாடம் எடுக்க கடல் கடந்து நான் வருவதற்கு முக்கிய காரணம் இனியன்தான். அரிபுரத்தில் எப்படியாவது தமிழ் தழைக்க வேண்டும் என்று முனையும் வெகு சிலரில் ஒருவர். இருந்தவரை கிழித்தது போதும், இப்போதே இந்தியாவிற்குக் கிளம்பு என்று சொல்லிவிடுவாரோ என்று அந்த இடைவெளியில் கற்பனையில் ஆழ்ந்தேன். மன்னிப்பு கேட்பது, பேச்சை மாற்றுவது போன்ற உத்திகளை மனம் பரிசீலித்தாலும் ‘உங்கள் பணம், வசதி வாய்ப்பை விட என் தன்மானம் பெரிது. காசுக்கு வழியில்லாம இங்கே வரவில்லை’ என்று வசனம் பேசிவிட்டு விமானம் ஏற வேண்டும் என்ற எண்ணமே வலுவாகி கொண்டிருந்தது. அப்போது அவர் முகம் எப்படி மாறும் என்று மனக்கண்ணில் உருவகித்தேன். ஆனால் அவரே நிதானமான குரலில் “சரிதான்” என்ற போது இறுக்கம் தளர்ந்து, சற்று ஏமாற்றமாக உணர்ந்தேன். “புதுமை விரும்பி என்ற பெயரில் எழுதியவர். நிறைய முக்கியமான மொழிபெயர்ப்புளைச் செய்தவர். அவர் உங்களைக் காண விரும்புகிறார். நானே ஒரு மணி நேரத்தில் வந்து அழைத்து செல்கிறேன். பிறவிஷயங்களைப் பயணிக்கும் போது பேசிக் கொள்வோம்,” என்றார்.
பெரு மழை பிடிப்பதற்கு முன்பான மெல்லிய தூறல் விழுந்து கொண்டிருந்தது. மறுநாள் தமிழ்ச் சிறுகதைகளின் வரலாறு குறித்து மூன்று மணி நேர வகுப்பெடுக்க வேண்டும். அதற்கென தயாரித்த ஸ்லைடுகளை சரிபார்க்கத் தொடங்கினேன். இனியனுடன் வெளியே சென்றால் திரும்பிவர இரவாகி விடும். அரிபுரத்தின் பழைய கதைகள், அங்கே தமிழை வளர்க்க அவருக்கு இருக்கும் கனவு திட்டங்கள் என உரையாடல் நீண்டு விடும். “சும்மா இட்லி தோசை திங்காதிங்க” என்று துருக்கி, ஜப்பான், மெக்சிகன், கிரேக்க உணவுகள் கிடைக்கும் கடைகளுக்கு அழைத்துச் செல்வார். அவர் வருவதற்குள் வகுப்புக்கான தயாரிப்பை முடித்துவிடலாம் என சாளரத்தை நோக்கியபடி அமர்ந்து கொண்டு மடிக்கணினியில் வேலை செய்யத் தொடங்கினேன்.
மாடி வீட்டு வில்லியம் குடை பிடித்துக்கொண்டு அவரது வழக்கமான கோட்டு சூட்டு கோலத்தில் எனக்குக் கண்ணாடி சாளரம் வழியாக கை காண்பித்து விட்டு நகர்ந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பான மாலை நடையின் போது ஃபூனான் தோட்டத்திற்கு எதிரே வளாகத்தில் உள்ள பெயரைக் காட்டி “இவர் யார் தெரியுமா?” என்று வில்லியம் கேட்டது நினைவுக்கு வந்தது. “வேறு யார்? ஏதோ ஒரு சீன புரவலர்” என்றேன் அசட்டையாக. “இல்லை. இவர் சிம் ஜு கே. அரிபுரத்தின் தொடக்கக் கால தலைவர்களில் ஒருவர்” என்றவர் அதற்கடுத்த வரியைக் கம்மிய குரலில் ரகசியம் போல சொன்னார். “நம் பல்கலைக்கழகத்தில் ஒரு காலத்தில் மாணவர் போராட்டம் ஒன்று நடந்தது தெரியுமா?”
“தெரியாது” என்று சொல்லிவிட்டு அவரது முகத்தை ஆவலோடு பார்த்தேன். “இன்னொரு சமயம் பகிர்கிறேன்” என்றார். இப்படி இன்னொரு சமயம் சொல்வதற்காக அவர் அரைகுறையாக விட்டு வைத்த ரகசியங்கள் மட்டும் இருபதுக்கும் மேலிருக்கும். எப்படியும் ஒரு நாள் அவரிடமிருந்து அவற்றை கறந்திட வேண்டும்.
பாதி வேலை முடிந்திருக்கும், அதற்குள் இனியனின் வண்டி வாசலில் வந்து நின்றது. எதற்கும் இருக்கட்டும் என்று மடிக்கணினியையும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன். அரிபுரத்தின் சாலைகளைப் பார்த்தபடி அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு வந்தேன். என் மனம் அவருடைய சொற்களிலிருந்து நழுவி புறக்காட்சியில் லயித்தது. ஒன்றுபோலவே தோன்றிய பல அடுக்குமாடி கட்டிட வரிசைகளில் கடந்து சென்றோம். புதுமை விரும்பிக்கு வயது 90க்கு மேல். அரிபுரத்து தமிழ் வானொலியில் பணியாற்றியவர். அதற்கென பல குடும்ப சித்திரங்களை நாடகங்களாக ஆக்கியவர் என்பதை இனியன் வழி தெரிந்து கொண்டேன். அந்த நாடகங்கள் ஏதும் இப்போது பதிப்பில் இல்லை என்ற போதே அவரைச் சந்திக்க வேண்டும் எனும் ஆர்வம் வடிந்துவிட்டது. வானொலி நாடகங்கள், குமுதம், ஒருபக்க கதைகள் போன்றவை என்பதுதான் என் எண்ணம். மரியோ வர்கோஸ் லோசாவின் ஒரு நாவலில் வரும் வானொலி நாடக எழுத்தாளர் எழுதும் ‘பல்ப்’ நாடகங்களின் சித்திரம் மனதிற்குள் எழுந்தமைந்தது. “அரிபுரத்தின் முன்னோடி மூத்த எழுத்தாளர்” என்றது எனக்குள் புன்னகையைக் கிளர்த்தியது.
கிளம்புவதற்கு முன், கடந்த ஆண்டு இதே பணிக்காக சில மாதங்கள் இங்குத் தங்கிய மூத்த எழுத்தாளரிடம் அரிபுரத்திற்கு நான் எப்படித் தயாராக வேண்டும் என யோசனை கேட்கச் சென்றேன். ‘ஜானி வாக்கரோடு ஓரிரவு தங்குவதற்கு தோதாக வரவும். பேசுவதற்கு நிறைய இருக்கிறது’ என செய்தி அனுப்பினார். குடி அமர்வு நள்ளிரவுக்கு மேல் நீண்டது. அதுவரை உள்ளூர் இலக்கிய புறணிகளைப் பேசி புளங்காகிதம் அடைந்துகொண்டோம். அரிபுரம் பற்றி பேச்செடுக்கும் போது முழு போதையில் தள்ளாடினார். வாய் குழறியது. “உண்மைய சொல்லட்டா… எனக்கு எப்பவுமே ஒரு வருத்தம் உண்டு, புதுமைப்பித்தன் காலத்துல பொறந்திருக்கணும்னு நெனைச்சிக்குவேன். சீக்கு வந்து பட்டினி கிடந்து செத்திருப்பேன்தான். ஆனா இன்னைக்கு அம்புட்டு பேரும் புதுமைப்பித்தன, குபராவ, அழகிரிசாமிய எல்லாம் வாசிக்கிறானுக. வானாளவ உசந்து சாவ ஜெயிச்சு நிக்கிறானுக. எவனையாவது அண்டி வாழ்ந்தே என் காலம் ஓடிருச்சு. ஒரு பாட்டில் சரக்குக்காக அம்மணமா ஓடச்சொல்லுற காரிய கிறுக்கனுங்க கையில மாட்டி சாவுறேன்” என்று கண்கள் சிவக்க என்னை நோக்கினார். “நான் கிளம்புறேன் அண்ணாச்சி” என்றதும் “உக்காரு உக்காரு. அதுக்குள்ள கிளம்புனா எப்புடி? இதெல்லாம் எதுக்கு சொல்லுறேன், அரிபுரத்துக்கு போனதக்கப்புறம் அங்க பொறந்திருக்கணும்னு தோணுச்சுடா. அங்க கிடைக்கிற மாதிரி வெளிச்சம் எழுதுறவனுக்கு இங்கயெல்லாம் கிடைக்கவே கிடைக்காது. நம்ம முன்னோடிங்க வெளிச்சத்தை பாவமா பாத்தாங்க. அதையே நம்ம மண்டையிலயும் ஏத்திட்டாங்க. அதையெல்லாம் உதறனும். தெருவுக்கு பேரு வெச்சிருப்பாய்ங்க. இப்புடி தெருத்தெருவா அலைய வேண்டியதில்ல. நாலு கதை எழுதினா போதும். அப்புறம் எப்படியும் வயசாயிரும். மூத்த எழுத்தாளரா ஆயிரலாம். நாலுல ஒன்னு நல்லாயிருந்தா போதும் நீ முன்னோடி. நம்ம ஊரு மாதிரி மயிரப் பிளந்துகிட்டு அடிபிடி சண்டையெல்லாம் அவசியமில்ல பாரு. இருபத்தஞ்சு புஸ்தவம் போட்டாலும் நாம இருக்குறது எவன் கண்ணுக்கும் தெரியாது. புழுத்து சாவ வேண்டியதுதான். செத்தப்புறம் மலர் வளையம் வைக்க ஆஜாராயிருவானுக,” அவரது குரல் மெல்ல புலம்பலாக தேய்ந்து அப்படியே தரையில் சாய்ந்து உறங்கிப்போனார்.
காலையில் அங்கிருந்து விடைப்பெற்று கிளம்பும்போது “சொன்னதையெல்லாம் மனசுல வச்சுக்காத. அனுசரனையா நடந்துக்க. நல்ல ஊரு. சந்தோஷமா போயிட்டு வா,” என்றார். வாயில் வரை வந்தவர் தயங்கியபடி “அரிபுரத்தை பத்தி நான் சொன்னேன்னு எங்கயாவது எதையாவது எழுதி வச்சிடாத. வரும்படிக்கு ஆப்படிச்சுருவாங்க,” என்றார்.
அரிபுரத்து முன்னோடிகள் என இனியன் கைகாட்டிய சிலருடைய கதைகளை நான் வாசித்திருக்கிறேன். கறாராகச் சொன்னால் தமிழ் இலக்கிய முன்னோடிகளின் ஆகச் சுமாரான கதைகளை விடவும் சுமாரானவை என்பதே என் அவதானம். “அரிபுரத்து இலக்கியத்தின் சிக்கல் உங்கள் முன்னோடிகளிடமிருந்தே தொடங்குகிறது” என்றால் “உங்களுக்கு இங்கே உள்ள நிலைமை புரியாது. வயிற்றுப்பாட்டுக்காக நாடுவிட்டு நாடு வந்தவர்கள்” என்பார் இனியன். “இதெல்லாம் சாக்கு. புதுமைப்பித்தன் காசநோய் வந்து இருமியே செத்தான். அங்கே மட்டும் என்ன பாலாறும் தேனாறுமா ஓடியது?” என்பேன். “வேற வழியில சம்பாதிக்காம, எழுத்த மட்டும் நம்பி வாழ அங்க ஒரு வாய்ப்பாவது இருந்தது. இங்க அதெல்லாம் எந்த காலத்துலயும் நடக்காது” என்பார்.
நகர் மத்தியில் அரிபுரத்தின் நதிக் கரையோரம் முழு டுரியான் பழங்களின் வடிவில் கட்டப்பட்ட ‘ஓரியான்’ உள்ளரங்குக்கு அழைத்துச் சென்றார். ரயிலில் அப்பகுதியைக் கடக்கும் போதெல்லாம் அந்த விந்தையான கட்டடத்தைப் பார்த்திருக்கிறேன். அதன் அழகிய அமைப்பு என்னை ஈர்த்தாலும் அதன் ஆடம்பரம் மீதான ஒருவித விலக்கத்தை வளர்த்துக் கொண்டேன். நமக்கு எட்டாதவை மீது நாம் வளர்த்துக் கொள்ளும் ‘இந்தப் பழம் புளிக்கும்’ வகையிலான விலக்கம். “நாம் அவரை சந்திக்கவில்லையா?” என்று கேட்டேன். “அவரைச் சந்திக்கத்தான்” என்றார். அப்படியாகத்தான் ‘மெக்பெத்’ நாடகத்தைப் பார்க்க நாங்கள் வந்து சேர்ந்தோம்.
நிறைய வசனங்கள் சட்டென மனதில் ஒட்டிக்கொண்டன. ஸ்காட்லாந்து அரசர் டங்கனை கொலை செய்தபிறகும் முன்பும் மெக்பெத் வெளியே எப்படித் தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று சீமாட்டி அவனுக்கு ஆலோசனை சொல்கிறாள். “தீங்கறியா தாழம்பூவைப் போல தோன்று, ஆனால் அதற்குள் மறைந்திருக்கும் விஷப்பாம்பாக நீ இரு,” தாழம்பூ என்று ஷேக்ஸ்பியர் எழுதியிருக்க வாய்ப்பில்லை. மூலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்பதால் குறித்து வைத்துக் கொண்டேன். எனினும் அந்தச் சொற்பிரயோகத்தில் உள்ள கற்பனை எனக்கு வியப்பூட்டியது.
மெக்பெத் சூனியக்காரிகளின் ஆரூடத்தை முழுமையாக நம்பினான். பதவியைத் தக்க வைக்க வேண்டும், தனக்குப் பின் தன் சந்ததியினர் ஆள வேண்டுமே எனும் அச்சத்தால் பீடிக்கப்பட்டவனாக ஒவ்வொருவரையும் கொல்கிறான். கொல்லும் தோறும் அச்சத்தில் இன்னும் இன்னும் ஆழ்கிறான். “என் மனம் முழுவதும் தேள்கள்” என்று அவன் அரற்றுகிறான். சூனியக்காரிகளின் ஆரூடத்துக்குச் சாட்சியாக இருந்தவன் மெக்பெத்தின் சகாவான தளபதி பேங்கோ. சூனியக்காரிகள் பேங்கோ சந்ததியினர் அரசராவார்கள் என்று ஆரூடம் சொல்லியிருந்தாலும் கூட அவர்களுடைய சொற்களால் தீண்டப்படாதவனாக இருந்தான். அவனையும் அவனது மகனையும் கொல்ல கொலைகாரர்களை ஏவுகிறான். மகன் தப்பித்துக்கொள்ள பேங்கோவை கொல்கிறார்கள். மெக்டஃப்பை கொல்ல முயன்று அவனது மனைவி பிள்ளைகளைக் கொல்கிறான் மெக்பெத். ‘வாழ்வென்பதுதான் என்ன? முட்டாள் சொன்ன கதையல்லவா! பொருளற்ற வெற்று கூச்சல்களும் உணர்வுகளும் மட்டுமே மிச்சம்’ என்பதை ஒரு மாதிரி உணர்ந்து கொள்கிறான் மெக்பெத். ஆனால் அந்தக் கண்டடைதல் அவனை இம்மியும் அசைக்கவில்லை. கொடுங்கோலர்கள் ஏதுமறியா மூடர்கள் இல்லை. செயலின் விளைவுகளை நன்கறிவார்கள். அதிகாரம் செய்தல் ஒரு பழக்கமாக, அவனை அடிமைப்படுத்துவதாக மாறுகிறது. அது அவனை ஆட்கொண்டு முழுமையாக இயக்குகிறது.
நாடகம் முடிந்ததும் அரங்கத்தில் விளக்கு போட்டார்கள். நடிகர்கள், இயக்குநர், அரங்கமைப்பாளர் ஆகியோர் மேடையில் தோன்றி தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு நன்றி தெரிவித்தார்கள். இறுதியாக நாடகத்தை மொழிபெயர்த்த ‘புதுமை விரும்பி’ பெயர் அழைக்கப்பட்டது. இனியன் தன் அருகே அமர்ந்திருந்த முதியவரை மெதுவாக மேடையேற்றினார். நேர்த்தியாக உடையணிந்தவர் மேடையில் கைக்கூப்பியதும் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். வட்டக் கண்ணாடியும் அடர்ந்து வெளுத்த புருவங்களும் மெலிந்த உடல்வாகும் கொண்டவர். அசோகமித்திரனின் புகைப்படங்களைப் பார்க்கும்போதெல்லாம் அவர் முகத்தில் ஒரு சோகம் படர்ந்திருப்பதாக தோன்றும். வெறும் சோகம் அல்ல, இந்த வாழ்வு இப்படிதான் இருக்கும் என்பதை உணர்த்தும் வாஞ்சை கூடிய சோகம். புதுமை விரும்பி முகத்திலும் அதே சாயல் படிந்திருந்ததாகத் தோன்றியது.
“அவரை வீட்டில் விட்டுவிட்டு நாம் அரேபிய உணவகத்துக்கு செல்லலாம்” என்று கிசுகிசுத்தார். புதுமை விரும்பி என்னைப் பார்த்து சிரித்தார். தொண்டையைக் காட்டி “போய்விட்டது” என்றார். அந்த ஒரு சொல்லே மிகவும் பிரயாசைக்குப் பின் தான் வெளிப்பட்டது. எவ்வளவு காலமாக என்று கேட்க நினைத்து அவரைச் சிரமப்படுத்த வேண்டாம் என்று எண்ணி கேட்காமல் விட்டேன். அவரே புரிந்து கொண்டவராக “நாப்பது நாப்பதஞ்சு வருஷத்துக்கு முன்ன தொடங்கி இப்ப படிப்படியா மோசமாகிடுச்சு. வீட்டுக்கு வாங்க” என்றார். நாண் தளர்ந்து ஒரு மாதிரி அதிர்ந்து நடுக்கத்துடன் ஒலித்தது அவரது குரல். முதல் சொல் மட்டும் துலக்கமாகப் புரிந்தது. மீதி சொற்கள் காற்றால் உண்ணப்பட்ட எச்சங்களாக மட்டுமே எஞ்சின. எனினும் சற்று கூர்ந்து கவனித்தால் புரிந்து கொள்ள முடியும். சொற்களின் இடைவெளிகளைச் சைகைகளைக் கொண்டு நிரப்ப முயன்றார். வண்டியில் ஏறியதும். “நாடகம் நன்றாக இருந்தது” என்று சம்பிரதாயத்துக்குச் சொன்னேன். “ம். நடிச்சவங்க கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். ஸ்கூல் நாடகம் போல இருந்தது” என்றார். புன்னகையுடன் ‘ஆமாம்’ என்று தலையசைத்தேன். “முன்னாடியெல்லாம் அய்யா நடிக்கவும் செய்வார்” என்றார் இனியன். “அப்படியா!” “ஆமா எல்லா நாடகங்களையும் ஏதோ ஒரு சின்ன பாத்திரம் எடுத்துக்குவார்” “மெக்பெத்தில் என்ன கதாபாத்திரம் எடுத்துக்குவீங்க?” “பேங்கோ” என்றார் புன்னகையுடன். அந்த நொடியில் அவர் எனக்கு அணுக்கமானார்.
“ஷேக்ஸ்பியரோட 18 நாடகங்களை அய்யா மொழிபெயர்த்திருக்கிறார். நீங்கள் அவருடைய எழுத்துக்களை இந்தியாவில் பதிப்பிக்கனும்னு விரும்புறார்” என்றார் இனியன். “எனக்கு ஒரு சந்தேகம். தாழம்பூன்னா ஷேக்ஸ்பியர் குறிப்பிடுகிறார்?” “இல்லை. அப்படியே செய்யிறதில என்ன இருக்கு? இவர் என் ஷேக்ஸ்பியர்” என்றார். அவரிடம் நிறைய பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவர் ஒவ்வொரு சொல்லையும் மிகுந்த பிரயாசையுடன் தான் உதிர்க்கிறார் என்று பட்டதால் அதிகம் பேசவில்லை. இனியன் மட்டும் பழைய விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு இடமும் எப்படி மாறியிருக்கிறது, அங்கு முன்பு என்ன இருந்தது என்பதாக எனக்குப் புரியாத, தெரியவேண்டியதல்லாத விஷயங்கள்.
அவரது அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து சேர்ந்தோம். மகன்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில். மனைவி இறந்துவிட்டார். “தினமும் காலைல 9 மணிக்கு அடுத்த வீட்டு சோ யுங்கை மூன்றுதடவை அழைப்பு மணியை அழுத்த சொல்லியிருக்கேன். திறக்கல்லைன்ன அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி கதவை உடைக்கலாம்னு அவருக்கு என் கைப்பட கடிதம் எழுதி கொடுத்திருக்கேன். இனியன் தான் சாட்சி கையெழுத்து போட்டார்” என்றார். அழகான சிறிய வீடு. கூடத்தில் அமரும்படி சைகை செய்துவிட்டு உள்ளே சென்றார். மையமாக புதுமைப்பித்தன் படம் மாட்டப்பட்டிருந்தது. “பெயர் காரணம் தெரிந்திருக்குமே” என்றார் இனியன். புத்தக அடுக்கிற்குச் சென்று நோட்டமிட்டேன். மேசையில் எனது நூல்கள் கிடந்தன. ஆங்காங்கு தென்பட்ட பென்சில் குறிப்புகளும் பக்கவாட்டில் தெரிந்த பழுப்பும் அவற்றை அவர் வாசித்திருக்கிறார் என்பதைக் காட்டியது. அவரே தேநீர் கலக்கி எடுத்து வந்திருந்தார். நெஞ்செரியும் என்பதால் பொதுவாக தேநீர் காபி போன்றவற்றை தவிர்த்து விடுவேன் என்றாலும் அன்று மறுக்க மனமில்லை. “கதைகளை வாசிச்சிங்களா?” என்று கேட்டேன். “ஆம். நல்ல கதைகள் தான். உணர்ச்சிப்பூர்வமான இடங்களுக்கு கிட்ட வந்துட்டு அதை தவிர்த்துடுறீங்க. அது உத்தியா, இயல்பான்னு தெரியலை. நானும் அப்படித்தான். ஆனா இப்ப எனக்கு அந்த உணர்ச்சிப்பூர்வமான இடங்கள் தான் வேண்டிதா இருக்கு” காற்று பிடுங்கிப்போட்ட சொற்களைக் கொண்டு புரிந்துகொண்டேன். நிறைய ஆங்கில நூல்கள். நான் அறிந்திராத பெயர்கள். புத்தகங்களைப் புரட்டிக் கொண்டு இருந்தேன். என் கையில் இருந்த புத்தகத்தைக் கவனித்தவர் “ஹென்ரி பெர்க்ஸன். புனைவெழுத்தாளர் படிக்க வேண்டிய தத்துவவாதி. எடுத்துட்டு போங்க” என்றார். கை பரபரத்தாலும் முதல் சந்திப்பிலேயே புத்தகத்தை எடுத்துச் செல்வது அவ்வளவு நாகரீகம் அல்ல என்பதால் தயங்கினேன். “இனி எங்கிட்ட இருந்து என்ன ஆகப்போகுது? இன்னும் வேற எதாவது வேணாலும் எடுத்துக்குங்க” என்றார். “இன்னொரு நாள் வரோம். நாங்கள் கிளம்புறோம். அவருக்கு நாளைக்கு வகுப்பு இருக்கு” என்றார் இனியன். ஒரு நிமிடம் என்று சைகை செய்தவர் உள்ளே சென்று ஒரு பையைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார். “இனி உங்கள் பொறுப்பு” என்றார். உள்ளே சில புத்தகங்கள், ஒரு கோப்பு, இரண்டு நாட்குறிப்புகள் தென்பட்டன. “என்ன?” என்பது போல பார்த்தேன். “எல்லாம் ஐயா எழுதுனதுதான்” என்றார் இனியன்.
இன்று வெளி உணவு வேண்டாம், வகுப்பு வேலை இன்னும் முடியவில்லை. நானே இங்கிருந்து சென்று கொள்கிறேன் என்றேன். அருகிலிருக்கும் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டார். இறக்கிவிடும் முன் இனியன் “இத்தன வருஷத்துல எனக்கு கூட புத்தகம் கொடுத்தது இல்ல” என்றார். வியப்பா விரக்தியா என்று பிரித்தறிய முடியாத தொனியில்.
பெரிதாக கூட்டம் ஏதுமில்லை. நான் செல்ல வேண்டிய ரயில் நிலையம் ஆகக்கடைசி என்பதால் முக்கால் மணி நேரம் பயணிக்க வேண்டும். மடிக்கணினியைத் திறந்து வேலையைத் தொடர்ந்தேன். இனியனோடு சென்றிருந்தால் இது சாத்தியமில்லை. ரயிலிலேயே முக்கால் வாசி வேலை முடிந்தது. வீடு வந்து சேர்ந்து ரொட்டிகளில் நிலக்கடலை வெண்ணெய் தடவி உண்டுவிட்டு மிச்ச வேலையையும் முடித்த போது நள்ளிரவுக்கு மேல். அரிபுரத்திலும் என் உடல் இந்திய கடிகாரத்தின் படிதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. பிள்ளைகள் உறங்கியிருப்பார்கள். வழக்கம் போல் தொலைக்காட்சியை ஓடவிட்டு, தெரு விளக்கின் வெளிச்சம் கண்ணாடி சாளரம் தாண்டி படுக்கையில் விழும் வகையில் சாளரத் திரைகளை விலக்கிவிட்டு படுத்தேன். அன்றைய நாளின் அலைச்சல் அழுத்த உறங்கிப்போனேன்.
மறுநாள் வகுப்பு முடிந்து திரும்பும் போது இனியன் அழைத்து “புதுமை விரும்பி கொடுத்தத பாத்தீங்களா என்று கேட்கச் சொன்னார்” இனிதான் பார்க்க வேண்டும், வகுப்பிருந்ததால் பார்க்கவில்லை, இனி அடுத்த வாரம் தான் வகுப்பு, அதற்குள் பார்த்து விடுகிறேன் என்றேன். மறுநாள் காலையும் அழைத்து அதையே கேட்டார். முந்தைய நாள் முழுக்க வீட்டிலேயே உட்கார்ந்து நெட்பிளிக்ஸில் ஒன் பீஸ் எட்டுபாகங்கள் பார்த்ததை அவரிடம் சொல்ல முடியாது. நன்றாக உள்ளது, சில இடங்களை மேம்படுத்தலாம், மொத்தமாக வாசித்துவிட்டு பேசுகிறேன் எனும் பொதுவான சமாளிப்பு பதிலைச் சொல்லிவைத்தேன். அடுத்தநாள் அழைப்பதற்கு முன் வாசித்திட வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன், ஆனால் இப்போது அரிபுரத்திலிருக்கும் பள்ளி நண்பன் திரைப்படத்திற்கு அழைத்திருக்கிறான். புதுமை விரும்பி கொடுத்த பையைத் துழாவினேன். மூன்று மூன்று ஷேக்ஸ்பியர் நாடகங்களை ஒன்றாக சேர்த்து இதுவரை நான்கு நூல்கள் வெளியாகியுள்ளன. ஒரு கோப்பில் வெளியாகி தொகுக்கப்படாத கட்டுரைகளும் சிறுகதைகளும் இருந்தன. ஒரு நாட்குறிப்பில் வெளியாகாத மொழிபெயர்ப்பு நாடகங்கள் சில இருந்தன. இன்னொன்றில் ‘என் வாழ்க்கை கதை’ என்ற தலைப்பிடப்பட்டிருந்தது. புத்தகங்களை எப்படியும் ஓரிருநாட்களில் வாசித்து விடலாம் ஆனால் மீதி எல்லாம் கைப்பிரதிகள். அவற்றை வாசிக்க மனம் உந்தவே இல்லை.
மறுநாள் இனியன் அழைத்தபோது முந்தைய நாள் படம் முடிந்து தலைவலியோடு வீடு திரும்பி அப்படியே உறங்கிப்போனது நினைவுக்கு வந்தது. முக்கியமான சந்திப்பில் உள்ளேன் பிறகு அழைக்கிறேன் என்று செய்தி அனுப்பினேன். இனி வேறு வழியில்லை, அன்றாட வேலைகளை முடித்துவிட்டு புதுமை விரும்பி கொடுத்த பையைத் தூக்கிக் கொண்டு ஃபூனான் தோட்டத்திற்குச் சென்று அமர்ந்தேன். நாடகங்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், அவை நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும். ‘என் வாழ்க்கை கதை’ என்று எழுதியிருந்த நாட்குறிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. தெளிவான அழகான கையெழுத்து. முதல் பக்கத்திலேயே ‘இந்த நூலை நீங்கள் அச்சில் வாசிக்கிறீர்கள் என்றால் நான் என் எழுத்துக்களில் மட்டுமே உயிர் வாழ்கிறேன் என்று பொருள்’ என்று எழுதி இருந்தது. மரண சாசனமாக ஒரு நூலை உருவாக்கி வைத்திருக்கிறார்! பக்கங்களைப் புரட்டினேன். ‘வேர்கள்’ என்ற அத்தியாயத்தில் அவரது தாய் தந்தையர் இந்தியாவிலிருந்து கிளம்பி வந்ததைப் பற்றி எழுதி இருந்தார். பல்கலைக்கழகத்தில் படித்தது, ஆங்கிலேயர் ஆட்சி, ஜப்பான் ராணுவத்தின் அடக்குமுறை, ‘அரிபுரம் பிறந்த கதை’ என ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் தலைப்பிட்டிருந்தார். ‘எனது சிறைவாசம்’ என்றொரு தலைப்பைக் கண்டதும் ஆர்வம் அடைந்து வாசிக்கத் தொடங்கினேன்.
அந்த அத்தியாயத்தை நான் அன்று வாசித்திருக்க கூடாது. புதுமை விரும்பியின் மெல்லிய உடல், பிசிறடிக்கும் கம்மிய குரல் நினைவுக்கு வந்தது. மெல்லிய குளிர் உடல் முழுவதும் பரவி உடலை இறுக்கியது. என்னால் எதையும் செய்ய முடியவில்லை. வெறுமனே செடிகளை வெறித்தபடி அங்கேயே உட்கார்ந்திருந்தேன். இந்த நிலம் நமக்கு வேண்டியவற்றை ஈட்டிக்கொள்ளும் வரமளிப்பது தான். ஆனால் துலாக்கோலைச் சமன்படுத்த நாம் பதிலுக்கு எதை கொடுக்கிறோம்? புதுமை விரும்பி எதை கொடுத்தார்? நெற்றிப்பொட்டில் சம்மட்டி அடிபோல் துடிப்பை உணர்ந்தேன். வகுப்பு முடிந்து திரும்பிக் கொண்டிருந்த வில்லியம் தூரத்திலிருந்து என்னைப் பார்த்துவிட்டார். அவர் இப்போதெல்லாம் பகலாக இருந்தால் கூட ஃபூனான் தோட்டத்திற்குள் வருவதே இல்லை. ‘வருகிறாயா?’ என்று கையசைத்தார். ‘இல்லை’ என்று மறுத்துவிட்டு அங்கேயே அமர்ந்திருந்தேன். வானம் கருத்து இருள் சூழ தொடங்கியதும் எழுந்து நடக்கத் தொடங்கினேன். சிறு மேடுகள் மீது தான் யின் யாங் பல்கலைக்கழகம் கட்டப்பட்டுள்ளது. நான் செல்லாத பகுதிகளுக்கு நோக்கமின்றி நடந்தேன். தெருவிளக்கின் வெளிச்சத்தில் ஓரிரு மாணவர்கள் தென்பட்டார்கள். மொத்த வளாகத்தையும் மூன்று மணிநேரம் காலால் அளந்தேன். உடல் அயர்ந்து கெஞ்சிய பிறகு வீடு வந்து சேர்ந்தேன். அன்றிரவு தொலைக்காட்சியை ஓடவிடவில்லை. திரைகளை இழுத்து விட்டேன். துளி வெளிச்சம் கூட படாத இருட்டு வேண்டியதாய் இருந்தது. குளிர்சாதனப் பெட்டியின் பச்சை விளக்கு ஒரு விழிபோல என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. அதையும் அணைத்தேன். மேடையில் புதுமை விரும்பி பேங்கோவாக தோன்றினார். ‘நான் மறைவேன். நான் விட்டுச்சென்றவை உலகாளும்’ என்று கம்பீரமாக உரைத்தார். எப்படியோ உறங்கியிருக்க வேண்டும்.
“எப்போது வருவீர்கள்?” என்று மாணவ நிர்வாகி சலீம் அழைத்த பிறகு தான் விழிப்பு வந்தது. அரக்கப்பரக்க கிளம்பிச் சென்றேன். அன்று மாணவர்களோடு தனி சந்திப்புகளும் கலந்துரையாடலும் ஏற்பாடாகி இருந்தது. எல்லாம் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது சட்டென அவரது பதிப்பிக்கப்பட்ட கடைசி படைப்பு எப்போது வெளிவந்திருக்கும் என்பது குறித்து ஒரு ஊகம் தோன்றியது. வீடு வந்ததும் அவசரம் அவசரமாக அவரது பதிப்பிக்கப்பட்ட படைப்புகளின் கோப்பைப் புரட்டினேன். என் ஊகம் சரிதான். 1973 ஆம் ஆண்டு சிறை சென்ற வருடத்தில் தான் கடைசியாக சிறுகதை எழுதியுள்ளார். ‘ஆடி’ எனும் அந்தச் சிறுகதையில் கதையின் நாயகன் எப்போதும் கண்ணாடி முன் நின்று தனது தோரணையை, தோற்றத்தைச் சரி செய்தபடி இருப்பான். புதிய தேசத்தில் தான் யார் எனும் குழப்பத்தில் உழல்வான். இந்தியனா, அல்லது அரிபுரத்து பிரஜையா அல்லது பிரிவுக்கு முன்பான தீபகற்ப நாட்டின் பிரஜையா. அரிபுரத்து பிரஜையாக அவன் முயற்சிப்பதைச் சித்தரிக்கும் கதை. எவ்வளவு முயன்றும் அவனுள் இருக்கும் பிற இருவரை அழிக்க முடியவில்லை என்பதைக் காட்டியிருந்தார். மொழி சற்றே மங்கியிருந்தாலும், நல்ல கதை எனும் உணர்வு ஏற்பட்டது. நாடக நூல்களைப் பார்த்தேன். சரியாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அதாவது 1975 ஆம் ஆண்டு முதல் நாடகமாக மெக்பெத் வெளியாகியுள்ளது. அதாவது அவரது பதினான்கு மாத சிறைவாசம் முடிந்த பிறகு. மெக்பெத்திற்கு பிறகு ‘மூன்றாம் ரிச்சர்ட்’, ‘ஜூலியஸ் சீசர்’ ‘கொரியோலெனஸ்’ என ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாடக மொழியாக்கம் வெளியாகியுள்ளது. ஒரு துப்பறிவாளன் போல கிடைக்கும் துப்புக்களைக் கொண்டு ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொண்டேன். ‘புதுமை விரும்பியை’ உடனே சந்திக்க வேண்டும் எனும் எண்ணம் பீடித்துக்கொண்டது. இனியனை அழைத்தேன். “எல்லாவற்றையும் வாசித்துவிட்டேன். அவரை சந்திக்க செல்வோமா” என்று கேட்டேன். தனக்கு இப்போது சாத்தியமில்லை, வேண்டுமானால் வீட்டிற்குச் சென்று நான் மட்டும் சந்தித்து வரலாம், அவரிடம் பேசி உறுதி செய்துவிட்டு சொல்கிறேன் என்றவர் ஐந்து நிமிடங்களில் வரச்சொன்னதாக தகவல் அனுப்பி, அவருடைய தொடர்பு எண், விலாசம் ஆகியவற்றையும் இணைத்திருந்தார். பயணத்தில் வாசிக்க அவரது முதல் நாடக தொகை நூலை மட்டும் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். ரயிலுக்குப் போக வேண்டும் என்றால் பேருந்து நிறுத்தத்திற்கு நடக்க வேண்டும். அங்கிருந்து ரயில் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். எனக்கு அவ்வளவு பொறுமையில்லை. ஒரு டாக்சியை அமர்த்திக்கொண்டு உடனே கிளம்பினேன். பயணத்தில் மெக்பெத் நாடகத்தை வாசித்து முடிப்பதற்கும் அவரது வீடு வந்து சேர்ந்ததற்கும் சரியாக இருந்தது.
கைவைத்த பனியனும் லுங்கியும் அணிந்திருந்த புதுமை விரும்பி கதவைத் திறந்தார். “வாங்க” என மெத்தை நாற்காலியில் அமரச் சொன்னார். எனக்கு என்ன பேசுவது, எப்படித் தொடங்குவது என்று தெரியவில்லை. அரிபுரத்தின் தோற்றுநர்களில் ஒருவரான சிம் ஜூ கே பொதுவுடைமைவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு அவரது முன்னாள் சகாவான, அரிபுரத்தின் தந்தை என்று கருதப்படும் யீ வான் லூ வால் சிறைவைக்கப்பட்டார். கே கைது செய்யப்பட்டதைக் கண்டித்து எழுதிய வெகு சிலரில் புதுமை விரும்பியும் ஒருவர். நாட்டை விட்டு செல்லலாம் அல்லது அரசியலில் இருந்து முற்றிலும் விலகி சொந்த நாட்டிலேயே வாழலாம் எனும் இரண்டு வாய்ப்புகள் மட்டுமே கேவிற்கு வழங்கப்பட்டன. தனிமைச் சிறையில் தற்கொலைக்கு முயன்ற கே வேறுவழியின்றி அரசியலில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துவிட்டு சிறையிலிருந்து வெளிவந்தார். கேவுடைய ஆதரவாளர்கள் என்று கருதப்பட்டோரும் சிறைவைக்கப்பட்டனர். அப்படிச் சிறை சென்றவர் தான் புதுமை விரும்பியும். பதினான்கு மாதங்கள் தனிமைச் சிறையில் இருந்தார். கிட்டத்தட்ட பிறழ்வின் விளிம்பைத் தொட்டு மீண்டார். சுவடின்றி காணாமலாக்கப்படுவோம் என்று அஞ்சியதாக நாட்குறிப்பில் சொல்கிறார். படைப்பாளி மரணத்தைக் காட்டிலும் அஞ்சுவது அந்த ஒன்றுக்கு தான்.
“ஏன் மெக்பெத்?” என்று நேரடியாக கேட்டதும். புன்னகைத்தார். “உங்களுக்கே தெரிந்திருக்குமே” “இல்லை” “மெக்பெத் வாசிச்சீங்களா?” “ஆமா” “அதுல ஒரு வரி எழுதியிருப்பார்.
Bleed, bleed, poor country!
Great tyranny, lay thou thy basis sure,
For goodness dare not check thee. Wear thou thy wrongs;
The title is offered.—Fare thee well, lord.” சொற்கள் உடைந்து உடைந்து வெளிவந்தன.
குரல் இடறியது. ஆனால் நிதானமாக பேசத் தொடங்கினார். “உயிரோட இருக்குற வரைக்கும் சொந்தமா எதுவும் எழுத கூடாதுன்னு எழுதி வாங்கிட்டப்புறம் தான் வெளிய விட்டாங்க. அடிக்க மாட்டான். ஆனா வெளியாளையே பாக்க முடியாது, எப்பவும் விளக்கு எரிஞ்சிக்கிட்டே இருக்கும். அந்த விளக்கு ஒரு இமைக்காத கண்ணு மாதிரி எப்பவும் நம்மளையே பாத்துகிட்டு இருக்கும், கே பல்பை உடைச்சு கைய கீறிக்கிட்டார். அப்புறம் தான் வெளிய விட்டாங்க. பூட்ஸ் காலடி சத்தத்தை தவிர வேற எதையும் கேக்க முடியாது, அதுவும் நாளுக்கு ரெண்டு தடவ மட்டும் தான். நெருங்கி வரும். அப்புறம் தூரமாகும். பைத்தியம் பிடிச்சுரும். விதவிதமான குரல் கேக்க ஆரம்பிச்சுது. கதைகள்ல படிச்ச பால்வண்ணப்பிள்ளை, கந்தசாமிப்பிள்ளையெல்லாம் தெரிய ஆரம்பிச்சுட்டாங்க.” புன்னகைத்தார். கண்ணை மூடிக்கொண்டு சாய்ந்து அமர்ந்தார். அவரே தொடரட்டும் என காத்திருந்தேன். “பூட்ஸ் காலடி சத்தம் ஒரே மாதிரியான சத்தம் தான். ஆனா அதுக்குள்ள சின்னச் சின்ன வேறுபாடுகளை கவனிப்பேன். தாளத்துல, சத்தத்துல, வேகத்துல. அதை வச்சி அவன் சுத்தி ஒரு கதைய உருவாக்கிக்குவேன். அது மட்டும் இல்லைன்ன செத்துருப்பேன். அங்கேருந்து வெளிய வரணும்னா, நம்மள நாமளே கொன்னு தான் வெளிய வரமுடியும். புரியுதா? கே அவருக்குள்ள இருந்த அரசியல் தலைவர சாவடிச்சார். நான் எனக்குள்ள இருக்குற எழுத்தாளனை கொன்னு அவங்களுக்கு படையல் போட்டேன். வெளிய வந்ததுலேந்து மனசு கொந்தளிச்சுகிட்டே இருந்தது. என்னமாவது பண்ணனும் பண்ணனும்னு துடிச்சது. ஆனா என்ன செய்ய முடியும்? எனக்கு எழுத தெரியும். அவ்வளவுதான். அம்பது பேரோ நூறு பேரோ வாசிப்பாங்க. அதுவும் இனிமே முடியாது. என்கிட்டேந்து என் எழுத்தை பறிச்சவங்கள பழி வாங்கணும். ஆனா நான் கையாலாகாதவனா வெறும உக்காந்திருக்கேன். அப்பத்தான் ஷேக்ஸ்பியரை வாசிச்சேன். இந்த வரியை வாசிச்சதும் இவன் என்னுடையவன், இவனோட சொல் என்னுடையதுன்னு, எனக்கானதுன்னு தோணிருச்சு. கிறுக்கு பிடிச்ச மாதிரி ரெண்டே நாள்ல மொழிபெயர்த்தேன். ‘பாவப்பட்ட என் தேசமே, இன்னும் இன்னும் குருதி சிந்து, கொடூர சர்வாதிகாரியே உன் நிலையிலேயே மகிழ்ந்திரு, நல்லவர்கள் உன்னை எதிர்கொள்ள அஞ்சுவார்கள். உனது பதவிக்கு ஆபத்தில்லை, சுரண்டியவற்றை நன்றாக அனுபவி.’ மந்திரம் மாதிரி மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு. திரும்பத்திரும்ப வாசிச்சு செதுக்கினேன். ஷேக்ஸ்பியர் அளவுக்கு மனுஷன் மனச நுட்பமா எவனும் பிடிச்சதில்லை. இந்த நாட்டுக்கும் இந்த அமைப்புக்கும் நான் காட்டுன நடுவிரல் தான் என் மொழிபெயர்ப்பு. அது யார் கண்ணுக்கும் தெரியனும்னு இல்லை. அலெக்ஸாண்டர் சக்கரவர்த்தியாகவே இருந்தாலும் அரண்மனை வட்டாரத்துக்குள்ள புழங்குற ஒரு சின்ன பகடி கதை மாதிரி. விவரம் தெரிஞ்சவங்களுக்கு மட்டும் புரிஞ்சா போதும்னு நினைச்சேன்,”
ஆயாசம் தொற்றி மீண்டும் சாய்ந்து கொண்டார். மொத்த சொற்களும் தீர்ந்து போனது போல் ஒரு சோர்வு. சில நிமிடங்கள் கண்ணை மூடி அமர்ந்திருந்தார். ஃபிளாஸ்க்கிலிருந்து வெந்நீர் அருந்தினார். தொண்டையைச் செருமினார். நெஞ்சுக்கூடு சுருங்கி விரிவதைப் பார்த்தேன். இன்னும் சொல்வதற்கு ஏதோ மிச்சமிருந்தது அவருக்கு. எழுந்து உள்ளே சென்றார். நீலநிற அட்டை போட்ட நாட்குறிப்பை உள்ளேயிருந்து கொண்டு வந்தார். “ஆவேசமாக மொழிபெயர்த்த கொஞ்ச நாட்களுக்கு பிறகு ஷேக்ஸ்பியர் என்னோட பகுதியாகிட்டார். என் எழுத்து வெறும் நடுவிரலா மட்டும் இருந்துட முடியாதுன்னு அவன் தான் எனக்கு காண்பிச்சான். கலை மடங்கியிருந்த ஒவ்வொரு விரலயும் நீட்டி விட்டுச்சு. மொத்த கையும் விரிஞ்சு இந்த உலகத்தை ஏந்துன்னு சொன்னுச்சு. எனக்குள்ள இருந்த ஆவேசம், ஆற்றாமை எல்லாம் படிப்படியா மறைஞ்சுது. வயசும் ஆகுது பாருங்க” என்று புன்னகைத்தார். மீண்டும் மௌனம் எங்களைச் சூழ்ந்தது. நாட்குறிப்பை நீட்டினார். “முழுக்க கவிதைகள். கதைகள் இனி என் உலகில் இல்லைன்னு ஆனபிறகு இது வந்து உக்காந்துது. மரத்துலேந்து உதிருர பூ நடக்குற நம்மமேல விழுகுற மாதிரி. ஒரு தற்செயல், அல்லது பெரிய திட்டத்தோட ஒரு பகுதி, எப்படி வேணாலும் வச்சுக்கலாம். இதுவும் உங்களுக்கு தான். அரிபுரத்தின் இயற்கை காட்சிகளால் உந்தப்பட்டு எழுதுனதுன்னு சொன்னா நீங்க சிரிக்கலாம். ஆனா அதுதான் உண்மை. கவிதையை கொடுத்த ஊருக்கு நான் கொடுக்கும் ஆசிர்வாதம்ன்னு வெச்சுக்குங்க” என்றார். மறுப்பின்றி வாங்கிக்கொண்டேன்.
வீடு திரும்பும்போது அவற்றை வாசித்து பார்த்தேன். பக்கத்திற்கு இரண்டு கவிதைகள் வீதம் சுமார் எழுநூறு கவிதைகள். நகரின் மத்தியிலிருக்கும் கோபுரத்திலிருந்து நகரை விவரிக்கும் போது ‘தரையில் மினுங்கும் நட்சத்திரங்கள்’ என்று எழுதி இருந்தார். ‘புத்தனின் பல்’ என தலைப்பிடப்பட்ட கவிதை என்னை வெகுவாக ஈர்த்தது. அரிபுரத்தில் புத்தனின் பல் ஒரு பழுத்த ஆலயத்தில் பாதுகாக்கப்படுகிறது. ‘இளமையில் ருசித்து/ முதுமையில் உதிர்ந்த புத்தனின் பல்/ மண்ணில் முளைவிட்டு நகரமாகியது/ மறுக்கப்பட்ட ருசியை/ கிழடாகி உதிர்ந்த பின்னும்/ தேடிக் கொண்டே இருக்கிறது’. அரிபுரம் எல்லாவற்றையும் உண்ணத் துடிக்கும் ஒரு பல். அதன் கடியில் நெறிபடுபவற்றின் ஓசைகளை இப்போது நானும் கேட்கிறேன்.
வீடு வந்து சேர்ந்ததும் மூத்த எழுத்தாளர் அரிபுரத்தில் எல்லாம் எப்படி இருக்கிறது என்று குசலம் விசாரித்து அனுப்பிய செய்தியை வாசித்தேன். ‘நல்லவேளை நீங்கள் இங்கு பிறக்கவில்லை’ என்று எழுதி அதை அழித்தேன். ‘வெளிச்சத்தை விட உதாசீனம் நல்லது’ என்று அனுப்பினேன். ‘என்ன சொல்கிறாய்?’ என்று திரும்பக் கேட்டார். ‘ஒன்றுமில்லை. நீங்கள் இங்கு பிறந்திருந்தால் மாபெரும் தமிழ் கவியாகியிருக்க கூடும்’ என்று எழுதி அனுப்பினேன். ‘மொழுங்க தேய்த்த/ காற்றுபுகா சிமெந்து தளத்தை/ பிளந்து கொண்டு தம் போக்கில்/ முளைக்கிறதொரு அரசு’ எனும் புதுமை விரும்பியின் கவிதை மனதிற்குள் வளர்ந்தது.
