மொழியும் சொல்லும்

கடந்த இரண்டு ஆண்டுகளாக மலாய் சிறுகதைகளை தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். நண்பர்களின் மொழிபெயர்ப்புகளை செம்மையாக்கமும் செய்கிறேன். அந்த வகையில் மொழி சார்ந்து பெற்ற அனுபவங்கள் முக்கியமானவை. சுவாரஸ்யமானவையும் கூட. ஆகவே, அவற்றை பதிவு செய்து வைப்பது அவசியம் என்று நினைக்கிறேன்.

எறும்பும் தன் கையால் எண் சாண் என்பது போல எல்லா மொழியும் அதனதன் சிறப்புகளையும் போதாமைகளையும் கொண்டவையாக இருக்கலாம். ஒரு மொழியின் சொற்களஞ்சியம் என்பது அதை ஆதியில் இருந்து பயன்படுத்திய இனத்தின் வாழ்க்கை முறைகளையும் வளர்ச்சிகளையும் பண்பாடுகளையும் பெரிதும் சார்ந்தவை. ஆகவே எல்லா மொழியிலும் எல்லா சொற்களும் இருக்கும் என எதிர்ப்பார்க்க முடியாது. கடல் சார்ந்த வாழ்க்கை வாழும் ஒரு இனத்தின் மொழியில் கடல் பற்றிய சொற்கள் மிக அதிகமாகவும் நுணுக்கமாகவும் இருக்கும். அதே போல குளிர் பிரதேசங்களோடு தொடர்பற்ற மக்களின் மொழியில் பனி தொடர்பான சொற்கள் குறைவாக இருப்பது இயல்பு.

ஆனால் ஒரு மொழி பெயர்ப்பாளனுக்கு மொழி சார்ந்த பெருமிதங்களோ இகழ்ச்சிகளோ இருக்கக்கூடாது. அவனது மேலான உழைப்பு என்பதுதான் மொழி பெயர்க்க எடுத்துக் கொண்ட மொழியின் தனித்தன்மையும் உணர்ச்சியும் முழுமையாக வெளிப்படும் படி இன்னொரு மொழியில் வெளிப்படுத்திக் காட்டுவதாகும். கட்டுரைகளைவிட புனைவுகளை மொழிபெயர்க்கும் பணி மிகச் சவாலானது. காரணம், புனைவுக்கு தேவை அதீத சொற்களோ இலக்கண அமைதி பெற்ற நிறைவான வாக்கியங்களோ அல்ல. மாறாக, தனிச் சொற்களும் சிதைந்த சொற்றொடர்களும் இலக்கியப்பிழையாக உணரப்படும் வாக்கிங்களும் கூட இலக்கியப்பிரதியில் முக்கியப் பங்கு வகிப்பவை.    உணர்வுகளை நேரடியாக வாசகனுக்குக் கடத்த ஒரு சொல் போதுமென்றால் அதுதான் இலக்கியத்தின் தேவை. இதை சொற்சிக்கனம் எனறு நவீன இலக்கிய ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மாற்றும் போது உணர்வுகளைக் கடத்தும் அவ்வாறான மிகப் பொருத்தமான சொற்களைத் தேடி கண்டடைவதுதான் முதல் சவால்.  

மலாய் மொழி சிறுகதைகளைத் தொடர்ச்சியாக வாசித்து, தமிழில் மொழிபெயர்க்கும் போது சில சொற்கள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன.  இரு மொழிகளிலும் இவ்வாறான சொற்களைக் காண்கிறேன். நான் கவனித்த ஒரு சில சொற்களை எடுத்துக்காட்டாக குறிப்பிடுகின்றேன்.

மலாயில் duda, dara, janda, balu, bujang என்று ஆண் பெண் நிலைகளைக் குறிப்பிடும் சொற்களுக்கு நிகராக தமிழில் நடப்பில்  தனிச்சொற்கள் இல்லை. விளக்கங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.

Duda- மனைவியை இழந்த அல்லது மணவிலக்கு பெற்ற ஆண். இது கைம்பெண் அல்லது விதவை (Janda/ balu) என்ற சொல்லுக்கு ஆண்பால்

Bujang/ teruna – திருமணமாகாத இளைஞன், இது, கன்னிப் பெண்(Dara) அல்லது_ திருமணமாகாதவள் என்ற சொல்லுக்கு ஆண்பால். விதவை அல்லது கைம்பெண் என்ற சொல்லுக்கு தமிழில் ஆண்பால் சொல் இல்லை.  ஆகவே மலாய் கதையில் dia duda என்று குறிப்பிடும் போது அதை தமிழில் ‘அவன் மனைவியை இழந்தவன்’ என்று விளக்கம் தேவைப்படுகின்றது. அதே சமயம் ‘dia janda’ என்பதை அவள் ஒரு விதவை அல்லது மனவிலக்கு பெற்றவள், என சிறப்பாக மொழிபெயர்க்க முடிகின்றது.  அதிலும்  Janda என்பதற்கும் balu என்பதற்கும் நுட்பமான வேறுபாடு உள்ளது. ஜன்டா பெரும்பாலும் மனவிலக்கு பெற்ற பெண்ணைக் குறிக்கும்.   balu  இறந்து விட்ட இன்னாரின் மனைவி என்று குறிப்பிடப் பயன்படுகின்றது. ‘Puan Salmah ialah balu Encik Ahmad’ என்பது ‘  திருமதி சல்மா மறைந்த  திரு அஹமதுவின் மனைவி’ என்று விளக்கப்படுத்த வேண்டும்.

மலாய் சிறுகதைகளில் மிகச் சாதாரணமாக பயன்படுத்தப்படும் மற்றொரு சொல் mengangguk மற்றும்  menggeleng. இச்சொற்களின் பொதுவான  பொருள் தலையை ஆட்டுவதாகும். அதாவது சம்மதம் என்று என்ற பொருளில் மேலும் கீழும் தலையை ஆட்டுவது mengangguk. மறுப்பது அல்லது முடியாது என்ற பொருளில் இடமும் வலமும் தலையை ஆட்டுவது menggeleng. இச்சொற்களை தமிழில் மொழி பெயர்க்கும் போது தடுமாற்றம் ஏற்படுகின்றது. தமிழில் இந்த உடல் மொழிகளைக் குறிப்பிடும் தனிச் சொற்கள் இல்லை.  இது மலாயில் மட்டும் காணப்படும் சிறப்பான சொல். ஆகவே விளக்கத்தோடு இணைத்துதான் அச்சொல்லை தமிழில் குறிப்பிட வேண்டியுள்ளது.  எடுத்துக் காட்டாக இந்த உரையாடலைப் பார்க்கலாம்.

 நபர் 1: ‘நீ அதை எடுத்தாயா? ‘ 

நபர் 2:   mengangguk  ( மெங்கங்கோக்)

 இதில் நபர் 2,   ஆம் நான் எடுத்தேன் என்று சொல்லாமல் தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டுவதைக் குறிக்கிறது.  அதாவது அவர்தான் எடுத்தார் என்பதன் உடல்மொழி.

இதே  போல நபர் 2: menggeleng  ( மெங்கேலேங்) என்று இருந்தால், அவர் நான் எடுக்கவில்லை என்பதை தலையை இடமும் வலமும் அசைத்து மறுக்கிறார் என்று பொருள்.

இச்சூழல்களை  தமிழில் மொழிபெயர்க்கும் போது

நபர் 1: ‘நீ அதை எடுத்தாயா? ‘   

நபர் 2:  ‘ஆம் என தலையை ‘மேலும் கீழும்’ ஆட்டினான்’ என்றோ,   ‘இல்லை என தலையை இடமும் வலமும் அசைத்தான்’, என்றோ நீண்ட வாக்கியமாக எழுத வேணடும். ஆனால் அது வாசிப்புக்கு இடையூறு.  ஆகவே ‘அவன் ஆமாம் என்று தலையாட்டினான்’ அல்லது ‘இல்லை என்று தலையாட்டினான்’ என்று மொழிபெயர்க்கலாம்.  அதன்வழிதான் அந்த உடல்மொழிகளை வாசகனுக்கு காட்சிபடுத்த முடியும்.

மலாயில் முதுகு என்ற உடல் உறுப்புக்கு தனிச்சொல் இல்லை. பொதுவாக பின்புறம் (belakang badan) என்றுதான் எழுதுகிறார்கள் அதாவது உடலின் பின்புறம். ஆனால் பிட்டத்திற்கு தனியாக pungung என்ற சொல் உள்ளது.  இச்சொற்களை தமிழில் மொழியாக்கம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக

Dia menendang di belakangnya  என்பதை தமிழில் அவனுடைய முதுகில் உதைத்தான் என்பதே சரி, பிட்டத்தில் உதைத்தான் என்றோ பின்பக்கம் உதைத்தான் என்றோ எழுதுவது பிழையாகிவிடும்.

மலாயில் சுட்டு சொற்களில் ஆண் பால் பெண்பால் கிடையாது. அதாவது அவன் அவள் என்று பிரித்துக் கூற முடியாது.  Dia என்று பொதுவாகவே சொல்ல முடியும். ஆகவே ஒரு கதாப்பாத்திரத்தை dia (அவன்/ அவள்) என்று தொடங்கி கதப்பாத்திரம் ஆணா பெண்ணா என சொல்லாமலே கதை முழுவதும் எழுத முடியும். ஆனால் தமிழில் பால் தெரியாமல் ஒரு வாக்கியத்தை எழுதவே முடியாது. அஃறினைக்கு மட்டுமே அது என்ற பொது சொல்லை பயன்படுத்த முடியும். ஆகவே ஒரு கதாப்பாத்திரம் dia என்று மட்டுமே சுட்டப்படுமானால் அக்கதையை தமிழில் அதே தொணியில் மொழிபெயர்ப்பது பெரும் சிக்கலாகும்.

மொழிபெயர்ப்பில், தனித்தமிழ் சொற்கள் அல்லது கலைச்சொற்களை பயன்படுத்தும் போதும் கூடுதல் கவனம் தேவை.  நடைமுறையில் இருக்கும் தொழில்நுட்பம் அல்லது அறிவியல் சார்ந்த கலைச்சொற்களை மொழிபெயர்ப்பில் சிக்கலின்றி பயன்படுத்தலாம். ஆனால், நாட்டார் வழக்குகளும் பண்பாட்டுச் சொற்களும் மாற்றப்படலாகாது. உணவு, உடை, இசை கலைப்படைப்புகள் போன்ற வற்றுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் இருந்தாலுமே கூட மொழிபெயர்ப்பில் அசல் மலாய் சொல்லையே பயன்படுத்த வேண்டும். எடுத்துக் காட்டாக, வாவ்(wau) என்பது பட்டம் என்றாலும்  மொழிபெயர்பில் ‘வாவ்’ என்றுதான் குறிப்பிட வேண்டும். அதே போல வாயாங் கூலிட் (wayang kulit), தமிழ்சூழலில் தோல்பாவை கூத்து என்று குறிப்பிடப்பட்டாலும் புனைவில் வாயாங் கூலிட் என்ற சொல்லே பயன்படுத்தப்படவேண்டும். அப்போதுதான் மூல பிரதியின் அசல் உணர்வை மொழிபெயர்ப்பில் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

மலாய் புனைவுகளில் அதிகமான இஸ்லாமிய சமயம் சார்ந்த கலைச் சொற்கள் பயன்படுத்தப்படுவது இயல்பு. தமிழில் மொழிபெயர்க்கும் போது அச்சொற்களுக்கு தமிழ் இஸ்லாமிய இலக்கிய நடைமுறையில் உள்ள சொற்களைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக  kubur  என்பதை கல்லறை என்று எழுதுதல் மரபு பிழையாகும். மண்ணறை என்பதே இஸ்லாமிய நெறிகளுக்கு ஏற்பானது.  தமிழ் இஸ்லாமிய இலக்கியம் செழிப்பாக இருப்பதால் சொற்பஞ்சம் இல்லை என்றே சொல்லலாம்.

மலாய் புனைவுகளை மொழிபெயர்ப்பதில் உள்ள அதிகபட்ச சிக்கல், பிராந்திய வழக்கில் சொல்லப்படும் கதைகள்தான். மலாய் மொழி, கிழக்குகறை வழக்கு, வடக்கு மாகாண வழக்கு, தென் பகுதி வழக்கு என்பவையோடு, ஆச்சே, ஜாவா, பஞ்சார், பட்டாணி என பல்வேறு இனக்குழுக்களின்  பேச்சு வழக்குகளையும் உட்படுத்தியது. ஆகவே ஒரு புனைவு இவ்வாறான பேச்சு வழக்குகளைக் கொண்டிருக்கும்போது அதன் உணர்வு வெளிப்பாடு தனித்துவமானதாக இருக்கும்.  தமிழில் அந்த உணர்வுகளுக்குச் சேதம் வராமல் மொழிபெயர்ப்பது பெரும் சவால்தான்.

இறுதியாக, மலாய் புனைவுகளில் நிறுத்தற்குறிகள் சற்றே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக காற்புள்ளிகளை கொண்டு ஒரு வாக்கியத்தை பல உள்ளடுக்குகள் உள்ளதாகவோ பல தகவல்கள் கொண்டதாகவோ நீட்டி எழுத மலாய் மொழி இடமளிக்கிறது. ஆனால்,  தமிழில் காற்புள்ளிகளை விட ‘உம்’ விகுதி சிறப்பாக இருப்பதைக் காண முடியும்.  உதாரணமாக, கீழ்காணும்  வாக்கியத்தைக் கவனிக்கலாம்.

//Guru yang tegas itu, walaupun kelihatan serius, sebenarnya sangat penyayang, prihatin terhadap murid-muridnya, dan sentiasa bersedia membantu//

இந்த வாக்கியத்தில் அன்பு, கனிவு என காற்புள்ளியிட்டு எழுதுவதைவிட உம் விகுதி சேர்த்து சிறப்பாக மொழிபெயர்க்க முடியும்.  எடுத்துக் காட்டாக, 

//கண்டிப்பான அந்த ஆசிரியர், பார்வைக்கு கடுமையானவராக தெரிந்தாலும் உண்மையில் அவர் மாணவர்களிடம்  அன்புடனும் கனிவுடனும் பழகக்கூடியவர் என்பதோடு எந்நேரமும் உதவ தயங்காத குணமும் பொருந்தியவராவார்.//

மொழிபெயர்ப்பு என்பது இரண்டு மொழிகளில் தேர்ச்சி பெற்ற எல்லோராலும் செய்யக் கூடிய பணி அல்ல. குறிப்பாக புனைவுகளை மொழிபெயர்க்க மொழி அறிவோடு, வாழ்க்கைமுறை, பண்பாடு, வரலாறு பேச்சுவழக்கின் ஆழம் போன்ற இதர கூறுகளும்  தெரிந்திருப்பது அவசியம். ஆங்கிலம் வழி தமிழுக்கு கொண்டுவரப்பட்ட பல்வேறு உலக மொழி இலக்கியங்களை வாசிக்கையில் உணர்வு பூர்வமான இடைவெளி ஏற்படுவதை சில நேரங்களில் உணர முடிவதன் காரணம், மேற்கண்ட மொழி பெயர்ப்பில் அந்த இனத்தின் வாழ்க்கை முறையும் பண்பாடும் சரியாக உள்வாங்கப்படாத போதாமைதான் காரணம். ஆகவே மொழியாக்கம் என்பது படைப்பு கலைக்கு பக்கத்திலேயே வரும் ஒரு  இணை கலை.  அதை கைவரப் பெற தொடர் பயிற்சி தேவை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...