மூன்று பெண்களின் உரையாடல்

மனம் வெறித்துக் கிடக்கிறது, ஆன்மாவும் சூன்யமாகிப் போயிருக்கிறது, உடல் தளர்ந்து சரிகிறது. தளர்வு என்பது சரியான விளக்கம் அல்ல, இது உண்மையில் அதையும் கடந்தது. இந்த இடத்தில் காலெடுத்து வைப்பேன் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.  சபிக்கப்பட்ட இந்த இடத்தை வேலை முடிந்து திரும்பும் வழியில் பல சமயம் கவனிக்காமல் கடந்திருக்கிறேன். வாழ்வின் இந்தக் கரும்புள்ளியை நான் எதிர்கொண்டே ஆக வேண்டியிருக்கிறது. இந்த உணர்வை எப்படிச் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை, வெறுமனே சொல்வதென்றால் இது முற்றிலும் விரும்பத்தகாத ஒன்று!

வெளிர் பச்சை நிற உடைகளை அணிந்து, கொடுக்கப்பட்ட ஒரு வெள்ளை பிளாஸ்டிக் கோப்பையை ஏந்திக்கொண்ட பிறகு, மூன்று அடுக்குகளைக் கொண்ட வாயில் கதவினுள் ஊடுருவி நுழைந்தேன்.

கூடுதலாய் எதையும் பேசவில்லை, பின்தொடர்ந்து மட்டும் சென்றேன். மனம் மரித்ததுபோல் கிடந்தது.

“உடம்புக்குள்ளார ஏதாச்சும் ஏத்தி வச்சிருக்கியா?”

“என்ன ஏத்தி சார்?”

“ஆசனவாயில ஏதாச்சும் மறைச்சு வச்சிருக்கியா?  எதையாவது விழுங்கி, பதுக்கி வச்சிருக்கியா?”

மறுத்து தலையசைத்தேன். வியப்பாக இருந்தது. நான் ஒன்றும் போதை பொருளுக்கு அடிமையானவள் இல்லையே.

இன்று காலை பதிவு அறையில் இருந்தபோதே, பதிவு செய்யப்படும் வேளையில் மற்ற கைதிகள் செய்த பல்வேறு அழிச்சாட்டிய நாடகங்களையும் வசைப்பாடல்களையும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருபோதும் அவர்களைப் போல ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே நான் மட்டும் அதிகம் பேசாதவளாய் முழுக்க மௌனம் சாதித்திருந்தேன். வாக்குவாதம் செய்வதில் என்ன பயன்? இதுவொன்றும் நீதிமன்றமல்ல, சிறைச்சாலை! இந்தக் கம்பிச் சுவர்களுக்குள் குற்றமும் குற்றமின்மையும் இனி நிர்ணயிக்கப்படப் போவதில்லை.    

என்னைத் தடுப்புக் காவல் சிறைக்கு அழைத்துச் சென்ற காவலர் ‘இன்ஸ்பெக்டர்’ என்று அழைக்கப்பட்டார். அதனால் நானும் அவரை அவ்வாறே அழைத்தேன். அந்தப் பெண் தலைமுக்காடு அணிந்திருந்தாலும் கம்பீரமாகவும் விரைந்து செயல்படும் ஆளாகவும் தோற்றமளித்தார்.

“உனக்கு ரெண்டு சிறைக்கைதிகளை அறிமுகப்படுத்துறேன். அவங்க நல்லவங்க. அவங்ககூட நீ பத்திரமா இருக்கலாம். மற்ற இடங்கள்ல இருக்கிறதப் போலதான் இங்கேயும், நல்ல முறையில நடந்துக்கணும்”

“சரிங்க இன்ஸ்பெக்டர்!”

எட்டாம் சிறைகூண்டுக்குச் செல்லும் நடைபாதையில் அடியெடுத்து வைத்த மாத்திரத்தில் அங்குத் தங்கியிருந்த பெண்களின் சிரிப்பொலியும் அழுகுரல்களும் அலறல்களும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. உள்ளூர சற்றே கிலியூட்டியது.

என்னைப் போலவே சீருடை அணிந்த  இரண்டு பெண்கள் படித்துக் கொண்டிருந்தனர். இன்ஸ்பெக்டர் சிறைகூண்டு பூட்டைத் திறந்து, தன் கம்பீரமான கையசைவால் என்னை உள்ளே போகச்சொல்லி, பின், சட்டென மீண்டும் பூட்டிவிட்டார். இன்ஸ்பெக்டருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அறையிலிருந்த இரண்டு பெண்களைப் பார்த்தபடி கதவின்முன் உறைந்து நின்றேன்.

“நம்ம ஹோட்டல் ஸ்பெஷல், ரெண்டடுக்கு கட்டில் இருக்கு, மற்ற அறைகள்ல இல்லை தெரியுமா. நீ ஜூலியா கட்டிலின் மேலடுக்கு படுக்கையில் படுத்துக்கோ.”

“நான் ஃபாத்திமா… அக்கா, உங்கள என்னன்னு கூப்பிடறது?”

“என்ன கூப்பிட்டாலும் பரவாயில்ல. நான் சல்மா, அது ஜூலியா. அவங்க கொஞ்சம் அமைதியான ஆளு.”

சலாம் செய்துகொண்ட பின் இருவரையும் கூர்ந்து கவனித்தேன். சல்மா வயதானவளாகத் தெரிந்தாள், அம்மாவென்று கூப்பிட ஏற்றவள். ஜூலியாவோ இன்னும் முப்பதுகளின் தொடக்கத்தில் இருந்தாள், வெளிர் நிற தோல்கொண்ட அழகி.

“நாள் போகப் போக இங்க எப்படி இருக்கணும்னு உனக்கே புரிஞ்சுரும். சந்தோஷமா இருந்தாலும் சரி இல்லாட்டியும் சரி நாம அதெயெல்லாம் அப்படியே விழுங்கிக்கணும்… வேற என்ன பண்ண முடியும் சொல்லு?”

பாதுகாப்பானவர்கள் மத்தியில் இருக்கிறேன் என்பது புரிந்தது. இதற்குமேல் புகார் சொல்லவோ முறுமுறுக்கவோ என்ன இருக்கிறது? இது ஒன்றும் ரசா சயாங் ஹோட்டல் அறை இல்லை.  

காக் மாஹ் எனக்கு ஒவ்வொன்றாக விளக்கினாள். சுபுஹ் தொழுகைக்குப் பின் நடைபெறும் காலை ஒன்றுகூடல் பற்றியும் ஒவ்வொரு வாரமும் ஏழு குழுக்களாக பிரிந்து சுழல்முறையில் செய்யும் சமையலறை வேலைகள் இருந்தால் அதை செய்வது பற்றியும் காக் மாஹ் விளக்கிக் கொண்டிருக்க ஜூலியா இடையிடையே என்னைப் பார்த்து புன்னகைத்தாள். 

“பள்ளிக்கூட விடுதியில் இருக்கிறது போலத்தான் திமா. வித்தியாசம் என்னன்னா உன் மனசைத் தேற்ற இங்கு ஒருத்தருமில்ல, எல்லாத்தையும் நீயேதான் செய்துக்கணும்…”

“ஜூலியாவைப் பாரு, எப்படி ஒல்லி ஒடிசலா நல்லா இருக்கா. கட்டுப்பாடா சாப்பிடுவது, பத்தியம்னு ஒண்ணும் இங்கத் தேவையில்ல. நீயும் கொஞ்ச நாள்ல ஒல்லியாகிடுவ திமா.”

“ஹிஹிஹி… காக் மாஹ் சொல்றது சரிதான்.”

“உனக்கு ஏதாவது உடம்பு சரியில்லன்னா காக் மாஹ்கிட்ட சொல்லு, அவங்கதான் இங்க சீனியர். இங்குள்ள இன்ஸ்பெக்டர்கள் சின்னச் சின்ன விஷயங்களை அவ்வளவா கண்டுக்க மாட்டாங்க, திமா.”

“சரி சரி.. போதும். ஜூ, திமா. படுக்கலாம். நாளைக்கு விடியகாலையிலேயே எழுந்திரணும், இன்னிக்கி ராத்திரி விசித்திரமான சத்தம் ஏதும் கேட்டா கேட்காத மாதிரி இருக்கக் கத்துக்கோ. நாளாக ஆக நீ ஓகே ஆயிடுவ.”

எட்டாவது சிறைகூண்டில் சல்மா அக்காவுடனும் ஜூலியாவுடனும் எனக்குக் கிடைத்த சுருக்கமான அறிமுக அமர்வு அவ்வளவுதான். நான் இதுவரை தொலைக்காட்சியில் பார்த்த திரைப்படங்களோடும் நாடகங்களோடும் இது சிறிதும் ஒத்திருக்கவில்லை. யாருக்குத் தெரியும்… கோபக்கார, இரக்கமற்ற, கொடுமைக்கார கைதிகளுடன் ஒரே அறையில் வைக்கப்படுவேனோ என்று நினைத்து ஆரம்பத்தில் பயந்தேன்.  லெஸ்பியன்களின் சீண்டல்கள் பற்றியும்கூட பயமிருந்தது. அன்று இரவு கணநேரம்கூட தூங்க முடியவில்லை. எண்ணங்கள் பிதற்றியலைந்து கொண்டிருந்தன. பக்கத்து சிறைகூண்டில் அழுது கொண்டிருந்த பெண்களின் குரல்களும், பைத்தியக்காரிகள் போல் அலறிய பெண்களின் சப்தங்களும் ஒலித்துக்கொண்டே இருந்தன.

மனச்சோர்வூட்டும் இச்சூழலில் எல்லோரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டேன்.

சைரன் சத்தம் பலமாக ஒலிக்கும் வரையிலும் தூங்கிக் கிடந்தேன். அவசர அவசரமாக எழுந்து குளிப்பதற்காக அறை கதவு திறக்கப்படும் வரை காத்திருந்தேன். பின், காலைக் கூட்டத்திற்கு வரிசையில் நின்று, அப்பகுதித் தொழுகையறையில் சுபுஹ் தொழுகையை முடித்ததும் என்னால் விழுங்க முடியாத காலை உணவு.  சூடான தேநீர், இரண்டு ரொட்டித் துண்டுகள், சிறிதளவு வெண்ணெய், புளிப்பான ஜாம்.

“இந்த ஹோட்டல்ல உனக்கு ருசியான சாப்பாடா கொடுப்பாங்க, நல்லா இருக்கே.”

பழகப் பழகப் பழக்கமாகிவிடும் என்பது சாதாரண வாழ்க்கைச் சூழல்களுக்கு மட்டுமே பொருந்தும் பழமொழி. இங்கே அப்படியல்ல. இங்குள்ளச் சூழல் விசித்திரமானது, பெயரே தடுப்புக் காவல் மற்றும் சீர்திருத்த சிறை. வெளியில் இருப்பதைப் போல் அல்ல. இதுவே வெளியிலென்றால் நமக்கு வேண்டியதைச் சுதந்திரமாகத் தேர்வு செய்யலாம், விருப்பம் போல் உண்ணலாம், நடமாடலாம், விரும்பினால் மௌனமாய் இருக்கலாம் அல்லது அதிகமும் பேசலாம், சில நேரங்களில் அர்த்தமற்றதைப் பேசக்கூட இடமுண்டு.

இவையத்தனை சுதந்திரமும் எண் அச்சிடப்பட்ட இந்த வெளிர் பச்சை காக்கி சீருடை அணிந்தபின் மொத்தமாய் அற்றுப் போய்விட்டது. தேர்வு செய்வதற்கென இங்கு எதுதான் எஞ்சியிருக்கிறது? அலட்சியத்தாலும்  இச்சைகளைப் பின்தொடர்ந்ததாலும் நேர்ந்ததல்லவா இது.

ஜார்ஜ் டவுனில் உள்ள தனியார் நிறுவனத்தில் நிதிக் கணக்காளராக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து, முதலாளியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த என் வாழ்க்கை, பேராசையாலும் குருட்டு நம்பிக்கையாலும் இப்போது குப்பைத் தொட்டியில் வீசி எறியப்பட்டிருக்கிறது. வசீகரமும் அழகும் கூடிய இளங்காதலன் ஃபரீத் கான் வருகைக்குப் பின்னர்தான் எல்லாமும் ஒன்றன் பின் ஒன்றாக ஆரம்பித்தது. எடுத்த மாத்திரத்தில் அவனுடன் எப்படியெல்லாம் வாழலாம் என்று கனவு காணத் தொடங்கினேனே தவிர அவன் விளையாட்டுத்தனமாக என்னிடம் பழகுவதை ஏனோ கவனிக்கத் தவறியிருந்தேன். அப்பேற்பட்ட காதல் போதை.

சிறுகச் சிறுக எடுத்த பணத்தை ஃபரீத்தின் வங்கிக் கணக்கில் போட்டேன். அதில் என்ன தவறு? அப்படி எடுத்ததன்வழி சேர்ந்த பதினைந்தாயிரம் ரிங்கிட் எங்கள் திருமண செலவுக்கும் மகிழ்ச்சிக்கும்தானே. அத்தனை காலம் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த நிறுவன இயக்குநர் திரு. வோங், கிட்டத்தட்ட பத்து வருடங்கள் பழைமையான நிறுவனக் கணக்குகளை நுணுக்கமாக ஆராய தொடங்கியபோது எல்லாம் மாறியது. வழக்கறிஞரிடம் அவர் கூறியதன்படி, நான் மோசடி செய்த உண்மையான தொகை பதினைந்தாயிரத்தைவிட அதிகம். பிப்ரவரி 2000, அது ஒரு திங்கட்கிழமை. மிகச் சரியாக எனது இருபத்து நான்காவது வயதில் முதன்முறையாக விலங்கிடப்பட்டு பினாங்கு சாலையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

ஃபரீத் அதோடு காணாமல் போனான். ஐயாயிரம் ரிங்கிட் செலுத்தி என்னை ஜாமீன் எடுக்க வரச் சொல்லித் தொலைபேசியில் அவனிடம் கூறியிருந்தேன். வழக்கமாக அவன் இப்படி இருப்பவன் அல்ல. எனக்காக எப்போதும் நேரம் ஒதுக்குபவன்தான். வேலை போனது, ஃபரீத் போனான், கௌரவமும் போய்த் தொலைந்தது. கிரிக்கில் இருக்கும் குடும்பத்தை அழைப்பது சாத்தியமில்லாத காரியம். நான் ஏழைக் குடும்பத்துப் பெண். இருபத்து நான்கு வயதில் இதையெல்லாம் தனியாளாகச் சமாளிப்பது எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

இரண்டு நாள்களுக்கு ஒருமுறை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும். வீட்டு வாடகை? தினசரி செலவுக்குப் பணம்? முன்பு என் கண்களுக்கு நல்லவர் போலத் தோன்றிய திரு வோங் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு உதவ முன்வரவில்லை. அவரது நிபந்தனை எளிதானது: இரண்டு வாரத்திற்குள் எடுத்தப் பணத்தைத் திரும்ப செலுத்தினால் வழக்கிலிருந்து விலகிக்கொள்ள முடியும். அப்படியும் நான் இனி அங்கே வேலை செய்ய முடியாது. வங்கி தரப்பின் கூற்றுப்படி, ஃபரீத்தின் வங்கிக் கணக்கு மூடப்பட்டுவிட்டது.  ஃபரீத் அழைப்பான் என்று காத்திருப்பதும் பதினைந்தாயிரம் ரிங்கிட்டை எப்படிப் புரட்டுவது என்று யோசிப்பதுமாய் இனிமேலும் இப்படிப் பைத்தியக்காரியைப் போல வாழ்க்கையை என்னால் தொடரமுடியாது. அந்தக் கணம்தான் புரிந்தது, குற்றத்தை ஒப்புக்கொண்டு அதன் விளைவுகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர இனி வேறு வழியே இல்லை.

முதலில் பதினான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் பிரிவு 408ன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட போது எனக்கு மயக்கம் வருவது போல் இருந்தது.  என்னால் வேறேன்ன செய்துவிட முடியும்? என் மீது ஏற்பட்ட பரிதாபத்தினாலோ என்னவோ, நீதிபதி அதைப் பிரிவு 406ன் கீழ் நம்பிக்கைத் துரோகம் என மாற்றி பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.

 இரண்டு விசாரணைகளுக்குப் பின் தீர்ப்பு இறுதியானது. ஆதரவுக்குக்கூட என் பக்கம் ஒருவரும் வரவில்லை. இரண்டு அறைகள் கொண்ட என் வாடகை வீட்டை உள்ளிருந்த பொருள்களோடு சேர்த்து அப்படியே விட்டுவிட்டேன். அவை வெறுமனே அடிப்படைப் பொருள்கள் என்பதால் எனக்குப் பெரிதாக வருத்தமொன்றுமில்லை. ஃபரீத்தின் அறிமுகம் ஏற்பட்ட நாள்கள் தொடங்கி அவனுடன் வசதியான சூழலில் வாழ்வேன் என்று பெரிதும் நம்பிக்கொண்டிருந்தேன். உதவிக்கு யார் வருவார்?  நண்பர்களா? வெறுமனே அறிமுகானவர்கள் எல்லாரும் உதவிக்கு வந்துவிடுவார்களா? திரு வோங்கின் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த இரண்டாவது வருடத்திலிருந்து ஃபரீத்துடன் காதலில் மூழ்கியிருந்ததால் எவருடனுமே நெருக்கம் பாராட்டவில்லை.

அவ்வளவு குருடாக இருந்தேன். உண்மையில் ஃபரீத்தின் பின்னணி கூட தெளிவற்றதாகவே இருந்தது. எனக்கு அவனைப்பற்றி தெரிந்ததெல்லாம் அவன் கோலாலம்பூர்காரன், பினாங்கில் வேலை செய்துகொண்டே படித்துக்கொண்டிருக்கிறான் என்பது மட்டும்தான். எனக்கும் அவனுக்கும் ஒரே வயது. என்னை நானே கடிந்து கொண்டேன், வேறு வழியில்லை, காலம் கடந்து கடிந்துகொள்கிறேன் என்றாலுமே இப்போதைக்கு அதுவே எளிதான வழி. இரத்தக் கண்ணீர் வடித்தாலும்கூட தோளைத் தடவிக்கொடுத்து ஆற்றுப்படுத்த, சமாதானம் சொல்ல எவரும் இல்லை. இந்த நிலையில் இனி நியாய அநியாயம் குறித்துபேச வேண்டிய அவசியமும் இல்லை.

“அப்படியா தீமா, அவன் அப்படியே காணாம போயிட்டானா?”

“அதான் ஜூ, எங்க போய் தேடறது? ஒருவேளை அவன் மலேசியாகாரன்கூட இல்லையோ? காவல்துறை அவனைத் தேடி கட்டுபிடிக்கிறதுக்குக் காத்திருந்தா பல வருடம் ஆகிடுமோ என்னவோ?”

“என் தப்புதான் ஜூ. நண்பர்கள் என ஒருத்தரும் இல்ல. ஆம்பள விஷயத்துல என் மூளை இப்படி மந்தமாகிவிட்டது. உண்மையில் நான் திருடியப் பணத்தை என் சொந்தக் கணக்குலயே போட்டிருந்தாலும்கூட பரவாயில்லை. எப்படிப் பார்த்தாலும் அவங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சிதான் இருக்கும். குறைந்தபட்சம் நான் இந்த ஹோட்டல்க்கு வர வேண்டியிருந்திருக்காது.”

“யார் இங்க வரணும்னு விரும்புவாங்க தீமா. கடவுள் எல்லாத்தையும் ஏற்கனவே எழுதிவச்சிட்டாரு, நாம பெண்கள்னா அப்படித்தான். வெளிய போனதும் மறுபடியும் இந்தச் சமுதாயத்தை வேற எதிர்கொள்ளணும். நீ இன்னும் போதை பொருள் விற்றதுக்காக இங்க வந்தவங்களையும், விக்கிறதோட நிறுத்தாம அங்களுமே போதைக்கு அடிமையானவங்களையும் சந்திக்கல.  அவங்களெல்லாம் பாவம் தீமா. அவங்க நிலைமை இன்னும் மோசம். போதைப் பொருள் விற்கிறது, போதை மருந்து சாப்பிடறது, அதுக்கும் மேலபோய் உடம்பையும் விற்கிறாங்க… அப்படிப் பார்த்தால் நமெல்லாம் ஒண்ணுமே இல்ல!”

“இங்க இப்படித்தான் தீமா, ஜூ… நான் இங்க ரொம்ப காலமா இருக்கேன், பல மாதிரியான ஆளுங்களையும் பார்த்திருக்கேன். முதல்ல நான் உள்ள வந்தப்போ ‘ஏன் என் வாழ்க்கை இப்படி ஆச்சு’னு நினைத்து ஒரு மாதம் குழப்பத்திலேயே இருந்தேன். 1991ல் ஆரம்பித்து பத்துக்கும் மேற்பட்டவங்க இந்த எட்டாம் எண் ஹோட்டல்ல என்னோட சேர்ந்து தங்கியிருக்காங்க. ஒவ்வொருத்தரோட குணத்தையும் பார்த்திருக்கேன். அவர்களெல்லாரும் அப்படியொன்னும் கெட்டவங்களும் இல்லை. எல்லார் கதையும்  ஏறக்குறைய ஒண்ணுதான்… எப்படிச் சுற்றி வளைத்து வந்தாலும், ஆண்களோட சவகாசம்தான்.. என்னத்த சொல்ல!”

“காக் மாஹ்… சலேஹாவை நினைவிருக்கா? நான் இங்க வந்தப் புதுசுல இருந்தாளே? சூப்பர் மார்க்கெட்ல குழந்தைக்குப் பால் மாவு திருடியதற்காக ரெண்டு மாசம் தண்டனை, அவளைப் பார்க்க பாவமா இருந்துச்சு. ஒவ்வொரு இரவும் குழந்தையை நினைச்சு அழுவா. அவளோட கணவன் ஏன் பணம் கொடுக்கல, அவன் எங்க போனான்னு நீதிபதி கேட்கவே இல்லையே… பெண்களோட வாழ்க்கைனா அப்படித்தான்,”  ஜூலியா சொன்னாள்.

“அட எப்படி மறக்க முடியும். அவ ஒரு தடவை என்னைப் பார்க்க வந்தா. இப்போ நல்லா இருக்கா. ஒரு ரெஸ்டாரண்ட்ல பாத்திரம் கழுவற வேலை செஞ்சுட்டு இருக்கா. என்னை இன்னமும் நினைவு வெச்சிருக்கா. நம்ம போல பெண்கள் வாழ்க்கையைக் கடவுள் இப்படித்தான் எழுதி வச்சிருக்கார் போல, எனக்கே புரியல போ!”

எட்டாம் எண் ஹோட்டலில் வழக்கமான என் அன்றாட வாழ்க்கை அவ்வாறுதான் ஓடியது. காலம் செல்லச் செல்ல பழகிவிட்டேன். மரத்துப் போச்சுனு சொல்வாங்களே அப்படி.  ஜூலியாவும் சல்மாவும் அவர்களுக்குத் தெரிந்த வகையில் எனக்கு உதவினார்கள். சமய வகுப்பு, தையல் வகுப்பு, சமையல் உட்பட  தேமல், சொறி சிரங்கால் மோசமாகச் சேதமடைந்த என் சருமத்திற்கு மருத்துவம் பார்ப்பதும் அதனுள் அடங்கும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களின் போர்வைகளையும் துண்டுகளையும் பயன்படுத்தியதால் ஏற்பட்ட நோய்மைகள் பல.

“அடடா, உன் சருமம் ரொம்ப மென்மையானது தீமா, நடிகைகளோட தோல் மாதிரி… ஹிஹிஹி, எங்களுக்கெல்லாம் ஆரம்பத்துலேயே வந்துடுச்சு. அந்தக் கடைசி குளியலறையில இருக்கும் என் கந்தக சோப்பை பயன்படித்திக்கோ. நாளைக்கு உனக்குப் புதுசா போர்வையும் துண்டும் கேட்டு வாங்கித் தறேன். நான் வயசானவ கேட்டால் இன்ஸ்பெக்டர் நிச்சயம் தருவாங்க.”

என் வாழ்நாளில் இப்படியான தோல் நோயை அனுபவித்ததே இல்லை. புலம்புவதில் என்ன இருக்கு? சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நல்லவேளை சல்மாவுக்கு அனுபவம் அதிகம், அவள் அங்குப் பழைய ஆள். அவள் குரலுக்கு அங்கு ஒரு மதிப்பு இருந்தது. இதுவொன்றும் பத்து ஃபெரிங்கியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அல்ல. சிறை நிர்வாகத்திடமிருந்து புதிய போர்வையும் துண்டும் கந்தக சோப்பும் கேட்டுப் பெற்றதால்தான் நான் அனுபவித்த தோல் நோய் குறைந்தது.

“இந்தத் தடுப்புக் காவலில் சுவாரஸ்யமானதுனு எதையாவது சொல்ல முடியுமா? இது என்ன கேள்வி? பெயரே தடுப்பு காவல் சிறை. நடமாட்டம் கறாராக கட்டுப்படுத்தப்படுகிறது. இங்குக் கட்டாயம் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கிறது. சில சமயங்களில் சமய வகுப்பின்போது பேச்சாளர் சுவாரஸ்யமான ஆளாக இல்லாவிட்டால் நான் தூக்கத்தை அடக்க முடியாம அடக்கி தலையாட்டிக் கொண்டிருப்பேன். ஆனால் அதுதான் நான் உண்மையாகவே ஓய்வெடுக்கும் நேரம். வழக்கம்போல், சல்மாவும் ஜூலியாவும் இந்த ஆரம்பகட்ட திண்டாட்டங்களையெல்லாம் கடக்க எனக்கு நிறையவே உதவினார்கள். குறிப்பாக ஆண்களைப் போன்ற குணமுடைய பெண் கைதிகளிடமிருந்து வந்த பாலியல் தொந்தரவுகள் உட்பட அனைத்திலிருந்தும் என்னைக் காப்பாற்றினார்கள்”

“ஏய்! சுரேஷா, இவளை நீ தொந்தரவு செய்யாதே… இவ என் ஆள். நீ வேணும்னா வேற யாரையாவது தேடிக்கோ.”

“ஓ… இவ புதுசா வந்தவ யாருடைய ஆளும் கிடையாதுன்னு நினைச்சேன், செம்மையா இருக்கா. கெட்டிக்காரிதான் நீ! ருசிச்சி நக்குவதற்கு நல்ல சிப்பி கிடைக்க கொடுத்து வைத்திருக்கனுமே.”

“வம்பு பேச்சு பேசாதே… நான் யாரு, என்ன செய்துட்டு உள்ளே வந்தேன்னு உனக்குத் தெரியாது. அதனால, இந்தத் தொல்லை கொடுக்குற வேலையெல்லாம் வேணாம் சுரேஷா.”

குளியலறையில் நடந்த சம்பவம் என்னை மிகவும் பயமுறுத்தியது. நான் இவைகளையெல்லாம் அனுபவித்ததில்லை. இந்த அருவருப்பான பேச்சுகளும் கடுமையான சொற்களும் எனக்கு இதெதுவுமே பழக்கமில்லை. அவை குறித்து சல்மாவிடம் “அப்படினா என்னா?” என கேட்டபோது,  அவள் கலகலவென்று சிரித்துவிட்டாள்.

“அவங்களுக்கு ஆண்துணை இல்லை. அதான் இப்படி… கடவுளோட ஆச்சரியமான படைப்பு. இதெல்லாம் மனிதனோட மோக வெறி தீமா. ஆண்கள் இவங்களுக்கு என்னதான் செய்தாலும் சரி, இவங்க இப்படிதான். அது மேலயே ஏக்கமாகி அதையே நினைச்சுக்கிட்டு இருப்பாங்க. ஆண்கள் கெடைக்காதப்போ ஆண்மாதிரி ஒன்ன  தேடுவாங்க. உனக்கு இது என்னன்னு புரியவே இல்லையா? ரொம்பவே மந்தமா இருக்கே இந்தப் பொண்ணு…”

“எனக்கு நிஜமாவே புரியலை காக் மாஹ். எனக்கு இதெல்லாம் பயமா இருக்கு.”

“சிலர் இருக்காங்க தீமா, வெளிய விடுதலையாகி போற வரைக்கும் காதலிச்சுக்கிட்டு… நான் வந்த புதுசுல ரெண்டு மூணு பேர் எங்கிட்டயும் முயற்சி பண்ணாங்க தீமா. காக் மாஹ்தான் காப்பாத்துனாங்க. இன்ஸ்பெக்டருக்குதெரிஞ்சா வழக்கப்படி வேறு வேறு கூண்டுகளுக்கு பிரிச்சு விட்டுருவாங்க. சிலர் பேர்  எனக்கும் காக் மாஹ்வுக்கும் உறவு இருக்குனு கூடச் சொல்லியிருக்காங்க… பைத்தியக்காரத்தனமா இல்ல?”

“நிஜமா ஜூ?”

“அதுங்கெல்லாம் நாசமாப் போகட்டும். நீ இடங்கொடுக்காம இருக்கற வரைக்கும் ஒரு சிக்கலில்ல. இப்போ வாங்க தூங்குவோம் ஜூ… தீமா. நாளைக்கு நாமதான் சமைக்கணும். அட்டவணை வந்துடுச்சு, நாம நாளைக்கு வீட்டுக்காரிங்க… புருஷன் இல்லாத வீட்டுக்காரிங்க!”

சுபுஹ் தொழுகைக்குப் பிறகு நாங்கள் சமையலறையில் இருந்தோம். கட்டு கட்டாக கடுகு கீரையையும் சாக்குகள் நிறைய வெங்காயத்தையும், நாங்கள் மற்ற பத்து பெண் கைதிகளுடன் சேர்ந்து அரிந்து முடிக்க வேண்டும். எனக்கும் ஜூலியாவுக்கும் எட்டு கட்டுகளில் இருந்த கடுகு கீரையை நறுக்கி கீரை சொதி வைக்க ஏற்பாடு செய்யப் பணிக்கப்பட்டது. இந்த வேலைகளுக்கு நாங்கள் அனைவரும் கத்திகளைப் பயன்படுத்துவதால் கண்காணிப்பு பலமாக இருந்தது. அப்போதுதான் பணியிலிருந்த இன்ஸ்பெக்டரை சல்மா கடுமையாக ஏசிக்கொண்டிருந்த குரல் கேட்டது. எங்கள் எல்லோரது கண்களும் அறையின் மூலையில் சமையல் செய்யும் இடத்தை நோக்கியிருந்தன.”

“நான் இந்த வேலை செய்ய மறுக்கல, ஆனா ஆரம்பத்திலேயே, 91ல இருந்தே சொல்லிட்டேன். கோழி, இறைச்சி வெட்டும் வேலையை எனக்கு கொடுக்காதிங்கனு. உங்ககிட்ட யாரும் சொல்லலயா இன்ஸ்பெக்டர்?”

“இது வேலை உத்தரவு சல்மா. நான் புதுசா வந்திருக்கேன். எனக்கு எப்படி இதெல்லாத்துக்கும் நேரம் இருக்கும். என்கிட்ட யாரும் சொல்லல. எல்லோரும் இங்கக் கொடுக்கப்படுகிற வேலையைச் செய்றாங்க. நீ மட்டும் எப்படி உன் வசதிக்கு வேலையைத் தேர்ந்தெடுக்க முடியும்? என்ன இது சல்மா?”

“எனக்கு அதெல்லாம் தெரியாது.  வேற வேலை கொடுங்க, செய்யறேன். நான் ஐந்து நட்சத்திர ஹோட்டல்ல வாழலனு தெரியும்! ஆனா எனக்கு இந்த வேலையகொடுக்க வேண்டாம்னு ஆரம்பத்திலயே சொல்லிட்டேன்!”

நான் ஜூலியாவைப் பார்த்தேன், ஜூலியா என்னைப் பார்த்தாள். இருவரும் வார்த்தைகளற்று, சல்மாவின் கோபத்தைக் கேட்டுக்கொண்டிருந்தோம். வேறொரு கைதி எழுந்து சல்மாவுக்குப் பதிலாக மாட்டிறைச்சியும் கோழியும் வெட்டும் வேலையை ஏற்றுக் கொண்டபோது  சூழல் மீண்டும் பழையபடி அமைதியானது. சல்மா வெங்காயம் உரித்து, வெட்டும் வேலைக்கு மாறியிருந்தாள். வெங்காயம் வெட்டுவது திடுமென வரவைத்துவிடும் கண்ணீரைத் தாங்க முடியாததால் பல கைதிகள் தவிர்க்கும் வேலை அது. மொத்தம் எட்டுச் சாக்கு வெங்காயம். நிலைமை மீண்டும் சரியானது.

சிறையில் என்னென்ன சமையல் வகைகள் இருக்கும்? கேட்கவே வேண்டியதில்லை, மிகச் சுவையான உணவு ரெண்டாங். அதுவும் முக்கியமான நாள்களில் அல்லது பெரிய பெரிய அதிகாரிகள் வருகை தரும்போது மட்டும். மற்றபடி வெறும் கடாயில் பொரித்த மீனும் காய்கறி சொதியும்தான். எப்போதாவது மாசாக் லெமாக்கும் நீர்த்த பெலாசான் சம்பாலும் கிடைக்கும். இதுவொன்றும் புத்திசாலி மாணவர்கள் பயிலும் மாரா(MARA) நிதியுதவி பெற்ற விடுதி அல்ல. பசித்த வயிற்றுக்காகவேனும் வாய் விழுங்கக் கற்றுக்கொள்ள வேண்டும். சல்மா முன்பு சொன்னது சரிதான், இங்கே டயட் தேவையில்லை, தானாகவே உடல் ‘ஸ்லிம்’ ஆகிவிடும். 

***

ஒரு மாலைநேர அஸர் தொழுகைக்குப் பின் உடற்பயிற்சி நேரத்தில் கைதிகள் கைப்பந்து விளையாடுவதைப் பார்த்தபடி நானும் ஜூலியாவும் உட்கார்ந்திருந்தோம். உண்மையில் விளையாட்டின் வழியாக அவர்கள் கொட்டித் தீர்க்கும் உணர்வுகளைப் பார்க்கவே வேடிக்கையாக இருந்தது. மாறிமாறி சரமாரியாகத் திட்டிக்கொள்வதும், ஒருவருக்கொருவர் நையாண்டி செய்து கொள்வதுமாக இருந்தனர். சூழல் சற்று சத்தமாகவும் கூச்சலாகவும் பதட்டமாகவும் மாறும்போது இன்ஸ்பெக்டர் நடுவர் போல விசில் ஊதிக்கொண்டிருந்தார். நானும் ஜூலியாவும் வயிறு குலுங்கச் சிரித்தோம். அதுதான் மனதுக்குக் கிடைத்த ஒரே கேளிக்கை.

கேட்காமலேயே ஜூலியா தன் துயரக் கதையை மனம் திறந்து சொல்லத் தொடங்கினாள். மற்றவர்களின் கதைகளைப் பெரிதாகக் கேட்க விரும்பாத நான் வேறு வழியின்றி கேட்க ஆரம்பித்தேன்.

“இங்க இன்னும் ஒரு மாசந்தான் இருப்பேன் தீமா.  அதுக்கப்புறம் இன்னும் ரெண்டு மாசம் சுங்கை பட்டாணிக்கு மாத்தறாங்களாம். அது விடுதலைக்கு முந்தைய சிறை மையம். அதுக்குத்தான் அன்றைக்கு அலுவலகத்துக்கு அழைச்சிட்டு போனாங்க.”

“அங்கு எப்படி இருக்கும் ஜூ?”

“அங்க கொஞ்சம் தளர்வான சூழல்தான். இங்க மாதிரி மூணு அடுக்கு சுவர்கள் இல்ல. தொழில் பயிற்சியும், மற்ற மற்ற பயிற்சிகளும் கற்று கொடுப்பாங்க. பிறகு விடுதலைதான். அங்க எப்ப போவோம்னு ரொம்ப ஆவலா இருக்கு…”

“அப்படின்னா நல்லதுதான். நான் விடுதலையாகி வெளிய போகும்போது எனக்கு 35 வயசாகிரும் ஜூ. நான் அதைப்பற்றி அதிகமா யோசிக்க விரும்பல, கடவுளா பார்த்துதான் எனக்கு எல்லாத்தையும் அமைத்து கொடுக்கணும்.”

“நான் ஏன் இங்க வந்தேன்னு உனக்குத் தெரியுமா தீமா?”

“எனக்கு எப்படித் தெரியும், கேக்க தயக்கமாக இருந்துச்சு. மத்தவங்க விஷயங்களைப் பற்றி எப்படிக் கேக்கறதுனு தெரியல ஜூ! நான் அந்த மாதிரி ஆளு…”

“நான் பிரிவு 506ன் கீழ் இங்க வந்தேன், கொலை மிரட்டல், ஆறு மாதம் சிறை…”

“நீ யாரை மிரட்டினே ஜூ?”

“காக் மாஹ் முன்னாடி சொன்னது மாதிரிதான், எல்லாமே ஆம்பளையால, என் புருஷன்தான். நான் சின்ன வயசுலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். கரீமோட ஓடிப்போய் புக்கிட் மெர்தாஜம்ல திருமணம் செஞ்சுக்கிட்டேன். அவனும் வேலை செய்றான், நானும் வேலை செய்றேன் என்பதால பிரச்சனை இல்லைனு நினைச்சேன். அவனுக்கு வங்கியில வேலை, நல்லப் பதவியில இருந்தான். குழந்தை பொறந்ததுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து கூலிம்ல ஒரு மலிவு விலை தரைவீடு வாங்கினோம். என் குடும்பம் ரொம்ப நாளாவே என்னை ஏற்றுக்கல. குழந்தைய கூட்டிட்டுப் போனாலும் பார்த்தும் பாக்காத மாதிரி நடந்துக்கிட்டாங்க. அவங்களோட கோபம் எனக்கு புரிந்தது. மாமனார் வீட்டுக்காரங்க அதைவிட மோசம். அவங்களுக்கு என்னை கொஞ்சமும் பிடிக்கல, அவங்க கூட பழகக்கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கல!”

“ம்ம்… பரவாயில்ல… வீடு வாங்கிட்டீங்களே ஜூ.”

“அதுதான் எல்லா பிரச்சனைக்கும் ஆரம்பம் தீமா. நல்லாதான் இருந்தோம், கரீம் புத்திய காட்ட தொடங்கிட்டான்.”

“அவனுக்கு வேற பொம்பளத் தொடர்பு இருந்துச்சா?”

“இல்ல, வேற பொம்பள இல்லை. சுறுசுறுப்பா இருக்கணும், மனஅழுத்தம் போகணும், கூர்மையா சிந்திக்கணும்னு சொல்லி முதல்ல ஐஸ், ஷாபு போதைப் பொருள் எடுக்க ஆரம்பிச்சான். எனக்கு இதெல்லாம் எப்படித் தெரியும். நாளாக நாளாக பழக்கம் மோசமாகிக்கிட்டே போனது. ஏதாவது மருத்துவம் பார்க்க போகலாம்னு சொன்னாலும் கேட்கல. வேலையில நிறைய கோளாறு, வேலையவிட்டு தூக்கி எறிஞ்சுட்டானுங்க. நான் கூலிம்ல தொழிற்சாலையில கிளார்க் வேலை செய்துகிட்டு இருந்தேன். கிளார்க் சம்பளம் எல்லாத்துக்கும் எப்படி போதுமானதா இருக்கும். கடவுளோட சோதனை ஏதோ கொஞ்ச காலத்துக்குத்தான்னு நெனச்சேன். நாள்பட நாள்பட மோசமாயிக்கிட்டே போச்சு தீமா.

வளையல், சங்கிலி, கல்யாண மோதிரம் எல்லாத்தையும் கொண்டுபோய் அடமானம் வெச்சுட்டான். அப்போதும் நான் பொறுமையாதான் இருந்தேன்… தனியாளா எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு விழுங்கிக்கிட்டேன்! இதெல்லாம் காசு விஷயம்தானே, வருமானம் வந்தா மறுபடியும் வாங்கிக்கலாம்னு விட்டுட்டேன்…”

“அந்த அளவுக்குப் போயிடுச்சா?”

“கடைசியில எனக்கு ஒண்ணுமே மிச்சமில்லாம போயிடுச்சி தீமா. அக்கம் பக்கம் ஆளுங்க பேசுறதையெல்லாம் விடு. மறுபடியும் அவனை டாக்டர்கிட்ட போகச் சொன்னேன், அவன் கேட்கவே இல்லை. கிளார்க் சம்பளம் ஆயிரம் வெள்ளி, வீட்டுக்குக் கொண்டு வந்ததும் அப்படியே முடிஞ்சு போயிடும். ஆளுங்க முன்னாடி நான் எவ்வளவோ அவமானப்பட்டேன். கடவுள் ஒருத்தனுக்குத்தான் தெரியும்! வேலை இடத்துல பைத்தியக்காரி மாதிரி ஆயிட்டேன். ரொம்பவும் மனச்சோர்வு, மௌனம், எதற்கெடுத்தாலும் சட்டென கோபம் வந்துடும். சில சமயங்கள்ல என்னால ஒண்ணுமே யோசிக்க முடியாம போயிடும்.”

“குழந்தையோட நிலைமை?”

“உண்மையிலயே நான் கோபத்தின் உச்சிக்குப் போனது  அப்போதான், தீமா.  வங்கியிலிருந்து அழைத்து கரீம் வீட்டையே அடமானம் வெச்சுட்டான்னு சொன்னாங்க. நான் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வரும்போது குழந்தை வீட்டுல இல்ல. பைத்தியக்காரி மாதிரி ஏதேதோ யோசிச்சேன். மூணு வயசுக் குழந்தையையும் இவன் வித்துட்டானோனு சந்தேகம். சமையலறையில இருந்த கத்தியை எடுத்துக்கிட்டு சண்டைக்கு நின்னேன். கையில் சிக்கியிருந்தால் எப்படியும் கரீமை பதினான்கு தடவையாவது குத்தியிருப்பேன். நான் முன்னாடி நிற்பதுகூட தெரியாத அளவுக்கு அவன் ‘ஐஸ்’ இழுத்துட்டு மயக்கத்துல இருந்தான். போதை மருந்து இருந்த பாத்திரத்த எட்டி உதைச்சேன், கோபத்தோட திமிரிக்கிட்டு வந்தான். என் கையில கத்தி இருக்கிறதைப் பார்த்ததும் வீட்டை விட்டு வெளிய ஓடினான்.  

நாங்க வசித்த தாமானை சுத்தி அவனைத் துரத்தி ஓடினேன். அந்த நேரத்துல வெட்கமெல்லாம் இல்ல. எல்லா பலத்தையும் திரட்டி அவனை விரட்டினேன்.  ஒரு கட்டத்துல அவன் கீழே விழுந்தப்ப நான் நிஜமாவே அவனைக் குத்தப்போனேன். அந்த நேரம் பார்த்து போலீஸ் வானத்துல துப்பாக்கி சூடு போட்டாங்க. அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்களும் நிறையப் பேர் கூடி எங்களைச் சுத்தி வளைச்சுட்டாங்க… அப்போ பைத்தியக்காரி மாதிரி ஓயாம கத்திக்கிட்டே இருந்தேன். அன்னிக்கு ராத்திரியே நான் லாக்கப்ல தூங்குற நிலை வந்துடுச்சி!” 

“ஐயோ, அந்த அளவுக்கா போச்சா ஜூ?”

“சுருக்கமாச் சொல்லணும்னா தீமா, என் வழக்கறிஞரால கூட ஒண்ணும் செய்ய முடியல. கரீமும் விசாரணையில புதுசு புதுசா பொய் சொல்லிட்டே போனான். இரண்டு மூன்று தடவை நான் சாப்பாட்டுல விஷம் கொடுக்க முயன்றேன்னும், நான் குழந்தையை நல்லா கவனிக்கலனும், அதான் அவன் வேறவழி இல்லாம குழந்தையை அவனோட அக்காகிட்ட கொடுத்துட்டான்னும் சொன்னான். நீதிபதி முன்னாடியே மூன்று முறை தலாக் சொல்லி என்னை விவாகரத்து செஞ்சுட்டான். அவன் சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாத்தையும் கேட்டு உறைஞ்சுபோனேன். என்னால வேறு ஒண்ணும் சொல்ல முடியல. அந்த நேரத்துல என் வாழ்க்கையில பக்கபலமா யாருமே இல்லை. அரசு வழக்கறிஞர் மட்டும் இருந்தார். ஒருவேளை அவருமேகூட ஏனோதானோன்னு வேலை செஞ்சிருக்கலாம். நான் இன்னுமின்னும் மௌனமாகி ஒடுங்கிட்டேன். வழக்கறிஞரும் இந்த வழக்குக்கான தண்டனை காலம் நீண்ட நாளாக இருக்காதுனு சொன்னார்.”

“இதுக்கப்புறம் என்ன பண்ணப் போற ஜூ?”

“தெரியல… ஆனா இந்த எட்டாம் நம்பர் ஹோட்டல்ல இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன் தீமா. நாம முன்பு வெளியில வாழ்வதற்காக எவ்வளவு போராடினோம். ஆனா இங்கப்பாரு, எல்லாமே குறைச்சல்தான். உடையைப் பத்தி யாரு என்ன சொல்வாங்கன்னு நினைக்கவே வேண்டாம். சாப்பாட்டை மதிக்கணும், கடவுள் பற்றிய நினைப்பும் புதிசா அறிவ வளர்த்துகணும் என்ற நினைப்பும் எப்போதும் இருந்துக்கிட்டேதான் இருக்கு. நான் இனிமே நேர்மறையானதை மட்டும் யோசிக்கப் போறேன். எங்காவது போய், புதுசா வாழ்க்கையை ஆரம்பிப்பேன் தீமா. சமையல், பாத்திரம் கழுவறதுனு எதுவாயிருந்தாலும் பரவாயில்ல. சுதந்திரமா சந்தோஷமா இருந்தா போதும். விடுதலையாகும்போது 31 வயசு ஆகியிருக்கும். அது இள வயதில்ல, தீமா.”

“பரவாயில்லை, 31 வயசுலயும்கூட எல்லாம் சாத்தியம்தான் ஜூ. எதையும் அதிகமா யோசிக்காதே… கடவுள் உனக்கு எல்லாத்தையும் நல்லபடியா நடத்திக் கொடுப்பார்.”

“2000ஆம் வருசத்த நெருங்கும்போது நான் இப்படிவந்து இந்த எட்டாம் நம்பர் ஹோட்டல்ல கிடப்பேன்னு நினைத்துக்கூட பார்க்கல தீமா. நல்லா, சந்தோஷமாக, அழகழகான புதிய விஷயங்கள் நிறைந்ததாக 2000ஆம் வருசம் இருக்கும்னு மற்றவங்களப் போல நானும் நினைச்சேன், நம்பினேன். கடவுளோட ஏற்பாடு  அற்புதமானது. கடவுள் ஏன் என்னை மட்டும் ஜாலான் கோல், புலாவ் பினாங்கில் வைத்தார்னுதான் தெரியல?”

மனதுக்கு ஆறுதல் கொடுக்கும் வார்த்தைகளை நாங்கள் அடிக்கடி ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருந்தோம். இன்னும் என்ன ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கிறது? இந்த மூன்று அடுக்குச் சுவர்கள்தான் எல்லா தண்டனைகளுக்குமான பதில். காலம்தான் எல்லாவற்றுக்கும் மருந்து என சொல்வார்களே அதென்னவோ சரியாகத்தான் இருக்கிறது. எட்டாம் எண் ஹோட்டலில் எங்கள் மூவரில், சல்மாதான் மூத்தவள். எப்போதாவது நான் அவள் முகத்தைத் திருட்டுத்தனமாகப் பார்ப்பேன். அவளது கண்களுக்குக் கீழே உள்ள நுண்ணிய கோடுகளுக்கும் நிச்சயம் தனித்த கதைகள் இருக்கும். வழக்கம்போல், நான் கேட்கத் துணியவில்லை. அவளே சொன்னால், நான் கேட்டுக் கொள்வேன்.

“என் முகத்தையே ஏன் பார்க்கிற தீமா?”

“இல்லை, காக் மாஹ் இளமையில எப்படி இருந்திருப்பீங்கன்னு கற்பனை பண்ணிக்கிட்டிருந்தேன், ஹஹஹா!”

ரெஜினா இப்ராஹிம்

அவள் உயரமாக, உடல் மெலிந்து, மஞ்சள் கலந்த வெண்மையான நிறத்துடன், வளைந்த இடையுடனும் பருத்த மார்புடனும் இருந்தாள். இப்போது குட்டையாகவும் கொஞ்சம் நரைத்தும் இருந்தாலும் முன்பு அவள் கூந்தல் நிச்சயம் அலையலையாய் இருந்திருக்கும். பினாங்கைச் பூர்வீகமாக கொண்ட அழகான  இந்திய முஸ்லிம் மாமிகளின் இரத்த கலப்பு இருக்க வாய்ப்புண்டு.

“கற்பனை பண்ணிக்கிட்டிருக்கியா… எல்லாப் பெண்களும் இளமையில அழகாத்தான் இருப்பாங்க தீமா. காலப்போக்குல எல்லாமே பெருத்திடும். நேரம் நல்லா இல்லைன்னா, நாம என்னதான் நல்லது செஞ்சாலும் ஆளுங்க நமக்குக் கெட்டததான் செய்வாங்க…”

“ஏன் காக் மாஹ் அப்படிச் சொல்றீங்க? இப்போவும் பார்க்க நல்ல ஸ்லிம்மா இருக்கீங்களே.”

“ஹஹஹஹ…  என் மனசை கவர தெரிஞ்சவளா இருக்கே. ஒல்லிதான் தீமா. நாம இந்த ஹோட்டல்ல எவ்வளவு சத்தான சாப்பாடு சாப்பாடுறோம். பின்ன ஒல்லியா இல்லாம…”

“அதான்… எனக்கும் இப்போதான் சாப்பாட்டோட அருமை தெரியுது. எப்போ வெள்ளிக்கிழமை வரும் பூசணிக்காய் லெமாக்கும் தெமெனுங் மீன் வறுவலும் வரும் சாப்பிடலாம்னு காத்திருக்கேன். ரொம்ப ருசியா இருக்கு காக் மாஹ்!”

“முதல்ல நான் இங்க வந்தப்போ எதுவும் தொண்டைக்குள்ள இறங்கல, தீமா. நான் பணக்காரக் குடும்பப் பொண்ணு. சாப்பாடு உடை எல்லாம் சொல்லவே வேண்டாம். டோபி காவுட்ல நான்தான் செம்ம ஸ்டைலானவ. உன் நைனாவ சின்ன வயசுலேயே திருமணம் செஞ்சுக்கிட்டேன். எங்க குடும்பத்துல எல்லோரும் வியாபாரம் செய்யுற ஆளுங்க. நைனா முகம்மதுவ நிக்கா பண்ணும்போது என் குடும்பத்துல ஒருத்தரும் சம்மதிக்கல. அரபுக்காரங்க கலப்பு மாதிரி இருக்கிற எனக்கு கருப்பான உன் நாநா பொருத்தமில்லைன்னு சொன்னாங்க. உன் நைனாவும் வியாபாரம் செய்யுற குடும்பம்தான், ஆனா சின்னதா வியாபாரம் பண்ணுறவங்க.”

“அவங்களுக்குப் பிடிக்கலையா?”

“என் அப்பாவுக்கு கொஞ்சமும் விருப்பமில்ல. அவர் பழைய காலத்து ஆள், குடும்ப கெளரவத்தைக் காப்பாத்தனும் அப்படி இப்படினு. இந்தியாகாரங்களோட  பழைய ஜாதி முறையோ என்னவோ எனக்குத் தெரியல. அவருக்கு அவ்வளவு கோபம்…. மதீனாவுல இருக்கும் உறவுக்காரரை எனக்கு நிக்கா செஞ்சு வைக்க பேசி முடிச்சுட்டாங்கனு மாமி சொன்னாங்க. கடைசியில என்ன நடந்ததுன்னா, நான் உன் நைனாவையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவர் வீட்டு ஆளுங்க மட்டும்தான் என் கல்யாணத்துல இருந்தாங்க. என்னதான் கருப்புன்னாலும் மனசுக்குப் பிடிச்சுட்டா என்ன செய்ய முடியும். ஆனா உன் நைனாவுக்கு ரொம்ப கல் மனசு!”

“காக் மாஹ் எல்லாத்தையும் ஏற்பாடு செய்ய யார் உதவி செய்தாங்க? “

“நைனா முகம்மதோட குடும்பம்தான். என் அப்பா தொடக்கத்துலேர்ந்தே எதிலும் கலந்துக்க விரும்பல. நான் நாலு குழந்தைகள் பெத்து, வியாபாரத்துல முன்னேறிய பிறகுதான் அவங்களுக்குக் கண் தெரிஞ்சது.”

“வியாபாரத்துல நல்ல முன்னேற்றமா காக் மாஹ்?”

“முன்னேறாம எப்படி. சேர்ந்து கஷ்டப்பட்டோம் சேர்ந்தே எல்லா சௌகரியத்தையும் அனுபவித்தோம். அவரும் வியாபாரம் செய்தாரு, நிக்கா ஆன முதல் வருஷம் வாடகை வீட்டுக்கு பக்கத்துலயே நானும் வியாபாரம் செய்தேன். சேர்ந்து மூலதனம் சேர்த்தோம். உன் நைனா மூணு நாசி கண்டார் கிளைகள் திறக்கற அளவுக்கு வளர்ந்தோம்… ரெண்டு தீவுல, ஒண்ணு அக்கரையில.”

“ஓ! பிரமாதம்… நாசி கண்டார் முதலாளியோட மனைவினு சொல்லுங்க, காக் மாஹ்.”

“அப்போ கொஞ்சம் வசதியா இருந்துச்சு, சௌகரியம் இருந்தாலும்  இல்லன்னாலும் கடுமையா வேலை செஞ்சோம், தீமா. அந்த வேலையில நான் ஆம்பிளையாளோட குணத்த கவனிக்க மறந்துட்டேன். மூணு ரெஸ்டாரன்ட்லயும் வேலையில மூழ்கி என் உடம்பு கொழுப்பு வெச்சு தடிச்சி போச்சி, ‘பன்னி மாதிரி’ன்னு உன் நைனா சண்டைப்போடும்போது சொன்னார். என்னைப் பன்னின்னு சொல்ல அவருக்கு எப்படி முடிஞ்சுது? அட, என்னா மனுஷன்…!”

“ஐயோ அப்படியெல்லாமா?”

“பணம் வந்தவுடனே மனுஷங்க மாறிடுவாங்க தீமா. அப்போ நான் வீட்டுலயே இருந்து நாலு குழந்தைகளையும் பார்த்துக்கிட்டிருந்தேன். இனிமே வேலை செய்ய வேண்டாம்னு உன் நைனா சொன்னாரு! எல்லோரும் வந்து கொட்டிட்டு போகுற விதவிதமான கதைகளையும் கேட்டுக்கொண்டே இருந்தேன். இந்தோனேஷியப் பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டாராம், சீனப் பெண்ணை வெச்சிருக்காராம்… நான் அமைதியா இருந்தேன்.

ஆ… தெரியாத மாதிரி விட்டுரு, உனக்குச் செலவுக்குப் பணம், சாப்பாடு உடை எல்லாத்தையும் அவர் பார்த்துக்கிறாரே அதுபோதும்னு என் கூட்டாளிகள், சகோதரிகள் ரொம்ப சுலபமா அறிவுரை சொல்லிட்டு போயிட்டாங்க. நானும் அப்படி நினைத்து வாழ முயற்சி செய்யாம இல்ல… கண்டுகொள்ளாத மாதிரி இருக்க முயற்சி செய்தேன். ஆனா அவரை நிக்கா பண்ணிக்க நான் பட்ட கஷ்டத்தையும் அவரோட குழந்தைகளைப் பெத்துக்க அனுபவிச்ச வலியையும், குடும்பத்தை விட்டு தூக்கி எறியப்பட்டதையும் நினைச்சு பார்க்குறப்போ எனக்குக் கோபம் வந்துடுச்சு!”

“ம்ம்… ஓ!”

“இன்னும் நினைவிருக்கு, ஒரு நாள் ராத்திரி 8:30 மணிக்கு நான் ஜாலான் ஈட்டன்ல இருக்கிற ரெஸ்டாரண்ட்டுக்குப் போனேன். பின்புற கதவு வழியா உள்ள போய், நேரா மேல் மாடியில உன் நைனாவோட ஓய்வறைக்கு போனேன். இந்தியாவில இருந்து வந்த எங்களோட வேலையாட்கள் உடனே சத்தம் போட தொடங்கிட்டாங்க, அவங்களுக்குள்ளாகவே மலையாளத்தில ஏதேதோ பேசுனாங்க. எனக்கு ஏதுவும் நல்லதா தோனல… கதவு பூட்டல, நான் கதவ தட்டாம சடார்னு உள்ள நுழைஞ்சேன். பார்க்கணுமே…. ரெண்டு பேரும் அம்மணமா இருந்தாங்க. எனக்கு வார்த்தையே வரல. உன் நைனா என் மேல பைத்தியக்காரன் மாதிரி கோபப்பட்டார். அந்தப் பொம்பள அவசர அவசரமா  துணி எடுத்து உடுத்திக்கிட்டு அப்படியே வெளிய போயிட்டா. நான் மரக்கட்டை மாதிரி உட்கார்ந்தேன். அழுதேன். கோபம், வருத்தம், சோகம், வசைபாடனும்னு ஆவேசம், எல்லாமே தோணுச்சி தீமா.”

“அடடா… அவ யாரு காக் மாஹ்?”

“தெரியல, வெள்ளையா பருமனா இருந்தா அவ. சீனக்காரியா இல்லையானு தெரியல. அழகாத்தான் இருந்தா, சட்டுனு பார்த்தேன். நான் வீட்டுக்கு வந்தேன், முட்டாள் மாதிரி ஆயிட்டேன். கண்ணாடி முன்னுக்கு நிர்வாணமா நின்னேன். உன் நைனா சொன்னது உண்மைதான். நான் கொழுத்துப்போயிட்டேன். வயித்துல நாலு பேர பெத்த கோடுகள் நிறைய, கடைசியில சிசேரியன் செய்தப்ப ஏற்பட்ட நீளமான தழும்பு. அவரு என்னை ஏன் இப்படி நடத்தினாரு? என்னால தூங்க முடியல. என் முகம் ஜாலான் பேராக்கில இருக்கிற மனநல வார்டுல இருக்கிறவங்க முகம் மாதிரி ஆயிடுச்சு!”

” நீங்க பாவம் காக் மாஹ்…”

“நான் முட்டாள் இல்லை, மாசத்துக்கு 300 வெள்ளி கொடுத்து எங்களோட வேலைக்காரன் மொஹம்மது பஷீரை நோட்டம் பார்க்க வெச்சிருந்தேன். அவன்தான் உன் நைனா யாரோட, எங்க உல்லாசமா இருக்காருன்னு எல்லா விவரத்தையும் எங்கிட்ட ரிப்போர்ட் பண்ணுவான். ஆனா நான் எழுதி வெச்சிருந்த தீகா லீமா புத்தகக் குறிப்புகளை கோர்ட் விசாரணையின்போது ஏத்துக்கல. அதான் இப்ப இந்த எட்டாம் நம்பர் ஹோட்டல்ல கிடக்குறேன்.”

“பணம் வந்ததும் இந்த ஆம்பளங்க வேற மாதிரி மாறிடுறாங்க போல. ஆம்பளங்க மட்டுமில்ல… மனுசன் கையில பணம் வந்தாலே அப்படிதான்… விசித்திரமா இருக்கு! “

“அப்படித்தான் தீமா, அவங்க ஒன்னா சேர்ந்து கஷ்டப்பட்ட காலத்தையே மறந்துடறாங்க. அவங்களோட ரசனை உயர்ந்துடுது, நாம தாழ்த்தப்படுறோம். என்னால கற்பனை செய்துபார்க்கவே முடியல. ஏமாற்றம்னு சொல்லணும்னா… அந்த ரொம்ப எளிமையான சாதாரணமான வார்த்தைபோல இருக்கு.  கடவுளுக்குத்தான் தெரியும்… அவரு சிட்டி பேவ்யூ ஹோட்டலிலிருந்து சின்னதா, அழகா, வெள்ளையா இருக்கிற ஒரு பொண்ணோட வெளிய வருவத கடைசியா என் கண்ணாலயே பார்த்தேன். புது காதல் ஜோடி மாதிரி ரெண்டு பேரும் அவ்வளவு சந்தோஷமா இருந்தாங்க.

மூணு மணி நேரமா உன் நைனாவோட காருக்கு 100 மீட்டர் தூரத்திலிருந்து ஒளிஞ்சுப் பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போ சட்டென போய் அவரைத் தாக்கணும்னு,  ஏன் என்னை இப்படி நடத்தறீங்கன்னு கேக்கணும்னு தோணுச்சு? நாம சேர்ந்து முன்பணம் சேர்த்து வியாபாரத்தை தொடங்கினது நினைவு இல்லையா? ஏன் கொஞ்சம் கூட மனசாட்சி இல்ல? மனைவிமேல இரக்கமே இல்லையா?” ஆனா கால் கனமாகி மனசு வெறுமையில இருந்துச்சு. அந்தப்பக்கமா போன ரெண்டு மூணு பேர் என்னைத் திரும்பி திரும்பிப் பார்த்தாங்க. நான் அழகா இருக்கிறதால இல்ல, பார்க்கவே பைத்தியக்காரி மாதிரி இருக்கேன்னு நினைச்சிருப்பாங்க!”

“அந்த அளவுக்கா காக் மாஹ். எனக்கு ஆச்சர்யமா இருக்கு, ஆம்பளைங்க எல்லாரும் அப்படித்தானா? வலது கை நம்மை  அணைச்சிகிட்டு இருக்கும், இடது கை வேற பொண்ணை தடவிகிட்டு இருக்கும்!”

“தெரியல தீமா. ஒவ்வொரு தடவையும் மனுசங்க என்னைப் பார்க்கும்போது எனக்கு உடம்பு சரியில்லைன்னும், எங்களோட வியாபார முன்னேற்றத்தைப் பார்த்து பொறாமை பட்டுதான் யாரோ எங்கள மேல செய்வினை செஞ்சிருப்பதாகவும் சொன்னாங்க. நிஜமாவே ஒரு ஆள் செய்த வினைதான் இது. உன் நைனாதான் அந்த ஆள். அவரு ஒன்னும் மிருகம் இல்லையே? சிட்டி பேவ்யூ ஹோட்டல் சம்பவத்துக்குப் பிறகு என்னால சில சமயம் சாப்பிட முடியல, தனியாவே உட்கார்ந்து யோசிச்சுக்கிட்டிருப்பேன். பகலா இரவாவென தெரியாது, திங்கட்கிழமையா… புதன்கிழமையாவென தெரியாது… குழந்தைங்க பயந்துட்டாங்க. சுங்கை பினாங்குல இருக்கிற மாமியார் வீட்டுல போய் இருந்தாங்க. அவங்க இல்லாததும் நல்லதுதான். ஒருவேளை நான் அவங்க மேல ஏதும் கோபத்தை காட்டிடுவேனோன்னு பயமா இருந்துச்சு, அப்படி செய்றது நியாயமில்லயே!”

“நைனா வீட்டுக்குப் படுக்க வருவாரா காக் மாஹ்? இல்ல கடையிலேயே தங்கிவிடுவாரா?”

“வந்தார், வந்தார். வரலைன்னா போன் பண்ணுவாரு. இந்த  கொழுப்பேறிய பன்னியைப் பார்க்கவாவது வந்தாரு! ஆனா வரும்போதெல்லாம் பிணம் மாதிரி தூங்கிடுவாரு, நான் மரக்கட்டை மாதிரி கிடப்பேன். வெளியிலேயே திருப்தி அடைஞ்சுட்டுதான வருவாரு. சில சமயம் அவரு தூங்கும்போது நான் தனியா பேசிக்குவேன். கருப்பு கரடி மாதிரி இருக்குற நீ, இப்ப எந்தப் பிசாசு உனக்குள்ள புகுந்துச்சுனு இப்படி ஆயிட்ட? அந்த பொம்பளைங்க எல்லாம் உன்மேல ஆசையா இருக்காளுங்கனு நினைக்கிறியா? அவங்களுக்கு உங்க  பணம்தான் வேணும், நைனா ஓய்!”

“ம்ம்…”

“ஒருநாள் ராத்திரி அவர் வந்தாரு. நான் என்ன நாள் என்ன நேரம்னு தெரியாம தனியா டிவி முன்னாடி உட்கார்ந்திருந்தேன். டிவி என்னைப் பார்த்துச்சு, ஆனா நான் டிவியைப் பார்த்தேனானு எனக்குத் தெரியல, மூளை குழம்பியிருந்துச்சு! அவர் இஞ்சி டீ போடச் சொன்னப்போ எனக்கு ஒரு யோசனை வந்துச்சு. சாப்பிடுறிங்களானு கேட்டேன். அவர் வேணாம்னு  தலையாட்டினாரு. உண்மையில அவரு சாப்பிடணும்னு கேட்டிருந்தாலும் சமையல் ஒண்ணும் இல்ல… அதான் குழந்தைங்க கூட இல்லையே. நான் எவ்வளவு காலமா இப்படி நோய்வாய்ப்பட்டிருந்தேன்னு எனக்கே ஞாபகம் இல்ல. அந்த தேத்தண்ணியில ரோஷ், தூக்க மாத்திரை போட்டேன்,… சாதாரண தேத்தண்ணி தான் அது. உன் நைனா நல்லா தூங்கிட்டாரு.  நான் அவரை குளியலறைக்குள்ள இழுத்துக்கிட்டு போனேன்.

இறைச்சி வெட்டற கத்தியை எடுத்து அவரோட கழுத்தைத் துண்டா வெட்டினேன். குளியலறை என்பதால சுலபமா இருந்துச்சு. நாங்க கஷ்டப்பட்ட காலத்துல கல்யாண விருந்துக்குப் பிரியாணி செய்ய ஆர்டர் வந்தா மாடு, ஆடுனு கணக்கில்லாம வெட்டி துண்டுபோட்டிருக்கேன். உன்  நைனா அதை மறந்துட்டாரு. ஒண்ணு ஒண்ணா வெட்டுனேன். எத்தனை துண்டுனு நினைவில்ல. எல்லாத்தையும் கருப்பு குப்பைப் பையில போட்டேன்… இரத்தம், தடயம் எதுவும் இல்லாதபடி தண்ணி ஊத்தினேன். என்னை முட்டாள்னு நினைச்சாங்களா?

“ஓ! அப்படியா காக் மாஹ். அதான் அன்றைக்குச் சமையலறையில இறைச்சி வெட்ட மறுத்தீங்களா!”

” எத்தனை மணி வரைக்கும் வீட்டுப் பின்னால  குழி தோண்டினேனோ தெரியல… எல்லாத்தையும் புதைச்சதும் எனக்கு நிம்மதியா, சுதந்திரமா, திருப்தியா இருந்தது. ஒரு வாரம் கழிச்சு, அவர் காணாம போயிட்டாருன்னு யாரோ புகார் கொடுத்தாங்களோ என்னவோ தெரியல, விசாரணைக்கு வந்தாங்க, குடைஞ்சி குடைஞ்சி கேட்டாங்க, இங்கயும் அங்கயும் சுத்தி கோர்ட் வரைக்கும் போச்சு. இதெல்லாம் பார்க்கவே எனக்குச் சோர்வா இருந்துச்சு. உண்மையான கதையைச் சொன்னா எல்லாருக்கும் வேலை எளிதாகும்னு கடைசியா நான் ஒத்துக்கிட்டேன். செய்தித்தாள்கள்… சொல்லவே வேண்டாம்… முடிஞ்சா என் துணியை விளக்கித் தேடிப் பார்க்க நினைச்சாங்க.

இப்போ உன்கிட்ட சொல்லும்போதுகூட எனக்கு சோகம், துக்கம், பயம், வெறுப்பு, கோபம்னு, எல்லா உணர்ச்சிகளும் பொங்கி பொங்கி வருது. ஏதோ எங்களோட ரெஸ்டாரண்ட்ல வைக்கிற மாமாக் குழம்பு மாதிரி எல்லாம் கலந்து கிடக்கு. ஆனா எனக்கு வேற வழியே இல்லையே. கோர்ட்டுக்கு ஏறி இறங்கும்போது நான் எல்லாத்தையும் அப்படியே ஏத்துகிடலாம்னு நினைச்சேன்… பிரிவு 302 குற்றவியல் சட்டம், சாகும்வரைக்கும் தூக்கிலிடப்படும் கட்டாய மரண தண்டனை உறுதியாகிடுச்சு. சே… நான் வக்கீல் மாதிரி பேசறேன்ல தீமா? பல மாசங்களா அதே விஷயத்தைத் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருக்கேன். அவங்களுக்குத் தெரியாதா என்ன?

எனக்கு எந்த நம்பிக்கையும் இல்ல! தீமா, நாளைக்கோ மறுநாளோ இன்ஸ்பெக்டர்கள் ரெண்டு மூணு பேர் வந்து நான் ஒரு வாரத்துக்கு புது அறைக்கு மாறணும்னு சொன்னா உங்க ரெண்டு பேருக்கும் நான் எங்க போறேன்னு…  சுபுஹ் தொழுகைக்குப் பிறகு எல்லாறுக்கும் வணக்கம் சொல்லிட்டு கிளம்ப வேண்டியதுதான் தீமா. எனக்கு விதிக்கப்பட்டதை நான் ஏத்துகிட்டேன் தீமா… எ! ஜூலியானா எங்க? நாம பேசிக்கிட்டே இருந்ததுல அவ இல்லைங்கிறதையே கவனிக்கல.”

“வக்கீலை சந்திக்க அலுவலகத்துக்கு போயிருக்கா. ஜூ இடம் மாறப்போறா காக் மாஹ். அவ சுங்கை பட்டாணியில இருக்கிற விடுதலைக்கு முந்தைய சிறை மையத்துக்குப் போகப்போறா. அன்றைக்கு எங்கிட்ட சொன்னா.”

“ஓ… அவளுக்கு ரொம்ப நாள் இல்ல தீமா. ஆறு மாசம்தான். நாளைக்கோ மறுநாளோ வெளிய போனால் இன்னும் வாழ முடியும். அவளுக்கு இளமையும் இருக்கு… எனக்குதான் எந்த நம்பிக்கையும் இல்ல, பெயரே கட்டாய மரணதண்டனை, வெளிய வந்தாலும் வயசாகியிருக்கும். குழந்தைங்க என்ன ஆனாங்கன்னு தெரியல. குடும்பத்துல ஒருத்தர் கூட எட்டிப்பார்க்கல. அவங்க பொண்ணு கொலைகாரின்னு வெட்கப்படுறாங்க போல. ஆனா நான் உன்கிட்ட வெளிப்படையாச் சொல்றேன்… நான் தூக்கிலிடப்படுறதை பத்தி பயப்படல, நிச்சயமா பயப்படல. மனசுக்குள்ள நிம்மதியா இருக்கு. முடிஞ்சா இதெல்லாம் சீக்கிரம் முடிஞ்சுடணும்னுதான் விரும்புறேன். வக்கீல்தான் அங்க இங்கனு ஏறி இறங்கிக்கிட்டே இருக்காரு. அப்பீல் போடணுமான்னு கேட்கிறாரு. எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டேன்… ஆயுள் முழுவதும் சிறைங்கிற மாதிரி தண்டனையை மாத்தி என்ன செய்யிறது? இப்போ நான் கடவுள்கிட்ட மட்டும்தான் கவனம் செலுத்துறேன். தினமும் மன்னிப்புக் கேக்குறேன், உண்மையில எனக்கு இந்த உலகத்தோட தொடர்பு செத்து போச்சு தீமா. இப்போ நான் எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக்கிறேன்… அதனாலதான் அதிகமா பேசாம இருக்கேன். எனக்கு இனி எதுவும் வேணாம். உலக ஆசைகள் எதுவும் இல்லவே இல்ல… இல்ல, போச்சு!”

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை காக் மாஹ்…”

“நீயும் இன்னும் இளமையாதான் இருக்க தீமா. நாளைக்கோ மறுநாளோ நீ நீண்ட ஆயுளுடன் வெளிய வரலாம். எங்காவது போனாலும் நல்லா வாழனும். உனக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு. நாம எல்லாரும் தப்பு பண்றோம். சின்ன தப்பு, பெரிய தப்பு, நம்மை நாமே ஏமாத்திக்கிறோம், மத்தவங்களை ஏமாத்துறோம், சில சமயம் கடவுளையும்கூட ஏமாத்துறோம். அதெல்லாத்தையும் கட்டுப்படுத்திக்கோ… இன்ஷா அல்லாஹ் வாழலாம்… இங்க இருக்கும்போது யாரையும் பழிவாங்கணும்னு நினைக்காதே. வெளிய போனதும் புதுசா வாழ்க்கையை ஆரம்பி…”

நான் சல்மாவை இறுக அணைத்துக் கொண்டேன். சோகம், துக்கம், பட்சாதாபம் என எல்லாமும் சேர்ந்து நெஞ்சை அடைத்தது. உண்மையில், எட்டாம் நம்பர் ஹோட்டலில் நுழைந்ததும் தவறைத் தேடி கண்டுபிடிக்கவோ, காரணத்தைக் கண்டுபிடிக்கவோ, எதையும் பகுப்பாய்வு செய்யவோ நேரமில்லை. என்ன இருக்கிறதோ அதை அப்படியே கடந்துபோவதுதான் வழி.

***

ஜூலியானா சுங்கை பட்டாணிக்கு மாறிய ஒரு மாதத்திற்குப் பிறகு, சல்மா வேறொரு அறைக்கு மாற்றப்பட்டார். தூக்கு தண்டனை அறைக்கு அருகில் இருக்கிற அறை. அவள் மனம் அமைதியாக இருக்க பிரார்த்தனை செய்தேன்; சல்மா நிச்சயம் மன அமைதியுடன் இருப்பார், அவர் ஆன்ம பலம் உள்ளவர்.

ஒரு வாரத்துக்குப் பிறகு, சல்மாவுக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று இன்ஸ்பெக்டர் என் காதில் கிசுகிசுத்தபோது நான் கண்ணீர் சிந்தினேன். அந்த சுபுஹ்வின் போது தொழுகையறையில் கொஞ்ச நேரம் கூடுதலாக இருந்தேன். அவளுக்காக அல்-ஃபாத்திஹா ஓதினேன். எனக்கு நினைவிருக்கிற குர்ஆன் வசனங்களையும் சொன்னேன். இன்று வரைக்கும் என் பிரார்த்தனையில் சல்மாவின் பெயரையும் சேர்த்துக் கொள்கிறேன்.

வெளியேறுதலையும்  உள்நுழைதலையும் பார்த்தது, எத்தனை பேர் என்று எனக்கு நினைவில்லை. நான் சல்மாவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். எதை கவனிக்க முடியுமோ அதை கவனித்துக்கொண்டேன். நாலடி அளவு சிறிய  இந்த  அறையில் எவ்வளவு தான் பொறுப்பு இருக்கும்—தோல் நோய், காய்ச்சல், தலைவலி, மாதவிலக்கு எல்லாவற்றையும் சேர்ந்து சமாளித்தோம். நானும் சல்மாவும் ஜூலியாவும் குடும்பத்தாரிடமிருந்து எந்தவித வருகையும் பெறவில்லை, வக்கீல்களும் சிறை அதிகாரிகளும் மட்டுமே எங்களைச் சந்திக்க வந்தார்கள். மற்றவர்களின் குடும்பம் வரும்போது நாங்கள் கொஞ்சம் நல்ல சாப்பாடு சாப்பிட முடிந்தது. அறையைப் பகிர்ந்துகொள்வதுதான் எங்களைச் சுயநலவாதிகளாக ஆக்காமல் வைத்திருந்ததுபோல. அல்லது ஒருவேளை வெளி மனிதர்களை நினைத்து ஏங்குவதும்கூட காரணமாக இருக்கலாம்.

இரண்டு மூன்று முறை பல்கலைக்கழக மாணவர்கள் தன்னார்வ ஆய்வுக்காக என்னை நேர்காணல் செய்ய வந்தபோது சம்மதித்தேன். அவர்கள் நல்லபடியாக நடந்துகொண்டார்கள், மிகவும் கவனமாகக் கேள்வி கேட்டார்கள். இளம்பெண்கள், ஆண் அறிமுகம் கிடைத்தவுடன் தலை கால் புரியாமல் செயல்படக்கூடாது எனும் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நான் எல்லா உண்மைகளையும் மறைக்காமல் சொன்னேன்.

பினாங்கு, ஜாலான் கோல், வாழ்க்கையின்  அன்றாட சுழற்சி 2009ல் முடிவுக்கு வந்தது. நான் சுங்கை பட்டாணியில் உள்ள விடுதலைக்கு முந்தைய சிறை முகாமுக்கு அனுப்பப்பட்டேன். இங்கேதான் நான் என் உடல் ரீதியான எல்லா விஷயங்களையும் மீட்டெடுத்தேன். இந்த மையம் ஜாலான் கோலைவிட மேலான வசதிகளுடன் இருந்தது. என் வாழ்க்கையில் நான் நினைத்துக்கூடப் பாராத, சமையல், தையல், எம்பிராய்டரி, ஒப்பனை, இன்னும் பல திறன்களைக் கற்றுக்கொண்டேன்.

என்னை வளர்ப்பு மகளாக ஏற்றுக்கொள்ள விரும்பிய ஹாஜா கமாரியா குடும்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டேன். ஹாஜா கமாரியா, பெண்டாங்கில் கம்போங் செலாட்டில் வசிக்கும் ஒரு மேனாள் ஆசிரியர். அவர் என் பின்னணி பற்றி எதுவும் கேட்கவே இல்லை. அதே முகாமிலிருந்து மேலும் இரண்டு வளர்ப்பு மகள்கள் அவருக்கு இருந்தனர். என்னை ஆதரிக்க குடும்பம் இல்லை என்று அவருக்குத் தெரிந்தபோது ஆறு மாதங்கள் உறைந்த கறிப்பாப் பூசிங் தயாரிக்க உதவுவதற்காக என்னை அவரோடு வந்து தங்கச் சொன்னார்.

அவரிடமிருந்தும் நான் நிறைய விஷயங்களையும் கற்றுக்கொண்டேன்: என்னை எப்படி நிர்வகிப்பது தொடங்கி எளிதாக மற்றவர்களிடம் நான் முன்பு இதுவாக இருந்தேன், அதுவாக இருந்தேன் என்று சொல்லக் கூடாது என்பது வரை. கடவுள் மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெற்றது, உலகத்துடனான தொடர்பு மிகவும் நிதானமாகவும் அமைதியாகவும் மாறியது. கடினமான விஷயங்களை வெறும் சோதனைகளாகவே பார்க்க கற்றுக் கொண்டேன். ஹாஜா கமாரியா மறைமுகமாகவே எனக்கு இவையனைத்தையும் கற்றுக் கொடுத்தார். அவர் மென்மையானவர், பண்பானவர், எப்போதும் நல்லதையே நினைப்பவர்.

” இங்க பாரு தீமா, ஒருத்தர் என்கிட்ட உன்னைப் பத்தி கேட்டாரு, பிடிச்சிருக்கும் போல. நீ இதை விரும்பினால் நான் இதைப்பற்றி அடுத்து யோசிப்பேன். உன் வாழ்க்கை கொஞ்சம் முழுமையாகும். “

“அடடா யாரு மா? அவருக்கு என்னைப் பிடிக்குமா? நான் வயசான பெண்ணாயிட்டேனே!”

“ஜைனுதீன், நம்மகிட்ட கறிப்பாப் எடுக்க, அதான் அந்த… சிவப்பு ப்ரோட்டன் சாகா-ல வருவாரே, அவரு.  அலோர் ஸ்டார்ல வியாபாரம் செய்றாரு.”

“எத்தனையாவது மனைவியாக ஆகப்போறேன் மா?”

“ஐயோ… என்ன இப்படி கேக்குற அவர் மனைவி இறந்துட்டா. ரெண்டு குழந்தைகள் இருக்கு, நாளை மறுநாள் வருவாரு. தீமா நீயே பாரு. பிடிச்சா பரவாயில்லை, பிடிக்காட்டியும் பரவாயில்லை. அவங்க இல்லாட்டி வாழ்க்கை முடிஞ்சுபோகாதே! மா கூட இருந்தாலும்கூட உனக்கு சாப்பாட்டுக்கும் உடைக்கும் வழியிருக்கு!”

புதிய வாழ்க்கைக்காக நான் ஜைனுதீனை ஏற்றுக்கொண்டேன். எளிய மனிதர்தான் என்றாலும்  நல்ல மனமும் விடாமுயற்சியும் உள்ளவர். சிறுசிறு குறைபாடுகள், உடல் ரீதியான பலவீனங்கள், குறைந்த வசதியுடன் கூடிய வாழ்க்கை எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கொண்டேன். நானும் ரொம்ப நல்லவளில்லையே, அதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மிகவும் எளிமையான சூழலில் ஹாஜா கமாரியா எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். 35 வயதில் நான் பெரிதாய் கனவுகள் காண விரும்பவில்லை. 10, 12 வயதுடைய ஜைனுதீனின் குழந்தைகள் என்னை நல்லபடியாக ஏற்றுக்கொண்டார்கள். ஒருபோதும் இடைவிடாத பிரார்த்தனையின் பலனாக, அல்ஹம்துலில்லா, நான் அவருடனும் இரண்டு  மாற்றாந்தார மகன்களுடனும் இன்று வரை நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன்.

இன்று காலை, வனித்தா மாத இதழை புரட்டிக் கொண்டிருந்தபோது எனக்கு மிகவும் பழக்கமான ஒரு முகத்தைப் பார்த்தேன். நான் பார்த்தது தவறாக இருக்க முடியாது. மலேசியாவில் இரண்டு மூன்று கிளைகளைக் கொண்ட ஜூலியானா சம்ரி டி’பியூட்டி அழகுசாதனப் பொருட்கள் நிறுவனத்தின் நிறுவனர். சரிதான், அது ஜூலியானாதான். நான் தயங்கினேன், அவளைச் சந்திக்க நான் முயற்சிக்க வேண்டுமா…

குறிப்பு:

Fatimah ( ஃபாத்திமா) கதை சொல்லி – சுறுக்கமாக ‘திமா’

Salmah (சல்மா) –  மூத்த பெண் ஆகவே சுறுக்கமாக  ‘காக் மாஹ்’ ( மாஹ் அக்கா)

Julia (ஜூலியா)-  இளம் பெண் – சுறுக்கமாக ‘ ஜூ’

முதன்முதலில் ரெஜீனா இப்ராஹிமின் சிறுகதைத் தொகுப்பில் (புக்கு ஃபிக்ஸி, 2015) வெளியிடப்பட்டது. இந்தச் சிறுகதை, புக்கு ஃபிக்ஸி மற்றும் புத்ரஜெயா சர்வதேச புத்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டில், 2015ஆம் ஆண்டின் சிறந்த இருபது சிறுகதைகளுள் (புக்கு ஃபிக்ஸி, 2016) ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தமிழில்: விஜயலட்சுமி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...