பெண்களின் நாட்டியம்

“ஒருவேளை நான் சிறைப்படுத்தப்பட்டாலோ அல்லது தோக் ஜங்கூட் போல  மெர்டேக்கா திடலில் தூக்கிலிடப்பட்டாலோ, நான் அவளை மிகவும் நேசிப்பதாக என் அம்மாவிடம் சொல்லிவிடனும் தெரியுமா.”

மாவார் சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்து ஒருவாறு கண் சிமிட்டினாள். அவளால் இந்தச் சூழலையும் இவ்வளவு இயல்பாக எடுத்துக் கொள்ள முடிந்தது. கிறுக்கு குணம் கொண்ட பெண்.  அங்கு இருந்தவர்களின் சுட்டெரிக்கும் கோபப் பார்வை எங்களை நோக்கிக் குவிந்திருந்ததையும் நான் உணராமலில்லை.

கூச்சல் குழப்பங்களுக்கிடையே அந்தச் சந்தையில் என் நடையின் வேகத்தைத் துரிதப்படுத்தினேன்.  மாவாரையும் விரைவாக நடந்துவரும்படிக் கூறினேன். அவள் அழகு ராணி போட்டி மேடையில் அன்னநடை போட்டு நடந்து வருவதைப் போல தனக்குத் தெரிந்தவர்களை எல்லாம் அழைத்து கையசைத்துச் சிரித்தவாறே நடந்து வந்து கொண்டிருந்தாள். தனக்குத் தேவையான பல பொருட்கள் அடங்கிய பெரிய பையொன்றைத்  ஏந்தியவாறு வந்து கொண்டிருந்தாள் மாவார். நான் மடிக் கணினியைச் சுமந்து வந்து கொண்டிருந்தேன்.

கதிஜா பெருவணிகச் சந்தை ஒருபோதும் அமைதியாகக் காணப்பட்டதில்லை. உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் எப்போதும் நிரம்பி வழியும் இடம்தான் அது. கிளந்தான் மாநிலத்தின் அடையாளமாக இருக்கும் அச்சந்தையில் எல்லாம் கிடைப்பதால் அது இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும். நான்கு மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஒவ்வொரு மாடியும் வேறு வேறு வகையான வியாபாரத்தால் நிரம்பியிருந்தது. இறைச்சி மற்றும் காய்கறிகள், உலர் பொருட்கள், சமையல் பொருட்கள்,  பலகாரங்கள், உணவுகள், நொறுவைகள், ஆடைகள், கிளந்தானின் பண்பாட்டு நறுமணம் தொய்ந்திருக்கும் கைவினைப் பொருட்கள் என அனைத்தும் கிடைத்தன. இந்தச் சந்தை ஏன் மக்கள் குவியும் இடமாக இருக்கிறது என்பதை என்  இளவயது முதல் நான் அறிந்து கொண்டிருக்கிறேன்.  பொருட்கள் விலை மலிவாக விற்கப்படுவது மட்டும் அல்லாமல் இங்கே கிளாந்தான் மாநிலத்தின் பண்பாட்டு தனித்துவத்தை மக்கள் நேரடியாக அறிய முடிவதும் ஒரு காரணமாக இருந்தது.  ஓர் இடத்தின் சமூக அரசியல் வாழ்வியலை அறிய வேண்டுமா? அந்த ஊரின் சந்தைக்குச் சென்று பாருங்கள் என்று கற்றோர் சொல்வது போல,  கதிஜா சந்தையும், கிளந்தான் மாநிலத்தின் சமூக அரசியலைப் படம் பிடித்துக் காட்டும் இடமாக உள்ளது.

மரபான பலகாரங்கள் விற்கும் கீழ் தளத்தைக் கடந்து கொண்டிருக்கும்போது மாவார் திடீரென என் கைகளை இழுத்துப் பிடித்து நிறுத்தினாள். தன் தோழி ஃபாத்தின் அவானிஸ் கடையில் காலை உணவுக்கு ‘அகோக்’ பலகாரம் வாங்க வேண்டும் என்றாள். பாத்தின் அவானிஸ் மாவாரின் பள்ளி தோழி. இருவரும் சிறு வயதிலிருந்தே நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர்.   எனக்கு மாவார் நான்காம் ஆண்டில்தான் அறிமுகமானாள். மலாய்க்காரர்களுடன் பழகவும் அவர்களின் வாழ்க்கையை அறிந்துகொள்ளவும்  எளிதாகும் என்றெண்ணிய  அப்பா, என்னைச் சீனப்பள்ளியிலிருந்து தேசியப்பள்ளிக்கு மாற்றியிருந்தார்.  நாம் செழிப்பான பண்பாட்டு சிறப்புகள் கொண்ட  மலாய்க்காரர்களின் ஊரில் வாழ்வதால் அவர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ள வேண்டும். எதிர்காலத்திற்கு அது பயன் தரும் என்று அப்பா சொன்னார்.

“என்ன யாப்? முகமெல்லாம் வெளிறிபோய் இருக்கிறது! பயப்படுகிறாயா? “

அடர்ந்த இமைகள் கொண்ட ஃபாத்தின் அவானீஸ் வேகமாக சிரித்தாள். மாவாரும் புன்னகைத்துக் கொண்டே ஓர் ‘அகோக்’ பலகாரத்தை அதக்கிக் கொண்டிருந்தாள்.  சுற்றி நின்றிருந்த பெண்களும் எங்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பார்வையின் பொருள் விளங்காமலில்லை. மாவார் அணிந்திருந்த உடையைப் பார்த்தால் அங்குள்ள எல்லாருக்கும் வியப்பாகத்தான் இருக்கும். அவளைப் பார்த்தாள் கிளந்தானின் பண்டைய காலத்து ராணி ஒருத்தி நவீன யுகத்தில் தவறுதலாக நுழைந்துவிட்டது போல காட்சியளித்தாள்.  இன்றைய நாள் காலைக்காகவே, நேற்றிரவு அவள் யூடியூப்பில்  அந்த ஒப்பனையைக் கற்றுக் கொண்டாள்.

“எல்லாம் சிறப்பாக நடக்கட்டும் தோழியே, எது நடந்தாலும் நான் உன்னை நினைத்து பெருமை அடைவேன்.”

ஃபாத்தின் மாவாரைக் கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். மாவாரின் கண்கள் கலங்குவதை நான் பார்த்தேன். கண்ணீர் துளிகளைச் சிந்த விடாமல்  இமைகளால் தாங்கினாள். அவள்  வீரப்பெண்ணாக  இருக்க விரும்புபவள். எந்தச் சூழலிலும் யார் முன்னிலையிலும் உடைந்து அழுது துவண்டுவிட மாட்டாள்.  

 அங்கிருந்து மேலும் நடந்து மாவார் குடும்பம் நடத்தும் உணவுக் கடையை அடைந்தோம். ஒரு நடுத்தர வயது பெண், ‘லக்சாம்’ சூப்பை சூடாக்கிக் கொண்டிருந்தாள், ‘நாசி கெராபு’ பரிமாறுவதற்குத் தேவையான  பொருட்களையும் தயார் செய்தாள். மாக் சூ, மாவாரின் அம்மாவின் வலது கை. குடும்ப உறுப்பினராகவே ஆகிவிட்டவள். மாவார் குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக கதீஜா சந்தையில் ‘நாசிக் கெராபு’ மற்றும் ‘லக்சாம்’ விற்பதையே தொழிலாகச் செய்து வருகிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாவாரின் தாய் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு காலை இழந்து சக்கரவண்டியே கதியென ஆகிவிட்டார்.  அவரால் வியாபாரத்துக்கு வந்து போக முடியவில்லை. மாவார்தான் அம்மாவின் தொழிலைத் தொடர்ந்தாள். மாவாருக்கு இரு அண்ணன்கள்.  ஆனால், எந்த ஆண்பிள்ளைதான் அந்தச் சந்தையில் வியாபாரம் செய்ய முன்வருவான். ஒருவன் கோலாலம்பூரில் ஓர் உணவகத்தில் சமையல் வேலைக்குச் சென்று விட்டான். மற்றொருவன் தாய்லாந்து எல்லையில் பண்டல் துணி வியாபாரத்துக்குச் சென்று விட்டான். மாவாரின் அப்பா ‘வாயாங் கூலிட்’  கலைக்குழுவை வழிநடத்தும் பிரபல கலைஞர். தோக் டாலாங் எனப்படும் வாயாங் கூலிட் கலை இயக்குநராக,   வாழும் சகாப்தமாக புகழப்படும் போக் சூவை அறியாதோர்  கோத்தா பாருவில் இல்லை.

மாவார் தன் தலைவிதி எங்குச் செல்கிறது என்பதை உணர்ந்திருந்தாள். விரும்புகிறாளோ இல்லையோ,  தன் தாயின் படகு சென்று நங்கூரமிட்ட வழியிலேயே  அவள் செல்வது என முடிவெடுத்தாள். அந்தச்  சந்தை அவளின் ஒருபகுதி வாழ்க்கையானது.   முன்பு பாசார் புலோ குபு என அழைக்கப்பட்ட இச்சந்தை, இன்று சித்தி கதீஜா சந்தை என அழைக்கப்படுகிறது. பெண்கள் பெரும்பான்மையாக வியாபாரம் செய்யும் இச்சந்தை வியாபாரிகளை அங்கீகரித்து மரியாதை செலுத்த நினைத்த அன்றைய கிளாந்தான் ஆட்சியாளர், இச்சந்தைக்கு நபிகள் நாயகத்தின் மனைவி சித்தி கத்தீஜாவின் பெயரைச் சூட்டினார். அதுவே இன்றுவரை நிலைக்கிறது. வெளியூலிருந்து வருபவர்களின் பார்வையில் இச்சந்தை பெண்களுக்குப் பெருந்துன்பத்தைத் தருவதாக தோன்றலாம். கதீஜா சந்தை பெண்களின் கடுமையான உழைப்பையும், கண்ணீரையும், இரத்தைத்தையும் உறிஞ்சி குடும்பத்தை வளப்படுத்துவதாக நினைக்கலாம்.  ஆனால், மாவாருக்கு அது பெண்களின் இயலாமையோ  துன்பமோ அல்ல.  தாயின் கடுமையான உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கண்டு, தாயைப் போலவே குடும்பத்தை முன்னேற்றத் தீர்மானித்தாள். எதிர்காலத்தில் குறைந்தது தன் அம்மாவைவிட ஒருபடி மேலே சென்றுவிட வேண்டும் என்று உறுதியும் கொண்டிருந்தாள். மாவார் கையில் ஏந்தி வந்த பெரிய பையைத் திறந்து தயாராக ஆரம்பித்தாள். ஒவ்வொரு ஒப்பனைப் பொருளாக வெளியே எடுத்து வைத்தாள்.   பட்டால் நெய்யப்பட்ட கெபாயா மேலாடையை மாவார் உடலில் நேர்த்தியாக அணிந்திருந்தாள். அதற்கு அணி சேர்ப்பதுபோல இடையில்  ஒட்டியானம் போன்ற ‘பெண்டிங்’ பட்டையை அணிந்து கொண்டாள். இடது தோளில் பட்டினால் நெய்யப்பட்ட ‘சிபார்’ துணியைத் பெண்டிங் பட்டையில் பிணைத்து தொங்கவிட்டாள். அது அவளின் முட்டிவரை நீண்டிருந்தது. அடுத்தடுத்து,  கிரீடம், பொற்காப்புகள், தங்க கொலுசுகள், மோதிரங்கள் என அனைத்தையும் அணிந்து கொண்டாள்.

அவள் அலங்கரித்து முடிக்க காத்திருக்கும் நேரத்தில் நான் மடிக் கணினியைத் திறந்து,  மைய ஒலி பெருக்கியோடு இணைத்துக் கொண்டேன். தேர்வு செய்திருந்த  பாடல்கள் அனைத்தும் கணினித் திரையில் நிரல்படி இருப்பதை உறுதிச் செய்து கொண்டேன். அவ்வேளை என் உள்ளம் ஏதோ ஒரு இனம் புரியாத பயத்தால் அலைமோதத் தொடங்கியிருந்தது. காலியான தகர டின்களின்மேல் கல்லெறிந்ததுபோல உள்ளம்  தடுமாறுவதையும் அதிர்வதையும் உணர முடிந்தது. ஆயினும்  மாவாரின் நிதானமும் உற்சாகமும் கலந்த புன்னகையையும் கண்டு என்னை  முடிந்தவரை அமைதிப்படுத்திக் கொண்டேன்.  பல மாதங்களாக நாங்கள் பயிற்சி செய்து விட்டோம். இரவு நேரங்களில் நாங்கள் மாக் சூவின் விட்டுக்குச் சென்று அவரிடம் ‘மாக்யுங்’ நடனத்தைக் கற்றுக் கொண்டோம். 70களில் ‘மாக்யூங்’ நடனக் கலையில் நிகரில்லா நாட்டிய தாரகையாக விளங்கியவர் மாக் சூ. நாட்டியத்தைப் பயிற்றுவிப்பதோடு நில்லாமல் மாக் சூ அவரிடம் இருந்த ‘மாக்யூங்’ நடனத்திற்கான உடைகளையும் ஒப்பனை பொருள்களையும் ஒரு காசு வாங்காமல் எங்களுக்குக் கொடுத்தார். அவரின் நோக்கம் ஒன்றுதான். இக்கலையை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதே. 

மாக் சூவின் ஒப்புதல் கிடைத்தவுடன், அன்று  மாவாரின் கனவை நிஜமாக்க உதவக்கூடிய நண்பர்கள் சிலரை அணியப்படுத்த முயன்றேன். முதலில் ஆர்வமாக இருந்த சிலர் போக போக ஏதேதோ காரணங்களைக் கூறி விலகிக் கொண்டனர். அவர்களின் விலகலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது பயம் என்பதை என்னால் உணர முடிந்தது. 

‘மாக்யூங்’ நிகழ்த்துக்கலையைப் படைப்பதற்குப் பலரின் ஒத்துழைப்பு அவசியம்.  அது குழு முறையில் ஒருங்கிணைக்கப்படும் ஒரு படைப்பு. ஒருவர் அல்லது இருவர் மட்டும் இந்நடனத்தை வழங்குவது சாத்தியமற்றது. அறிவுக்கு முரணான  அபத்தம். மேலும் இந்நிகழ்ச்சியில் பல விதமான இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. தாவாக் தாளக் கருவி, பெரிய மற்றும் சிறிய வகை தவில்கள், ச்சானாங், கெசி போன்ற கஞ்சக் கருவிகள்   செறுநாய் போன்ற வாத்தியக்கருவிகள் போன்ற பல கருவிகளை நடிப்போரின் இயல்புகேற்பவும் நடனமாடுவோரின் அசைவுக்கேற்பவும் இசைக்க வேண்டும்.  

இறுதியில் நாங்கள் இருவர் மட்டும்தான் இருந்தோம்.  நான் மனமொடிந்து சோர்ந்து நின்றபோது, மாவார் துவண்டுவிடவில்லை. நடனத்தைத் தொடர்ந்தே ஆகவேண்டும் என்று உறுதியோடு இருந்தாள். மாக் சூவுடன் கலந்தாலோசித்த பிறகு என்னையே ‘பாக்யூங்’ கதைசொல்லியாக மேடையேற்றினாள். அவள்  ‘பெரான்’ எனப்படும் மைய பாத்திரமாகப் பாகம் ஏற்றிருந்தாள். நாட்டியத்திற்கான இசையைக் குறுந்தட்டுகளில் இருந்து ஒலிபரப்ப முடிவு செய்தோம்.  சிக்கல் இல்லை. இந்தக் காலத்தில் எல்லாம் சாத்தியமே; ஆர்வமிருக்கிறதா என்பதுதான் முக்கியம் என்றாள் மாவார்.   

‘மாக்யூங்’ நடனத்திற்கான கதையை  நானும் மாவாரும் மாக் சூவும் கலந்து பேசி முடிவு செய்திருந்தோம். இந்தக் காலத்திற்கு ஏற்ற கதையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அரண்மனை வாழ்க்கை, மன்னர்களின் வரலாறு, தேவதைக் கதைகள் போன்றவை இன்று பொருத்தமற்றவை என்பது மாவாரின் கருத்து.  ஆதலால் கிளந்தான் மாநில இளைஞர்களின் பார்வையில் இன்றைய வாழ்க்கையைச் சித்தரிக்கும் கதையையே மாவார் புனைதிருந்தாள். அது அழிந்து வரும் பண்பாட்டை நவீன சிந்தனைகளின்  வழி மீட்டெடுக்கும் வழிகளை உணர்த்தும் கதையாக அமைந்திருந்தது. அதுமட்டுமல்லாம் தன் சுய வாழ்க்கையை மிக நெருக்கமாகப் பேசும் பெண்களின் சுய முன்னேற்றம் குறித்த கதையாகவும் இருந்தது.

ஃபஸ்லீனா ஹிஷாமுடின்

‘லக்சாமும் நாசி கெராபுவும்’ விற்கப்படும் தன் கடைக்கு அருகே அந்தச் சந்தையின் நடுவில் தயாராக நின்றாள் மாவார். கருப்பு நிற முக்காட்டின் மேல் மாக் சூ பரிசாக வழங்கிய  ஒளிவீசும் கற்கள் பதித்த கிரீடத்தை அணிந்திருந்தாள். கண்கள் மூடி தவக் கோலத்தில் அமர்ந்திருந்த மாவாரின் நிலையைக் கண்டு ஆர்வத்தில் அவளைச் சுற்றி அங்கு வணிகம் செய்யும் வியாபாரிகளின் பிள்ளைகள் அமர்ந்து கொண்டனர். ‘மாக்யூங்’ நடனத்திற்கு முக்கிய பொருளான பிரம்போடு நான் தயாராக இருந்தேன். ‘பாக்யூங்’ வேடமேற்ற நான் கதைச் சொல்லியாகச் செயல்பட வேண்டும். அதோடு ‘பெரான்’ பாத்திரத்திற்கும் பார்வையாளர்களுக்கும் தொடர்பாளனாகவும் இருக்க வேண்டும்.  

“யாப், புதுமைகளை மக்கள் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இருந்தபோதும் இதை நாம் செய்யாமல் விட்டுவிடக் கூடாது. இன்று நாம் செய்யாவிட்டால், அடுத்து யார் செய்யப் போகிறார்கள்”

மாவார் சொன்ன அந்த வார்தைகள் சில நாட்களாகவே என் காது மடல்களைத் மீண்டும் மீண்டும் துளைத்துக் கொண்டிருந்தன. இந்தப் படைப்பைத் தொடங்குவதற்கு உடலும் உள்ளமும் முழுத் தெம்பின்றி சோர்ந்திருப்பதுபோல் உணர்ந்தேன். என் கைகள் பிரம்பைப் பிடித்தபடியே தயாராக இருந்தன. பாடல் இன்னும் ஒலிக்கப்படவில்லை.

அதற்குள் சுற்றி அமர்ந்திருந்த சிறுவர்களெல்லாம் கூச்சலிடத் தொடங்கிவிட்டனர். அருகில் இருந்த தங்கள் நண்பர்களையும் அழைத்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டனர். அந்தச் சந்தையில் இதுவரையில் அரங்கேற்றப் படாத நடனப் படைப்பைக் காண அனைவரும் ஆர்வமாகக் காத்திருந்தனர். அவ்வழியே வந்துபோய் கொண்டிருந்த சிலர் மாவார் அம்மாவின் கடையில் ‘லக்சாமும் நாசி கெராபுவும்’ ஆர்டர் கொடுத்து காத்திருக்கும் வேளையில் அங்கு என்ன நடக்கிறது என அக்கம் பக்கத்தில் விசாரித்துக் கொண்டனர்.   

நான் இன்னும் நடனத்துக்கான தொடக்க இசையைத் துவங்காமல் இருப்பதை உணர்ந்த மாவார் அமர்ந்த இடத்திருலிருந்து கண்களைத் திறந்து பார்த்தாள். கையில் பிரம்போடு தயங்கி நின்ற என்னைக் கண்களை அகழ விரித்து நோக்கினாள். அங்குக் கூடி இருந்த மக்களுக்கு மத்தியில் என் அப்பாவும் நின்றிருந்தார். என்னை நோக்கி தலையசைத்துச் சிரித்தார். அப்போது என் மனத்தின் படபடப்புச் சற்றுக் குறைந்தது.  திடீரென மாக் சூ கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன் வந்து வரவேற்று பேசத் தொடங்கினார். கூடியிருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்ததோடு ‘மாக்யூங்’ கலையைப் பற்றி சுறுக்கமாக பேசினார். அது நான் செய்ய வேண்டிய பணி. மாக் சூவிற்கு என் அச்சம் புரிந்திருந்தது. பிறகு அவர் என்னிடம் வந்து என் தோளைத் தொட்டார். மாவாரின் கன்னத்தை வருடினார். எங்களுக்குத் தன் ஆற்றல் முழுவதையும் வழங்குவதைப்போல புன்னகை பூத்தார்.  நான்  இசையை இசைக்கவிட்டு களத்தில் இறங்கி பிரம்பால் தட்டினேன்.மாவார் ஒரு பாடலுடன் தன் படைப்பைத் தொடங்கினாள்.

உதிர வேண்டுமா…

உதிர்ந்துவிடு பலாப் பழமே

மாமரக் கிளைகளை மோதாமல் விலகிவிடு…

உறங்க வேண்டுமா…

உறங்கிவிடு கண்களே

தூரத்து மனிதர்களை நினையாமல்…

அடர்த்தியான வால் கொண்ட பச்சைக்கிளி…

மர இடுக்கில் மாட்டிச் செத்துப்போக

செருநாய் ஓசை எழ

வாருங்கள் நாம் கொண்டாடுவோம்

மன்னர் உறக்கம் கொள்ளட்டும்…

கூடியிருந்தவர்கள் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். மாவாரின் குரல் இனிமை குறைத்து மதிப்பிட முடியாதது. அந்தச் சந்தை வசியத்துக்குள்ளானது போல் மாறியது. சற்று முன் கோபக்கனல் வீச பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் சந்தேகத்தோடு நின்றவர்களையும் அக்குரல் குளுமைபடுத்தியது. நடனம் அரங்கேறிய இடத்தில் மக்கள் நிறைந்தனர்.

மாவார் உடல் அவயங்களின் அசைவு இசைக்கேற்ப நளினம் கொண்டு அழகாக இயங்கின.  உணர்ச்சிகள் ததும்ப கதை சொல்லிக் கொண்டிருந்தாள். அவளின் முகமும் உடலும் எல்லையற்ற உற்சாகத்தைத் தந்து கொண்டிருந்தன. கதை உச்சத்தை எட்டியிருந்தபோது, திடீரென நீண்ட அங்கியும் தலைப்பாகையும் அணிந்திருந்த சில ஆடவர்கள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த இடத்திற்குள் நுழைந்தனர். கடுமையான முகத்துடன்  நின்றிருந்த அவர்கள் உடனடியாக நடனத்தை நிறுத்த பணித்தனர்.  அவர்களின் இடையூறைச் சிறிதும் பொருட்படுத்தாது பாடுவதோடு கதையும் சொல்லிக்  கொண்டிருந்தாள் மாவார். சுற்றி அமர்ந்திருந்த சிறுவர்கள் கன்னத்தில் கைவைத்து வியந்து ரசித்துக் கொண்டிருந்தனர். அவ்வப்போது அவளின் அழகான நடன அசைவுகளுக்குக் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

அங்கு நின்றிருந்த பாத்தின் அவானிஸும் நடனத்தை இரசித்தவாறு கூச்சலிட்டு ஆரவாரம் செய்து கொண்டிருந்தாள். மாக் சூ பெருமிதத்தோடும் வியப்போடும் மாவாரின் நடனத்தில் இலயித்துப் போயிருந்தாள்.

நடனத்தில் இடையூறு செய்ய வந்த ஆட்களிடம் என் அப்பா சமரசம் பேச முயன்றார். குறைந்தது நடனம் முடியும் வரை காத்திருக்கச் சொன்னார். அங்கு நின்றிருந்த ஒருவன் அப்பாவைக் கடுமையாகப் பிடித்துத் தள்ளினான். மற்றொருவன் மடிக்கணினியின் இணைப்பைப் பிடுங்கினான். பாடல் நின்று போனது. அங்குக் கூடியிருந்தவர்களின் பார்வை அனைத்தும் நிகழ்ச்சியில் கலகம் செய்தவர்களின் பக்கம் திரும்பியது. சிறுவர்கள் கலகக்காரர்களை நொந்து கொண்டனர். பெண்கள் தலைப்பாகை அணிந்த அந்த ஆண்களைத் திட்டித் தீர்த்தனர். நான் செய்வதறியாது நிலை குத்திப் போனேன். ஆனால், இசை நின்று போனாலும் மாவார் தொடர்ந்து கதை சொல்லிக் கொண்டேயிருந்தாள். இறுதியில்  அங்குள்ளவர்களின் கவனத்தை அவள் தன் பக்கம் மீண்டும்  திருப்பினாள். 

தலைப்பாகை அணிந்த கலகக்காரர்களின் கூட்டத்திலிருந்து  வயதில் மூத்த ஒருவன் மாவாரை நெருங்கி அவளை நிகழ்ச்சி நடக்கும் இடத்திலிருந்து வெளியே இழுத்தான். அவனைத் தடுக்க முயன்றேன்; அவர்கள் அதிகம் இருந்ததால் நான் தோல்வி கண்டேன். அவர்கள் என்னைப் பிடித்துத் தள்ளியதில் கால் முட்டியில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிய ஆரம்பித்தது. அப்பா ஓடிவந்து வந்து என்னை அணைத்துக் கொண்டார். நிலைமை இன்னும் மோசமாகாமல் இருக்க என்னை அமைதியாக இருக்கச் சொன்னார்.

மாக் சூ அங்கிருந்த ஒருவனை இடித்துத் தள்ளி மாவாரை விட்டுவிடச் சொல்லிப் போராடினாள். கலகக்காரன் ஒருவன் அவளையும் பிடித்துத் தள்ளியதில் தரையில் சரிந்தபடியே அழுது புலம்பத் தொடங்கியிருந்தாள். அவர்கள் மாவாரைப் பிடித்து இழுத்து கதீஜா சந்தையின் கீழ்த் தளத்திற்குக் கொண்டு சென்றார்கள். மாவார் கத்துவதற்குக்கூட உடலில் தெம்பில்லாமல் அவர்கள் இழுத்த இழுப்பிற்குச் சென்று கொண்டிருந்தாள். 

மாவாரை வெள்ளை நிற வேனுக்குள் அவர்கள் ஏற்றுவதற்கு முன் சந்தையில் இருந்த பெண்கள் தலைப்பாகை அணிந்த அந்த ஆண்களைச் சூழ்ந்து கொண்டனர். அவர்களின் கைகளில் கிரீஸ் போன்ற கூர்மையான ஆயுதங்கள் இருந்தன. அரிவாளுடன் சில பெண்கள் நின்றனர். அவர்கள் மாவாரை விடுவிக்கக் கோறி ஆயுதங்களுடன் அந்த ஆண்களை நெருங்கினர்.

ஒரு கணம்  சித்தி கதீஜா சந்தையே,  தாய் மண்ணைக் காத்த வீர மலாய் பெண்களின் அணிவகுப்பை  மீண்டும் ஒளிபரப்பிக் காட்டும் திரையாக மாறியிருந்தது. 

மாவார் விடுவிக்கப்பட்டாள்.

தலைப்பாகை அணிந்த கலகக்காரர்கள் வேனில் ஏறி கோபமாகக் கிளம்பியிருந்தார்கள்.  ஆயினும் அது அச்சத்தின் வெளிப்பாடு என்பது தெரிந்தது.  மாக் சூவும் பாத்தின் அவானிஸும் மாவாரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்கள். அங்கிருந்த பெண்கள் கையில் ஆயுதங்களோடு தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தனர்.

இச்சிறுகதை முதல் முறையாக ‘வனித்தா’ இதழில் (செப்.2017) வெளியிடப்பட்டது. பிறகு ‘தாரி பசார் பெரெம்புவான்’ சிறுகதை தொகுப்பில் (Roman Buku, 2018) இடம்பெற்றது

தமிழில்: கி. இளம்பூரணன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...