அப்பா  தற்கொலை செய்து இறந்தார்

கடைசியில் அப்பா தற்கொலை செய்து இறந்துவிட்டார்.

அதிகாலை தொழுகை நேரத்தில், குளிர்ந்து விறைத்துப் போன அப்பாவின் உடல் வரவேற்பறையில் கிடந்ததாக அம்மா சொன்னார்.  அப்பா இயற்கையான இருதயக் கோளாறாலோ உயர் இரத்த அழுத்தத் தாக்குதலாலோ உயிரிழந்திருக்க சாத்தியமே இல்லை. ஏனென்றால் அப்பா எப்போதும்  ஆரோக்கியமாகத்தான் இருந்தார். மருத்துவர்களும் அதை உறுதிப்படுத்தியதாக அம்மா தின்னமாகக் கூறினார். “உங்களுடைய அப்பா அதிக மன அழுத்தத்தால்  தற்கொலை செய்து கொண்டிருக்க  நிறைய வாய்ப்பு உள்ளது,”  அம்மா அனுப்பிய தகவல் அப்படிதான் இருந்தது.

அஸருக்குப் பிறகு அப்பாவின் உடல் அடக்கம் செய்யப்படும்.   இதைச் செய்து முடிக்க எனக்கு உதவியாக நீ வர முடியுமா?” அம்மா அதிருப்தியாக இருப்பது போல இருந்தது.

”உன் அப்பா நிஜமாகவே தற்கொலைதான் செய்து கொண்டார்.” அம்மா மீண்டும் அதையே கூறினார்.

அப்பாவின் மரணச் செய்தியைக் கேட்டதும், மருத்துவமனைக்குத் தொடர்புக் கொண்டு விடுப்புக் கேட்டுவிட்டு வீட்டில் தூக்கத்தைத் தொடர்ந்தேன். ‘ஹா… இனி நான் எதற்காகவும் குற்ற உணர்வு கொள்ளத் தேவையிருக்காது. இனி ஒளிந்து வாழ  வேண்டிய அவசியமிருக்காது.  இருபக்க வெற்றி,’ முன்பு எப்போதோ துர்ரா சொன்ன வார்த்தைகள். அப்பா தற்கொலை செய்து கொண்டு இறைவனைச் சந்திக்கும்போது, தளர்வும் நிம்மதியும் அடைந்திருப்பார்.

துர்ரா… அப்பா நிச்சயம்  வெற்றிப் பெற்ற ஒரு ஆண்மகன் தான்.

நான் படுக்கையின் இடதுபுறம் திரும்பிப் படுத்தேன். ஜன்னல் திரைச் சீலையால் தடைப்பட்ட சூரிய ஒளிக் கீற்று கண்களைக் கூசச் செய்தது. நான் மீண்டும் திரும்பிய போது,  மேசையின் மீது மல்லிகைப் பூக்களும், சங்குப் பூக்களும், அரளிப் பூக்களும் நிரம்பி வழியும் கண்ணாடி ஜாடியைக் கண்டேன். இன்னும் எதுவும் சொல்லாத போதிலும், நான் ஏதோ துக்கத்தில் இருக்கிறேன் என்று ஹர்னாண்டோவிற்கு தெரிந்திருந்தது. இந்தோனேசியாவை சேர்ந்த அவன், மலர்களின் நறுமணத்துக்கு எப்போதும் வலியை அமைதிப்படுத்தும் சக்தி இருப்பதாக நம்பினான்.

நான் மீண்டும் சுருண்டு படுத்துத்  தூக்கத்தில் ஆழ்ந்த போது கனவுலகில் பிரவேசிக்கத் துவங்கினேன். ஆழ்ந்த கனவில், நானும் அம்மாவும் சிவப்பு நிறக்  கெபாயா ஞோஞ்ஞா உடையில் கல்லறையின் அருகில் நின்று கொண்டிருந்தோம். சிறுமிகளாக இருக்கும்போது, பொழிவான முகம் கொண்ட என் தங்கையைப் பார்த்து நான் எப்போதும் பொறாமைப்படுவேன். அவள் இந்த  கெபாயா ஞோஞ்ஞாவை அணியும் போதெல்லாம் அழகாக இருப்பதாக அப்பா  புகழ்வார்.

துர்ரா, நீ எங்கே இருக்கிறாய் தங்கையே?  கிளம்பி வா, நம்முடைய அப்பா தன் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார்!

“அப்பா நம் அனைவரையும் நேசித்தார். உன்னையும், துர்ராவையும், அம்மாவையும்.”

எல்லையில்லா ஆற்றல்கொண்ட இறையே, அம்மாவின் மென்மையும் இனிமையும் வாய்ந்த குரலில் வெளிப்படும் கூர்மையானச் சொற்களை நீ கேட்கிறாயா.

அம்மா இன்னும் விளங்காததைப் போல நடிக்கிறாரா?

திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது.

கல்லறையின் ஓரத்தில் கிடத்தப்பட்டிருந்த அப்பாவின் பிரேதம் மேலும் நனைந்தது. கல்லறைக் குழியில் நீர் நிரம்பத் தொடங்கியது .

ஏழு அடி ஆழத்தில் குதித்து, பளுவாக இருக்கும் என்று நான் நினைத்த அப்பாவின் உடலை இழுக்கத் தயாராவதற்கு முன் அம்மாவைப் பார்த்தேன். ஆனால், அப்பாவின் சடலம் எடையற்றுக் கிடந்தது.

நானும் அம்மாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். மழை மேகங்கள் அருளிய நிழலில் ஒரு இலகுவான நிம்மதி. விம்மலோடு பிணைத்த புன்னகையை நானும் அம்மாவும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டோம்.

கனவு கலைந்தது. நான் கண் விழித்தேன். சமையலறையில் கடமுடாவென சத்தம் கேட்டது.  ஓ ஆமாம், நான் புதிதாக வாங்கிய இந்த வீட்டின் நகல் சாவி ஹர்னாண்டோவிடமும் இருக்கிறது அல்லவா?  ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையும், ஹர்னாண்டோ அருகிலுள்ள மசூதியில் காலை தொழுகைக்குப் பிறகு, நான் சாப்பாட்டு மேசையில் வைக்கும் பணத்தை விவசாயச் சந்தையில் கொண்டு போய் செலவிடுவது வழக்கம்.

இவனிடம் அப்பாவைப் பற்றிச் சொல்வது சரியாக இருக்குமா?

ஹர்னாண்டோவை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் சந்தித்தேன். அவன் என் வீட்டில் வேலை செய்வதை அப்பா அறிந்ததும்,  பல வேலைகள் அறிந்த ஹர்னாண்டோவை தானும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில்,   கம்பத்திற்கு  அழைத்து வருமாறு என்னைக் கட்டாயப் படுத்தினார்.

“நீ அதிர்ஷ்டசாலி. ஹர்னாண்டோ ஒரே சம்பளத்தில் சமையல்காரனாகவும், ஓட்டுநராகவும் மற்றும் தோட்டக்காரனாகவும் இருக்கிறான்!” என்று அப்பா சொல்லிச் சிரித்தார்.

என் கோபத்தின் கனல் வெளிபடுவதற்கு முன், அம்மா என்னைப் படுக்கையறைக்கு இழுத்துச் சென்றார். மலேசியாவிற்கு வரும்  புலம்பெயர் தொழிலாளர்களை அப்பா எப்போதும் கிண்டல் செய்வார். ஏனென்றால் அவர்கள் முரண்பாட்டின் சிறந்த உதாரணம் என்று அப்பா கருதினார். அவர்கள் வெகு தொலைவிலிருந்து கடினமாக உழைக்க மலேசியாவுக்கு ஆர்வமாக வருகிறார்கள், ஆனால் தங்கள் சொந்த நாட்டில் வேலை தேடுவதில் மட்டும் சோம்பேறிகளாக இருக்கிறார்கள் என்பது அவருடைய குற்றச்சாட்டு.

“அந்நிய நாட்டுக்கு வேலை தேடிச் செல்ல வேண்டிய அளவுக்கு எந்த நாட்டிலும் வேலைகள் தீர்ந்து போய்விடுவதில்லை,” என்று அப்பா எப்போதும் ஹர்னான்டோவையோ அல்லது வேறு எந்த வெளி நாட்டுத் தொழிலாளர்களைச் சந்திக்க நேர்ந்தாலும் வேண்டுமென்றே மனதைப் புண்படுத்தும்படிப் பேசுவார்.

ஹர்னாண்டோ அதைப் பற்றி பொருட்படுத்தாதது போல இருப்பதாலும், அதீத பணிவைக் காட்டுவதாலும் அப்பா எதை வேண்டுமானாலும் பேசலாம் என்றாயிற்று.

கிராம மசூதிக்கு விசுவாசமாக அப்பாவைப் பின் தொடர்ந்து செல்லும்    அவன் ஓர் அடிமையைப் போல நடத்தப்பட்டான். லாலான் புற்களை வெட்டுவது, கழிப்பறைக்குச் சாயம் பூசுவது, தரையைக் கழுவுவது, நீர் தொட்டியைச் சுத்தம் செய்வது, காற்றாடியைத் தூய்மைப் படுத்துவது, சன்னலைத் துடைப்பது, பெண்கள் தொழுகை கூடத்தை விரிவுபடுத்தும் வேலைகளில் உதவுவது என எல்லா வேலைகளையும் ஹர்னாண்டோதான் செய்தான். ஒரு நாள், நள்ளிரவைக் கடந்த பிறகும் ஹர்னான்டோவின் படுக்கையறையாக பயன்படும் அப்பாவின் கார் நிருத்தும் கூடாரம் இருண்டு கிடப்பதைப் பார்த்தேன்.  வலிமையான உடல் வாகு கொண்ட ஹர்னாண்டோ மங்கலான விளக்கின் வெளிச்சம் இல்லாமல் தூங்க மாட்டான் என்பதை நான் அறிவேன்.

மிகுந்த மன வேதனையுடன், அதிக தூரத்தில் இல்லாத கம்பத்து மசூதிக்கு விரைவாக காரை ஓட்டிச் சென்றேன். அங்கே சிமெண்ட்டையும் தண்ணீரையும் கலந்து குழைத்துக் கொண்டிருந்த ஹர்னாண்டோ முக்காடோடு அங்கு வந்து நின்ற என்னைப் பார்த்து  புன்னகைத்ததைக் கண்டேன்.  மசூதி வேலிகளுக்கு அருகில் செங்கற்கள் சிதறிக் கிடந்தன.

“இந்த இந்தோனேசியத் தொழிலாளியை அப்பா மீண்டும் சுரண்டுகிறாரோ?” நான் கிண்டலாகக் கேட்டது அவ்வளவு நகைச்சுவையாக அமையவில்லை.

“இல்லை, அழகியப் பெண்ணே. எல்லாவற்றையும் நான் என் சொந்த விருப்பத்தின் பேரில் தான் செய்கிறேன்.” ஹர்னாண்டோ தனது மோதிர விரல் நகத்தினுள் குவிந்திருந்த கருப்புத் தூசியை மெதுவாக வெளியேற்றினான்.

அது போதாதென்று, ஹர்னாண்டோ  சமையலறையிலும் சோம்பலில்லாமல் அம்மாவுக்கு உதவினான். சமையல்காரனாக மாறிய அந்த இந்தோனேசிய தொழிலாளி மிகுந்த ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருப்பதை நான் கேட்டேன் “அம்மா, பாருங்களேன்! இந்தோனேசியாவில் சமைக்கும் உணவுகளுக்கான மசாலாப் பொருட்கள் மட்டும்தான் வேறு விதமானவை, மற்றபடி சமையல் முறை அனைத்தும் மலேசியாவில் உள்ளதைப் போலவே இருக்கின்றன!” அதன் பிறகு, சாப்பாட்டு மேசையில் அம்மாவின் தலை அசைவுகளும், கண் சிமிட்டல்களும், உதட்டுச் சுழிப்புகளும் என் மனதைக் கொள்ளையடிப்பதையும் சேர்த்துதான் ஹர்னான்டோவுக்குச் சம்பளம் கொடுக்கிறாயா? என்று கேட்க நினைப்பது போலவே இருந்தது.

நான் சிரிப்பை மட்டுமே உதிர்த்தேன்.

ஒரு நிமிடம், அப்பா உண்மையாகவே தற்கொலை செய்து கொண்டாரா?

நான் வேகமாகத் தயாரானேன். காரின் சாவியைத் தாமதிக்காமல் எடுத்துக் கொண்டேன்.

என் குட்டையான தலை முடியைச் சுதந்திரமாக விட்டு விட்டாலும் சிவப்பு நிற முக்காடுத் துணியைக் கையோடு எடுத்துக் கொண்டேன். முக்காடுப் போடுவதுப் பற்றி எனக்கு அறிவுரை கூற அப்பா இனி இல்லை. நான் நானாகவே இருக்கலாம்.  இறுதியாக, நான் இந்த ஒளிந்து விளையாடும் விளையாட்டுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து விடலாம்.

வீட்டின் முற்றத்தில் இருந்த பெரிய அடர்த்தியான பூந்தொட்டிகளுக்கு இடையே ஹர்னான்டோ நிற்பதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். முற்றத்தில் புற்கள் வெட்டப்பட்டுச் சுத்தமாக இருப்பதைக் கவனித்தேன். ஏதோ ஒரு விதமான வாடை நாசியை வந்தடைந்தது. அம்மா கொடுத்தனுப்பிய சுற்றுச் சூழலுக்கு உகந்த களைக்கொல்லி கலவைகளை வைத்து ஹர்னான்டோ முற்றம் முழுவதும் தெளித்திருக்க வேண்டும். எங்கள் முற்றத்தை அழிக்கும் களைகள் இனி சுலபமாக வளர வாய்ப்பில்லை என்று அறிந்ததும், திருப்தியடைந்தேன்.

“எங்கே போகிறாய்?” என்று ஹர்னான்டோ கேட்டான்.

ஹர்னாண்டோவின் தோல் பொன்னிறமாக மின்னிற்று. விவசாயிகள் அணியும் தொப்பி, வடிகட்டிய சூரிய ஒளியின் புள்ளிகள் அவனது தூய்மையான முகத்தில் விழுந்து கிடந்தது.

பதிலளிக்க விருப்பமில்லாமல், நான் வெறுமனே ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன். ஹர்னாண்டோவை போன்ற நேர்மையும் கனிவும் நிறைந்த மனிதரை மிக கடுமையாகக்  கொடுமைப்படுத்தியதற்காக அப்பாவின் மீது எனக்குக் கோபம் வந்தது.

கண்களில் முட்டிக் கொண்டு வந்த கண்ணீர் உடைந்து சிதறியது. ஹர்னாண்டோவை பற்றி பரிதாபப்படுவது அர்த்தமற்றதாகத் தெரிந்தது. அப்பா இறந்துவிட்டார் இல்லையா? முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு கோபத்தை வெளிப்படுத்தும் பாவனையுடன் அவனுக்கு என் ஆத்திரத்தைக் காட்டினேன். நான் வீட்டின் கதவை அறைந்து சாத்தினேன். தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதன் சமிக்ஞையாக ஒரு பதின்ம வயதினன் கதவை அடித்துச் சாத்துவதை ஒத்திருந்தது.

கார் எஞ்சினை முடுக்கி வேகமாக ஓட்டிச் சென்றேன். என்னுடைய அழகான கிராமம் வீட்டிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் இருந்தது.  180கி.மீ/மணி வேகத்தில் சென்றால், முப்பது நிமிடங்களில் அங்குச் சென்று சேர்ந்து விடலாம். காலை மணி எட்டரைக்குப் புறப்பட்டதால், சாலை, கார்களை அடித்துச் செல்லும்  ஒரு நதி போல எனக்குக் காட்சியளித்தது. எனக்கு அதைப் பார்க்கப் பார்க்க மூச்சு முட்டியது.

இந்த நகர்வில்லாத போக்குவரத்து நெரிசல் போல, அப்பா எரிச்சலூட்டுபவராகவும், பதற்றத்தையும் சோர்வையும் கொடுப்பவராக  இருந்தார். தன் துர்குணத்தால் துர்ரா, அம்மா மற்றும் என்னுடைய சொந்த வாழ்க்கையையும் அழித்து, குழப்பம் அடைய வைத்து, எங்களைத் திணறடித்து கலங்கச் செய்திருக்கிறார்.  அப்பாவிடமிருந்து நான் ஒன்றை மட்டும் கற்றுக் கொண்டேன். மலாய்க்கார ஆண்கள் புகைப்பித்து, பெண்பித்து, சூதாட்டம், காற்பந்தாட்டத்தில் மோகம் அல்லது பெண்களின் உடல் மீது மோகம் கொண்டு அடிமையாகாமல் இருந்தால், அவர்களின் மற்றொரு சுயபோதை பிறருக்குத்  துன்பத்தை ஏற்படுத்துவதுதான்.

அவர் கொடுத்த தொல்லைகளில் ஒன்று,  அவர் தேர்வு செய்த ஒருவரைத் திருமணம் செய்துக் கொள்ளும்படி என்னைக் கட்டாயப் படுத்தியது. அப்பாவைப் பொருத்தவரை அவர் பார்த்த ஆண், பிற இனக் கலப்பில்லாத தூய மலாய் இனத்தவன். ஆனால், முகம்மது ஆதம் லீ என்ற பெயருடைய ஒருவரை நீண்ட காலமாக நான் காதலித்து வருகிறேன் என்று அப்பாவுக்கு நன்றாகத் தெரியும். அவர் இஸ்லாம் மதத்தைத் தழுவியவர். அல்லது அப்பாவின் கருத்துப்படி ‘மலாய்க்காரராக மாறிய  சீனர்’. தலைநகரில் என்னைப் போலவே அவரும் ஒரு நிபுணத்துவ மருத்துவர். நாங்கள் இருவருமே இளம் வயதைக் கடந்த ஒத்த வயதையுடையவர்கள்.

அப்படியிருந்தும், ஒரு நாள் ஆதம் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது, அவர் எதிரிலேயே, அப்பா மிகவும் கடினமாகவும் தீவிரமாகவும் “நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்! இஸ்லாம் மதமாக இருந்தாலும், சீனர்கள் வேண்டாம், ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக பன்றியிறச்சியைச்  சாப்பிட்டிருப்பார்கள். இந்தியர்களும் வேண்டாம், ஏனென்றால் அவர்கள் மாட்டிறைச்சிச் சாப்பிட மாட்டார்கள். ஈத் பண்டிகையன்று கொர்பான் கொடுத்த மாட்டின் தோலை உரித்துத் முறையாகக் கூறுபோடத் தெரியாத ஒரு மருமகனை மசூதிக்கு அழைத்துச் சென்று நான் அவமானப்பட முடியாது. எனக்கு *பட்டாணியைச் சேர்ந்த மலாய்கார்களும் வேண்டாம், ஏனென்றால் அவர்களின் விசுவாசம் ஒரு போதும் அவர்கள் மனைவிக்கு அல்ல, மாறாகப் பட்டாணி விடுதலைக்கானப் போராட்டத்திற்கு தான் முழுக்க முழுக்க இருக்கும். * ஜாவாகாரர்களைப் பற்றிசொல்லவே வேண்டாம்…”

அப்பாவின் பேச்சுக்கு எதிர்வினையாற்ற அம்மா அவசரமாக சொற்களைத் தேடுவது போல எனக்குத் தோன்றியது. ஆனால் அம்மாவின் வாயிலிருந்து காற்றும் இறுகிப் போன பெரும் தயக்கமும்தான் வெளி வந்தன. அப்பாவுக்கு மூச்சிரைத்தது, அவரது கைகள் அம்மாவை எந்த நேரத்திலும் அறையத் தயாராக இருப்பது போல் இருந்தன. ஆனால் அந்த நேரத்தில் ஆதம் லீ வீட்டில் இருந்ததால் அவர் அப்படிச் செய்யவில்லை.

அதன் பிறகு, அப்பா எனக்கான வாழ்க்கை துணையைத் தொடர்ந்து மிகத் தீவிரமாகத் தேடத் தொடங்கினார்.

அம்மாவின் கைகளின் அசைவிலிருந்து நான் புரிந்துக் கொண்டேன். அப்பா தன் மரணத்துக்குப் பிறகு தன்னைப் புதைக்குழிக்குள் நல்லடக்கம் செய்ய ஓர் ஆண் வாரிசு இல்லாத குறையைத் தீர்க்க எனக்குச் சீக்கிரமாக ஒரு மாப்பிள்ளை அமைய வேண்டும் என நினைத்தார். துர்ரா, நான், அம்மா ஆகிய நாங்கள் மூவரும் பெண்களாக இருப்பதால் நிச்சயம் இந்தக் காரியத்தைச் செய்ய முடியாது.

“என்ன பெரிய கஷ்டம்!… கடவுள்தான் அப்பாவுக்கு துர்ரா கொடுத்திருக்கிறாரே…” என் சீண்டலானப் பேச்சின் மூலம் வேக வேகமாக அசைந்து கொண்டிருக்கும் அம்மாவின் விரல் அசைவுகளை நிறுத்தினேன்.  

——————————————————————————————————–

*பட்டாணி (தாய்லாந்தின் தெற்கில் உள்ள பட்டாணி பகுதியில் வசிக்கும் மலாய் சமூகம்)

*ஜாவானியர்கள் (இது இந்தோனேசியாவின் ஜாவா தீவை பூர்வீகமாகக் கொண்ட ஜாவானிய இனத்தைக் குறிக்கிறது.)

அப்பா கடைசியில் தற்கொலை செய்துக் கொண்டார்.

நான் இனி ஒளிந்து வாழ வேண்டிய அவசியமிருக்காது. இனி நான் நானாகவே இருக்கலாம். என் தங்கை துர்ரா பேங்காக்கில் மனித உரிமை வழக்கறிஞராக இருக்கிறாள். ஆனால் இனி தன்னை டாரில் என அழைக்க வேண்டும் என வற்புறுத்துகிறாள்.   அவள் ஒருமுறை என்னிடம், ”  அக்கா, ஒரு குழந்தை அம்மா, அப்பா இறந்த பிறகுதான் சுதந்திரமாக இருக்க முடியும்,” என்று கூறியதை இப்போது நினைத்துப் பார்த்துக் கொண்டேன்.

நூர் அடிலா

கார் தொடர்ந்து வேகமெடுத்துச் சென்று கொண்டிருந்தது.

எனக்கு வருத்தமாக இருந்தது. அப்படிதானே இருக்கும்.  எந்தக் குழந்தைதான் தன் சொந்த அப்பாவை நேசிக்காமல் இருக்கும். ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்பு, ஹரி ராயா பெருநாள் தன் புனிதத்தை அள்ளிக் கொண்டு வரும் நாளில்,   நடந்ததை என்னால் மறக்கவே முடியவில்லை. அந்தச் சமயம்தான் நான் நகரத்திலிருந்து காரை ஓட்டி வந்து உடல் அசதியில், கம்பத்து வீட்டில்  உள்ள  படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தேன். மருத்துவமணையில் அதிக வேலை. ஒரு நாள் விடுப்பு மட்டுமே கிடைத்திருந்தது.  அந்த நேரத்தில், ஹர்னாண்டோ மலேசியாவில் நீண்ட காலம் இருந்த பிறகு, ரமலான் பண்டிகையைக் கொண்டாட சியரெபோனுக்கு திரும்பி இருந்தான்.  ஊருக்குப் போக அவனுக்கு நான் அனுமதிக் கொடுத்திருந்தேன்.  இல்லையென்றால்,  நான் அவனையே கார் ஓட்டச் சொல்லியிருப்பேன். அது இன்னும் சுலபமாக இருந்திருக்கும்.

என்னையும் அறியாத ஆழ்ந்த தூக்கத்தில், திடீரென அறை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதைப் போல் உணர்ந்தேன். மின் விசிறியின் காற்று என் உடலை அணைத்து நிதானமாக வருடிச் செல்வது போல் இருந்தது. எப்போதும் என் பக்கத்திலேயே கிடக்கும் போர்வையை அனிச்சையாக பற்ற நகர்ந்த கை, என் உடலின் மேல் படர்ந்திருந்த  தலைமுடியையும் மீசையுமுள்ள முகத்தைத் தொட்டது. நான் திடுக்கிட்டு எழுந்த அந்தச் சமயத்தில், ‘வெக்கமேயில்ல! வெக்கமேயில்ல!’ என்று ஒரு சிறுமி அலறும் சத்தம் காதில் விழுந்தது. நான் விழிப் பிதுங்கி போனேன். ஓரே எட்டில்  எழுந்துப் பாய்ந்து  அவசர அவசரமாகத் தடவிப் பார்த்தேன். என் காற்சட்டை அணிந்தவாரே இருந்தது.  ஆனால் சட்டை?  என் சிவப்பு நிறச் சட்டை?  

ஹர்னாண்டோ? டாரில்?

திடுக்கிடலில் கட்டில் அதிர்ந்தது. அனுமதியில்லாமல் துணிச்சலாக  எங்கள் வீட்டினுள் நுழைந்திருந்த அந்தச் சிறுமியைத் தாடியுடன் இருந்த அந்த ஆள்  “ஷ்…ஷ்… வாயை மூடு! வாயை மூடு!”  என்று அவளை அடக்க முயன்று கொண்டிருந்தான்.

கடவுளே. அம்மா. கடவுளே. 

அந்தச் சமயத்தில் அம்மா பக்கத்து வீட்டில் இருந்தார் என்று எனக்குத் தெரியும்.  ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பெரிய விருந்து நிகழ்வு ஒன்றுக்கு அம்மா எங்கள் அண்டை வீட்டாருக்கு உதவிக் கொண்டிருந்தார் அந்தச் சிறுமி ஒரு வேளை அங்கிருந்து வந்திருப்பாளோ?  அப்படியென்றால், அப்பா அலைந்து திரிந்து   எங்கிருந்து  எங்கே வந்தார்?

“வெட்கமேயில்ல! வெட்கமேயில்ல!” அந்தச் சிறுமியைத் துரத்த நினைத்து  நான் உடனே வெளியே பாய்ந்தேன். ஆனால் கிராமத்தில் ஒரு  வீட்டிலிருந்து இன்னொரு  வீட்டிற்கு இடையில் வழக்கமாக இருக்கும் தூரம் இப்போது குறுகி விட்டதாகத் தோன்றியது. எப்போதும் தூரமாக இருக்கும், ஆனால் இன்று அது எப்படியோ மிகவும் அருகில் இருப்பதைப் போல் தோன்றியது.

கிராமத்தின் பல இடங்களிலிருந்தும் விருந்தினர்கள் வந்து கூடியிருந்த கூட்டத்தின் நடுவில்  அந்தச் சிறுமி நின்று கொண்டிருந்தாள். 

அனைத்து விருந்தினர்களும் உறைந்து கல்லாகிப் போயிருந்தார்கள். அந்தச் சிறுமியின் குரல் மட்டும் ஒலித்தது.

வெக்கமேயில்ல! வெக்கமேயில்ல! ‘இவ்வளவு பெருசா வளந்துட்டப் பிறகும் கூட இவளுக்கு அவளுடைய அப்பாதான் சட்டை போட்டு உடுறாரு!’

குழப்பத்திலிருந்த  நான் திடீரென பைத்தியம் பிடித்தவளைப் போல கத்தத் துவங்கினேன். போர்வையால் மட்டும் என் உடலை மூடியிருந்த நான் சுற்றி சுற்றி அம்மாவைத் தேடிக் கொண்டிருந்தேன். கிராம மக்கள் அனைவருக்கும் முன்னால், நான் ஒரு வழக்கறிஞரைப் போல என் தரப்பு நியாயங்களை விரைவாக விளக்க முயற்சித்தேன், “நான் இல்ல! அது நான் இல்ல! இது துர்ராவுக்கு நடந்தது போலவே இருக்கு அம்மா!  துர்ராவுக்கு நடந்தது மாதிரியே… அம்மா!”

அம்மா, என் குரலை உங்களால் கேட்க முடிகிறதா? பேச்சற்றவராகவே தொடர்ந்து இருக்க அம்மா முடிவு செய்துவிட்டாரா? அம்மா என்னிடம் சொன்னதுண்டு, அவர் குரலை அவராலேயே கேட்க முடியாத போது பேசுவதற்கானச் சொற்களைத் அவர் எப்படித் திரட்டிக் கொள்ள முடியும்?  

அதன் பிறகு, ஆயிரமாயிரம் அவதூறுகளை முழுக் கிராமமும் அள்ளி வீசியதை நான் அறிவேன்   ‘சொந்த அப்பனையே மயக்கும் முதிர்க்கன்னி’, ‘நிறையப் படிச்சுப் படிச்சுப் பைத்தியக்காரியாயிட்ட’. ‘அக்காகாரி வேசித்தனம் செய்வதாலத்தான் டூரா இந்த பக்கமே வருவதில்லை போல’ என சிலர் மிகக் குரூரமாகச் சிந்திப்பதையும் நான் அறிவேன். அனைத்து இழிச்சொற்களுக்கும் அம்மா தன்னுடைய முடிவில்லாத கண்ணீராலும் நீண்ட பிரார்த்தனைகளாலும் கடவுளுக்குப் பதிலளிப்பார் என்பதை நான் அறிந்தே இருந்தேன். 

நினைவுகள் சிதறின.  இதோ நான் வந்தடைந்து விட்டேன். நான் காரிலிருந்து இறங்கி  உடனே   வீட்டிற்குள் நுழைந்தேன். அப்பாவுக்குப் பிடித்த நாற்காலியின் அருகில் வந்து நின்றேன். மேசையின் ஓரத்தில் இன்னும் மீதமிருந்த கொஞ்சம் காப்பியையும் ஒரு புத்தகத்தையும் பார்த்தபோது அப்பா இன்னும் அங்கே இருப்பது போலவே உணர்ந்தேன். சற்று முன் எழுந்த என் ஞாபகங்களின் பழைய வாசனை சாம்பிராணி புகையுடனும் கற்பூரத்தின் நெடியுடனும் கலந்து எங்கும் வியாபித்திருந்தது.

கம்பத்து மக்கள் என்னுடைய வருகையை அவதானித்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மனதைப் பதம் பார்க்க கூடிய கூர்மையான   கிசுகிசுப்புக்களைக் கேட்க முடிந்தது.  ஒழியட்டும், தற்கொலை செய்து கொண்ட என்னுடைய அப்பா எங்கே?  அம்மா என் அருகில் வந்து ”உன் அப்பா இறந்து விட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டார்! மருத்துவமனையிலும் அதை உறுதிப்படுத்தி விட்டார்கள்” என்று சைகை செய்தார். புரிந்தது என்பதற்காக தலையை மட்டும் ஆட்டி வைத்தேன்.

உலகம் தெரியாத ஒரு சிறிய குழந்தையைப் போலவே அம்மா என்னை எப்போதும் நடத்துகிறார். அம்மாவுக்குத் தடித்த நாக்கு. கடினமான பிளைவு பட்ட எழும்புபோல் இருக்கும். ஆகையால் அவரால் பேச முடியாது. ஆனால் அம்மாவின் விரல்கள் அப்படியானதல்ல. அம்மா ஒரு வெகுளி.  அப்பாவைப் போல் வயதான ஒருவரின் பிரேதப் பரிசோதனையை மருத்துவரான நான் அறிந்திருப்பேன் என்பதையே அவர் மறந்து விட்டார் போலும்.

“நாம் துர்ராவுக்காக காத்திருக்கலாமா?”

இடதுபுறம் நோக்கி அம்மா சைகை செய்தார். இமாம் எங்களை நேருக்கு நேர்  பார்த்தப்படிக் கேட்டார். என் பதிலுக்காக வீடு முழுவதும் அமைதியாகக் காத்திருந்தது.  “மதிப்பிற்குறிய இமாம் அவர்களே, அப்பா இறந்த அன்று அவர் ஒரு உயில் எழுதி வைத்திருக்கிறார்”.

                                                                               ***

சூராவில் பிரேத்தத்தைக் குளிப்பாட்டி தயார் செய்வது எளிதான காரியமாக இருந்தது. அப்பாவின் சடலத்தை இறுதி தொழுகைக்காக வைத்தபோது, சூராவில் கூட்டம் அதிகமாக இல்லை, ஆனால் முற்றிலும் வெறிச்சோடியும் இல்லை.

சற்று முன்பு, ஹர்னாண்டோவை தொடர்புக் கொண்டு, அப்பாவின் உயில் பற்றி அவனிடம் தெரிவித்து உடனே கம்பத்திற்கு வருமாறு அழைத்தேன். ஹர்னாண்டோ அமைதியாக ‘இன்னாலில்லாஹி’  என்றான். “நான் என் சொந்த மண்வெட்டியை உடன் எடுத்து வருகிறேன்“ என்று மட்டும் சொன்னான்.

அப்பாவின் சடலம் கம்பத்து சூராவிலிருந்து வருவதற்கு முன்பே ஹர்னாண்டோ வந்து சேர்ந்து விட்டான்.  தனது தோளில் சுமந்து கொண்டிருந்த மண்வெட்டியுடன் என்னையேப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏன் அவன் முகத்தில் இத்தனை சோகத்தையும் வருத்தத்தையும் தாங்கிக் கொண்டு இருக்கிறான்?

நான் மெதுவாக நடந்தேன். பாஜு மெலாயுவும் அங்கிகளையும் அணிந்து புதைகுழியைச் சூழ்ந்திருந்த ஆண்கள் கூட்டத்தை மிக சகஜமாக விளக்கிக் கொண்டு சென்றேன்.  ஏழு அடி ஆழத்திற்குத் தோண்டப்பட்ட புதைக் குழியின் விளிம்பில் போய் நின்றேன்.

கடவுளே, அப்பா உண்மையிலேயே தற்கொலை செய்து கொள்ளும் முடிவைத் தேர்வு செய்தாரா?

சூராவிலிருந்து பெரிய வெள்ளை மூடுந்து ஒன்று கல்லறை வாயிலில் வந்து நின்றது. யாரென்றே தெரியாத இரண்டு இளைஞர்கள் சட்டென்று புதைக் குழிக்குள் குதித்து ஆயத்தமாகி நின்றனர்.  

“வேண்டாம்! வேண்டாம்! அங்கிருந்து அனைவரும் வெளியேறுங்கள்! வெளியேறுங்கள்! வெளியேறுங்கள்!” இமாம் கடுமையாக அவர்களைத் தடுத்து நிறுத்தினார்  ” தனது பிள்ளையின், மகளின் கைகளால் புதைக் குழியில்  இறக்கி வைக்கப்பட வேண்டும் என்பது இறந்தவரின் கடைசி ஆசை.

அமைதியாக வீசியக் காற்று கிசுகிசுப்புகளை நகர்த்திக் கொண்டு சென்றது. மேலே மேகங்கள் சூழ்ந்து நிழல் கொடுத்தன.

நேற்றிரவு கண்ட கனவு ஞாபகத்திற்கு வந்தது. நான் அம்மாவின் கையைப் பிடிக்க நினைத்தேன். சற்று முன்பு மிகவும் அமைதியான மன நிலையில் இருந்த அம்மா, தேம்பி அழுவதைக் காண முடிந்தது. தூரத்தில் நின்ற அவர் வாய் திறந்து எதையோ சொல்ல முயன்று வழக்கம் போலவே குரல் இன்றிக், கனவில் கண்ட காட்சி போலவே நிகழ்ந்தது.

அம்மா, எனக்குத் தெரியும். அழாதிங்க அம்மா. உங்கள் விரல்களிலிருந்து எழும் குரலுக்கு இந்த உலகம் சாட்சி.

அப்பாவின் சடலம் மூடுந்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டது.

ஹர்னாண்டோவின் மண்வெட்டியைப் நான் கையில் பிடித்திருப்பது அனைவரையும் குழப்பமடையச் செய்திருந்தது.  சில வயதானவர்கள் ”இமாம், பெண்கள் இப்படி கல்லறை விளிம்பில் நிற்கக்கூடாது! இறந்தவருக்கு அது மரியாதை அல்ல,” என்று சத்தம் போட்டுத் தடுக்க முயன்ற போது, இமாம் பல முறை அவர்களை அமைதிப்படுத்த முயன்று கொண்டிருந்தார்.

இதைக் கேட்டால் துர்ராவுக்கு நிச்சயம் அருவருப்பாக இருக்கும்.

இமாம் ஒரு நீண்ட மூச்சை இழுத்து விட்டு, “போதும் போதும்”. அதை அப்படியே விட்டுடுங்க. விட்டுடுங்க. இறந்தவரின் கடைசி விருப்பத்தை நாம் மதிக்க வேண்டும்! இது இறந்தவரின் உயிலில் உள்ளது!” என்று திரும்பத் திரும்பச் சொன்னார்.

அல்லாஹ்வே எல்லாவற்றுக்கும் அதிபதி, அவனே ஏக இறைவன். அவனே எல்லாவற்றுக்கும் சாட்சியாகிறான்.

அப்பாவின் சடலம் எடுத்துச் செல்லப்பட்டு மெதுவாக புதைக் குழியில் இறக்கப்பட்டது. அப்பாவை காபாவை நோக்கி படுக்க வைக்க வசதியாக, குழியின் பக்கத்தில் நான் உருண்டையாக்கி வைத்த மண் கட்டிகள் நன்றாக அடுக்கப்பட்டிருந்தது.

கனவில் நடந்தது போலவே, தற்கொலை செய்து கொண்ட அப்பாவின் உடல் குழியில் இறக்கும் போது கனமாக இல்லை. மனிதனின் அனைத்து பாவங்களிலும்  மிகப் பெரிய பாவம் தற்கொலை செய்து கொள்வது தானே?

மண் வெட்டியால் மண்ணைக் கொந்தி விட்டார்கள்.  வந்திருந்தவர்களின் திடீர் அமைதி எதையோ புரிந்து கொண்டதைப் போல் இருந்தது.

கடவுளே, அப்பா என் நிபந்தனைக்கு இணங்கி விட்டார். அதற்கு ஈடாக, குடும்ப உறுப்பினரான பிள்ளையின் கைகளால் புதைக் குழியில் இறக்கப்பட வேண்டும் என்ற அப்பாவின் இறுதி ஆசையை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம். நாம் எல்லோரும் நேசித்த அப்பா, இன்று எவ்வளவு எளிதாக அடக்கம் செய்யப்பட்டார் என்பதைப் பார்த்தாயா, துர்ரா?  அப்பா, என்பவர் அவர் இறந்த பிறகும், அவர் விரும்பிய அனைத்தையும் பெறும் உரிமை உள்ள ஓர் ஆணாக எப்போதும் இருக்கிறார்.  ஒரு வேளை அப்பா தற்கொலை செய்து இறந்தால், அவர் எங்களுக்குச் செய்த பாவங்களை மன்னிப்போம் என்று நானும் துர்ராவும் கடவுளின் பெயரால் சத்தியம் செய்யவில்லையா?

 ‘ கணவர்… என் கணவர்…’

மயக்கமடைவதற்கு முன், ஹர்னாண்டோ தனது மண்வெட்டியைக் கீழே அழுத்தமாகப் போட்ட சத்தம் கேட்டது. புதைக் குழியின் உள்ளே இருந்து, ஹர்னாண்டோ மேலே எம்பிக் குதித்து என்னை இறுக்கமாக சுற்றி அணைத்துக் கொண்டான். அவனது தூசு படிந்த கைகளால், எனது உச்சந்தலையையும் முடியையும் முந்தைய எங்கள் இரவுகளைப் போலவே வருடிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.

இந்த கதை முதன் முதலில் ஸ்வரா இதழ் 5இல் (ஜனவரி-மார்ச் 2021) இல் வெளியிடப்பட்டது. பின்னர் தும்பொ மென்ஜாடி போஹோன் சகுரா (Tumbuh Menjadi Pohon Sakura) (கவா புத்தகம், 2024) என்ற சிறுகதைத் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.

தமிழில்: ஆசிர் லாவண்யா

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...