
இறைச்சி பொட்டலத்தை இறுக மூடியிருந்த பனிக்கட்டிகளை மர்சுகி கவனக்குறைவாக உடைத்ததனால் அவன் வீட்டிலிருந்த சிறிய குளிர்சாதனப் பெட்டி பழுதடைந்துவிட்டது. அவனது மனைவி அலுவலகத்திலிருந்து திரும்பும் வரை, மர்சுகி அப்பழுதைப் பற்றி அவளிடம் எதுவும் சொல்லவில்லை. ஒரு கையில் சுத்தியலையும் மறு கையில் பழத்தோல் சீவும் கத்தியையும் பிடித்தவாறு அக்குளிர்சாதனப் பெட்டியின்முன் மல்லாந்து படுத்துக்கிடந்தான். அவனது பார்வை குளிர்சாதனப் பெட்டியின் கதவில் மனைவி ஒட்டியிருந்த அழகிய ஃபிரிட்ஜ் மேக்னட்களின் மீது விழுந்திருந்தது.
கனமழை பெய்துகொண்டிருந்த இரவில், அக்குளிர்சாதனப் பெட்டியைக் கண்டு எரிச்சலுற்ற மர்சுகி, வீட்டின் பின்புறம் உள்ள நகராட்சிக் குப்பைத்தொட்டியில் அதைத் தூக்கி எறிய முற்பட்டான். முற்றிலும் நனைந்த அவன், பாதி வழியிலேயே தனது எண்ணத்தைக் கைவிட்டான். ‘நியூயார்க்’ என்று அச்சிடப்பட்ட கிழிந்த பேஸ்பால் தொப்பியை அணிந்திருந்த அவன், குளிர்சாதனப் பெட்டியை அதே எரிச்சலுடன் மீண்டும் வீட்டுக்குள் சுமந்து வந்தான். அந்தச் சிறிய குளிர்சாதனப் பெட்டியை இருந்த இடத்திலேயே மீண்டும் வைத்தான். சிறிது நேரம் சமையலறையில் அலைந்து திரிந்தான். ‘என்ன ஆயிற்று எனக்கு?’ என்று தன்னைத் தானே வினவிக்கொண்டான். பின்னர், குளிர்சாதனப் பெட்டியின் முன் சம்மணமிட்டு அமர்ந்தான். தன் எதிரில் இருந்த அந்தச் சிறிய குளிர்சாதனப் பெட்டியைப் பார்க்கப் பார்க்க, அவனது கற்பனை ஓர் எல்லையற்ற தூரத்திற்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தது.
அடுத்த நாள் காலையிலும், மர்சுகி அப்பழுதடைந்த குளிர்சாதனப் பெட்டியைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தான். புதிய ஷார்ட்ஸ் ஒன்றை மாற்றிக்கொண்டு வந்தவனை, ஒரு பைத்தியக்காரச் சிந்தனை ஆட்கொண்டது. ‘என்னையே இந்தச் சிறிய குளிர்சாதனப் பெட்டிக்குள் அடைத்துக்கொண்டால் என்ன ஆகிவிடும்?’ அவன் மனைவி, பழுதடைந்த அக்குளிர்சாதனப் பெட்டியின் மீது இனி எந்தக் கவனமும் செலுத்தப்போவதில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு, இருவரும் ஒரு பேரங்காடிக்குச் சென்று மின்சாதனப் பொருட்கள் விற்கும் பிரிவைச் சுற்றிப் பார்த்தனர். அப்போது, அவள் ‘எல்பா’ ரக பெரிய குளிர்சாதனப் பெட்டியை வாங்குவோம் எனக் கூறினாள். ஆனால், ஆடம்பரப் பொருள்களில் மர்சுகிக்கு விருப்பமில்லை. எனவே, அவர்கள் மீண்டும் வீடு திரும்பி, வழக்கம்போல வாழ்க்கையைத் தொடர்ந்தனர். ஆனால், மர்சுகியால் இயல்புநிலைக்குத் திரும்ப முடியவில்லை.
மனைவி வீடு திரும்புவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன், தன் உடலை அச்சிறிய குளிர்சாதனப் பெட்டிக்குள் நுழைக்க முயன்றான் மர்சுகி. மேடையில் கண்கட்டி வித்தைகள் செய்யும் மாயாஜாலக் கலைஞனைப் போன்ற லாவகத்துடன், அவன் தன் உடலை மிகச் சாமர்த்தியமாக வளைத்தான். முதலில் தலையை உள்ளே நுழைத்தான். பின்னர் இரு கால்களையும் மடக்கித் திணித்தான். அவ்வளவுதான். தான் செய்ததை அவனாலேயே நம்ப முடியவில்லை. மர்சுகி முழுவதுமாக குளிர்சாதனப் பெட்டிக்குள் நுழைந்துவிட்டான். ஆனால், கதவு மூடப்பட்டவுடன் உள்ளேயுள்ள ஒளி எங்கும் பளிச்சென்று பிரகாசித்தது. ‘நான் என்ன செய்ய துணிந்தேன்?’ உள்ளே காற்று இல்லை. மர்சுகி தாங்கிக்கொள்ள முயன்றான்.
மர்சுகி அச்சிறிய குளிர்சாதனப் பெட்டிக்குள் தனது மூச்சை அடக்கிக் கொண்டான். குளிர்சாதனப் பெட்டிக்குள் இருப்பது எப்படியிருக்கும் என்று அவன் நீண்ட நாட்களாகவே சிந்தித்திருக்கிறான். துணி அலமாரிக்குள் மறைந்து கொண்ட போதும், கைவிடப்பட்ட கிணற்றின் அடியாழத்திற்குச் சென்று அமர்ந்த போதும், நாற்பது அங்குலத் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தன்னை அடைத்துக் கொண்ட போதும் அல்லது படுக்கைக்குக் கீழ் ஒளிந்து கொண்டபோதும் எதுவுமே அவனது ஆன்மாவுக்குள் ஒருவிதக் கிளர்ச்சியை ஏற்படுத்தியதில்லை. ஆனால் இக்கணத்தில், இக்குளிர்சாதனப் பெட்டிக்குள் நுழைந்தவுடன், அவன் கனவு நனவாகிவிட்டது. அவன் உடல் உடனே பனியாக உறைந்து, அப்படியே என்றென்றும் உயிருடன் நிலைத்து விடுவானா? இப்போது அவன் முழுமையாகவே குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்தான்.
மர்சுகி புதியதோர் உலகைக் கண்டுபிடித்தது போல் உணர்ந்தான். அது குழந்தைகளுக்கான கற்பனைக் கதைகளில் வர்ணிக்கப்படும் மாய உலகைப் போலிருந்தது. மர்சுகி தன் வீட்டிலிருந்த சிறிய குளிர்சாதனப் பெட்டிக்குள் நுழைந்த கணத்திலேயே உள்ளே எல்லாம் மாறிப்போனது. ஒரு பெருங்கனவைப் போல, அவன் உடல் திடீரென சுருங்கியதா அல்லது அக்குளிர்சாதனப் பெட்டியின் பரப்பளவு திடீரென விரிந்ததா தெரியவில்லை. மர்சுகி வெண்மையான பனிக்கட்டிப் பரப்பின் மீது நின்றிருந்தான்; கண் எட்டும் வரையிலும் பனிப்பாளம் விரிந்துகிடந்தது.
அவனது அப்போதைய உணர்வை வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது. ஒளியின் ஈர்ப்பில் மாட்டிக்கொள்ளும் ஈசலைப் போலானான். சுற்றியிருந்த பனிக்கட்டிகள் கரைந்துவிடக் கூடாது என நினைத்திருந்தான் மர்சுகி. அவனுக்கு முன்னால் விரிந்திருந்த அந்தப் பனிப்பரப்பின் அகலம் சஹாரா பாலைவனத்தை ஒத்திருந்தது.
கற்பனையுலகில் ஆழ்ந்திருந்த மர்சுகி, பனிக்கட்டிகளையும் இறைச்சி பொட்டலத்தையும் எடுத்து வைக்குமாறு தன் மனைவி நினைவூட்டியதை மறந்துவிட்டான்.
‘நான் எங்கே இருக்கிறேன்? வட துருவத்திலா, தென் துருவத்திலா?’
ஓரிரண்டு அடிகள் முன்நகர்ந்தவுடனேயே, மர்சுகி கையிலிருந்த சுத்தியலையும் காய்கறி வெட்டும் கத்தியையும் பனி மூடிய தரையில் எறிந்தான். “இதற்குமேல் எனக்குத் தேவையில்லை சுத்தியலும் கத்தியும்,” என்று கூறிக்கொண்டான். இந்தச் சிறிய குளிர்சாதனப் பெட்டிக்குள் எவ்வளவு விசாலமாக இருக்கிறது! வியப்புடன் அண்ணாந்து பார்த்தான் மர்சுகி.
பிறகு தன் பாதங்கள் பதிந்திருக்கும் இடத்தைச் சுற்றி பார்த்து அதன் விசாலத்தைக் கணிக்க முயன்றான். “அதெப்படி, இந்தப் பனிப் பிரதேசத்தில் நான் ஒருவன் மட்டும் இருக்க முடியும்? பென்குயின்கள், கடல் சிங்கங்கள், பனிக்கரடிகள் எல்லாம் எங்கே?” என்று அவன் தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.
முன்பு, குளிர்சாதனப் பெட்டியில் இருந்த இறைச்சி, மீன், கோழி அல்லது கிச்சாப்பின் வாடையெதுவும் அவனுக்குத் தெரியவில்லை. ‘எனது இந்த வருகைக்குள் எந்த உள்நோக்கமும் இல்லை. நான் யார் இடத்தையும் கைப்பற்றவோ இவ்விடத்தை ஆளவோ வரவில்லை. இப்பனிப்பரப்பை அழிக்கும் எண்ணமும் எனக்கில்லை. எனவே நான் எதற்கும் பயப்படத் தேவையில்லை.’
‘என் பாதங்களுக்குக் கீழிருக்கும் பனிக் கட்டிகளின் அடியில் என்ன இருக்கிறது? ஒரு பெருங்கடலா? டைட்டானிக் கப்பலின் சிதிலங்களா? அல்லது மறைந்த அட்லாண்டிஸ் நகரமா?’ உற்சாகமிகுதியில் வழுக்கி விழுந்துவிடக்கூடும் என்ற பயத்தில் மர்சுகி எச்சரிக்கையாக நடந்தான். காற்றில்லா இவ்விடத்துக்குத் தன்னை மெல்லப் பழக்கிக்கொண்டான். சுற்றியிருந்த காட்சியால் அவன் பரவசமடைந்தான். ‘எவ்வளவு அற்புதமானது கடவுளின் படைப்பு!’ மனத்தில் முணுமுணுத்துக்கொண்டான். ஏன் இப்போதுதான் இத்தகைய உலகைக் காணும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது? அதன் சுற்றுச்சூழல் மாய உலகத் தோற்றம் போலவே இருந்தது. அக்குளிர்சாதனப் பெட்டியின்முன் அமர்ந்திருந்தபோது இருந்த வெறுப்பும் அசூயையும் இப்போது நீராவியாய்க் காணாமலானது. “ஐஸ் பெட்டியிலிருந்து இறைச்சியை எடுத்து வைக்க மறக்க வேண்டாம்,” மனைவி சொல்லிச் சென்றாள். அவள் சென்றிருக்கும் நேர்காணல் முடிவு மகிழ்ச்சியாக அமைய வேண்டும். இப்போது, அவனே தன் மனைவியுடன் ஒரே உலகில் இல்லை. பனிக்கட்டிகளை உடைக்கும் அந்த வேலை அப்படியே கிடக்கட்டும். அதற்குள் புதைந்திருந்த அந்த இறைச்சி பொட்டலம் மீது அவனுக்கு இப்போது ஆர்வமில்லை. பிறகு மனைவி வசைபாடுவாள். பரவாயில்லை. இப்போது மர்சுகி ஒரு ராட்சத குளிர்சாதனப் பெட்டிக்குள் இருக்கிறான். அவன் மனைவியோ, வேறு யாருமோ நுழைய முடியாத உலகம் இது. அவனும் வெண்பனி பரப்பும் மட்டும்தான். மனைவி விரும்பினால் வீட்டருகிலுள்ள உணவகத்தில் இருந்து உணவை வாங்கிக் கொள்ளலாம். பரந்த வெள்ளை காகிதத்தின் நடுவே ஒரு கரும்புள்ளியாக, பனிமலையின் உச்சிக்குச் செல்லும் ஒரு மலையேறியைப் போல மர்சுகி தொடர்ந்து நடந்தவண்ணமே இருந்தான். மேலே மேகமற்ற நீல வானம் விரிந்திருந்தது.
தான் கனவு காண்கிறோம், கற்பனை உலகில் மூழ்கியிருக்கிறோம் என்ற எந்தவொரு எண்ணமும் மர்சுகிக்கு இல்லை. குளிர்சாதனப் பெட்டிக்கு வெளியே ஒரு நிஜ புறவுலகம் இருந்தது போலவே, உள்ளேயும் ஒரு நிஜ உலகம் இருக்கின்றது. அவன் தொடும் பனி, உண்மையான பனிக்கட்டியைப் போலவே குளிர்ந்திருந்தது. இங்கே மழையோ பனிப்புயலோ வீசினால் எப்படியிருக்கும்? வடதுருவத்திற்கோ தென்துருவத்திற்கோ பயணம் செய்து, அங்குள்ள பனியையும் அழகிய ஆரோரா ஒளிகளையும் நேரில் காண விரும்பினால் நிச்சயம் அதற்கு அதிக செலவாகும். அவனுக்கு நிலையான வேலை இல்லை. பேரங்காடி ஊழியர் போலவோ அரசு அலுவலகக் கணக்காளர் போலவோ மாத வருமானமில்லை. அவன் உலகம் முழுவதையும் சுற்றிப் பார்ப்பது ‘நேஷனல் ஜியோகிராஃபிக்’ ஆவணப்படங்களின் வழி பெற்ற கற்பனைகளால் மட்டுமே. ஆனால் இப்போது, இங்கே அவன் என்ன செய்ய முடியும்? உறைந்த நீர் பிரதேசத்தில் மனிதர் யாருமில்லாத, செலுத்த வேண்டி நிலுவையிலிருக்கும் கட்டணங்களுமில்லாத, ஆட்சி அமைப்பை நிர்ணயிக்கும் எந்த ஆட்சியாளரும் இல்லாத பழுதடைந்த அந்தச் சிறிய குளிர்சாதனப் பெட்டிக்குள் அவன் என்னதான் செய்துவிட முடியும்? தன் பார்வைக்கு எதிரே விரிந்திருந்த அவ்வதிசயத்தில் மூழ்கியவாறு அந்த மாபெரும் பனிக்கூடத்தில் மர்சுகி தொடர்ந்து நடந்தான்.
குறைந்தபட்சம் அந்தச் சிறிய குளிர்சாதனப் பெட்டியின் கதவுக்குப் பின்னாலிருக்கும் வெளியுலகின் சிக்கல்களையெல்லாம் அவன் மறந்திருந்தான். நிஜ உலகின் அனைத்து பிரச்சினைகளாலும் அவன் சோர்ந்து, சலித்துப் போயிருந்தான். வெளியுலகே அவனைப் பொறுத்தவரையில் ஒரு சிறைச்சாலையாகத் தான் தெரிந்தது. இனி வாழ்க்கை செலவுகளையோ, பல ஆண்டுகள் குடியிருக்கும் வீட்டு வாடகையையோ பற்றி சிந்திக்கத் தேவையில்லை. அங்கும் இங்கும் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. அனைத்திற்கும் மேலாக, அவன் புத்தகக் கடைகளில் காணும் சுவாரஸ்யமான நூல்களையும், புத்தக விமர்சகராகத் தான் செய்யும் பணிக்குத் தாமதமாகவோ சில முறை வராமலேயே போகும் கூலியையும்கூட மறந்துவிட்டான். இங்கு, அவன் ஆன்மா ஆசுவாசமடைந்திருந்தது. தனிமையில், யாருடைய கட்டுப்படுத்துதலுமின்றி இருந்தான். ஆனால், இந்தப் பனிப்பாதையின் தொடக்கம் எங்கே? இதன் எல்லை எங்கே முடிகிறது? ஒருவேளை வழி தவறினால் என்ன செய்வது? முன்பு மூடிய கதவை மீண்டும் திறக்க முடியாவிட்டால்? அவனது மனைவி, திடீரென அவன் இல்லாமலானதை உணர்ந்திருப்பாளா?
மர்சுகி எவ்வளவு தூரம் நடந்தானோ, அவ்வளவு தூரம் அவனது சொந்த சமையலறையின் குளிர்சாதனப் பெட்டிக்குள் மறைந்திருந்த மர்ம உலகம் வெளிப்படத் தொடங்கியது. வீட்டை விட்டு வெளியேறத் தேவையே இல்லை. இக்குளிர்சாதனப் பெட்டி உலகில் மர்சுகிக்கு நிழல் எதுவும் இல்லை. அவன் எடுக்கும் ஒவ்வொரு அடியையும் தொடர்ந்து வந்தது அவனது உள்ளுணர்வும், குளிர்சாதனப் பெட்டிக்குள் உருவாகியிருந்த உலகமும், தன் மூச்சுக்காற்றின் ஒலியும் இதயத்தின் துடிப்பும் மட்டுமே. அவனது பாதங்கள் மிதித்தது உண்மையான பனியைத்தான். அவன் அனுபவித்தது உண்மையான ஒரு உலகைத்தான். இது சிறுவர்கள் விளையாடும் இடமல்ல. இயற்கையாகவே உருவெடுத்த உலகம். ஐம்புலன்களையோ உள்ளத்தினுள்ளே ஒலிக்கும் சிறு குரலையோ இந்தக் கற்பனை உலகம் ஏமாற்றவில்லை என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டான். இச்சிறிய குளிர்சாதனப் பெட்டிக்குள் அவன் அற்புதங்களைப் பார்த்துவிட்டான். முழு விழிப்புநிலையோடுதான் அவன் குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்தான்.
இத்தனை நாட்களாகக் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருந்த உணவுப் பொருள்கள் யாவும் இன்னும் நல்லநிலையிலேயே இருந்தன. அவன் காலியாகக் கிடந்த முட்டை வைக்கும் பகுதியையும் குளிர்பானப் புட்டிகளும் சில மயோனிஸ் புட்டிகளும் இருந்த இடத்தையும் அண்ணாந்து பார்த்தான். அவன் மனைவி தன் கன்னத்தின் சருமத்தை வழவழப்பாக வைத்திருப்பதற்காக முட்டையின் வெள்ளை கருவைப் பயன்படுத்துவாள். ‘நியூயார்க் நியூ சால்யூஷன்’ அழகுச் சிகிச்சையில் பணத்தை விரயப்படுத்தத் தேவையில்லை. ஒரு பொட்டலத்தில் வெண்ணெயும் ஒரு பை பாதாம் சாக்லேட்டும் இருந்தன. மீதமிருக்கும் உணவுப்பொருட்கள் பற்றி மேலும் ஆராய மர்சுகிக்கு ஆர்வமில்லை. அது அவன் மனைவிக்குக் கொடுத்த ‘இறைச்சி பொட்டலத்தை எடுக்க வேண்டும்’ என்ற வாக்குறுதியைத்தான் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். அவன் இப்போது அதிசயங்களால் நிரம்பிய உலகுக்குள் நுழைந்துவிட்டான். அங்கிருக்கும் ஒரு பனிக்கட்டியைக் கூட உடைப்பது அவனது எண்ணமல்ல.
வெளியிலிருந்து பார்த்தால், அவன் நுழைந்திருந்த இந்தக் குளிர்சாதனப் பெட்டி அவனது முழங்கால் வரைதான் இருக்கும். ஆனால் அதன் உள்ளே, மர்சுகி ஒரு குள்ளனாக மாறிவிட்டான். இந்த உடல் மாற்றம் எப்படி நிகழ்ந்தது? இது வேதியியல் விளைவா? அறிவியல் நிகழ்வா? உலகளாவிய வானிலை மாற்றத்தால் ஏற்பட்டதா? இவ்வாறான மெய்யியல் சார்ந்த கேள்விகள் மர்சுகியை குழப்பின. அவன் பனியால் மூடப்பட்ட மேல் அடுக்கை நோக்கிப் பார்த்தான். அங்கே நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு பை மாட்டிறைச்சி இருந்தது. அங்குதான் அக்குளிர்சாதனப் பெட்டி பழுதடையக் காரணமான வாயுக்குழாய் இருந்தது.
எவ்வளவு நேரமாக அவன் இங்கே அலைந்து திரிகிறான்? ஐந்து நிமிடமா? ஒரு மணி நேரமா? அல்லது ஓராண்டாகிவிட்டதா? சிறிது நேரம் நின்று, மர்சுகி தன் கண்ணாடியைக் கழற்றினான். தன் பார்வையை மங்கச் செய்த பனிப்படலத்தைத் தன் காற்சட்டையின் நுனியால் துடைத்தான். இச்சிறிய குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியேறியதும், உலகம் வெளியில் காணப்படுவதுபோல மட்டும் இல்லையென்று தன் மனைவியிடம் கூறுவான். கடலின் அடித்தளத்தில், விண்வெளியில் இருப்பதுபோல் இந்தக் குளிர்சாதனப் பெட்டியிலும் ஓர் உலகம் உள்ளது என்பான். மீண்டும் அவன் கண்ணாடியை அணிந்துகொண்டான். எத்திசையில் செல்லவேண்டும் என்று தெரியாமல் சோர்வுற்ற மர்சுகி ஒரு பனிப்பாறையின் மீது உட்கார்ந்தான். அவனுக்குப் பசிக்கவில்லை. இயற்கையின் எல்லைகளில் நம்பிக்கை குன்றியவனாய் அப்படியே மல்லாந்து படுத்து, வானத்தை நோக்கிப் பார்த்தான். ‘நான் பித்தனாகிவிட்டேனா இவ்வளவு தூரம் வருவதற்கு? எதைத் தேடி இங்கு வந்தேன்?’
காலம் நகர்ந்தவண்ணமே இருந்தது. மர்சுகி நீண்ட நித்திரையிலிருந்து விழித்தான். இன்னும் அதே இடத்தில்தான் இருந்தான். அதே குட்டைக் காற்சட்டை அணிந்திருந்தவாறு முழுவதும் பனியால் மூடியிருந்த உலகத்தின் நடுவே வெற்று வான்நோக்கிப் படுத்திருந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு, அச்சிறிய குளிர்சாதனப் பெட்டியின் குடியிருப்பாளர்களுடன் இதுவரை அறிந்திராத ஒரு மொழியில் மர்சுகி உரையாடத் தொடங்கினான். அங்கிருந்த அனைத்து உணவுப் பொருள்களும் அவனை வரவேற்றன.
திடீரென சில மாடுகளும், கோழிகளும், மீன்களும் தங்கள் முழு உருவத்தில் தோன்றத் தொடங்கி, அவனது உரையாடல் தோழர்களாக உருவெடுத்தன. மர்சுகி உடனே எழுந்து நின்றான். ‘இவையாவும் எங்கிருந்து வந்தன? இவைதானே முன்பு இறைச்சித் துண்டுகளாகவும், சுஷி துண்டுகளாகவும், ஃபிஷ்பால் உருண்டைகளாகவும், ஸ்பாகெட்டி கலவைகளாகவும் இருந்தன? இவைகளை யார் மீண்டும் உயிர்ப்பித்தது? அப்படியானால், நான் இன்னும் ஒரு சாதாரண மனிதனாக இருக்கிறேனா?’ மர்சுகி மனபதட்டத்திற்குள்ளானான்.
“வாருங்கள் மர்சுகி! வருக வருக!” என்று அவை ஒருமித்த குரலில் அவனை வரவேற்றன.
மர்சுகி அதிர்ச்சியில் உறைந்துபோனான். அவன் பார்வைக்குத் தெரிந்த உயிரினங்கள் என்ன வகை என அவனுக்குப் புரியவில்லை. பேய்களா? எல்லாமும் பேசக் கூடியவையா? மர்சுகி சில அடிகள் பின்நோக்கி நகர்ந்தான். ‘இவை என்னை மயக்கிக் கொண்டிருக்கின்றனவா? இவை சாத்தானின் தோற்றங்களா? இப்போதே என்மேல் பாய்ந்து, என்னைக் கிழித்தெறியப் போகின்றனவோ? மனிதர்களுடன் விலங்குகள் பேசுவது கற்பனைக் கதைகளில்தானே சாத்தியம்,’ என்று எண்ணினான் மர்சுகி. தான் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்த புனைவுக் கதைகளின் பக்கங்களுக்குள் தானே நுழைந்துவிட்டோமோ என்ற பயம் அவனை ஆட்கொண்டது. இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பது வெறும் மாயையாகவோ கற்பனையாகவோ முடிந்துவிடக்கூடாதென நினைத்தான்.
‘போதும்!’ அவன் உள்ளுக்குள் கூறினான். நிஜ உலகின் கற்பனைகளிலும் பகற்கனவுகளின் சிறைகளிலும் அவன் வெகு காலம் வாழ்ந்துவிட்டான். மர்சுகியின் வாயும் நாக்கும் பனியில் மூடப்பட்டதைப் போல உறைந்துபோனது. அந்தச் சிக்கலான சூழ்நிலையைக் குறித்து தன் மனத்தில் எழுந்த கேள்விகளுடன் நீண்ட நேரம் போராடிய பின் அவனது குரல் மெல்ல எழும்பியது. “நன்றி,” என்று மிகவும் தயக்கத்துடன் கூறினான். தனது மனநிலை சாந்தமானதாக உணர்ந்தபின் மர்சுகி கேட்ட கேள்வி :
“இந்தக் குளிர்சாதனப் பெட்டிக்குள் இருக்கும் உங்களுக்கெல்லாம்.. எப்.. எப்படி என் பெயர் தெரிந்தது?”
“நீங்கள் எல்லாம் உண்மையிலேயே மிருகங்களா? ஃபோட்டோஷாப் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கற்பனைச் சித்திரங்களா? பேய்களின் உருவா? அல்லது கற்பனைக்கதைகளின் பாத்திரங்களா?” மர்சுகியின் குரல் தடுமாறியது. அவன் முன் நின்றிருந்த உயிர்களை ஒவ்வொன்றாக அவன் உற்று நோக்கினான். இவையெல்லாம் எந்த உலகிலிருந்து வந்தன? பனிப்பரப்பில் பத்திருபதுக்கும் மேற்பட்ட மாடுகள், கோழிகள் மற்றும் மீன்கள் இருந்தன. அவன் பார்ப்பது அனைத்தும் மாயையா எனச் சந்தேகமுற்றான். தான் கனவு காண்கிறோமோ எனும் எண்ணம் இன்னும் அவனைவிட்டு விலகவில்லை. சில நொடிகளுக்கு முன்புதான் பனிக்கட்டிகளை உடைத்துக் கொண்டிருந்தான். அவனது தொண்டையில் இன்னும் 3-in-1 காப்பியின் சுவையும் ஸ்ட்ராபெரி ஜேமின் இனிப்பும் மீதமிருந்தது. அன்று காலை, மனைவி அவசரமாக நேர்காணலுக்குச் சென்றதால், பசியாறை தயாரிக்க நேரமில்லை. நிக்கல்சன் பேக்கர் எழுதிய நாவலை வாசிக்கத் தொடங்கலாம் என்ற அவன் எண்ணம் பாதியில் தடைபட்டது. பிறகு குளிர்சாதனப் பெட்டி பழுதடைந்தது. ஈரமான உணவுகளை வைக்கும் குளிர்சாதனப் பெட்டியின் மேல்தளத்தை, அவனது கையில் இருந்த பழத்தோல் சீவும் கத்தியின் முனை குத்தியதில் வாயுக்குழாய் துளைபட்டு வாயு கசிந்தது. அதன் பின்பு, தன் முழங்காலுக்குக் கீழிருக்கும் அந்த 20 அங்குலச் சிறிய குளிர்சாதனப் பெட்டிக்குள் அவன் இருந்தான். சட்டையின்றி வெறும் குட்டை காற்சட்டை அணிந்தபடி, தன்னை எப்படி அதற்குள் நுழைத்துக்கொண்டான் என்பது இன்னும் மர்சுகிக்கு புரியவில்லை.
மூக்குக்கண்ணாடி அணிந்த ஒரு முதிர்ந்த மாடு முன்வந்து, கரகரப்பான குரலில் பதிலளித்தது: “எங்களுக்குத் தெரிந்திருப்பது உனது பெயர் மட்டுமல்ல, மர்சுகி…”
‘மனிதக்குரல்தான், இயந்திக்குரல் அல்ல,’ கண்முன்னே நடக்கும் நிகழ்வை நம்ப முடியாமல் மனத்தில் முணுமுணுத்தான். மர்சுகி வியப்பில் உறைந்து போயிருந்தான்.
“நாங்கள் உன் வயதையும் அறிவோம். நீ கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த வேலையும் செய்யாமல், ஒரே குவளையில் 3-in-1 காப்பியைக் குடித்துக்கொண்டு உன் அறையில்தான் அமர்ந்திருக்கிறாய். நூலக உதவியாளர் வேலையை விட்டதிலிருந்து, ஒவ்வொரு மாதமும், உன் மனைவியின் ஏசர் மடிக்கணினியைப் பயன்படுத்தி ஓர் இதழுக்காகப் புத்தக விமர்சனங்களை எழுதுகிறாய். நீ எளிதில் பதறுபவன், உன்னைத் திருப்திப்படுத்துவது கடினம். உனது எழுத்துகளில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்த முயல்கிறாய். உனக்குப் பிடித்த புத்தக வகைகளையும் நாங்கள் அறிவோம். நாங்களும் இங்கு இலக்கியத்தையும், கலைகளையும், நாடகத்தையும், இசையையும், அறிவுசார் கலந்துரையாடல்களையும் விரும்புவோம். மேலும், ஒருநாள், நீ இந்தக் குளிர்சாதனப் பெட்டிக்குள் நுழைவாய் என்று நீ சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே நாங்கள் அறிந்திருந்தோம்”.
அந்த மாடு பேசுவதைக் கண்சிமிட்டாது கேட்டுக்கொண்டிருந்தான் மர்சுகி.
“மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உன் வருகைக்குப் பிறகு நாங்கள் மீண்டும் உயிர் பெற்றோம். நாங்கள் திடீரென மறைந்துவிட்டால், அதிலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஒருவேளை நாங்கள் உன்னைக் குழப்பியிருந்தால், நன்றாகப் பார். நாங்கள் பேய்கள் அல்ல. நீ இப்போது காண்பதையே நம்பு. நீ கனவு காணவில்லை. நாங்கள் எல்லோரும் இங்கே, இந்த உலகத்திலேயே இருக்கிறோம். நீ அறிந்த அல்லது அறியாத படைப்பாளிகளின் புனைவுக் கதாபாத்திரங்கள் அல்ல நாங்கள். உனக்குத் தெரியாவிட்டால், மன்னித்துவிடு. ஆனால், உன் சமையலறையில் இருக்கும் இந்தச் சிறிய குளிர்சாதனப் பெட்டிக்குள்தான், அது பழுதாகும் நாள் வரை மிக நீண்ட காலமாகவே நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதில் வருத்தம் கொள்ளாதே”.
மர்சுகி அதிர்ச்சியில் குழப்பமடைந்தான். தன்னுடைய தனிப்பட்ட தகவல்கள் பொதுமக்கள் முன் வெளிப்படையாகத் தெரிந்துவிட்டதைப்போல் அவனுக்குள் ஒரு வெட்கமும் குற்றவுணர்ச்சியும் தோன்றியது. இதுவரை அவன் சமுதாயத்தைச் சந்திப்பதைத் தவிர்த்தே வாழ்ந்துகொண்டிருந்தான். பொதுமக்களுடன் இணைந்திருப்பதில் மர்சுகிக்கு என்றும் அசௌகரியம்தான். மனிதர்கள் அல்லாத இவையெல்லாம் தன்னை இவ்வளவு ஆழமாக அறிந்திருப்பது எப்படிச் சாத்தியம்? ‘இத்தனை நாட்களாக இக்குளிர்சாதனப் பெட்டிக்குள்ளேயே இருந்துகொண்டு என் எண்ணவோட்டங்களையெல்லாம் நோட்டமிட்டுக் கொண்டிருந்தனவா?’ நிச்சயமாக! குழந்தைப் பருவம் முதல் அவன் கொண்டிருக்கும் லட்சியக் கனவுகளைக் கூட அவை அறிந்திருப்பதற்குச் சாத்தியமிருக்கிறது அல்லவா? என்ன சொல்வதென்று புரியவில்லை அவனுக்கு. எதிர்பாராத இச்சூழல் அவனைக் குழப்பியது. அவர்கள் உலகுக்குள் நுழைய அனுமதித்ததற்காக நன்றி சொல்ல வேண்டுமா என்று யோசித்தான் மர்சுகி.
“என்னை வரவேற்றதற்கு நன்றி,” ஒருவழியாக மர்சுகி பதிலளித்துவிட்டான். தொண்டைக்குள் இறங்கும் பனிக்கட்டியைப்போல தனது குளிர்ந்த எச்சிலை விழுங்கினான். அவனிடத்தில் அசைவொன்றுமில்லை. பனிக்கட்டியில் செதுக்கப்பட்ட ஒரு குழப்பமிகு சிலையாக நின்றிருந்தான்.
“இங்கே எங்களுக்குரிய ஒரு வாழ்க்கை இருக்கிறது,” தலையில் ஆரஞ்சு நிறக் கொண்டையும் சிவப்பும் மஞ்சளும் கலந்த அழகிய இறகுகள் நிறைந்த சேவல் ஒன்று சொன்னது. “சற்று நேரத்தில், உன் கண்களாலேயே அதை நீ காணப்போகிறாய். இது கனவு அல்ல, மர்சுகி. இது ஹாலிவுட் படப்பிடிப்புத் தளமும் அல்ல. இங்கே நுழைந்த நீ ஒன்றும் மாய உலகில் இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் திறந்திருக்கும் உலகம் இது. ஆனால் நீயே தேர்ந்தெடுக்கப்பட்டவன். இங்கே யாரும் தங்களை உயர்ந்தவர், பெருமை மிகுந்தவர் என்று நினைப்பதில்லை; சொல்லப்போனால் இங்குச் சமூக அடுக்கென்பதே இல்லை.
இங்கு அனைவரும் ஒரே நிலையில் சமத்துவத்தைத்தான் பின்பற்றுகின்றனர். இவ்வுலகம் உனது வெளியுலகைவிடப் பன்மடங்கு அழகானது. இங்குள்ள உயிர்கள் எல்லாம் சுபிட்சமாய் வாழ்கின்றன. பார், இங்கே எங்களுக்குள் இன வேறுபாடுகள் இல்லை. ஊடகப் பிரச்சாரங்களும் இல்லை. எங்களை ஒன்றிணைப்பது எங்கள் இரத்தத்தின் நிறமே”.
“இங்கே எதற்காகவும் போராட வேண்டியதில்லை. பேரணிகள் இல்லை. தேர்தல் பிரச்சாரங்களும் இல்லை. யுத்தங்களோ அல்லது சமூகத்தின் மீதான அடக்குமுறையோ கூட இல்லை. ஒரே மொழியால் நாங்கள் பிணைக்கப்பட்டிருக்கிறோம். இங்கே எங்களுக்கும் நவீன வசதிகள் பல இருக்கின்றன. கேளிக்கைப் பூங்காக்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள், கடற்கரைகள், அதிநவீனத் தொழில்நுட்பங்களுடன் அலுவலகங்கள் என அனைத்தும் இருக்கின்றன. ப்ளாக், பேஸ்புக், ட்விட்டர் — இவையெல்லாம் இங்கும் எங்களுக்குள் பழக்கமாகிவிட்ட சமூக ஊடகங்கள்தான். மேலும், இங்கு நாங்கள் ஒரு பெரு நகரத்தையே கொண்டிருக்கிறோம். ஒரு சர்வதேச விமான நிலையம் உட்பட வெளியுலகில் நீ இதுவரை பார்த்திராத அதிநவீன நாகரிக கண்டுபிடிப்புகள் பல இங்குள்ளன. வா, மர்சுகி. எங்கள் உலகத்தை உனக்குக் காட்டுகிறோம்”.
அந்த நொடியில், சுற்றியிருந்த பனிமண்டலம் முழுமையாக மாறி, பசுமை நிறைந்த மரங்களும் பாறைகளின் இடையே நகரும் தெளிந்த ஓடையும் பல்வேறு நிறங்களில் பூத்துக் குலுங்கும் பூக்களும் சூழ்ந்த ஒரு சோலையாக மாறியது. அவ்வளவு நேரம் அங்கிருந்த பனியின் குளிர் மெல்ல மாறி, தூரத்தில் தெரிந்த மலைத்தொடர்களைத் தாண்டி வந்த வெயிலும் தென்றலுமாகச் சேர்ந்து ஓர் இதமான சூழலை உருவாக்கின. பல நிறங்களில் பட்டாம்பூச்சிகள் மலர்களில் தேனைத் தேடித் தங்கள் சிறகுகளை விரித்தவண்ணம் பறந்தன. வானில் பறவைகள் புல்வெளிகளுக்கு மேல் பறந்துகொண்டிருந்தன. அப்பசுமை நிலத்தின் நடுவே நின்ற மர்சுகி, தன் முன் விரிந்திருந்த அந்த அதிசயக் காட்சியால் ஒருகணம் மெய்மறந்தான். ‘என் கண்முன் விரிந்திருப்பது உண்மையா? போலியா? பூமியைப் போன்ற இன்னொரு கிரகம் இருக்குமா? அல்லது பயணியை ஏமாற்றும் மாய பிம்பமா?’ மதிமயக்கும் இப்பரந்த உலகம் எப்படித் தன் வீட்டிலிருக்கும் சிறிய குளிர்சாதனப் பெட்டிக்குள் அடங்குகிறது?
நீலப் பெருங்கடலின் கரையோரமெங்கும் வரிசையாக நிற்கும் தென்னை மரங்கள்; அதன் ஓரங்களில் கரையை மோதிச் சிதறும் அலைகள்; இவற்றையெல்லாம் படைத்தவர் யார்?
மேலும் தயங்காமல், மர்சுகி, தன் சமையலறையில் இருந்த சிறிய குளிர்சாதனப் பெட்டிக்குள் வாழும் அச்சமூகத்துடன் தன்னை இணைத்துக் கொண்டான். சற்றுமுன் பனியால் மூடப்பட்டு இப்போது காஷ்மீர், ஆப்ரிக்கா, நியூசிலாந்து அல்லது தொலைக்காட்சித் திரையில் அவன் கண்டிருந்த எந்தவொரு இடத்தையும் விட அழகியதோர் வெளியாக மாறியிருந்த அந்தப் புதிய உலகத்திற்குள் புகுந்தான். தான் சிறு வயதில் கனவு கண்ட மாயலோகமாக அது தெரிந்தது. இதுவே. ‘என் குட்டிக் குளிர்சாதனப் பெட்டியே, நன்றி,’ மர்சுகி மனத்துக்குள் கிசுகிசுத்தான். சூரியனின் ஒளிக்கதிர்களும் இதமான காற்றின் மெல்லிய தொடுதலும் தன் உடலின் ஒவ்வொரு பகுதியையும் தழுவி வந்ததை உணர்ந்தான் மர்சுகி. கடலின் உப்புக்காற்று, மரங்களின் இலைகள், மலர்களின் மணம் யாவும் நிஜமாகவே அங்கிருந்தன. பழுதடைந்த அக்குளிர்சாதனப் பெட்டிக்குள் திடீரென வெளிப்பட்ட இந்த அற்புதமும் அழகும் மர்சுகியின் கண்களில் மெதுவாகக் கண்ணீரைக் கசிய வைத்தது.
குளிர்சாதனப் பெட்டிக்குள் மயங்கி நின்ற மர்சுகியின் மனத்துக்குள் மெதுவாகச் சந்தேகங்கள் ஊர்ந்தன. அவன் நிரந்தரமாக இக்குளிர்சாதனப் பெட்டிக்குள்ளேயே இருக்க நேரிடுமா? காலத்துக்கும் இங்கேயே தங்கிவிடும் நிலை வருமா? பூமியெனும் கிரகத்தில் வாழும் மனித சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு தனியுலகில்தான் இனி வாழ வேண்டுமா? என்றாவதொரு நாள் அவன் நவீன யுகத்தின் பனிமனிதனாகிப் போவானா? அல்லது, ஒருநாள் இந்த அதிசய உலகத்திலிருந்து வெளியே வர வேண்டிய நேரம் வந்தால், ஒரு சாதாரண மனிதனாக மீண்டும் நிஜ உலகின் சுமைகளைத் தாங்க அவனால் முடியுமா? ஒரு கணவனாகத் தன் கடமைகளைப் புறக்கணிக்கத் தயங்காதவனாக அவன் மாறிவிடுவானா? மர்சுகி அதிசயங்களால் நிறைந்த, மனதை மயக்கும் ஒரு புதிய உலகைக் கண்டடைந்துவிட்டான். அதிலிருந்து வெளியேறினால், இனி அதை அனுபவிக்கும் வாய்ப்பு அவனுக்கு ஒருபோதும் வாய்க்காது. மர்சுகி தன் எதிர்காலம் எதை நோக்கிப் பயணிக்க வேண்டுமென்று முடிவெடுக்க முடியாமல் குழப்பமடைந்தான். புதிய உலகின் மயக்கம் அவனது சிந்தனையையும் எதிர்காலத்தையும் மெல்லக் கரைந்தோட வைத்தது. ஆனால், அவனது வெளியுலக வாழ்க்கையோ கேள்விக்குறிகளால் நிரம்பியிருந்தது.
அந்தக் குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்த தடித்த பனிக்கட்டிகளையெல்லாம் மதியம் அல்லது மாலைக்குள் வெளியேற்றிவிடுவதாகத் தன் மனைவி வீட்டின் வாசல் கதவை மூடி வெளியேறுவதற்கு முன் வாக்குறுதியளித்தான் மர்சுகி. அதுவும் மறக்காமலிருந்தால்தான். ‘சுலபமான வேலைதானே,’ தனக்குள் கூறிக்கொண்டான். தொலைக்காட்சியில் பகல் முழுவதும் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளால் அவன் கவனம் சிதற வாய்ப்புண்டு. அதற்கு முந்தைய இரவுதான் குளிர்சாதனப் பெட்டியின் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த மாட்டிறைச்சிப் பொட்டலத்தைப் பனிக்கட்டிகள் மூடிவிட்டன என்று மனைவி புலம்பிக்கொண்டிருந்தாள். அந்நேரம் மர்சுகி படுக்கையில் போர்வைக்குள் இருந்தான்.
காலை உணவு தயாரிக்க தனக்கு நேரமில்லாமல் போயிற்று என மனைவி குறைபட்டுக்கொண்டாள். அவள் பதவி உயர்வுக்கான நேர்காணலுக்குச் செல்லத் சற்று அவசரமாகத் தயாராகிக் கொண்டிருந்தாள். ஆகவே, பனிக்கட்டிகளும் அதில் சிக்கிக்கொண்ட மாட்டிறைச்சிப் பொட்டலத்தை வெளியேற்றாமல் விட்டதும் தனது கவனத்தைக் குலைத்துவிடக் கூடாது என நினைத்தாள். மனிதர்களில் சிக்கல்களுக்கான காரணங்கள் நாளுக்கு நாள் நகைப்புக்குரியவையாக மாறிக்கொண்டே செல்கின்றன.
“மாட்டிறைச்சியைத் துண்டுகளாக வெட்டி வைக்க மறந்துவிடாதே. அப்படியே உருளைக்கிழங்கின் தோலையும் சீவி வைத்துவிடு,” வீட்டின் வாசல் கதவை மூடுவதற்கு முன் மனைவி கூறினாள். மர்சுகி எந்த வார்த்தையும் பேசாமல் சரி எனத் தலையசைத்தான். “தலையசைத்தால் போதாது,” என்று அவள் கடுமையாகச் சொன்னாள். மர்சுகி மீண்டும் தலையசைத்தான். “இல்லையெனில் இன்று இரவுணவு இருக்காது”. சில நிமிடங்களில், வீட்டுக்கு வெளியில் மனைவியின் வாகனத்தின் என்ஜின் இயங்கும் சத்தம் கேட்டது. அவளது ‘பாகோ ரபானே’ வாசனைத் திரவியத்தின் நறுமணம் வீடு முழுக்க நிரம்பியிருந்தது. வீட்டின் வேலியில் கிடந்த செய்தித்தாள்களை எடுத்தான் மர்சுகி. தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டம், தேதி மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதால் அனைத்துச் செய்தித்தாள்களிலும் முன்பக்கச் செய்தியாக என்ன வரும் என்னவென்பதை யார் வேண்டுமானாலும் கணித்துவிடலாம். மர்சுகி எல்லா நாளிதழ்களையும் வரவேற்பறையில் இருந்த சோஃபாவில் விட்டெறிந்தான். மேலும் மேலும் அரசியல் நாடகங்களை அறிந்துகொள்ள அவனுக்கு ஆர்வமில்லை.
கடுப்பில் அவனால் தூக்கத்தைத் தொடர முடியவில்லை. அவன் தலை பாரமாக இருந்தது. வெளியுலகில் எல்லோரும் தங்கள் வேலையில் மூழ்கியிருந்தனர். இன்னும் சற்று நேரத்தில், வீட்டின் முன்புறச் சாலையில் பலவகையான வாகனங்கள் வரிசையாகச் செல்லத் தொடங்கும். ஒரு போர்க்களம் போல அந்த வாகனங்களின் இரைச்சலும் ஹார்ன் ஒலிகளும் கேட்டுக் கொண்டிருக்கும். நாள் முழுவதும் அவன் அச்சத்தத்தைக் கேட்டாக வேண்டும். வேறு வழியில்லை. அவர்களால் இன்னும் சொந்தமாக ஒரு வீடு வாங்க முடியவில்லை. ஆண்டுதோறும் வீட்டு விலை உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கிறது. பேருந்து, டாக்சி கட்டணங்களும் உயர்ந்துவிட்டன. சந்தையில் வெங்காயம், பச்சைப் பூக்கோசு போன்றவற்றின் விலையும் பாதிக்கப்பட்டது. மக்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டங்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட புகார் கடிதங்களும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
மாறாக, ‘மாற்றம் தேவை’ என்று எழுதப்பட்ட ஒரு டி-ஷர்ட் மட்டுமே விற்பனைக்கு வந்தது. தெருவில் இறங்கிச் செய்யப்படும் போராட்டங்களின் உண்மை நோக்கம் கூட இப்போது சந்தேகத்திற்குரியதாக மாறிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு தேசிய பெருவிழா கொண்டாட்டத்தைப் போலத்தான் அதுவும் தோன்றியது.
அரைத் தூக்கத்திலேயே படுக்கையிலிருந்து எழுந்தான் மர்சுகி. கொட்டாவி விட்டபடியே சமையலறை நோக்கி நடந்தான். ஜூலியோ கார்டாசார் எழுதிய ரயூவெலா நாவலைப் பற்றிய ஒரு கட்டுரையை எழுதிக் கொண்டிருந்ததால், நேற்று இரவு தூங்க நேரமானது. அவன் எழுத்து ஆங்காங்கே சிக்கிக்கொண்டது. மீண்டும் மீண்டும் திருத்த முற்படும்போது, அவனது சிந்தனைகள் மழுங்கத் தொடங்கின. எனினும், ஒரு புனைவை எழுதும் ஊக்கத்துடன் அவன் விழித்திருந்து வேலையைத் தொடர முயன்றான். எட்டு பக்கங்கள் கொண்ட அந்தக் கட்டுரையை முடிக்க அவனுக்கு நான்கு மணிநேரம் பிடித்தது.
ஆனால், அவன் அதை நியூயார்க்கர் இதழுக்கு அனுப்பவில்லை! வெகுஜன ரசனையை அதிகம் விரும்பும் மக்கள் வாழும் ஒரு நாட்டில், தான் மட்டும் ஏன் படைப்பில் நேர்த்தியை வலியுறுத்த வேண்டும்? தனது எழுத்தின் வழியே அறிவுசார் விழிப்புணர்வை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் தன் அகங்காரத்தையும் காட்டிக் கொண்டிருந்தான் மர்சுகி. அவன் முதலில் ஹுவான் ரூல்ஃபோவின் எழுத்துப் பணிகளைப் பற்றி எழுத நினைத்தான். பின்னர், ரொபெர்டோ போலானோ அல்லது என்ரிக்கே விலா-மாத்தாஸ் போன்ற நவீனக் கால மேதைகளின் ஆரம்ப நாவல்களைக் குறித்து எழுதலாம் என நினைத்திருந்தான்.
மர்சுகி ஒன்பது வயதில் ஒவ்வொரு சொல்லாக எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொண்டபோது, அவன் வாசித்த முதல் நூல் லத்தீன் அமெரிக்க நாட்டின் வினோதமான பயணக் கதையாகும். புனைவுகளை வாசிப்பது தொலைக்காட்சி திரையில் நாடகங்களைப் பார்ப்பது போன்றதல்ல. இரண்டிலும் வெவ்வேறு வழிமுறைகளில் கதாபாத்திரங்களும் களங்களும் உருவாகின்றன. ஆனால், பக்கத்துக்குப் பக்கம் புனைவுக் கடலில் மூழ்க முடிவதால் அவன் அறிந்த இயற்கையின் எல்லைகளைத் தாண்டி ஒரு புதிய உலகத்தை நோக்கிச் சென்றது மர்சுகியின் வாழ்க்கை.
அவ்வளவு சிறிய வயதிலும் மடியில் ஒரு கதைப்புத்தகத்தை வைத்துக்கொண்டு, பள்ளிச் சுவர்களின் பின்னால் அமர்ந்திருந்த மர்சுகிக்குத் தான் இதுவரை சென்றிராத அந்தக் கற்பனை நாடுகளின் மேல் காதல் வந்தது. ஆதி அந்தமற்ற நதிகள், வனவிலங்குகள் சூழ்ந்த பசுமையான காடுகள், இன்றுவரை டிஸ்கவரி அலைவரிசை குழுவிற்குக் கூட எட்டாத தொலைதூரப் பகுதிகளில் வாழும் பழங்குடிகள், மர்சுகி அங்கெல்லாம் வாழ விரும்பினான்; அவையனைத்தையும் தன் விரல்நுனியால் தொட்டுப் பார்க்க விரும்பினான். ஊழலும் அடக்குமுறையும் இல்லாத, தூய சுதந்திரமான உலகம். ரோத்தானுடன் வலம் வரும் வகுப்பாசிரியர்களின் கண்காணிப்புகள் இல்லாத உலகம். ஒவ்வொரு நாளும், இதுபோன்ற மாயக் கதைகளை வாசித்து முடித்ததும், மர்சுகி அந்தப் புது உலகிற்குள் தன்னை முழுவதுமாக புதைத்துக் கொள்ள விரும்பினான்.
ஒருவேளை அவன் இன்றுவரை எழுத்தறிவற்றவனாகவே இருந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு? அவனது பெற்றோரா? கல்வித்துறையா? முதலாளித்துவ அமைப்பா? தன்னைச் சுற்றியிருந்த சலிப்பூட்டும் நிதர்சனத்தைக் காட்டிலும் அழகான ஒரு யதார்த்தத்தைக் காண விரும்பினான். அங்குதான் புனைவு தன் எல்லையற்ற உலகத்தை அவன் முன் விரித்தது. மர்சுகி தன் உள்ளார்ந்த தனிமையைக் கடத்திச் செல்வதற்கான இடமாக அது மாறியது. எந்த அறிவார்ந்த வாதங்களாலும் தகர்த்தெறிய முடியாத ஒரு அமானுஷ்ய சக்தி அது.
மர்சுகி சிங்க்கில் முகத்தைக் கழுவினான். முந்தைய இரவில் கழுவாமல் வைக்கப்பட்டிருந்த தட்டுகளும் குவளைகளும் அந்தச் சிங்க்கில் இருந்தன. ‘அவள் என்ன சொல்லிச் சென்றாள்? ஓ! ஆம், பனிக்கட்டிகளை அகற்ற வேண்டும்.. ஹ்ம்ம்..’ எதிர்பார்த்ததுபோல, மேசை வெறுமையாகவே இருந்தது. மர்சுகி ஒரு 3-in-1 துரித காப்பி கலக்கினான்; ரொட்டியை வாட்டிப் பசியாறைக்கு டோஸ்ட் செய்தான். பால் சேர்த்துக் கொள்ளவில்லை. வானொலியில் ‘சிக்ஸ்பென்ஸ் நன் த ரிச்சர்’ குழுவின் ‘ப்ரீத் யோர் நேம்’ பாடல் ஒலித்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு பேரங்காடியில் விற்பனை முகவர் வற்புறுத்தலால் வாங்கிய ஸ்ட்ராபெரி ஜேம் பாட்டிலிலிருந்து சிறிதளவு எடுத்து ரொட்டியின் மேல் தடவினான்.
விரல்நுனியில் பட்டிருந்த ஜேமைச் சுவைத்துப் பார்த்தான். தித்தித்தது. இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ஸ்ட்ராபெரி ஜேம். இனிப்பும் கொழுப்பும் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதைக் குறைக்க அவன் மனைவி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தாள். நல்லவேளை, அவன் புகை பிடிப்பவனல்ல. “உன் எடை நாளுக்கு நாள் கூடிக்கொண்டேயிருக்கிறது,” என்று அவள் அடிக்கடி கடிந்துகொள்வாள். என்ன செய்வது? அவன் வயது ஒன்றும் இருபது இல்லையே. தனது குடும்ப மருத்துவரின் ஆலோசனையைச் சில நேரங்களில் மீறுவதில் அவனுக்கு எந்த வருத்தமுமில்லை. வாழ்க்கையில் இத்தனை விதிமுறைகளும் தடைகளும் இருந்தால், இந்த உலகமே ஒரு சிறைபோல் ஆகிவிடாதா? போலித்தனத்தில் மூழ்கிய வாழ்க்கையிலா வாழமுடியும்?
‘அட! நான் ஏன் இவ்வளவு சீக்கிரம் எழ வேண்டும்? நானொன்றும் அலுவலகப் பணியாளர் இல்லையே,’ மர்சுகி தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். ‘என் எழுத்துப்பணியும் ஏற்கனவே முடிந்துவிட்டது. அதை இதழ் ஆசிரியருக்கு மின்னஞ்சலும் செய்துவிட்டேன். பிரசுரமானால், ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு நான் காத்திருக்க வேண்டும். பிறகு, என் எழுத்திற்குக் கிடைக்கும் சன்மானமாக வீட்டிற்கு ஒரு காசோலை வரும்,’ மார்சுக்கியையும் அவன் மனைவியையும் இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து நியூயார்க், அல்லது பாரிஸ் போன்ற எந்த நகரங்களுக்கும் அழைத்துச் செல்ல முடியாத ஒரு காசோலை. ஒரு புத்தக விமர்சகராக அவனது வாழ்க்கை அவ்வளவு துயரமானது. தனது எழுதும் அறையில், மர்சுகி இதுவரை சேகரித்த புத்தகங்கள் அனைத்தும் திடீரெனப் பணமூட்டையாக மாறிவிட வேண்டுமெனப் பிரார்த்தனை செய்வதுண்டு.
காலை உணவை முடித்தபின், மர்சுகி இரண்டு நாட்களுக்கு முன் வாங்கிய நிக்கல்சன் பேக்கர் எழுதிய ‘அ பொக்ஸ் ஆஃப் மெட்சஸ்’ என்ற நாவலை வாசிக்கத் தொடங்க எண்ணினான். மெல்லிய புத்தகம்; கண்கவர் அட்டைப்படம். ஒரு தீப்பெட்டி, அதிலிருந்து வெளிவரும் சில தீக்குச்சிகள், நடுவே ஊதா நிறத்தில் ஒரு வாத்தின் ஓவியம். கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட அந்த அட்டைப்படம் யாரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருந்தது. ஆனால் அதை வாசிப்பதை இரவுக்கு ஒத்திப்போட்டான். ‘நான் சிறிது நேரம் தூங்கலாமா? ஒரு இரண்டு மணி நேரம் கூடுதலாக?’ ஆனால் குடித்த காப்பி அவனது கண்களைப் புத்துணர்ச்சியோடு விழித்திருக்க வைத்தது. தொலைக்காட்சியைப் பார்த்தான் மர்சுகி. காலை நேர உரையாடல் நிகழ்ச்சி, தன்முனைப்பூட்டும் உரைகள், மற்றும் சமீபத்திய ஆடை அலங்கார நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் ஒலித்துக் கொண்டிருந்தன. உடனே தொலைக்காட்சியை அடைத்துவிட்டான். ‘இதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?’ அலுத்துப்போனான் மர்சுகி.
‘நான் எப்போதும் விரும்பியதைப் போல், ஒவ்வொரு காலையிலும் வெளியே சென்று சில கிலோமீட்டர் தூரம் ஓடினால் எப்படி இருக்கும்?’ என்று மர்சுகி சிந்தித்தான். அந்த எண்ணமே அவனை உற்சாகப்படுத்தியது. ‘என் தொப்பை சற்று குறைந்து, நான் மீண்டும் இருபது வயது இளைஞனாக மாறிவிடுவேன்,’ அதன் பின் கிளப்பில் உள்ள நீச்சல் குளத்துக்குச் சென்று, ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ டால்பின் போல நீந்தலாம். ஆனால், இப்போது அல்ல. மர்சுகி தனது இரு புருவங்களையும் மெல்ல நீவினான். ‘சரியான தூக்கம் இல்லாததால் என் தலை இன்னும் சுற்றுகிறது. அதோடு, உடலில் கொழுப்பும் கூடிவருகிறது. இந்த லட்சணத்தில், கரைய மறுக்கும் பனிக்கட்டிகளுடன் ஒரு வாரமாக உறைந்திருக்கும் ஒரு பொட்டலம் மாமிசத்தோடு அமர்ந்திருக்கும் அந்தக் கூறுகெட்ட குளிர்சாதனப் பெட்டி வேறு’. அதையும் மாலைக்குள் எடுக்க மறந்துவிட்டால், அவனுக்குப் பிடித்த மாமிசக் குழம்பு இன்று கிடையாது. எத்தனை சவால்கள் நிறைந்தவை அவனது வாழ்க்கைச் சிக்கல்கள்.
‘எவ்வளவு தொந்தரவு, ச்சே…’ எனப் புலம்பிக்கொண்டு அவன் காப்பியின் கடைசி துளியையும் உறிஞ்சி முடித்தான்.
சிங்க்கில் குவளைகளைக் கழுவியபடி ஜீ அவி பாடிய ‘பிட்டர் ஹார்ட்’ பாடலைப் பாடிக்கொண்டிருந்தான் மர்சுகி. வலக்கையால் சமையலறையை வெளிச்சமாக்க ஜன்னல் திரைச்சீலையைத் திறந்துவிட்டான். சூரியன் பிரகாசமாக இருந்தது. ஆனாலும், அடர்ந்து வளர்ந்திருந்த புல் பூண்டுகளையும் அண்டை விட்டார் தங்கள் தனிமையை உறுதிப்படுத்திக் கொள்ள எழுப்பியிருந்த சுவரைத் தவிர, வீட்டின் பின்புறம் அவன் பார்வையைக் கவர்வதற்கு ஏதுமில்லை. ஒரு மரம் கூட இல்லை. சில சமயங்களில் வார இறுதிகளில், சில இளைஞர்கள் அந்த வழித்தடத்தின் நடுவில் அமர்ந்து, நள்ளிரவு வரை புகைபிடித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் பின்னர் அங்கேயே தூங்கிவிடவும் செய்வர். அவர்கள் உண்மையில் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் மர்சுகிக்கு என்றும் இருந்ததில்லை. ‘அது என் பிரச்சனை இல்லை. இளைஞர்களை அவர்களுடைய உலகத்தில் இருக்க விட வேண்டும். நானும் ஒருகாலத்தில் என் இளமையில் தத்தளிப்போடுதான் இருந்தேன்,’ அந்த அமைதியான வழித்தடம், நாளுக்கு நாள் மேலும் அழுக்காகிக் கொண்டே போகிறது. அண்டை அயலார் அங்கே காலிப் புட்டிகளையும், சிகரெட் அட்டைகளையும், பேரங்காடியிலிருந்து வந்த நெகிழிப் பைகளையும், பழைய உடைகளையும், செய்தித்தாள்களையும், ஏன் பாலியல் இதழ்களையும் கூட வீசி விடுகிறார்கள். துர்நாற்றம் தாங்க முடியாமல், மர்சுகியின் சமையலறைக் கதவு எப்போதுமே மூடப்பட்டிருக்கும்.
38 வயதான பிறகும், மர்சுகி தன்னை இன்னும் பத்து வயது சிறுவனாகவே உணர்ந்தான். அவனது முகம் குழந்தையைப் போன்றதொரு வட்டமான முகம். அவனுக்குத் தூரப் பார்வை குறைபாடு, படியாத கோரமுடி. இன்னும் ‘அனிமேஷன்’ படங்கள் பார்ப்பான். கூட்டத்தைப் பார்த்தால் பதற்றமடைவான். அதனால்தான் அவன் தனிமையைத் தேர்ந்தெடுத்தான். மர்சுகி தன் வாழ்க்கையைப் பற்றி ஒருபோதும் குறை கூறியதில்லை. பிறர் வாழ்க்கையைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆசையும் அவனுக்கிருந்ததில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன் அவனுக்குத் திருமணம் ஆனபோது, அவனைச் சூழ்ந்த உலகம் மேலும் அந்நியமாக மாறத் தொடங்கியதைக் கவனித்தான். சமூகத்தின் தாளத்திற்கேற்றாற்போல் இல்லாமல், தனித்த தனது பாதையில் தொடர்ந்தான். இறுக்கிக் கிடக்கும் சூழலோடும், இயந்திரம் போல் இயங்கும் மனிதர்களோடும் தன்னை இணைத்துக்கொள்வது அவனுக்கு மிகவும் கடினமாக இருந்தது.
‘கடலோரத்தில் ஒரு வீடு இருந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்,’ என்று மர்சுகி நினைத்தான். தினமும் வாகனங்கள் வெளிப்படுத்தும் பெட்ரோல் வாடையிலிருந்து விடுபட்டுத் தூரத்தில் அமைந்த வீடு. அவன் சமையலறையில் வெறித்தபடி அமர்ந்திருந்தான். மர மேசையின் மீது காலியான காப்பி குவளை ஒன்றுடன் அமர்ந்திருந்த அவன் சட்டென முதுமையடைந்துவிட்டது போல உணர்ந்தான். கூட்டுப்புழுவாகக் கூட்டுக்குள் சிக்கித் தவிக்கும் ஒரு வண்ணத்துப்பூச்சியைப் போல. இப்போது, வாழ்க்கையில் மாற்றம் செய்யும் நேரமெல்லாம் அவனுக்கில்லை. மீண்டும் இளமையில் செய்தது போல் புரட்சி செய்வதும் இயலாது. அல்லது, தன் எல்லைகளைத் தாண்டி எங்கோ தொலைவிற்குச் செல்வதும் சாத்தியமில்லை. மற்றவர்களால் மதிப்பிட முடியாத தன் உலகப் பரப்புக்குள் சுதந்திரமாக வாழ்வது மட்டுமே சாத்தியம்.
பல் துலக்கிய பின், மர்சுகி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான். கடந்த நினைவுகளும் தற்போதைய நிஜங்களும் அவனது மனத்தில் ஒன்றோடொன்று கலந்தன. அந்த உணர்வு அவனை, அவனும் அவனது சிந்தனைகளும் மட்டுமே இருந்த ஒரு விரிந்த கடலின் மத்திக்கு அடித்துச் சென்றது. அவனது மனைவி தன்னை ஒழுங்காக நிர்வகிக்கும் பெண். அதுவே மர்சுகிக்கும் அவளுக்குமான வேறுபாடு. அவள் தர்க்கபூர்வமாகச் சிந்திப்பவள், உணர்ச்சிகளால் எளிதில் ஆட்கொள்ளப்படாதவள். ஆனால் மர்சுகி, விசித்திரமான விஷயங்களை நேசிப்பவன். எளிதில் நுண்ணுணர்வுகளால் தூண்டப்படுபவன். மனம் துணுக்குற்றது. தானே அறியாமல் அவன் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ள துளி விசித்திரம் அல்லவா இது?
‘நான் எங்கும் செல்லப்போவதில்லை. வியந்தோதும் அளவுக்கு எதையும் செய்யப்போவதில்லை. சமூகத்தில் எனக்கென்று ஒரு அந்தஸ்தும் தனிச்சிறப்பும் கிடையாது. வங்கி இருப்பு கூட என்னை நிம்மதியாக வைத்திருப்பதில்லை. இடைநிலைப்பள்ளி நாட்களில் இருந்ததுபோல இனிமை இல்லை’.
இப்போது, நவீன நகரத்தின் மையத்தில், மர்சுகி ஒரு தீப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டவனைப் போல வாழ்கிறான். அவனது வாழ்விலிருந்த இனிய நாட்கள் மீண்டும் வராது. அவனது மன அழுத்தம் மெதுவாகத் தணிந்தபோது, மர்சுகி தன் உதட்டின் நுரையைக் கைகளால் துடைத்தான். அவன் தலைமுடி வளர்ந்திருந்தது. சிறிதளவு நிம்மதியுடன் அவன் வரவேற்பறைக்குச் சென்றான். இப்போது அவனது சிந்தனை முழுவதும் அந்தச் சிறிய குளிர்சாதனப் பெட்டியைத்தான் சுற்றி வலம் வந்தது. அன்றைய இரவுச் சாப்பாட்டுக்கு, தனக்கு விருப்பமான இறைச்சிக் குழம்பு சமைக்கத் தேவையான ஒரு பொட்டலம் மாட்டிறைச்சி அதில் உறைந்திருக்கிறது. மர்சுகி எச்சிலை விழுங்கிக்கொண்டான்.
ஆனால், அதற்கு இன்னும் நேரமிருக்கிறது. நேரம் இப்போதுதான் காலை 8.30. வழக்கமாக, அவனது மனைவி அலுவலகத்திலிருந்து மாலை 6.30 மணிக்கு மேல்தான் வீடு திரும்புவாள். மர்சுகி சட்டையின்றி, குட்டைக் காற்சட்டையுடன் சோஃபாவில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தான். இருபது ஆண்டுகள் முன்பு, அவன் நீண்ட முடியுடன் சுதந்திரமாக வாழ்ந்த இளைஞன். பள்ளிப் பாடநூல்களை வெறுத்தவன். தொலைக்காட்சி திரையில் காட்டப்படுவதை ஒருபோதும் நம்பாதவன்.
படிப்பில் சிறந்த தேர்ச்சியேதும் பெறாமல், தன் கிராமத்திலிருந்த வீட்டை விட்டு நகர வாழ்க்கையின் குதூகலத்தை அனுபவிக்க வந்தவன். பழைய சூழலின் சலிப்பு அவனை நசுக்கி மூச்சுத்திணறச் செய்திருந்தது. உலகம் எவ்வளவு விரிவானது! எத்தனை எத்தனை புதிய அனுபவங்கள் காத்திருக்கின்றன என்று அவன் எண்ணம் அலைமோதிக் கொண்டிருந்தது. செ குவேரா என்ற சொற்கள் அச்சிடப்பட்ட டி-சட்டையை அணிவதை விரும்பிய தன் இளம் ஆன்மாவுக்குள் கிளர்ந்த கொந்தளிப்புகளை அப்போது அவன் புரிந்துகொள்ளவில்லை.

காலம் அவனைப் பின்தள்ளியவாறே பாய்ந்து சென்றது. பதின்மவயதிற்கும் முதிர்ச்சிக்கும் இடையில் சிக்கியவனாய், மர்சுகி இன்னும் தத்தளித்துக் கொண்டிருந்தான். ‘ஸ்மேஷ் ஹிட்ஸ்’ மற்றும் ‘டுரான் டுரான்’ இசை யுகம் கடந்து போய்விட்டது. வீட்டை விட்டுப் புறப்படுவதற்கான வாய்ப்புகளும் இனி மூடப்பட்டுவிட்டன. அவனுள் ஒருகாலத்தில் கொந்தளித்த கிளர்ச்சியின் தீயும் அணைந்து போயிற்று. உலகம் மெல்ல மர்சுகியை மூடிக்கொண்டது.
அனுபவசாலிகள் சொல்வது போல் இப்போது மர்சுகி வாழ்க்கையின் வேறொரு கட்டத்தில் இருந்தான். தன்னை முழுவதுமாக ஏற்றுக்கொண்ட மனைவியின் அன்பில் அவன் மேலும் திளைத்திருந்தான். அதுவே அவனுடைய ஒரே உளவியல் சொத்து. வேறொரு உலகிலேயே தன்னைத் தொலைத்தாலும், அவள்தான் அவனது உணர்ச்சிகளுக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான இணைப்பு. அவனது எதிர்காலம் இயல்பாக உருவாகிக்கொண்டிருந்தது. மர்சுகிக்கு எந்தப் பதவியும் இல்லை; இன்னும் ஜீன்ஸ் அணிந்தபடி தான் எங்கும் செல்கிறான். எப்படியோ அவனது வாழ்நாள் முழுவதுமாக ஆட்கொண்ட இலக்கியத்தின் மீதான ஆழ்ந்த ஈர்ப்பு, அவன் மனைவியை ஒரு நூல் கலந்துரையாடலில் சந்திக்கச் செய்தது. அது சாதாரண உரையாடலாகத்தான் தொடங்கியது. வழக்கம்போல காலியான பாக்கெட்டுடன், தன் காதலியை, அலங்காரம் மிக்க உணவகத்தில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உணவருந்த அழைத்துச் செல்லும் வாய்ப்பும் அவனுக்கில்லை. இது ஒரு கவிதையாக இருந்திருந்தால், அதிலிருக்கும் சொற்கள் கூட எளிமையாகத் தான் இருந்திருக்கும்.
அது கெ.எப்.சி உணவகத்திலோ அல்லது ஸ்டார்பக்ஸ் அருந்தகத்திலோ நடந்த சந்திப்பு அல்ல. அது நகராட்சித் தொழிலாளர்கள் நட்ட மரங்களால் சூழப்பட்ட பொது நூலகத்தின் வெளிப்புற இருக்கையில், மதிய வெயிலில் நடந்த சந்திப்பு. அவளுடன் இலக்கிய உலகுக்குள் நுழைந்தபின், மர்சுகியின் உள்ளுலகம் தன் சலிப்பான எல்லைகளைத் தாண்டி விரிவடைந்தது. அவனது மனைவியோ, இப்போது காப்புறுதி முகவராகப் பணிபுரிவதால் வருமானத்தைப் பற்றியே அதிகம் சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கிடையிலிருந்த அந்த வேறுபாடே கூட மர்சுகிக்கு அழகாகத்தான் தோன்றியது. தம்பதியருக்கிடையே எல்லாம் பரிபூரணமாக அமைந்து, ஒரே ரசனையில் இருந்தார்களானால் அவ்வாழ்வில் நிச்சயம் சுவாரஸ்யமிருக்காது. அதனால், புனைவுக் கதைகளின் மயக்கத்தில் மூழ்குவது அவன் ஒருவனாக மட்டும் இருக்கட்டும். மனைவியோ நிஜ உலகின் நடைமுறைகளில் உறுதியாக நிற்பதுவே பொருத்தமானது.
சில நாட்களுக்கு முன்பு, அவனது மனைவி சொல்லியிருந்தாள் “இந்த மாதத்துக்கு ஒரு புத்தகம் போதும். முதலில் அதைப் படி. அடுத்த புத்தகத்தை வாங்க வேண்டுமெனில், அது அடுத்த மாதம் தான், மற்ற செலவுகளைப் பொறுத்து. புத்தகங்கள் அலமாரியில் காத்திருக்கும்; ஆனால் வயிறு காத்திருக்காது. சுவாரஸ்யமான கட்டுரைகளைப் படிக்க விரும்பினால், இணையத் தளத்திலேயே படி. அதுதான் இலவசமாயிற்றே. இணையத்தைத் தகவல் தேடலுக்காக மட்டுமே பயன்படுத்து. ஃபேஸ்புக்கை அடிக்கடி திறக்க வேண்டாம். அவ்வளவு அவசரமாக, உலகத்துக்குத் தெரிவிக்க வேண்டிய முக்கியத் தகவல் என்ன இருக்கிறது?”
வாசிப்பு மேசையின் மீதிருந்த கடிகாரத்தில் நேரம் மதியம் 12:30 என்று காட்டியது. காலையில் மனைவி சொன்ன வார்த்தைகள் மர்சுகியின் நினைவுக்கு வந்தன. தொலைக்காட்சியின் முன் இருவரும் உட்கார்ந்திருக்கும்போது, மனைவி வழக்கம்போல் சிறு தொணதொணப்புகளைத் தொடங்கினால் மர்சுகி சிரித்தபடியே சோஃபாவில் கண்களை மூடி உறங்குவது போல் பாசாங்கு செய்வான். அல்லது திடீரெனப் பாய்ந்து அவளைக் கட்டித்தழுவிக் கன்னத்தில் முத்தமிடுவான். “அட, வாழ்க்கையை இவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாதே,” என்று அவன் கிண்டலாய்ச் சொல்வான். அவன் மனைவி அடிக்கடி தொணதொணக்கும் வழக்கமான பெண்களிலிருந்து வேறுபட்டவள். அவ்வகையில், மர்சுகி மிகவும் அதிர்ஷ்டசாலி.
மர்சுகிக்கு அவன் மனைவி கூறிய வார்த்தைகளின் அர்த்தம் நன்றாகவே புரிந்திருந்தது. நிஜவுலகம், அவனது புத்தகம் மீதான காதலை மெதுவாகச் சுரண்டிக் கொண்டிருந்தது. புத்தக விமர்சகராக அவன் பெறும் கூலி, தற்போதைய நகர வாழ்க்கையில், மூன்று நாட்களுக்கு மட்டுமே போதுமானது. மேலும், யார் அவன் எழுத்துக்களைப் படிக்க நேரம் ஒதுக்கப் போகிறார்கள்? பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறையிலுள்ள மாணவர்களா? “நான் எழுத்தில் அல்லாது நடிப்புத்துறையில் நுழைந்திருக்கலாம்,” என்று மர்சுகி இறுக்கமான முகத்துடன் சொன்னபோது, அவனது மனைவியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நாட்கள் நகர, அவர்கள் இருவரின் வாழ்க்கையும் ஒரு அனுபவமிக்க கவிஞன் எழுதிய காதல் கவிதையின் வரிகள் போல எந்த அநாவசிய அலங்காரமுமின்றி அமைதியாகச் சென்றது.
குளித்துவிட்டு வெளியே வந்தபின்பும், ‘அ பொக்ஸ் ஆஃப் மெட்சஸ்’ நாவல் பற்றிய எண்ணம் இன்னும் மர்சுகியின் மனத்தில் இழையோடிக்கொண்டே இருந்தது. தலைமுடியையும் உடலையும் துவட்டியவாறே, ‘ஒருநாள் நானும் இப்படியான ஒரு புனைவுக் கதை எழுத முடியுமா?’ என மனத்தில் நினைத்தான். புனைகதை எழுதுவதா?
அட! இந்த எண்ணம் எங்கிருந்து வந்தது? ஒருவேளை அவன் ஒரு சிறுகதையிலிருந்து தொடங்கினால் எப்படி இருக்கும்? மனிதர்களைப் பற்றிய எழுத்து ஒருபோதும் முடிவடையாத ஒன்றாயிற்றே. வாசகர்களுக்காக ஒரு கதையை எழுத வேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது. அவனுக்குக் கவிதை எழுதுவதில் அதிக விருப்பம் இல்லை. தனது கையில் வைத்திருந்த ‘அ பொக்ஸ் ஆஃப் மெட்சஸ்’ நாவலை நீண்ட நேரம் உற்றுநோக்கினான். ‘ஹார்ப்பர்ஸ்’ இதழில் வந்த புத்தக விமர்சனத்தை வாசித்தவுடனேயே, இந்த மெல்லிய நாவல் அவனை ஈர்த்து விட்டது. விமர்சகரின் பெயர் நினைவில் இல்லை. ஐந்நூறு பக்கங்கள் கொண்ட ஒரு நாவலை வாசிப்பதற்குக் கூடுதல் கவனம் தேவைப்படும். ஆனால், மர்சுகி எளிதில் பிற சிந்தனைகளால் திசைமாறக் கூடியவன். அந்த விமர்சகர் இந்நாவலை நவீன யுக எழுத்தாளர்கள் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டுமெனப் பரிந்துரைத்திருந்தார். அந்நூல் இலக்கிய உலகில் ஒரு மாபெரும் மைல்கல் சாதனை. ஒரு மேதையின் பித்தேறிய படைப்பு.
கர்ப்பிணிப் பெண்ணின் உணவு வேட்கை போல, மர்சுகியும் உடனே புத்தகக் கடைக்குச் சென்று, அந்தப் பொக்கிஷத்தை வீட்டுக்குக் கொண்டுவந்து பேரானந்தமடைந்தான். அந்த நாவல் இன்னும் பொட்டலம் திறக்கப்படாமலிருந்தது. மர்சுகி உள்ளூர் இதழ்களில் விமர்சிக்கத் தகுந்த தனித்துவமான, வேறுபட்ட நாவல்களையே தேடுவான். ‘தனித்துவம்’ என்று சொல்லும்போது, தனித்தன்மை, தனிச்சிறப்பு மற்றும் நல்லதொரு வாசிப்பனுபவத்தை உறுதியளிக்கும் பண்புகளுடையது எனப் பொருள்படுத்திக் கொள்வான். மர்சுகி எந்தப் புத்தகத்தை விமர்சிக்கும்போதும், அந்தப் புத்தகத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டதை மீண்டும் ஒப்புவிக்காமல், தனது கருத்துக்களையும் கூடுதல் பார்வையையும் இணைத்தே பதிவிடுவான்.
குறைந்தபட்சம், ஒரு கலைப்படைப்பை மதிப்பீடு செய்யும்போது மர்சுகியின் பார்வை அப்படித்தான் இருக்கும். கலைநயமும் இயல்புநிலையும் கலந்த ஒரு அணுகுமுறை. அதில் பிரச்சாரத் தன்மையோ கோட்பாட்டு ஆய்வோ தேவையில்லை. பல்ப், புனைவு, வெகுஜனப்படைப்பு, அறிவியல் புனைவு, பின்நவீன இலக்கியம், அல்லது இஸ்லாமிய இலக்கியம் என்பன எல்லாமே வெறும் அடையாளச் சொற்கள் தான். இலக்கியச் சர்ச்சைகளில் மர்சுகிக்கு எந்த ஆர்வமும் இல்லை.
வாசிப்பு மகிழ்ச்சியளிப்பதாக இருந்தால், பிறகென்ன வேண்டும்? ஹரூகி முரகாமி ஒருமுறை சொல்லியிருக்கிறார், ‘நாம் ஒரு பொய்யான உலகில் வாழ்கிறோம். தொலைக்காட்சித் திரைகளில் பொய்யான செய்திகளைப் பார்க்கிறோம். பொய்யான ஆட்சியின் கீழ் வாழ்கிறோம். பொய்மையே தினமும் நம்மை ஆட்கொள்கிறது’.
சமகால நவீன இலக்கியங்களின் ஆர்வலனாக, மர்சுகி, விமர்சிக்கும் ஒவ்வொரு நாவலையும் மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுப்பான். தனது எழுத்துகளுக்கான காசோலை கிடைக்கும் ஒவ்வொரு முறையும், அதைப் புத்தகங்கள் வாங்குவதற்கே செலவழிப்பான். ஒரு புத்தக விமர்சகராக நிலையானதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாது எனும் உண்மை அவனை ஆழமாகப் புண்படுத்தியது.
முடிந்தால், உள்ளூர் இலக்கிய ஆர்வலர்களுடனான நட்பைச் சிதைக்கும் படியான விமர்சனம் எதையும் எழுதுவதை அவன் தவிர்த்துவிடுவான். ஆனால் உண்மையில், மர்சுகிக்குத் தனது வாழ்வில் நெருக்கமான நண்பர் என ஒருவரும் இல்லை. பொதுமக்கள் உலகம் என்றும் அவனுக்குப் பொருந்தியதில்லை. இலக்கிய விவாதங்களை விரும்புபவர்கள் அல்லது புத்தகங்களை நேசிப்பவர்களிடம் கூட அவன் நட்பு பாராட்டவில்லை. புனைவுலகைப் பற்றிய சிந்தனைகளைப் பகிர்வதற்காக குறிப்பிட்ட எழுத்தாளர்கள் குழுக்களில் இணைவது அவனுக்கு அவசியமாகப் படவில்லை. எழுத்தின் பல விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் அவனை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தின. அதுவே அவனது தேர்வுகளைச் சிக்கலாக்கியது.
மர்சுகி இன்னொன்றையும் கவனித்திருக்கிறான். கலையுணர்வுள்ள மனிதர்கள் விமர்சனங்களையோ, எதிர்மறையான கருத்துக்களையோ எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். அதையே அவன் எப்போதும் நினைவூட்டிக் கொள்கிறான். சிறுகதை எழுத்தாளர் டெபோரா ஐசன்பெர்க் தனக்கு விருப்பமில்லாத புத்தகங்களைப் பற்றி கருத்து சொல்ல மறுத்தது போல, தன்னுடைய இரசனைக்கான அளவுகோலை மர்சுகியும் மிகக் கடுமையாக நிர்ணயித்து வைத்திருந்தான். அதனால்தான் உலகளாவிய மதிப்பீட்டில், அதன் அறிவார்ந்த புனைவுமுறைக்காக, தகுதியான படைப்பு எனப் போற்றப்படும் நாவல்களை மட்டும் விமர்சிக்க அவனுக்குப் பெரும் ஆர்வம் இருந்தது. ஒரு கதை உணர்த்தவரும் பாடம் குறித்த ஆர்வம் மர்சுகிக்கில்லை.
அதனால்தான் மர்சுகி அடிக்கடி ‘கினோகுனியா’ போன்ற புத்தகக் கடைகளுக்குச் செல்வான். அங்குதான் முக்கியமான அயலக எழுத்தாளர்களின் ஆங்கில நூல்கள் கிடைக்கும். சாதாரண புத்தகக் கடைகளுடன் ஒப்பிடும்போது அவற்றின் விலை நிச்சயமாக அதிகம்தான். ஆனாலும் வேறு வழியில்லை. அவன் சில முறை பழைய, புத்தகங்கள் விற்கும் கடைகளுக்கும் சென்று பார்த்திருக்கிறான். ஆனால், அவன் தேடிய புத்தகங்கள் அங்குக் கிடைக்கவில்லை. அவனது கலைச்சுவையின் அளவுகோலாக மட்டுமல்லாது, மறைமுகமாக தற்கால இலக்கியத் தரத்தைக் காட்டும் சாதனங்களாகவும் அவன் தேர்ந்தெடுக்கும் நாவல்கள் திகழும். “இருபதாம் நூற்றாண்டில் யார்வேண்டுமானாலும் எழுதலாம்,” என்று மிலான் குந்தேரா ஒருமுறை கூறியுள்ளார். அதுவும் இன்றைய உலகில், எழுத்தாளர்களைக் காட்டிலும் கலைஞர்களோ பிரபலங்களோ எழுதிய புத்தகங்கள் தான் அதிக வருமானம் தரக்கூடியதாக இருக்கிறது.
ஆனால் இப்போது, மர்சுகிக்கு நிறைவேற்ற வேண்டிய ஒரு முக்கியமான கடமை இருந்தது. தூக்கக் கலக்கத்தில் அவன் மனைவிக்குத் தந்த வாக்குறுதியே அது. தூக்கக் கலக்கத்தையே ஒரு காரணமாகச் சொல்லலாம்தான். ‘இன்று அந்தப் பனிக்கட்டிகளை எடுக்கும் வேலையைச் சற்று தள்ளிப் போட்டால் என்ன?’ முடியாது. குறைந்தபட்சம் அந்த நாளுக்குச் செய்யவேண்டிய ஒரு வேலையாக அவனிடம் அதுதான் இருந்தது.
‘இகியா’வில் வாங்கிய ‘அ பொக்ஸ் ஆஃப் மெட்சஸ்’ நாவலை வாசிப்பு மேசையின் மீதே மீண்டும் வைத்துவிட்டான். சற்றே சோம்பலாக, மர்சுகியின் பார்வை சமையலறையின் மூலையில் இருந்த அச்சிறிய குளிர்சாதனப் பெட்டியை நோக்கிச் சென்றது. ‘மனிதர்களுக்கு ஏன் குளிர்சாதனப் பெட்டி தேவை?’
குளிர்சாதனப் பெட்டியின் விசையை அடைத்தான். குளிர்சாதனப் பெட்டியின் கதவைப் பரக்கத் திறந்துவைத்தான். அதன் எதிரே நிற்கும்போது மர்சுகியின் உதடுகள் எரிச்சலுடன் சுருங்கின. “சரி, நான் தோற்றுவிட்டேன்,” என்று பலவீனமான குரலில் அக்குளிர்சாதனப் பெட்டியிடம் சொன்னான். அன்று காலை குளிர்சாதனப் பெட்டியும் அவனது மனைவியுடன் கூட்டாகத் திட்டமிட்டது போலிருந்தது. அச்சூழலில் மர்சுகி மட்டும்தான் பலியாடாக்கப்பட்டிருந்தான். அதேநொடியில்தான் புதிய புத்தக விமர்சனம் எழுதும் எண்ணம் அவனுக்குத் தோன்றியது. ‘இப்போது எதைத் தேர்ந்தெடுப்பது? அறிவார்ந்த கடமையா, அன்றாட தேவையா?’ குழம்பினான் மர்சுகி. ஆனால், புத்தகத்தின் பக்கங்களில் தன் நீண்ட இலக்கியப் பயணத்தைத் தொடரவேண்டியுள்ளதே.
திறந்திருந்த குளிர்சாதனப் பெட்டியின்முன் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான். முழுமையாக நிரம்பியிருந்த மூன்று சோடா பாட்டில்கள் மட்டும்தான் அதில் இருந்தன. அவனும் மனைவியும் அத்தகைய பானங்களை விரும்புபவர்கள் அல்ல. என்றோ வாங்கி குடிக்க மறந்திருப்பார்களோ?
மர்சுகி அந்தச் சிறிய குளிர்சாதனப் பெட்டியின் உள்ளே ஆர்வத்துடன் பார்வையிட்டான். எத்தனை மாதங்களாக இதன் உள்ளே சுத்தம் செய்யப்படவில்லையோ? கிச்சாப்பும் சாஸும் கசிந்திருந்த தடயங்கள் இங்கேயும் அங்கேயும் உலர்ந்திருந்தன. மஞ்சளாக மாறிய பயத்த முளைகள் நிறைந்த நெகிழிக் கிண்ணத்தின் பின்னால் மேண்டரின் ஆரஞ்சின் தோல்கள் காய்ந்திருந்தன. மாத இறுதியில் வந்துவிட்டால், அந்தச் சிறிய குளிர்சாதனப் பெட்டியின் உள்ளே பலவிதமான உணவு வகைகள் நிறைந்திருக்கும். பனிக்கட்டிகள் இன்னும் காந்தத்தால் பிடிக்கப்பட்ட இரும்பு போல் அதே இடத்தில் உறைந்தபடியே இருந்தன. அவை உருகத் தொடங்குவதற்கு ஒரு மணி நேரமாவது காத்திருக்க வேண்டியிருந்தது.
‘இன்னும் என்ன இருக்கிறது இந்தக் குளிர்சாதனப் பெட்டிக்குள்?’ இரண்டு தழை செராய் குச்சிகள் இன்னும் மணம் வீசிக்கொண்டிருந்தன. முட்டை பொரிக்கும்போது தவிர மற்ற நேரங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படாத ஒரு மயோனிஸ் புட்டி. பாதிவரை காலியாகிய ஒரு பெரிய வெண்ணெய் டின். ஒரு இனிப்புக் கிச்சாப் பாட்டில், தாய்லாந்து மிளகாய் சாஸ் பாட்டில். பாதிவரை கடிக்கப்பட்ட பாதாம் சாக்லேட். அதைக் கடித்தது அவன்தானா? அல்லது மனைவியா? ‘சோகோ’ பேரங்காடியில் வாங்கிய இரண்டு அமெரிக்கப் பேரிக்காய்ப் பழங்கள். மதுபானங்கள் எதுவுமில்லை, அது நிச்சயம். ஆகக் கடைசியாக அவன் கண்டது, ஒருவாரம் முழுவதும் அங்கேயே சிக்கியிருந்த ஒரு மாட்டிறைச்சிப் பொட்டலம். முன்பெல்லாம் முன்னோர்கள் வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாமல் உணவுப் பொருள்களை எப்படி வைத்திருந்தார்கள்?
இப்போது, இந்தச் சிறிய குளிர்சாதனப் பெட்டிக்குள்ளிருக்கும் பனிக்கட்டிகளை எப்படி விரைவாக உடைப்பது? அவன் இன்று எப்படியாவது ‘அ பொக்ஸ் ஆஃப் மெட்சஸ்’ நாவலை வாசித்து முடிக்கவேண்டும். நாளை சனிக்கிழமை. அவனும் மனைவியும் பெருநகருக்குச் செல்வார்கள்; பேரங்காடிகளில் சுற்றிவருவார்கள். அங்கே காட்சிப்படுத்தப்பட்ட ஆடைகளின் அழகில் மனைவி மயங்கும் போது மார்சுகியும் அவளுடன் சேர்ந்தே மூழ்கியெழுவான். நாளை மாலை ஓர் உள்ளூர் எழுத்தாளரின் புத்தக விவாதம் நடைபெறவிருக்கிறது. சமீபத்தில் தேசிய இலக்கிய விருது பெற்ற அந்த எழுத்தாளர் தனது புதிய புத்தகத்தைப் பற்றி உரையாற்றவிருக்கிறார். அந்த நிகழ்வில் பங்கேற்று, அதில் நடந்தவற்றைக் குறிப்பெடுத்து பின்னர் தன் வலைப்பூவில் பதிவுசெய்ய வேண்டும். அவனது வலைப்பூவில் ஆயிரம் வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்க அவனுக்கு நாட்டமிருப்பதில்லை.
இப்போது அவன் அந்தச் சிறிய குளிர்சாதனப் பெட்டியின் முன் கரைய மறுக்கின்ற அப்பிடிவாதமான பனிக்கட்டிகளால் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தான். வழக்கமாக மீன், சாசேஜ், மாமிசம் ஆகியவற்றை வைக்கும் மேல் தட்டில் கைகளை விட்டுப் பார்த்தான். அந்தப் பனிக்கட்டிகள் இயற்கையாகவே உருகட்டும் என்று விட்டுவிட்டால், அதற்குக் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது ஆகும். அவ்வளவு நேரம் பனிக்கட்டிகளுக்காகக் காத்திருப்பது மர்சுகியால் முடியாத ஒன்று. இப்படியான குளிர்சாதனப் பெட்டியின் முன் என்ன செய்ய முடியும்? நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டுமா?
மாலை மனைவி வீடு திரும்புவதற்கு முன் பனிக்கட்டிகளைச் சுரண்டி எடுக்க நினைத்த மர்சுகி சமையலறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்தான். இதற்கு முன்பும் அவன் இதே ‘வீட்டு ஆயுதத்தை’ பயன்படுத்தியிருக்கிறான். ஆனால் இப்போது அந்தப் பனிக்கட்டிகள் யாவும் பனிமலையாக மாறியிருந்தன. அவன் குளிர்சாதனப் பெட்டியின் முன் சம்மணமிட்டு அமர்ந்தபோது, போதிய தூக்கம் இல்லாததால் தலையதிர்ந்தது. பனிக்கட்டிகளை உடைக்கும் அவனது முயற்சியேதும் உடனடிப் பலனளிக்கவில்லை. அதற்குப் பிறகுதான் அவன் பழத்தோல் சீவும் சிறிய கத்தியையும் வலக்கையில் ஒரு சிறிய சுத்தியலையும் பிடித்துக்கொண்டான். பனிக்கட்டியின் அடியில் மீண்டும் மீண்டும் தட்டத் தொடங்கினான். பனிக்கட்டியில் சிலை செதுக்கும் சிற்பியைப்போல கவனமாகவும் உன்னிப்பாகவும் செயல்பட்டான். தூக்கக் கலக்கம் நிறைந்த அவனது முகத்தில் பனித்துளிகள் தெறித்து வந்து விழுந்தன. அவன் முழுக் கவனத்துடன் பழக்கத்தியைக் கொண்டு பனிக்கட்டிகளை உடைக்க முயன்றுகொண்டிருந்த வேளையில், திடீரெனப் பலூனிலிருந்து காற்று வெளியேறுவது போன்ற ஒரு சத்தம் எழுந்தது.
‘என்ன சத்தம் அது?’ மர்சுகி திடுக்கிட்டான். ஏதோ தீயது நடக்கப் போகிறதோ என்ற அச்சம் அவனை ஆட்கொண்டதால் மெதுவாகக் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து சில அடிகள் பின்வாங்கினான். சிறிய விபத்து ஏதேனும் நிகழக்கூடும் என்ற கவலை அவனைச் சூழ்ந்திருந்தது.
‘இந்த விசித்திரமான வாடை மாமிசப் பொட்டலத்திலிருந்து வருகிறதா?’ ஏதோ சந்தேகத்திற்குரிய துர்நாற்றம். ஆனால், அது மாமிசத்தின் நாற்றமோ மீனின் வாடையோ அல்ல. அடுத்தது என்ன ஆகப் போகிறது? அந்தச் சிறிய குளிர்சாதனப் பெட்டி வெடித்துச் சிதறப்போகிறதா? அல்லது நச்சு கலந்த வாயுவை அவன் உள்ளிழுத்ததால் மூச்சுத் திணறலுக்குள்ளாவானா?
மர்சுகி தன் தலையைக் குளிர்சாதனப் பெட்டிக்குள் இன்னும் ஆழமாக நுழைத்தான். அதற்குமுன், தனது தடிமனான மூக்குக் கண்ணாடியை மெதுவாக அகற்றி வைத்தான். பலூன் கசிந்தது போல எழுந்த அந்தச் சத்தத்தின் மூலத்தை ஒரு குற்றப் புலனாய்வாளர் போல கவனத்துடன் தேடத் தொடங்கினான். ஆனால் அடர்த்தி நிறைந்த அப்பனிக்கட்டிகளை அகற்றாமல் சம்பவம் நடந்த இடத்தை எப்படிக் கண்டுபிடிப்பது? அவன் மேலும் முயல வேண்டும். அதற்குக் கூடுதல் நேரம் எடுக்கும். மீண்டும் கையில் இருந்த பழத்தோல் சீவும் கத்தியால் அப்பனிக்கட்டிகளைத் தட்டித் தட்டிச் சுரண்டத் தொடங்கினான்.
ஒரு மணிநேர உழைப்பிற்குப் பிறகு, பனிக்கட்டிகள் அனைத்தும் நீக்கப்பட்டன. அந்த மாமிசப் பொட்டலம் சிங்க்கில் வைக்கப்பட்டது. மர்சுகி அந்த விசித்திரமான துர்நாற்றத்தின் மூலத்தைத் தேடிப் பார்த்தான். ஆனால் ஏதும் அகப்படவில்லை. சில இடங்களில் பனிக்கட்டிகளின் நீர்த்துளிகள் இன்னும் ஒட்டியிருந்தன. அப்படியானால், அந்த துளைவிழுந்த பலூன் சத்தம் எதிலிருந்து வந்தது? ஒருவழியாக, மர்சுகி வாயுக் கசிவு போன்ற அந்த சத்தத்தின் மூலத்தைக் கண்டுபிடித்தான். அது குளிர்சாதனப் பெட்டியின் மேல் பகுதியில் மாமிசம், மீன், பர்கர் மற்றும் ஃபிஷ்பால் வைக்கும் பிரத்தியேக இடத்தில் இருந்து வந்திருக்கிறது. வெள்ளை அடித்தளத்தில் கிழிந்த தடம் ஒன்று தென்பட்டது.
‘இதுதான் வாயுக் குழாயாக இருக்க வேண்டும்,’ என்று மர்சுகி ஊகித்தான். பழத்தோல் சீவும் கத்தியின் முனை, பனிக்கட்டிகளை உடைக்கும் போது அந்த வாயுக் குழாயைத் துளைத்திருக்கும் என அவன் முடிவு செய்தான். அந்தச் சிறிய குளிர்சாதனப் பெட்டி நூறு சதவீதம் சேதமடைந்துவிட்டது என இனி உறுதியாகச் சொல்லலாம். சாதாரண ஒட்டுக் காகிதமோ பானைகளுக்கு ஒட்டப்படும் அலுமினியப் பசைபட்டையோ வைத்து இதைச் சரிசெய்ய முடியாது. அங்குதான், மர்சுகியின் மனத்தில் புதியதொரு குழப்பம் தொடங்கியது.
மர்சுகி கைப்பேசியில் மனைவியிடம் தகவல் தெரிவித்தான்: “குளிர்சாதனப் பெட்டி பழுதாகிவிட்டது. இனி நாம் குளிர்ந்த நீர் குடிக்க முடியாது. ஒருவேளை வாயுக் குழாய் கசிந்திருக்கலாம்; இதனால் உலகமே கதிர்வீச்சால் பாதிக்கப்படக்கூடும்”. அவனது மனைவி எந்தப் பதிலும் அனுப்பவில்லை. அதனால், அன்றிரவு உணவு தயாரிக்கப்பட மாட்டாது என்பது உறுதி. மர்சுகி மாலை முழுதும் மனைவியின் வருகைக்காகக் காத்திருந்தான். மூன்று ஆண்டுகளாக வீட்டில் இருந்தது அந்தக் குட்டி குளிர்சாதனப் பெட்டி. அவன் மனைவியின் அலுவலக நண்பர் பணத்தேவையின் காரணமாக விற்றபோது அவள் அதை வாங்கியிருந்தாள். அன்று அவள் தாமதமாகவே வீடு திரும்பினாள். அந்நாள் முழுதும் குற்றவுணர்ச்சியிலேயே கிடந்தான் மர்சுகி.
இரவு 8:40க்குத் தான் அவனது மனைவி ‘கென்னி ரோஜர்ஸ்’ உணவகத்திலிருந்து வாங்கிய நெகிழிப் பொட்டலத்துடன் வீடு திரும்பினாள். கருப்பு மிளகுத் தூள் தூவப்பட்டு வாட்டிய கோழிதான் அன்றைய அவர்களின் இரவு உணவு. மர்சுகி உடனே அங்கு நடந்த பேரழிவின் காரணங்களை விரிவாக விளக்கத் தொடங்கினான். அவளோ எவ்விதக் கோபத்தையும் வெளிப்படுத்தாமல் காலை நடந்த நேர்முகத் தேர்வின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு புன்னகையுடனே இருந்தாள்.
அந்தக் கத்தி பட்ட பகுதியை அலுமினியப் பசைபட்டையால் ஒட்டி விடலாம் என்று அவள் பரிந்துரைத்தாள். ஆனால் குளிர்சாதனப் பெட்டி ஒன்றும் அலுமினியப் பாத்திரம் அல்ல என்பதை மர்சுகி கூறினான். அப்படியானால், புதிதாக ஒன்றை வாங்கிவிடலாம் என்று அவள் தீர்மானித்தாள்.
சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, அக்குளிர்சாதனப் பெட்டியின் உட்பகுதி வெளியே எடுக்கப்பட்டது. உட்பகுதியைச் சுத்தம் செய்யுமாறு மனைவி மர்சுகியிடம் சொல்லியிருந்தாள். மர்சுகி பயன்படுத்தாத பழைய சட்டை ஒன்றைச் சவர்க்காரம் கலந்த நீரில் நனைத்துக் கொண்டான். ஒரு குழந்தையைக் குளிப்பாட்டுவது போல அக்குளிர்சாதனப் பெட்டியின் உட்புறத்தை மெதுவாகச் சுத்தம் செய்யத் தொடங்கினான். இதுதான் ஏற்கனவே பழுதாகி விட்டதே, பிறகு ஏன் இதைச் சுத்தம் செய்ய வேண்டும்? ஒருவேளை இதை அவள் மீன் தொட்டியாக மாற்றப் போகிறாளா? அடுத்த நாள் நண்பகலில், அவன் மனைவி வீட்டிற்கு ஒரு கடிதத்துடன் வந்தாள். அதிலிருந்த அறிவிப்பு அவளை உடனடியாக விமான நிலையத்திற்குச் செல்லுமாறு கூறியிருந்தது. அன்றிரவே, அவள் வெளிநாட்டுக்குப் புறப்பட வேண்டியிருந்தது.
மாதத்தில் குறைந்தது மூன்று முறையாவது மர்சுகியின் மனைவி வெளிநாட்டுப் பயணத்திற்குக் கிளம்பிவிடுவாள். காப்புறுதித் தொழில் மிகுந்த லாபகரமானதாக இருந்தது. இப்போதெல்லாம் பேரழிவுகள் வானிலை அறிஞர்களின் கணிப்புக்குட்பட்டு நிகழ்வதில்லை. நிலநடுக்கம், சுனாமி, வாகன விபத்துகள், போன்றவை மட்டும் அல்ல, பேரங்காடியின் எஸ்கலேட்டரில் காற்சட்டையின் நுனி சிக்கிக் கூட காயங்கள் ஏற்படுகின்றன. மனிதன் தன் உயிர் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும், அதற்கு ஒரு மதிப்பு இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறான். அதுவே இன்றைய உலகின் இயல்பு. மர்சுகியின் மனைவி பல புதிய காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் வருமானம் ஈட்டிக்கொண்டிருந்தாள். ஆனால், அந்தக் காப்பீடுகளில் மர்சுகிக்கு விருப்பமில்லை. அன்றொரு இரவு கனமழை பெய்துகொண்டிருந்தபோது, மர்சுகி தொலைக்காட்சியில் காற்பந்து போட்டியின் நேரலையைப் பார்த்துக்கொண்டிருந்தான். பிரேசில் ஜெர்மனை எதிர்த்து விளையாடிக் கொண்டிருந்தது. மர்சுக்கிக்கு அது வெறும் நட்புமுறை ஆட்டமா என்று கூடத் தெரியவில்லை. இரண்டாம் பாதியின் கடைசி இருபது நிமிடங்களிலிருந்துதான் அவன் பார்த்தான். அந்நேரத்திலும் எந்த அணியும் இன்னும் கோல் அடிக்கவில்லை. அப்போது அவனது மனைவி கைப்பேசியில் அழைத்தாள். திரை காட்டிய நேரம் அதிகாலை 2:30 மணி.
ஒருபோதும் இதுபோன்ற நேரத்தில் அவள் அழைத்ததில்லை. கைப்பேசியின் மறுமுனையிலிருந்து அவள் இடைவிடாமல் பேசிக்கொண்டே இருந்தாள். அவள் அங்கே கூடுதல் நாட்கள் தங்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்தாள். ஒருவேளை இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாள் வரை தாமதமாகலாம் என்றாள். மேலும், தன் சக ஊழியர்கள் சிலர் தன்னைப் பற்றி வருத்தம் தரும் வகையில் பேசுவதாகக் கூறினாள். அவளது காப்புறுதி விற்பனை எப்போதும் மற்றவர்களை விட அதிகம்தான் இருக்கும். ஒவ்வொரு கூட்டத்திலும் அவள் முன்வைக்கும் புதிய யோசனைகளை அக்காப்புறுதி நிறுவனத்தின் உரிமையாளர்கள் பெரிதும் வரவேற்பர். கலகலப்பான பேச்சும், வாடிக்கையாளர்களின் மனத்தைப் படிக்கும் திறமையும், சுற்றி இருப்பவர்களுடன் நட்புறவோடும் பழகும் அவள் இயல்பும் அவளது மாத வருமான வெற்றிக்கான பின்னணியாக இருந்தது. மனித நேயத்தை விட கவரும் பண்பு வேறென்ன இருக்க முடியும்? ஆனால், அவளது சக ஊழியர்கள் இதையெல்லாம் வேறுபட்ட கோணத்திலிருந்தே பார்த்தனர். அவள் மேலதிகாரிகளைக் கவரும் விதத்தில் திசைதிருப்புகிறாள் என்று நினைத்தனர். அதற்கு மேற்பட்ட கதைகளை மர்சுகி அறியவோ ஆராயவோ விரும்பவில்லை.
காற்பந்து போட்டி முடிந்தது. மர்சுகி தொலைக்காட்சியை அடைத்தான். அவனது எண்ணம் மீண்டும் அக்குளிர்சாதனப் பெட்டிக்குத் திரும்பியது. பழுதடைந்த நாளிலிருந்தே அதை வீட்டின் பின்புறம் உள்ள பெரிய குப்பைத் தொட்டியில் எறிந்து விடலாம் என்று அவன் தனது மனைவியிடம் கூறியிருந்தான். ஒரு 3-in-1 காப்பியை கலக்கிக் குடித்தான் மர்சுகி. கற்சுவர்களுக்கிடையே சிக்கிய புனைவெழுத்தாளரைப் போல அவனது புதிய புத்தக விமர்சனத்தை எழுதும் திட்டமும் பாதியிலேயே நின்றுவிட்டது.
‘இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று அவன் மனதில் கேட்டான். சமையலறையின் மூலையில் பழுதடைந்திருந்த அந்தக் குளிர்சாதனப் பெட்டி அவனது படைப்பாற்றலையே முடக்கிவிட்டது. தன் வாழ்வின் அமைதியைச் சிதைக்க வந்த அந்நிய மனிதனின் முன் நிற்பதைப்போல் மர்சுகி அந்தக் குளிர்சாதனப் பெட்டியின் முன் நின்றான். அந்த இரவே, வெளியே பெய்து கொண்டிருந்த கனமழையைக் கூடப் பொருட்படுத்தாமல், அந்த நாசமாய்ப் போன குளிர்சாதனப் பெட்டியைத் தன் பார்வையிலிருந்து நிரந்தரமாக அகற்றுவதென மர்சுகி உறுதி பூண்டான். இனி அப்பெட்டி அவனது வீட்டில் இருந்தாலும் அதற்கு எந்தவொரு மதிப்பும் இருக்காது.
வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டன. கதவும் வாயிலும் பூட்டப்பட்டன.
மர்சுகி சுமார் இருபது கிலோ எடையுள்ள அந்தச் சிறிய குளிர்சாதனப் பெட்டியைத் தூக்கிக்கொண்டான். தினமும் டம்பெல்களைக் கொண்டு கைகளின் தசைகளைப் பலப்படுத்தும் அவனுக்கு அது எளிதுதான். கனமழையின் காரணத்தால் தரை வழுக்கியது. மர்சுகி கவனமாக நடந்தான். ஆனால் தான் விசித்திரமாக இருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. வெறும் குட்டைக் காற்சட்டையுடன் வீட்டின் வெளியே அந்தக் குளிர்சாதனப் பெட்டியைச் சுமந்தவாறு நிற்கிறோம் என்பதை அவன் உணர்ந்திருக்கவில்லை. அவன் வீட்டிலிருந்து சில மீட்டர் தூரம் நடந்து வந்திருந்தான். ‘இப்படி என்னைப் பார்த்தால் அண்டை அயலாரெல்லாம் என்ன நினைப்பார்கள்? வசிப்பிடத்தில் சுற்றித் திரியும் காம வக்ரம் பிடித்தவன் என்றல்லவா நினைப்பார்கள்’ என நினைத்தான் மர்சுகி. குப்பைத்தொட்டி எத்தனையோ கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. குளிர்சாதனப் பெட்டியைத் தோளில் தாங்கியபடி, மர்சுகி தன் தலையைத் தாழ்த்திக்கொண்டான்.
மர்சுகியின் மனைவி குளிர்சாதனப் பெட்டியைத் தூக்கியெறியத் தடை விதித்திருந்தாள். அவர்கள் அந்த வாடகை வீட்டில் குடியேறிய ஒரு வாரத்திற்குப் பிறகு வாங்கப்பட்டிருந்தது அக்குளிர்சாதனப் பெட்டி. அதாவது, அவர்கள் திருமணமாகி ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. அந்த நினைவுச்சின்னத்தின் உணர்ச்சிப்பிணைப்பு அவன் தோளிலிருந்த பாரத்தை மேலும் கனமாக்கியது. மர்சுகி திடீரென நின்றுவிட்டான். குப்பைத்தொட்டியிலிருந்து எழுந்த துர்நாற்றம் அவன் மூக்கைத் தீண்டியது. குளிர்சாதனப் பெட்டியைக் கீழே அவன் இடது காலருகே வைத்தான். அண்டை வீட்டாரின் ஆரஞ்சு நிற நீயான் விளக்கின் வெளிச்சத்தில் மின்னும் மழைத்துளிகளை அண்ணாந்து பார்த்தான். பின்னர் அவன் மீண்டும் குளிர்சாதனப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பத் தொடங்கினான். அந்தச் சிறிய குளிர்சாதனப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு நடக்கும் போது, கடும் மழையில் கரடுமுரடான தார் சாலையின் மேல் தன் வாழ்வின் அனைத்து பாரங்களையும் பின்னால் இழுத்துக்கொண்டு நடப்பவனாகத் தன்னை உணர்ந்தான் மர்சுகி.
கடுங்குளிரும் தான் என்ன செய்கிறோம் என்ற குழப்பமும், அவனைத் தன் வீட்டையும் தாண்டி நடக்கச் செய்தன.
மர்சுகி அந்தச் சிறிய குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்தான். வெளியுலகில் ஒருபோதும் காணமுடியாத அற்புதமான காட்சி அழகில் சிறைபிடிக்கப் பட்டிருந்தான். எத்தனை காலமாக இங்கிருக்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை. இப்புதிய உலகின் பகலும் இரவும் மாறிச்செல்லும் கால நகர்ச்சியை அவனால் உணரவே முடியவில்லை. ‘நான் திரும்பிப் போக வேண்டுமா? இந்த அதிசய உலகை விட்டு வெளியேறி, இப்பழுதடைந்த குளிர்சாதனப் பெட்டியின் மறுபக்கத்தில் விட்டுவந்த நிஜவுலகின் வாழ்க்கைக்குள் மீண்டும் நுழைய வேண்டுமா?’ சற்றே தன்னம்பிக்கையுடன், அவன் அந்தப் பொன்னான காட்சியைப் புறந்தள்ளிவிட்டு மெதுவாக முன்னோக்கி நடக்கத் தொடங்கினான்.
அவன் காலடியில் இன்னும் பசுமை நிறைந்த புல்வெளி இருந்தது. மலைகளும் குன்றுகளும் பறவைகளின் கீச்சிடல்களும் பல வண்ணங்களில் மலர்களும் அவனைச் சூழ்ந்திருந்தன. ‘எந்தத் திசையை நோக்கி நான் செல்ல வேண்டும்? சூரியன் எந்தத் திசையில் உதித்து எந்தத் திசையில் மறைந்தது?’ அவன் பார்வையில் அனைத்துமே மங்கலாகத் தெரிந்தது. தெளிந்த நீரோடையின் மேற்பரப்பில் விழும் சூரியக்கதிர்களின் மினுமினுப்பு அவனது பார்வையை மயக்கி மங்கச் செய்தது. திரும்பிப் போக வேண்டிய இந்தப் பயணம் அவனை மிகவும் களைப்புறச் செய்தது.
அவன் நடக்க நடக்க ஒவ்வொரு எல்லையாகக் கடந்துகொண்டே வந்தான். அடர்ந்த காடுகளின் நடுவே உள்ள ஒற்றையடிப் பாதைகளில் சென்று, ஆழமான மலைச்சரிவுகளில் இறங்கி, பெருமழையில் நனைந்து, திடீரென மூங்கில் தெப்பத்தில் மிதந்தபடி, பெருங்கடலின் நடுவே அடித்துச் செல்லப்பட்டான்.
பகலிரவு பாராது, மர்சுகி இருளிலும் பனிமூட்டத்திலும் தன் பயணத்தைத் தொடர்ந்தான். தன் மனத்தில் பல ஆண்டுகளாக நுழைய விரும்பிய அந்தப் புதிய உலகினுள்ளே அவன் உறங்கி விழித்தபடி இருந்தான். ‘அழகு துன்பம் தருமானால், அதனால் பயன் என்ன?’ என்று அவன் மனம் கேள்வியெழுப்பியது. தனக்கே புரியாததொரு வாழ்க்கை வட்டத்தில் தானே வழி தவறிப் போயிருப்பதை உணர்ந்தான். அவன் இன்னும் அந்தச் சிறிய குளிர்சாதனப் பெட்டிக்குள்தானே இருக்கிறான்? உண்மையான உலகம் அக்கதவின் மறுபுறம் தானே இருக்கிறது? அப்படியானால், நிஜமும் மாயையும் பிரியும் அந்த எல்லை எங்கிருக்கிறது என்று மர்சுகியின் உள்ளம் கேள்வியெழுப்பியது.
இறுதியாக மர்சுகி மீண்டும் பனியால் மூடப்பட்ட பகுதிக்கே திரும்ப வந்துவிட்டான். அங்கே, அவன் அடுத்த அடி எடுத்து வைத்த மறுகணம் அவன் கால் அந்தத் தடித்த பனிப்படலத்திற்குள் சிக்கிக் கொண்டது. இடது காலை மேலே இழுக்க முயன்றபோது வலது காலும் ஆழமாக மாட்டிக்கொண்டது. அவனது இரு கால்களும் தொடை வரை பனியில் சிக்கிக் கொண்டன. சோர்வால் தளர்வுற்ற மர்சுகி அங்கேயே உறங்கிப் போனான். அவனது கனவில், மர்சுகி தன் வீட்டிலிருந்து சிறிய குளிர்சாதனப் பெட்டியை மழை பெய்யும் இரவில் தோளில் சுமந்து செல்லும் காட்சியைக் கண்டான். அந்தப் பழுதடைந்த குளிர்சாதனப் பெட்டியை அருகிலிருந்த குப்பைத்தொட்டியில் எறிய நினைத்தான். ஆனால் பாதி வழியிலேயே நின்றுவிட்டான். தன் மனைவிக்குத் தெரியாமல் அதை வீசினான். ஆயிரம் கேள்விகளால் அவனது சிந்தனை குழப்பமடைந்தது. விழித்தெழுந்தபோது, தான் முழுவதுமாக பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்ததைக் கண்டான். அப்பனிமூட்டத்திற்குள் அவன் உறைந்து கிடந்தான். அவனை மீட்க யாரும் வரப்போவதில்லை. யாரும் இல்லை.
உண்மையிலேயே அவன் அந்தப் பழுதடைந்த குளிர்சாதனப் பெட்டியைக் குப்பைத்தொட்டியில் எறியவில்லையா? இல்லாவிட்டால் என்ன நடக்கும்? அவன் அந்தச் சிறிய குளிர்சாதனப் பெட்டிக்குள்ளே என்றென்றும் சிறைபிடிக்கப்பட்டிருப்பான். வெளியுலகத்தின் மீது நிரந்தரமான பச்சாத்தாபத்துடன், உள்ளே ஒரு பனிக்கட்டியாகவே வாழ்ந்திருப்பான். நகராட்சிக் கனவுந்து ஒன்று வந்து, அவனையும் அந்தக் குளிர்சாதனப் பெட்டியையும் சேர்த்து ஏற்றி, பெருங்கழிவுத் தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கும். பத்து இருபது டன் எடையிலான இயந்திரத்தால் அவன் நசுக்கப்பட்டிருப்பான். அந்தப் பேரழிவின் பயங்கரக் காட்சியே அவனது உள்ளத்தைத் திடப்படுத்தி நகரச் செய்தது. தனது மொத்த வலிமையையும் திரட்டி, மீண்டும் எழ முயன்றான். அவன் தன் உடலை இறுக்கியுள்ள பனிக்கட்டிகள் உடைய, தன் உடலை அசைக்க வேண்டும். ஆனால் எப்படி? இப்போது அவனே ஒரு சிறிய குளிர்சாதனப் பெட்டிக்குள் உறைந்த மாமிசத் துண்டுபோல் ஆகிவிட்டான். உதவிக்காகக் கத்தி ஓலமிடும் அவனது குரலை, அது எவ்வளவு சத்தமாக இருந்தாலும் அதை யாராலும் கேட்க இயலாது. அவனது அழகிய கனவுலகம் இறுதியில் ஒரு பெருந்துயரக் கதையாக முடிவடைய நிறைய வாய்ப்புகளுண்டு.
வெளியுலகம் எப்போதோ மூடப்பட்டுவிட்டது. அதை மூடியதும் அவன்தான். வெளியிலிருக்கும் மனிதர்களையோ வெளிநாட்டிலிருக்கும் மனைவியையோ தொடர்பு கொள்ள இயலாத நிலையில் அவனிருந்தான். இப்போது அவனிடத்தில் இருக்கும் நம்பிக்கை, இங்கே இன்னொரு முறை அதிசயம் நடக்க வேண்டும் என்பதுதான். வெளியுலகிலிருந்து அசடு வழியும் முகமும், தடித்த கண்ணாடியும் அணிந்த தன்னைப்போன்ற தோற்றம் கொண்ட இன்னொரு மர்சுகி தோன்ற வேண்டும். அவன் கையில் ஒரு சுத்தியலையும், ஒரு பழத்தோல் சீவும் கத்தியையும் ஏந்தியபடித் தன்னை இப்பனிக்கட்டிச் சிறையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். அச்சிறிய குளிர்சாதனப் பெட்டிக்குள் அவன் இருப்பதை, அவனைத் தவிர வேறு யாராலும் உணர முடியாது. தன்னையே அச்சிறிய குளிர்சாதனப் பெட்டிக்குள் நுழைத்து, ஒரு மாபெரும் அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறான் மர்சுகி. பிற சாமானிய மனிதர்களுக்கெல்லாம் அது வசப்படாது.
‘செரங்கா டீ டாலாம் கெப்பாலா’ (Serangga di Dalam Kepala) எனும் சிறுகதை தொகுப்பில் முதல் முறையாக இடம்பெற்றது.
தமிழில்: பிருத்விராஜூ

அருமையான மொழிபெயர்ப்பு. வித்தியாசமான கதைக்கரு.
கலை இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட ஒரு இளஞன் தமது லௌகீக வாழ்வில் படும் அவஸ்தையானது அவனை எப்படியெல்லாம் அழைக்கழிக்கிறது. சராசரி மனித வாழ்விற்கு சவால் விடும் அவனின் தீராத இலக்கிய தாகமென்பது அவனின் தினசரி வாழ்வை எந்த அளவிற்கு பாதிப்புக்குள்ளாக்குகிறது, மனதளவிலும் உடலளவிலும் சோர்ந்து போகும் அவன் தமது இலயாமையின் தவிப்பால், பித்தநிலையில் உழல்வதை மாயயதார்த்த உலகில் சஞ்சரிப்பதைப் போல் எழுத்தாளர் எழுதியுள்ளார். நம்மூர் மலாய் இலக்கியம் உலகத்தரம் வாய்ந்தது என்பதைப் பறைச்சாற்றும் எழுத்து இது. இதுகாறும் நம் நாட்டு மலாய் இலக்கியம் பற்றிய ஞானம் அறவே இல்லாமல் இருந்த எனக்கு இந்த மொழிமாற்றுச் சிறுகதைகள் நல்ல அறிமுகம். மொழிமாற்று ஆங்கிலக் கதைகளை விட நம் நாட்டு மலாய் இலக்கியம் மொழிமாற்றம் பெறும்போது அது மிக இலகுவாக மனதில் பதிகிறது.
மிக நீளமான இச்சிறுகதையை அழகிய தமிழில் மொழிமாற்றம் செய்த பிருத்விராஜூ அவர்களுக்கு அனது அன்பு hugs..
ஸ்ரீவிஜி,