டோன் கனவில் கண்ட இல்லறம்

தனக்கு ஒரு குடும்பம் இருப்பதைத் தான் கனவில் கண்டதாக டோன் என்னிடம் சொன்னபோது, என் கவனம் கீழே உள்ள பிரதான சாலையில் வரிசையாய் நின்றிருந்த வாகனங்களின் மீது படிந்தது. உண்மையில் சாலையின் ஓர நெரிசலில் அவசர அவசரமாகச் சென்ற பாதசாரிகள் மீதுதான் என் கவனம் அதிகம் ஈர்க்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் அலுவலக உடையில் இருந்தனர். கருமேகத் திட்டுகள் படரத்தொடங்கியதன் காரணமாக அவர்களின் நடையில் வேகம் கூடியிருப்பதை  உடல் அசைவுகளில் காண முடிந்தது.

மணி இரண்டை நெருங்கிக் கொண்டிருந்ததால் அது மேலும் அவர்களை அவசரப்படுத்தியது. ஒரு வேளை அவர்கள் தாமதமாகச் சென்றால் கல் மனம் படைத்த சிங்க முகம் கொண்ட முதலாளி அவர்களின் வருகைக்காக அலுவலக வாசலில் விரைப்புடன் காத்திருக்கக் கூடும்.

நான், என் அலுவலகக் கட்டடத்தின் மாடியிலிருந்து அவர்களின் உணர்வுகளை உள்வாங்க முயற்சித்தேன். அவர்களில் யாராவது முகத்தில் நிதான உணர்வை வெளிக்கொணர்கின்றனரா என்பதைத் தேடிக்கொண்டிருந்தேன். அவசரம் எனினும் நிதானத்துடன் ஒருவராவது இருக்கின்றாரா எனத் தேடினேன். ஆனால் இல்லை. இன்னும் துல்லியமாகச் சொல்லப்போனால் அப்படி யாரும் இருக்கிறார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. என் இடத்திலிருந்து என்னால் அவர்களின் முகத்தைப் பார்க்க இயலவில்லை, இதில் எப்படி அவர்களின் உணர்வுகளைக் கண்டறிவது. முடியினைக் கூரையிட்ட தலைகளைதான் என்னால் காண முடிந்தது. குட்டை முடி, நீண்ட முடி அரை வழுக்கை; பல வண்ணங்களிலும் பாணிகளிலும் ஹிஜாப் மற்றும் குல்லா  அணிந்த தலைகள். என்னால் எடுக்க முடிந்த ஒரே முடிவு (கருதுகோள் என்பது மிகத் துல்லியமான சொல்) கட்டடம் எவ்வளவு உயர்ந்து இருக்கின்றதோ, அந்தளவுக்கு மனிதனின் உணர்வுகள் மறைந்திருக்கும் என்பதுதான்.

என் உதட்டில் இருந்த சிகரெட்டை இழுத்து முடித்தபின், தரையில் வீசினேன். ஒரு கணம் டோனின் முகத்தைக் கவனித்தேன்;  அது தீவிரமாக மாறியிருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் அறிந்திருக்கும் அவன் முகத்தில் ஏற்கெனவே குடியிருந்த தீவிரம் இப்போது மேலும் கூடியிருந்தது. மீந்து போன சிகரெட் புகையின் மெல்லிய மயக்கத்தில் மூழ்கியபடி, நான் கீழே கிடந்த சிகரெட் துண்டைப் பார்த்தேன். அப்போது சற்றுமுன் சொன்னதையே டோன் திரும்பச் சொன்னான். அதோடு அவனின் தாழ்ந்த குரலும் சேர, எனக்கு அவன் சொல்வது சரியாகப் புரியவில்லை.  அவன் ஏதோ முக்கியமானதொன்றைச் சொல்வது போல் இருந்தது, ஆனால் என் கவனம் திசை மாறியதால், ஒலியலை பாதிக்கப்பட்ட வானொலி ஒலிபரப்பைக் கேட்பது போல இருந்தது.

அவன் மூன்றாவது முறையாக அதைக் கூறிய பிறகே, அவன் வலியுறுத்திய ‘குடும்பம்’ மற்றும் ‘கனவு’ என்ற சொற்களை நான் தெளிவாகக் கேட்டுப் புரிந்துகொண்டேன்.

டோனின் உண்மையான பெயர் டோன் அல்ல, ஆனால் ஒமார் பக்ரி. அலுவலகத்தில் உள்ளவர்கள் ’காட் ஃபாதர்’ என்ற திரைப்படத்திலுள்ள ‘டோன் விதொ கார்லியோன்’  என்ற கதாப்பாத்திரத்தின் நினைவாக அழைத்ததால், ஒமார்-டோன் ஆனான். இது உண்மையிலேயே வெறும் வெற்று நகைச்சுவையாகத் தொடங்கியதுதான், ஆனால் அவனின் சிகை அலங்காரம் மட்டுமல்லாமல் அவனின் தீவிரமான குணமும் அப்படத்தில் நடித்த ‘மார்லன் பிராண்டோ’  போலவே இருந்ததால் போக போக அந்தப் பெயரே ஒவ்வொருவரின் உதட்டிலும் நிலைத்தது.

ஆம், அவன் ஒரு தீவிரமான மனிதன், உண்மையிலேயே தீவிரமானவன். அவன் முகத்தைக் காணும்போதே அதை உணரலாம். அவன் கண்கள் உள்ளே தாழ்ந்து, நெற்றியின் முன்நோக்கிய கூர்மையான வளைவால் மறைந்திருந்தன; கன்ன எலும்புகள் தோலைக் கிழித்து வெளிவரும் விதமாக புடைத்துக் கொண்டு தெரிந்தன. தடித்த உதடுகள் சிகரெட் புகையால் கருத்துப் போயிருந்தன. அவனின்  உயரமான, திடமான உடல்கட்டும் அந்தத்  தீவிர கண்ணோட்டத்தை மேலும் உறுதிபடுத்தின. எளிதாகச் சொன்னால்,‘தஷ்ஷா ஷீலா’, ‘நீலூஃபா’ இவர்களில் யார் பேரழகி என்கிற முட்டாள் தனமான வாதத்தில் ஈடுபட விரும்பாத மனிதன் அவன். அவனுக்கு அதெல்லாம் பொருட்டே இல்லை. அவன் ஒரு முரட்டு ஆணாக இருந்தான்.  யாரிடமும் அதிகம் பேச மாட்டான்; பெரும்பாலும் தன் மேசையில் அமர்ந்து, கொடுக்கப்பட்ட வேலையைச் செய்வான். ஓய்வு நேரம் வந்தால் ஓய்வெடுப்பான்; வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்தால் சென்று விடுவான். அதுதான் அவன்.

அவன் வயது முப்பத்தைந்து. என்னைவிட மூன்று ஆண்டுகள் மூத்தவன். இந்த வயதில் இந்நேரம் இரண்டு குழந்தைகள் பெற்றிருக்க வேண்டும்; டோனுக்கு ஒன்றுகூட இல்லை. அவன்தான் திருமணமே செய்துகொள்ளவில்லையே. கிட்டத்தட்ட ‘முழுமையாக முற்றிய’ வயதில், அவன் இன்னும் ஒன்டிக்கட்டையாக இருக்கிறான், அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்த அறிகுறிகளையும் அவன் காட்டவில்லை. நிச்சயமாக இல்லை.

ஒருவேளை அவன் காதலில் பழக்கப்படாதவன் போல் தோன்றுவதால் இருக்கலாம். இன்னும் சரியாகச் சொன்னால் அவன் தன்னைத் தானே  கவனித்துக் கொள்வதில் மிகவும் திறமையானவன் என்பதாலும் அப்படித் தோன்றலாம். அவனுக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும். (ஏனெனில் அவன் எப்போதும் அலுவலகத்திற்குச் சமைத்த உணவுப் பொட்டலத்தைத் தான் கொண்டு வருவான்). அவன் உடை எப்போதும் சுத்தமாகவும், ஸ்திரி செய்தும் இருக்கும்; ஒரு சிறு தூசியும் அவன் சட்டையில் ஒட்டியிருக்காது. அவன் நேர்த்தியான மனிதன். அவன் மேசையில் இருக்கும் பொருள்கள் அனைத்தும் திட்டமிட்டு எழுப்பப்பட்ட நகர வடிவமைப்பைப் போல மிகச் சீராக அடுக்கப்பட்டிருக்கும்.

அவன் வேலையில் மூழ்கியிருக்கும் நேரத்தில், அவன் உடலை நேராக நிமிர்த்தி அமர்ந்து கணினி திரையிலிருந்து கண் அகலாமல், விரல்கள் சுறுசுறுப்பாகத் தட்டச்சு செய்துகொண்டிருக்கும். ஒருவர் கூட அவனைத் தொந்தரவு செய்வதில்லை. அவன் கோபப்படுவான் என்பதால் அல்ல (அவன் நெற்றி சிறிது சுருங்கும், ஆனால் ஒருபோதும் அவன் முகத்தில் கோபத்தைக் கண்டதில்லை). மாறாக, அவன் வேலை செய்யும் தோரணையில் ஓர் ஓவியன் தன் தூரிகையால் பிரமிக்க வைக்கும் ஓவியம் ஒன்றை வரைந்து கொண்டிருப்பது போல் இருக்கும். யாருக்கும் அச்சரளத்தைக் கலைக்க மனம் வராது. அலுவலகத்திலுள்ளவர்கள் ஓரளவிற்கு அதை உணர்ந்திருந்தார்கள்.

அவனிடம் உள்ள ஒரே குறை (அதற்குச் சரியான சொல் என்ன என்று எனக்குத் தெரியவில்லை) டோன் புகைப்பிடிப்பவன்; அதுவும் தீவிரமான புகைப்பழக்கம் உடையவன் என்பதுதான். காதலுடன் அவனை இணைக்க முடிந்தால், அந்தக் காதல் நிச்சயம் ‘சிகரெட்’டாகத்தான் இருக்க முடியும். தலைவன் தலைவியைக் காதலிப்பது போல அவன் சிகரெட்டை காதலித்தான்.  உதடுகளில் சிகரெட் இருந்தால் அது அவனைக் கம்பீரமாகக் காட்டும்; அதே சமயம், அவனுடைய உதடுகளில் இருக்கும் போதுதான் அந்த சிகரெட்டும் தனி கவர்ச்சி பெரும். மேலும், அவன்கேமல் சிகரெட்டைதான் புகைப்பான். வேறு வகை சிகரெட்டை அவன் உதடுகளில் நான் பார்த்ததே இல்லை. வேறு சிகரெட்டை கொடுத்தால்கூட அவன் மறுப்பான், ‘கேமல்’ மட்டுமே. எவ்வளவு காட்டமாக இருந்தாலும் அரை நாளிலே முடித்துவிடுவான். இருப்பினும் அலுவலக நேரங்களில் ஒருபோதும் அவன் புகைப்பிடித்ததில்லை. (நான் சொன்னதுபோல், அவன் ஒழுங்கமைந்தவன்) ஓய்வு நேரங்களிலும் வேலை முடிந்த பிறகும்தான் புகைப்பிடிப்பான்.

அதனால்தான் இப்போது அனைவரும் மதிய உணவு உட்கொள்ளும் நேரத்தில், நானும் அவனும் கட்டடத்தின் திறந்த மொட்டை மாடியில், அவன் அவனின் ‘கேமலை’யும்நான் என் ‘மல்போரோ’வையும் புகைத்துக் கொண்டிருக்கிறோம். அலுவலகக் கட்டட மொட்டை மாடியில் புகைப்பிடிப்பது எனது அன்றாட வழக்கம். டோனும் மற்ற புகைப்பழக்கம் உள்ள வேலையாட்களுக்கும் கூட அப்படித்தான். அலுவலகக் கழிப்பறையிலே கூட புகைப்பிடிக்க எங்களுக்கு அனுமதி இல்லை பிறகு அலுவலகத்தில் புகைக்க எப்படி அனுமதிக்கப்படும். ஆகவே, இந்த  மொட்டை மாடிதான் எங்களுக்கான கடைசி தஞ்சம்.  அதிர்ஷ்டவசமாக எங்கள் அலுவலகம் கட்டடத்தின் மேல்தளத்தில்தான் இருந்தது.  எங்களுக்குச் சொர்கமாகத் தெரியும். இந்த இடத்திற்கு வருவதற்கு இரண்டு படிக்கட்டுகளை மட்டும் கடந்தால் போதும். நான் டோனுடன் சேர்ந்து புகைப்பது அரிது. அவன் எப்போதும் தான் கொண்டு வரும் உணவுப் பொட்டலத்தை அலுவலக ‘பாண்ட்ரி’யில் அமர்ந்து சாப்பிடுவான். ஆனால் நான், சக ஊழியர்களுடன் சேர்ந்து அருகிலுள்ள ‘கஃபே’ அல்லது சிறிய கடைகளில் சாப்பிடுவேன். அப்போதுதான் புகைப்பிடிப்பேன்.

இன்று எனக்குப் பசியாக இல்லை. அதனால், நேராக மாடிக்கு ஏறி புகைப்பிடிக்கச் சென்றேன். சில நிமிடங்களுக்குப் பிறகு, டோன் அங்கு வந்தான். நான் இரண்டாவது சிகரெட்டை முடித்து, மூன்றாவது சிகரெட்டை உதடுகளில் வைத்தபோது, அவன் தன் கனவைப் பற்றி சொல்லத் தொடங்கினான். மூன்றாவது முறையாக அவன் அதையே கூறியபோதுதான், நான் முழுமையாகப் புரிந்துகொண்டேன். நான் தவறாகக் கேட்கவில்லை; அவன் கனவு கண்டிருக்கிறான். அந்தக் கனவில், அவன் ஒரு குடும்பத்துடன் வாழ்ந்திருக்கிறான்.

அந்த நேரத்தில், என்னை ஆச்சரியப்படுத்தியது அவன் கண்ட கனவல்ல. அந்தக் கனவை அவனே எனக்குச் சொன்னதுதான். கனவு காண்பது சாதாரணமானது; எல்லோரும் அதை அனுபவித்திருப்பார்கள். டோன் எவ்வளவு வேறுபட்டவனாக இருந்தாலும் அவனுக்கும் கனவு வரும். ஆனால் என்னை வியப்பில் ஆழ்த்தியது அவன் என்னிடம் மனம் திறந்ததுதான். அது அவனின் வழக்கமான தன்மைக்கு எதிரான செயல். அவன் உள்ளத்தில் எங்கோ ஒரு சிறு பிளவு ஏற்பட்டது போலவும், அந்தப் பிளவின் வழியே அவனின் உணர்ச்சிகள், எவ்வளவு நுட்பமாக இருந்தாலும், மெதுவாக என்னை நோக்கிக் கசிந்து வருவது போலவும் இருந்தது.

நான் சில நொடிகள் திகைத்து நின்றேன். என் மனதில் உருவாகி இருந்த டோனின் பிம்பத்தைத் திருத்த முயன்றேன். ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை; ஏனெனில் அவன் உணர்ச்சியற்றவன் எனும் எண்ணம் என்னுள் உறுதியான கோட்டையாக  உருவாகி விட்டிருந்தது.

“எனக்குத் தெரியும் இது சற்று விசித்திரமாக இருக்கலாம், ஆனால் இதைப் பற்றி வேறு யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை, நீ நம்பிக்கைக்குரியவனாகத் தெரிகிறாய்,” என்றான் டோன், என் மனத்துக்குள் புகுந்த ஆச்சரியத்தைப் புரிந்து கொண்டவனாக.

புகழ்ச்சிக்கு நான் எதிரியல்ல, அதனால் புன்னகையை அடக்க என்னால் முடிந்த அளவு முயற்சித்தேன். எனக்குப் பிரச்சனை இல்லை, என் காதுகள் உனக்காக என்று நான் அவனிடம் கூறினேன்.

“கேள், நான் சொல்ல வரும் கனவு என்பது, நீ நினைக்கும் கனவுகள் போன்றது அல்ல…இந்த கனவு…”

அவனுடைய கைக்கடிகாரம் ஒலித்தது. ஓய்வு நேரம் முடிந்துவிட்டது. ஆம், அவன் காலம் தவறாதவன்.

“வேலை முடிந்த பிறகு தொடரலாம், சரியா?” என்றான் அவன்.

“சரி,” என்றேன் நான்.

படிக்கட்டுகளில் அவனைப் பின் தொடர்ந்து இறங்கிக்கொண்டிருக்கும் போது, என் தலைக்குள் எண்ணற்ற கேள்விகள் நிறைந்திருந்தன.

***

வேலை முடிந்ததும், நானும் டோனும் அலுவலகக் கட்டடத்தின் பக்கத்தில் உள்ள உணவகத்திற்குச் சென்றோம். நான் ஐஸ் டீ ஆர்டர் செய்தேன். டோன் சூடான காப்பியை கேட்டான். சிறிது நேரம் பேரமைதி அச்சூழலை நிரப்பியது. பானத்தைச் சிறிது அருந்தியபின் டோன் பேசத் தொடங்கினான்.

“மன்னித்துவிடு, உன் நேரத்தை வீணடிக்கிறேன்,” என்றான் டோன். “ஆனால், இப்போது எனக்கு நீ ஒருவன்தான் உதவி செய்ய முடியும் என்று தோன்றுகிறது”. 

“பரவாயில்லை,” என்றேன் நான். அவனை விரைவாகச் சொல்லும்படி கேட்டுக்கொண்டேன். ஏனெனில், எண்ணற்ற கேள்விக்குறிகள் எனது மனச் சுவரை இடைவிடாது தட்டிக்கொண்டிருந்தன.

“நான் சொல்லப்போகிற விஷயம் உனக்கு நம்ப கடினமாக இருக்கலாம்…ஆனால் நம்பு, இது உண்மையிலேயே நடந்தது.”

நம்புவதாகத் தலையசைத்தேன்.

டோன் என்பவன் பொய் சொல்லும் குணமுடையவன் அல்ல என்பதை நான் நன்றாகவே அறிந்திருந்தேன். மேலும் அவன் என்னிடம் பொய் சொல்ல வேண்டிய எந்தக் காரணத்தையும் என்னால் கண்டறிய முடியவில்லை.

“நான் முன்பே சொன்னது போல், எனக்குத் திருமணமாகி குடும்பம் இருப்பதாக கனவு கண்டேன். அது உண்மையே,” என்றான் டோன். எதையோ வைக்கப்போவது போல அவன் முன் இருந்த காப்பி குவளையைத்  தூரத் தள்ளிவைத்தான். காப்பி குவளை விட்டுச்சென்ற வெற்றிடத்தில் பிரமாண்டமாக வேறொன்றை நிரப்பிவிடுவதைப்போல இருந்தது அவன் செயல். “நீ எழுந்தவுடன் மறந்து போய் விடுவாயே, அது போன்ற சாதாரண கனவு அல்ல இது, நான் அனுபவிக்கும் இந்தக் கனவை நான் ஒருபோதும் மறந்ததில்லை; ஒருநாளும் இல்லை. மேலும் இது ஒருமுறை மட்டும் வந்த கனவல்ல. கடந்த ஒரு வருடமாக, ஒவ்வொரு நாளும் இதே கனவைத்தான் காண்கிறேன். இதுவரை உனக்குப் புரிகிறதா?”

“எனக்குப் புரிகிறது”, என்றேன். “நீ கண்ட கனவு, கனவு போலவே இல்லை. அதை நீ உண்மையிலேயே அனுபவிப்பது போல இருக்கிறது. நிஜத்தை அனுபவிப்பது போல.”

“உண்மை. அந்தக் கனவில் எல்லாமே தெளிவாக இருக்கிறது. அது பெயரளவில் கனவுதான். ஆனால் அதையும் தாண்டி, அது எனக்கு நிஜ அனுபவமாக தோன்றுகிறது. நான் தூங்குகிறேன், பிறகு வேறொரு உலகத்தில் விழித்துக் கொள்கிறேன். அந்த உலகத்தில் எல்லாமே தெளிவாக இருக்கிறது. சாதாரண கனவுகளைப் போல மங்கலாகவும், திடீரென காட்சிகள் தாவிச் செல்வதும் இல்லை. ஒரு நொடியின் அளவு அங்கும் இங்கும் சமமாகவே உள்ளது. எல்லாவற்றுக்கும் வடிவமும் திணிவும் உண்டு; ஈர்ப்பு விசையும் வழக்கம்போல் செயல்படுகிறது. மொத்தத்தில் சொல்லப்போனால், அது இதே போன்ற இன்னொரு உலகம்.

“அதாவது ‘இணை பிரபஞ்சம்’ போல”, நான் குறுக்கிட்டேன்.

“ஆம், அதுபோலத்தான், ஆனால் வித்தியாசம் என்னவென்றால் இரண்டு உலகங்களிலும் நான் விழிப்புணர்வோடுதான் இருக்கிறேன். இந்த உலகில் என் இருத்தலை உணர்கிறேன்,  அதே போல அந்த உலகிலும் கூட”.

அவனுடைய கதை இன்னும் நீளமாகப் போகும் என்று உணர்ந்த நான், பானத்தைச் சிறிது குடித்துவிட்டு, ஒரு சிகரெட்டை பற்றவைத்தேன். ஆனால் டோன் என் செயலில் ஈர்க்கப்படவில்லை. அவன் நிலை மாறாமல் மேடையில் நிற்கும் ஒரு கதைச்சொல்லி போல் இருந்தான். அவன் அப்படி இருப்பதைப் பார்த்ததும் கதையைத் தொடரச் சொன்னேன்.

“அந்தக் கனவை முதன்முறையாக அனுபவித்தபோது, நான் முற்றிலும் குழம்பிப் போனேன். நான் வழக்கம்போல இரவு பதினோறு மணிக்குத் தூங்கினேன். திடீரென என் உடல் மெதுவாகவும் மென்மையாகவும் அதிர்ந்தது, ஆனாலும் நான் விழித்தெழ அது போதுமானதாக இருந்தது. நான் விழித்தெழுந்தேன்; ஆனால் கவனம் சிதறியிருந்தது. சுயநினைவுக்குத் திரும்பியவுடன் நான் தம்பதியர் கட்டிலில்  படுத்திருப்பதை உணர்ந்தேன். சுற்றி நோக்கினேன்; அது என் அறைதான், எல்லாம் அப்படியே இருந்தது. என் படுக்கையைத் தவிர. என் ஒற்றைப் படுக்கை மாற்றப்பட்டு, அந்த இடத்தில் ஒரு தம்பதியர் கட்டில் இருந்தது. யாரோ ஒருவன் அல்லது குழுவாக, ஏனெனில் ஒருவரால் என் அறைக்குள் வந்து இதைச் செய்ய முடியும் என்று என்னால் நம்பமுடியவில்லை. எனக்குக் குழப்பமாகவே உள்ளது. எனக்குத் தெரியாமலே என் கட்டிலைப் புதிய கட்டிலுக்கு மாற்றியிருக்கிறார்கள். அதுவும் பெரிய கட்டிலாக. அது எப்படிச் சாத்தியம்? நான் சின்ன சத்தத்துக்கே விழித்துவிடுவேன். யாராவது என் படுக்கையை அசைத்திருந்தால் நிச்சயம் நான் விழித்தெழுந்திருப்பேன்.”

“இது கனவு என என்னை நான் அமைதிப் படுத்திக்கொண்டேன். ஆனால் நடுக்கம் அந்த அமைதியோடு போட்டியிடத் தொடங்கியது. காரணம் இது கனவு என்றால், நான் எப்படிச் சுற்றுப்புறத்தை இவ்வளவு இயல்பாக உணர்கிறேன். எல்லாம் தெளிவாய் இருந்தது.  சிறிது நேரம் அப்படியே கிடந்தபின், என் குளியலறையிலிருந்து ஒரு பெண் வெளியாகி என்னை நோக்கி நடந்து வந்ததைப் பார்த்த போது இது கனவல்ல என்கிற நம்பிக்கை எழுந்தது. நான் அதிர்ச்சியுடனும் சற்று பயத்துடனும் அவளை நோக்கினேன். அவள் நேராகப் படுக்கை அருகே வந்தாள், படுக்கையில் காலை மடக்கி அமர்ந்தாள்.  பின் மெதுவாக என்னை இடுப்பில் தட்டினாள். “சீக்கிரம் எழுந்திரிங்க” அவள் பேசினாள், “இல்லையென்றால் அலுவலகத்திற்குத் தாமதமாகிவிடும்” என்றாள். நான் தானியங்கி (autopilot) முறையில் இயக்கப்பட்டது போல் அவசரமாக எழுந்தேன். சன்னலின் பக்கத்தில் கொடியிலிருந்த துண்டை எடுத்துக் கொண்டு, நேராகக் குளியலறைக்குச் சென்றேன். அங்குச் சிறுநீர் கழித்தேன், பற்களைத் துலக்கினேன், சோப்பு போட்டுக் குளித்தேன், ஆனால் இதை எல்லாம் நான் ஆன்மா இல்லாதவனைப் போல் செய்தேன்.

“அதற்குப் பிறகு நான் குளியலறையிலிருந்து வெளியே வந்தபோது அந்தப் பெண்ணை எங்கும் காணவில்லை. படுக்கையின் மேல் வேலைக்கு அணிய வேண்டிய உடைகள் தயாராக இருந்தன. நான் அணிவதற்காக அவை காத்திருந்தன. நான் அவற்றை எடுத்து அணிந்துகொண்டேன். பின், அறையிலிருந்து வெளியே வந்தேன். வரவேற்பறையில் உள்ள உணவு மேசையில் அவள் அமர்ந்திருந்தாள். அவளுக்கு எதிரே உள்ள நாற்காலியில் ஒரு சிறுமி, சுமார் ஆறு வயது இருக்கும், நாசி கோரெங்கை சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

நான் திகைத்து நிற்பதைப் பார்த்த அந்தப் பெண் மெதுவாக என் தோளில் கை வைத்து, என்னை உணவு மேசை நோக்கி தள்ளிச் சென்றாள். என்னை அவளுக்கும் அந்தச் சிறுமிக்கும் நடுவே உள்ள நாற்காலியில் அமரச் செய்தாள். “காலையிலேயே கனவு காண ஆரம்பித்து விட்டீர்களா?”, என்றாள் அவள். அந்தச் சிறுமி சிரித்துவிட்டு மீண்டும் நாசி கோரெங்கை சாப்பிடத் தொடங்கினாள்.

அந்தப் பெண் நாசி கோரெங்கை கரண்டியால் அள்ளி என் தட்டில் போட்டு என்னிடம் நீட்டினாள். என்ன செய்வது என அறியாமல், நான் அதைப் பெற்றுக்கொண்டு. பின் அந்தச் சிறுமியைப் போலவே, மெதுவாக வாயில் வைத்தேன்”.

டோன் என் கண்களை நேராக நோக்கினான். பின்னர் பார்வையை அவன் காப்பி கோப்பைக்குத் திருப்பினான். பின் சட்டை பையிலிருந்து அவனது ‘கேமல்’ சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்து மிக ஆழமாக இழுத்தான். வெளியே, மாலை ஆறு மணியின் சூரியன் மேற்கு வானத்தின் ஒரு பகுதியை இன்னும் தீவிரமாகச் சிவப்பாக்கிக் கொண்டிருந்தது. அது ஒரு விசித்திரமான காட்சியாக இருந்தது. அதே வேளை, மனதை அமைதிப்படுத்தும் ஒரு காட்சியாகவும் இருந்தது.

“அன்று காலை…,” டோன் தொடர்ந்தான், “அந்தச் சிறுமியைப் பாலர் பள்ளிக்கு அனுப்ப வேண்டியது என் பொறுப்பு என்று தெரிந்தது. சாப்பிட்டு முடித்த பின், சுவரில் மாட்டியிருந்த காரின் சாவியை எடுத்தேன்; அதில் இன்னும் ‘ஹோண்டா’ என்ற முத்திரை தெளிவாக இருந்தது. நான் வெளியேறினேன்; அவர்கள் இருவரும் என்னைப் பின் தொடர்ந்தனர். வெளியே பார்த்தேன். ஆம், அது என் ‘ஹோண்டா சிட்டி’ கார்தான், எப்போதும் போல பள பளக்கும் கருப்பு நிறத்தில் இருந்தது. நான் காலணியை அணிந்து கொண்டிருந்தேன்; அந்தச் சிறுமி, அந்தப் பெண்ணுக்கு சலாம் செய்து, முத்தமிட்டாள். அந்தத் தருணத்தில்தான், அவர்கள் இருவருக்குமிடையே குறைந்தது தாய் மகள் உறவு இருக்கக்கூடும் என உணர்ந்தேன். அந்தப் பெண் ஒரு உணவுப் பொட்டலத்தைச் சிறுமிக்குக் கொடுத்தாள், மற்றொன்றை என்னிடம் கொடுத்தாள். பின்னர் நானும் அந்தச் சிறுமியும்  காருக்குள் அமர்ந்தோம். காரின் உள்ளிருந்து நான் பார்த்தபோது, அந்தப் பெண் என்னை வினோதமாகப் பார்த்தாள். ஒருவேளை, அந்தச் சிறுமியைப் போல நானும் சலாம் செய்து முத்தமிடாததால் இருக்கலாம். 

“நான் என் குடியிருப்புப் பகுதியில் காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். உனக்குத் தெரியும்தானே… தாமான் துன் டாக்டர் இஸ்மாயில். அந்தச் சிறுமியைப் பாலர் பள்ளிக்குக் கொண்டு செல்வதற்கு முதலில் அந்த இடத்தை அறிந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அது அமைந்திருக்கும் இடம் எனக்குத் தெரியவில்லை. அதைவிட அந்தச் சிறுமியின் பெயரும், அந்தப் பெண்ணின் பெயரும் கூட எனக்குத் தெரியவில்லை. அப்போது திடீரென எனக்கொரு யோசனை வந்தது. நான், ஒரு ஆசிரியர் தனது மாணவியை எதிர்நோக்கும் பாவனையில் அந்தச் சிறுமியிடம் அவளின் பெயரை எழுத்துக் கூட்டச் சொன்னேன். அவளும் நான் புரிந்து கொள்ளும் அளவிற்கு ஒவ்வொரு எழுத்தாகத் தெளிவாக எழுத்துக் கூட்டினாள். பின் அவளிடம் அவளது அம்மாவின் பெயரையும் எழுத்துக் கூட்டச் சொன்னேன். அவளும் எழுத்துக் கூட்டிச் சொன்னாள்; நான் புரிந்து கொண்டேன். இறுதியில், பாலர் பள்ளியின் பெயரைச் சொல்லும் நேரம் வந்தது. அந்தப் பள்ளியின் பெயர் ‘டியானா’ மழலையர் பள்ளி. அந்த இடம் எனக்குத் தெரியும். என் குடியிருப்புப் பகுதியிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தூரத்தில் தான் இருந்தது”.

“அவளை அங்கு இறக்கி விட்டு, நான் நேராக வேலை இடத்திற்குச் சென்றேன். அதாவது, நம்முடைய வேலை இடத்திற்கு. ஏனெனில் நான் இன்னும் அங்கேயே வேலை செய்கிறேன் என்ற நம்பிக்கையிலிருந்தேன். அலுவலகத்திற்கு வந்து, உன்னையும், மற்றவர்களையும் சந்தித்தேன். வழக்கம்போல் வேலை செய்தேன், ஆனாலும் மனதில் குழப்பம் நிரம்பியிருந்தது. மதிய வேளையில், என் மனைவி என்று நான் யூகிக்கும் அந்தப் பெண் கொடுத்த உணவைச் சாப்பிட்டேன். வேலை நேரம் முடிந்ததும் இன்னும் குழப்பம் குறையாமலே வீட்டுக்குத் திரும்பினேன். ‘மனைவியும்’ ‘மகளும்’ என்னை வரவேற்றனர். நான் குளித்தேன், பின்னர் இரவு உணவு உண்டேன், அதன் பிறகு அவர்களுடன் சேர்ந்து தொலைக்காட்சி பார்த்தேன். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இதுவரை இரவில் நான் தனியாகச் செய்து வந்த எல்லாவற்றையும் இப்போது அந்த ‘மனைவியுடனும்’, ‘மகளுடனும்’ சேர்ந்து செய்தேன். நான் இரண்டு காரணங்களால் அந்த நேரத்தில் அதிகம்  மெளனமாகவே இருந்தேன். ஒன்று நான் குழப்பத்தில் இருந்தேன், அடுத்தது அந்தக் குழப்பத்தை அவர்கள் உணரக் கூடாது என நினைத்தேன். பின்னர், வழக்கம்போல சரியாக இரவு 11 மணிக்கு நானும் அவர்களும் உறங்கச் சென்றோம். ‘என் மகள்’ முன்பே தூங்கிவிட்டிருந்தாள்; ‘என் மனைவி’ அவளை என் படுக்கையறைக்கு அடுத்துள்ள அறைக்குத் தூக்கிச் சென்றாள். சில நொடிகள் கழித்து, அவளும் என்னைப் பின் தொடர்ந்து என் படுக்கையறைக்குள் வந்தாள். ஒரு கணத்தில் என்னருகில் படுத்துக் கொண்டாள். நான் பக்கவாட்டாகத் திரும்பிப் படுத்தபடி, தூங்குவதைப்போல் பாசாங்குச் செய்தேன். அவள் தன் உடலை அங்கும் இங்கும் திருப்பிக் கொண்டிருந்தாள். சில நிமிடங்களுக்குள், நான் அனைத்தையும் மறந்து உண்மையாகவே தூங்கிப் போனேன்”.

ஷஃபிக் கசாலி

டோன் இரண்டு சிகரெட்டுகளை முடித்திருந்தான்; நானும் அதேபோல இரண்டை முடித்திருந்தேன். அவன் மேலும் இன்னொரு சிகரெட்டை பற்ற வைத்தான், அவனிடம் எந்தப் பரபரப்பும் இல்லை. தனது கதையின் முதல் பாகத்தை முடித்து விட்டு அடுத்த பாகத்தைத் தொடங்குவதற்கு முன் சிறிய இடைவேளையில் இருப்பது போன்ற பாவனையில் இருந்தான்.  நான் அவனிடம், அந்தக் கனவில் தோன்றிய ‘என்னை’ பற்றி கேட்க விரும்பினேன். அவன் என்னைப் போலத்தான் இருந்தானா? அவன் தோற்றமும், குணமும் என்னைப் போலவே இருந்ததா? ஆனால் அதை நான் மனதுக்குள்ளே வைத்துக்கொண்டேன். இந்தக் கதையின் முதன்மை கதாபாத்திரம் டோனும் அவன் கனவும்தான். ஆகையால், என் மூளையைக் கசக்கிப்பிழிந்து  தகுந்த கேள்விகளை யோசிக்கத் தொடங்கினேன்.

“அதற்குப் பிறகு என்ன நடந்தது?” நான் கேட்டேன்.

“என்ன நடந்திருக்கும் என நீ நினைக்கிறாய்?”

“நீ விழித்ததும், இந்த உலகத்திற்குத் திரும்பி விட்டாயா?”

“ஆம், நான் காலையில் விழித்துக் கொண்டேன்,” அவன் பதிலளித்தான். “ ஒற்றைப் படுக்கையில் படுத்திருந்த அதே உலகத்திற்கே மீண்டும் திரும்பியிருந்தேன். என் அருகில் மனைவி இல்லை, அடுத்த அறையில் மகளும் இல்லை. என் நாளை வழக்கம்போல நகர்த்தினேன். எவ்வளவு தெளிவாக அனுபவித்திருந்தாலும், நடந்தது எல்லாம் ஒரு கனவு மட்டுமே, என்ற நம்பிக்கையை எனக்குள் விதைத்துக் கொண்டேன்”

“நிச்சயமாக நான் தவறு செய்து விட்டேன். இல்லையெனில், இந்நொடியில் உன் முன் நான் இருந்திருக்க மாட்டேன். அன்று இரவு நான் உறங்கச் சென்றேன். மீண்டும் அதே கனவை அனுபவித்தேன். அடுத்த இரவிலும் அடுத்த அடுத்த இரவுகளிலும்  அப்படியே நடந்தது. உண்மை என்னவென்றால், கனவில் நான் குடும்பஸ்தனாக வாழ்கிறேன். அல்லது, அதைவிடச் சரியாகச் சொல்வதானால், அது கனவல்ல; அது உண்மையிலேயே நடக்கிறது. எனது இரவு உறக்கம் என்பது அந்த உலகத்திற்குள் நுழையும் ஒரு நிகழ்வாக அல்லது ஒரு சடங்காக உள்ளது; இல்லறத்தில்  வாழும் வேறொரு உலகத்திற்கு என்னைக் கொண்டு செல்லும் ஒரு வாசலாக உள்ளது.

“அப்படியானால், உனக்கு இரண்டு வாழ்க்கை, ஒன்று திருமணமாகாத வாழ்க்கை; மற்றொன்று நீ குடும்பத்துடன் வாழும் வாழ்க்கை, சரியா?” நான் கேட்டேன்.

“உண்மை!” அவன் பதிலளித்தான்.

“நீ அதிர்ஷ்டசாலி”

“நிச்சயமாக நான் அதிர்ஷ்டசாலி என்றுதான் நினைக்கின்றேன். அது ஒரு சுவாரஸ்யமான அனுபவம். இங்கே நான் தூங்கினால், அங்கே நான் விழித்திருக்கிறேன். அங்கே உறங்கினால், இங்கே விழித்திருக்கிறேன். ஆரம்பத்தில் அந்த உலகம் எனக்கு அந்நியமாக இருந்தது. ஏனெனில் என் மனைவியைப் பற்றியும் மகளைப் பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனாலும், எனக்கு அவர்களைப் பிடித்திருந்தது. அங்கு முதல் வாரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் அவர்களுக்குச் சந்தேகம்  எழாத வண்ணம்,  நான் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள, கடுமையாய் முயற்சித்தேன். என் மனைவி அவ்வளவு அழகானவள் அல்ல; அவளின் முகத்தோற்றம் சாதாரணமானது. ஆனாலும் அவள் மென்மையானவள்; புரிந்துணர்வு மிக்கவள். அதுமட்டுமல்ல, அவள் கலகலப்பாகப் பேசக்கூடியவள். அது என் தீவிரமான இயல்புக்கு ஒரு சமநிலையை வழங்கியது. என் பிள்ளையும் மற்ற பிள்ளைகளோடு வேறுபட்டவள் அல்ல. அழகானவள், வெள்ளை மனம் படைத்தவள், மேலும் எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வமுடையவள். மொத்தத்தில், இது ஒரு இயல்பான குடும்பம். ஆனால் குறைந்தபட்சம், எனக்கு ஒரு குடும்பம் அமைந்திருக்கிறது. என் வாழ்நாள் முழுவதும் தனிமையே நிரம்பியிருந்தது. என் தீவிரமான இயல்பினால், என்னைப் போன்றவர்களுக்குக் குடும்ப வாழ்க்கை பொருந்தாது என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர்கள் என் வாழ்வில் வந்த பிறகு, நான் இத்தனை நாள் தவறு செய்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். உண்மையில், மகிழ்ச்சியாய் வாழ அனைவருக்கும் உரிமை உண்டு. விருப்பம் மட்டுமே போதும். அந்த உலகம் உண்மையா, பொய்யா என்பது முக்கியமில்லை. அந்த உலகமோ, இந்த உலகமோ, என்ன வேறுபாடு? நம் வாழ்க்கையின் நிதர்சனத்தை நாம்தான் தீர்மானிக்கிறோம். என்னைப் பொருத்தவரை அது உண்மையான உலகம், ஏனெனில் அங்கே இருந்தபோது என் சிந்தை தெளிவாகவே இருந்தது.”

டோன் தனது மீந்திருந்த காப்பியை குடித்து முடித்தான். நாங்கள் அந்தக் கடையில் உட்கார்ந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டிருந்தது. வெளியே, இரவு கருப்புச் சீருடையை அணிந்து தன் கடமையைச் செய்யத் தொடங்கியிருந்தது. டோனின் கதை இங்கு முடிவடைந்திருக்க வேண்டும். ஏனெனில் வீட்டில் மனைவியுடன் நீண்ட வாக்குவாதங்களில் ஈடுபட நான் விரும்பவில்லை. ஆனால், டோன் நிறுத்திவிட போகும் எந்த அறிகுறியையும் காட்டவில்லை; மாறாக, அவன் அடுத்த பாய்ச்சலுக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருப்பதைப் போலிருந்தது.

“ஆனால், ஒரு பிரச்சனை இருக்கு,” என்றான் டோன். அவன் முகம் மாறியது. சோர்வாகவும்  நம்பிக்கையிழந்தும் காணப்பட்டான்.

***

“ஆனால் ஒரு பிரச்சனை இருக்கிறது,” டோன் என்னிடம் கூறினான். மூன்று வாரமாக அவன்  தூங்கவில்லை. அது இன்சோம்னியா (தூக்கமின்மை நோய்) தானா என அவனுக்கே தெளிவில்லை, அது இன்சோம்னியாவாக இருக்க வாய்ப்பில்லை. அதை ஒத்த வேறொன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தான். அவன் தூங்க முடியாமல் தவிக்கவில்லை, அல்லது நடு இரவில் விழித்துக் கொண்டதும் இல்லை; உண்மையில் அவனுக்குத் தூக்கமே வரவில்லை. எளிதாகச் சொல்லப்போனால், அவன் கடந்த மூன்று வாரங்களாக கொஞ்ச நேரங்கூட தூங்கவில்லை. அதன் பொருள் மூன்று வாரங்களாக அவன் பிள்ளையையும் மனைவியையும் பார்க்கவில்லை என்பதாகும்.

அவன் அனுபவித்தது உண்மையான இன்சோம்னியாவாக இல்லாமல் அதற்கு ஒத்த வேறு ஒன்றாக இருந்ததால்தான் (தோற்றத்தில் ஒரே மாதிரி, ஆனாலும் தன்மையில் வேறுபட்டது) அவன் சிறிதுகூட சோர்வாக இல்லை. (முற்றிலும் இல்லை). தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்படும் கவனமின்மை மற்றும் மனச்சிதைவு போன்ற அறிகுறிகளும் அவனுக்கு ஏற்படவில்லை. அவன் தூக்கமெனும் இயல்பு மட்டும் பறிக்கப்பட்ட சாதாரண மனிதனாக இருந்தான். ஆனால் அவன் அதிர்ஷ்டசாலி. அந்த இயல்பு பறிக்கப்பட்டாலும் அவனின் தினசரி வாழ்க்கையைப் பாதிக்கவில்லை.

அவன் தனது வேலையை வழக்கம்போல், எந்தக் குறையும் இல்லாமல் செய்தான்; தூங்க முடியாத அந்த நிலை அவனைக் கனவு உலகில் தனது குடும்பத்தாருடன் சேரும் வாய்ப்பிலிருந்து விலக்காமல் இருந்திருந்தால், ஆக்கவளம் கொண்ட அவன் கவனம் சிதையாமல், தூங்காமல் அதிகம் உழைக்க முடிகிறது என்பதற்காக  நன்றி கூறியிருப்பான்.

எந்த அறிவிப்பும் இன்றி வீட்டு வாசலில் வந்து நிற்கும் அந்நியன் போல அது திடீரென ஏற்பட்டது. அன்று இரவு, வழக்கம்போலவே, பதினொன்று மணிக்குப் படுக்கச் சென்றான். கண்விழிக்கும் போது  தம்பதியர் மெத்தையில் தன் அன்பு மனைவி பக்கத்தில் படுத்திருப்பாள் என்ற நம்பிக்கையில் ஒற்றைக் கட்டிலில் படுத்துக் கிடந்தான். ஆனால் பத்து நிமிடங்கள் கடந்த பிறகும், அவன் இன்னும் விழித்திருந்தான். மல்லாந்து படுத்தான், ஒருக்களித்துப் படுத்தான் எதுவும் பயனளிக்கவில்லை. பிறகு, அவன் எழுந்து சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்தான். அவன் புத்துணர்வோடு இருக்க பலமுறை தண்டால் செய்தான். பின்னர் குளித்து விட்டு மீண்டும் அவனின் கட்டிலுக்கு வந்தான். வராத தூக்கத்திற்காக அவன் நம்பிக்கையுடன் காத்திருந்தான். ஆனால் அவனை வரவேற்றது சூரியனின் ஒளியுடன் கூடிய காலை வேளை. நம்பிக்கையை இழந்த அவன், எழுந்து வேலைக்குச் செல்லத் தயாரானான். அந்த இரவும் அவனால் தூங்க முடியவில்லை. மறுநாளும் அதன் மறுநாளும் அப்படித்தான், அதன்பின் தொடர்ந்து மூன்று வாரங்கள்.

டோன், அந்தக் காலக்கட்டத்தில் நிச்சயமாகத் தன் தூக்கத்தை மீண்டும் பெற பல வழிகளை முயன்றிருப்பான். இல்லையெனில், அவனுடன் உட்கார்ந்து அவன் கதையை நான் கேட்க வேண்டியிருந்திருக்காது. பிறர் தலையிட்டு மதிப்பீடு செய்ய தேவையில்லாத வண்ணம் அவன், தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.  அவனின் அனுபவங்கள் போலியானவை என யாரும் சொல்லத் தேவையில்லாதது போலவே அவனை ஆதரிக்கவும் அவனுக்கு யாரும் தேவைப்படவில்லை. ஆனால் தற்போது அவனுடைய மகிழ்ச்சி குலைந்துவிட்டது. ஆகவே முதலில் அவன் ஒரு தூக்க மாத்திரையை விழுங்கினான். அதன் விளைவு, தோல்விதான். பின்னர் இரு மாத்திரைகள், அதுவும் தோல்வி. மூன்றாவது முயற்சிக்குப் பிறகு அதன் பக்கவிளைவுகள் குறித்து பயம் ஏற்பட்டதால் நிறுத்தினான்.  மேலும் எத்தனை மாத்திரைகள் விழுங்கினாலும், ஒரு கணம் கூட தன்னால் தூங்க முடியாது என்பதை அவன் உணர்ந்தான். அவன்  வேறு வழிகளையும் முயன்று பார்த்தான்: படுக்கும் இடத்தை மாற்றிப் பார்த்தான். (வேறு அறை, வரவேற்பறையின் சோஃபாவில், சமையலறையின் தரையில் கூட). மூச்சுக் கட்டுப்பாட்டுப் பயிற்சி; சுய ஹிப்னோசிஸ்; இசை சிகிச்சை என அனைத்துமே தோல்வியில் முடிந்தன. அவன் கண்கள், நண்பகல் பன்னிரண்டு மணி சூரியனைப் போல, பிரகாசத்துடன் விழித்த வண்ணமே இருந்தன. விதிகூட அவனுக்கு வேடிக்கை காட்டியது. டோனுக்கு குடும்பம் என்ற மகிழ்ச்சியை அளித்தது; ஆனால் ஒரு வருடம் கழித்து அதை மீண்டும் குரூரத்துடன் பறித்துக் கொண்டது. இருப்பினும், டோன் எளிதில் நம்பிக்கை இழப்பவன் அல்ல. அவன் இன்னொரு வழியைக் கண்டுபிடித்தான், அந்த உலகத்திற்குத் திரும்புவதற்குக் குளோரோஃபாம் எனும் கடைசி வழியைத் தேர்ந்தெடுத்தான். முதலில் எனக்குச் சரியாகப்படவில்லை; குளோரோஃபாம் ஆபத்தானது, மேலும் அது எளிதில் கிடைக்காது; பொதுவாக விற்கப்படுவதில்லை என்றேன். அவன் “எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான், அவனுக்குத் தெரிந்த நண்பரால் உதவி செய்ய முடியும்” என்று சொன்னபோது, திடீரென நான் ஒரு குற்றவியல் நகைச்சுவை திரைப்படத்தில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்.

பின்னர், டோன் தனது கனவு உலகத்திற்குத் திரும்பி, அவனின் முடிவைத் தீர்மானிக்க போவதாகச் சொன்னான். கடந்த மூன்று வாரங்களாக உறக்கமின்றி விழித்திருந்த வேளையில் அவன் யோசித்துக் கொண்டே இருந்தான். அவனுக்குத் தெளிவாகப் புரிகிறது, ஒருவனால் இரண்டு வாழ்க்கையை வாழ முடியாது. அது மிகுந்த சோர்வை ஏற்படுத்துகிறது. அசாதாரண சக்தியுள்ளவர்களால்தான் அதை நிகழ்த்த முடியும். ஆனால் டோனிடம் அந்தச் சக்தி இல்லை. வெளியில் பார்க்கும்போது அவன் சாதாரணமாகவே தெரிந்தான். ஆனால் கடந்த ஒரு வருடமாக அவன் வெகுவாகக் களைப்படைந்திருந்தான். அவனுடைய உடலும், மனமும் அனைத்தும் சோர்ந்திருந்தன. இதை அவன் யாரிடமும் வெளிக்காட்டியதே இல்லை, ஆனால் இதுதான் உண்மை. அதனால் அவன் தூங்கி, கனவு உலகிற்குள் சென்று, தனது குடும்பத்துடன் இது குறித்துப் பேச விரும்பினான். இன்னும்கூட இதை எப்படி மனைவிக்கும் பிள்ளைக்கும் விளக்குவது என்று அவனுக்குத் தெரியவில்லை, ஆனால் நேருக்கு நேர் அவர்களைச் சந்தித்தால் அது இயல்பாகவும் எளிதாகவும் இருக்கும் என்று நம்பினான். அந்த நொடியில் அந்த உலகில் வாழ்வதா அல்லது இந்த உலகில் வாழ்வதா என்ற முடிவை எடுப்பான்.

இந்தக் கதையில் என் உண்மையான பங்கு இங்குதான் உள்ளது. அவன், அந்த உலகத்தில் இருக்கும் போது நான் அவனைக் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டான். சில மணி நேரங்களுக்குப் பிறகு அவன் விழித்தால், அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவன் இந்த உலகத்தையே… நிஜ உலகத்தையே தேர்ந்தெடுத்திருக்கிறான் என்று அர்த்தம். ஆனால் அவன் விழிக்கவே இல்லை என்றால் அதாவது மனைவி, பிள்ளையுடன் அந்த உலகத்திலேயே வாழ முடிவு செய்திருக்கிறான் என்றால், இந்த உலகில் அவன் இறந்துவிடுவான் என்று பொருள். இது வெறும் கணிப்புதான். அங்கே வாழ்ந்தால், இங்கே மரணம் நிகழ்ந்துவிடுமா என அவனுக்கு… ஏன் எனக்கும் கூட தெரியாது. ஒருவேளை டோன் உண்மையிலேயே இறந்துவிட்டால், அவன் சடலத்தின் பொறுப்பை நானே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டான். “செத்த பிறகும் கூட… என் உடல் கவனிக்கப்படாமல் நாறிப்போகக் கூடாது” என்றான்.

ஆகவே, இரண்டு நாட்கள் கழித்து, ஒரு சனிக்கிழமை இரவு, நான் அவன் வீட்டுக்குச் சென்றேன். மனைவியிடம் இன்று இரவு தொடங்கி ஒரு நாள் outstation வேலை என்று பொய் சொன்னேன். எனக்குப் பொய் சொல்லப் பிடிக்காது, அதுவும் என் மனைவியிடம். ஆனால் வேறு நல்ல விளக்கம் என்னிடம் இல்லை. “நான் திருமணமாகாத ஒரு ஆண் நண்பனின் வீட்டில் தங்க போகிறேன்” என்றால் அவள் தவறாகப் புரிந்து கொள்வாள். அதற்கும் மேல், “அவனுக்கு என் உதவி தேவை. கனவில் அவன்  குடும்பத்துடன் பேசும் வரை நான் அவனைக் கவனித்துக்கொள்ள வேண்டும்,” என்று சொன்னால், அது எதுவுமே உதவாது. என் மனைவி, என்னைப் பைத்தியம் என்று நினைப்பாள், அல்லது தப்பான உறவை மறைக்க கதை சொல்கிறேன் என முடிவு செய்துவிடுவாள். ஆகவே, அந்த நிமிடம் என் மூளை முன் வைத்த சிறந்த யோசனை, பொய் சொல்வதுதான்.

நான் இரவு 10:30 மணிக்கு டோனின் வீட்டைச் சென்றடைந்தேன். அவன் வாசலில் என்னை வரவேற்றான். “உள்ளே வா,” என்றான். அவனைப் பின்தொடர்ந்து நான் வரவேற்பறைக்குள் சென்றேன். அவன் உட்காரச் சொன்னதும், அமர்ந்தேன். டோன் திரும்பி அறைக்குள் நடந்து செல்வதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு அவன் திரும்பி வந்தான். வலது கையில் ஒரு திரவம் நிரம்பிய பாட்டில். அது ‘குளோரோஃபாம்’ என நான் ஊகித்தேன். இடது கையில் ஒரு கண்ணாடிக்கலன் இருந்தது.

அவன் என் அருகில் அமர்ந்து, அந்த இரு பொருள்களையும் மேசை மீது வைத்தான்.

பிறகு ‘குளோரோஃபாம்’ பாட்டிலின் மூடியைத் திறந்து அதை மிகக் கவனமாகப்  பக்கத்தில் வைத்திருந்த கண்ணாடிக் கலனில் ஊற்றினான். “நான் விலாவாரியாக ஆராய்து விட்டேன் அளவு குறைந்தால் வெறும் தலைசுற்றல்தான் வரும். அதிகமாகி விட்டால்… நான் செத்துப் போக வாய்ப்புள்ளது,” என்றான்.

அவன் அந்தச் செயல்முறையை மிக கவனமாகவும் பாதுகாப்போடும், உண்மையாலுமே ஒரு டோன் செய்வதைப் போல செய்தான்; கண்ணாடிக்கலனில் அத்திரவம் 10 மில்லி அளவைத் தொட்டவுடன் அவன் நிறுத்தினான்.

அதன் பின், அவன் எழுந்து அறைக்குள் சென்றான். ஒரு விசுவாசமான பணியாளரைப் போல, நானும் அவனைப் பின்தொடர்ந்தேன். அவனது அறை இருள் சூழ்ந்து தயாராய் இருந்தது. அவன் சற்றுநேரம் குளியலறைக்குள்  சென்றான். சிறிது நேரம் கழித்து, ஒரு கைக்குட்டையோடு வெளியே வந்து கட்டிலின் விளிம்பில் அமர்ந்தான்.   நான் வெளியே சென்று, ஒரு நாற்காலியைக் கொண்டு வந்தேன். அதை  கட்டிலைப் பார்த்தவாறு போட்டு அமர்ந்து, மெல்லிய ஒளியில், அவனைக் கவனித்தேன். டோன் அவன் வேலையைச் செய்யத் தொடங்கினான். அவன் கைக்குட்டையைக் கண்ணாடிக்கலனில் ஊற வைத்தான், சில நொடிகளுக்குப் பிறகு அதை வெளியே எடுத்தான்.

“நான் தொடங்கப் போகிறேன்,” என்று என்னிடம் கூறி, உடனே படுத்துக் கொண்டான். அந்தக் கைக்குட்டையால் அவன் மூக்கையும் வாயையும் மூடிக்கொண்டான். சில நிமிடங்களுக்குப் பிறகு, நான் அவனின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன். எந்தப் பதிலும் இல்லை. டோன் தனது கனவு உலகத்திற்குள் பாதுகாப்பாக நுழைந்துவிட்டான்   எனத் தோன்றியது. பின்னர் நான் எழுந்து, அந்தக் கைக்குட்டையை அவனுடைய முகத்திலிருந்து அகற்றி, கட்டிலுக்குப் பக்கவாட்டில் உள்ள மேசை மீது வைத்தேன். மீண்டும் நாற்காலியில் அமர்ந்து, டோன் தூங்குகிறானா அல்லது இறந்துவிட்டானா என்று தெரியாமல்  அவனைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.  

நான் எவ்வளவு நேரம் காத்திருந்தேன் என்று தெரியவில்லை. கையிலுள்ள கைக்கடிகாரத்தைப் பார்க்கும் எண்ணம் எழவில்லை. என்ன செய்யவேண்டும் என்றும் தெரியவில்லை. வெறுமனே நாற்காலியில் அமர்ந்து, ஒரு சடலத்தைப் போல் படுத்திருக்கும் டோனை பார்த்தபடியிருந்தேன். ஓரிரு முறை சன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்தி, நிலாவைப் பார்க்க முயன்றேன். ஆனால் நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அதைப் பார்க்க முடியவில்லை, வானில் கோடுகளாக விரிந்த நிலவின் ஒளி கதிர்கள் மட்டுமே தெரிந்தன.

நான் காத்திருந்தேன், ஒரு நூற்றாண்டு கடந்து விட்டதைப்போல் எனக்குத் தோன்றியது.

***

டோன் ஒரு தம்பதியர் கட்டிலில் கண்விழித்தான். அவனுடைய மனைவி அருகில் இல்லை. அவன் எழுந்து அறையிலிருந்து வெளியே சென்றான். பிள்ளையின் அறைக்குச் சென்றான், அவன் பிள்ளையும் அங்கு இல்லை. மனைவியும் பிள்ளையும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கக் கூடும் என்ற நம்பிக்கையில் வரவேற்பறைக்குச் சென்றான். ஆனால் அவர்கள் அங்கு இல்லை, சமையலறையிலும், வீட்டின் முற்றத்திலும், வேறு எங்கும் காணப்படவில்லை. டோன் கலவரமானான், சோபாவில் போய் அமர்ந்தான். மனைவிக்காகவும் பிள்ளைக்காவும் காத்திருப்பது என்று முடிவு செய்தான். அவர்களைக் காணாமல் அங்கிருந்து நகர்வதில்லை என்றும் உறுதி செய்து கொண்டான்.   

இரவு வந்த போதிலும், டோன் இன்னும் சோபாவில் அமர்ந்து காத்திருந்தான். அவனின் காத்திருப்பு என்றென்றும் நீடிக்கும் போல தோன்றியது.

முதன்முறையாக ‘Bahagia di Dalam Balang Kaca’ சிறுகதை தொகுப்பில் வெளியிடப்பட்டது. (மலேசிய புத்தக மற்றும் மொழிபெயர்ப்பு நிறுவனம், 2016); பின்னர் ‘Cerpen Syafiq Ghazali’ (Buku Fixi, 2024) இல் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

தமிழில்: சல்மா தினேசுவரி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...