
மலேசிய கலை இலக்கியச் சூழலில் பல்வேறு தளங்களிலும் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது வல்லினம். மூத்த எழுத்தாளர்களை விருது வழங்கி அங்கீகரிக்கும் அதே சமயத்தில் அவர்களது பங்களிப்பை ஆவணப்படங்கள் வழியாகப் பதிவு செய்தும் வருகிறது. அதே போல சமகால எழுத்தாளர்களின் ஆக்கங்களை வல்லினம் இதழ் வழியாக வெளியிட்டும் நூல்களைப் பதிப்பித்தும் வருகிறது.
இதுதவிர, வல்லினத்தின் முதன்மையான நோக்கங்களில் ஒன்று, இளம் படைப்பாளிகள், வாசகர்கள் கவனத்தை நவீன கலை இலக்கியத்தை நோக்கி குவிப்பதாகும். அதோடு அவர்களின் ஆற்றல் வெளிபட துணையிருப்பதும் அவர்களோடு இணைந்து இயங்குவதும் தலையாயது.
அவ்வகையில் இவ்வருடம் மே 23 – 24 ஆகிய தினங்களில் நவீன இலக்கியப் பட்டறை மற்றும் இலக்கிய விழா ஒன்றை வல்லினம் ஏற்பாடு செய்துள்ளது.
இலக்கியப் பட்டறை
மே 23 – 24 ஆம் திகதிகளில் மலேசியத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கமும் வல்லினமும் இணைந்து இடைநிலைப்பள்ளிகளில் இலக்கியம் போதிக்கும் ஆசிரியர்களுக்காக ‘நவீன இலக்கியப் பட்டறை’ ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. ஆறு அமர்வுகள் கொண்ட இந்தப் பட்டறையில் நவீன கவிதை, சிறுகதை, நாவல் குறித்து விரிவாக அறிமுகப்படுத்தப்படும். அதோடு நவீன இலக்கியத்தை அறிந்துகொள்ள எளிமையான அறிமுகத்துடனும் குழுமுறை பயிற்சிகளுடனும் இப்பட்டறை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக எஸ்.பி.எம் இலக்கியப் பாடத்தைப் போதிக்கும் நுணுக்கங்களும் இப்பட்டறையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

கோலாலம்பூர் பிரிக்பீல்டில் அமைந்துள்ள YMCA மண்டபத்தில் நடைபெறும் இந்தப் பட்டறையில் கலந்துகொள்வோருக்குத் தங்கும் வசதியும் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பட்டறைக்கான குறிப்புகள், சான்றிதழ் ஆகியவையும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும்.
பட்டறை சிறந்த முறையில் நடக்க குறிப்பிட்ட அளவு பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே மார்ச் 5 ஆம் திகதிக்குள் கீழ்க்கண்ட இணைப்பில் பதிவு செய்பவர்கள் மட்டுமே பட்டறையில் கலந்துகொள்ள முடியும். இப்பட்டறையில் கலந்துகொள்ள ரிம 100 கட்டணம் செலுத்த வேண்டும். மேற்கொண்டு தகவல் அறிய இப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கி. இளம்பூரணன் அவர்களை அணுகலாம்: 0149310479
கட்டண செலுத்த:

முதல் எழுத்து இலக்கிய விழா
2020க்குப் பின்னர் மலேசியாவில் புதிய எழுத்தாளர்களின் கலைஞர்களின் வருகை அதிகரித்துள்ளது. அவ்வாறு உருவாகி வரும் இளம் எழுத்தாளர்களையும் செயல்பாட்டாளர்களையும் ஒன்றிணைக்கும் வகையில் ‘முதல் எழுத்து இலக்கிய விழா’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நூல் வெளியீடு, அகப்பக்க அறிமுகம், ஆவணப்பட வெளியீடு, கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட குறுநாவல் போட்டிக்கான பரிசளிப்பு என நான்கு அங்கங்கள் இந்த விழாவில் இடம்பெற உள்ளன.

மே 24 ஆம் திகதி பிரிக்பீல்டில் அமைந்துள்ள YMCA மண்டபத்தில் மதியம் 2 முதல் மாலை 5 வரை இவ்விழா நடைபெறும். இலவசமாக நடைபெறும் இவ்விழாவில் தமிழகத்திலிருந்து எழுத்தாளர் சு. வேணுகோபால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். மேலும் மா. சண்முகசிவா, சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, இயக்குனர் சஞ்சய் குமார் பெருமாள், சிங்கையிலிருந்து அருண் மகிழ்நன், லதா என பல முதன்மையான ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த விழாவில் பங்கெடுக்க முன்பதிவு அவசியம். முன் பதிவு செய்ய கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்.
முதல் எழுத்து இலக்கிய விழா பதிவு பாரம்
மேற்கொண்ட விபரங்களுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அரவின் குமார் அவர்களை அணுகலாம்: 0103626478
