வாழும் தமிழ் இலக்கிய விழா: தீரா பெருங்கனவு

2022, நவம்பர் 26 ஆம் திகதி மதியம் இரண்டு இருக்கலாம். சுங்கை கோப் பிரம்ம வித்யாரண்யம் ஆசிரமத்திலிருந்து ‘ஜார்ச் டவுன் இலக்கிய விழா’வில் கலந்துகொள்ள ஜெயமோகன், அருண்மொழி நங்கை, ஜி.எஸ்.எஸ்.வி நவின் ஆகியோரை காரில் ஏற்றிக்கொண்டு பினாங்கு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தேன். நாற்பது நிமிட பயணம்.

அந்தப் பயணத்தில்தான் என் மனதில் வைத்திருந்த திட்டமொன்றை ஜெயமோகனிடம் பகிர்ந்துகொண்டேன். ஈராயிரத்தாம் ஆண்டில் ‘தமிழ் இனி 2000’ எனும் இலக்கிய மாநாடு நடைபெற்றது. காலச்சுவடு அந்த மாநாட்டை முன்னின்று நடத்தியது. அப்போது நான் இலக்கியத்தில் ஆர்வமாக ஈடுபடத்தொடங்கிய ஆரம்ப காலம். எனவே அந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எதுவும் அமையவில்லை. ஆனால் அந்த கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் பெருந்தொகுப்பாக மலேசியாவில் வெளியீடு கண்டபோது ஆர்வமாக வாங்கினேன். அதில் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியவை மலேசியக் கட்டுரைகள்தான். வழக்கமான கல்வியாளர்களின் கட்டுரைகள்.

பின்னர் தமிழக எழுத்தாளர்களின் தொடர்புகள் கிடைத்தபோது, அந்த மாநாட்டில் மலேசியக் கட்டுரைப் படைப்பாளர்களுக்கு கவனம் கிடைக்கவில்லை என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. பெரும்பாலும் அந்த அரங்குகள் காலியாகவே இருந்துள்ளன.

என் வருத்தத்தை ஜெயமோகனிடம் கூறினேன். இதுபோன்ற உலக அரங்குகளில் மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கான கவனம் எப்போதுமே கிடைக்காமல் போகின்றது. அதே சமயம் அப்படி ஒரு விழா நடந்து இருபத்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இடைவெளியில் தமிழிலக்கியம் உலகலாவிய நிலையில் அடைந்துள்ள மாற்றங்களைப் பேசுவது அவசியம். எனவே அப்படி ஒரு நவீனத் தமிழ் இலக்கியத்திற்கான விழாவை மலேசியாவிலோ சிங்கையிலோ நடத்த விரும்பும் என் எண்ணத்தைக் கூறினேன். அதன் மூலமாக, சமகால தமிழ் இலக்கியத்தோடு மலேசியத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியையும் உலகத் தமிழ் வாசகர்களிடையே முறையாகப் பகிர முடியும் என்ற ஆர்வத்தைத் தெரிவித்தேன். இதை ஒட்டி அவர் ஆலோசனையைக் கேட்டேன்.

ஜெயமோகனுக்கு என் திட்டம் பிடித்திருந்தது. ”நிச்சயம் செய்யப்பட வேண்டிய நல்லத் திட்டம்,” என்றார். ஆனால் அப்படிச் செய்தால் அது மலேசியாவிலோ சிங்கப்பூரிலோ நடப்பதை விட அமெரிக்காவில் நிகழ்த்தப்பட வேண்டும்,” என்றார்.

நான் ”அமெரிக்காவிலா!” என அதிர்ச்சியானேன். ஜெயமோகனை ஓர் இலக்கியவாதியாகப் பார்த்துள்ளேன். ஓர் இலக்கியச் செயல்பாட்டாளராக அவருக்கு அணுக்கமானவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன். அவரது சிந்தனை எத்தனை வேகமாகச் செயல்படுகிறது என அந்தப் பயணத்தில் கண்டு மிரண்டேன்.

”ஆம்! அமெரிக்காவில் செய்வது சாத்தியம்தான். அமெரிக்காவில் விஷ்ணுபுரம் அமைப்பு உள்ளது. அங்கு அது பதிவு பெற்ற அமைப்பு. எனவே அங்கு நடத்துவது சாத்தியம்தான். நான் ஊர் திரும்பியதும் கமலஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோருடன் பேசுகிறேன். அரங்காவுடனும் பேசுகிறேன். செயல்பாடுகளில் நேர்மறை எண்ணங்களை உருவாக்குபவர்கள் அவர்கள். அவர்கள் வழியாக இம்முயற்சி பலவகையில் இலகுவாகும்,” என்றார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உண்மையில் அதெல்லாம் சாத்தியம்தானா? நான் ஜி.எஸ்.எஸ்.வியிடம் ”நீங்க என்ன சொல்றீங்க?” என்றேன்.

”அண்ணா… நான் அமெரிக்காவுக்கு பறந்துட்டு இருக்கேண்ணா,” என்றார்.

”அமெரிக்காவில் செய்ய வேண்டும் எனச் சொல்ல காரணம் உண்டு. தமிழ் இலக்கியம் இனி உலகம் முழுவதும் கவனம் பெற வேண்டும். இங்கு என்ன எழுதப்படுகின்றன எனும் அறிமுகம் பிற மொழி இலக்கியவாதிகள் மத்தியில் கொண்டுச்செல்வது முக்கியம்.” என்றார்.

ஒரு நாட்டில் எழுதப்படும் தமிழ் இலக்கியத்தை மொத்தத் தமிழ்ச்சூழலுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எனது எண்ணத்தை ஜெயமோகன் மேலும் விரிவாக்கி ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்தையும் உலக மொழிகளுக்கு உலகின் முதன்மையான நகரத்தில் அறிமுகம் செய்வோம் எனும் நிலைக்குக் கொண்டுச்சென்றார். நான் ஸ்டேரிங்கை இறுக்கப் பிடித்துக்கொண்டேன். சிலிர்ப்பாக இருந்தது. மொத்த தமிழ் இலக்கியம் என்பதில் மலேசியத் தமிழ் இலக்கியமும் அடங்குகிறது. அந்த நிமிடம் முதல் ஜெயமோகனின் கனவுகளில் அந்த எண்ணம் விரிவாகிக்கொண்டே செல்வதை காண முடிந்தது. சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த அருண்மகிழ்நன், லதா உள்ளிட்ட சிலரிடம் தன் எண்ணத்தைப் பகிர்ந்துகொண்டே இருந்தார்.

அன்று இரவு நண்பர்களுடன் பேசும்போது சொன்னேன், ”ஒன்றிரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் சமகால தமிழ் இலக்கிய மாநாடு நடக்கும். அப்போது யார் வருகிறீர்கள் என முடிவெடுத்துக்கொள்ளுங்கள்’’

அது சாத்தியமா என நண்பர்களுக்குள் கேள்வி எழுந்தது. நான் சொன்னேன், ”முடிவெடுத்தவர் ஜெயமோகன்; அதை முடிக்காமல் விடமாட்டார்.”

2022 இல் ஜெயமோகனுக்கு மலேசியாவில் உதயமான அந்தத் திட்டம் 2026 ஏப்ரல் 3,4 ஆம் திகதிகள் நிகழவுள்ளது.

***

ஜெயமோகன் விழாவின் முன்னெடுப்புகளை 2022 லேயே தொடங்கிவிட்டார். அமெரிக்காவில் அவர் கனவை சாத்தியப்படுத்த ஆஸ்டின் சௌந்தர்ராஜன், ராஜன் சோமசுந்தரம், பழனிஜோதி ஆகியோர் முதன்மை பங்கு வகித்தனர். இவ்விழா குறித்த முதல் இணைய சந்திப்பிலேயே அக்குழுவினரிடம் இருந்த தெளிவும் தீவிரமும் புதிய நம்பிக்கைகளை விதைத்தன.

நான் கலந்துகொண்ட இலக்கிய விழாக்களில் சீனாவில் நடைபெற்ற ‘லியாங்ஸு பண்பாட்டுக் கருத்தரங்கு’ முதன்மையானது. அதில் உலகில் சமகாலத்தில் எழுதப்படும் இலக்கியங்கள் குறித்து பேசப்பட்டாலும் அந்த இலக்கிய விழாவின் வழியாக சீன அரசாங்கம் நிகழ்த்த முனைவது ஒன்றுதான். 1930களில் தொல்லியல் ஆய்வுகளால் அடையாளம் காணப்பட்ட லியாங்ஸு பண்பாட்டை உலகிற்கு அறிவிப்பதுதான் அது. உலகம் முழுக்கவும் இருந்து எழுத்தாளர்களை வரவழைத்து, பல கோடி செலவு செய்து  ஓர் அரசு தன்னிடம் உள்ள பழமையான நாகரிகத்தை உலகம் முழுக்க கடத்த முயல்வது மிகச் சிறந்த முன்னெடுப்பு என்றே சொல்வேன்.

இவ்வாறு குறிப்பிட்ட ஒற்றை நோக்கம் இல்லாத எந்த முயற்சியும் வீண். அது கூடிக் கொண்டாடும் வழக்கமான ஒரு கேளிக்கை தினமாகி விரயமாய்க் கழியும். ‘வாழும் தமிழ் இலக்கிய விழா’ குழுவினரிடையே அவ்வாறான அடிப்படை நோக்கம் மிகத் தெளிவாக இருந்தது.

மொத்தத் நவீனத் தமிழ் இலக்கியத்தையும் உலகுக்கு அறிவிக்கும் பெருநோக்கம் கொண்ட விழா இது. எவ்வாறு சீன அரசாங்கம் ‘லியாங்ஸு பண்பாட்டுக் கருத்தரங்கு’ வழியாக 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கள் கலையையும் பண்பாட்டையும் பிரமாண்டமான தொல்பொருளகங்களின் வழியாகவும் அந்நாகரீகம் உருவான நிலத்தைப் பரமாரித்துக் காட்சிப்படுத்துவதன் வழியாகவும் உலக எழுத்தாளர்களின் கலைஞர்களின் பார்வையில் முன்வைக்கிறதோ அதுபோலவே உலகின் தொன்மை மொழிகளில் ஒன்றான தமிழ், தனது பரிணாமத்தை நவீன இலக்கியத்தில் எவ்வாறு  தக்கவைத்துள்ளது என்றும் அது எந்த உலக மொழி இலக்கியத்திற்கும் சளைக்காமல் தழைத்துள்ளது என்றும் உரக்கக்கூற வேண்டியுள்ளது.

ஆம்! உரக்கக்கூறத்தான் இவ்விழா.

மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்

சொல்வதிலோர் மகிமை இல்லை

திறமான புலமையெனில் வெளி நாட்டோர்

அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

என பாரதியார் முழங்கி நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்தக் கனவை நனைவாக்க தமிழில் மகத்தான ஓர் ஆளுமை பிறந்து வர வேண்டியுள்ளது.

இரா. தண்டாயுதத்தின் உழைப்பைத் தொடர கோகுலும் கோ. சாரங்கபாணியின் கனவைத் தொடர பி.எம்.மூர்த்தியும் உலகுக்கு வந்தது மனிதர்கள் போடும் திட்டங்களால் நிகழ்வதல்ல என 2025 வல்லினம் விருது விழாவின் என் உறுதியான நம்பிக்கையைக் கூறினேன். சுயநலமற்று சமூக மாற்றத்திற்காக உழைப்பவர்களின் சொற்களும் எண்ணங்களும் பிரபஞ்சத்தைச் சுற்றிச் சுற்றி வருபவை. அந்த ஒளிமிக்க எண்ணங்களைத் தாங்கிப்பிடிக்க அவர்களைப் போன்ற பேராளுமைகள் உலகில் அவதரிக்க வேண்டியுள்ளது. அப்படி அவர்கள் வழியாக நிகழும் வரலாற்றுத்தருணங்களை உணரவும் அதைப் போற்றிக்கொண்டாடவும் தனித்த அறிவு தேவையாக உள்ளது.    

***

வாழும் தமிழ் இலக்கிய விழா பிருமாண்டமானது; அதே சமயம் அரசின் நிதி உதவி இல்லாமல் நடைபெறுகிறது. ஒருவேளை இவ்விழாவை மலேசியாவில் செய்திருந்தாலும் ஒருபோதும் அரசின் உதவியை நாடியிருக்க மாட்டேன். அப்படி நாடினால் இதுகுறித்து எவ்வித அறிமுகமும் இல்லாத அரசியல் தலைவர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டிவரும். அந்த அரசியல் தலைவர்கள் பார்வையில் இலக்கியவாதியாக இருப்பவர்களை முதன்மைப் படுத்த வேண்டிவரும். மீண்டும் அது ஒரு கேளிக்கை விழாவாக மாறிவிடும். பெரும்பொருட்செலவில் நடக்கும் இவ்விழா முழுக்க முழுக்க தீவிர இலக்கிய ஆர்வளர்கள் வழங்கும் நிதியின் வழியாகவே சாத்தியமாகி உள்ளது. வெறும் கூடிக்களையும் நிகழ்வாக இல்லாமல்  கலந்துகொள்ளும் படைப்பாளிகளின் ஆக்கங்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. எழுத்தாளர்கள் பங்குகொள்ளும் அரங்குகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. வாசகர்களுடனான சந்திப்புகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.  

நியுயார்க் அக்காதமி ஆஃப் மெடிசினி அரங்குகளில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவில் அமெரிக்கா, கனடா, லண்டன், மலேசியா, சிங்கப்பூர், சுவிஸ்லாந்து, இந்தியா என பல்வேறு நாடுகளைச் சார்ந்த பன்மொழி இலக்கியவாதிகளும் பங்கெடுக்கின்றனர். சமகாலத்தில் தரமான படைப்பாளிகளை வெளிநாட்டு வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் முன் வைப்பது தமிழ் இலக்கியம் உலக வாசகர்கள் மத்தியில் சென்றடைய பாதை அமைப்பதுபோல இன்றைய சமகால பிற மொழி எழுத்தாளர்களுடனான தொடர் உரையாடலுக்கும் வழிவகுக்கும்.   

எனவே ஒரு கொண்டாட்டத்திற்குத் தயாராவோம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...