எம்.கே. குமார் கவிதைகள்

கிணற்றைத் தாண்டி கரையில் ஏறுகிறது

நிலவு

தொடந்துண்டு கொழுத்த தவளை

இயலாமையில் நகர்கிறது.

 

 

ஒற்றைக்குரலில்

ஓங்கிக் கதருகையில்

செவியிழந்தவனின்

விழிபோல

விதிர்ச்சியாய்க் கிடக்கிறது

இரவு.

 

 

அண்மையில் உதித்திருந்த உண்மை

பழைய பொய்களின் எஞ்சியிருக்கும்

சாம்பல்களுக்கிடையில்

படாதபாடு படுகிறது.

சாம்பலிலும்

நழுவி ஓடுகிறது ஒரு துளி.

 

 

விஷத்தில் இறங்குதல்

கழுத்திலே ஊஞ்சலாட்டம்

மரத்தை வேகத்தோடு முத்தமிடல்

கரியமிலவாயுவில் திளைத்தல்

காற்றில் பறத்தல்

என

கற்பனைகளில் விரிகின்றன

தற்போதைய தற்கொலை நினைவுகள்..

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...