ஏ.சாமாட் சைட் (இயற்பெயர்: அப்துல் சாமாட் முகமது சைட்) மலாய் இலக்கிய உலகில் பலராலும் நன்கு அறியப்பட்டவர். இதுவரை முப்பதுக்கும் மேல்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். நாவல், கவிதை, சிறுகதை, இலக்கிய கட்டுரை என்று பல்வேறு தளங்களில் இயங்கக்கூடிய இலக்கிய ஆளுமை. 1985 –ல் தேசிய இலக்கியவாதி அங்கீகாரம் பெற்றது உட்பட பல பட்டங்களைப் பெற்றுள்ளார். மலாக்கா ஆளுனரிடம் டத்தோ பட்டம் பெற்றிருந்தாலும் அதை அவர் தன் பெயருக்கு முன் இணைத்துக் கொண்டதே கிடையாது.
மலாக்காவில் பிறந்து (1935), சிங்கப்பூரில் வளர்ந்தவரான அவர் மலாய் இலக்கிய உலகில் தனி முத்திரை பதித்தவராவார். இலக்கியம் தவிர சமூகம் மற்றும் அரசியல் அக்கரையும் மிகுந்தவர். தன் கருத்துகளை அச்சமோ தயக்கமோ இன்றி வெளிப்படியாகப் பேசக்கூடியவர். பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் துணிவுடன் செயல்படக்கூடியவர். தாடிக்கார கவிஞரான இவர் தனது படைப்புகளால் மட்டுமின்றி தனது தோற்றத்தாலும் பலரால் நன்கு அறியப்பட்டுள்ளது சிறப்பு. நீண்ட சிகையும் தாடியும் கொண்ட இவர் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் மலேசிய தொலைக்காட்சியில் புதிய விதிமுறை ஒன்று நடைமுறைப் படுத்தப்பட்டது. அதன்படி நீண்ட முடியுடன் எந்த ஆண் கலைஞரும் தொலைக் காட்சியில் முகம் காட்ட அனுமதியில்லை. (நீண்ட முடி வைத்திருக்கும் ஆண்கள் சமுதாய சீர்க்கேட்டின் அடையாளமாம்!!). தொலைக்காட்சியில் தோன்ற வேண்டுமானால் முடியை வெட்டுக்கொண்டு வா! என்று தகவல் அமைச்சு கூறிவிட்டது. இமூடா போன்ற பல கலைஞர்கள் கோபப்பட்டாலும் முடியை வெட்டிக் கொண்டனர். ஆனால் சாமாட் சைட் (அப்போது தொலைக்காட்சி இலக்கிய நிகழ்ச்சிகளில் அவர் அதிகம் பங்கெடுப்பது வழக்கம்) தன் சிகை அலங்காராத்தை மாற்றிக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதோடு மலேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் நிறுத்திக் கொண்டார்.
அடிப்படையில் ஓயாத போராட்ட மனம் கொண்ட சாமாட் சைட் தன் இலக்கிய கலை உலகில் இரண்டு முக்கிய போராட்டங்களை நடத்தி உள்ளார். 1990 ஆண்டு கலை போராட்டத்தையும் (Mogok Seni) 2000 ஆண்டில் இலக்கிய போராட்டத்தையும் (Mogok Sastera) நடத்தினார். மலாய் இலக்கிய உலகில் நிலவும் கடுமையான நிர்வாக கட்டுப்பாடுகள், உரிமம் தொடர்பான பிரச்சனைகள் போன்றவைகளால் மனவேதனையும் கோபமும் கொண்ட சாமாட் சைட் தனி ஒரு மனிதனாக தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். பல எழுத்தாளர்களுக்கும் இது பொது பிரச்சனை என்றாலும் சமாட் சைட் தொடங்கிய போராட்டங்களுக்கு ஆதரவு தர முன்வரவில்லை. மேலிடங்களை பகைத்துக் கொள்ள அவர்கள் வழக்கம் போல் தயங்கினர். ஆனாலும் சாமாட் சைட் தன் மனதுக்கு நேர்மையாக நடந்துகொள்ள தவறவில்லை. 2011-ல் ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட ‘பெர்சே’ பேரணியிலும் ஏ.சாமாட் சைட் இதே போன்ற மனநிலையுடனே செயல்பட்டார். இந்த பெர்சே போராட்டத்துக்குப் பின்னணியில் செயல்பட்டவர்களில் மிக முக்கியமானவர்கள் திருமதி அம்பிகா சீனிவாசனும் ஏ. சாமாட் சைட்டும் ஆவர். பெர்சே போராட்டத்தால் கடுமையான அரசியல் சிக்கலுக்குள்ளான ஆளும் கட்சி தலைவர்கள் சமாட் சைட்டை கடுமையாக விமர்சித்ததுடன் அவருக்கு அரசாங்கம் வழங்கிய தேசிய இலக்கியவாதி பட்டத்தையும் மீட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் சாமாட் சைட் தனது இலக்கிய பட்டம் உட்பட தனது குடியுரிமையை பரித்துக் கொண்டாலும் தனக்கு கவலை இல்லை என்று முழங்கினார்.
இவர் படைப்புகளில் அடித்தட்டு மக்களின் போராட்டங்களும் ஆளும் வர்க்கத்திற்கு அடிபணியாத உணர்ச்சியும் மேலிட்டு காணப்படுகின்றன. இரண்டாம் உலப்போரின் பாதிப்புகளும், சிங்கை நகர மக்களின் வாழ்க்கை போராட்டங்களும் இவர் படைப்புகளில் பரவலாகக் காணப்படுகின்றன. ‘சலீனா’ (1961) இவரது புகழ் மிக்க நாவல்களில் ஒன்று. இது இவரது முதல் நாவலும் கூட.
தற்போது 80 வயதை நெருங்கும் ஏ.சாமாட் சைட் வற்றாத தன் இலக்கியப் பணியோடு ‘பெர்சே’ போன்ற அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களிலும் பல்வேறு விமர்சனங்களுக்கு நடுவே தொடர்ந்து துணிவோடு முன்னிலை வகிக்கிறார்.