பதிப்புரிமை: சில கேள்விகள் சில விளக்கங்கள்

விஜயா படம்Copyright – தமிழில் பதிப்புரிமை என்று அழைக்கப்படும் சொல் பரவலாக அனைவராலும் குறிப்பாக பதிப்புத்துறையை சார்ந்தவர்களால் அதிகம் உச்சரிக்கபடும் சொல்லாக இருக்கிறது. பெரும்பாலும் copyright தொடர்பான சர்ச்சைகளும் விவாதங்களும் அவ்வப்போது நாடு தழுவிய அளவிலும் உலக அரங்கிலும் நடந்த வண்ணமாகவே இருந்தாலும்கூட இது தொடர்பான புரிதல் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். உதாரணமாக, பெரும்பான்மையானோர் பதிப்புரிமையை அறிவுதுறை சார்ந்த ஒன்றிற்கு வழங்கப்படும் சட்ட ரீதியிலான பாதுகாப்பாக மட்டுமே கருதுகின்றனர். உண்மையில் பதிப்புரிமையின் சிறப்பையும் தேவையையும் இவ்வளவு சாதாரணமாக எண்ணிவிடுவது நமது படைப்பின் தரத்தை நாமே சந்தேகிப்பதற்கு ஒப்பானதாகும்.

பதிப்புரிமை எனப்படுவது படைப்பாளர் சட்ட ரீதியாக தன் படைப்பின் பயன்பாட்டை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க உருவாக்கப்பட்ட பிரத்தியேகமான உரிமையாகும் (exclusive rights). பதிப்புரிமை எவ்வகையிலும் படைப்பாளருக்கோ அல்லது படைப்புக்கோ பாதுகாப்பு தருவதில்லை. ஒருவருடைய படைப்பு மற்றவர்களால் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் நிலையில் பதிப்புரிமை சட்டத்தின்கீழ் படைப்பாளர் தன்னிடமுள்ள பதிப்புரிமையைக் கொண்டு சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவும் தன் படைப்பை பிறர் பயன்படுத்த தடை விதிக்கவும் உதவுகிறது. மலேசியாவில் பதிப்புரிமை சார்ந்த அனைத்து அம்சங்களும் மலேசிய பதிப்புரிமை சட்டம் 1987க்கு உட்பட்டதாகும். பதிப்புரிமை தொடர்பான புரிதல் ஏற்பட அச்சொல்லின் ஆழ்ந்த அர்த்தத்தையும் பதிப்புரிமையில் இடம்பெறும் வேறு சில சொற்களின் அர்த்தத்தையும் உள்வாங்கிக் கொள்ளுதல் அவசியமாகும்.

பதிப்புரிமை (copyright) – படைப்பாளர் /கண்டுபிடிப்பாளர்/ வடிவமைப்பாளர் ஆகியோர் தங்களது சிந்தனையில்/திட்டத்தில் உருவான படைப்பை/கண்டுபிடிப்பை/ உருவாக்கத்தை/வடிவமைப்பை தான் பயன்படுத்த, அறிவிக்க, பெருக்கம் செய்ய  அல்லது பிறர் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க கொடுக்கப்பட்டிருக்கும் ஒருவகை உரிமையாகும். பதிப்புரிமைச் சட்டத்தின் எவ்வகை கட்டுப்பாடுகளையும் மீறாமல் இப்படைப்புகள் பயன்படுத்தப்படுவதை எப்போதும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

உருவாக்குபவர் (creator) – இது தனிமனிதன் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை அல்லது ஒரு குழுவினரை குறிப்பதாகவும் கொள்ளலாம். தன்னுடைய/ தங்களுடைய சிந்தனை, கற்பனை, ஆளுமை, செயல் திறன் மூலமாக ஒன்றை புதியதாக, தனித்தன்மைமிக்கதாக உருவாக்குபவர்.

உருவாக்கம் (creation) – கலை, இலக்கியம் போன்ற துறைகளில் படைப்பாளர் /கண்டுபிடிப்பாளர்/ வடிவமைப்பாளர் தனது தனித்தன்மையில் உருவாக்கிய அசலான ஒன்று.

பதிப்புரிமையை வைத்திருப்பவர் (copyright holder) – படைப்பாளர் /கண்டுபிடிப்பாளர்/ வடிவமைப்பாளர் போன்ற ஒரு படைப்பின் உண்மையான பதிப்புரிமை பெற்றவரிடமிருந்து ஒப்பந்தம் மூலமாக பதிப்புரிமையைப் பெற்றிருக்கும் வேறொரு நபர்.

அறிவிப்பு (announcement / declaration) – அச்சு இயந்திரங்களின் மூலம் அல்லது இணையம் போன்றவற்றின்வழி ஒரு படைப்பைக் காட்சிக்கு வைத்தல், விற்றல், பகிர்தல், பரப்புதல் அல்லது விநியோகித்தல்.

பெருக்குதல் /விரிவாக்குதல் (multiplication) – படைப்பின்/ கண்டுபிடிப்பின்/ உருவாக்கத்தின்/ வடிவமைப்பின் முழு பகுதியை அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ விரிவாக்குதல்.

சார்பு உரிமை (rights in favor) – இதுவும் copy right தொடர்பான மற்றுமொரு பிரத்தியேக உரிமையாகும் (exclusive rights). அதாவது படைப்பின் பதிப்புரிமை இல்லாத வேறொரு நபர் அப்படைப்பை விரிவாக்கம் செய்யவோ அல்லது காட்சிபடுத்தவோ இவ்வகை உரிமை பயன்படுத்தப்படும். குறிப்பாக ஒலி அல்லது குறல் தொடர்பான படைப்புகளை விரிவாக்கம் செய்தல், பரப்புதல் போன்ற நோக்கங்களுக்காக மறுபதிவு செய்ய இவ்வுரிமை பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு மறுபதிவு செய்யப்படும் குறல்/ஒலி பதிவுகளை விரிவாக்கம் செய்யவும் ஒலிபரப்பவும் இவ்வுரிமையை பதிப்புரிமைப் பெற்றவரிடமிருந்து பெறுவது அவசியமாகிறது.

உரிமம் (license) – பதிப்புரிமை பெற்றவர் / சார்பு உரிமையைப் பெற்றிருப்பவர் தன்னுடைய படைப்பு / தான்பெற்றிருக்கும் ஒலி/குறல் பதிவு மீதான உரிமையின் மூலம் மற்றவர்கள் அதனை அறிவிக்கவோ, பரப்பவோ அனுமதி வழங்கியதற்கான சான்றாகும்.

தொடர்ந்து, இன்றளவிலும் பதிப்புரிமையை முறையாக பதிவு செய்யும் முறைமை மலேசியாவில் இல்லை என்பதை நாம் தெளிவில்கொள்ள வேண்டும். அதாவது ஒரு படைப்பு முழுமைப்பெற்ற பிறகு அப்படைப்பை எந்த அரசாங்க அலுவலகங்கத்திற்கும் கொண்டு சென்று பதிப்புரிமை பெற வேண்டிய கட்டாயங்கள் இதுவரை நடப்பில் இல்லை. மலேசிய பதிப்புரிமை சட்டம் 1987லின்படி குறிப்பிடத்தக்க சில தகுதிகளைப் பெற்றிருக்கும் நிலையில் தானாகவே ஒரு படைப்பு பதிப்புரிமையைப் பெற்றுவிடுகின்றது.

இருப்பினும், படைப்பாளருடைய நலன் கருதி படைப்பில் copyright முத்திரையிட்டு அதன் உரிமையானவரின் பெயரை குறிப்பிடுவது அவசியமாகும். மேலும் எழுத்துப்பூர்வமான சாட்சிகள் வேண்டுமெனில் Akta Akuan Sumpah 1960 என்ற சட்டத்தின்கீழ் சத்தியப் பிரமான கடிதத்தைப் பெற்றுக்கொள்வதும் கூடுதல் பாதுகாப்பாக அமையும்.

பதிப்புரிமையைப் பெற தேவையான சில தகுதிகள்உருவாக்கப்படும் படைப்பு அசலானதாக அல்லது சுயத்தன்மையைப் (originality) பெற்றிருக்க போதுமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை படைப்பு மெய்பிக்க வேண்டும்.

படைப்பு எழுத்து வடிவிலோ, பதிவு செய்யப்பட்டோ அல்லது பொருள் வடிவிலோ அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

படைப்பாளர் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்; அல்லது அப்படைப்பின் முதல் பதிப்பு மலேசியாவில் பதிப்பிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்; அல்லது
Konvensyen Berne-வில் உறுப்பியம் பெற்ற நாடுகளில் படைப்பின் முதல் பதிப்பு பதிப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இலக்கியம், இசை, ஓவியம், திரைப்படம், ஒலிப்பதிவு, ஒலிபரப்பு, பதிப்புத் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த படைப்புகள் அதன் தரம் மற்றும் படைக்கப்பட்டதற்கான நோக்கத்தையும் கடந்து மலேசிய பதிப்புரிமை சட்டம் 1987 பிரிவு 7(1)கீழ் பதிப்புரிமையைப் பெறத் தகுதியுடையதாகின்றன. இருப்பினும், படைப்பினுடைய சுயத்தன்மைக்கு (originality) கண்டிப்பாக முக்கியத்துவம் வழங்கப்படும்.

இதிலிருந்து நாம் தெளிவு பெற வேண்டியது ஒன்றேயாகும். பதிப்புரிமையைப் பெற முயற்சிப்பதற்கு முன்பாக நம் படைப்பு தரமானதுதானா என்பதை முதலில் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், தரமற்ற (சுயத்தை இழந்த) படைப்புக்கு பதிப்புரிமையைப் பெற்றும் பயனேதுமிருக்காது. பிற்காலத்தில் அப்படைப்பு மற்றவர்களால் அனுமதியின்றி வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தப்படும்போது சட்ட ரீதியிலான நடவைக்கையை மேற்கொள்ள முடியாத நிலையை பதிப்புரிமை பெற்றவர் எதிர்நோக்குவர்.

படைப்பின் தரத்தை உறுதிசெய்து கொண்டபின், நாம் அடுத்து கவனிக்க வேண்டியது நம் படைப்பு எத்துறையைச் சார்ந்தது என்பதாகும்.  மலேசிய பதிப்புரிமை சட்டம் 1987லில் ஏழு வகை படைப்புத் துறைகளை மட்டுமே பதிப்புரிமை பெற தகுதியானவைகள் என பட்டியலிட்டுள்ளது. அவை முறையே இலக்கியம், இசை, ஓவியம், திரைப்படம், ஒலிப்பதிவு, ஒலிபரப்பு மற்றும் பதிப்புத்துறை ஆகியனவாகும். இவற்றிற்கு தெளிவான மாதிரிகளையும் இப்பதிப்புரிமை சட்டம் பகுத்து வழங்கியுள்ளது. அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு நம் படைப்பு எவ்வகையினைச் சார்ந்தது என்பதை கண்டறிந்தபின் பதிப்புரிமை கிடைக்குமா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, எவையெல்லாம் இலக்கிய படைப்புகளின்கீழ் அடங்குகின்றன என்பதைச் சற்று விரிவாக காண்போம்.

இலக்கிய வகை படைப்புகளுக்கான மாதிரிகள்

  • நாவல், கதை, புத்தகம், சிற்றேடு, கையெழுத்துப் பிரதிகள் (manuscript), கவிதை மற்றும் இவ்வகையைச் சார்ந்த எழுத்துப் படிவங்கள்.
  • கட்டுரை, சரித்திரம், சுயசரிதை, ஆய்வுக் கட்டுரைகள்.
  • களஞ்சியங்கள், அகராதி, மேற்கோள் நூல்கள் (reference works).
  • கடிதம், அறிக்கை, குறிப்பாணை, மனு.
  • விரிவுரை, உரை, உபதேசம் மற்றும் இவ்வகைச் சார்ந்த எழுத்துப் படிவங்கள்.
  • பார்க்கக்கூடிய அல்லது பார்க்க இயலாத சொற்கள், எண்கள், வடிவங்களாலான அட்டவணை அல்லது வடிவமைப்பு.
  • கணினி நிரல்கள் (computer programmes)
  • மறுமதிப்பு பிரதிகள்

இப்படியாக இசை, ஓவியம், திரைப்படம், ஒலிப்பதிவு ஒலிபரப்பு, பதிப்பு போன்ற துறைகளுக்கும் தனித்தனியே மாதிரிகள் அட்டவணையிடப்பட்டுள்ளன. இந்த ஏழு வகையிலும் சாராத மற்ற துறை சார்ந்த படைப்புகள் மலேசிய பதிப்புரிமை சட்டம் 1987லின்கீழ் பதிப்புரிமையைப் பெற தகுதியானவையல்ல என்பதை இதன்மூலம் நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

தொடர்ந்து, ஒரு பொருளின் அல்லது படைப்பின் பதிப்புரிமைக்குத் தகுதியானவர்/ உரிமையானவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது பற்றி தெளிவடைய கீழ்காணும் சில முறைகளை கவனிக்கவும்.

ஒரு படைப்பு சுய முயற்சியில், சுய திட்டம்/சுய சிந்தனை வெளிபாட்டில் உருவாக்கப்படும் நிலையில் அதன் பதிப்புரிமை படைப்பாளருடையதேயாகும்.
ஒரு படைப்பு ஒரு குறிப்பிட்ட நபரால் திட்டமிடப்பட்டு வேறொருவரின் துணையுடன் செயல்படுத்தப்படும் நிலையில் அப்படைப்பின் பதிப்புரிமை திட்டமிட்டவரின் வசமாகிறது.

*காரணம் உருவாக்கியவர் அப்படைப்பின் உருவாக்கத்திற்கு கருவியாக மட்டுமே இயங்கியவராகிறார்.

படைப்பு ஒரு குறிப்பிட்ட நபரின் கட்டுப்பாட்டின்கீழ் உருவாக்கப்படுகிறது என்றால் அந்நபரே அதன் பதிப்புரிமையைப் பெற்றவராகிறார். மாறாக மேற்கொண்டு ஏதேனும் ஒப்பந்தங்கள் அப்படைப்பை உருவாக்கியவருடன் கையெழுத்திடப்பட்டிருந்தால் அதன்படி பதிப்புரிமை வழங்கப்படும்.

விண்ணப்பத்தின் பேரில் ஒரு படைப்பு உருவாக்கப்படும் நிலையில் படைப்பாளரே அதன் பதிப்புரிமையைப் பெற தகுதியானவராகிறார். மாறாக இரு தரப்பினருக்கும் இடையில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருந்தால் அவ்வொப்பந்தத்தில் இடம்பெற்றிருப்பதைப்போல பதிப்புரிமை வழங்கப்படும்.
ஒரு நிறுவனத்திடம் சேவை ஒப்பந்தத்தின்கீழ் பணி புரியும் படைப்பாளர் அந்நிறுவனத்தின் உதவியுடன் ஒரு படைப்பை உறுவாக்கும் சூழல் ஏற்படும்போது அதன் பதிப்புரிமை அந்நிறுவனத்திற்கே மாற்றம் செய்யப்பட்டுவிடும். இருப்பினும், படைப்பாளர் மற்றும் நிறுவனத்தார் ஆகியோருக்கிடையில் பதிப்புரிமை தவிர்க்கப்படுதல் அல்லது கட்டுப்படுத்தப்படுதல் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருந்தால் அதற்கேற்றார்போல் பதிப்புரிமை வழங்கப்படும்.

படைப்புக்கான பதிப்புரிமையை ஒருவர் படைப்பாளரிடம் முன்பதிவு செய்து வைத்திருந்தால் அப்படைப்பு நிறைவு பெற்ற பிறகு அதன் பதிப்புரிமை முன்பதிவு செய்தவருக்கே மாற்றம் செய்து தரப்படும்.

திரைப்படவியல் (cinematography) மற்றும் கணினி நிரல்கள் (computer programs)போன்றவற்றின் பதிப்புரிமையைப் பெற்றவர்கள் அதன் பயன்பாடு தொடர்பான உரிமையைப் பெறுகின்றனர். அதாவது, இவரின் அனுமதியின் மூலமே இப்படிப்புகளை/கண்டுபிடிப்புகளை வணிக நோக்கத்திற்காகப் பிறர் பயன்படுத்த முடியும்.

*எண் 2 முதல் 7 வரை படைப்பாளரை செய்ய தூண்டியவர், முதலீடு செய்தவர், ஊக்குவித்தவர் போன்றவர்களே அப்படைப்பின் பதிப்புரிமையைப் பெறும்படியாக இருந்தாலும் படைப்பாளர்கள் முறையான கலந்துரையாடலின்வழி ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு தங்களுக்குறிய பதிப்புரிமையை சதவீத அடிப்படையில், மறு பதிப்பு அடிப்படையில் பெற்றுக்கொள்ள முடியும்.

பதிப்புரிமையின் சிறப்புத் தன்மைகள்

  • பதிப்புரிமை எப்போதும் ஒருவரிடம் மட்டுமே நிலைத்திருக்காமல் தேவைக்கேற்ப (பதிப்புரிமையைப் பெற்றவரின் சுய விருப்பத்தின்வழி) மற்றவருக்கு மாற்றம் செய்து தரப்படக்கூடிய ஒன்றாகும்.
  • பதிப்புரிமையை சட்டப்பூர்வமாக வேறொருவருக்கு பரம்பரை சொத்தாக, பரிசாக, மானியமாக, எழுத்துப்பூர்வமான (உயில்) மாற்றம் செய்யவும் விற்கவும் இயலும்.
  • பதிப்புரிமையை மற்றவருக்கு முழுமையாகத்தான் தர வேண்டும் என்ற நிபந்தனைகள் இல்லை. அதனை சிறுசிறு பகுதிகளாக (சதவீத அடிப்படையில்) பிரித்தும் கொடுக்க முடியும்.

பதிப்புரிமை பெறுநருக்கு வழங்கப்படும் சில பிரத்தியேக உரிமைகள் (Exclusive Rights)

இலக்கியம், இசை, ஓவியம், திரைப்படம், ஒலிப்பதிவு, ஒலிபரப்பு, பதிப்பு ஆகிய ஏழு துறைகளில் பதிப்புரிமை பெற்றிருப்பவருக்கு சில குறிப்பிடத்தக்க உரிமைகள் இருப்பதையும் இத்துறை சார்ந்தவர்கள் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். அப்பிரத்தியேக உரிமைகள் பின்வருமாறு:

தனது படைப்பை …

  • எந்த வடிவத்திலும் மறுவெளியீடு செய்யும் உரிமை.
  • மறுபதிப்பு செய்வதற்கான உரிமை.
  • பொதுவில் காட்சிபடுத்துவதற்கான உரிமை.
  • ஒலிபரப்புவதற்கான உரிமை.
  • படைப்பில் ஏதேனும் மாற்றம் அல்லது திருத்தம் செய்வதற்கான உரிமை.
  • கேபிள் (cabel) மூலம் தொடர்பு சாதனங்களுக்குள் கொண்டு செல்லும் உரிமை .

அடுத்து, இப்பதிப்புரிமை எவ்வளவு காலத்திற்கு ஒருவருக்கு உரிமையாகின்றது என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதனை அப்படைப்பு பதிப்பிக்கப்பட்ட ஆண்டு, படைப்பாளரின் தற்போதைய நிலை (உயிர் வாழ்கிறாரா அல்லது இறந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன) போன்றவற்றை வைத்து கணக்கிட முடியும். காரணம், பதிப்புரிமை முடிவடைந்துவிட்ட படைப்பு தொடர்ந்து எந்தவொரு சட்டவரையறைக்கும் உட்படாமல் பொது பயன்பாட்டிற்கு சென்றுவிடும். அதன்பிறகு, அப்படைப்புக்கு எவரும் உரிமை பாராட்ட முடியாது.

பதிப்புரிமையின் கால வரையறை

இலக்கியம், இசை, ஓவியம் (புகைப்படங்கள் தவிர்த்து இதர வகை ஓவியங்கள்) ஆகியவைகளின் படைப்பாளர்களின் ஆயுட்காலம்வரையும்; படைப்பாளரின் மரணத்திற்குப் பிறகு தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் வரையிலும் அவரிடமே நீடித்திருக்கும்.

படைப்பாளரின் இறப்புக்குப் பின்பு பதிப்பிக்கப்படும் படைப்புகள்

படைப்பாளரின் ஆயுட்காலத்திற்குள் அவரது படைப்பு பதிப்பிக்கப்படாமல் இறந்த பிறகு பதிப்பிக்கப்பட்ட படைப்பாயின் அப்படைப்பு பதிப்பிக்கப்பட்ட மறுஆண்டின் தொடக்கத்திலிருந்து தொடங்கி அடுத்த ஐம்பது ஆண்டுகள்வரை பதிப்புரிமை படைப்பாளரைச் சார்ந்ததாகும்.

பெயர் குறிப்பிடப்படாமல் அல்லது புனைப்பெயரில் உருவாக்கப்பட்ட படைப்புகள்

இலக்கியம், இசை மற்றும் ஓவியம் ஆகிய துறை சார்ந்த படைப்புகள் படைப்பாளரின் பெயர் குறிப்பிடப்படாமலும் அல்லது கண்டுபிடிக்க முடியாத புனைப்பெயரிலும் படைக்கப்பட்டிருக்குமாயின் அப்படைப்பு பதிப்பிக்கப்பட்ட மறுஆண்டின் தொடக்கத்திலிருந்து தொடங்கி அடுத்த ஐம்பது ஆண்டுகள்வரை பதிப்புரிமை படைப்பாளரைச் சார்ந்ததாகும்.

இருப்பினும், படைப்பாளர் யார் என தெரிந்துவிடும் நிலையில் அப்படைப்புக்கான பதிப்புரிமை படைப்பாளர்களின் ஆயுட்காலம்வரையும்; படைப்பாளரின் மரணத்திற்குப் பிறகு தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் வரையிலும் அவரிடமே நீடித்திருக்கும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட படைப்பாளரைக் கொண்ட படைப்புகள்

ஒரு படைப்புக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட படைப்பாளர் இருப்பாரேயானால் அவர்களின் ஆயுட்காலம் முழுவதும் பதிப்புரிமை அவர்கள் அனைவரது உரிமையாகும். அவர்களில் யாராவது ஒருவர் முதலில் இறந்து போனாலும்கூட மற்றவரின் ஆயுட்காலம் முடியும்வரை பதிப்புரிமை இணை படைபாளரின் வசமிருக்கும். அப்படைப்பாளரின் மரணத்திற்குப் பிறகு தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் வரையிலும் பதிப்புரிமை மீண்டும் அவரிடமே நீடித்திருக்கும்.

மறுபதிப்புக்கு உட்பட்ட படைப்புகள்

மறுமதிப்புக்கு உட்பட்ட படைப்புகளுக்கு அவை முதன் முதலாக பதிப்பிக்கப்பட்ட மறுஆண்டின் தொடக்கத்திலிருந்து தொடங்கி அடுத்த ஐம்பது ஆண்டுகள்வரை பதிப்புரிமை படைப்பாளரைச் சார்ந்ததாகும். பதிப்புத் துறையை போலவே இதர ஆறு துறை சார்ந்த படைப்புகள் அனைத்தும் அவை முதம் முதலாக பதிப்பிக்கப்பட்ட மறுஆண்டின் தொடக்கத்திலிருந்து தொடங்கி அடுத்த ஐம்பது ஆண்டுகள்வரை பதிப்புரிமை படைப்பாளரிடம் நிலைத்திருக்கும்.

பயனிட்டாளர்களுக்கான உரிமைகளும் சலுகைகளும்

பதிப்புரிமை முழுக்க முழுக்க படைப்பாளரின் உழைப்பை அங்கீகரித்து அவரின் சிந்தனையில் உதயமான படைப்பினுடைய பயன்பாட்டு உரிமைகளை தன்வசமே வைத்துக்கொள்ள உறுவாக்கப்பட்டிருக்கிறது என்பதை இப்போது ஓரளவேனும் புரிந்து கொண்டிருப்போம். அப்படியென்றால் பொதுமக்கள் எப்படித்தான் ஒரு படைப்பை பயன்படுத்துவது? ஒவ்வொரு முறை பயன்படுத்த நேரிடும்போதும் படைப்பாளரை நாடிச் சென்று அவரின் அனுமதியை பெற்றாக வேண்டுமா? போன்ற கேள்விகள் எழலாம்.

எல்லா துறை சார்ந்த படைப்புகளும், உருவாக்கங்களும் பயனிட்டாளர்கள் எனும் அடிப்படையில் பொதுமக்களை குறிவைத்தே படைக்கப்படுகின்றன. மலேசிய பதிப்புரிமை சட்டம் 1987 படைப்பாளருக்கு சில பிரத்தியேக உரிமைகளை வழங்கியிருக்கும் அதேவேளை பயனிட்டாளர்களின் தேவைக்கேற்ப சில விதிவிலக்குகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ஆராய்ச்சி, திறனாய்வு, விமர்சனம், சுய ஆய்வு, தற்கால நடப்புகளுக்கான தகவல் சேகரிப்பு, போன்ற வணிக நோக்கத்திற்கு உட்படாத செயல்பாடுகள் அனைத்திற்கும் இவ்வேழு துறை சார்ந்த படைப்புகளையும் எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி பயன்படுத்தலாம். அதேவேளை, மேற்கூறிய அனைத்து செயல்பாடுகளும் பொது பார்வைக்கு கொண்டுவரப்படுமானால் எப்படைப்பின் துணைக்கொண்டு இவை உருவாக்கப்பட்டன என்பதை குறிப்பிடுவது அவசியமாகும். குறைந்தபட்சம் படைப்பின் தலைப்பு மற்றும் படைப்பாளரின் பெயரை குறிப்பிடுவது அவசியமாகும்.

பொறுப்பற்ற தரப்பினர் வணிக நோக்கத்திற்காக மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டும் சூழல் பெருகிவிட்ட நிலையில் பதிப்புரிமையின் சில கட்டுப்பாடுகள் மிக மிக அவசியமாகிவிட்டன. தவிர, பதிப்புரிமை சட்டம் 1987ஐ மீறாத வண்ணம் பார்த்துக் கொள்வதன்மூலம் பயனிட்டாளர்கள் கட்டற்ற பயனை அடைவது உறுதி.

பதிப்புரிமை அமலாக்க முறை

முன்னறிவிப்பு செய்யாமலும், அனுமதி பெறாமலும், வணிக நோக்கத்திற்காகவும் நம் படைப்பு பயன்படுத்தப்படும்போது அதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்து சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.

அது தவிர, நீதிமன்றத்தின்மூலம் வழக்கு தொடுத்து இழப்பீட்டையும் பெற முடியும். இவ்வாறு நீதிமன்றத்தின் உதவியை நாடும் பதிப்புரிமை பெற்ற படைப்பாளரே அதற்கான முழு செலவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். தொடர்ந்து, மலேசியாவில் நடப்பிலிருக்கும் உரிமையியல் தீர்வழிகள் (civil remedies) பதிப்புரிமை பெற்றவருக்கு எவ்வாறு இழப்பீட்டைப் பெற்று தருகின்றன என்பதை காண்போம்.

தடைகள் (Injunctions) – இவை குற்றஞ்சாட்டப்பட்டவர் நம் படைப்பை பயன்படுத்த விதிக்கப்படும் சில வகை தடைகள்.

  • இடைக்காலத் தடை உத்தரவு (Interlocutory Injunction)
  • நிரந்தர தடை உத்தரவு (Permanent Injunction)
  • Quia Timet
  • பதிப்புரிமையை மீறியதற்கான இழப்பீடு

தனது படைப்பை அனுமதியின்றி வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்திய நபரிடம் இழப்பீட்டு தொகையை நீதிமன்றத்தின்மூலம் கேட்டு பெறும் முறை.

கூடுதல் இழப்பீட்டு தொகை

பதிப்புரிமை பெற்றவருக்கு பயனுள்ள நிவாரணம் வழங்க இயலாத நிலையில் நீதிமன்றமே இழப்பீட்டு நிவாரணத்தை நிர்ணயித்து குற்றம்சாட்டப்பட்டவரிமிருந்து பெற்றுத் தரும் முறை.

இலாப கணக்கு

குறிப்பிடத்தக்க நபர் ஒரு படைப்பை அனுமதியின்றி வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தியிருப்பின் அந்நபரிடம் தன் படைப்பை பயன்படுத்தியதிலிருந்து பெற்ற லாபத்திற்கான கணக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கும்படி கேட்கும் முறை. இதன்மூலம், பதிப்புரிமை பெற்றவருக்குச் சேர வேண்டிய இலாபத் தொகையை நீதிமன்றமே கணக்கிட்டு வழங்கும்.

படைப்பை மீட்டல்

பதிப்புரிமை பெற்றவர் இலாப நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்ட தன் படைப்பை நீதிமன்றத்தின்மூலம் பெற்று முற்றிலும் அழித்துவிடும் முறையாகும். இது தடைவிதிக்கப்பட்ட படைப்புகளுக்கு பொறுத்தமான தீர்ப்பு முறையாகும்.

பதிப்புரிமை பெற்றவர் நீதிமன்றத்தின்மூலம் தன் உழைப்புக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக இழப்பீடு பெறும் அதேவேளை, மலேசிய பதிப்புரிமை சட்டம் 1987ஐ மீறியதற்காக குற்றம் சாட்டப்பட்டவர் வேறு சில தண்டனைகளைப் பெற நேரிடும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. முதல் முறை இவ்வகை குற்றச்செயலை மேற்கொண்டிருப்பின் ம.ரி. 2,000 – ம.ரி 20,000க்கு மேற்போகாத அபராதமும், மீண்டும் இக்குற்றச்செயல் தொடர்வது கண்டறியப்பட்டால் ம.ரி4,000 – ம.ரி.40,000 மேற்போகாத அபராதமும் பத்து ஆண்டுகள் மேற்போகாத சிறை தண்டனையும் குற்றஞ்சாட்டப் பட்டவர் எதிர்கொள்ள நேரிடும்.

இவற்றோடு மேலும், பதிப்புரிமை பெற்ற படைப்பை பயன்படுத்துவதில் எழும் சிக்கல்களை களையவும் மற்ற மொழி படைப்புகளை தேசிய மொழியில் பொழிபெயர்ப்பு பதிப்பு செய்வதற்கான உரிமத்தை (lisence) வழங்குதல் போன்றவற்றிக்காக மலேசிய பதிப்புரிமை சட்டம் 1987 ‘பதிப்புரிமை நீதிமன்றம்’ (Copyright Tribunal) என்ற ஒன்றை தற்காலிகமாக நிறுவ வழிவகைகளையும் உள்ளன.

இப்பதிப்புரிமை நீதிமன்றம் நிறுவப்படுவதன்வழி பயனிட்டாளர் மற்றும் பதிப்புரிமை பெற்றவர் ஆகியோருக்கிடையில் சம அளவிலான உரிமைகள் இருப்பதை உறுதிசெய்துகொள்ள முடியும். குழப்பங்கள், சர்ச்சைகள், பெரும்பாலும் ராயல்டி சார்ந்த சர்ச்சைகள், உரிமத்தை மாற்றம் செய்தல் அல்லது புதுப்பித்தல் தொடர்பான சர்ச்சைகள், மொழிபெயர்ப்பு செய்வதில் அனுமதி பெறும் சிக்கல்கள் போன்ற வழக்குகளை இந்நீதிமன்றத்தில் பதிவு செய்து தீர்வு காணலாம்.

முடிவாக

உருவாக்கப்படும் ஒவ்வொரு படைப்பிலும் தெளிவாக பதிப்புரிமை பெற்றவரின் பெயரை குறிப்பிட்டு, Akta Akuan Sumpah 1960 எனும் சட்டத்தின்கீழ் சத்தியப் பிரமான கடிதத்தையும் பெற்று வைத்துக்கொள்வதே இன்றைய சூழலில் அறிவுசார்ந்த செயலாகும். அதேவேளை, பதிப்புரிமையை வேரொருவருக்கு மாற்றம் செய்து தரும்போதும் அதனை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து கொள்வதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

முடிவாக, பதிப்புரிமை பெற தகுதியான ஏழு துறைகளுள் இலக்கியம் மற்றும் ஓவியம் ஆகிய இவ்விரு துறைகளும் தமிழ் சூழலில் பெருமளவில் லாபத்தை கொடுக்கவியலாத துறைகளாக இருக்கின்றன. நிலைமை இவ்வாறு இருக்க, ராயல்டி மற்றும் பதிப்புரிமை போன்றவற்றில் அலட்சியம் காட்டுவது பிறரை நம் உழைப்பில் குளிர்காய விடுவதோடு நமது உரிமையை பெற நாமே தடையாக இருப்பது போலாகிவிடும். பதிப்புரிமை சட்டத்திற்கு புறம்பாக எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படாத காலம் வரை ஒருவருக்கு அதன் முக்கியத்துவம் குறித்து பெரிய அளவில் பிரக்ஞை இல்லாமால் போகலாம். பிற்காலத்தில் நம் படைப்பின்மூலம் பிறர் கொல்லை லாபம் அடைய நேரிடும்போது பதிப்புரிமையின் முக்கியத்துவத்தைப்பற்றி அறிய நேரிடும். காலம் தாழ்த்தி சிந்தித்தும் வருந்தியும் பயனேதுமில்லை. பதிப்புரிமையை முறையாக படைப்பிலும், சட்டப்பூர்வமாகவும் ஆவணப்படுத்தி வைப்பதை எதிர்கால இலாப,நட்ட நோக்கத்தையும் கடந்து குறைந்தபட்சம் நம் உழைப்புக்கான அங்கீகாரமாகவாவது கருதி மேற்கொள்ளலாமே.

மேற்கோள் நூல்கள்

  • Copyrights act (http://www.mipa.org.my/copyright.html)
  • Malaysian Intellectual Property Association (http://www.mipa.org.my/copyright.html).
  • Law of Malaysia Act 332 [Copyright Act 1987] Reprint 2001.
  • (http://www.swinburne.edu.my/docs/library/copyright_act_1987.pdf)
  • Khaw Lake Tee. (2004). Copyright Law in Malaysia: Does the Balance Hold?. Journal of Malaysian and Comparative Law. Doi: http://www.commonlii.org/my/journals/JMCL/2004/2.html

2 comments for “பதிப்புரிமை: சில கேள்விகள் சில விளக்கங்கள்

  1. Sivakami V
    March 19, 2023 at 3:41 pm

    நன்று..

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...