Plagiarism: அறிவுத் திருட்டின் சில மேற்கோள்கள்

vijayaஅறிவுத் திருட்டு (plagiarism) எனும் சொல் எழுத்துத் துறை சார்ந்த திருட்டுகளை சுட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் சொல்லாகும். இவ்வாறு சொன்னவுடன் எழுத்துக்களைத் திருட முடியுமா என்ற கேள்வி எழலாம். எழுத்து வடிவம்பெறும் ஒவ்வொன்றும் ஒருவரின் அனுபவம், கற்றல் பேறு, சிந்தனையாற்றல் ஆகியவற்றின் வழியாகத் தோன்றிய அறிவுசார்ந்த சொத்தாகும். அதனை பிறர் சுய லாபத்திற்காகப் பயன்படுத்தும்போது திருட்டாகவே கருதப்படுகிறது. இவ்வாறு அறிவுத் திருட்டுக்கு நெருங்கியத் தொடர்புடையத் துறைகளாக கல்வித் துறை மற்றும் பத்திரிக்கை துறை ஆகியவை திகழ்கின்றன. இவ்விரு துறைகளிலேயே அதிக அறிவுத் திருட்டுகள் நிகழ்வதையும் மறுப்பதற்கில்லை.

அறிவுத் திருட்டை ஒருவித ஒழுக்க மீறலாகவும், அறிவுதுறை சார்ந்த மோசடியாகவும் நாம் புரிந்துகொள்ளலாம். அறிவுத் திருட்டு நிகழ்கின்ற தருணங்களிலெல்லாம் குற்றவாளியாகக் கருதப்படுபவர்களுக்கு அது தொடர்பான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளதைக் காண முடிகின்றது. தெரிந்தே அறிவுத் திருட்டைச் செய்பவர்களுக்கு மத்தியில் தெரியாமல் அல்லது எதிர்பாராத விதமாக அறிவுத் திருட்டைச் செய்துவிடுபவர்களும் உண்டு. அல்லது அறிவுத் திருட்டை மேற்கொள்வதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இருப்பதாலும் இக்குற்றச்செயல் பரவலாக காணப்படுகின்றது.

ஆய்வுகளும் புதுப்புது கண்டுபிடிப்புகளும் பெருகிவிட்ட நிலையில் அறிவுத் திருட்டு தொடர்பான தெளிவு இல்லாமல் இருப்பது மிகப் பெரிய குறைபாடாகவே கருதப்படும். ஒரு துறையில் ஆய்வினை மேற்கொள்பவருக்கு அத்துறை சார்ந்த அடிப்படை அறிவு எவ்வளவு அவசியமோ அதே அளவு முக்கியத்துவத்தை அறிவுத் திருட்டு தொடர்பான விழிப்புணர்வும் பெருகிறது. அறிவுத் திருட்டை சதவீத அடிப்படையில் மிகத் துள்ளியமாகக் கண்டுபிடிக்கும் மென்பொருள்கள் வந்துவிட்ட இக்காலத்தில் ஓர் ஆய்வின் தரம் அதன் சுயத்தன்மையை பொருத்தே அமைகின்றது என்பதை நாம் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.

அறிவுத் திருட்டு என்றால் என்ன?

அறிவுத் திருட்டு எனப்படுவது ஒருவரின் கருத்து, மொழி மற்றும் தகவல்களைத் திருடுவதாகும். எல்லாவித ஆய்வுகளுக்கும் மற்றவருடைய கருத்துக்களை படிக்க, மீள்பார்வை செய்ய, தேவைப்படின் சொந்த படைப்பில் பதிவு செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அவ்வாறு மீள்பதிவு செய்யும்போது அம்மூலப் பதிவின் உரிமையாளரின் உழைப்பையும் கண்டுபிடிப்பையும் மதிக்கும் வகையில் மேற்கோள் காட்டுவது அவசியம். அப்படி செய்யத் தவறும் தருணத்தில்தான் அறிவுத் திருட்டு நிகழ்கிறது.

எவையெல்லாம் அறிவுத் திருட்டு என்று வகைப்படுத்தப் படுகின்றன?

1. மற்றவருடைய கருத்தை தனது சொந்தக் கருத்து என்று முன்வைப்பது
2.மற்றவருடைய சொற்களை பயன்படுத்திவிட்டு மேற்கோள் காட்டாமல் விடுவது
3.மற்றவருடைய கருத்தைப் பொழிப்புரை செய்து மேற்கோள் காட்டாமல் விடுவது
4. மற்றவருடைய ஆய்வை தன்னுடையதாக காட்டிக் கொள்வது
5. பிறர் செய்த ஆய்வை தான் மேற்கொண்டதாக கூறி பாசாங்கு செய்வது

அறிவுத் திருட்டு எவ்வாறு கண்டறியப்படுகிறது?

ஆய்வியலாளர்களின் படைப்புகள் Turnitin போன்ற மென்பொருட்களின் உதவியுடன் மிகத் துள்ளியமாகக் கண்டறியப்படும். பெரும்பாலும் ஆய்வுக் கட்டுரைகளை மதிப்பீடு செய்பவர்கள் அந்த துறையில் வெளிவந்துள்ள பெரும்பாலானத் தரவுகளை வாசித்திருக்கும் சாத்தியம் அதிகம் உள்ளதால் மிக சுலபமாக அறிவுத் திருட்டு நிகழ்துள்ளதைக் கண்டுபிடிக்க முடியும். மேலும், ஆய்வுக்குள் பொருத்துமில்லாத வாக்கிய அல்லது கருத்து திணிப்புகள் இருக்கும்போதும் அக்கட்டுரையில் அறிவுத் திருட்டு நிகழ்திருபதற்கான சாத்தியங்கள் இருப்பதை உணரலாம்.

அறிவுத் திருட்டினால் ஏற்படும் விளைவுகள்

அறிவுத் திருட்டு என்பதன் பொருள் விளக்கத்தை தெரிந்து கொண்டவுடன் அதனைச் செய்வதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி விளக்க வேண்டுய முக்கிய கடப்பாடு இங்குள்ளது. இன்றளவுலும் மலேசியாவில் குறிப்பாக இந்திய சமூகத்தில் மாணவ ஆய்வியலாளர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள், முதுகலை பட்டபடிப்பு மாணவர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் இந்த அறிவுத் திருட்டில் மூழ்கிப்போய் கிடப்பதால் இதன் விளைவுகளைப் பற்றி முதலில் கூறுவது அவசியமாகும்.

(1) நன்மதிப்பு கெடும்

அறிவுத் திருட்டு மேற்கொள்ளப் பட்டிருப்பது உறுதி செய்யப்படும் நிலையில் ஒரு ஆய்வியலாளர் இதுவரை பெற்றிருக்கும் சாதனைகள் அனைத்து கேள்விகுட்படுத்தப்படும். இனி தொடர்ந்து அவர் வேறெந்த ஆய்வுகளை எத்துணை சிறத்தை எடுத்து படைத்தாலும் சந்தேகக் கண்ணுடனேயே பார்க்கப்படும். ஆசிரியர் அல்லது விரிவுரையாளர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களின் தொழில்சார்ந்த நன்மதிப்பு கெட்டு மாணவர்களிடன் மோசமான கருத்தாக்கத்தை உருவாக்கி விடும். மேலும், தொழில் சார்ந்த உயர்வுகள், பதவிகள் அனைத்தும் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.

(2) அங்கீகாரங்கள் மீட்டுக்கொள்ளப்படும்

குறிப்பிடத்தக்க ஆய்வுக்கு ஏதேனும் விருதுகள் அல்லது பரிசுகள் வழங்கப்பட்டிருந்தால் அவை உடனடியாக மீட்டுக்கொள்ளப்படும். பல்கலைக் கழக மாணவர்களாக இருந்தால் அவர்களின் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் மீட்டுக்கொள்ளப்படும். சோதனை நிமித்தமாக கொடுக்கப்பட்ட ஆய்வில் அறிவுத் திருட்டு மேற்கொள்ளப் பட்டிருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அச்சோதனையிலிருந்து மாணவர்கள் நீக்கப்படுவார்கள்.

(3) மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள்

அறிவுத் திருட்டு ‘கிரிமினல்’ வகை சார்ந்த குற்றமாதலால் அதன் சட்ட நடவடிக்கைகள் யாவும் சற்று கடுமையானதாகவே இருக்கும். முதலில் படைப்பாளர் தன் படைப்பின் காப்புரிமையை (copyright) இழந்து விடுகிறார். மூலப் படைப்பின் உரிமயாளர் அறிவுத் திருட்டு செய்தவரின்மீது வழக்கு தொடுத்து தண்டனைப் பெற்றுத் தரவும் இழப்பீட்டுத் தொகை பெறவும் முடியும். பிழைப்புக்காக எழுத்துப் பணியில் ஈடுபடுபவர்கள் (எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள்) அறிவுத் திருட்டு தொடர்பான செயல்பாடுகளில் சற்று விழிப்புடனே இருப்பது நல்லது.

இனி தொடர்ந்து அறிவுத் திருட்டின் வகைகளைக் காண்போம். பெரும்பாலானவர்கள் தாங்கள் அறிவுத் திருட்டைச் செய்துக் கொண்டிருப்பதை உணராமலேயே தொடர்ந்து அத்தவற்றைச் செய்கிறார்கள். எனவே, எவையெல்லாம் அறிவுத் திருட்டாகக் கூறப்படுகிறது என்பதை அறிந்து கொள்வதன்மூலம் இனிவரும் காலங்களில் அத்தவறு நிகழாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள முடியும்.

ஐந்து வகை அறிவுத் திருட்டுகள்

1. மூலக்கருத்தை அப்படியே தன் படைப்பில் பயன்படுத்துதல்

வேறொரு மூலத்திலிருந்து எடுக்கப்படும் சொற்றொடரை எந்த ஒரு மாற்றமும் இன்றி அப்படியே நம்முடைய படைப்பில் இணைக்கும்போது கண்டிப்பாக அதற்குறிய மேற்கோள் குறிகளை இட்டு (“ ”) , (‘ ’) அச்சொற்றொடரின் மூலத்தைக் குறிப்பிட வேண்டும். அதாவது, பதிவு செய்யப்பட்ட சொற்றொடரின் உரிமையாளரின் பெயர், ஆண்டு, புத்தகத்தின் தலைப்பு மற்றும் பக்கம் ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

மாறாக, பத்தி அமைப்பு முறையில் மூலக்கருத்து இடம்பெற்றிருந்தால் அவ்வாக்கியத்தின் இறுதியில் உரிமையாளரின் பெயர், புத்தகத்தின் தலைப்பு மற்றும் பக்கம் ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். இவ்வாறு செய்யாமல் விடும்போது அப்பகுதி அறிவுத் திருட்டுக்கு உட்பட்டதாக கருதப்படும்.

இதனை APA மேற்கோள் குறிப்பு வடிவத்தைப் பயன்படுத்தி உதாரணங்களின் மூலம் காண்போம்.

பத்தியில் இடம்பெறாமல் தனித்து இருக்கும் மூலக் கருத்து/பதிவு:

“…. பொதியின் முனிவர் புரைவரை கீறி மிதுனம் அடைய விரிகதிர் வேனில் எதிர்வரவு மாரி இயைகென இவ்வாற்றான் புரைகெழு வையம் பொழிமழை தாழ…” (பரிபாடல், 11.11-14)

மேலுள்ள பரிபாடல் பகுதியில் வட்டமிடப்பட்டுள்ள இரட்டை மேற்கோள் குறிகள் அப்பாடல் வேறொரு மூலத்திலிருந்து எடுக்கப்படுள்ளதைத் தெளிவாக குறிக்கின்றது. இரட்டை மேற்கோள் குறிகளைத் தொடர்ந்து அப்பாடல் இடம்பெற்றிருக்கும் பகுதியும்/பாடலின் எண்ணையும் தெளிவாகக் குறிக்கிறது. இவ்வாறு செய்வதோடு துணைநூல் பட்டியலில் இப்புத்தகத்தின் முழுமையான குறிப்பையும் சேர்ப்பது அவசியமாகும். இவற்றில் ஏதாவது ஒன்று விடுபட்டிருந்தாலும் அது அறிவுத் திருட்டுக்கு உட்பட்டப் பகுதியாகிவிடும்.

பத்தி அமைப்பு முறையில் மூலக்கருத்து இடம்பெற்றிருந்தால் பின்வரும் வழிமுறையைப் பின்பற்ற வேண்டும்.

இன்றையளவில் மருத்துவ அறிவியலில் சோதனை முறை (experimental) அங்கத்துவம் பெற்றுள்ளது. அன்று, பெரும்பாலும் பட்டறிவு பயன்பட்ட போதிலும், சோதனை முறை கையாளப்பட்டதற்கு சான்றாக, மனித இரத்தத்தை எடுத்து நாய் அல்லது காக்கைக்குக் கொடுத்து அதன் தன்மையை அறிந்ததைக் குறிக்கலாம் (மருத்துவர் சரகர், தமிழ் வளர்க்கும் அறிவியல், முதல் பதிப்பு 2009, ப.2772-278).

 மேலுள்ள பத்தியில் அடிக்கோடிடப்பட்ட பகுதி அவ்வாக்கியம் எடுக்கப்பட்டப் பகுதியை (அச்சொற்றொடரின் மூலத்தை) தெளிவாக குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். இவ்வாறு செய்வதோடு துணைநூல் பட்டியலில் இப்புத்தகத்தின் முழுமையான குறிப்பையும் சேர்ப்பது அவசியமாகும். இவற்றில் ஏதாவது ஒன்று விடுபட்டிருந்தாலும் அது அறிவுத் திருட்டுக்கு உட்பட்டப் பகுதியாக மாறிவிடும்.

துணைநூல் பட்டியல்

  1. டாக்டர் கதிர் முருகு. (2009). பெரும்பாணாற்றுப்படை, சென்னை: சாரதா பதிப்பகம்.
  2. மருத்துவர் சரகர். (2009). தமிழ் வளர்க்கும் அறிவியல், சென்னை: சாரதா பதிப்பகம்.
  3. புலியூர் கேசிகன். (2009). பரிபாடல், சென்னை: சாரதா பதிப்பகம்.

2. மூலத்திலிருந்து பெறப்பட்ட வாக்கியங்களை மாற்றி அமைத்தல்

குறிப்பிட்ட மூலத்திலிருந்து எடுக்கப்பட்ட வாக்கியத்தை அப்படியே முழுமையாகப் பயன்படுத்தாமல், சொற்களில் மட்டும் சில மாற்றங்களைச் செய்து தன் சொந்த கருத்தைப் போல பயன்படுத்துவதும் அறிவுத் திருட்டாகும். முன்பே பார்த்தது போல பிற மூலங்களிலிருந்து ஏதேனும் கருத்தை பயன்படுத்தும் நிலையில் கண்டிப்பாக மேற்கோள் குறிகளைப் பயன்படுத்துவது அவசியமாகும்.

பெரும்பாலான சூழலில் மூலக் கட்டுரைகளிலிருந்து எடுக்கப்படும் கருத்தை மீண்டும் சொந்த நடையில் எழுதும்போது அதற்கான மேற்கோள் நூல் குறித்த விபரங்களைப் பலர் குறிப்பிடாமல் விட்டுவிடுவதுண்டு. மூலக் கருத்தைத் திரித்து சொந்த மொழிநடையில் எழுதுவது வேறு ஒருவரின் உழைப்பைச் சுரண்டுவதற்கு ஒப்பானதாகும்.

மூலக் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:

இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் விமானங்களின் பயன்பாடு குறித்து நுணுக்கமாக கையாளப்படவில்லை எனும் கூற்றினையும் முன் வைக்கின்றனர். இராமாயணத்தில் புகழ்ந்துரைக்கப்பட்ட ‘புட்பக விமானம்’ பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருந்தாலும், அவ்விமானமானது மந்திர தந்திர செயலைக் கொண்டு பறக்கும் பண்போடு நின்றுவிட்டது. தொழில்நுட்ப சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை.

மூலம்: நவீன் செல்வங்களை. (2014). தமிழர் அறிவியலும் சில சந்தேகங்களும். https://vallinam.com.my/version2/?p=1101

அறிவுத் திருட்டு செய்யப்பட்ட பகுதி பின்வருமாறு:

இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதைக் குறித்து சான்றுகளுடன் எங்கும் ஆதாரப்பூர்வமாக குறிப்பிடப்படவில்லை என்பதை ஆய்வியலாளர்கள் கூறுகின்றனர். எந்தவொரு தொழில் நுட்ப பயன்பாடுமின்றி அவை முற்றிலும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மந்திர தந்திர முறையில் பறந்தவையாக மட்டுமே கொள்ளலாம்.

 இப்பகுதி முழுமுற்றிலும் புதிய கருத்துப் பதிவைப் போலவே தோன்றினாலும் சற்றே கூர்ந்து கவனித்தால் நவின் செல்வங்களை அவர்களின் தமிழர் அறிவியலும் சில சந்தேகங்களும் எனும் ஆய்வுக் கட்டுரையிலிருந்து திரித்து சொந்த நடையில் எழுதப்பட்டிருப்பதை உணரலாம். இவ்வகை அறிவுத் திருட்டானது சுலபத்தில் கண்டுபிடிக்கபட முடியாதது எனும் எண்ணத்தில் அதிகமானோர் மேற்கோள் குறிப்புகளை முறையாக பதிவு செய்யாமல் விட்டுவிடுகின்றனர்.

இருப்பினும், என்றாவது இத்திருட்டு கண்டுபிடிக்கப்படின் மூலக் கட்டுரையின் உரிமையாளர் தன் படைப்பைத் திருடியதற்கான இழப்பீட்டுத் தொகையைக் கோர முடியும். அல்லது அவ்வரிவுத் திருட்டினை மேற்கொண்டவர் தனது படைப்பை மீட்டுக்கொள்ள வேண்டிய சூழலும் உண்டாகலாம்.

3. வடிவத் திருட்டு

மூலப் படைப்பை அதன் பாணியிலேயே வார்த்தைக்கு வார்த்தை அல்லது வாக்கியத்திற்கு வாக்கியம் எடுத்தெழுதுவதும் அறிவு திருட்டு என்பதை இதுவரை கண்டோம். இதிலிருந்து சற்று வேறுபட்டு சில வகை அறிவுத் திருட்டுகளும் உண்டு. அவற்றுள் ஒன்றுதான் வடிவத் திருட்டு என்பதாகும். மேற்கூறிய இருவகை அறிவு திருட்டோடு ஒப்பிடுகையில் வடிவத் திருட்டு என்பது பெருமளவு மதி நுட்பத்தினுடனேயே கையாளப்படுகிறது.

இவ்வகையின்கீழ் ஒரு படைப்பு முற்றிலும் வார்த்தை வடிவில் அப்படியே திருடப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, மூலப் படைப்பின் வடிவம் திருடப்பட்டிருக்கும். தொடர்ந்து இதனை ஒரு உதாரணத்துடன் சற்று விரிவாக காண்போம்.

மூலக் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:

திரைப்படங்களின் நிலை இன்னும் மோசம். மிக அண்மையில் வெளிவந்த ‘மெல்ல திறந்தது கதவு’ படத்தை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மனப்பிறழ்வுக்குள்ளாகிறாள். அவளை வல்லுறவு செய்தவன் இறுதியில் கைது செய்யப்படுகிறான். இந்த ஒற்றை வரிக் கதையை ஜவ்வுபோல இழுத்துச் சொல்லியிருப்பார்கள். மலேசிய ரசிகன் ஒருவனுக்கு இப்படம் புதுமையாக இருக்கும். காரணம் அதன் காட்சி அமைப்பு மற்றும் கதையின் திருப்பம் எல்லாம் சுவாரசியத்தைக் கூட்டலாம். ஆனால், வல்லிறவு செய்தவன் ஒரே நேரத்தில் இரு பெண்களை பாலியல் இச்சைக்கு உட்படுத்துகிறான். அவனது நியாயம் என்ன? அவனுக்கும் இந்த சமூகத்துக்கும் என்ன சம்பந்தம்? நமது திரைப்பட இயக்குனர்களிடம் வாழ்வு குறித்த தேடல்களும் கேல்விகளும் இல்லாதது பெரிய வெறுமையை ஏற்படுத்தி வைத்துள்ளது.

மூலம்: நவீன் மனோகரன். (2014). போலி அறிவுவாதமும் மலேசியக் கலை உலகமும். https://vallinam.com.my/version2/?p=1218

வடிவத் திருட்டு செய்யப்பட்ட பகுதி பின்வருமாறு:

மலேசியத் திரைப்படங்களின் நிலை இன்னமும் மாற்றத்திற்கு உட்படவில்லை என்பதை ‘மெல்ல திறந்தது கதவு’ எனும் படத்தின் கதையோட்டத்தை வைத்து கணிக்க முடிகின்றது. பெண்ணொருத்தியை பாலியல் வல்லிறவுக்கு உட்படுத்திய இளைஞன் சட்டத்தின் முன்பு குற்றவாளியாக்கப் படுகிறான். வழக்கம் போல, அவ்விளைஞனை குற்றவாளியாகக் காட்டி கதையை முடிக்கிறார்கள். அந்த பாலியல் குற்றவாளியை அவ்வாறு செய்யத் தூண்டியது எது? இச்சமூகத்தில் அவனுடைய அங்கத்துவன் என்ன? இவற்றை தெளிவில்லாமல் ஒரே நேர் கோட்டில் கதையை நகர்த்தி சென்றிருக்கும் இயக்குனரிடம் வாழ்வு குறித்த தேடல்களும் கேள்விகளும் இல்லாததை தெளிவாகக் காண முடிகிறது.

இவ்விடம் எந்தவொரு வாக்கியமும் முழுமையாக எடுக்கப்படவில்லை என்பதைக் காணலாம். ஆனால் ஓரிரு இடங்களில் மூலப் பத்தியில் இருக்கும் வாக்கியங்கள் சற்று திரித்து எழுதப்பட்டிருப்பதை போலவும் இருக்கிறது. உண்மையில் மூலக் கதையின் கருத்தும் அதன் இயல்பான வடிவமும் அப்படியே நகல் செய்யப்பட்டுள்ளதை நன்கு கூர்ந்து கவனித்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

மூலப் பத்தியில் பயன்படுத்தப்பட்ட வடிவம்:

1. திரைப்படங்களின் மோசமான நிலை
2. திரைப்படத்தில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவு குறித்த செய்தி
3. சில கேள்விகள்
4. இயக்குனர்களின் மொண்ணைத்தனம்

மூலப் பத்தியின் வடிவமைப்பு மேற்கூறப்பட்டுள்ள நான்கு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப் பெற்றது. அதனைத் தன் சொந்த கருத்துபோல பயன்படுத்தும் முயற்சியில் பத்தியின் வடிவத்தில் எந்தவொரு மாற்றமுமின்றி வெறும் சொல், வாக்கிய விளையாட்டுகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. இதனையே மதிநுட்பம் மிகுந்த அறிவுத் திருட்டு என்று கூறுகிறோம்.

4. உருவகத் திருட்டு

கருத்துக்களைத் தெளிவாகவும் வாசகர்களுக்கு மேலும் புரியும்படியும் விளக்க உருவகங்கள் பயன்படுத்தப்படுவது வழக்கில் உள்ளது. தட்டையான விளக்கங்களுக்கு மத்தியில் உருவகங்களைப் பயன்படுத்தி விளக்கும்போது வாசகர்களுக்கு நல்ல புரிதலும் தெளிவும் ஏற்படுகின்றது. படைப்பிலக்கியங்களுக்கு மட்டுமின்றி ஆய்வுக் கட்டுரைகளில்கூட உருவகங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

எல்லா படைப்பாளனுக்கும் இது கைவரப்படாது. ஆகையால்தான் உருவகத் திருட்டுகள் எல்லாவித படைப்புகளிலும் பரவி கிடப்பதைக் காண முடிகிறது. சுயமாக உருவகங்களைப் படைப்பில் கொண்டு வரமுடியாத நிலையில் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்ட மூலத்திலிருந்து உருவகங்களைப் பெற்றுக் கொள்வதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை. ஆனால், மூலப் படைப்பின் உரிமையாளருக்கு நன்றி கூறும் வகையில் மேற்கோள் குறிப்பை முழுமையாக கொடுப்பது முக்கியமாகும்.

கலாப்பிரியாவைக் கடந்து தமிழ்க்கவிதை வேறொரு தளத்தில் பயணிக்கத் தொடங்கி நீண்ட காலம் ஆகி விட்டாலும் அவரது கவிதைகளில் உள்ள எளிமையும் வார்த்தைச் செறிவும் இயற்கை அவதானிப்பும் மறுப்பதற்கு இடமின்றி தமிழ்க்கவிதை உலகில் குறிப்பிடத்தக்க ஒருவராக அவரை அடையாளப்படுத்தியுள்ளது.

மூலம்: பூங்குழலி வீரன். (2014). வேராய் ஒளித்து வைக்கும் மொழி – கலாப்பிரியா கவிதைகள். https://vallinam.com.my/version2/?p=898

உருவகத் திருட்டு செய்யப்பட்ட பகுதி பின்வருமாறு:

தமிழ்க் கவிதை உலகம் எத்தனை எத்தனையோ கவிஞர்களைப் பின்னுக்குத் தள்ளி வேறொரு தளத்தை நோக்கிப் பயணித்த வண்ணமே இருக்கின்றது. அவர்களில் கலாப்பிரியா போன்ற கவிஞர்கல் மட்டும் தங்களின் மாறுபட்ட எழுத்தாற்றலால் தனித்துவம் பெற்று நிலைத்து நிற்கின்றனர்.

இப்பகுதியை படித்தவுடம் படைப்பாளர் மூலக் கட்டுரையை நன்கு உள்வாங்கிக் கொண்டு தன் சொந்த சொற்கட்டுகளைப் பயன்படுத்தி புதியதாக ஒன்றை எழுதியிருப்பதைப் போல தோன்றலாம். ஆனால், இதுவும் மிகுந்த மதிநுட்பமிக்க அறிவுத் திருட்டாகவே கணக்கில் கொள்ளப்படும். மூலப் பத்தியில் தமிழ்க் கவிதையின் மாற்றங்களை எளிமையாக விளக்க ‘பயணிக்க’ எனும் உருவகமும் தமிழ்க்கவிதை எனும் தனிப்பட்ட இலக்கிய வகையை விளக்க ‘உலகு’ என்ற உருவகமும் பயன்படுத்தப்படுள்ளதை நாம் முதலில் தெளிவாக கவனிக்க வேண்டும். அவ்விரு உருவகங்கள் மீண்டும் நகல் செய்யப்பட்டுள்ளதை அடுத்துவரும் உருவகத் திருட்டு செய்யப்பட்ட பகுதியில் காணலாம்.

5. கருத்து திருட்டு

மூலக் கட்டுரையில் புதியதாக ஏதாவதொரு கருத்து அல்லது சிக்கலுக்கான தீர்வு இடம்பெற்றிருக்குமேயானால் அது அப்படைப்பாளரின் சுய சிந்தனையில் உருவான (அவருக்கு உரிமையான) ஒன்றாகும். அக்கருத்து அல்லது தீர்வானது அதனை உருவாக்கியவரின் அறிவுசார் சொத்தாகவே (intellectual property) கருதப்படுகின்றது. அதனை நம்முடைய கட்டுரையில் மீள்பதிவு செய்யும்போது நிச்சயம் முறையான மேற்கோளை இடுவது அவசியமாகும். அதேவேளை பொது தளத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து அல்லது தீர்வை மேற்கோள் காட்டவேண்டிய அவசியமில்லை.

அப்போலோ 11-ல் மூன்று வின்வெளி ஆராய்ச்சியாளர்கள் நிலவுக்கு சென்று பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போலோ 11-ன் வெற்றிக்குப் பின்னணியில் மருத்துவர்கள், விமான இயக்குனர்கள், கட்டுப்பாட்டு திட்டமிடுபவர்கள், மற்றும் பொறியாளர்கள்; ராக்கெட் வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் வல்லுநர்கள்; மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், தர கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள்; புரோகிராமர்கள், என நானூராயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உழைப்பு மறைந்திருப்பதை மறந்துவிடக் கூடாது.

மூலம்: Team Moon: How 400,00 People Landed Apollo 11 on theMoon by Catherine Thimmesh. New York: Houghton Mifflin Co.

அப்போலோ 11-ல் மூன்று வின்வெளி ஆராய்ச்சியாலர்கள் பயணம் செய்ததைப்பற்றிய செய்தி ஏற்கனவே அனைவரும் அறிந்த, பொது தளத்தில் பரவலாக காணக்கிடைக்கின்ற கருத்தாகும். ஒருவர் இதனை தனது படைப்பில் குறிப்பிடும்போது அதன் மூலத்தை மேற்கோள் காட்டவேண்டிய அவசியமில்லை. மாறாக, அப்போலோ 11-ன் பின்னணியில் இருந்து இயங்கிய 400, 000 ஊழியர்கள் என்ற எண்ணிக்கை சற்றே புதிய கூற்றாகும். இதனை மூலக் கட்டுரையின் உரிமையாளர் சில ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே கண்டுபிடித்திருக்க வேண்டும். எனவே, இதற்கான மேற்கோள் குறிப்பை பதிவு செய்வது அவசியமாகும். அவ்வாறு செய்யத் தவறும் நிலையில் கருத்து திருட்டு ஏற்படுள்ளதாகக் கருதப்படும்.

அறிவுத் திருட்டைத் தவிர்ப்பதற்கான இரண்டு எளிய வழிமுறைகள்

ஆய்வு வேலையில் சிறத்தை எடுத்துக் கொள்ளும் ஆய்வியலாளர்கள் படைப்பில் அறிவுத் திருட்டு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதையும் தங்களது கடமையாக உணர்வது அவசியமாகும். சிறப்பான முறையில் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் போதிலும் அவற்றை எழுத்து வடிவில் பதிவு செய்யும்போது சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் அறிவுத் திருட்டு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அறிவுத் திருட்டைத் தவிர்ப்பதற்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இரண்டு எளிய வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன்வழி நாம் அதனை மிக சுலபமாக தவிர்த்துவிட முடியும்.

ஆய்வுக் கட்டுரைகளை வடிவமைக்கும் ஆய்வியலாளர்களும் மாணவர்களும் பொழிப்புரை செய்தல் மற்றும் மேற்கோள் காட்டுதல் ஆகிய இவ்விரு வழிமுறைகளை அறிந்து நடைமுறை படுத்துவது சிறப்பான படைப்பை உருவாக்க வழிவகுக்கும். இவற்றை முதன்முறையாக நடைமுறைப்படுத்தும்போது படைப்பாளர்கள் நேர விரயம் ஏற்படுவதை போலவும், எளிதில் சளிப்படைவது போலவும் உணர வாய்ப்புள்ளது. ஆனால், இதன் முக்கியத்துவத்தையும் இன்றியமையாமையையும் உணர்ந்து நடைமுறைப் படுத்தும் நிலையில் கடினமான பல பின்விழைவுகளிலிருந்து விடுபடுவது உறுதி.

(1) பொழிப்புரை செய்தல்

ஆய்வுக் கட்டுரைகளில் பொழிப்புரை எழுதுவது ஒரு வகை கலையாகும். குறிப்பிட்ட தலைப்புகளில் ஆய்வுகளை மேற்கொள்ளும்பொழுது அது தொடர்பான கட்டுரைகள், பத்திகள் என அனைத்தையும் திரட்டி பின்பு மேலோட்டமான வாசிப்பு, ஆழ்ந்த வாசிப்பு, முக்கிய கருத்துகளைத் தெரிவு செய்து வாசித்தல், தொகுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளுதல் அவசியமாகும். இவ்வாறு செய்யும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தலைப்பின் தொடர்பில் ஆழமான புரிதல் ஏற்படும்.

அதன் பிறகு தொகுத்து வைத்திருக்கும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு சுய சிந்தனையையும் அதில் இணைத்து சொந்த மொழியில் எழுதுவதே பொழிப்புரை செய்யும் வழியாகும். அதனைத் தொடர்ந்து அப்பகுதியின் மூலத்தையும் குறிப்பிடுவது அறிவுத் திருட்டை தவிர்ப்பதற்கான மிக முக்கிய செயல்பாடாகும். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் மூலக் கட்டுரையை படித்த பிறகு அதனை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு புரிந்ததை வைத்து சொந்த மொழியில் எழுதி மேற்கோள் இடுவதே பொழிபுரையாகும்.

*பொழிப்புரை வழிகாட்டி பட்டியல்

  1. ஆய்வுக்குத் தேவையான கட்டுரைகள், பத்திகளைச் சேகரித்தல்
  2. மேலோட்டமான வாசிப்ப்பு, ஆழ்ந்த வாசிப்பு
  3. முக்கிய கருத்துகளைத் தெரிவு செய்து வாசித்தல்
  4. முக்கிய கருத்துகளைத் தொகுத்தல்
  5. படித்தவற்றை உள்வாங்கிய பின் ஆழமான புரிதல்
  6. கருத்துக்களுடன் சுய சிந்தனையை இணைத்து சொந்த மொழியில் எழுதுதல்
  7. மேற்கோள் குறிப்புகளைப் பதிவு செய்தல்

மேற்கண்ட ஏழு படிநிலைகளை ஓரளவு உள்வாங்கிக் கொண்டு ஆய்வு வேலைகளில் ஈடுபடும்போது அறிவுத் திருட்டை தவிர்க்க முடியும். பெரும்பாலான ஆய்வியலாளர்கள் முதல் ஆறு படிநிலைகளை தங்களுடைய ஆய்வனுபங்களினூடே சிறப்பாக செய்துவிடுவது வழக்கம். ஆனால் ஏழாவது படிநிலையை அலட்சியம் செய்வது, மறப்பது அல்லது வேண்டுமென்றே தவறவிடுவது ஆகிய பொறுப்பற்ற செயல்களால் வழியச் சென்று அறிவுத் திருட்டில் சிக்கிக் கொள்வது அறிவுசார்ந்த செயல்பாடாகாது.

பொழிப்புரை செய்யும்போது கவனம் செலுத்த வேண்டிய சில அம்சங்கள்

பொழிப்புரை எப்பொழுதும் ஆய்வாளரின் சொந்த மொழியில் உருவாக்கப்பட்டதாக இருப்பது அவசியமாகும். சில முக்கியமான சொற்கள் (key words) மற்றும் துறை சார்ந்த சொற்களைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் சொந்த மொழியில் எழுதுவது பொழிப்புரை எழுதுவதன் முக்கிய அம்சமாகும். பெரும்பாலும் முன்னாய்வுகளை literature review எழுதுவதற்கு பொழிப்புரை வடிவ முறையே பயன்படுத்தப்படும்.

பொழிப்புரை எழுதுவதில் தேர்ச்சியின்மையும், நேர விரயத்தைக் கட்டுப்படுத்தவும் ஆய்வியலாளர்கள் எளிய வழிகளை பின்பற்றுவதாக எண்ணிக்கொண்டு மூலக் கட்டுரையின் முன்னுரை, கண்டுபிடிப்புகள், முடிவு ஆகியவற்றைத் தொகுத்து எழுதிவிடுவதுண்டு. இது எவ்வகையிலும் தரமான படைப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மாறாக, இதுவே அறிவுத் திருட்டாக மாறிவிடும் அபாயம் கொண்டிருக்கும். ஆம், சொந்த மொழியில் எழுதாமல் மூலக் கட்டுரையின் வாக்கியங்களை அப்படியே எடுத்தெழுதி தன் சொந்த படைப்பாக காட்டுவதும் அறிவுத் திருட்டேயாகும்.

(2) மேற்கோள் காட்டுதல்

பொழிப்புரை செய்தலைப் போல் அல்லாமல் மேற்கோள் காட்டுவது சற்றே சுலபமான வழிமுறையாகும். காரணம், இது மூலக் கட்டுரையிலிருந்து தேவையான வாக்கியத்தை எடுத்து எந்தவொரு மாற்றமும் செய்யாமல் அப்படியே மீள்பதிவு செய்வதாகும். என்னதான் இது சுலபமான வழிமுறையாகத் தெரிந்தாலும் ஆய்வியலாளர்கள் தங்களது சொந்த மொழியில் கட்டுரைகளை அமைப்பதே அதன் தரத்தை உறுதி செய்வதாக இருக்கும். எனவே, கட்டாயத் தேவைகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் இம்முறையைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது அறிவுடைமையாகும்.

மேற்கோள் காட்டும் முறை அறிவுத் திருட்டு ஏற்படாமல் இருப்பதைத் தவிர்க்கும் அதேவேளை வாசகர்களுக்கும் பல வழிகளில் உதவியாக இருக்கும். அதே தலைப்பில் தொடர் ஆய்வினை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு; அல்லது மேற்கோள் காட்டப்பட்ட வாக்கியத்தின் தொடர்ச்சியைப் படிக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

மேற்கோள் காட்டும்போது கவனம் செலுத்த வேண்டிய சில அம்சங்கள்

மேற்கோள் காட்டப்படும் வாக்கியத்திற்கு அல்லது சொற்றொடருக்கு மேற்கோள் குறிகளை இட்டு (“ ”) / (‘ ’) அச்சொற்றொடரின் மூலத்தைக் குறிப்பிடுவது அவசியமாகும். மேற்கோளாகப் பயன்படுத்தப்படும் வாக்கியத்தை நமது கருத்துக்களோடு தொடர்புபடுத்தும் வகையில் இணைப்புச் சொற்களைச் சேர்த்தல், சமிக்ஞை காட்டுதல், வழியுறுத்துதல் ஆகிய வழிமுறைகளை முறையாக பின்பற்றுவதும் அவசியமாகும். அவற்றை கீழ்காணும் உதாரணங்களுடன் சற்றுத் தெளிவாக காண்போம்.

இணைப்புச் சொற்கள் – எனவே, ஆகையால் போன்ற இடைச் சொற்கள்
சமிக்ஞை காட்டுதல் – மூலக் கட்டுரையின் உரிமையாளரின் பெயர், ஆண்டு ஆகியவற்றைத் தொடக்கமாக கொண்டு அமையும்
வழியுறுத்துதல் – நம்முடைய கட்டுரைக்கு மேற்கோளாக பயன்படுத்தப்பட்ட வாக்கியத்துடன் தொடர்பு படுத்துதல்

உதாரணம்:

நசீம்தீன், பீ. (2007) இலக்கியம், ஒப்பிலக்கியம், சமுதாயம் எனும் ஆய்வில் [சமிக்ஞை] பாவின் நடை சந்தர்ப்பத்திற்குத் தக்கதாயிருந்தல் வேண்டும் எனும் கூற்றையே வழியுறுத்துகின்றார் [வழியுறுத்துதல்]. இவற்றோடு மேலும் [இணைப்புச் சொற்கள்] ‘வல்லின மெல்லின எழுத்துக்களைப் பயன்படுத்தும் வண்ணங்கள், குறிப்பிற்கேற்ற சந்த ஒலி அமைப்புகள் ஆகியவற்றை பயன்படுத்துவதும் பாவின் நடையை மேலும் மெருகேற்றும்’ என்கிறார் (பக். 71).

இப்பத்தியில் சமிக்ஞை எனும் பகுதி மூலக் கட்டுரையின் ஆசிரியர் பெயர் மற்றும் ஆண்டு ஆகிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. ஆனால் அம்முதல் வாக்கியம் ஆய்வியலாளர் ‘இலக்கியம், ஒப்பிலக்கியம், சமுதாயம்’ எனும் புத்தகத்தைப் படித்து தான் புரிந்து கொண்டதை சொந்த வரியில் விளக்கியுள்ளார். இவ்வாக்கியத்திற்கும் அடுத்து வரும் வாக்கியத்திற்கும் கருத்து ரீதியில் தொடர்பிருப்பதைக் காணலாம். அதாவது முதல் வாக்கியத்தை மேலும் தெளிவாக உணர்த்த இரண்டாவது வாக்கியம் மூலக் கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டப்படுகின்றது. கருத்து ரீதியிலான இத்தொடர்பு படுத்துதலையேதான் ‘வழியுறுத்துதல்’ என்று அழைக்கின்றோம். தொடர்ந்து, அவ்விரு வாக்கியங்களுக்கு இடையேயான தொடர்பை மேலும் வலுவாக்க இணைப்புச் சொற்கள் உதவுகின்றன. இவற்றுடன் மூலக் கட்டுரையின் பக்கத்தை வாக்கியத்தின் இறுதியில் குறிப்பிட்டு அதன் பிறகு முற்றுப்புள்ளி இடப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முறையான மேற்கோள் குறிப்புகளை இடும் வழிமுறைகள்

உலக அளவில் மேற்கோள் குறிப்புகளை இடுவதற்கென்றே பல விதமான அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன. பரவலாக ஐந்து விதமான மேற்கோள் குறிப்பு வடிவங்கள் இன்றளவிலும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றை கீழே காணலாம்.

APA – உளவியல், கல்வி மற்றும் சமூக அறிவியல்
MLA – இலக்கியம், கலை மற்றும் மானுடவியல்
AMA – மருத்துவம், சுகாதாரம் மற்றும் உயிரியல்
Turabian – கல்லூரி மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
Chicago – புத்தகங்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், மற்றும் கல்வியியல் அல்லாத பதிப்புகள்

APA, MLA மற்றும் Chicago ஆகிய வகை மேற்கோள் குறிப்பு வடிவங்களே எல்லாவித ஆய்வு மேற்கோள்களுக்கும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை தவிர, சில வேளைகளில் தனி நிறுவனங்கள், மாநாட்டு அமைப்புகள் ஆகியவை தனிப்பட்ட சில மேற்கோள் குறிப்புகளைப் பயன்படுத்துவதையும் காண முடிகின்றது. உதாரணமாக, IEEE Journals and Magazines எனும் இணைய இதழ் தனிச்சையான மேற்கோள் குறிப்பு வடிவத்தை கொண்டுள்ளதைக் கூறலாம்.

இவ்விணைய இதழுக்கு ஆய்வுக் கட்டுரைகளை அனுப்புபவர்கள் IEEE மேற்கோள் குறிப்பு வடிவத்தையே கட்டாயம் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறும்போது ஆய்வுக்கட்டுரை திருத்தங்கள் செய்து அனுப்பும்படி கோறி திரும்ப தரப்படும். எனவே ஆய்வுக் கட்டுரைகளை எழுதத் துவங்கும் முன் எவ்வகையான மேற்கோள் குறிப்பு வடிவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை கண்டறிந்து அதை பின்பற்றுவது சிறப்பாகும்.

மேற்கோள் குறிப்புகளைப் பதிவு செய்வதற்கான மென்பொருட்கள்

தற்போது மேற்கோள் குறிப்புகளைப் பதிவு செய்வதற்கென்றே பல வகையான மென்பொருட்கள் சந்தையில் விற்பனக்கு உள்ளன. இவற்றை ஆதார நூற்பட்டியல் மென்பொருள் (bibliographic software) என்றும் அழைப்பர். உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் மென்பொருட்களாக Zotero, Mendeley, EndNote மற்றும் EndNote Web ஆகியவை திகழ்கின்றன. மலேசியப் பல்கலைக்கழகங்களில் பரவலாக EndNote மென்பொருளே அதிக அளவில் பரிந்துரைக்கப்படுகின்றன.

ஆதார நூற்பட்டியல் மென்பொருளின் (bibliographic software) பயன்கள்

o மேற்கோள் தரவுகளை தொகுக்க உதவும்.
o மேற்கோள் குறிப்பு வடிவங்களைச் சுலபமாக மாற்ற உதவும்.
o தேவையான மேற்கோள் தரவுகளை வலைத்தளங்களில் இருந்து இறக்குமதி செய்ய உதவும்.

மேற்கோள் குறிப்புகளைப் பதிவு செய்வதில் ஆய்வியலாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை களைய இம்மாதிரியான மென்பொருட்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மேற்கூறிய நால்வகை மென்பொருட்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்த பழகிக் கொண்டால் மேற்கோள் குறிப்புகளைப் பதிவு செய்வதில் ஏற்படும் சிக்கல்களை 90% களைவது உறுதி.

அறிவுத் திருட்டை தவிர்ப்பதற்கு ஏதுவான சில அடிப்படை அணுகுமுறைகள்

ஆய்வியலாளர்கள் அல்லது மாணவர்கள் அறிவுத் திருட்டைத் தவிர்ப்பதற்கு சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற புரிதல் முதலில் அவசியமாகிறது. இப்புரிதல் ஏற்படும்போது மட்டுமே எந்தவொரு சுணக்கமும் தடையும் இன்றி அவர்களால் கற்றலில் முழுமையாக ஈடுபட முடியும். இனி தொடர்ந்து, அறிவுத் திருட்டை களைவதற்கும் மேற்கோள் குறிப்புகளை இடும் திறனை வளர்த்துக் கொள்வதற்கும் உதவும் சில அடிப்படை அணுகுமுறைகளைக் காண்போம்.

1. மேற்கோள் செய்வதற்கு பயன்படுத்தும் தரவுகளை ஒழுங்குபடுத்துதல் – முதன்மைத் தரவுகள், தேவையான இதர தரவுகள், தேவையற்ற தரவுகள் என பிரித்து வைப்பது தேவைப்படும்போது அவற்றை சுலபமாக இனங்கான உதவும்.

2. தரவுகளை வாசிக்கத் தொடங்கும்போதே அதன் ஆசிரியர் பெயர், ஆண்டு, தலைப்பு, பதிப்பகம், பக்கம் ஆகியவற்றை அடிக்கோடிட்டு அல்லது வண்ணமிட்டுக் கொள்ள வேண்டும். இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட தரவுகளுக்கு அதன் இணைய முகவரி, மற்றும் அத்தரவு வாசிக்கப்பட்ட நாள்/பதிவிரக்கம் செய்யப்பட்ட நாள் ஆகியவற்றை அடிக்கோடிடுதல் அவசியம்.

3. எழுதத் துவங்கும் முன் சரியான மேற்கோள் குறிப்பு வடிவத்தை தேர்வு செய்ய வேண்டும். (மாநட்டு கட்டுரைகள், இணைய இதழ் போன்றவற்றிக்கு எழுதும்போது மேற்கோள் குறிப்பின் வடிவம் ‘article writing format’ எனும் பகுதியில் குறிப்பிடப் பட்டிருப்பதை காணலாம்).

4. ஒவ்வொரு முறை எழுதும்போதும் மேற்கோள் குறிப்பு விவரங்களைத் தேர்வு செய்யப்பட்டச் சரியான வடிவில் எழுதுவதை உறுதி செய்ய வேண்டும். (அடிக்கடி சரிபார்த்துக்கொள்ள ஏதுவாக தேர்ந்தெடுத்த வடிவத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்).

5. ஆதார நூற்பட்டியல் மென்பொருளில் (bibliographic software) மேற்கோள் குறிப்புகளை உடனுக்குடன் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வகை மென்பொருள்களை பயன்படுத்தத் தெரியாதவர்கள் தனியாக ஒரு தாளில் முழுமையாக குறிப்பெழுதி வைத்துக் கொள்ளலாம்.

6. கட்டுரையை எழுதும்போது மேற்கோள் காட்டுதல் முறையைப் பயன்படுத்தியிருந்தால் அவ்வாக்கியத்தில் (மே) என்றும், பொழிப்புரை செய்திருந்தால் (பொ) என்றும், சுய கருத்தாக இருந்தால் (சு) என்றும் குறிப்பெழுதிக் கொள்ளலாம். இதன்மூலம் தவறியும்கூட அறிவுத் திருட்டு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள முடியும்.

முடிவாக

உலகின் மற்ற மொழிகளில் மிகத் திட்டவட்டமாக பயன்படுத்தபட்டுவரும் அல்லது பின்பற்றப்படும் பலவற்றை நாம் இன்னமும் அறிந்து வைத்திருக்காமலே இருப்பதும் அலட்சியம் செய்வதும் நமது பின்னடைவையே காட்டுகின்றது. அவற்றுள் ஒன்றான அறிவுத் திருட்டு தொடர்பாக இதுவரை நமக்கிருக்கும் முன்னறிவையும், தெரிந்துகொள்ள நாம் மேற்கொண்ட முயற்சிகளையும் சற்று பரிசோதனைச் செய்து பார்த்தால் நமது நிலை என்னவென்று தெரிந்துவிடும். தரமான படைப்புகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் உருவாக்க, அவற்றை பலரும் படிக்க, மீள்பார்வை செய்ய விரும்பும் ஒவ்வொரு ஆய்வியலாளனும் அறிவுத் திருட்டு தொடர்பான விழிப்புணர்வுடன் இருந்து அதை தவிர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது இன்றியமையாததாகும்.

துணைநூல் பட்டியல்

1. Barnbaum, C. “Plagiarism: A Student’s Guide to Recognizing It and Avoiding It.” Valdosta State
University. http://www.valdosta.edu/~cbarnbau/personal/teaching_MISC/plagiarism.htm
2. http://www.princeton.edu/pr/pub/integrity/pages/plagiarism/
3. http://writing.wisc.edu/Handbook/QPA_paraphrase.html
4. http://www.usq.edu.au/library/referencing/what-is-plagiarism/detection-and-consequences
5. http://www.ithenticate.com/resources/6-consequences-of-plagiarism
6.http://www.brighthubeducation.com/help-with-writing/39393-types-of-plagiarism-and-examples/
7. http://www.arlington.k12.ma.us/ahs/docs/plagarism.pdf
8.http://grad.msu.edu/researchintegrity/docs/Plagiarism_Avoiding_Unintentional_Plagiarism.pdf

தரவிறக்கம் (Download)

மேற்கோள் செய்வதற்கான எளிய வழிமுறைகள் – Citation & Bibliography

3 comments for “Plagiarism: அறிவுத் திருட்டின் சில மேற்கோள்கள்

  1. Novah Guruloo
    August 16, 2014 at 12:13 pm

    Very useful sharing..thank you..

  2. வளவன்
    August 20, 2014 at 4:02 pm

    வணக்கம்…..உங்களின் இக்கட்டுரை – ஆய்வாளன் என்ற அடிப்படையில் எனக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்து இருந்தது……..இதில் இடம் பெற்ற அனைத்து கருத்துகளும் நோக்க தக்கதே…….வளரும் நாட்களில் இது போல் பயனளிக்கும் கருத்துக்கள் தொடரந்து கட்டுரைகளாக வலம்வர வேண்டும்…வலம் வந்த உங்களுக்கும், காரணமாக அமைந்த அனைத்து நல்ல நண்பர்களுக்கும் இதன் மூலம் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்……நன்றி.

Leave a Reply to வளவன் Cancel reply