வர வர ஒன்னுமே புரிய மாட்டேங்குது நைனா. எல்லாமே முன்னுக்குப் பின்ன முரணா கெடக்குது. அண்மையில உஸ்தாத் ஷாகுல் ஹமிட் (Uztaz Shahul Hamid) இஸ்லாமியர்களோட கட்டுப்பாடுகள் பற்றி பேசியிருக்காப்படி. அதுல ஹலால் உணவுகள் என இஸ்லாமியர்கள் சொல்லிக்கொண்டு அழகப்பாஸ் மற்றும் பாபாஸ் மசாலாத்தூள்களை வாங்குவதை விமர்சித்து ஏன் அவர்கள் இஸ்லாமியர்கள் தயாரிக்கும் மசாலா தூள்களை வாங்குவதில்லை என கேள்வி எழுப்பியிருந்தார். இது வரை அவர் சொன்னது சரி நைனா. ஏன்னா நம்ம தமிழர்களும் தமிழர்கள் தயாரிக்கும் பொருள்களைத்தானே வாங்குங்கன்னு சொல்றாயிங்க.
அதுல காமடி என்னன்னா நம்ம தமிழவங்க என்னத்த அப்படி தயாரிச்சாயிங்கன்னும் தெரியல நைனா. எதையுமே தயாரிக்காமயே தமிழர்கள் பொருளைப் பயன்படுத்துங்கன்னு சொல்லும்போது தயாரிப்பில் இருக்கின்ற ஒன்றை ஒரு இஸ்லாமியர் வாங்க சொல்வதில் தவறில்லை. ஆனா, இதுல சிக்கல் என்னன்னா அந்த உஸ்தாத் அழகப்பாஸ் நிறுவனத்தின் முன் இருக்கும் இந்து சமய அடையாளத்தைக் கிண்டல் செய்ததுதான். நெசமாலுமே யாரும் யார் மதத்தையும் அதோட அடையாளங்களையும் கிண்டல் செஞ்சா சிக்கல்தான். அதுவும் மலேசியாவுல ஒரு சிறுபான்மை இனமான இந்துக்களுக்கு இதுபோன்ற கிண்டல்கள் பெரிய அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும்தான் கொடுக்கும்.
ஆனா நைனா… நான் இங்க சொல்ல வரரது அது இல்லை. கொஞ்சம் சொல்றத உஷாரா கேளு.
நம்ம சனங்களுக்கு இந்து மத அடையாளங்கள திட்டினாலோ கிண்டல் செஞ்சாலோ உடனே கோபம் பொத்துக்கிட்டு வருது. ஆனா பாரு நைனா எந்தக் குப்பத்தொட்டியப் பார்த்தாலும் காலண்டர் படங்களாகவும், சூடம் சாம்பிராணி பெட்டிகளாகவும், ஊதுவத்தி காகிதங்களாகவும் இந்துமத அடையாளங்களாக குவிந்திருக்கின்றன. ஆனா பாரு நைனா அதப்பத்தி நம்ம மக்கள் கோவப்படுவதே இல்லை.
இந்த வியாபாரிகள் தங்கள் வியாபாரத்த பெருக்க இந்துமத அடையாளங்கள் போட்டுக்கிட்டா அத கேட்ட இங்கு நாதியில்ல. ஆனா ஒரு உஸ்தாஸ் வாயால ஒரு வார்த்தை சொன்னா வரிஞ்சி கட்டிக்கிட்டு வந்துடுறாயிங்களே இது என்ன ஞாயம் நைனா? சாமானிய மனிதன் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டுன்னா இந்து மத சின்னங்கள குப்பையில போடுறவன் ஒவ்வொருத்தனும் குற்றவாளிதானே நைனா? அதை கடையில ஒரு மோசமான இடத்துல வச்சி விக்கிறவன் குற்றவாளிதானே நைனா? அதை அச்சடித்து விக்கிறவன் குற்றவாளிதானே நைனா? அதுக்கு அனுமதி கொடுத்தவனும் குற்றவாளிதானே நைனா? இப்படி இத்தனை தப்புகள நம்ம மத்தியில வச்சிக்கிட்டு என்னா நைனா சீன் போடுறாய்ங்க!
இப்பவும் நான் உஸ்தாஸ் சொன்னத சரின்னு சொல்ல வரல நைனா. அந்தக் கோபம் ஏன் நம்மை சுரண்டி பிழைக்கும் முதலாளிகளிடமும் அதிகார வர்க்கத்தினரிடமும் வர மாட்டேங்குது என்பதைதான் அடிப்படையா கேட்க நினைக்கிறேன் நைனா…
Superb. யோசிக்க வைக்கும் கட்டுரை.
மத அடையாளங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. உருவத்திற்கு அணிகலன்கள் இட்டார்கள் ஆடையிட மறுத்தார்கள். அது அன்றைய நாகரீகம். நிர்வாணமாய் வாழ்ந்தவர்கள் அப்படித்தானே வடிவமைப்பார்கள். தம்மை வைத்துத்தானே உலகத்தைப் பார்த்தார்கள். மேலாடை இல்லாத சிலைகள் ஆயிர ஆண்டுகால வரலாற்றைப்பறைசாற்றிக்கொண்டு இன்னமும் கம்பீரமாய் வீற்றிருப்பது சான்று… அதை செஃக்ஸி என்றால் `கன்னத்தில் போடு கழுத. கடவுள் குத்தம்..’ என்கிறார்கள். காரணம் செஃக்ஸியும் பேச்சுவழக்கில் கெட்டவார்த்தையாகிப்போனதுதான் வம்பு.
கடவுள் மறுப்பில் அநாகரீக வழிப்பாட்டு முறைகளை இதைவிட விட இன்னும் மோசமான முறையில் நாம் (நாம் என்றால், நம்ம நாத்தீகவாதிகள்) விமர்சித்து கண்டித்துள்ளோம். கண்டித்தும் வருகிறோம். பகுத்தறிவு சிந்தனையின் அடைப்படையில், அவசியம் கருதி நெற்றியில் அடித்தாட்போல் சில விஷயங்களைப் புரியவைக்கவேண்டியது நமது கடமை. எல்லாவற்றையும் அப்படியே கடைபிடித்துக்கொண்டிருப்பது பேரழிவிற்கு விட்டுச்செல்லும்.
இறைவனுக்கு வடிமில்லை என்றதும் நாம்தான். பின்பு வடிவத்தைக்கொடுத்து அதைக் கேளிக்கூத்தாக்கியதும் நாம்தான். வடிவமற்ற தன்மையில் இருந்து, ஜோதியை வடிவமாக்கி, மனித உருவமாக்கி ஒன்று பத்தாகி, பத்து பத்தாயிரமாகி, இன்று யாரைத் துதித்து போற்றி வணங்கினால் கூடுதல் லாபம், கூடுதல் ஆயுள், சாபம் பாவம் நீங்குதல் என்கிற நிலையில் திண்டாடித் தத்தளிக்கின்ற நிலைக்கு நாம் நமது மத அடையாளங்களைக் கூறுபோட்டு வியாபாரமாக்கிக்கொண்டிருக்கின்றோம் என்பதை மறுக்கத்தான் முடியுமா.?
சொல்வது என்ன என்பதைவிட சொன்னவர் யார் என்பதில் நாம் கூடுதல் கவனம் எடுத்து பிய்த்து ஆராய்கிறோம். உஸ்தாஸ் மாட்டிக்கொண்டார். வெளியாள் யாருமற்ற கூட்டத்தில் கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில் தாம் உரை நிகழ்த்தியதாகச்சொல்கிறார் உஸ்தாஸ்.! உள்ளே இருந்த அன்பர் ஒருவருக்கு நிச்சயம் இச்செய்கை அருவருப்பைக்கொடுத்திருக்கும், ஆக, அவர் வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டார்…
நியாயம் என்று சொல்லவில்லை. மதம் என்கிற குடையினுக்குள் புகுகின்றபோது, சமையம் என்கிற சாயத்தைப் பூசிக்கொள்ள நினக்கின்ற நாம், நமது அகக்கண்களை அகலத் திறந்து வைத்துள்ளோமா? இதுதான் குடையும் வினா இப்போது.!?