What Your Teacher Didn’t Tell You: மெய்ப்பொருள் காண்பதறிவு

naveen pixஒரு பொருள் அல்லது கருத்தியலை நம் ஆய்வுக்குரியதாக ஏற்று அதுபற்றிய முந்தைய கருத்து மற்றும் முடிபுகளை தொகுத்தெடுத்து, இனியும் ஏற்க கூடியதை ஏற்று, தகர்க்கக் கூடியதை தகர்த்து, தொகுத்த தகவல்களைக் கட்டுரையாக வகை தொகைப்படுத்தி படைக்கும்போது அது ஆய்வுக்கட்டுரையாக உருப்பெறுகிறது என்கிறார் முனைவர் ந.ரெங்கநாதன் இ.செ.ப (தகவல் தொடர்பியல் துறை பற்றிய ஆய்வு அனுபவம், தமிழில் ஆய்வு அனுபவங்கள், ப.19). அப்படியான பகுத்தாய்தலுக்கு பின்பு வெளிக்கொணரப்படும் முடிபுகள் நடுநிலையாக இருத்தல் அவசியமாகிறது.

களங்கமுற்ற கருத்தியலுக்கு பதிலாக ஏற்பான முடிவினை கண்டறிய முக்கித் திணறும் போது, வரலாறானது வேண்டுமென்றே ஒளித்து வைக்கப்பட்டதா அல்லது காலச்சூழல் வளர்ச்சிக்கேற்ப மறக்கடிக்கப்பட்டதா என்பது தெளிவுப்படாத விடயமாகவே விரிகிறது. ஆயினும், தற்காலத்தில் மக்களிடத்திலே நிலவும் மித மிஞ்சிய கற்பனைகளும், ஒரு சாராரின் தேவையற்ற ஒடுக்குமுறைகளும் எதையோ அடையாளப்படுத்த அல்லது மறைக்க முற்படும் போக்காகவே அறியப்படுகிறது. இந்நாட்டுச் சூழலில் ஆரம்பக்கால மக்கள் மத்தியில் பல்வேறான வேற்றுமைகள் நிலைக் கொண்டிருந்தாலும், இக்காலக்கட்டத்தில் வெவ்வேறு நிலைகளில் அவை வன்முறை கலந்து தீவிரம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கதே.

தெளிவான நோக்குதலோடு உண்மையைத் தேடி அலைந்த தருணங்களில் பல்வேறான நூல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றன. தற்கால ஆய்வாளர்கள் தொடங்கி 100 முதல் 200 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட நூல்கள், ஆய்விதழ்கள், வரலாற்றுக் குறிப்புகள் வரை சேகரித்து ஆய்ந்து வருகிறேன். வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொல்லியல் சார்ந்து இயங்கி வரும் அயல்நாட்டு நண்பர்களின் தூண்டுதலும், வழிக்காட்டுதலும் எம்மை பல நேரங்களில் துரிதப் படுத்திவிடும். மலேசியாவில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத பல வரலாற்றுத் தளங்களில் கால்பதித்து, சூன்யத்தின் நடுவே அடங்கிக் கிடக்கும் வரலாற்று நிகழ்வுகளை ஊகித்தும் வருகிறேன். இவ்வாறான சூழ்நிலையில்தான் எழுத்தென்பது எத்துனை வீரியத்துடன் எழுந்து உண்மையை கிளர விடுகிறதென்பது தெளிவடைகிறது. ஒருவனின் அடையாளங்கள் இப்புவியிலிருந்து நீக்கப்படும் பொழுது அவனது எழுத்துக்கள் அவனைப் பற்றிய தகவல் உட்பட, அவனது சுற்றம், மக்கள், மொழி, இனம் என அனைத்தையும் தாங்கி பரவுவது வியத்தம்.

‘What Your Teacher Didn’t Tell You: The Annexe Lectures (Vol.1)’ எனும் நூல், டிசம்பர் 2009-ம் ஆண்டு முதன் முதலாக வெளியிடப்பட்டு இதுவரையிலும் ஏழு பதிப்புகளைத் தொட்டுள்ளது. மொத்தம் ஆறு கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பாரிஸ் அஹ்மாட் நூர் (Farish Ahmad Noor) வெவ்வேறு இடங்களில் நிகழ்த்திய விரிவுரைகளின் உள்ளடங்கங்கள் இக்கட்டுரைகளில் தொகுக்கப்பட்டுள்ளன. இவர் அரசியல் வரலாற்றாளராகவும், சமூக ஆர்வளராகவும் இயங்கி வந்துள்ளார். இவருடைய முந்தைய வெளியீடுகளான Islam Embedded: The Historical Development of the Pan-Malaysian Islamic Party (PAS), From Majapahit to Putrajaya, Writings on the War on Terror, The Madrasah in Asia: Political Activism and Transnational Linkages, The Other Malaysia: Writings on Malaysia’s Subaltern History, Terrorizing the Truth, The Shaping of Contemporary Images of Islam and Muslims in Media, Politics and Culture மற்றும் இதர நூல்களின் பட்டியலை இந்நூலினைப் பெற்றதன் வாயிலாகவே தெரியவந்தது. அந்நூல்களை பெறும் முயற்சியில்  தற்போது இறங்கியுள்ளேன். கடந்த ஆண்டு (2013) வெளியீடு கண்ட இவரது The Story of the South Asian Muslim Diaspora in SEA Today எனும் நூல் மலாய் தீவு, ஆரம்பக் கால மலாயா மற்றும் மலேசியா வரலாற்றில் இந்திய முஸ்லிம்கள் ஆற்றிய பங்கினை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. மேலோட்டமாக இவர்களது பொருளாதாரம், பண்பாடு அதனுடன் சேர்ந்த மத நடவடிக்கைகள் குறித்துப் பேசாமல் வேறு பல இயல்புகளையும் தழுவி சிறப்பாகவே ஆவணப்படுத்தியுள்ளார். பி.பி.சி-யின் (BBC) வானொலி 4 மற்றும் World Service பிரிவுகளில் கட்டுரையாளராகவும் பாரிஸ் பணிப்புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பிரிவுகளில் பணியாற்றிய போது ஆய்வுக்காக பரவலான பயணங்களை மேற்கொண்டு பண்டையப் பொருட்களை சேகரிப்பதை தமது பொழுது போக்காகக் கொண்டிருந்தார். தற்போது நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், சர்வதேச கற்கைகளுக்கான இராசத்தினம் பயிலிடத்தின் மூத்த உறுப்பினராகவும், Universitas Muhamadiyah Surakarta-வின் இணை பேராசிரியராகவும் பணிப்புரிந்து வருகிறார் (What Your Teacher Didn’t Tell You, p1).

நூலின் முகப்புரையில்,

“…the urgent need for Malaysians to reclaim the histories, biographies, symbols, tropes and markers that dot the narrative and discursive landscape of Malaysia form the clammy clutches of politicians, ideologues and soap-box orators who would otherwise be inclined to reduce the semiotic repertoire of our public discursive domain to simplified and essentialised totems that stand for a communication and divisive politics that is not only historically inaccurate, but politically dangerous.” (What your teacher didn’t tell you, Introduction, pp 12-13).

எனக் குறிப்பிட்டு நூலின் வெளியீட்டிற்கான நோக்கத்தை தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

மலேசியாவை பொருத்தமட்டில், வரலாற்று அடிப்படையில் பல உண்மைகள் மறுக்கப்பட்டு, அவை ஒரு சில புனைவுகளாக கற்பிக்கப்பட்டு வரும் சூழலை அறிவோம். ஆரம்பக்காலச் சூழலில் இதற்கான எதிர்ப்பலைகள் ஒடுங்கி போய் கிடந்தாலும், அறிவுக் கதிர்களை தோண்டியெடுக்கும் தற்கால ஆய்வாளர்களின் பண்பானது, இவ்வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தி வருகிறது. அவ்வரிசையில் இந்நூலின் வெளியீடு குறிப்பிடத்தக்கது. “Pity the poor Keris”, “The Lost Tribes of Malaysia” , “Of Rajas, Maharajas, Dewarajas and Kerajaan” , “From Pigafetta to Panji” , “The Red-Green Alliance” , “Hang Tuah The Pacifist” என ஆறு கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் “Pity the Poor Keris”, “The Lost Tribes of Malaysia”, “From Pigafetta to Panji” மற்றும் “Hang Tuah the Pacifist” குறிப்பிடத்தக்க கட்டுரைகளாக ஏற்கலாம்.

naveen pix 0220-ம் நூற்றாண்டு தொடங்கி கெரிஸ் மலேசியாவிலுள்ள மலாய் முஸ்லிம் சமூகத்தினரோடு மட்டுமே தொடர்புடையதாக்கப்பட்டது. வலதுசாரி இனதேசியவாதிகளின் பேரவைக் கூட்டங்களிலும் பேரணிகளிலும் கெரிஸ் என்பது வெறும் ஆயுதமாக மட்டுமே புலப்படுத்தப்பட்டது. 2005-ம் ஆண்டு நடைப்பெற்ற அம்னோ பேரவையில் அப்போதைய அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் மற்றும் கல்வி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஹிசாமுடின் ஹுசேன் ஓன் (Datuk Seri Hishammuddin Hussein Onn) கெரிஸை கையில் ஏந்தியவாறு உணர்ச்சிப் பொங்கப் பேசியது மலாய்க்காரர் அல்லாதவர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் விளைவாக தேசிய முன்னணியின் உருப்புக் கட்சிகளான ம.சீ.ச மற்றும் ம.இ.கா-வினர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். 1987-ம் ஆண்டு கம்போங் பாருவில் நடைபெற்ற பேரணியில் “revoke the citizenship of those who opposed the Malay rulers”, “May 13 has begun”, “soak it (கெரிஸை குறிப்பிடுகிறது) with Malaysian Chinese blood” என்ற பதாகைகள் ஏந்தப்பட்டு வந்ததாக ஒரு குற்றச்சாட்டு நிலவிவந்தது. அன்றைய அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவராக பதவி வகித்தவர் தற்போதைய மலேசிய நாட்டு பிரதமரான டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்கள். மேலும், அப்பேரணியின் போது அவர் நிகழ்த்திய உரையில் மலாய் சமூகத்தினரின் சிறப்பு சலுகைகள் ஒட்டிய கேள்விகளை எழுப்பும் சீனர்களின் இரத்தத்தை கெரிஸால் நனைப்போம் என சூளுரைத்தார் எனவும் சொல்லப்படுகிறது. ஆயினும், இது ஓர் அரசியல் குற்றச்சாட்டு (சான்றுகளற்ற) என்பது ஒரு சாராரின் கருத்து. கெரிஸை ஓர் ஆயுதமாக மட்டும் ஏற்று, அதனை தவறான கண்ணோட்டத்தோடு நிலை நிறுத்த முயன்றது இவர்களின் அறியாமையை குறிக்கிறது (The Malaysian Insider, 24th June 2010; The Star, 26 April, 2008). மேலும், கெரிஸ் இந்தியர்களுடன் தொடர்புடையதா எனும் கேள்விகளை பல கோணங்களில் ஆராயப் பட வேண்டியிருக்கிறது. இவ்வாறான முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சியின் போது மலேசிய இந்தியர்கள் உண்மைச் சூழலை நிதானத்துடன் ஏற்கும் மனத்தினைப் பெற்றவர்களாக இருத்தல் அவசியம். இந்தியர்களின் ஆயுதம் எனக் குறிப்பிடும் பட்சத்தில் தென்கிழக்காசியா மற்றும் இந்தியாவுக்கிடையிலான மரபு ரீதியிலான தொடர்பை நுணுக்கமாக கையாளப்பட வேண்டியுள்ளது.

ஆழமான கருத்தியலை முன்வைத்து கட்டுரை தீட்டப்படவில்லையானாலும், குறிப்பிட்டவொரு வரையறைக்குள் தமது கருத்தினை சிறப்பாகவே எழுத்தாளர் பதிவுச் செய்துள்ளார். கடல் கடந்து வந்த இந்து, பௌத்தம், இசுலாம் போன்ற மதங்களின் ஆளுமைகள் இவ்வாயுதத்தின் உருவாண்மையில் முக்கியத் தளத்தினை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடப்பட வேண்டியது. கெரிஸின் பூர்வீகம் என ஜாவா, சம்பா, மலாய் தீபகர்ப்பத்தை அறுதியிட்டுக் கூற இயலாமல் போனாலும், போதுமான சான்றுகளைக் கொண்டு ஜாவா, சுமத்ரா, மலாய் தீபகற்கபத்தை தற்போதைக்கு பூர்வீகமாகப் பதிந்துள்ளார் எழுத்தாளர் (What your teacher didn’t tell you, Pity the Poor Keris, pp.24- 25). இருப்பினும், இவ்வாயுதம் பிற இடங்களிலும் தோன்றிருக்கலாம் எனும் ஐயப்பாட்டினையும் முன்வைத்துள்ளார். இந்து மற்றும் பௌத்த மத்தின் ஊடுருவலுக்கு பின்பு கெரிஸின் உருவாக்கம் மற்றும் அதன் பயன்பாட்டின் முக்கியத்துவம் அதிகரித்தது. கெரிஸின் பன்முகத்தன்மையான கலாச்சார மூலங்களை மறுபரிசீலணை செய்வதன் மூலம், பல நூற்றாண்டுகளுக்கு முன்பான இந்நாட்டு மக்களின் வழக்கங்களை அறிவதிலும் இக்கட்டுரை துணைப்புரிகிறது. இதற்குச் சான்றாக, அயல்நாட்டு கலப்பினைக் கொண்டுள்ள மதாரம் (Hindu Mataram) காலத்திலான கெரிஸை ஜென்சென் (Karsten Sejr Jensen, Den Indonesiske Keris-et Symbolladet Vaben Devantier, Naestved,1998) முன்வைப்பதாக பாரிஸ் கூறுகிறார். அதாவது, கத்தி பாகமானது மத்திய ஜாவாவில் வடிவமைக்கப்பட்ட நிலையில், அதன் உறையானது (ladrangan வகையைச் சார்ந்தது) ஜப்பான் மற்றும் சீனா ஆகிய பகுதிகளில் பரவலாகக் காணப்பெறும் வண்ணம் மற்றும் சாயத்தினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது (What your teacher didn’t tell you, Pity the poor Keris, p.32). வெறும் ஆயுதம் என அடையாளப்படுத்துவதோடு, கடற்கொள்ளையர்களின் கடற்படைகள் மற்றும் எதிரிகளை அடையாளம் காணும் வியக்கத்தக்க நோக்கத்திற்காகவும் (இது மந்திரத்திலான செயல்பாடு) கெரிஸ் பயன்பாட்டில் இருந்துள்ளது. மேற்கத்திய காலனியின் ஆதிக்கத்திற்கு முன்பதாகவே, இம்மண்ணானது பெருநகர் பகுதியாக இருந்துள்ளது. இவர்களின் வருகைக்குப் பின்பு உலக நடப்பிற்கேற்ற வட்டார மற்றும் தேசிய வரலாறானது வடிவமைக்கப்பட்டது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கெரிஸ் என்பது பல சமூகத்தின் பண்பாட்டினைக் கொண்டு உருவாக்கப்பட்டது. மிக துள்ளியமாக இந்து மற்றும் பௌத்தத்தின் சாயல் பொதிந்திருந்தாலும், பல வேளைகளில் சீனாவின் கலை பாணிகளும் சேர்க்கப்பட்டுள்ளதை உணர வேண்டியிருக்கிறது. இவர்களைக் காட்டிலும் இதர சமூகங்களான, சீனர்கள், இந்தியர்கள், அரேபியர்கள், யூரேசியர்களுக்கிடையில் இவ்வாயுதம் புலக்கத்தில் இருந்துள்ளதா என்பதை ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியுள்ளது என பாரிஸ் குறிப்பிடுகிறார் (What your teacher didn’t tell you, Pity the Poor Keris, p.33).

“..there is no such thing as racial differences, for the simple reason that there is only one race, and that happens to be human race..” (What your teacher didn’t tell you, The Lost Tribes of Malaysia, p.59)

தொடரும் கட்டுரையில் இனவாதம் குறித்த தமது நிலைப்பாட்டினை பாரிஸ் தெளிவுரப் பதிந்துள்ளார். இன்றையச் சூழலில் இரு வெவ்வேறான சமூக அரசியல் நிலைபாடுகள், இந்நாட்டினில் நிலவியிருப்பதை எழுத்தாளர் சுட்டிக் காட்டியுள்ளார். 19-ம் நூற்றாண்டில் திரளான அதே வேளையில் வளமான பண்பாட்டினைக் கொண்ட சமுதாயம், பின்னர் படிப்படியாக வடிக்கட்டப்பட்டு இன்றைய மலாய்-சீனர்- இந்தியர்- இதரம் எனும் அடிப்படையில் பிளவுப்பட்டுக் கிடப்பதைக் காணலாம். தற்கால மலேசிய அரசியலை சான்றாகக் கொண்டு பார்க்கையில், அதில் நிலவி வரும் நிறம், இனம், மொழி, மற்றும் மதம் அடிப்படையிலான அணுகுமுறைகள் நாட்டு மக்களைப் மேலும் பிளவுப்படுத்தி, சக நாட்டினரையே அந்நியராகப் பார்க்கும் போக்கானது ஆழமாக வேரூன்றிருப்பது கவனிக்கத்தக்கது. இவ்வாறான இன மற்றும் கலாச்சார வேறுபாடுகள் முற்றிலுமாக காலனித்துவக் காலத்தில் உயிர் பெற்றிருந்ததை எழுத்தாளர் மறுக்கவில்லை. 1957-ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னரும் ஒரே இனத்தாரை தூக்கிப்பிடித்தும், இதர இனத்தார் யாவரையும் பலிகடாக்களாக்கப்படும் மரபானது தொடர்ந்து முற்றுகையிட்டுக் கொண்டிருப்பது கண்கூடு. காலனித்துவ ஆச்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் மிகுதியான பாதகத்தை அனுபவித்தவர்கள் Peranakan எனப்படும் கலப்பினத்தவரே (Peranakan Chinese, Peranakan Indians, Peranakan Arabs and other Peranakan communities). இவர்களது அடையாளம் முழுமையாக நிராகரிக்கப்பட்டு மறுக்கப்பட்டது. மலேசியாவிற்கான தனித்துவ இனமாக (மலேசியர்) இவர்கள் விளங்கினர். காலனித்துவ ஆட்சி மற்றும் இனத்துவ அரசியல் எழுச்சிக்கு முன்னதாகவே இவர்கள் தென்கிழக்காசியத் தீவுகளில் அரை நூற்றாண்டிற்கு மேலாக குடிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு அட்டவணையிலும்  இவர்களின் அடையாளம் மலாய், சீனர், இந்தியர் அல்லது இதரம் என்றே குறிப்பிடப்படுகிறது (The Lost Tribes of Malaysia, pp.78- 79). புதியதொரு அரசியல் சூழலைக் கொண்டு ஒன்றுபட்ட மலேசியாவை உருவாக்குவதில் ஒரு சிலர் எண்ணம் கொண்டிருந்தாலும் இனவாத அரசியல் மற்றும் இன வேற்றுமைகளால் விஞ்சி நிற்கும் நிலையை எளிதில் கடந்து விடுவதென்பது சாத்தியமற்றதாகவே எழுத்தாளர் கருதுகிறார்.

“Of Rajas, Maharajas, Dewarajas and Kerajaan” எனும் கட்டுரையில் முற்றிலுமாக இன்றைய மலேசியாவின் அரசியல் நிலையினை எடுத்துரைத்திருக்கிறார். சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளுக்கு மேலானாலும், இன்னமும் அரசியல் சொல்லகராதியில் நமது தேசத்துக்குண்டான அரசியல் சார்ந்த சொற்களை தேடிக் கொண்டிருக்கிறோம். இராஜா, மந்திரி, செதியா (setia), பெரிந்தா (perintah), சஞ்ஜூங் (sanjung), டெர்ஹகா (derhaka), என மகுடம் (mahkota) கோட்டை(kota) இன்னமும் தமிழ், சமஸ்கிருத மற்றும் பழங்கால மலாய் நிலப்பிரபுத்துவ சமூகத்தின் மத்தியில் நிரம்பியிருந்த சொற்களை காண நேர்கிறது. இக்கட்டுரையின் மூலம் எழுத்தாளர் நிலப்பிரபுத்துவ மனப்போக்கானது எத்துனை காலம் வரலாற்றில் பயணித்திருக்கிறது என்பதை தெளிவடையச் செய்திருக்கிறார். மேலும், இதுகாறும் நாம் எதிர்கொண்ட வரலாறு மற்றும் நிறுவன நிலைமங்களின் உருவாக்கத்திற்கு இச்சமூக சூழலே மூலக் காரணம் என எழுத்தாளர் குறிப்பிடுகிறார். இன்னமும் அரசாங்கத்தை சுட்டிக் காட்டும் போது ‘கெராஜாஹன் (Kerajaan)’ எனும் சமஸ்கிருத சொல்லினை வேர் சொல்லாகக் கொண்டச் சொல்லினைப் பயன்பாட்டில் வைத்திருப்பதை பாரிஸ் சான்றாக குறிப்பிடுகிறார். இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் காலனித்துவத்திற்குப் பின்பான தலைவர்கள் இவ்வமைப்பை மேலும் வலுவுறச் செய்து, அவற்றில் முற்றிலுமாக ஆழ்ந்து மலேசிய அரசியலை உருவேற்றியதைக் காணலாம். இன்றும், தலைவர்கள் அல்லது சமூகத்தில் உயர்ந்த இடத்தினை அடைந்ததாக நம்பப்படுபவர்கள் அரங்கினுள் நுழைந்ததும் அனைவரும் எழுந்து மரியாதை செலுத்துவது (அன்றையச் சூழலில் ஆண்டைகளுக்குத் தரப்பட்ட மதிப்பு மரியாதைகள்) இதற்கான மரபு சார்ந்த சான்றாகக் கொள்ளலாம். தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை ‘வீரர்களாக’ எண்ணத் தொடங்கும் அடுத்த கணமே நாம் தோல்வியடைகிறோம். ஒரு நவீன ஜனநாயக மற்றும் நமக்குண்டான அரசியல் சொல்லகராதியின் உருவாக்கத்தை ‘taat setia’ , ‘derhaka’ போன்ற வார்த்தைகளால் மறுத்து விடுகிறோம். நவீன அரசியலுக்கான தோற்றத்தை தென்கிழக்காசியப் பகுதிகள் ஏற்காதது அவர்களின் பகுத்தறிவு, நோக்கம், மற்றும் உலகலாவிய சிந்தனையை கேள்விக்குட்படுத்துகிறது. மேலும், நமக்கே உரிய ஜனநாயக மொழியினைக் கொண்டிருக்காததன் விளைவாக, ஒவ்வொரு முறையும் தேசிய அரசுகள், நவீன குடியரசுகளாக மாற்ற முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிகிறது என பாரிஸ் கூறுகிறார்.

“Sex was not against religion then, for sex was religion” (What your teacher didn’t tell you, From Pigafaetta to Panji, p.155).

ஆண் அல்லது பெண்ணின் குணயியல்புகள் ஒரு ஆண் (பெண்ணாக) அல்லது பெண்ணிடன் (ஆணாக) காணப்படும் பட்சத்தில் அவர்கள் திருநங்கைகள் அல்லது ஆணியல் பெண்கள் என அடையாளம் கொள்ளப்படுகின்றனர். இவர்களின் இத்தோற்றமானது அந்நிய நாட்டு மோகத்தினாலேயே ஏற்பட்டதெனும் தவறான போக்கு அன்றைய, இன்றையச் சூழலில் அனைவராலும் ஏற்கப்பட்டதே. அந்நிய நாட்டவர்களால் இம்மாதிரியான குணயியல்புகள் இம்மண்ணுக்கு வரப்படவில்லையெனும் தமது விரிவான கருத்தினை பாரிஸ் “From Pigafaetta to Panji” எனும் கட்டுரையின் வாயிலாக தகர்த்தெரிந்துள்ளார். பண்டையக் கால சூழலில் இவர்களின் இருப்பானது நிராகரிக்கப்படவில்லை என்பதே உண்மை. தற்கால மத மற்றும் தார்மீக தலைவர்கள் (முற்றிலுமாக தம்மை மத, தார்மீக பாதுகாவலனாக நினைத்துக் கொள்பவர்கள்) திருநங்கைகள் மற்றும் ஆணியல் பெண்களின் இருப்பை ஒரு கண்டிக்கத்தக்க செயலாகவும், இவர்களை ஓர் அதிர்ச்சியூட்டும் இனமாகவே பிரபலமாக்கி சாடி வருகிறார்கள். வரலாற்றில் தென்கிழக்காசியப் பகுதிகளில் பாலியல் தொடர்பான சுவாரஸ்யமான அனுபவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதை இக்கட்டுரையின் மூலம் எழுத்தாளர் நினைவுக்கூறுகிறார். ஓரினச் சேர்க்கை (Homosexuality & Lesbianism), இருபாலுறவு (Bisexuality) போன்ற சிக்கலான பாலியல் உறவுகள் மற்றும் பாலியல் அடையாளங்களை தென்கிழக்கு ஆசியாவை பொருத்தமட்டில் புதிதான ஒன்றல்ல என்பது பாரிஸின் கருத்து.

இதற்குச் சான்றாக “Hikayat Panji Semirang Asmarantaka” பழங்கதையை பாரிஸ் முன்வைக்கிறார். மஜாபகித்து காலத்தில் ஜாவாவின் கிழக்குப் பகுதியில் (குரிபான்) நிகழ்ந்த மிக முக்கியமான சரித்திரக் காவியமாக இக்கதை கருதப்படுகிறது. இக்கதையின் மத்தியக் கதாபாத்திரமாக Galuh Chendera Kirana இளவரசியார், குரிபானைச் (Kuripan) சார்ந்த ராடென் இனு கர்தோபதி (Raden Inu Kartopati) எனும் இளவரசனை யுத்தத்தில் எதிர்கொண்டாள்(ன்). இரு முனைகளுக்குமிடையே ஏற்பட்ட போரானது, பாஞ்சி மற்றும் ராடென் இனுவிற்கும் இடையில் ஏற்பட்ட காதலினால் முடங்கியது. ராடென், பாஞ்சியை ஆணாகவே எண்ணினான். Galuh Chendera Kirana பெண்ணாகப் பிறந்து ஆணானக் கதையைப் பார்க்கலாம். பரலோக வம்சாவளியைச் சார்ந்த இளவரசர்கள் மற்றும் இளவரசிகள் பூமியில் தங்களின் அரசாட்சியை நிறுவுவதிலிருந்து கதை தொடங்குகிறது. அதாவது ராது குரிபான் (Ratu Kuripan), ராது டஹா (Ratu Daha), ராது ககெலேங் (Ratu Gageleng), ராது பிகு கண்டாசாரி (Ratu Biku Kandasari) ஆகியோர் அந்நான்கு தெய்வீகத் தண்மையைக் கொண்ட ஆளுநர்கள் ஆவர்.

இக்கதையின் மத்தியக் கதாபாத்திரமாக Galuh Chendera Kirana இளவரசியார் ஏற்கப்படுகிறாள். இவள் ராது டாஹாவின் மகளாவாள். ராது டஹாவிற்கு, ராது புஷ்பா நிங்ராட் (Ratu Puspa Ningrat) எனும் மனைவியும் இரண்டு காமக்கிழத்திகளும் இருந்தனர். அவர்களில் மஹாதேவி என்பவள் அரசனின் விருப்பத்திற்குகந்தவளானாள். மஹாதேவியின் மகள், Galuh Chendara Adjeng. அரசனின் மற்றொரு காமக்கிழத்தியின் பெயர் படுகா லிகு (Paduka Liku). Galuh Adjeng எனும் இளவரசி படுகா லிகுவின் மகள். தொடக்கத்திலிருந்தே இவ்விரு சகோதரிகளுக்குமிடையே போட்டியும் பொறாமையும் மிகுந்தே காணப்பட்டது. தன் தந்தையின் அன்பு மற்றும் கவனத்தைப் பெறுவதற்கு இவ்விருவரும் அடிக்கடி மோதிக் கொண்டிருந்தனர்.

குரிபான் (Kuripan) நாட்டு இளவரசனை, Galuh Chendera Adjeng மணமுடித்துக் கொண்டதும், Galuh Adjeng மேலும் கோபத்திற்கு ஆளானாள். அவளை பலி தீர்ப்பதற்காக அவளது தாயாரான படுகா லிகுவும் (Paduka Liku) இவளும் திட்டம் தீட்டி, Galuh Chendera Adjeng தேசத்துத்ரோகம் புரிந்து விட்டதாக ராது டஹாவை நம்ப வைத்தனர். அதன் விளைவாக ராது டஹா கோபம் அடைந்து, Galuh Chendera Adjeng- யை அனைவரின் மத்தியிலும் தலை மயிர் அறுக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறுமாரு ஆணையிட்டார். தனது பெயரும் புகழையும் அங்ஙணமே விட்டு தன் தாயாரோடு நாட்டை விட்டு வெளியேறினாள். அதே வனப்பகுதியில் வைத்து, Chendera Kirana தம்மை இப்பலியிலிருந்து மீட்டெடுப்பதாக உறுதிக் கொண்டு, புதிய வாழ்க்கையைத் தொடர்ந்தாள். அவளது தலை மயிர் வெட்டப்பட்ட நிலையில், ஒரு ஆணைப் போல தம்மை அடையாளப்படுத்திக் கொண்டாள். ராடென் பாஞ்சி செமிராங் அஸ்மாரந்தகா (Raden Panji Semirang Asmarantaka) எனும் அடையாளத்தோடு, ஓர் இளவரசரைப் போன்று தம்மை அலங்கரித்துக் கொண்டாள்.

டஹா மற்றும் குரிபான் இடையிலான எல்லையை இடமாற்றம் செய்து தமது சொந்த ராஜ்ஜியத்தை உருவாக்கினாள். அவளைப் பின்பற்றி ஏராளமானோர் இடம்பெயர்ந்தனர். ஆயினும், அவள் (அவன்) ஆண் வேடம் தரித்திருப்பதை யாரும் அறியவில்லை. நாளடைவில் பாஞ்சி செமிராங் லட்சியமிக்க இளவரசராக தமது மதிப்பை உயர்த்திக் கொண்டாள்(ன்). அண்டை மாநிலங்களுக்கு தமது படைகளை அனுப்பி போர் தொடுத்தாள்(ன்). குரிபான் மீது படையெடுக்க ஆணையிட்டாள்(ன்). குரிபான் மற்றும் டஹா ராஜ்ஜியத்தை சார்ந்தவர்கள் தன்னிலத்தைக் கடந்து செல்லுகையில், அவர்களை கடத்தி வருமாரு உத்தரவிட்டாள்(ன்). மேலும், குரிபான் நகரிலுள்ள அழகிய பெண்களை சிறைப்பிடித்து வரச் சொன்னாள்(ன்).

உச்சத்தில், இரு முனைகளுக்குமிடையே ஏற்பட்ட போரானது, பாஞ்சி மற்றும் ராடென் இனுவிற்கும் இடையில் ஏற்பட்ட காதலினால் முடக்கப்பட்டது. ராடென், பாஞ்சியை ஆணாகவே எண்ணினான். இவ்வாறு ஓரே பாலின ஈர்ப்பு, காதல், அதனைத் தொடர்ந்த திருமணம் போன்ற அம்சங்கள் இக்கதையில் ஒருங்கிணைந்த பகுதியாகவே கொள்ளப்படுகிறது. மேலும், ஒருபோதும் இக்கதையில் இவ்வாறான உறவு முறைகளை தர்ம உபதேசம் எனும் பெயரால் தவறு என குறித்துப் பேசப்படவில்லை என்பதை பாரிஸ் குறிப்பிடுகிறார் (What your teacher didn’t tell you, Pigafetta to Panji, pp,159- 166; Hikayat From The Ancient Malay Kingdom, pp121- 131).

நூலின் இறுதியில் “Hang Tuah the Pacifist”  எனும் பகுப்பாய்வுக் கட்டுரை சேர்க்கப்பட்டிருக்கிறது. காலனிக்குப் பிந்தைய தலைவர்கள் ஹங் துவாவை மலாய்க்காரர்களின் போர் வீரனாகக் கொண்டாடினர். ஹங் துவாவின் “Tak kan Melayu hilang di dunia” எனும் தார்மீகமந்திரம் இன ரீதியில் பொருள் கொள்ளப்பட்டது. இனம், அதிகாரம், மற்றும் தங்களின் அடையாளங்கள் அழிக்கப்படும் எனும் அச்சத்தில் இன ஐக்கிய அடிப்படையிலான அறைக்கூவலொன்று இனத்துவதேசியவாத ஆதரவாளர்களால் விடப்பட்டது. ஹங் துவாவின் இரண்டாம் பகுதி மிக முக்கியமானது என பாரிஸ் தெளிவுப்படுத்துகிறார். புதிய முன்னோக்கோடு அடையாளப்படுத்தப்படும் இவ்வீரன், இரண்டாம் பாகத்தில் கடல் கடந்த நிலங்களில் மலாக்காவின் தூதுவனாக வலம் வந்துள்ளதை கீழ்காணும் பத்தியில் அறிமுகப்படுத்தி கட்டுரையை எழுத்தாளர் ஆழம் புகுகிறார்.

“Sadly, most Malaysians today have yet to read the Hikayat Hang Tuah in its entirely, and many do not even realise that the most common versions of the story that we know (particularly the more plebeian renderings of the tale dished out to us thanks to the modern miracle of cinema) are incomplete. In fact, most Malaysians remain blissfullly unaware of the second part to the Hang Tuah epic, where Tuah the warrior assumes a different role altogether, as the emissary of Melaka to foreign lands” (Hang Tuah the Pacifist, p.242).

ஹங் துவாவிற்கும் விஜயநகர (Bijaya Nagaram) அரசாட்சி ஆளுநருக்கும் இடையிலான (Krishnan Deva Raya) நட்புறவை பறைசாற்றும் வண்ணமாக சில குறிப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவின் மொழி மற்றும் கலாச்சார ஒற்றுமைகள் அடிப்படையில் நோக்கும் பொழுது, சுல்தான் மன்சூர் ஷா (Sultan Mansur Shah), மலாக்கா மற்றும் கிலிங் (இங்கு கலிங்க/ கிலிங் எனப்படுவது 14ம்- 17ம் நூற்றாண்டு வரை நீடித்திருந்த, தென்னிந்திய ராஜ்ஜியமான விஜயநகரத்தைக் குறிக்கிறது) நிலத்தினுடனான தொடர்பினை நெருக்கமாக்க விருப்பம் கொண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது (What your teacher didn’t tell you, Hang Tuah the Pacifist, p.250). ஹிகாயாட் ஹங் துவா எழுதப்படுவதற்கு முன்பதாகவே மலாய் தீவுக்கும் (Malay Archipelago), கிழக்கு மற்றும் தென்னிந்தியாவுக்குமுடனான கடல் சார்ந்த வர்த்தக உறவு பல நூற்றாண்டுகளுக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி 15-ம் நூற்றாண்டு வரையில் தமிழகத்தை ஆண்ட முப்பெறும் குலத்தவர்களான சேரன், சோழன், பாண்டியர்கள் பிற்காலத்தில் கடல்சார் வல்லரசாகியது அறிந்ததே. இக்காலத்தில் கடல் கடந்து பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதன் வாயிலாக இந்தியாவிற்கும் தென்கிழக்காசியாவிற்குமான தொடர்பு இறுக்கமானது. இந்து மற்றும் பௌத்த மதங்கள் பரவுவதற்கான சாத்தியத்தையும் ஏற்படுத்தியது. ஆயினும், இந்து (பார்பனியம்) மதம் முதன் முதலாக தென்கிழக்காசியப் பகுதிகளில் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலே இப்பகுதியில் நுழைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது (D.G.E.Hall, A History of South-East Asia, pp.12- 13). கடல் கடந்த பயணத்தின் போது, தமிழ் பேரரசுகள் இலங்கை மற்றும் தென்கிழக்காசியா மீதான ஆக்கிரமிப்புப் போர்களை முன்னெடுத்தன. அவ்வரிசையில் இராஜேந்திர சோழனின் படைகள் கடல் கடந்து தென்கிழக்காசிய அரசாட்சிகளை (கடாரம், மாபப்பாளம், மானக்கவாரம், தலைத்தக்கோலம், இலாமுரிதேசம், இலங்காசோகம், மாயிருடிங்கம், மாதமாலிங்கம், வளைப்பந்தூரு, பண்ணை, மலையூர், ஸ்ரீவிஜயம், மேவிலிம்பாங்கம்) வென்றது குறிப்பிடத்தக்கது (K.A.Nilakanta Sastri, South Indian influences in the far East. Hind Kitabs, Bombay, 1949). இவ்வரலாற்றை நன்கறிந்தவராக சுல்தான் மன்சூர் ஷா வரையறுக்கப்படுகிறார். தென்னிந்தியா மற்றும் தென்கிழக்காசியப் பகுதிகளில் மொழி மற்றும் கலாச்சார பகிர்வுகள் நீண்ட கால உறவின் அடிப்படையில் மட்டுமே சாத்தியம் என்பதும், அதன் காரணமாகவே கலிங்கர்களுடனான தமது உறவினை நெருக்க முயன்றார் என்பதும் பாரிஸ் குறிப்பிடுகிறார்.

“Shahadan pada bichara kekanda, antara Melaka dan benua Keling itu hendak-lah di-hampirkan, jangan-lah lagi helat dalam-nya” (What your teacher didn’t tell you, Hang Tuah the Pacifist, p.251).

மேலும், ஹங் துவா கலிங்க, அரபு, துருக்கிய மற்றும் சியாம் மொழிகளைக் கற்றறிந்தவராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான, சூழ்நிலையில் ஹங் துவா தம்மை ஒரு மலாய்க்காரர் மற்றும் மலாக்காவைச் சார்ந்தவன் என அடையாளப்படுத்தும் நிலை தேவையாற்றதாகக் கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும், அதனைக் கடந்த ஓர் உணர்வு அவரிடத்தில் உரைந்திருக்கலாம் எனவும் பாரிஸ் நம்புகிறார். போகும் இடமெல்லாம் தன்னிலமாகக் கொண்டதோடு, எவ்விடமும் தம் உரைவிடமே என நம்பியவர் ஹங் துவா. விஜயநகரத்திற்கு தூதுவனாக சென்றிருந்த போது, அந்நாட்டு (விஜயநகரம்) தூதுவனாகவே சீனாவிற்கு ஹங் துவா பயணம் மேற்கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது. இனத்துவதேசியவாதிகளால் மாற்றி அமைக்கப்பட்ட ஹங் துவாவைப் பற்றிய குறிப்புகள், ஹங் துவா, சுல்தானின் சுயநலத்திற்காக பயன்படுத்தப்பட்ட கொலையாளியாக, காவலனாக அடையாளப்படுத்தப்பட்டார் என்பது எழுத்தாளரின் குற்றச்சாட்டு.

இதர கட்டுரைகள் போலில்லாமல், The Red-Green Alliance எனும் கட்டுரையில், ஆசிரியர் தற்போதைய மக்கள் கூட்டணி கட்சியில் (Pakatan Rakyat) உருப்பியம் பெற்றிருக்கும் பாஸ் கட்சியின் மூன்றாவது தலைவரான டாக்டர் புர்ஹனுட்டின் அல்- ஹெல்மி (Dr.Burhanuddin Al-Helmi) பற்றிய வாழ்க்கை குறிப்பினை இணைத்து, அன்றைய பாஸ் கட்சியின் முற்போக்கு சிந்தனையை பதிந்துள்ளார். 1951-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பாஸ் கட்சியின் அன்றையச் செயல்பாடுகள், இன்றைய செயல் திட்டங்களுக்கு மாறுபட்டிருப்பதை கட்டுரையின் வாயிலாக அறியலாம்.  ஓர் இஸ்லாமிய அரசினை அல்லது நாட்டினை அமைப்பதற்கான டாக்டர் புர்ஹனுட்டினின் புரிதலானது அவரது சமகாலத்து மற்றும் சக கட்சி உறுப்பினர்களின் எண்ணங்களுடன் பல வழிகளில் வேறுபட்டிருந்தது. நம்பகத்தன்மையை வெளிப்படுத்தும் இஸ்லாமியவாத அரசியலைலோ அல்லது பழைமை என சுட்டிக்காட்டி அடிப்படையான இஸ்லாமியத்தின் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியாகவோ அல்லாமல், தேசியவாத எதிர்ப்புவாதிகள் மற்றும் காலனித்துவ எதிர்ப்பாளர்களின் பாதிப்பு இவரின் சித்தாந்தத்தில் காண முடிந்தது. மாற்றுச் சிந்தனையுடைய நவீன இஸ்லாமியத்தை ஏற்படுத்தி மேலாதிக்க மற்றும் சக்திவாய்ந்த மேற்கு தாராளவாத, முதலாளித்துவ பொருளாதாரத்தை எதிர்க்கொள்வதற்கு எண்ணம் கொண்டிருந்தார். டாக்டர் புர்ஹனுட்டின் கீழ் 1959 தொடங்கி 1969 வரை பாஸ் கட்சி முற்போக்கான மற்றும் ஜனநாயகத்துடன் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்திற்கு பின்பு மலாய்-முஸ்லீம்கள் சுயாதீனமாக தங்களுக்குண்டான விதிமுறைகளை பயன்படுத்த இயலாத சூழலில் சுதந்திரம் என்பது பயனற்ற அல்லது அர்த்தமற்ற ஒன்றாகவே இவர் கருதினார். இவருக்கு எதிராக மாற்றுக் கருத்தினை கொண்டிருந்த டாக்டர் சுல்கிப்ளி (பாஸ் கட்சியின் அப்போதைய துணைத் தலைவர்) சுதந்திரத்தை அங்கிகரித்து இனி ஓர் இஸ்லாமிய நாட்டினை அமைப்பதற்கு உத்தேசித்தார். அம்னோவின் மூலம் கிடைக்கப்பெற்ற சுதந்திரத்திற்கும், அதற்கு முந்தைய காலனித்துவ ஆட்சிக்கும் பெரிதான இடைவெளியேதுமில்லை என டாக்டர் ஊகித்தார். ஆங்கிலேயர்களுக்குப் பதிலாக பழமைவாத தேசியவாதிகள் இனி காலனிய சக்திகளின் தரகு முகவர்களாக செயல்படுவார்கள் என வாதிட்டார்.

“Tidaklah besar maknanya kemerdekaan itu kepada PAS, jika umpamanya perjuangan kemerdekaan itu berhasil menghapuskan satu penjajahan asing oleh orang yang tidak seagama, lalu digantikan oleh penjajahan lain oleh orang yang seperti itu juga” (What your teacher didn’t tell you, The Red-Green Alliance, p208).

மடினா நகர் நபி சமூகங்களின் உயரிய கனவுகளை விடுத்து, கலிபாவின் பொற்காலத்தை கடந்த ஒரு நவீன மற்றும் முற்போக்கான இஸ்லாமியத்தை உருவாக்கம் கொள்வதில் உறுதிக் கொண்டிருந்தார். எகிப்தின் அப்தூல் காமேல் நாசரின் (Abdel Gammel Nasser) தீவிர முயற்சிக்குப் பின்பு சர்வதேச ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இஸ்லாமிய தேசியவாதம் உருப்பெற்றது. ஒரு முஸ்லீம் மற்றும் தேசபக்தராக, நாசர் தேசிய சுதந்திரம் மற்றும் தாயகத்தின் இறையாண்மைக்காகப் பாடுபட்டார். இவரை முன்னோடியாகக் கொண்டு டாக்டர் புற்ஹனுட்டின் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது (The Red-Green Alliance, p.209). இவரின் பாதையில் செயல்பட்டாலே கட்சி மறுமலர்ச்சியடையும் என பாரிஸ் கருதுகிறார். முற்போக்கான சிந்தனையுடன், முதல் இனவெறி எதிர்ப்பாளராக எழுத்தாளர் இவரை சித்தரித்திருப்பது மேலும் இவரைப் பற்றிய தகவல்களை திரட்ட உந்துதலாக அமைந்துள்ளது.

தமது ஆய்வினை நன்முறையில் கையாண்டு நடுநிலையாக தாம் தேர்ந்தெடுத்த தலைப்புகளுக்கொப்ப கருத்துகளை பாரிஸ் விரிவாக பேசியுள்ளார். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லாமல், இனம், மொழி, மதம் என வேலியிடப்பட்டப் பகுதிகளினுள் நுழைந்து, அவ்வேலிகளை கடந்து வரலாறு மற்றும் உண்மைக்கு புறம்பில்லாத கருத்துகளை எழுத்தாளர் பதித்துள்ளார். ஏதோ ஒரு காரணத்தினால், முகத்தை சுளித்துக் கொள்ளும் அளவிற்கு சோர்வு நிரம்பிய தளமாகவே வரலாறு கிடத்தி வைக்கப்பட்டு விட்டது. சரியோ தவறோ, யாரேனும் தம்மினத்தை இழிவு படுத்தி பேசினால், எவரோ எழுதியதை சமூகத் வலைத்தளங்களில் விவாதிக்கத் தொடங்கி விடுவர். அப்போது மட்டும் வரலாறு குறித்த ஆர்வம் ஒவ்வொரு முகரையிலிருந்தும் பீரிட்டுப் பாயும். சொல்லித் தீர்ந்தப் பின்பு உரையாடல்கள் நிகழலாம். அதன் வேட்கை ஓங்கும் தருணத்தில் அவை விவாதங்களாக உருவடையலாம். ஆயினும், உண்மையைக் கூற முற்படுபவன் முளையிலேயே கிள்ளி எறியப்படுவான் என்பது இந்நாட்டு சூழலில் அனைவரும் அறிந்ததே. அரசியல் மட்டுமன்றி மதம், இனம், மொழிக் காப்பாளன் எனும் வேடம் தரித்து பல்வேறு நாடகங்களை அவரவர் சொகுசுக்கேற்ப ஆங்காங்கே அரங்கேற்றி, பின்பு அம்மேடையிலேயே நின்று வியாக்கியானம் பேசும் நிலை இன்றளவில் மிகுதியாகக் காணப்பெறுகிறது. இவ்வாறான மிரட்டல்களுக்கு அப்பால் சொல்ல வருவனவற்றைப் பளிச்சென்று ஐயம் தெளிவுற எடுத்தியம்பும் நிலையை ஆய்வாளன் கொண்டிருப்பது அவசியம்.

மேற்கோள்:

சொக்கலிங்கம், ந. (செப்டம்பர், 2011). தகவல் தொடர்பியல் துறை பற்றிய ஆய்வு அனுபவம். In தமிழில் ஆய்வு அனுபவங்கள் (pp. 18- 26). சென்னை: சாரதா பதிப்பகம்.

Ahmad Noor, F. (2013). What Your Teacher Didn’t Tell You (7th ed., Vol. 1, p. 1). Petaling Jaya: Matahari Books.

Ahmad Noor, F. (2013). Pity The Poor Keris. In What Your Teacher Didn’t Tell You (7th ed., Vol. 1, pp. 24-25). Petaling Jaya: Matahari Books.

Ahmad Noor, F. (2013). Pity The Poor Keris. In What Your Teacher Didn’t Tell You (7th ed., Vol. 1, p. 32). Petaling Jaya: Matahari Books.

Kassim Ahmad, ed. Hikayat Hang Tuah. Commemorative edition, Dewan Bahasa dan Pustaka, Kuala Lumpur. 1967.

Ahmad Noor, F. (2013). Pity The Poor Keris. In What Your Teacher Didn’t Tell You (7th ed., Vol. 1, p. 33). Petaling Jaya: Matahari Books.

Ahmad Noor, F. (2013). The Lost Tribes of Malaysia. In What Your Teacher Didn’t Tell You (7th ed., Vol. 1, p. 78- 79). Petaling Jaya: Matahari Books.

Ahmad Noor, F. (2013). From Pigafetta to Panji. In What Your Teacher Didn’t Tell You (7th ed., Vol. 1, pp. 159-166). Petaling Jaya: Matahari Books.

Hikayat Panji Semirang. (2012). In Hikayat: From The Ancient Malay Kingdoms (1st ed., pp. 121-131). Kuala Lumpur: Utusan Publications & Distributions Sdn Bhd.

Ahmad Noor, F. (2013). Hang Tuah The Pacifist. In What Your Teacher Didn’t Tell You (7th ed., Vol. 1, pp. 242-250). Petaling Jaya: Matahari Books.

Ahmad Noor, F. (2013). The Red Green Alliance. In What Your Teacher Didn’t Tell You (7th ed., Vol. 1, pp. 208-237). Petaling Jaya: Matahari Books.

Hall, D.G.E (1981). South-East Asian Proto-History. In A History of South-East Asia (4th ed., pp. 12-13). New York: Palgrave Macmillan.

K.A.Nilakanta Sastri (1949). South Indian influences in the far East. Bombay: Hind Kitabs.

POPULATION DISTRIBUTION AND BASIC DEMOGRAPHIC CHARACTERISTIC REPORT 2010. (2011, August 5). Retrieved from http://www.statistics.gov.my/portal/index.php?option=com_content&view=article&id=1215:population-distribution-and-basic-demographic-characteristic-report-population-and-housing-census-malaysia-2010-updated-2972011&catid=130:population-distribution-and-basic-demographic-characteristic-report-population-and-housing-census-malaysia-2010&Itemid=154&lang=en

Tan Eng Hock (2008, April 26). Hisham regrets wielding keris, he apologises to all Malaysians. The Star. Retrieved December 3, 2014, from http://www.thestar.com.my/story/?file=/2008/4/26/nation/21075186&sec=nation

Baharuddin, Z. (2010, June 24). So what was that about the keris and Chinese blood? The Malaysian Insider. Retrieved November 30, 2014, from http://www.themalaysianinsider.com/opinion/zaidel-baharuddin/article/so-what-was-that-about-the-keris-and-chinese-blood

8 comments for “What Your Teacher Didn’t Tell You: மெய்ப்பொருள் காண்பதறிவு

  1. வ. புருஷோத்தமன்
    January 1, 2015 at 11:01 pm

    இங்கு ‘கெரிஸ்’ எனப்படும் ஆயுதம் என்னது? இந்தியாவுடன் தொடர்புடையதா? விளக்கம் தேவைப்படுகிறது நண்பரே.

  2. நவீன் செல்வங்கலை
    January 3, 2015 at 9:23 pm

    ‘கெரிஸ்’ என்பது மலாய் சமூகத்தாரின் (இந்துவாகயிருந்து முஸ்லீமான காலக்கட்டத்திலிருந்தே) ஆயுதமாக கருதப்படுகிறது. கெரிஸின் வலைவானப் பகுதி, மற்றும் மலாய் சமூகத்தினர் ஆரம்பக்காலத்தில், இந்திய நாட்டின் பாரம்பரியத்தை ஏற்றதன் வாயிலாக இது இந்திய நாட்டிலிருந்தே வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இது குறித்த ஆய்வொன்றை மேற்கொண்டு வருகிறேன். மலையாட்டுக் கொம்பினோடு (ibex horn) ஒப்பிட்டுப் பேசுகிறார்கள், ஆயினும் சில அறிஞர்கள் இதனை மறுக்கின்றனர். மலையாட்டுக் கொம்பின் சுழன்ற வடிவத்தையும், கெரிஸின் தட்டையான வலைவுகளையும் இரு வெவ்வேறு அடையாளங்களாகவே இவர்கள் கருதுகிறார்கள். அப்படி தமிழ் நாட்டில் அல்லது இந்தியாவில் இது போன்றதொரு ஆயுதங்கள் வழக்கில் இருக்கிறதா/ இருந்ததா என்பதை நீங்களும் சான்றுகளை தந்து உதவலாம். நன்றி.

    படம்: http://www.sciencebuzz.org/sites/default/files/images/2003-06.jpg

    • Raj Sathya
      January 4, 2015 at 12:45 am

      Very informative,very impressive,thanks and thanks.

      • நவீன் செல்வங்கலை
        January 8, 2015 at 9:02 pm

        நன்றி ராஜ் சத்யா.

  3. m.karunakaran
    January 8, 2015 at 2:01 pm

    siranta karutaggam konda kandurai.

    • நவீன் செல்வங்கலை
      January 8, 2015 at 9:07 pm

      நன்றி கருணாகரன். மேலும் சில முக்கியமான கருத்தியல்களை கலைத்துப் பேச முயலுகிறேன்.

  4. Bennedict Vasanthan
    January 20, 2015 at 8:49 am

    உங்களின் புத்தகங்கள் ஏதேனும் உண்டா தோழர்? எழுத்தாளர் சொல்லிய கருத்துகளுக்கு நல்லதொரு வடிவம் தந்துள்ளீர்கள். உங்கல் பிளோக் லிங்க் இருந்தால் தாருங்கள். வெளிநாடு வர ஏதேனும் உத்தேசமிருந்தால் சொல்லுங்கள், பார்த்து பேசலாம்.

  5. நவீன் செல்வங்கலை
    January 27, 2015 at 12:16 pm

    தற்போதைக்கு நூல் வெளியீடும் எண்ணம் ஏதும் இல்லை. ப்ளோக் ஒன்று தயார் செய்து கொண்டிருக்கிறேன். போதுமான கட்டுரைகள் சேர்ந்ததும் பொது வாசிப்பிற்கு பகிரலாம். சந்திக்கலாம்.., ஆனால், அதற்கு முதலில் எந்நாடு என தெரிய வேண்டுமே

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...