மனித வாழ்வின் ஒவ்வொரு தருணமும் படைப்புக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உட்பட்டதாகவே அமைகின்றது. வாழ்வை கூர்ந்து கவனித்தால் நம் கருத்துப் பகிர்வின் திறன் அடிப்படையிலேயே நம் வாழ்க்கை நிலையும் இருப்பதைக் காண முடியும். வேலை, பதவி உயர்வு, வியாபார அனுகூலங்கள், பல்கலைக்கழக தேர்வின் மதிப்பீடுகள், தேர்தலில் வெற்றி தோல்வி எனத் தொடங்கி சிலரின் பிழைப்புக்கும் படைப்புத் திறன் அல்லது கருத்துப் பகிர்வு தொடர்பான பேச்சாற்றல் அடிப்படையாக அமைகின்றது. இயல்பாகவே ஒவ்வொருவருக்கும் கருத்து பகிரும் திறன் இருக்கவே செய்கின்றது. அதனை மேம்படுத்திகொள்ளவும் செம்மைபடுத்திக்கொள்ளவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளே நம்மை சிறந்த மேடை பேச்சாளர்களாகவும் படைப்பாளர்களாவும் உயர்த்துகின்றது. அவ்வகையில் சிறப்பான மேடை பேச்சாற்றலுக்கும் படைப்புக்கும் நான்கு முதல்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அவற்றை கீழ்காணும் வகையில் பகுக்கலாம்.
- பார்வையாளர்களை கருத்தில் கொள்ளுதல்
- படைப்பை ஒழுங்குபடுத்துதல்
- படைப்பின் நுட்பங்களை முழுமையாக கைவரப் பெருதல்
- படைப்பு துணைப் பொருட்களைச் சரியாக பயன்படுத்தல்
இவை நான்கில் பெரும்பாலானவர்கள் அதிகம் அலட்சியம் செய்வது மூன்றாவது பகுதியாகும். எங்கு படைக்கப் போகிறோம், எதைப் படைக்கப் போகிறோம், எதன் துணையுடன் படைக்கப் போகிறோம் என்பதில் காட்டப்படும் அக்கறை எப்படி படைக்கப் போகிறோம் என்பதில் காட்ட தவறும் போக்கு பரவலாகக் காணப்படும் அம்சமாகும். இதனாலேயே மேடைகளிலும் நேர்காணல்களிலும் பலர் தொடர் தடுமாற்றங்களை அனுபவித்து தங்களை பொதுவெளியில் மறைத்துக் கொள்கின்றனர். மேலும் சிலர் மேடைகளில் பேசும், படைப்புகளை செய்யும் திறனை எதோ அபூர்வமான திறனாக கருதி தங்களுக்கு அதெல்லாம் வராது என விழகி நிற்கின்றனர்.
அவ்வகையில் எளிமையான சில வழிமுறைகளின்வழி மேடை பேச்சாற்றலையும் படைப்புத் திறனையும் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதை தொடர்ந்து காண்போம்.
ஒத்திகை செய்தல்
மிக நேர்த்தியான மேடை பேச்சுக்கும் படைப்புக்கும் ஒத்திகை மிக அவசியமாகின்றது. ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருந்தாலும்கூட அவர்களுக்கும் ஒத்திகை அவசியமான ஒன்றாகும். காரணம் பார்வையாளர்களின் நிலைக்கு ஏற்பவே மேடைப் பேச்சுகளும் படைப்புகளும் அமையும். தலைப்பு ஒன்றாகவே இருந்தாலும்கூட மாணவர்களிடம் பேசும்போதும் கல்விமான்களிடம் பேசும்போதும் அவரவருக்கு ஏற்ற வகையில் பேசுவதற்கு ஒத்திகை பார்த்துக் கொள்வதன்வழி படைப்பில் ஏற்படும் தடுமாற்றங்களை எதிர்கொள்ள முடியும் (Kent E. Menzel, 2009: 17-26).
பெரும்பாலும் கையெழுத்துப் படிவத்தை மட்டும் நம்பிக்கொண்டு மேடையேறிவிடும் நண்பர்களை நாம் பல மேடைகளில் பார்ப்பதுண்டு. எல்லா நேரங்களிலும் இம்மாதிரியான கையெழுத்துப் பிரதிகள் பயனளிக்காது. மாறாக குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் உண்டாக்குவதோடு பார்வையாளர்களுக்கு எரிச்சலையும் ஏற்படுத்திவிடும். என்ன பேசப்போகிறோம் என்பதை காகிதங்களில் வரிக்கு வரி எழுதி வைத்துவிடும்போது படைப்பாளர்களின் முழு கவனமும் காகிதத்தில் உள்ள சொற்களிலேயே இருக்கும் நிலை உருவாகி விடுகின்றது. இம்முறையானது படைப்பு எனும் தன்மையை இழந்து வாசிப்பு எனும் அளவிலேயே நின்றுவிடும் சாத்தியம் கொள்கிறது. மேலும், பார்வையாளர்களுடன் கண் தொடர்பற்றுபோய் புரிதலுக்குப் பெரும் தடையாகிவிடுகின்றது.
காகிதத்தில் எழுதியவற்றை ஓரிரு முறை படித்துப் பார்த்து, மனதளவில் உள்வாங்கிக் கொண்டு, பின்பு மனதிலிருந்து சொல்ல வந்த கருத்தைக் கூறும்போது மிக நேர்த்தியாக மக்களின் மனதை சென்றடையும்.
மேடை அச்சத்தை தவிர்த்தல்
அதிகமானோர் பெரிய கூட்டங்களுக்கு மத்தியில் பேசுவதற்கு மிக அடிப்படையான காரணமாக அமைவது மேடையில் ஏற்படும் பதற்றமும் நடுக்கமுமாகும். பத்துபேருக்கு மத்தியில் நின்று பலத்த குரல் கொடுக்கக்கூடியவர்களை மேடைக்கு அழைத்து பேசச் சொன்னால் விழி பிதுங்கி, தொண்டை வறண்டு போய்விடுவர். சராசரி ஆட்களுக்கு மட்டுமின்றி தொடர்ந்து மேடைகளில் உரையாற்றுபவர்களுக்குக்கூட இந்த பதற்றம் இருப்பதை நெருங்கி விசாரித்தால் தெரிந்து கொள்ளலாம். கூட்டத்தில் ஒருவராக பேசும்போது நம்மை ஒத்த கருத்துடைய ஒரு சிலரை அன்றி மற்றவர்களுக்கு நன் முகம் தெரியப் போவதில்லை. ஆனால், மேடையில் அல்லது பலரின் முன்னிலையில் நின்று பேசும்போது ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனமும் நம்மீது இருப்பதை பற்றிய பிரக்ஞையே நமது பதற்றத்திற்கான அடிப்படை காரணமாக அமைகிறது.
முதலில் இதனை ஓரளவு நிவர்த்தி செய்வதன்மூலம் பதற்றத்திற்கான மற்ற காரணிகளை மிக எளிதாக எதிர்கொள்ள முடியும். தொடக்கமாக, நாம் ஏன் பார்வையாளர் கூட்டத்தைக் கண்டு அஞ்சுகிறோம் என்கிற புரிதல் இதற்கு மிக மிக அவசியமாகும். அவற்றை பின்வருமாறு பட்டியலிடலாம்.
- பார்வையாளர்கள் நம் பேச்சில்/படைப்பில் ஏதேனும் தவறை சுட்டிக்காட்டிவிடலாம்
- பார்வையாளர்கள் நம்மைவிட அதிகம் தெரிந்தவராக இருக்கலாம்
எவ்வளவுதான் சிறப்பாக நம்மை தயார்படுத்திக் கொண்டு வந்தாலும் இவ்விரு விதமான எண்ணங்கள் மேடையில் தோன்ற ஆரம்பித்தால் தொடர்ந்து பேச வந்ததை மறந்து, திக்கித்தினறி விடுவது உறுதி. ஆக, இதனை மிக எளிய பயிற்சிகளின்வழி எதிர்கொள்வதன்மூலம் சிறந்த படைப்பினை நிச்சயமாக வழங்க முடியும்.
பார்வையாளர்களை எதிர்கொள்ளும் முறை
பார்வையாளர்கள் நாம் சொல்லவந்த எதை பற்றியும் முன்னறிவு இல்லாதவர்களாக கற்பனை செய்து கொள்ளுதல்.
பார்வையாளர்களே இல்லை என்பது போலவும், காலியான அறையில் நின்று பேசிக் கொண்டிருப்பதைப் போலவும் கற்பனை செய்து கொள்ளுதல்.
அறையின் ஒவ்வொரு திசையிலும் ஏதாவது ஒரு சில நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களைப் பார்த்து பேசுதல்.
Beta-blockers எனப்படும் மருந்தை உட்கொள்ளுதல் (இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்த உதவும் ஒருவகை drug. இதற்கு மாற்றாக வாழைப்பழத்தையும் உட்கொள்ளலாம்).
உரை/படைப்பு நிச்சயமாக பார்வையாளர்களைக் கவரும் என்ற தன்னம்பிக்கை.
பார்வையாளர்களைப் பற்றிய பதற்றம் படைப்பின் மீதான நமது கவனத்தை சிதைக்கும் எனும்போது அதை இலகுவாக எதிர்கொள்ளும் வழிகளை முதலில் நன்கறிந்து பின்பற்றுவது மிக மிக அவசியமாகும் (Tim Hopf, 2009: 183-198). அப்படியும் பதற்றத்தை எதிர்கொள்ள சிரமமாக இருப்பின் உரையின் துணைப் பொருட்களில் அடிக்கடி பார்வையை நகர்த்தியும் ஓரளவு இப்பதற்றத்தை குறைத்துக் கொள்ள முடியும்.
உடை, உடல் அசைவுகளில் கவனம் செலுத்துதல்
பெரும்பாலும் படைப்பாளர்கள் இதனை அவசியமற்றதாக எண்ணி அலட்சியம் செய்துவிடுவதுண்டு. ‘அட்டையைப் பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே’ என்று வியாக்கியானம் பேசி தங்களின் அறியாமையை மறைத்துவிடுவர். முதலில் மகாத்மா காந்தி, விவேகானந்தர், பாரதி போன்றவர்கள் தங்களின் ஆடை முறையை மிகவும் கவனித்துத் தேர்ந்தெடுத்திருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் உடை பாணிக்கும் செயல்பாடுகளுக்கும் அதிக பிணைப்பு இருப்பதை அவர்களின் வாழ்க்கையினூடே காண முடியும்.
உடை மற்றும் அங்க அசைவுகள் பற்றி கூறும்போது, ‘A First Impression Says Everything’ என்று பரவலாகக் கூறப்படுவதுண்டு. அல்லது தமிழில் ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பதையும் ஓரளவு இதனுடம் பொருத்திப் பார்க்க முடியும். அதாவது நம்முடைய முதல் தோற்றம் பார்வையாளர்களுக்கு நம் மீதான முதல் உணர்வை ஆழமாகப் பதியச் செய்துவிடும். நம்மை முதலில் பார்ப்பவர்கள் நான்கு வினாடிகளில் நம்மீதான கருதுகோல்/அபிப்ராயத்தை உருவாக்கிக் கொள்வர் என்பது மனோவியலாளர்களின் கருத்தாகும். அவ்வகையில் உடை மற்றும் அங்க அசைவுகளைக் கூடுமானவரை மனோவியல் ரீதியில் ஏற்று அணுகுவது சிறப்பாகும். வேலைக்கான நேர்காணல்கள், தொலைக்காட்சி நேர்காணல்கள், மேடையில் நடத்தப்படும் உரைகள் போன்றவற்றிற்கு இதனை சற்று ஆழமாக அணுகி பின்பற்றுவது கூடுதல் சிறப்பாகும்.
அதுவும் மேடையில் படைப்பாளர்களின் தோற்றம் பெருமளவில் பார்வையாளர்களுக்கு சில அடிப்படை முன் முடிவுகளைக் கொடுப்பதாகவே இருக்கும். அவ்வகையில் நமது படைப்பின்மீது பார்வையாளர்களின் முதல் கவனத்தை ஏற்படுத்த நமது உடை மற்றும் அங்க அசைவுகளிலும் கவனம் செலுத்துவது அவசியமாகிவிடுகின்றது. ஆண்களின் உடைகளில் மூன்றுக்கும் அதிகமான நிறங்கள் இருப்பதும், பெண்கள் அதிகமான கைவேலைபாடுகள் நிறைந்த ஆடைகள் அணிவதும் பார்வையாளர்களின் கவனத்தைச் சிதைப்பதாகவும், கண்களுக்கு அழுப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். இதைப் போலவே அதிக சத்தத்தை ஏற்படுத்தும் காலணிகள், நிற்பதற்கு சிரமத்தை ஏற்படுத்தும் உயர் குதிக்கால் கொண்ட காலணிகளையும் படைப்பாளர்கள் தவர்ப்பது சிறப்பு.
படைப்பின்போது கைகளை நெஞ்சுப்பகுதியில் இறுகக் கட்டிக்கொள்வது, பிரசங்க பகுதியில் (podium) உடலை மறைத்துக் கொள்வது, சுவர் அல்லது நாற்காலி மேசைகளில் உடலை சாய்த்துக்கொள்வது, ஒரு காலில் நின்றுக் கொண்டு இன்னொரு காலை ஆட்டுவது, தலை சொறிவது போன்ற அங்க அசைவுகள் யாவும் நிச்சயமாக தவிர்க்க வேண்டியவையாகும். உடலை நேராக வைத்து நிற்றல், தலையை நிமிர்த்தி பார்வையாளர்களைப் பார்த்து பேசுதல் போன்றவை படைப்பாளர்களுக்கு உள்ளூர ஒருவித கட்டுப்பாட்டையும் மன அமைதியையும் கொடுத்து படபடப்பைப் போக்க உதவுகிறது; பார்வையாளர்களுக்கும் படைப்பாளரின்மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்துகின்றது.
படைப்பாளர்கள் அமர்ந்து பேசும் சூழல் ஏற்படும்போது உடை தேர்வில் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். அமரும் சூழலில் நமது உடை தசைகள் சற்று விரிவடைந்து வழக்கத்தைவிட சற்று கூடுதல் எடையுடையவராக காட்டும். இம்மாதிரியான சூழல்களுக்கு சற்று தளர்வான உடையை அணிதல், தொப்பையுடைய ஆண்கள் சட்டையை கால்சட்டைக்குள் செருகுதலை தவிர்த்தல் சிறப்பாகும். மேலும், முதுகுத் தண்டை கோணலாக்காமல் நிமிர்ந்து அமருதல், தலையை உயர்த்தி பார்வையை எதிரில் அமர்ந்திருப்பவர்மீது நேராக வைத்தல் போன்றவை படைப்பாளரை இன்னும் நேர்த்தியாகக் காட்ட உதவும்.
சிறந்த பேச்சாளர்கள் எப்போதும் பார்வையாளர்களுடன் கண் தொடர்பு (eye contact) கொண்டிருப்பவர்களாக இருப்பர். உண்மையில் பார்வையாளர்களின் மீதான கண் தொடர்பு பல வழிகளில் படைப்பாளர்கள் தங்களை/தங்களது படைப்பை மேம்படுத்திக் கொள்ளவும், சீர்படுத்திக் கொள்ளவும் உதவும். பார்வையாளர்களுக்கு நம் படைப்பு/பேச்சு சலிப்பை ஏற்படுத்துவதாகவும் உற்சாகமின்மையைக் கொடுப்பதையும் அவர்களின் ஒரு சில நடவடிக்கைகளின்வழி படைப்பாளர்கள் குறிப்பறியலாம். உதாரணமாக, அடிக்கடி கடிகாரம் பார்த்தல், சோர்வுற்று கன்னத்தில் கை வைத்து அமருதல், கைகளை இறுகக் கட்டிக்கொண்டு முகத்தை கீழ்நோக்கி வைத்து அமருதல் போன்றவை பார்வையாளர்களுக்கு சலிப்புத்தட்டிவிட்டதன் அறிகுறியாக அமையும்.
பார்வையாளர்களின் மீதான சிறந்த கண் தொடர்புக்கு “Z” வழிமுறையைப் பின்பற்றுவது தேர்ந்த முறையாக அமையும் என்று கூறப்படுகிறது. அதாவது அரங்கில் அமர்ந்திருப்பவர்களை “z” எழுத்தின் வடிவில் பார்வையை நகர்த்திச் செல்வது மொத்த பார்வையாளர்களையும் படைப்பாலர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவும் (Jannette Collins, 2004: 35-41). அவ்வப்போது வெவ்வேறு திசைகளில் அமர்ந்திருப்பவர்களை சில வினாடிகள் பார்த்துப் பேசுவது அவர்களை தொடர்ந்து நம் பேச்சில் கவனம் செலுத்த உதவுகிறது. இவ்வாறு பேச்சிலும் அங்க அசைவிலும் கூடுதல் கவனம் செலுத்துவதன்வழி பார்வையாளர்கள் தொடர்ந்து நம்முடன் இணைந்திருப்பதை நிச்சயம் உறுதி செய்துகொள்ள முடியும்.
பார்வையாளர்களையும் பங்கெடுக்கச் செய்தல்
பல்லூடக வெண்திரைகளில் படங்களைக் காட்டியும், கருத்துகளை காகிதங்களில் அச்சிட்டு பகிர்ந்தும் நாம் பார்வையாளர்களை அணுகுவது தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் சாத்தியமாகும். ஆனால் இவற்றின்வழிதான் ஒருவரை அணுக முடியும் எனில் மேடைப் பேச்சுகளும், ஆய்வரங்கங்களும், மாநாடுகளும் அர்த்தமற்ற முயற்சியாகிப்போகும். நமக்குத் தேவையான பார்வையாளர்களின் (target audience) முன்னிலையில் நமது கருத்துகளை நமது வாய்மொழியாக விளக்க முடியாதபோது வேறு எந்த துணைக் கருவிகளும் பெரிய அளவில் நமக்கு துணைப்புரியப் போவதில்லை என்பதை நாம் தெளிவில் கொள்ள வேண்டும். அச்சு ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் இல்லாத காலங்களில் எவ்வாறு மேடைப் பேச்சுக்களும், நேர்காணல்களும் படைப்பாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும் என்று சற்று பின்நோக்கி சிந்திப்பதன்மூலம் இதனை நாம் அணுகிப் பார்க்கலாம் (Susan Troncoso, 2010: xxv-xxvvi).
கருத்துகளைப் பகிர்ந்து உடனுக்குடன் பார்வையாளர்களின் எதையும் பதிவு செய்துக் கொள்ள முடியாத சூழலில் பார்வையாளர்களை நம்முடன் இணைந்து பங்கெடுக்கச் செய்வதன்வழி நம்முடைய கருத்துகளை மிக எளிதில் அவர்களின் மனதில் பதிய வைக்க முடியும். நமது படைப்பினூடே பார்வையாளர்களின் கருத்துகளை கேட்டல், சந்தேகங்கள் இருப்பின் கேட்க வழிவிடல் போன்றவை பார்வையாளர்களைப் பங்கெடுக்கச் செய்வதன் அணுகுமுறைகளாகும். பெரும்பாலும் படைப்பை முழுவதும் வழங்கிவிட்டு பிறகு கேள்விகளுக்கு நேரத்தை ஒதுக்கும் முறை பின்பற்றப்படுவதைக் காணலாம். சற்று புதிய, கடினமான அல்லது விவாதங்களுக்குறிய கருத்துகளை முன்வைக்கப்போகும் நிலையில் பார்வையாளர்களின் உடனடி பங்கெடுப்பு மேலும் சிறப்பான, தெளிவான புரிதலை பார்வையாளர்களுக்கு வழங்க உதவும். இதனையே சீன பழமொழி ஒன்று ‘Tell me and I forget. Show me and I remember. Involve me, and I understand’ என்று குறிப்பிடுகின்றது. ஆக, நமது படைப்புமுறை ஒரு கருத்தை சொல்வதாகவும், கான்பிப்பதாகவும் மட்டும் இல்லாமல் பார்வையாளர்களைப் பங்கெடுக்கச் செய்து புரிய வைப்பதாகவும் அமையும்.
இப்படைப்பு முறையைப் பின்பற்றுவதால் பார்வையாளர்களைக் கையாள்வதில் சிரமங்கள் ஏற்படும் சாத்தியமும் இருப்பதை மறுப்பதற்கில்லை. பார்வையாளர்களில் ‘அதிகமாகப் பேசக்கூடியவர்கள்’ மற்றும் ‘பேசத் தயங்குபவர்கள்’ எனும் இருவகை சார்ந்தவர்கள் இருப்பதை உனர்ந்து இம்முறையை பயன்படுத்துவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதிகம் பேசாத பார்வையாளர்களைப் பேச வைக்கும் அல்லது அதிகம் பேசக்கூடியவர்களை கட்டுப்படுத்தும் திறன் நமக்கில்லாத நிலையில் இம்முயற்சியினை கையாள்வது மிக மோசமான பின்விழைவுகளை ஏற்படுத்திவிடக் கூடும்.
கேளிக்கைகள் கொண்ட கலகலப்பான சூழலை உருவாக்குதல்
இன்றைய பரபரப்பான சூழலில் ஒருவரை பிடித்தமர்த்தி ஒன்றைப் பேசுவது அவ்வளவு சுலபமான செயலாகாது. இணையமும், அச்சு ஊடகங்களும் நொடிக்கு நொடி புதுப்புது விஷயங்களை மக்களின் விரல் நுணியில் கொண்டுவந்து கொட்டும் நிலையில் நம் கருத்துக்களை பொறுமையாக அமர்ந்து கேட்கும் தேவை என்ன என்பதை நாம் சீர்தூக்கி பார்ப்பதன்வழி இவ்வழிமுறையின் தேவையை உணரலாம். முதலில் ஒருவருடைய கவனம் 45 நிமிடங்களுக்கு மேல் ஒரு நிலையில் பிடித்து வைக்க முடியாது என்பதும் அதற்குமேல் பகிரப்படும் கருத்துகள் ஒருவரின் மூளையை சென்றடைவதில்லை என்பதையும் தெளிவில் கொள்ள வேண்டும் (Khaled Alshare, 2004: 6-15). இதனாலேயே பள்ளிகளிலும், உரை நிகழ்வுகளிலும் 45 நிமிடத்திற்கும் குறைவான நேரம் படைப்பாளர்களுக்கு வழங்கப்படுவதைக் காணலாம்.
ஆனால் கொடுக்கப்படும் குறுகிய நேரத்தில் தனக்குத் தெரிந்ததையெல்லாம் பேசிவிடும்; பகிர்ந்துவிடும் இலக்கோடுதான் பெரும்பாலான படைப்பாளர்கள் மேடையேறிவிடுகின்றனர். கொடுக்கப்படும் நேரத்தின் மூன்றில் ஒரு பகுதியை நமது படைப்பிற்காகவும், இரண்டாம் பகுதியை மீழ்நோக்கு செய்வதற்காவும் இறுதிப் பகுதியை கலந்துரையாடலுக்காகவும் பிரித்துக் கொள்வதே சிறந்த நேர பகுப்பு முறையாகும். அவ்வகையில் நமது படைப்பு முக்கியமானவற்றை குறுகிய சொற்களில் எளிமையாகப் பகரக்கூடியதாக இருப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதிகமான அருஞ்சொற்கள், செய்தி வடிவிலான படைப்பும்கூட தொடர்ந்து உரையில்/படைப்பில் இடம்பெறுவதை தவிர்ப்பது சிறப்பாகும். அவற்றைத் தவிர்க்க முடியாத சூழல் ஏற்படின் சற்று கலகலப்பான அல்லது நகைச்சுவைகளை படைப்பில் இணைத்துக்கொள்ள முயற்சிக்கலாம்.
படைப்பினூடே நகைச்சுவைகளை மிக கவனமாக தேவையான அளவு பயன்படுத்துவதன்வழி கற்றலுக்கும் கேட்டலுக்கும் பொருத்தமான சூழலை உருவாக்க முடிவதோடு பார்வையாளர்களின் கவனத்தையும் எளிதில் பெற்றுவிட முடியும். மறுநிலையில், நமது நகைச்சுவைகள் நம் படைப்போடு தொடர்புடையதாகவோ அல்லது ஒரு கருத்திலிருந்து மற்றொரு கடினமான கருத்துக்குச் செல்லும் முன் பார்வையாளர்களின் அலுப்பைப் போக்க உதவுவதாகவோ இருக்கலாம். ஒரு சிறந்த படைப்பில் கருத்துகளுக்கு இணையான கேளிக்கையும் இருக்க வேண்டும் என்று தேர்ந்த படைப்பாளர்களின் கருத்தாக இருக்கின்றது (Van Dokkum W, 1995: 95-100).
முடிவாக
தற்போதைய கல்வித் திட்டங்களில்கூட soft skill எனப்படும் மென்திறனுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. புத்தக அறிவையும் கடந்து தனிநபர், பொதுவெளிகளில் பிறருடன் தெளிவாக பேசும், கருத்துப் பகிர்வை மேற்கொள்ளும் ஆளுமையை மென்திறனின் அடிப்படை கூறாகக் கொள்ளலாம். விரும்பினாலும் மறுத்தாலும் இத்திறனை மேம்படுத்திக் கொள்வது அத்தியாவசியமானதாகி விட்டது. கல்வித் துறைகளிலும், பணியிடங்களிலும் இதன் தேவையை உணர்ந்தே இத்திறனை மேம்படுத்தற்காக அதிக செலவில் வள்ளுநர்களை நாடும் சூழல் ஏற்படுகின்றது. அவ்வகையில் மேற்கூறிய எளிமையான சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன்வழி மேடை பேச்சாற்றலையும் படைப்புத் திறனையும் நிச்சயம் ஓரளவு மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பது திண்ணம்.
மேற்கோள்:
Kent E. Menzel & Lori J. Carrell. The Relationship Between Preparation and Performance in Public Speaking. Communication Education 2009; 43(1): 17-26.
Khaled Alshare & Nithan M. Hindi. The Importance of Presentation Skills In the Classroom: Students and Instructors Perspectives. Journal of Computing Sciences in Colleges 2004; 19(4): 6-15.
Susan Trancoso Skidmore, John R. Slate., et.al. Developing Effective Presentation Skills: Evidence Based Guidelines. Research In The Schools 2010; 17(2): xxv-xxxvii.
Tim Hopf & Joe Ayres. Coping with Public Speaking Anxiety: An Examination of Various Combinations of Systematic Desensitization, Skills Training, and Visualization. Journal of Applied Communication Research 2009; 20(2): 183-198.
Van Dokkum W. The art of lecturing: how to become a scientific entertainer. Int J Food Sci Nutr 1995; 46: 95-100.