சித்தாந்தன் கவிதைகள்

போதையுலராப் பொழுதின் ஜந்துகள்

தன் துக்கத்தை மலைகளுக்குப் பரிசளித்தவனின்
நிழலில் பதுங்குகிறது வரியடர்ந்த மிருகம்
காடுகள் விழித்துக் கொண்ட பிறகு
நகரங்களின் மூலைமுடுக்குகளெல்லாம் பதுங்கித் திரிந்து
களைத்து திரும்பியிருக்கிறது இவனிடம்

தன் சொற்களுக்குள் அதை ஒளித்து வைத்திருக்குமிவன்
துயில் மறந்த நோயால் அவஸ்தையுற்றான்
அவனின் புத்தக் கட்டுகளுக்குளிலிருந்து அது உறுமும்
பொழுதுகளில்
சாபத்தைத் தன் தலையில் தாங்கித் திரிபவனைப் போலாய்
நள்ளிரவுகளில் வீதியிலிறங்கி ஓடினான்

நிதானித்த ஒரு பகற்பொழுதில்
இவனுக்கும் அதற்குமிடையில் ஒப்பந்தம் கச்சாத்தானது
அதன் படி
இவன் தன் புத்தகக் கட்டுகளை விரித்து பெருங்காட்டை
வரைந்து குகைகளுக்குள் பதுங்கலானான்
அது தன் குரலைச் சுருக்கி அடி வயிற்றில் புதைத்து கொண்டது

அற்குப்பிறகு
இவனுக்கும் அதுக்குமிடையில் பேதங்களை யுணரமுடியவில்லை
அது தன்னைப் போலிருப்பதாக இவனும்
இவன் தன்னைப் போலிருப்பதாக அதுவும்
குற்றஞ்சாட்டத் தொடங்கின

முடிவில் ஒருநாள்
நகரத்தின் சந்தொன்றில் இகரசியமாக சந்தித்துக் கொண்டபோது
ஒன்றையொன்று குரோதத்துடன் கடித்துக் குதறின

இவனின் இரத்தைத்தைக் கண்டு அதுவும்
அதன் இரத்தைத்தைக் கண்டு இவனும் கதறத்தொடங்கினர்

இவனின் உடல் முழுதும் தழும்புகளாய் படந்தன
அதன் வரிகள்
அதன் குரலில் படிந்து போனது இவனது சொற்கள்

இப்போது இரண்டும் சேர்ந்து பெருங்காட்டை உருவாக்குகின்றன
தாம் வாழ்வதற்கு

***

பிணக்காட்டிலிருந்து திரும்பும் அரசன்

தொண்டைகிழியக் கத்திஓயந்தவன்
வந்திருக்கிறான் சபைக்கு
சன்னங்களாலான அவன் குரலில்
பிணங்கள் மணக்கின்றன

ஏகதொனியில் கட்டளையிட்டவனின்
முன்னால்
புலன்கள் செத்த மனிதர்கள் முண்டியடிக்கிறார்கள்
சாவுகளால் வனையப்பட்ட
மட்பாண்டத்தின் வாய்வழியாக
நுரைத்தெழுகின்றன கனவுகள்

பிச்சை கேட்பவனின் முகத்தை அணிந்தபடி
வந்திருக்கின்றான் தெருவுக்கு
கபாலங்களாலான மாலையில்
பூக்களைச் சூடியிருக்கிறான்

கனிவைச் சாயமாகத்தடவிய
வாக்குறுதிகள் மரங்களாய் வளர்கின்றன
வாய் பிளந்து காத்திருக்கின்றனர் மனிதர்

கட்டளைகளால் நிரம்பும் அவன் மூளையில்
முளையிடுகின்றன எண்ணற்ற பொய்கள்

அழிவுகளைப் பதட்டமில்லாமல்
பார்த்திருந்த நாட்களுக்கு
தானுருத்துடையவனில்லையெனச் சத்தியம் செய்கிறான்

செவிகள் யாவும்
அவனை நோக்கிக் குவிந்திருக்கின்றன
தோரணங்கள் தொங்கும் வீதிகளில்
கபாலத்தைத் தொலைத்த மனிதருக்காக
கொட்டுகிறான் புன்னகைகளை

தோற்றுப்போன மனிதர்களின் முன்னிருக்கும்
மட்பாண்டத்தில்
நோதித்து நாறுகின்றன
பழக்கப்பட்ட வாக்குறுதிகள்

***

துயரைச்சுமக்கும் மரம்

நூறாவது இரவையும்
சுமந்திருக்கிறது இந்தமரம்

அதிதிகளின் தோரணையுடன்
மலைகளில் வழியும் ஒளித்திரவத்தைப் பருகியபடி
பொழுதுகள் போதைகொள்கின்றன

நானோ
குருவிகளின் அலகுகளில் தொங்கித்திரிகிறேன்
வீனான மனப்பிராந்தியுடன்
சாமங்களுடன் தர்க்கம்புரிந்தபடி

மிதக்கும் காற்றின் சலனத்தை
கலகங்களாக வரைகிறேன் சுவர்களில்

சாவகாசமாக அமரும் பொழுதுகளில்
இரவைச் சுருட்டியெடுத்து ஈனத்துடன்
பகலிடம் கையளிக்கின்றேன்

நட்சத்திரங்களின் ஆயுள்ரேகைகளை
நெடுந்தொலைவுகளின் பாதைகளாக்கி
இரவுக்கும் பகலுக்குமிடையில் தாவியபடியிருக்கிறேன்

வானத்திடம் வருவதற்கிடையில்
என் வம்சச்சூத்திரம்; நிலைமாறுகிறது
காற்றும்கரையழித்து உட்திரும்பும் கடலும்
மாயத்தனங்களுடன் ஊமையாகின்றன

சாயம்வெளிறிய இரவு
பகலின் சூனியச்சாலையில் ஒளிக்கிறது

இரவினை அருந்திய பகலிடமிருந்து
தப்பிக்கும் நுட்பங்களை அறியாது
சதுரங்கத்தில் தோற்ற அரசானாக
பாதாள விளிம்புகளில் தள்ளாடுகின்றேன்

எனக்கான நூற்றியோராவது இரவையும்
இந்தமரமே சுமக்கின்றது

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...