குளிர்காலத்தின் துயர் சுமந்த கிளைகளில்
கனவுகளை எழுதுகிறது
சாம்பல் பறவையொன்று
இனிவரும்
வசந்தகாலத்தின் இலைகள்
பறவையின் கனவுகளை
மொழிபெயர்க்கவும்
இன்னொரு பறவை சுமந்து செல்லவும் கூடும்
அந்தக் கணங்களில்
அந்தப் பறவையும்
மரமும்
என்ன பேசிக்கொள்ளும்
கனவுகளை வைத்திருந்து
கையளித்ததிற்கு நன்றி கூறிப் பிரிந்து செல்லுமோ
கிளையின் துயர் மீது
கண்ணீர் சிந்திக் கழுவிப் போகுமோ
கூடுமுடைந்து
அங்கேயே தங்கிவிட துணியுமோ
சாம்பல் பறவையின் கண்களில் இருந்து
பெருவெளியில் கலந்தது
அரூபமொன்று
கிளைகளில் இருந்து
வழியத்தொடங்கிய காலத்தின் துயர்
பறவையின் கனவுகளை மூடிப் பெருகத்தொடங்கியது
யாருக்குத் தெரியும்
இனிவரும் வசந்தகாலத்தில்
இந்தப் பறவையும் எப்படி இருக்குமென்று?
திணை மாறி அலையும்
கனவுகள் மௌனமாகச் சுழிகொண்டு எழ
பகலுக்குள் இறங்கும் இருளைமீறி
தேடத்தொடங்குகிறேன்.
யாராவது இருக்கிறீர்களா?
இந்த
அகதியின் கனவுகளையும்
என்ன செய்வதென்று சொல்லுங்கள்