கவிஞர் காசியானந்தனை தெரியாத தமிழர்கள் இந்தப் பூமிப்பந்தில் எத்தனை பேர் இருப்பார்கள்? அவரது பாடல்கள் மிக நீண்டகாலத்திற்கு ஈழத்தமிழர்களிடத்தில் செல்வாக்கு செலுத்தும். அவரது பாடல்களினால் உணர்வு நரம்புகள் முறுக்கேறியபடி குளிர்தேசங்களில் எண்ணற்ற இளரத்தங்கள் இன்றும் கொதித்துக்கொண்டுமிருக்கலாம்.
காசியானந்தன் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என ஆரம்பத்தில் நான் மிகத் தீவிரமாக நம்பியிருந்தேன். ஒரு கையில் துப்பாக்கியும், மறு கையில் பேனாவும் உள்ளதாகவெல்லாம் அப்பாவியாக கற்பனை பண்ணிய காலங்களும் உண்டு.
காசியண்ணை என்ற பெயரை உச்சரித்ததும் கண்கலங்கிய பல போராளிகளைப் பார்த்திருக்கிறேன். இந்தச் சமயத்திலும், காசியானந்தன் இயக்கமா, எங்கிருக்கிறார் என்ற விடயத்தில் எனக்குள் பெரும் குழப்பமிருந்தது. என்னைப் போலவே அங்கிருந்தவர்களுமிருந்தனர். தலைவருக்குப் பக்கத்தில் இருப்பதாக சிலர் சொன்னார்கள், ஐரோப்பாவிலென்றார்கள், இந்தியாவில் கொடும் சிறையிலென்றார்கள். யாருக்கும் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை. பயிற்சி முகாமில் இருந்த சீனியர்களிடம்- அவர்கள் எங்களிற்கு சில மாதங்கள் முன்னர்தான் சேர்ந்தவர்கள்- அது பற்றிக் கேட்டால், அவர்களும் வானத்தைப் பார்த்தார்கள். இயக்கத்தில் சேர்ந்த புதிதில் எமக்குப் பல இயக்க இரகசியங்களைச் சொல்ல மாட்டார்கள். இப்படித்தான் தெரியாதது மாதிரி பம்ஸ் அடிப்பார்கள் என நினைத்தேன்.
மிகப்பல காலத்துக்குப் பின்னர்தான் அவர் இந்தியாவில் இருக்கிறார் என்ற விடயம் தெரிந்தது. அவர் விடுதலைப் புலிகளின் கேள்விக்கிடமற்ற விசுவாசியென்றது தெரிந்தது. அவரது சகோதரர் ஜெயம் பற்றித் தெரிய வந்தது. அவரது பிள்ளைகள் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு படித்தது தெரியவந்தது.
எப்படியோ, காசியர் நிறையப் பாடல்கள் எழுதினார். அவர் வழியில் வேறு பலரும் எழுதினார்கள். “போடா தமிழா போடா”, “குண்டு விழுந்தால் என்ன”, “வெட்டி வீழ்த்துவோம் பகையை” எனப் பல கொலைவெறியூட்டும் பாடல்கள் வந்திருந்தன. அவையெல்லாம் சக்கைபோடு போட்டன.
பின்னர் எனக்கும் வன்னிப் படைப்புலகம் பற்றிய பரிச்சயம் ஏற்பட்டது. வன்னிப் படைப்பாளிகள் விடுதலைப் புலிகளின் கலையிலக்கியத் துறையுடன் தொடர்புபட்டவர்களாக இருந்தார்கள். வன்னியிலிருந்த படைப்பாளிகளில் குறிப்பட்ட சிறு விகிதத்தினர் அவர்களிடம் ஊதியத்திற்குப் பணியாற்றினார்கள். பெரும் விகித்தினர் தொண்டூழியம் செய்தார்கள். ஊதியத்திற்கு பணியாற்றியவர்கள், தொண்டூழியம் செய்தவர்கள் அனைவரையும் சில சமயங்களில் பிரபாகரன் அழைத்து கௌரவித்துமிருக்கிறார்கள். வன்னியில் இருந்த படைப்பாளிகள், ஊடகக்காரர்களில் பிரபாகரன் கொடுத்த தங்கப்பதக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த ஒரேயொரு ஆள் ராதேயன் மட்டும்தான். இதற்காக அவர் விடுதலைப் புலிகளைத் தீவிரமாக விமர்சனம் செய்துகொண்டிருந்தார் என்பது பொருளல்ல.
அங்கு உருவான இலக்கியப் போக்கை இரண்டு விதமாகக் கொள்ள முடியும். அமைப்பினால் கட்டி வளர்க்கப்பட்ட, முன்னிறுத்தப்பட்ட, அந்த அமைப்பினால் அடையாளப்படுத்தப்பட்ட படைப்பாளிகள் ஒரு வகை. உருவாக்கப்பட்ட படைப்பு வெளிக்குள் தமக்கான இடங்களை, தமது படைப்பாற்றலால் உருவாக்கி, அந்த வெளியில் கலந்தவர்கள் மற்றவர்கள். முதல் வகுப்பில், ஆதித்தநிலா, சோழநிலா, உலகமங்கை, தமிழ்கவி, வளவைவளவன், அலையிசை, பாவசரன், யோ.புரட்சி, மலைமகள், கோளாவிலூர் கிங்ஸ்லி (பின்னவர்கள் இருவரும் அந்த வகைக்குள் தனித்துத் துலங்கியதுடன், சிறப்பான படைப்புக்களையும் தந்துள்ளனர்) போன்றவர்கள் வந்தனர். இரண்டாம் வகுப்பில் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், முல்லைக்கமல், கருணை ரவி, கருணாகரன், அலெக்ஸ் பரந்தாமன், நிலாந்தன் போன்றவர்கள் இருந்தார்கள்.
அந்தசமயத்தில் உருவான படைப்புச்சூழல் எனப்படுவது, பெரும்பாலும் பிரச்சாரத்தை இலக்காகக் கொண்டது. வன்னியிலிருந்து வெளியான ஊடகங்களில் வரும் படைப்புக்களின் முதலும் கடைசியுமான தரமாக அதுவே நோக்கப்பட்டது. இரண்டாம் மூன்றாம் விடயங்களாகவே படைப்பின் கூறுகள் நோக்கப்பட்டன. அமைப்புக்கள், கட்சிகள், இயக்கங்கள் சார்ந்த படைப்புலகில் இந்த வகையான விபத்துக்கள் நேர்வது இயற்கைதான். வன்னிச்சூழலில்தான் அது நேர்ந்தது என்பதல்ல. முன்னர் இடதுசாரிய இயக்கம் சார்ந்த படைப்புலகிலும் இதுதான் நிகழ்ந்தது.
அந்தச் சமயத்தில் வன்னியிலும் பல இலக்கிய குழுக்கள் இருந்தன. புலிகளின் குரலில் ஒரு குழு. வெளிச்சம் இன்னொரு குழு. பின்னர் எழு என்றொரு குழு எழுந்தது. இதில் முதல் இரண்டு குழுக்கள்தான் பிரச்சார பீரங்கிகள்.
வெளிச்சமென்றாலும் மாதம் ஒரு இதழ். படைப்புக்களைத் தேடிப் பெற ஓரளவு அவகாசமிருந்தது. புலிகளின் குரலில் தினமும் காலை, மாலை ஒலிபரப்பு. ஆனாலும், இ.திருமாறன், யோகோந்திரநாதன், புரட்சிமாறன், வாமகாந்த், தமிழ்கவி போன்றவர்கள் சளைக்காமல் கவிதைப் போராட்டம் நடத்தி வந்தார்கள். ஒரே விடயத்தை சற்றே கறாரான குரலில் செய்தியறிக்கையாகவும், சற்று ஏற்ற இறக்கங்களுடன் கவிதையாகவும் படிக்கிறார்களோ என்ற குழப்பமெல்லாம் கேட்பவர்களிற்கு ஏற்படலாம்.
இந்தச் சூழலைப் புரிந்துகொண்டபோதுதான், காசியானந்தன் தொடர்பில் மேலும் அதிக குழப்பங்கள் கிளம்பின. அவர்மீது அறவுணர்ச்சியினடிப்படையில் கேள்விகள் கேட்கலாம் என்றும் தோன்றும். ஏனெனில், விடுதலைப் புலிகளின் கலை, இலக்கிய செயற்பாட்டில் இணைந்திருப்பதும், களமுனையும் ஒன்றல்ல. காசியானந்தன், தான் வாழ்ந்ததன் அடிப்படையில், அனைவரும் விடுதலைப் புலிகளுடன் இணைந்து கவிதையெழுத வாருங்கள் என கேட்டிருந்தால் நியாயம். ஆனால் போரிட வாருங்கள் எனக் கேட்டதை, செத்து மடியக் கேட்டதை எந்த வகைக்குள் அடக்குவதெனப் புரியவில்லை.
அதேநேரத்தில், அவரை கேள்விக்குட்படுத்த முடியாதென்றும் தோன்றியது. ஏனெனில், இந்தப் படைப்புச் சூழலில் அவர் வேறுபட்டா இருந்தார்? இல்லைதானே. பொதுவான படைப்புச்சூழல் அப்படித்தானே இருந்தது. இதற்குள் எப்படி காசியானந்தனை மட்டும் குற்றம் சுமத்துவது?
இப்படியான படைப்பாளிகள் மத்தியில் ஒப்பீட்டளவில் ஆரம்ப காலகட்ட புதுவை இரத்தினதுரை மட்டுமே சற்று வேறுபட்டவராக இருந்தார். அவர் இடதுசாரிய பாரம்பரியத்தில் வந்தவர். எப்படியோ புலிகள் அமைப்பின் உறுப்பினராகி விட்டார். (அங்கும் கவிதைகள்தான் எழுதிக்கொண்டிருந்தார் என்பது வேறு விடயம்) அவரது மகள் சில காலம் போராளியாக இருந்தார். கடுமையான பாஸ் நடைமுறைகள் இருந்தபோதும், மகளை வெளிநாட்டிற்கு அனுப்பியதைப் பெரிய விடயமாகக் கொள்ளத் தேவையில்லை. விட்டுவிடலாம். புத்தூரை விட்டபிறகும் புட்டெதற்கு என தன்னைவிடுத்து மற்றவர்களைப் பார்த்து கோபமாக கேட்டதையும் விட்டுவிடலாம். விடுதலைப் புலிகள் பிள்ளைகளைக் கட்டாயமாகப் படைக்கிணைக்கும் காலகட்டத்திலும் அதிதீவிர உணர்ச்சிக் கவிதைகள் எழுதியவர், தனது பிள்ளையைக் கட்டாயமாக பிடித்ததும், அதனை செய்த புதுக்குடியிருப்பு பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளரின் சட்டைக்கொலரை பிடித்ததையும், பின்னர், நெருக்கடிகள் முற்றியதையடுத்து, தனது பிள்ளையின் உயிருக்கு உத்தரவாதமுள்ள- ஆட்களைக் கட்டாயமாகப் பிடிக்கும் பிரிவில் அவரை இணைத்து, அதனை நடைமுறைப்படுத்திய சமயத்தில் அவரும் சாதாரண தந்தையாகிவிட்டார். பொதுவான படைப்பாளிகளைப் போலாகிவிட்டார்.
காசியானந்தனில் தொடங்கி, இறுதியில் புதுவையின் மைந்தனில் நிறைவடையும் இந்த சம்பவங்களின் தொகுப்பை நோக்கினால், ஒருவிடயம் புலப்படும். நமது படைப்பாளிகள் யாரும் தமது படைப்புக்களிற்காக வெட்கப்பட்டவர்கள் கிடையாது. தான் எழுதிக் கடந்து வந்த வார்த்தைகளிற்கு பொறுப்புஏற்பவர்களாக அவர்கள் இருந்ததில்லை. அவற்றின் தார்மீக கேள்விகளிற்கு செவி கொடுப்பவர்களாகவும் இருந்ததில்லை. தாம் கடந்து வந்த வார்த்தைகள் அவர்களைச் சங்கடப்படுத்துவதாகவும் இருந்ததில்லை. இதனால், தமிழ்ச் சூழலில் போரிலக்கியமெனப்படுவது பெரும்பாலும், அனாதைகளாக விடப்பட்ட சொற்கூட்டம்தான் எனும் துயரம் நேர்ந்தது. இது போரிலக்கத்தியத்தின் மீதான, போர்ப் பரப்பின் மீதான விமர்சனமல்ல. பெரும்போக்கான போரிலக்கியப் படைப்பாளிகள் மீதான விமர்சனம்.
வன்னியில் திருநாவுக்கரசு என்றொரு ஆய்வாளர் இருந்தார். அவரது அரசியல் நூலொன்றின் தலைப்பு கொழும்பு 2007. 2007இல் என்னென்ன அரசியல் மாற்றங்கள் இலங்கைத் தீவில் நடக்குமென ஒரு அரசியலாய்வாளராக அவர் அந்தப் புத்தகத்தை எழுதியிருந்தார். மிக முக்கியமாக அவர் குறிப்பிட்டது. 2007இல் கொழும்பு நகரம் தீப்பற்றி எரியுமெனக் குறிப்பிட்டிருந்தார். (துரதிஷ்டவசமாக 2009இல் பட்டாசுகளின் வெளிச்சத்தில்தான் கொழும்பு மூழ்கியது)
பின்னர், ஜேவிபி கலவரம் ஏற்பட்டு, இந்தியப் படைகள் இலங்கையில் தரையிறங்குமென்றார். ஆனால் இறுதியில் அவர்தான் இந்தியாவிற்குத் தப்பியோடினார். இந்தியா போன மனுசன் அங்காவது சும்மாயிருந்தாரா?
அங்கிருந்தபடியும் சாத்திரம் பார்க்கத் தொடங்கினார். 2013 மார்ச்சில் தான் யாழ்ப்பாணத்தில் நிற்பேன் எனப் பிரகடனம் செய்தார். பிராந்திய வல்லரசான இந்தியாவின் படைகள் இலங்கைக்குள் நுழைந்து, தான் திரும்பி வரத்தக்க சூழ்நிலையை ஏற்படுத்துமென அப்பாவித்தனமாக நம்பியிருந்தார்.
இப்படித்தான் இருந்தார்கள் புலிகளின் அரசியல் ஆலோசகர்கள். தமிழ்ச்சூழலில் அரசியல் ஆய்வென்பது பெரிதும் வானசாஸ்திரத்தை ஒத்ததாகிவிட்டதென அதனால்தான் முன்னரொருமுறை குறிப்பிட்டிருந்தேன்.
நமது படைப்பாளிகள், ஊடகக்காரர்கள், ஆய்வாளர்கள் தமது வார்த்தைகளை எந்த சமயத்திலும் தத்தெடுப்பவர்கள் கிடையாது. கள்ள உறவில் பிறந்த பிள்ளைகளைக் குப்பைமேட்டில் எறிந்துவிட்டுச் செல்லும் பெண்களை ஒத்ததாகவே அவர்கள் இருந்தார்கள். அதனால்தான் தமது வார்த்தைகள் குறித்து எந்த வெட்கமுமற்று அவர்கள் தொடர்ந்து இயங்குகிறார்கள் எங்காவது அவற்றை எதிர்கொள்ள நேர்ந்தால், அது போன மாதம். இது இந்த மாதம் என்ற வடிவேலு பாணியிலேயே கடந்து சென்று கொண்டிருப்பார்கள்.
ஒரு காலகட்டத்தில் நந்திக்கடலின் அக்கரையில் நின்று அந்தோ தெரிகின்றது தமிழீழம் என்றும், பின்னர் நந்திக்கடலின் இக்கரையில் நின்று, பிரபாகரன் கொலைகாரன் என்றும் பேசியவர்களும் உள்ளனர். நந்திக்கடலில் அவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள் என்பது இதன் அர்த்தமல்ல. அதிகாரம் மாறியதென்பதுதான் பொருள்.
நமது காலத்தின் மகத்தான் போரிலக்கியப் படைப்பாளிகள் பலரும், தமது படைப்புக்களையும், தீர்க்கதரிசனங்களையும் அனாதரவாக கைவிட்டவர்கள்தான். தனது வார்த்தைகளிற்கு விசுவாசமாக அல்லது, அதற்குப் பொறுப்புக் ஏற்பவனாக எவரும் இருந்திருந்தால் நமக்கு வேறுவிதமான போரிலக்கியப் படைப்புககள் கிடைத்திருக்கக்கூடும்.
தமிழர்களின் மகத்தான் போரிலக்கியப் படைப்பாளிகளில் பெரும்பாலானவர்கள், யுத்தத்தின் இறுதியில் தமது சொத்துக்களை மட்டுமல்ல, அதுவரையான தமது வார்த்தைகளையும் நந்திக்கடலில் போட்டுவிட்டுத்தான் வந்தார்கள்.
நமது படைப்புக்களின் இந்தத் தன்மை நமது சூழலிலிருந்து பிறந்தது. ஈழத்தமிழர்களின் முக்கிய பண்பின் இன்னொரு முகமிது. நீண்ட யுத்த காலப்பகுதியில் தமிழ் சமூகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு அதிகாரத் தரப்பின் கீழ் வாழ்ந்து பழக்கப்பட்டது. இந்த “பழக்கப்பட்டது” என்ற சொல்லின் அர்த்தம் கனத்தது. மிக்குறுகிய ஒரு தரப்புத்தான் அதற்கு மாறாக இருந்தது. தமது நோக்கத்திற்காக அனைத்தையும் துறந்துவிட்டு, போராடியதாகட்டும், போராடிய தரப்புடன் கூடப் பயணித்ததாகட்டும் அது ஒரு சிறிய தரப்பு. மற்றவர்களெல்லோரும் ஒவ்வொரு இராசதானி மாற்றத்திலும் தம்மை இசைவாக்கம் செய்துகொண்டார்கள்.
தமிழர்களின் இந்த இசைவாக்க குணத்தை எஸ்போவின் கதையொன்றில் சரியாகப் புரியவைத்திருப்பார். யாழ்தேவியில் ஊருக்கு வரும் தமிழரொருவரின் முன்பாக சிங்களவரொருவர் உட்கார்ந்திருப்பார். அந்தத் தமிழர் ஒரு கட்டத்தில் நினைப்பார், வேலைக்காகப் படித்த அரசகரும மொழியை எடுத்துவிட்டு தனது புலமையை அவருக்கு காட்டுவோமா என. மிகச்சிறிய இடம்தான். ஆனால், வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில், ஆங்கிலம் படித்து, பின்னர், சிங்களம் படித்து அனைத்து சூழல் களுக்குள்ளாகவும் சுளித்துச் செல்லும் நமது மனநிலையை எஸ்.போ அதில் அட்டகாசமாகப் புரிய வைத்திருப்பார்.
இந்தக் குணம்தான், தமிழர்களை விக்னேஸ்வரனின் அலுவலக வாசலிலும், டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலக வாசலிலும் நிறுத்தி வைத்திருக்கிறது. ஒரு வேலை வேண்டுமென மனு கொண்டு டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்குச் செல்பவர்கள், அப்படியே விக்னேஸ்வரனிற்கு புள்ளடி போட்டுவிட்டு வருவார்கள்.
பெருமளவிலான தமிழர்களின் ஆகச்சிறந்த போராயுதமாக நீண்ட காலமாக வாக்குத்தான் இருந்து வருகிறது. அது சிரமமில்லாதது. யார், யாருக்கு வாக்களித்தார்கள் என்ற அடையாளங்கள் தெரியாது. அதனால்தான் தமிழர்கள் தயக்கமின்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கிறார்கள். வடக்கு தேர்தலில் பேரலையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்கள்தானே, ஜனாதிபதி வந்தபோதும், முண்டியடித்துக்கொண்டு நின்றவர்கள்? அவர்களெல்லோரும் துப்பாக்கி முனையில் கொண்டு வரப்பட்டவர்களா?
இந்த பெரும்போக்கானவர்கள் மத்தியில் இருந்துதான் ஈழத்தின் பெருமளவு படைப்புக்கள் வெளியாகின. இந்தப் படைப்பாளிகள் அதிகாரத் தரப்புக்களின் மனம் நோகாமல் நடந்துகொள்ளப் பழக்கப்பட்டவர்கள்.
வன்னியிலிருந்த பெருமளவான படைப்பாளிகள், கிட்டத்தட்ட விடுதலைப் புலிகளின் மனைவியர்களைப் போலத்தான் இருந்தார்கள். இங்கு நான் மனைவியெனச் சொல்வது மரபான குடும்பங்களில் பேனப்படும் அடையாளத்தை. மனைவியெனப்படுபவள் யார்? பின்தூங்கி முன் எழுபவள், கணவன் சாப்பிட்ட பின்னர் சாப்பிடுபவள், கணவனின் மனம் நோகாமல் நடப்பவள். இப்படித்தான் வன்னிப்படைப்பாளிகள் செயற்பட்டனர்.
விடுதலைப் புலிகள் பற்றிய சில அபிப்பிராய உருவாக்கத்திற்கு இந்தப் படைப்பாளிகளும் பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள்தான். ஷோபாசக்தியின் கொரில்லா நாவலிற்கு வன்னியில் தடை கிடையாது. அந்த நாவலில் விடுதலைப் புலிகள் சற்று கறாராக விமர்சிக்கப்பட்டிருப்பார்கள். அதனைப் படித்த நமது படைப்பாளிகள் குலைநடுங்கிப் போனார்கள். இயக்கத்தைப் பற்றிய விமர்சனம் உண்டு, இயக்கத்தை விமர்சிக்கும் படைப்புக்களை படிப்பதை இயக்கமறிந்தால் என்ன நினைக்குமென அவர்களாகவே ஒரு கற்பனையை வரைந்தார்கள். அந்தப் புத்தகத்தை இயக்கம் தடை செய்துவிடும், அல்லது தடை செய்துவிட்டதென அவர்களாகவே கற்பனை செய்து கொண்டு, அதனை தீண்டத் தகாததாக்கினார்கள்.
அதுபோலவே காலச்சுவடு பத்திரிகைக்கும் நடந்தது. அதில் விடுதலைப் புலிகளின் மீதான யாரோ ஒரு விமர்சகரின் பேட்டி வந்திருக்க வேண்டும். அல்லது சில விமர்சனங்கள் வந்திருக்க வேண்டும். அந்தச் சமயத்தில் வன்னியில் சில இலக்கிய அணிகள் இருந்தன. ஒரு அணியைப் பற்றி மற்ற அணி இயக்கத்திற்குப் போட்டு கொடுத்த பிரச்சினை முற்றி, இறுதியில் இரண்டு தரப்பும் காலச்சுவட்டைக் கண்டு பயந்து, அதனை மனதிற்குள்ளாகவே தடைசெய்து விட்டார்கள். விடுதலைப் புலிகள் அந்தப் பத்திரிகையை நிச்சயம் தடை செய்துவிட்டார்கள் என இறுதி வரை உறுதியாக நம்பினார்கள்.
ஆனால் வன்னியில் பல சாதாரண நூலகங்களிற்கு அது தாராளமாக வந்து கொண்டிருந்தது.
இந்த இசைவாக்கம், படைப்பாளிகளின் பொறுப்புணர்வு அல்லது அறவுணர்ச்சியை பெருமளவில் இல்லாமல் செய்துவிட்டது. இதனால்தான் தமது படைப்புக்களின் மீதான சுயகேள்விகள், பொறுப்புணர்வின்றி படைப்பாளிகள் பெருமளவில் இயங்க முடிகின்றது. இதுதான் ஈழத்தின் படைப்புச் சூழல்.
மேலே குறிப்பிட்ட விடயங்கள், படைப்பாளிகளின் அல்லது மனிதர்களின் கூர்ப்பு அல்லது பரிணாமம் அல்லது கண்டடைதலை கேள்விக்குட்படுத்தவதாக யாரும் புரிந்துகொள்ள வேண்டியதில்லை.
தமிழில் உள்ள போரிலக்கிய பிதாமகர்கள் அனைவரும் நடுத்தர வயதைக் கடந்தவர்கள். இருபதுகளின் ஆரம்பத்தில் உள்ள படைப்பாளிகள் தமது பாதையையும் நிலைப்பாடுகளையும் தேர்வு செய்வதிலுள்ள தடுமாற்றங்களை அவர்கள் கொள்வார்கள் என்று கொள்ள முடியாது. அவர்களிடம் அந்த வயதில் கோட்பாட்டு ரீதியிலான மாற்றங்கள் ஏற்படின் அது தமிழ் அறிவுலகத்திற்கு மிக நன்மையே. அப்படியொரு நிலையேற்பட்டால், அவர்கள் தமது கடந்த காலத்தின் வார்த்தைகளிற்கும் பொறுப்பு ஏற்பவர்களாக இருப்பார்கள். ஆனால், துரதிஷ்டவசமாக ஈழத் தமிழ்ப் படைப்பாளிகள் எவருமே தமது நிலைப்பாடு சார்ந்த கோட்பாட்டு அடித்தளத்தை உருவாக்கியவர்கள் கிடையாது. அல்லது அப்படியொரு கோட்பாட்டுத் தளத்தில் இயங்குபவர்களும் கிடையாது.
இதற்காக அவர்கள் கூறுவதெல்லாம் பொய் என்றோ மறுதலிக்க வேண்டியதோ என்பதல்ல. படைப்பாளிகளின் அறவுணர்ச்சி சார்ந்த கேள்விகளையே எழுப்புகிறேன்.
இப்பொழுது ஈ.பி.டி.பியின் ஊடகப் பிரிவில் பெருமளவில் வன்னியில் விடுதலைப் புலிகளின் ஊடகஅணியில் பணியாற்றியவர்கள்தான் உள்ளனர். இதுபற்றி ஒருமுறை அவர்களின் ஊடகப் பிரிவு முக்கியஸ்தர் குறிப்பிட்டார். அதாவது தமது கட்சியின் விசுவாசத்தால், அல்லது கோட்பாட்டு ரீதியில் தம்மை ஏற்று வருபவர்கள் மிகக்குறைவு. அப்படியானவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும், கேள்வி கேட்பவர்களாகவே இருப்பார்கள். ஆனால் இப்படி வருபவர்கள் அப்படியல்ல. இயக்கங்களிற்காக உயிரையே கொடுக்கும் போராளிகள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் குழப்படிகாரர்களாகவும், கேள்விகள் கேட்பவர்களாகவும் இருப்பார்கள். ஆனால், இன்னொரு சாரர் இருப்பார்கள். அவர்கள் எங்கிருந்தோ திடீரென முளைப்பார்கள். அதி தீவிர விசுவாசம் பேசுவார்கள். பின்னர், திடீரென காணாமல் போவார்கள். அனைத்து இயக்கங்கள் சார்ந்த அரசியல், கலையிலக்கிய அணிகள் இப்படியானவைதான் என்றார்.
இங்கிலாந்தில் இரவி அருணாச்சலம் என்றொரு ஈழத் தமிழர் இருக்கிறார். வானொலி நிகழ்ச்சிகளுக்கு எழுதி வருபவர். அவர் கொழும்பில் வாழ்ந்த காலத்தில் நூற்றியெட்டு புனை பெயரில் சரிநிகர் பத்திரிகையில் விடுதலைப் புலிகளைக் கிழிகிழியென கிழித்தெழுதினார். சரிநிகர் பத்திரிகையை நடத்தியவர்களே வெலவெலத்துப் போனார்களாம். திடீரென முளைத்த இந்த மனிதன் என்ன கிறிஸ்கெயில் கணக்கில் மைதானத்திற்கு வெளியில் சிக்சர் சிக்சராக அடித்துக்கொண்டிருக்கிறதே என. அந்தச் சமயத்தில், விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி கிட்டு மரணித்திருந்தார். அவரது மரணச்சடங்கில் பிரபாகரன் கலந்துகொண்டபோது, கிட்டுவின் தாயார் பிரபாகரனின் மீது சாய்ந்து விழுந்து அழுவார். கிட்டுவின் இழப்பினால் ஏற்கெனவே நிலைகுலைந்து போயிருந்த பிரபாகரன் அந்தச் சூழலைச் சமாளிக்க முடியாமல் மிகச் சிரமப்படுவார். அந்தப் புகைப்படத்தை பார்த்தவர்கள், பிரபாகரனின் முக உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும்.
இந்த இலண்டன் தமிழர் அதை இப்படி எழுதியிருந்தார்- “பிரபாகரனிற்கு தெரியுமா புத்திர சோகம்”.
ஆனால் சில காலங்களிலேயே காட்சி மாறியது. இப்பொழுது பேசினீர்களெனில், சீமானிற்க அல்லது அவரிற்காக விடுதலைப் புலிகள் மீது அதிக பற்று உள்ளதென்ற சந்தேகம் உங்களிற்கு வரும். சில வருடங்களின் முன்னர் எனது நண்பரொருவரை ரவி சந்தித்திருக்கிறார். சந்தித்த சமயத்தில் உடனடியாகத் தனது கைத்தொலைபேசியை எடுத்து நண்பரின் முகத்தின் முன்பாகப் பிடித்தார். அவரது கையடக்கத் தொலைபேசி திரையில் பிரபாகரன் படமிருந்தது.
அப்படி வைத்திருப்பதில் எந்தக் குற்றமும் இல்லை. ஆனால், முன்னர் பிரபாகரனைக் கொலைகாரனாக வர்ணித்த ஒருவர், தனது ஆதர்சமாக கொண்டால், அதற்கு காரணமிருக்குமல்லவா? எனது நண்பர் அவரிடம் ஒரு கேள்விதான் கேட்டார். “இந்த மாற்றத்திற்கு இரண்டேயிரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்றில், நீங்கள் தவறுவிட்டு, இப்பொழுது திருந்திவிட்டீர்களா? அல்லது, பிரபாகரன் முன்னர் பிழைவிட்டு இப்பொழுது திருந்திவிட்டாரா?”
நண்பரைத் திட்டிவிட்டுச் சென்ற ரவி, மறுநாள் அவர் ஒரு இனத் துரோகி என்பதைப்போன்ற ஒரு பதிவை முகப் புத்தகத்தில் பதிவேற்றினார்.
ஒருவர் தனது இலட்சியத்திற்காக வாழ்வதையோ அல்லது தனது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வதையோ யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், சட்டென மாறும் மாற்றங்களிற்கு காரணங்கள் இருக்காதா? கோட்பாட்டு அடிப்படையில் இப்படியான மாற்றங்கள் நிகழ்வதெனக் கொண்டாலும், தமிழ்த் தேசியத்தை கேள்விக்கிடமின்றி ஆதரிக்கும் ஒருவர் பின்னர் கறாராக அதனை நிராகரித்தால் அதற்குப் பொருள் என்ன? ஆதரித்த காலத்தில் எழுதிய வார்த்தைகளிற்கு அவர் காரணங்கூற மாட்டாரா? தமிழ்த் தேசியத்தில் அதுவரை நீடித்து வந்த எந்த நல்ல பண்பு, திடீரெனக் காணாமல் போனதால் இப்படியான திடீர் மாற்றங்கள் நிகழ்கின்றன?
அதுவரை விடுதலைப் புலிகளை நிராகரித்து வந்தவர்கள், திடீரென அவர்களை ஆதரிப்பதன் மர்மம் என்ன? அவற்றிற்கு ஏதாவது கோட்பாட்டு புலம் உள்ளதா? 2009இன் பின்னர் விடுதலைப் புலிகள் எந்த நல்ல பண்பை பெற்றனர்? ஒருவேளை, தோல்வியடைந்த தரப்பு, ஏதேச்சாதிகார அரசு என்ற இரண்டு தரப்புக்களை முன்னிறுத்துவதன் அடிப்படையில் திடீர் மாற்றங்கள் நிகழ்வதாக வைத்துக்கொண்டாலும், அது புத்திசாலித்தனமானதா? சிங்களத் தேசியத்திற்கு மாற்றாக தமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதென்பதும், விடுதலைப் புலிகளை ஆதரிப்பதென்பதும் ஒன்றா?
இந்த விபரீதமான பொதுப் பண்பை விட்டுவர முடியாதிருப்பதாலா ஈழத்தில் மாபெரும் போரிலக்கியங்கள் தோன்ற முடியாதுள்ளது?