முரண் உண்மைகளைச் சொல்வோம்

ஈழ சிறப்பிதழாக வெளிவந்துள்ள ஜனவரி-மார்ச் 2015 பறை இதழுக்கு எழுத்தாளர் ஷோபா சக்தியின் தலையங்கம்

‘கலைக்கு கறாரான கோட்பாடுகளோ சித்தாந்தங்களோ வரைவிலக்கணமோ எல்லையோ கிடையாது. ஆனால் ஒரு நிபந்தனையுண்டு; அது உண்மையை மட்டுமே பேசவேண்டும்’ என்ற லியோன் த்ரொட்ஸ்கியின் நிபந்தனை எளிமையான ஒன்றைப்போல தோன்றினாலும் அந்த எளிமையைக் கடைப்பிடிக்க அனைத்துலகிலும் இலக்கியவாதிகள் கடுமையாகச் சிரமப்படுகிறார்கள் என்பதுவே உண்மை.

FRONT COVER 05 copyஉண்மை என்பதும் ஒன்றே ஒன்றல்ல. ஒரு குறிப்பிட்ட நிகழ்வு குறித்து வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு உண்மைகள் கிடைக்கின்றன. இந்தப் பன்முக உண்மைகளே சொல்லப்போனால் ஒன்றுக்கொன்று வித்தியாசமான முரண் உண்மைகளே இலக்கியப் பிரதியின் அடிப்படையும் அறமும்.

நம் காலத்தின் உண்மைகள் எவை? அதை இலக்கியம் எவ்வாறு எதிர்கொண்டது? என்ற கேள்விக்கு ஆக மோசமான மற்றும் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு ஈழத் தமிழ் இலக்கியம்.

நவீன ஈழத்து இலக்கியத்திற்கு இலங்கையர்கோன், கே. டானியல், எஸ்.பொ, கைலாசபதி, சிவத்தம்பி, எம.ஏ. நுஃமான், ஏ.ஜே.கனகரத்னா… என்றாரு வலுவான மரபும் தொடர்ச்சியும் யுத்தம் வரை இருந்துவந்தது. யுத்தம் முப்பத்தைந்து வருடங்களிற்கு முன்பு எல்லாவற்றையும் சிதறப் பண்ணிற்று.

உண்மைகளை எழுதுவதை மரணதண்டனைக்குரிய குற்றமாக யுத்தம் கருதிற்று. அது எழுத்தாளர்களிற்கு மரணதண்டனைகளை வழங்கி, எஞ்சிய எழுத்தாளர்களின் குரல்வளைகளில் தணிக்கை செய்யும் கத்தியைக் கட்டிவிட்டது. போரிட்ட எல்லாத் தரப்புகளிடமும் இந்தக் கத்திகள் இருந்தன. இந்தக் கத்திகள் ஈழத்திலிருந்து அய்ரோப்பா, கனடாவரை வீச்செல்லைகளைக் கொண்ட சக்திவாய்ந்த கருவிகளாக இருந்தன.

தொண்டையில் இருந்த கத்திகளைக் கருதிப் பெரும்பான்மையான இலக்கியவாதிகள் தமது தொண்டைகளைக் காற்றும் வெளியேறா வண்ணம் இறுக மூடிக்கொள்ள, இன்னொரு தொகுதி எழுத்தாளர்கள் கத்திகளை வைத்திருந்தவர்களை காது கூசுமளவிற்கு புகழ்ந்து தள்ளி தேசிய இலக்கியவாதிகளானார்கள். பிறிதொரு தொகுதி எழுத்தாளர்கள் மனதுக்குள் மருகிக்கொண்டே அரைகுறை உண்மைகளை அவ்வப்போது தயக்கங்களுடன் வெளியிட்டார்கள். மற்றுமொரு தொகுதி எழுத்தாளர்கள் கத்திகளை நேரே உற்றுப்பார்த்து உண்மைகளைத் தயக்கமின்றிப் பேசினார்கள். இந்தக் கடைசித் தொகுதியினரே ஈழப் போராட்டத்தையும் யுத்தத்தையும் அரச இனவாதத்தையும் போராளிகளின் அராஜகங்களையும் இலக்கியத்தின் வழியே அறிக்கையிட்டவர்கள். இவர்களே ஈழநிலத்தின் வெவ்வேறு உண்மைகளை அணையவிடாமல் பிரதிகளில் பொத்திவைத்துப் பாதுகாத்தவர்கள். ஈழப் போராட்டத்தின் ஊக்கமும் உண்மையுமிக்க தரப்பு இது. எதிர்ப்பு இலக்கியம் என்றொரு வகைமையை இவர்கள் உருவாக்கி தமிழ் இலக்கிய மரபுக்குக் கையளித்திருக்கிறார்கள். மற்றெல்லா இலக்கியப் போக்குகளும் காலத்தால் மண்மூடிப் போக இந்தப் போக்கே ஈழத்திற்கான எதிர்கால இலக்கியமாகவும் தன்னை நிறுவி நிற்கும்.

‘பறை – ஈழச் சிறப்பிதழ்’ இந்தப் போக்கை முன்னிறுத்தியே வெளிவந்திருக்கிறது. இதுவொரு பெறுமதியான தொடக்கம். ஈழத்து இலக்கியமும் மலேசியத் தமிழ் இலக்கியமும் தமக்குள் கொண்டும் கொடுத்தும் பெற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே உண்டு. குறிப்பாக இரு தரப்புமே தமக்குள்ளேயே சாதியம், பால், மதம் போன்றவற்றால் அகமுரண்களில் தத்தளிப்பவர்கள். மொழி – இனச் சிறுபான்மையினராக பேரினவாதங்களை அன்றாடம் எதிர்கொண்டு வருபவர்கள். தேசிய இலக்கியம் அல்லது தேசிய மொழி என்ற மையத்திலிருந்து விலக்கப்பட்டு விளிம்புகளில் பயணிப்பவர்கள். தாய்த் தமிழ்நிலப் பரப்பிலிருந்து விலகிச் சிதறிக் கிடப்பவர்கள்.

தமிழ் இலக்கியம் என்ற பேச்சே தமிழ்நாட்டு இலக்கியப் போக்கைக் குறித்ததுதான்; மற்ற நிலப்பகுதி இலக்கியவாதிகள் தமிழக இலக்கிய அங்கீகாரத்திற்காகவும் அந்தப் போக்கிற்குள் தங்கள் தனித்துவங்களை கரைத்துக்கொள்ளவும் ஏங்குகிறார்கள், தமிழக இலக்கியவாதிகளோ ஒன்றில் புறக்கணிப்புச் செய்கிறார்கள் அல்லது முதுகு சொறிந்துகொடுக்கிறார்கள் என்றவாறான குரல்கள் அவ்வப்போது ஈழத்திலிருந்தும் மலேசியாவிலிருந்தும் புகலிடத்திலிருந்தும் கிளம்புவதைக் கவனிக்கிறோம். இந்த ஒப்பாரியைப் போல இலக்கியவாதிக்கு இழிவு தருவதொன்று பிறிதில்லை. இந்த ஒப்பாரி முழுக்க முழுக்க அறியாமையாலும் மூடத்தனத்தாலும் மட்டுமே நிரம்பியது.

தமிழகத்திலும் இலக்கியத்தின் மையங்களாகத் தங்களை நிறுத்திக்கொண்ட பார்ப்பனர்களாலும் – வெள்ளாளர்களாலும் தமிழகத்தின் ஏனைய சாதி எழுத்தாளர்களும் பெண்களும் நீண்டகாலமாகவே நிராகரிப்புக்குள்ளாகி வருகிறார்கள். எனினும் நற்பேறாகக் கடந்த இருபது வருடங்களில் இந்தப் போக்கில் மாற்றங்கள் துரிதமாக நிகழத்தொடங்கியிருக்கின்றன. ஆதிக்க சாதியினரின் இலக்கியப் போக்கிற்கு மாறாக விளிம்புகள் எழுச்சிகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். தலித்துகளும் பெண்களும் மதச் சிறுபான்மையினரும் மாறிய பாலியல் சிறுபான்மையினரும் கலை – இலக்கிய வெளிகளிற்குள் உத்வேகத்துடன் பிரவேசித்து இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். பெரியாரிய – அம்பேத்கரியச் சிந்தனைகளும் ‘நிறப்பிரிகை’, ‘தலித் முரசு’ போன்ற இதழ்களும் இந்த மாற்றத்தைச் சாத்தியப்படுத்தியுள்ளன. தொண்ணூறுகளில் தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகமான பின் நவீனத்துவச் சிந்தனைகளுக்கும் இந்த மாற்றத்தில் கணிசமான பங்குண்டு.

தாய்த் தமிழ் நிலத்தின் இந்த விளிம்புநிலை இலக்கிய சக்திகளே விளிம்புகளில் ஊசலாடும்ஈழத்து – மலேசிய இலக்கிய சக்திகளின் நேச கூட்டுச் செயற்பாட்டுச் சக்திகளாகும். இனி ஈழத்துத் தனித்துவம், மலேசியத் தனித்துவம், புகலிடத் தனித்துவம், தமிழகத் தனித்துவம் என்ற எல்லைகள் வேண்டாம்.

இனியிருப்பது விளிம்புகளின் தனித்துவமும் அவற்றின் இணைவும் மட்டுமே. குறிப்பான மூன்று நிலப்பரப்புகளின் ஆதிக்க சக்திகளும், ஆதிக்கசாதி இலக்கியவாதிகளும் தங்களிற்குள் எப்போதுமே ஒரு கள்ளக் கூட்டை வைத்திருக்கிறார்கள் என்பதைக் கவனத்தில் நிறுத்துவோம். இலக்கியத்திலும் ஆதிக்கசக்தி – அடக்கப்படும் தரப்பு என்ற வகைபாடுகளிருக்கின்றனவா என்றால் மிகத் துலக்கமாக அவை இருக்கின்றன என்பதே பதில்.

தூய கலை சுகானுபவமும் இருண்மை மொழியின் புதிர்வட்டங்களும் இலக்கியத்தில் சாத்தியம்தான். அவை உன்னதமாகக்கூட இருக்கலாம். ஆனால் அவற்றைத் துய்க்கும் நிலையிலோ மயங்கிக் கிடக்கும் நிலையிலோ நாமுமில்லை நம் சந்ததியினருமில்லை. இலக்கியத்தில் மட்டுமே சாதிக்கக் கூடியதாகச் சில வேலைப்பாடுகளுள்ளன. முரண் உண்மைகளைத் தொகுத்து வாசகர்களின் முன் வைக்கும் வைக்கும் வாய்ப்பு என்பது இலக்கியவாதிக்கு மொழி வழங்கியிருக்கும் சிறப்புச் சலுகை. கலைக்குத் தர்க்கமில்லை என்பது நமக்கான சிறப்புக் கடவுச் சொல்!.

வல்லினம் தோழர்கள் ‘பறை – ஈழச் சிறப்பிதழ்’ வெளியிடும் இந்தத் தருணத்தை உற்சாகத்துடனும் நன்நம்பிக்கைகளுடனும் கொண்டாடுவோம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...