இலங்கை, சிறிலங்கா, சிலோன், தாமிரபரணி என்றெல்லாம் சொல்லப்படும் ஈழத்தின் தமிழிலக்கியம் 14ஆம் நூற்றாண்டுடன் தொடங்குகின்றது என்கிறார் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை. ஆனால், ஈழத்தின் வரலாறு அதற்கும் அப்பால் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது. ஈழ வரலாறு நீண்டதாக இருந்தாலும் அந்த அளவுக்கு இலக்கிய ரீதியாக அதனுடைய அடையாளத்தைக் காண முடியவில்லை. 14 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கூட அது செழித்துப் பொலியவில்லை. என்றபோதும் இலங்கையின் வடபுலத்தை ஆட்சி செய்த ஆரிய சக்கரவர்த்திகளின் காலத்தில்தான் ஓரளவுக்கு மருத்துவம், சோதிடம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. இதற்கான செய்யுள்கள் பல இயற்றப்பட்டன. இதேவேளை இந்தக் காலகட்டத்தில்தான் ரகுவம்சம், கதிரமலைப்பள்ளு, சரசோதிமாலை என்ற நூல்கள் எழுதப்பட்டன. சரசோதி மாலையே ஈழத்து இலக்கியத்தின் முதலாவது முகம். ரகுவம்சம் மொழிபெயர்ப்பு நூலாகும். ‘கதிரமலை’ என்பது யாழ்ப்பாணத்தின் சிற்றரசைக் குறிக்கும்.
இதற்குப் பிறகு, போர்த்துக்கேயரின் காலம். ஐரோப்பியர் வருகை. இதன்போது பள்ளு இலக்கியங்கள் எழுச்சியடைந்தன. சைவசமயத்துக்குப் போட்டியாக ஞானப்பள்ளு, வேதப்பள்ளு என கிறிஸ்தவ இலக்கியங்கள் எழுதப்பட்டன. இதற்கு மறுத்தானாக சைவசமயத்தவர்கள் எழுதினார்கள். இப்படியாக அமைந்த போட்டிநிலை பல நூல்களை எழுதுவதற்கான அடிப்படையாகியது.
இதை அடுத்து ஒல்லாந்தர் காலம். இந்தக் காலகட்டத்தில்தான் ஒப்பீட்டளவில் சமூக மயப்பட்ட சிந்தனையோடு முற்போக்கு இலக்கியங்கள் உருவாகின. சின்னத்தம்பிப் புலவர், வரதபண்டிதர் போன்ற பலர் புராண இலக்கியத்தின் வழியாக சமுதாயச் சிந்தனைகளை – சமகால நிகழ்ச்சிகளைப் பிரதிபலிக்கும் புராண இலக்கியங்களை உருவாக்கினார்கள். இதற்கிணையாக கிறிஸ்தவ இலக்கியங்களும் எழுதப்பட்டன. இதெல்லாம் ஒரு மெல்லிய வளர்ச்சியாகவும் மாற்றங்களாகவும் அமைந்து கொண்டிருந்தனவே தவிர, பேரெழுச்சியாகவோ, பேரடையாளங்களை உருவாக்கியதாகவோ அமையவில்லை.
19ஆம் நூற்றாண்டில்தான் கவனிக்கத்தக்க – வியப்பூட்டும் விதமாக ஈழத்தமிழ் இலக்கியம் உருவாகியிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் இலங்கையில் உருவாகிய இலக்கியங்களையும் ஆளுமைகளையும் கண்டு தமிழ்நாடே வியந்ததாக சி. வையாபுரிப்பிள்ளை குறிப்பிடுகிறார். முக்கியமாக பெண் விடுதலையை முதன் முதலில் தமிழ் இலக்கியத்தில் கவனப்படுத்திய ‘தத்தை விடு தூது’ 19ஆம் நூற்றாண்டின் விளைச்சல். இதை சரவணமுத்துப் புலவர் எழுதினார். ஏறக்குறைய இந்தக் காலப்பகுதியில் இன்னொரு முக்கியமான ஆளுமையாக பாவலர் துரையப்பா பிள்ளை விளங்கினார். பாரதிக்கு முன்னோடியாக, பாரதியாரே குறிப்பிடும் ஒருவராக துரையப்பா பிள்ளை இருந்திருக்கிறார்.
19ஆம் நூற்றாண்டில் பல அதிசயிக்கத்தக்க நிகழ்ச்சிகள் ஈழத்தைச் சேர்ந்தவர்களால் நடந்திருக்கின்றன. ஆறுமுகநாவலர் தமிழில் உரைநடையை ஆரம்பித்தார். இதனால் ஆறுமுகநாவலர் ஈழத்துக்கு அப்பால் தமிழகத்திலும் அறியப்பட்டவராகவும் கொண்டாடப்பட்டவராகவும் இருந்திருக்கிறார். நாவலரோடு கொண்டாடப்பட்ட இன்னொரு ஆளுமை, சி.வை. தாமோதரம்பிள்ளை. இவர்தான் தமிழில் பதிப்புத்துறையின் முன்னோடி. இலங்கையில் பிறந்த சி.வை.தா தமிழிலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்டவராக மாறியதால், ஏட்டுச்சுவடியாக இருந்த தமிழ் இலக்கியத்தை நூல்வடிவில் கொண்டு வர விரும்பி, அவற்றைப் பதிக்க முனைந்தார். இதற்காக அவர் இலங்கையிலிருந்து தமிழ் நாட்டிற்குச் சென்று, அங்கே கிடைத்த பழைய ஏட்டுச்சுவடிகளையெல்லாம் தேடி எடுத்து, ஒப்பு நோக்கி, அவற்றைச் செம்மைப்படுத்திப் பதித்தார். சி.வை. தாவின் பதிப்புப் பணி தமிழ் இலக்கியத்தில் ஒரு பெரிய புரட்சிக்கான வித்தாகியது. இதேவேளை ஆறுமுகநாவலர் உள்ளிட்டோரின் பதிப்பு மற்றும் பாடசாலை உருவாக்கப்பணிகளும் கிறிஸ்தவ மிசனரிகளின் பாடசாலைகளும் வாசிப்புக்கும் எழுத்துக்கும் அதிக சாத்தியங்களை வழங்கின. இக்காலத்தில் இலங்கையில் சைவத்துக்கும் கிறிஸ்தவத்துக்குமிடையில் பெரும்போட்டி நிலவியது. இந்தப் போட்டியே பாடசாலைகளின் உருவாக்கத்துக்கும் படைப்பு மற்றும் அச்சு முயற்சிகளுக்கும் பெரும் பங்களிப்பை வழங்கின. எழுதுவதை வாசிக்க வைக்கவேண்டும் என்ற தேவை ஏற்பட்டபோது, தங்கள் பரப்புரைகளை மேற்கொள்வதற்கான அடித்தளமாக மொழியறிவை மக்களிடையே பரப்ப வேண்டியேற்பட்டது. இதற்காக கிறிஸ்தவ மிசனரிகளும் அவற்றுக்கு மாற்றாக இந்து சபைகளும் பாடசாலைகளை ஆரம்பித்து நடத்தின.
ஐரோப்பியருடைய வருகையின் பின்னரே ஈழத்தமிழிலக்கியம் அடர்த்தி கூடியது. 19ஆம் நூற்றாண்டுக்கு முன்னரான வரலாற்றில் ஈழத்துப் பூதந்தேவனார், சின்னத்தம்பிப் புலவர் என்ற கவியாளுமைகளே முக்கியமானவர்களாக உள்ளனர். இதைத் தொடர்ந்து நவாலியூர் சோமசுந்தரப் புலவர், ஆசுகவி வேலுப்பிள்ளை போன்றோர் ஈழத்திலக்கியத்தின் இரண்டாம் காலகட்ட முன்னோடிகளாக உள்ளனர்.
ஈழத்தில் தமிழிலக்கியம் என்பது, தமிழ்நாட்டின் – இந்தியாவின் இலக்கியமாகவே நீண்டகாலமாக இருந்தது. இன்றும் தமிழிலக்கியம் என்றோ, தமிழிலக்கிய வரலாறு என்றோ படிக்கும்பொழுதும் பேசும்போதும் எழுதும்போதும் தமிழக இலக்கியத்தையும் அதன் வழியான பண்பாட்டுக் கூறுகளையும் அதன் வரலாற்றையுமே கருதும் வழக்கமுண்டு.
இதன்பிறகு நவீன இலக்கிய முயற்சிகள் கருக்கொள்கின்றன. முதற் சிறுகதையை ஆர்னோல்ட் சதாசிவம்பிள்ளை என்பவர் எழுதியிருக்கின்றார். அறிஞர் சித்திலெப்பை அசன்பே சரித்திரம் என்ற நாவலை எழுதியிருக்கின்றார். இவை இரண்டும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் படைக்கப்பட்டன. 1885இல் அசன்பே சரித்திரம் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மங்களநாயகம் தம்பையா என்ற பெண் எழுத்தாளர் நொருங்குண்ட இதயம் என்ற நாவலை எழுதினார். அப்படியே நாவல், சிறுகதை என்ற புனைவிலக்கியம் பரவலாக வாசிக்கப்படவும் எழுதப்படவும் தொடங்கின.
000
புனைவிலக்கியத்தின் செம்மையுற்ற வடிவத்தில் சிறுகதைகளை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையர்கோன், சம்மந்தன், சி.வைத்திலிங்கம் ஆகியோர் எழுதத் தொடங்கினர். இவர்களை ஈழத்துச் சிறுகதை மூலவர்கள் என்றும் மூவர் என்றும் சொல்லப்படுவதுண்டு. இலங்கையர்கோனின் வெள்ளிப்பாதசரம், பாற்கஞ்சி போன்ற கதைகள் காலவியப்பூட்டுவன. இவர்களுக்குரிய களத்தை அல்லது இவர்களுடைய எழுத்து முயற்சிகளை அப்பொழுது ஈழகேசரி என்ற பத்திரிகை ஆதரித்தது. ஒரு பத்திரிகையாக இருந்த போதும் இலக்கியம் மற்றும் சமூகவியல் சிந்தனைகளையும் செறிவாக விவாதிப்பதற்கும் பரவலாக்குவதற்கும் ஈழகேசரி முக்கிய பங்களிப்பை வழங்கியது. தொடர்ந்து வரதர், அ.செ.மு, அ.ந.கந்தசாமி, கனக செந்திநாதன் எனப் பலர் ஈழகேசரியில் இயங்கினர். ரசனை விமர்சனத்தை கனக செந்திநாதன் ஈழகேசரியில் முன்வைத்தார். இந்தக் காலகட்டத்தில்தான் மரபுப் பண்டிதர்களுக்கும் புதிய நோக்கிகளுக்குமான எழுத்துப் போராட்டம் நடந்தது.
ஈழகேசரியைத் தொடர்ந்து மறுமலர்ச்சி என்ற இதழை அன்று எழுத்தியக்கத்தில் இருந்தவர்கள் ஆரம்பித்தனர். இலக்கிய இயக்கமாக மறுமலர்ச்சி இருந்தது. எதனொன்றிலும் தீவிர நிலை உருவாகும்போது அதற்கான வடிவங்கள் உருவாகுவதுண்டு. அப்படித்தான் அன்று எழுத்தியக்கத்தில் இயங்கத்தொடங்கிய இளைஞர்கள் மறுமலர்ச்சியை உருவாக்கினர். மறுமலர்ச்சி வசன கவிதைகளுக்கும் இடமளித்தது. ஏறக்குறைய தமிழகத்தில் வெளியான மணிக்கொடிக் காலத்தை ஒத்ததே ஈழத்தின் மறுமலர்ச்சிக் காலம். மணிக்கொடியில் புதுமைப்பித்தனைப்போல மறுமலர்ச்சியில் அ.செ.மு இருந்தார். புதுமைப்பித்தன் எழுத்தின் உச்சத்தைத் தொட்டார். அ.செ.மு பத்திரிகையாளராகவே தன்னை நிறுத்திக்கொண்டார். இதனால் தன்னை முழுமையாக இலக்கிய எழுத்தில் ஈடுபடுத்திக்கொள்வதற்கே அ.சொ.முவினால் முடியாமற் போய்விட்டது. மறுமலர்ச்சி முக்கியமான பல படைப்பாளிகளை உருவாக்கியது.
மறுமலர்ச்சியை அடுத்து சிற்பி என்ற சரவணபவன் கலைச்செல்வி இதழை வெளியிடத் தொடங்கினார். கலைச்செல்வி ஏறக்குறைய 100 இதழ்கள் வரையில் வெளியானது. பவானி ஆழ்வார்ப்பிள்ளை என்ற முக்கியமான பெண் எழுத்தாளர் தொடக்கம் அன்று இளைஞர்களாக இருந்த செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், செ.யோகநான் எனப் பலரும் கலைச்செல்வியில் எழுதினார்கள். ஈழகேசரி காலம், மறுமலர்ச்சி காலம் என்பதைப்போல கலைச்செல்வி காலகட்டம் என ஒன்று உருவாகியது. இதேவேளை கவிதைக்காக மஹாகவியுடன் இணைந்து தேன்மொழி என்ற கவிதை இதழை வரதர் வெளியிட்டார். 1940களின் இறுதியில் சுதந்திரன் பத்திரிகை இலக்கிய ரீதியாகப் பலருக்குக் களம் கொடுத்தது. டொமினிக் ஜீவா, டானியல் போன்ற முக்கியமான இடதுசாரிப் படைப்பாளிகளே அந்த நாட்களில் சுதந்திரனில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் பின்னாளில் சுதந்திரன் ஒடுங்கி, இனவாத பத்திரிகையாகிவிட்டது. இந்தக் காலகட்டத்தில் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் போராட்டங்கள் நடைபெறத் தொடங்கின. முன்னர் வெளியாருக்கு எதிரான குரலும் உணர்வுமே இலக்கியத்தில் பிரதான பொருளாக இருந்தது. பிறகு, சமூகத்தில் நிலவுகின்ற போலித்தனங்களையும் ஆசாரங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் பேசிய இலக்கியம், இடதுசாரிய இயக்கங்களின் எழுச்சியோடு, மாற்றுக்குரலாக ஒலிக்கத்தொடங்கியது. அப்பொழுது இந்த மாற்றுக்குரலுக்கான களம் அவசியமாகியது. இந்த மாற்று இலக்கியத்துக்கான களத்தேவையை உணர்ந்தே டொமினிக் ஜீவா மல்லிகையை ஆரம்பித்தார். மல்லிகை விமர்சனத்துக்கான அரங்கையும் திறந்தது. தமிழிலக்கியத்தில் முக்கியமான ஆளுமைகளாகக் கருதப்படும் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றோர் மல்லிகையை தங்கள் விமர்சனத்துக்கான களமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மார்க்ஸிய விமர்சனம், சோசலிச யதார்த்தவாதம் என்ற அடையாளங்களோடு விவாதங்கள் நடந்தன. மல்லிகை அந்த நாட்களில் மிகப் பெரிய விவாதங்களின் மேடையாக இருந்தது.
ஆனாலும் மல்லிகை பின்னர் ஒடுங்கி இடதுசாரிய அரசியல் முதன்மைப்பாட்டை வலியுறுத்துகிறது என்று ஒரு பலமான குற்றச்சாட்டை சில இளைஞர்கள் முன்வைத்தனர். இலக்கியத்தில் பிரச்சாரத்துக்கு – பொருளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை வடிவத்துக்கு கொடுக்கவில்லை என்று கருதிய இளைஞர்கள் சிலர் அலை என்ற இதழை ஆரம்பித்தனர். படைப்புகளில் கலைச்சிறப்பு இருக்க வேண்டும் என்பதை அலை முதன்மைப்படுத்தியது. படைப்புகளில் அதீத புனைவுகளையும் வலிந்த யதார்த்தத்தையும் மறுத்தது. இதேவேளை தமிழின் முக்கியமான சிந்தனையாளராக மு. தளையசிங்கம் மேலெழுந்தார். ‘மெய்யுள்’ என்ற இலக்கியக்கோட்பாட்டை முன்னிறுத்திய தளையசிங்கம் அது தொடர்பாகவும் இலக்கியத்தின் பல்வேறு வடிவப் பரிசோதனைகளிலும் நிறைய எழுதினார். சி.வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுகநாவலர் ஆகியோருக்குப் பின்னர் தமிழ்நாட்டையும் வியப்புக்குள்ளாக்கிய இன்னொரு ஆளுமை மு. தளையசிங்கம். இவருடைய மெய்யுள் தொடர்பாக இன்னும் பலர் எழுதி வருவது குறிப்பிடத்தக்கது. இன்னொரு முக்கியமான ஆளுமையான தருமு சிவராம் என்ற பிரமிள், 1950களில் இலங்கையில் இருந்தே எழுதினார். இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரில் இருந்து எழுதத் தொடங்கிய பிரமிள், பின்னர் தமிழ்நாட்டுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டார்.
இதேவேளை 1950களின் இறுதியில் புதிய கவிதை இயக்கத்தில் முதலாவது நூலை காணிக்கை என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார் தா. இராமலிங்கம். பின்னர் இவருடைய இரண்டாவது தொகுதி புதுமெய்க்கவிதைகள் என்ற பெயரில் வெளியாகியிருந்தது. தமிழ் நாட்டில் எழுத்து இதழ் புதிய கவிதைக்கு ஆதாரமாக நின்றது. அதில் பிரமிள் உட்பட ஈழத்தைச் சேர்ந்த பலர் எழுதி வந்தனர்.
இன்னொரு பக்கத்தில் இலங்கையின் மலையகப் பகுதியில் சி.வி. வேலுப்பிள்ளை முக்கியமான ஆளுமையாகத் தொழிற்பட்டார். இந்தியாவிலிருந்து இலங்கையின் மலையகப்பகுதிக்கு வருகை தந்திருந்த கோ. நடேசய்யர் உருவாக்கிய அடித்தளத்திலிருந்து சி.வி. வேலுப்பிள்ளை புதிய படைப்புகளை உருவாக்கினார். மலையக மக்களின் துயரமும் அடையாளமும் சி.வி மூலமாக வெளிப்பரப்பின் கவனிப்புக்குள்ளானது. மலையக இலக்கியத்தின் தோற்றம் கருக்கொண்டது, இது பின்னர் தனி அடையாளத்துடன் செழித்தது. இதில் பின்னர் தெளிவத்தை யோசப், சாரல் நாடன், அந்தனி ஜீவா எனப் பல ஆளுமைகள் இயங்கினர்.
1950கள் இலங்கை அரசியலிலும் சமூக ரீதியிலும் பல மாற்றங்களை உண்டாக்கிய காலம். 1948இல் இலங்கை சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து இலங்கையில் வாழ்கின்ற தமிழ் – சிங்களச் சமூகங்களிடையே அதிகாரப் போட்டிகள் ஏற்படத்தொடங்கின. இரு சமூகங்களையும் சேர்ந்த தலைவர்கள் அப்படியான பிரிகோட்டுணர்வை மக்களிடையே ஏற்படுத்தினர். இது இனரீதியாக எதையும் அணுகுகின்ற ஒரு நிலையை உண்டாக்கியது. இலக்கியத்திலும் இது உள்ளோடியது. இதனால் தமிழ்த் தேசிய – தமிழ் இனமான உணர்வு அரசியலும் அதற்கான இலக்கியமும் உண்டாகியது. 1958இல் நடந்த இனக் கலவரமும் தமிழரசுக் கட்சியின் உதயமும் இதை இன்னும் தீவிரப்படுத்தின. இதற்கு எதிராக இன்னொரு முகாம் உருவாகியது. அது உலக அளவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், புரட்சிகளைத் தன்னுடைய அகத்தில் கொண்டு உருவாகி வந்த இடதுசாரிய – மார்க்ஸிச அரசியலும் இலக்கியமுமாகும். சுதந்திரன் பத்திரிகையில் எழுதி வந்தவர்களில் ஒரு சாரார் இடசாரி அரசியல் இயக்கங்களுடனும் அவற்றின் இலக்கிய முகாம்களுடனும் இணைந்தனர். அல்லது அத்தகைய இடங்களை உருவாக்கினார்கள். இரண்டு தரப்பிலும் வாதப்பிரதிவாதங்கள் உருவாகின. எனினும் அறிவியக்கமாக இடதுசாரிகளே முன்னிலை வகித்தனர். இலக்கிய விமர்சனத்திலும் அவர்களுடைய பாத்திரம் முக்கியமானதாக இருந்தது. இந்த அணியில் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, எம்.ஏ.நுஃமான் போன்றவர்கள் இருந்தனர். பின்னர் சி. தில்லைநாதன், சி.சிவசேகரம், நா. ரவீந்திரன் என இந்தப் பட்டியல் நீளும்.
இலக்கியத்தின் புதிய போக்குகளும் துலக்கமான அடையாளங்களும் இவற்றுக்கான இயங்கு தளங்களும் அதிகரித்தன. படைப்பும் விமர்சனமும் என்ற தீவிர செயற்பாடு ஈழத்து இலக்கியம் என்ற அடையாளத்தை நிறுவத்தொடங்கியது. அதுவரையிலும் மெல்லிய – மங்கலான ஒரு சித்திரமாக இருந்து வந்த ஈழத்து இலக்கியம் இப்பொழுது துலக்கமான அடையாளத்தைப் பெற்றது.
கவிதையில் மஹாகவி, நீலாவணன், சண்முகம் சிவலிங்கம், சு.வே, முருகையன், தா. இராமலிங்கம் எனப் பல ஆளுமைகள் மேலெழுந்தனர். நாவல் இலக்கியத்தில் டானியல், செ.கணேசலிங்கன் போன்றவர்கள் இயங்கினர். சிறுகதையில் டொமினிக் ஜீவா, எஸ். பொன்னுத்துரை, நீர்வை பொன்னையன், நந்தி, என். கே. ரகுநாதன், பவானி ஆழ்வார்ப்பிள்ளை எனப் பலர் எழுதினர். 1970கள் இதை இன்னும் விரிவாக்கியது. இதழ்களும் எழுதுவோரும் அணிகளும் இயக்கங்களும் பல்கிப் பெருகின. இனப்பிரச்சினையும் இனப்போராட்டமும் மேலும் தீவிரமடைந்தது. இன்னொரு புறத்தில் இலங்கையின் வடக்கே நடந்த சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் பெற்றிருந்தன. சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள் 1960 களில் இருந்தே நடந்தன. இந்தப் போராட்டங்கள் எல்லாம் புத்திலக்கியத்துக்கு வித்திட்டன. பஞ்சமர் இலக்கியம் (தலித் இலக்கியம்) என்றும் ஈழப்போராட்ட இலக்கியம் என்றும் இருவேறு போக்குகள் – அல்லது இரண்டு அடையாளங்களைக் கொண்ட இலக்கியங்கள் வலுப்பெற்றன. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக டானியல், டொமினிக் ஜீவா, என். கே. ரகுநாதன், சுபத்திரன் போன்றவர்கள் எழுதினர். இனஒடுக்குமுறைக்கு எதிராக வ.அ. இராசரத்தினம், பிரான்ஸிஸ் சேவியர், வரதர், மு. தளையசிங்கம், காசி. ஆனந்தன் எனப் பலரும் எழுதினர்.
1970களில் இலக்கியத்தில் பிரவேசித்த இளைஞர்களில் அநேகமானவர்கள் இனரீதியான ஒடுக்குமுறைக்கு எதிரான இலக்கியத்தையே அழுத்தமாக உண்டாக்கினர். இது தேசிய இன விடுதலைக்கான இலக்கியம் – ஈழப்போராட்ட இலக்கியம் என்ற அடையாளத்தை உண்டாக்கியது. தனிநாட்டுக்கான – தமிழீழத்துக்கான கோரிக்கையும் போராட்டமும் பிரகடனப்படுத்தப்பட்டு அரசியல் எழுச்சி உண்டாகியபோது அதை முன்னிறுத்திய இலக்கியப்போக்கும் உருக்கொண்டது. ஈழத்திலக்கியத்தில் அரசியல் வெளிப்படையாகவும் ஆழமாகவும் மையப்படுத்தப்பட்டது. அரசியல் நெருக்கடிகள் அதிகரிக்க அதிகரிக்க படைப்புகளிலும் அதன் தாக்கம் கூடியது. தீயும் புகையும் கண்ணீரும் குருதியும் வாழ்க்கையில் நிகழும்போது அதன் தாக்கமும் பிரதிபலிப்பும் படைப்புகளிலும் இருந்தே தீரும் என்ற நிலை உண்டானது. இந்தப் போக்கு சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திலும் இனப்போராட்டத்திலும் இருந்தது.
இந்தக் காலகட்டத்தில் மண்வாசனை என்ற உணர்வோட்டத்துடன் பிரதேச ரீதியான படைப்புகள் எழுச்சியடைந்தன. இலங்கை முழுவதிலும் இருந்து பிரதேச அடையாளங்களை, அந்தந்தப் பிரதேசங்களின் நிலவியல், மொழி, தொழில் மற்றும் வாழ்க்கைமுறை போன்றவற்றை அடையாளப்படுத்தும் வகையிலான இலக்கியப்போக்கு வளர்ச்சியடைந்தது. இந்தப் போக்கிற்கு வீரகேசரி என்ற பத்திரிகை களம் கொடுத்தது. வீரகேசரி இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை – நாவல்களை வெளியிட்டது. மண்வாசனை இலக்கியம் என்ற ஒரு போக்கு இந்தக் காலகட்டத்தில் பேசப்பட்டது.
1970களும் அதன் பின்வந்த காலமும் இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீவிரமாக்கின. இதனால் ஈழப்போராட்ட இலக்கியம் முதன்மைக் கவனத்தைப் பெற்றது. 1980 கள் யுத்தத்தின் தொடக்க காலமாகியது. ஆயுதப்போராட்டம் சர்வதேசியப் போராட்டங்களின் மீதான கவனத்தைக் குவித்தது. லத்தீன் அமெரிக்கப் படைப்புகளும் பாலஸ்தீனக் கவிதைகளும் தமிழ்ச் சூழலில் பகிரப்பட்டன. எம். ஏ. நுஃமான் மொழி பெயர்ந்திருந்த பாலஸ்தீனக் கவிதைகள் அந்தக் காலகட்டத்தில் (1980களில்) இளைஞர்களை மிகவும் ஆகர்ஸித்தது. காலமறிந்து செய்த செயல் என்றவாறாக அந்தக் கவிதைகள் போராட்டத்துக்கும் புதிய இலக்கியத்துக்கும் ஊக்கமாக இருந்தது. விளைவாக மரணத்துள் வாழ்வோம் கவிதைகள் உண்டாகின.
அலை, களம், வயல், கவிஞன், புதுசு, சமர் என்று ஏராளம் இதழ்கள் இலங்கையின் எல்லாப் பிரதேசங்களில் இருந்தும் வெளியாகத்தொடங்கின. இலக்கிய அணிகளும் முகாம்களும் உண்டாகின. விமர்சனம் ஒரு முக்கிய செயற்பாடாகியது. கோட்பாட்டு ரீதியான எழுத்தியக்கங்கள் செயற்பட்டன.
இந்தக் காலகட்டத்தில் வ.ஐ.ச.ஜெயபாலன், எம்.ஏ.நுஃமான், அ.யேசுராசா, சேரன், இளவாலை விஜயேந்திரன், மு. பொன்னம்பலம், சு.வில்வரெத்தினம், சாருமதி, புதுவை இரத்தினதுரை, சுபத்திரன் என்று ஏராளாமானவர்கள் பலவிதமான கவிதைப்போக்குகளுடன் எழுதினார்கள். சிறுகதைகளிலும் செம்பியன் செல்வன், செங்கை ஆழியான், செ. யோகநாதன், க. சட்டநாதன், தெணியான், சொக்கன், எஸ்.எல்.எம். ஹனீபா, எம்.எல்.எம். மன்சூர் என ஏராளமானவர்கள் எழுதினர்.
ஈழப்போராட்டம் ஈழப்போராக மாறியபோது அது முஸ்லிம்களை நெருக்கடிக்குள்ளாக்கியது. இதனால் முஸ்லிம்கள் தங்களுடைய இருப்பை – அடையாளத்தை முன்னிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். முஸ்லிம் இலக்கியம் என்ற தனி அடையாளமாகவும் எதிர்ப்பிலக்கியம் என்ற முகமாகவும் இந்தப் போக்கு அமைந்தது. இதற்கு ஈசான் கட்டைப் பாடல்கள் என்ற கவிதைத் தொகுப்பு முக்கியமான ஒரு அடையாளமாகும். மரணத்துள் வாழ்வோம் என்ற கவிதைத்தொகுப்பு சிங்கள இனஒடுக்கு முறைக்கும் அதற்கு எதிரான போராட்டத்துக்கும் எப்படி ஒரு அடையாளமாகியதோ அதைப்போன்று தமிழ் ஒடுக்கு முறைக்கும் முஸ்லிம்களின் எதிர்ப்புணர்வுக்கும் ஈசான்கட்டைப் பாடல்கள் அமைந்தது.
இலங்கையின் இனப்பிரச்சினை இன்னொரு பக்கத்தில் பலரையும் நாட்டை விட்டு வெளியேறத்தூண்டியது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் சிறிய எண்ணிக்கையான மேட்டுக்குடியினர் லண்டனுக்குச் சென்று படித்து வந்தனர். அல்லது அங்கே குடியேறினர். ஆனால், 1970களின் இறுதியும் 1980களும்தான் பெருவாரியான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்குரிய களத்தைத் திறந்தன. இப்படிப் புலம்பெயர்ந்து போனவர்கள் உலகின் பல திசைகளிலும் குடியேறினார்கள். அப்படித்அதாங்கள் குடியேறிய இடங்களில் இருந்து கொண்டே எழுதத் தொடங்கினர். எனினும் இவர்களின் தொடக்ககாலப் படைப்புகள் பெரும்பாலும் ஊர் நினைவில் உருகுதல் என்றமாதிரி தங்கள் சொந்த மண்ணைப் பற்றிய கதைகளாகவே இருந்தன. ஆனாலும் 1990களின் பின்னர் இந்த நிலை மெல்ல மெல்ல மாறி, புலம்பெயர் சூழலில் தாம் எதிர்கொள்கின்ற சவால்களையும் நெருக்கடிகளையும் கலாசார முரண்களையும் ஒத்திசைவுகளையும் மையப்படுத்தி எழுதும் போக்கு உருவாகியது. இப்பொழுது புலம்பெயர் இலக்கியம் என்ற தனி வகை அடையாளம் ஒன்று துலக்கமாக உருவாகிவிட்டது. இந்தப் போக்கில் பலரை நாம் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. முக்கியமாக இந்தப் புலம்பெயர் இலக்கியம், ஆறாவது திணையைத் தமிழுக்குத் தந்தது. அதுவரையிலும் பாலை, நெய்தல், மருதம், குறிஞ்சி, முல்லை என்ற ஐந்திணைகளே இருந்தன. இப்பொழுது பனிவிழும் தேசங்களும் அந்த வாழ்க்கையும் தமிழறியாக பிற நிலங்களும் தமிழில் படைப்பாகின.
புலம்பெயர்ந்தவர்கள் இன்னொன்றையும் செய்தனர்.
ஈழப்போரின்போது நடந்த தவறுகளையும் ஆயுதப்போராட்ட இயக்கங்களின் அதிகாரப்போக்கையும் விமர்சித்த படைப்புகளை உருவாக்கியது. நாட்டில் இருந்து கொண்டு இதைச் செய்ய முடியாது. எதிர்ப்பும் அச்சுறுத்தலும் அதிகமாகும். எழுதியவரையே பலியிடும் நிலையும் இருந்தது. இதனால் புலம்பெயர்ந்தவர்கள் அங்கிருந்து கொண்டு ஜனநாயக விரோதப்போக்கிற்கும் அதிகாரத்திற்கும் எதிராக எழுதினர். இது ஈழத்திலக்கியத்தில் இன்னொரு அடையாளத்தை உண்டாக்கியது. எதிர்ப்பிலக்கியம் என்ற வகை இதன் மூலம் உருவாகிற்று. சக்கரவர்த்தி, ஷோபாசக்தி, நட்சத்திரன் செவ்விந்தியன், சுகன், கற்சுறா போன்றவர்கள் இதில் முக்கியமானவர்கள்.
இதேவேளை ஈழப்போர் பல படைப்புகளையும் படைப்பாளிகளையும் உருவாக்கியது. போராளிகளாக இருந்தவர்கள் பலர் படைப்பாளிகளாக எழுதினார்கள். போர்ச்சூழலில் வாழ்ந்தவர்களும் தங்களுடைய போர் அனுபவங்களை எழுதினார். இந்தவகை எழுத்துகள் போர் இலக்கியமாகிற்று. மலைமகள், மலரவன், கவியழகன், புதுவை இரத்தினதுரை, தூயவன், யோ.கர்ணன் போன்றவர்கள் இதில் முக்கியமானவர்கள்.
1980களில் இன்னொரு விசயமும் ஈழ இலக்கியத்தில் நடந்தது. பெண்கள் கவிதையிலும் எழுத்து இயக்கத்திலும் புதிய அலையாக மேற்கிளம்பியது இந்தக் காலகட்டத்தில்தான். இதற்கொரு அடையாளம் ‘சொல்லாத சேதிகள்’ என்ற கவிதைத் தொகுதி. ஊர்வசி, மைத்ரேயி, சிவரமணி, செல்வி, ஒளவை எனப் பல பெண்கள் தங்கள் குரல்களை இலக்கிய வெளியில் – சமூகத்தில் அழுத்தமாகப் பதிவு செய்யத்தொடங்கினர்.
ஈழத்திலக்கியம் இனம் (தமிழ் – முஸ்லிம் மற்றும் சிங்களம் ) நிலம் (மலையகம், புலம்பெயர்ந்து வாழும் தேசங்கள்) சாதி, பால் சார்ந்தும் எனப் பல வகையான அடையாளங்ளோடும் தொனிகளோடும் வளர்ச்சி பெற்றுள்ளது. 20ஆம் நூற்றாண்டு ஈழத்திலக்கியத்துக்கு தனியான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியது. இதேவேளை தாங்கள் எழுதிய எழுத்துக்காகவே தங்கள் உயிரைக் கொடுக்கும் நிலையும் ஈழத்திலக்கியதில் நடந்திருக்கிறது. கோவிந்தன், நா. சபாலிங்கம், இளையவன், பாண்டியூரான், மலைமகள், மலவரன் எனப்பலர் இந்தவகையில் உள்ளனர். பலருக்கு மரணதண்டனையும் கொலை அச்சுறுத்தலும் விதிக்கப்பட்டிருந்தது. இன்னும் அந்த நிலை நீங்கியதென்றில்லை. ஜனநாயக வெளி குறைவடைந்த ஒரு சூழலில்தான் இன்னும் ஈழ இலக்கியச் செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே ஜனநாயக நெருக்கடிகள்தான் நல்ல பல படைப்புகளையும் படைப்பாளிகளையும் உருவாக்குவதையும் நாம் அவதானிக்கலாம்.
தோழர் கருணாகரனது கட்டுரை பல நல்ல தகவல்களின் சாரமாகவுள்ளது.அவரது எழுத்துக்கள் ஈழத்து வஞ்சிக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்து வருவதும் தெரிந்ததே.
இந்த கட்டுரையில் அவர்குறிப்பிட தவறிய சில அவசியமான தகவல்களை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன்.எழுத்துக்காக இலங்கையில் கொல்லப்பட்டவர்கள் வரிசையில் முதன்மையானவர்களாக முறிந்த பனை- ராஜினியும் கவிஞை செல்வியும் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும்.இவர்கள் இருவரும் புலிகளால் கொல்லப்பட்டவர்கள்.
மற்றும் புகலிட எழுத்தாளர்களில் கலாமோகனின் பெயரின்றி புகலிட இலக்கிய வரலாற்று குறிப்புகள் எழுதப்பட முடியாது.
ஒரு சோழனின் காதற் கடிதம் அல்ல, ஒரு தோழனின் காதற் கடிதம்