விடுதலைக்கு அப்பால்
உள்ளிருக்கும் பட்டுப்பூச்சியால்
நெய்யப்படுகிறது பட்டுக்கூடு
மின்னல் கீற்றுகள்
பழிச்செனத் தெறித்து மங்குகின்றன
கண்கூசச்செய்யும்
கோடிவண்ணங்களின் பிரகாசத்தை
யாராலும் தாங்கமுடியாது
பொன்னிழைத் தூவல்களால்
இழைத்த பட்டுக்கூடு
ஆகாயவெளியின் பிடிமானத்தில் அசைகிறது
வினோத ஒலிகளால்
நேர்த்தியான சத்தங்களை எழுப்பும் பறவைகள்
சிறு குருவிகள் நிகழ்த்தும்
நாட்டிய அணிவகுப்பு சூழ்ந்திருக்க
சர்ப்பமாகவும்
சாத்தானாகவும் மாறித்தோன்றும்
பேர் எழிலை ரசித்தவாறு
ஓய்வில் இருக்கிறாள்
பட்டிழைகள் விலகுவதும்
ஒன்றிணைவதுமாய்
தன்னைப் புதுப்பித்து புதுப்பித்து
கணிக்கமுடியா விடுதலைக்கு அப்பால்
அழியா உருக்கொள்கிறது
அவளது ஒளிக்கூடு
நறுமணம்
இசையின் நறுமணம்
காற்றுள் நுழைகிறது
நிலவொளியின்
பளிங்குக் கருக்குகளை
அகிலத்தில் சிதற விடுகிறது
தன்மதிப்பு மிதமிஞ்சிடும்
கர்வத்தின் அறையில்
மஞ்சள் சுவாலைகள்
அலங்காரமாய் எரிந்தன
வைபவத்தின் அடிநாதம்வரை
உறுஞ்சும் மெழுகு
கண்ணாடிக் கிண்ணங்களுக்குள்
குறிப்பிட்ட அவகாசத்தில்
உயரம் குறைந்து கொண்டிருந்தது
உக்கிரமான காலப்பாடலில்
திரண்டு கறுக்கும் முகில்கள்
சில மழைத்துளிகளை கண்டெடுத்து
காய்ந்த மௌன வேர்களுக்கு
கொண்டு செல்லும்
அந்தரங்கத்தில்
மார்கழி காலத்தை
இரண்டு முறைகள் தோன்ற வைக்கும்
ஒன்று மழை, மற்றொன்று காட்டு மின்னலின் ஒளி*
துளசி விதைகளும்
நன்னாரி வேரும் கலந்து
இளம் பாசிநிற சர்பத்துக்கள்
நமக்கு முன் வைக்கப்பட்டன
சில்வியாப் பிளாத்தின் வரிகளை
நீ இரண்டாம் முறையாகக் கூறும் பொழுதில்
உணவக மரத்திலிருந்த புறாவின் இறகு
என் முக்காட்டின்மேல் வந்து விழுந்தது
நீ கண் இமைகளைச் சுருக்கித் சிரித்தாய்
அருவியின் கற்கள்
காலம்பல கிடந்து
மென்மையுறத் தேய்ந்து வழுவழுப்பாகிய
பவித்திரமும் காதலும் கொண்டொரு ஒளிரும் சிரிப்பு
உரையாடல் நெடுக
காதுகளைவிடப் பெரிய
உனது தொங்கு மின்னிகளும்
ஆமாம்……. ஆமாம்……. என்றன
இல்லை…… இல்லை…… என்றன
முந்திரி வறுவல் மணக்கும்
அக்காரடிசிலை மென்று விழுங்கினேன்
நீண்டநாள் கசப்பை சரிசெய்ய விரும்புகிறேன்
தோழி பரிசளித்த
சந்தனமும் கராம்பும் சேர்த்துருவாக்கிய
சவர்க்காரங்களை முகர்ந்து பார்க்கிறோம்
அவள் நெற்றிவியர்வை ஊறிய குங்குமத்தில்
சூரியன் உச்சி முகர்ந்திருந்தது நீண்டநேரம்
முடிச்சுக்களை
புதிர்க்கணக்குகளை
காற்றில் அவிழ்கின்றபடியாக தளர்த்துகின்றோம்
கைப்பைக்குள்
சாவியை பேனாவை
புத்தகத்தை எடுத்து வைத்துக்கொள்கிறாய்
கண்ணீரும் முத்தங்களும்
கன்னங்களிலேயே இருக்கின்றன
அங்கே வெற்று நாற்காலியில்
நம்மை உற்றுக்கேட்டபடி
நான்காவது பெண்ணாக
சில்வியா அமர்ந்திருந்தாள்
—
*(நாங்கள் வானத்தில் இரண்டு மேகங்களைப்போல இருந்தோம். ஒன்று மழை, மற்றொன்று காட்டுமின்னலின் ஒளி – சதாத்ஹஸன் மாண்டோ)