நான் உன்னை பிரிகிறேன்
என் அன்பே
மூன்றாவது முறையாக
இன்று உன்னை பிரிகிறேன்
பிரிதல் உனக்கும் ஓர் ஓவியத்துகான
புள்ளியை கொடுக்கலாம்
புள்ளிகளைக் கோடுகள் ஒன்றினைக்கலாம்
நீ அவற்றுக்கு வர்ணம் தீட்டி
அழகான படம் வரைந்து காட்டி
அதைக்
காட்சிக்கு வைக்கலாம்
என் அன்பே
ஓர் ஓவியனின் ஓவியம் போல் இல்லை
இந்த பிரிவு
அதை எப்போது நீ அறிவாய்?
நீ கொண்டாடும் வான் கோவும், ஆதி மூலமும், காஜா மேனும்
உன் தூரியை எடுத்து
இப்பிரிவை தீட்டப்போவதில்லை
என் அன்பே
நீ அறிவாயா
இந்த மூன்றாவது பிரிவில்
இரு தினங்களுக்கு முன் இலையுதிர் காலம் தொடங்கியது
பாதி இலை உதிர்ந்த அந்த நிழல் மரத்தில்
அமரும் சாம்பல் நிறப்பறவை சொல்லும் செய்தியை
நீ அறிவாயா
என் அன்பே
இன்று
மூன்றாவது முறையாக உன்னை பிரிகிறேன்
என்பதை…
****
ரகசிய வேட்டை
இரவும் பகலும் இல்லாப் பொழுதில்
என் கன்னத்தை வருடிச் சென்றாய்
இதுவரை
பகிராத ரகசியம் அது
தேனீர் பருகச் சென்றோம்
கைகோர்த்துக்கொண்டோம்
தழுவி விடைபெற்றோம்
எல்லாம்
ரகசியமாகத்தான் நிகழ்ந்தது
என் அன்பே!
நிகழ்ந்த ரகசியங்கள் ஒரு கனவு
அந்த கனவுக்குள்
நமது பிரச்னைகள் குறித்து பேசினாய்
ஆனால்,
பிரிவைப்பற்றி பேசவில்லை
தெளிவில்லாத
என் எண்ணங்களை நீ பட்டியலிட்டபோது
அறிந்திருந்தாயா
விஷக்காளான்கள் தன் குடையை விரித்திருந்ததை.
வானம் வெழுத்த அந்த இரவில்
யட்சியைப் போல தேடிவந்தேன்
நீ அறிவாய்.
மௌனமாய் எனை வதைக்கவும் செய்தாய்
என் அன்பே!
அன்றுதான் என்னை முழுமையாக உணர்ந்தேன்
நான் மிக ரகசியமானவள்
அண்மையில் வாசிக்கக்கிடைத்த பல கவிதைகளில் யோகியின் இவ்விரு கவிதைகளும் எளிமையும் உண்மையும் கலந்ததொரு மொழியால் ரசிக்கும்படி அமைந்திருந்தது. உணர்வின் மெல்லியவலி அன்பின் நெருக்கம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவிதமாக அமைந்துவிடுகிறது. யோகிக்கு வாழ்த்துக்கள். அனார்
நன்றி அனார்